மலர்னிகா சாப்பிடாமல் சென்றதால், கவலையுடன் தனது வேலையை பார்க்கச் சென்றார் துர்க்கா. அப்படி அவர் வேலை செய்து கொண்டிருந்த போது அவருக்கு போன் வந்தது. அதில் சொன்ன செய்தியைக் கேட்டு மயங்கி விழுந்தார். அவர் விழுந்த சத்தம் கேட்டு ஓடி வந்த வள்ளி, தண்ணீர் தெளித்து அவரின் மயக்கத்தை போக்கினார். எழுந்த துர்க்கா அழுது கொண்டு வள்ளியை அழைத்துக் கொண்டு மும்பையின் பெரிய ஹாஸ்பிடலுக்கு சென்றார்.
அப்படி என்ன நடந்ததுனு பார்க்கலாம்..
டென்டர் கைவிட்டு போனதால் கோபத்துடன் குடித்துக் கொண்டு இருந்த முகேஷ், மலர்னிகாவை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என நினைத்தான். தனது அடியாட்களை அழைத்து அவர்களிடம், காலையில் மலர்னிகா கம்பனிக்கு செல்லும் போது, வழியில் அவளை லாரி விட்டு அடித்து தூக்கச் சொன்னான். அவர்களும் செய்வதாக கூறிச் சென்றனர்.
அவர்களின் திட்டப்படி காலையில் மலர்னிகா கம்பனிக்கு செல்லும் வழியில் ஒரு லாரியை கொண்டு அவளது காரை விபத்துக்குள்ளாகி விட்டு, வேகமாக சென்றுவிட்டனர். மலர்னிகாவின் கார் டிரைவர் அந்த இடத்திலே உயிரை விட்டிருந்தார். மலர்னிகாவுக்கு பலத்த அடி ஏற்பட்டு மயக்கத்தில் இருந்தாள்.
அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ்க்கு சொல்லும் போது, வேலைக்கு வருவதற்காக தனது ஸ்கூட்டியில் வந்த நிஷா, கூட்டமாக இருக்க என்னவென்று பார்க்க அங்கே வந்தாள். முதலில் மலர்னிகாவின் காரை அடையாளம் கண்டுகொண்டவள்ள, வேகமாக மலர்னிகா அருகில் வந்தாள். இரத்த வெள்ளத்தில் கிடந்த மலர்னிகாவை பார்த்து பயந்து விட்டாள். அதே நேரத்தில் ஆம்புலன்ஸ் வர, அதில் மலர்னிகாவுடன் அவளும் சென்றாள். செல்லும் வழியிலே துர்க்காவிற்கு அழைத்து நடந்ததை கூறி ஹாஸ்பிடலுக்கு வரச் சொன்னாள்.
இதோ ஐசியூ வார்டின் முன்னால் அழுது கொண்டு நின்றாள் நிஷா. அவளுக்கு எப்பவும் கம்பீரமான மலர்னிகாவை பிடிக்கும். பெண்கள் என்றால் மலர்னிகா மேடத்தை போல இருக்க வேண்டும் என்று எப்போதும் சொல்லிக் கொண்டு இருப்பாள். இப்போது அந்த கம்பீரம் குறைந்து, வாடிய கொடியைப் போல கிடந்தவளை பார்க்க அவளுக்கு அழுகையாக வந்தது.
நிஷாவை பார்த்து, “என் பொண்ணு எங்கம்மா…..?” என அழுதவாறு ஓடி வந்தார் துர்க்கா. ஹாஸ்பிடலுக்கு வரும் வழியில் வள்ளியிடம் நடந்ததை சொல்லியிருந்தார் துர்க்கா. வள்ளியும் அவர் அருகில் அழுது கொண்டு நின்றாள். நிஷா ஐசியூ உள்ளே என்று கையை காட்டினாள். அவளை எட்டிப் பார்த்த துர்க்கா மயங்கி விழ, அவரை தாங்கிப் பிடித்தனர் நிஷாவும் வள்ளியும். அங்கிருந்த தண்ணீரை எடுத்து அவரது முகத்தில் தெளிந்ததும் மயக்கம் தெளிந்து எழுந்தார் துர்க்கா.
நிஷா அவரின் கையைப் பிடித்துக் கொண்டு, “அம்மா அழாதீங்க. மலர் மேடத்துக்கு எதுவும் ஆகாது…. அவங்க ரொம்ப தைரியமானவங்க….” என்று தேற்றினாள். வள்ளியும், “ஆமா அம்மா, நம்ம பாப்பாக்கு எதுவும் நடக்காது….. நீங்க பயப்படாதீங்க….” என்று இருவரும் அவருக்கு ஆறுதலளித்தனர். உள்ளே மலர்னிகாவிற்கு சிகிச்சை நடந்து கொண்டு இருந்தது.
முகேஷ்க்கு கால் பண்ணிய வர்கள், “பாஸ் நீங்க சொன்ன மாதிரி அந்த மலர்னிகாவோ கதையை முடிச்சிட்டோம்…. அவங்களோட தொந்தரவு உங்களுக்கு இருக்காது…..” என்றனர்.
அதைக் கேட்டு சந்தோஷத்தில் குதித்த முகேஷ், “சரி உங்களோட அக்கவுண்ட்க்கு இப்பவே பணம் வந்திடும்…. நீங்க கொஞ்ச நாளுக்கு இங்க இருக்க வேண்டாம்…..” என்றான். அவர்களும் சரி என்று சொல்லிவிட்டு போனை வைத்தனர்.
முகேஷ், “ஏய் மலர்னிகா…. ஒரு பொம்பளையா இருந்திட்டு என்ன ஆட்டம் போட்ட.. உன்னை ஒண்ணும்மில்லாதவளா மாத்தி தெருவில பிச்சை எடுக்க வைக்கணும்னு நெனச்சேன்…. ஆனால் நீ உன் உயிரையே நான் எடுக்கிற மாதிரி பண்ணிட்ட…. அதுவும் ஒரு விதத்தில நல்லதுதான். இனிமேல் இந்த பிஸ்னஸ் உலகத்தில நான் தான் நம்பர் ஒன்..” என சந்தோசப்பட்டான்.
காமாட்சி கொண்டு வந்த சாப்பாட்டை அவளுக்கும் ஊட்டி விட்டவாறு சாப்பிட்டுக் கொண்டு இருந்தான் காளையன். அப்போது அவர்கள் வீட்டில் வேலை செய்யும் மணி வேகமாக அங்கே ஓடி வந்தான். “அண்ணே.. அண்ணே….” என்றான் மூச்சிறைக்க. அவனைப் பார்த்த காளையன், “மணி எதுக்கு இப்போ, இப்படி மூச்சு வாங்க ஓடி வர்ற….? கொஞ்சம் பொறுமையா இரு. முதல்ல தண்ணீர் குடி…” என்று அவனுக்கு தண்ணீர் கொடுக்க, அதை வாங்கிக் குடித்தான். பின், “அண்ணே நம்ம லெட்சுமி கன்னு போட்டிருக்கு…..” என்றான்.
காளையன் அவனிடம், “லெட்சுமி கன்னு போட்டது நல்ல விஷயம் தானே மணி
அதுக்கு எதுக்கு இப்படி பதறியபடி ஓடி வந்த….?” என்றவனிடம், “அண்ணே லெட்சுமி போட்ட கன்னு,செத்து போயிடுச்சி அண்ணே…” என்றான். அதைக் கேட்ட காளையனுக்கும் கவலையாக இருந்தது. காமாட்சி அழுதே விட்டாள்….” சரி வா முதல்ல வீட்டிற்கு போகலாம்….” என்றவன், தோட்டத்தில் அறுவடையை முடிச்சிட்டு சாயந்தரம் எல்லாத்தையும் மூட்டை கட்டி வீட்டிற்கு எடுத்துட்டு வந்திடுங்க….” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குச் சென்றான்.
அங்கே வீட்டின் பின்புறம் இருந்த மாட்டுகள் கட்டு வைக்கப்பட்டிருந்த இடத்தில், வீட்டினர் எல்லோரும் கூடி இருந்தனர். விசாகம் பாட்டி, “எய்யா ராசா பாருய்யா, நம்ம லெட்சுமி போட்ட கன்னு செத்துப்போச்சி…. இதுவரைக்கும் இப்படி நடந்ததில்லையே….” என அழுதார். குணவதியும் நேசமதியும் அவரின் இருபுறமும் நின்றிருந்தனர். காளையன் தாத்தாவை பார்க்க, அவரும் துக்கத்துடன் நின்றார்.
அங்கிருந்த வைத்தியரிடம், “வைத்தியரே லெட்சுமி எப்பிடி இருக்கு….?” என்று கேட்டான். அதற்கு வைத்தியரும், “லெட்சுமிக்கு ஒண்ணும் இல்லை தம்பி…..” என்றவர், அவனை அங்கிருந்து தனியாக அழைத்து வந்தார். “தம்பி நான் ஒண்ணு சொன்னா தப்பா நினைக்காதீங்க…. கன்னுக் குட்டி செத்து போகணும்னு ஏதோ குடுத்திருக்கிறாங்க….. அதனாலதான் கன்னுக் குட்டி செத்திருக்கு…. எதுக்கும் கவனமா இருங்க…..” என்றவரிடம், சரி என்று தலையாட்டினான்.
பின் நடக்க வேண்டியவை நடந்தது. எல்லோரும் ஹாலில் இருந்தனர். அப்போது விசாகம் பாட்டி பேச ஆரம்பித்தார். “எனக்கு என்னவோ கன்னுக்குட்டி செத்தது மனசுக்கு சரியாப் படலை…. எதுக்கும் நாளைக்கு ஜோசியரை வரச் சொல்லுங்க. எல்லா ஜாதகத்தையும் ஒரு தடவை அவர்கிட்ட காட்டிடலாம்….” என்றார்.
அதற்கு குணவதி, “நீங்க சொல்றதும் சரிதான். எனக்கும் மனசுக்கு நெருடலாவே இருக்கு….” என்றார். பெருந்தேவனார் ராமச்சந்திரனிடம், “சந்திரா, சபாபதி போன் பண்ணினானா….?” என கேட்டார். ராமச்சந்திரன் தந்தையை பார்த்தார், “இல்லை அப்பா அவன் மூணு நாளாக போன் பண்ணலை…. நாங்க எடுத்தப்போ ஏதோ வேலையா இருக்கிறதா சொன்னான்….” என்றார்.
தேவச்சந்திரன், “அண்ணே பையன் போன வாரமும் ஊருக்கு வரலை. எதுக்கும் நாம போய் ஒரு எட்டு பார்த்திட்டு வந்திடலாமா……?” என்று கேட்டார். பெருந்தேவனார், “நீ சொல்றதும் சரிதான் தேவா….. நீயும் சந்திராவும் போய் பார்த்திட்டு வாங்க…. இப்பிடி பட்டணத்தில் வேலை பார்க்க போறம்னு போன என் பொண்ணையும் மாப்பிள்ளையும் காணாமலே போயிட்டாங்க…. அப்பிடி இன்னொரு தடவை எதுவும் நடக்க கூடாது.. நீங்க நாளைக்கே போய் அவனை பார்த்திட்டு வாங்க….” என்றார். இருவரும் சரி என்று சொல்லிவிட்டு மில்லுக்குச் சென்றனர்.
சென்னையில் சபாபதியோ முக்கியமான ஒருவருடன் பேசிக் கொண்டு இருந்தான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Super divima
Super super super super. Malar eppo thatha paatti kitta vara pora?👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏🥰🥰🥰🥰🥰🥰🤩🤩🤩🤩🤩😍😍😍😍😍😍