சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 14
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
“நாளைக்கு ஒரு வக்கீலை கூட்டிட்டு வரணும்பா நீ.. எனக்கு ஒரு உயில் எழுதணும்..” என்றாள் பாட்டி..
“என்ன…? உயில் எழுத போறீங்களா?” என்று சுந்தர் அப்படியே விழி விரித்து கேட்க சுந்தரியும் பாட்டியை ஆச்சரியமாக பார்த்தாள்..
“ஆமாம்பா.. எனக்கு சொத்துன்னு இருக்கிறது அந்த ஒரு வீடு தான்.. அதை உயில் எழுதி சேர்க்க வேண்டியவங்க கிட்ட சேர்க்கணும்னு பார்க்கிறேன்..”
“ஏன் பாட்டி? நீங்க தான் கொஞ்சம் கொஞ்சமா நல்லா ஆயிட்டு வரீங்க… சுந்தரி உங்களை நல்லா கவனிச்சுக்கறாங்க.. இப்ப எதுக்கு பாட்டி தேவையில்லாம ஏதேதோ யோசிச்சிக்கிட்டு இருக்கீங்க?”
“இல்லப்பா சுந்தர்… சுந்தரி என்னை நல்ல கவனிச்சுக்கறா.. இல்லன்னு சொல்லல.. ஆனா எனக்கு வயசு ஆயிடுச்சு.. நம்மளுக்கு எப்ப என்ன ஆகும்னு யாருமே சொல்ல முடியாது பா.. அன்னைக்கு கீழே விழுந்தப்பவே அது எனக்கு புரிஞ்சு போச்சு.. அந்த வீடு என்னதான் சின்னதா இருந்தாலும் அது நல்லவங்க கைக்கு போய் சேரணும்பா.. சேரக்கூடாதவங்க கையில போய் சேர்ந்திடக் கூடாது… அதுக்காக தான் அவசரமா நான் உயில் எழுதி வைக்கணும்னு நினைக்கிறேன்.. இந்த உசிரு போறதுக்கு முன்ன..” என்று பாட்டி சொல்லி முடிக்கும் முன் சுந்தர் சுந்தரி இருவருமே பாட்டியின் வாயை தங்கள் கைகளால் மூடினார்கள்..
சுந்தரியின் கண்களில் நீர் கோர்த்துக்கொள்ள குரல் தழுதழுக்க “ஏன் பாட்டி இப்படியெல்லாம் பேசுறீங்க? உங்களுக்கு எங்க அக்காவ பத்தி தெரியும் தானே? எனக்கு ஆதரவா இருக்கிற ஒரே ஒரு ஜீவன் நீங்கதான்.. உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் என்ன பண்ணுவேன்? தப்பி தவறி கூட இப்படி எல்லாம் பேசாதீங்க பாட்டி..” என்று சொல்லவும் சுந்தரோ “சுந்தரிக்காவது அவங்க அக்கான்னு ஒரு உறவு இருக்கு.. எனக்கு அப்படி கூட யாரும் கிடையாது பாட்டி.. இன்னொரு முறை இந்த மாதிரி பேசாதீங்க.. எனக்கு அப்புறம் ரொம்ப கெட்ட கோவம் வந்துரும்.. சொல்லிட்டேன்.. நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..” என்றான் சுந்தர் கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு..
“சரி.. அப்படின்னா என்னை ஏன் எதுக்குன்னு கேட்காம நாளைக்கு வக்கீலை கூட்டிட்டு வா.. நான் உயிலை எழுதி வைக்கணும்”
“சரி நீங்க என்ன ஏதுன்னு எங்களுக்கு சொல்ல வேண்டாம்.. நாளைக்கு நான் வக்கீலை கூட்டிட்டு வரேன்.. இப்போ நிம்மதியா தூங்குங்க.. இந்த மாதிரி ஏடாகூடமா எதுவும் பேசாதீங்க இனிமே..” என்று சொல்லிவிட்டு “பார்த்துக்கோங்க சுந்தரி” என்று சுந்தரியிடம் சொல்லிவிட்டு அந்த அறையிலிருந்து வெளியேறினான் சுந்தர்..
பாட்டி சுந்தரியை அருகே அழைத்து..”அடி பைத்தியக்காரி.. இப்ப என்ன சொல்லிட்டேன்னு அழற?” என்று கேட்க “பின்ன என்ன பாட்டி? இப்படி எல்லாம் பேசினா நான் அப்புறம் உங்களோட இருக்கவே மாட்டேன்.. நான் இருந்து என்ன பிரயோஜனம் சொல்லுங்க.. நான் இருந்து எல்லாம் செய்யும்போதே நீங்க இப்படி எல்லாம் பேசுறீங்க..” என்றாள் சுந்தரி..
பாட்டி சிரித்துக்கொண்டே “நீங்க ரெண்டு பேரும் என் மேல இவ்வளவு உயிரா இருக்குறதுக்கு நான் என்ன செஞ்சேன்னு எனக்கு தெரியல..” என்று சுந்தரியை அப்படியே அணைத்துக் கொண்டு அவள் கன்னத்தோடு தன் கன்னம் சேர்த்து தலையை தடவி கொடுத்தாள் பாட்டி..
“உங்க நல்ல மனசுக்கு நீங்க நிச்சயமா எழுந்து கூடிய சீக்கிரம் நடப்பீங்க பாட்டி..”
“சரி.. அப்படியே நடக்கட்டும்.. எனக்கும் சந்தோஷம் தான்.. நீ படுத்து தூங்கு..” என்று பாட்டி சொல்ல பாட்டி பக்கத்திலேயே தரையில் பாய் போட்டு படுத்தாள் சுந்தரி..
அடுத்த நாள் காலை கதிரவன் யாருக்கும் காத்திருக்காமல் ஒளிவெள்ளத்தை பாய்ச்சி எல்லோரையும் எழுப்பினான்..
சுந்தர் காலையிலிருந்து உற்சாகமாக படபடவென வேலை செய்து கொண்டிருந்தான்.. அவன் மனதில் இன்று ஷாலினி தன் கார்மென்ட்ஸுக்கு வேலைக்கு வரப் போகிறாள் என்று உற்சாகம் தொற்றிக் கொண்டிருந்தது..
காலையிலேயே சிற்றுண்டி உண்ண வந்தவன் சீட்டி அடித்துக் கொண்டே வர அதை பார்த்த சுந்தரி அவனைப் பார்த்து “என்ன சார்.. ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல இருக்கு.. இன்னிக்கி..?” என்று கேட்க “ஆமா சுந்தரி.. ஒரு முக்கியமானவங்க இன்னைக்கு ஆஃபிஸ்க்கு வர போறாங்க… மனசெல்லாம் ஒரே சந்தோஷமா இருக்கு..” என்றான் சுந்தர்..
“நீங்க இப்படி சந்தோஷமா இருப்பீங்கனா அவங்க எப்பவுமே உங்க கூடவே இருக்கட்டும் சார்..” என்று சுந்தரி சொல்ல அவளை ஆச்சரியமாக பார்த்தவன் “தேங்க்ஸ் சுந்தரி.. நானும் அதே தான் நினைச்சுட்டு இருக்கேன்..” என்று சொல்லிவிட்டு சிரித்தான்.. அவன் மணக்கண்ணில் ஷாலினியின் முகம் ஒரு நிமிடம் வந்து போனது..
அப்போது சுந்தரி “சார்.. உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றாள்..
“சொல்லுங்க சுந்தரி.. என்ன விஷயம்?” என்று சுந்தர் கேட்க “அது.. உங்க கிட்ட நேத்தே சொல்லணும்னு நெனச்சேன்.. நைட்டு நீங்க ரொம்ப லேட்டா வந்தீங்களா? சரி காலையில சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன்.. நேத்து நீங்க உங்க கம்பெனிக்கு போனப்புறம் பாட்டியோட மகன் இங்க வந்துருந்தாரு..” என்று சொன்னாள் சுந்தரி..
“ஓ… பாட்டிக்கு உடம்பு சரியில்லைன்னு பார்க்க வந்திருந்தாரா?” என்று கேட்க “அப்படி இருந்தாதான் நானும் சந்தோஷப்பட்டிருப்பேனே.. ஆனா அவரு அதுக்கு வரல..” என்று முந்தைய நாள் பாட்டியின் பிள்ளை வந்து பேசியது அனைத்தையும் சுந்தரிடம் சொன்னாள்..
சுந்தருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.. கை இரண்டையும் இறுக்கி பல்லை கடித்துக் கொண்டு “இவனெல்லாம் ஒரு புள்ள..!! இந்த மாதிரி ஒரு புள்ளைய பெத்ததுக்கு பாட்டி புள்ள இல்லாமயே இருந்திருக்கலாம்..” என்றான்..
“எனக்கு என்னவோ நேத்து அவர் வந்து பேசிட்டு போனப்புறம் தான் பாட்டி இந்த உயில் எழுதணும்கிற முடிவுக்கு வந்து இருப்பாங்களோன்னு தோணுது சார்..”
“அது அவங்க வீடு.. அவங்களோட விருப்பம்.. நம்ம ரெண்டு பேரும் அதுல ஒண்ணுமே சொல்ல முடியாது சுந்தரி… அவங்க செய்றபடி செய்யட்டும்.. வயசானவங்க அவங்க.. அவங்க என்ன ஆசைப்படுறாங்களோ.. யாருக்கு அந்த வீட்டை கொடுக்கணும்னு ஆசைப்படறாங்களோ.. அவங்களுக்கே எழுதி வைக்கட்டும்.. ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன்.. இன்னொருவாட்டி பாட்டியோட புள்ள வந்தார்னா வீட்டுக்குள்ள விடாதீங்க..” என்றான் சுந்தர்..
“சரிங்க சார்” என்றாள் சுந்தரி.. “சார் அப்புறம்..” என்று அவள் இழுக்க “சொல்லுங்க சுந்தரி…” என்றான் சுந்தர்..
“இல்ல.. கார்மெண்ட்ஸ்லருந்து துணி எடுத்துட்டு வந்து கொடுக்கிறேன்னு சொன்னீங்க.. தைக்குறதுக்கு.. அதான்..” என்று அவள் இழுக்க “ஓஹ்.. நான் அதை மறந்தே போயிட்டேன்.. இன்னைக்கு நிச்சயமா கார்மெண்ட்ஸ்ல ஒரு ஆள்கிட்ட உங்களுக்கு துணி, சாம்பிள், ஸூயிங் மிஷின் எல்லாம் கொடுத்து அனுப்புறேன்.. நீங்க தெக்க ஆரம்பிச்சுடுங்க.. நான் போய் ஒரு ஒன் ஹவர்கெல்லாம் வந்துடும்.. ஓகேவா?” என்று கேட்டான் அவன்..
“இல்ல சுந்தரி.. எனக்கு ஆக்சுவலி ரொம்ப சந்தோஷமா இருக்கு.. உழைக்கணும்னு நினைக்கிறீங்க.. அப்படி நினைக்கிறவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்..” என்று அவன் சொல்ல அவன் சொன்ன “பிடிக்கும்” என்ற வார்த்தையே அவளுக்குள் ஏனோ ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது..
சாப்பிட்டு முடித்து கையை கழுவிக் கொண்டிருந்தவன் வாசலில் அழைப்பு மணி ஒலிப்பதை கேட்டு “சுந்தரி.. அது யாருன்னு கொஞ்சம் பாக்குறிங்களா?” என்றான்..
“இதோ போறேன் சார்..” என்று சொல்லி விட்டு ஓடி சென்று கதவை திறந்தவள் வெளியே யாரோ இரண்டு பேர் நின்று கொண்டிருக்க “சார் யாரோ ரெண்டு பேர் வந்து இருக்காங்க..” என்று உள்பக்கமாய் சுந்தருக்கு குரல் கொடுத்தாள்..
“இதோ வரேன் சுந்தரி” என்று வெளியே வந்து பார்த்தவன் அப்படியே ஸ்தம்பித்து நின்றான்.. அங்கே நின்றிருந்தவர்கள் அவன் சித்தப்பாவும் சித்தியும்..
“சித்தப்பா..!! சித்தி..!!” என்று அழைத்தவனின் கண்கள் அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் பனித்தன..
“உள்ள வாங்க சித்தப்பா.. நான் எதிர்பார்க்கவே இல்ல.. நீங்க வருவீங்கன்னு.. எப்படி இருக்கீங்க சித்தப்பா? எப்படி இருக்கீங்க சித்தி? உக்காருங்க..” என்று அவர்களை அழைத்து உள்ளே அமர வைத்தான்..
“நாங்க நல்லா தான் பா இருக்கோம்.. நீ எப்படி இருக்க?” என்று கேட்டார் நடராஜன்..
அதற்குள் அவன் சித்தியோ “அவர் சும்மா சொல்றார் பா.. அவர் நல்லா இல்ல.. நீ அங்க குடுத்துட்டு வந்த இல்ல உன் கடை.. அதுலதான் இப்ப வேலை நல்லா ஓடுது.. இவர் கடையில் இப்ப வியாபாரமே நடக்கிறது இல்லை.. தைக்கிறதும் கம்மி ஆயிடுச்சு.. மாசத்துக்கு ஆயிரம் ரூபாய் வந்தா அதுவே ஜாஸ்தியா இருக்கு.. நீ அனுப்பற பணத்த வெச்சு கொஞ்சம் சமாளிச்சிக்கிட்டிருக்கோம்.. ஊரெல்லாம் கொஞ்சம் கடன் வாங்கி வச்சிருக்காரு.. அவருக்கு ஒரு தடவை நெஞ்சு வலி வேற வந்துருச்சு.. இப்ப மருந்துல தான் ஓடிக்கிட்டு இருக்கு.. இப்ப கூட உன்னை பாக்க வர்றதுக்கு அவருக்கு இஷ்டமே இல்ல.. நான் தான் வற்புறுத்தி இங்க கூட்டிட்டு வந்தேன்..” என்றார் அவன் சித்தி..
“என்ன சொல்றீங்க சித்தி..? இவ்வளவு நடந்திருக்கு.. என்னை பாத்து சொல்லணும்னு கூட உங்களுக்கு தோணலையா?” என்று சுந்தர் கேட்க சித்தப்பாவோ “ஏன்பா.. ஊரை விட்டு வந்தப்புறம் நீ மூணு தடவை ஊருக்கு வந்திருக்க.. ஒரு முறையாவது இந்த சித்தப்பாவை வந்து பாக்கணும்னு உனக்கு தோணுச்சா?” என்று கேட்டார்..
“இல்ல சித்தப்பா.. நீங்க என் மேல இன்னும் கோவமா இருக்கீங்களோன்னு நினைச்சு தான் நான் உங்களை வந்து பார்க்கலை.. மனசெல்லாம் அடிச்சுக்கிட்டு தான் இருந்தது.. உங்களை வந்து பாக்கணும்னு ஆசையா இருந்தது.. ஆனா உங்களை கோபப்படுத்த வேண்டாம்னு தான் நான் உங்களை பார்க்க வராம அவாய்ட் பண்ணிட்டேன்..” என்று சொன்னான் சுந்தர்..
“இல்லப்பா.. இப்போ உங்க சித்தப்பா பழைய மனுஷன் கிடையாது.. முழுசா மாறிட்டாரு.. இப்ப கூட புலம்பிட்டே தான் இருந்தாரு.. அந்த பிள்ளைய நான் அவ்வளவு கொடுமை படுத்தினேன்.. ஆனாலும் அந்த பேட்டியில நம்மளை அம்மா அப்பாவா கூட வச்சுக்கிறேன்னு சொல்றான் பாரு.. அவன் தங்கமான புள்ளடின்னு அன்னிக்கு உன் பேட்டிய பார்த்து அழவே ஆரம்பிச்சுட்டாரு.. ஆனாலும் அவன் கஷ்டத்திலிருந்தப்போ அவனுக்கு ஒரு வேளை சோறு போடறதுக்கு கூட கணக்கு பார்த்தேன்.. நான் இப்போ அவங்கிட்ட வர மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சாரு.. நான் தான் உன்னை ஒருமுறை வந்து பார்த்துட்டு போகலாம்னு சொல்லி அவரை அழைச்சிட்டு வந்தேன்”
சுந்தர் சட்டென தன் சித்தப்பாவின் அருகில் கீழே தரையில் அமர்ந்து அவர் கையை பிடித்துக் கொண்டான்..
“சித்தப்பா.. எங்க அப்பாவையும் அம்மாவையும் என் வீட்டுல வச்சு கொண்டாடுறதுக்கு எனக்கு பாக்கியம் இல்லாம போச்சு.. அவங்க உருவமா இருக்கறது நீங்களும் சித்தியும் தான்.. நீங்க என் கூட இருந்தீங்கன்னா எனக்கு எங்க அப்பா அம்மாவுக்கு நான் செஞ்ச மாதிரி ஒரு சந்தோஷம் கிடைக்கும்.. தயவு செஞ்சு என் கூட இருந்துடுங்க சித்தப்பா.. என்னை மறுபடியும் நீங்களும் விட்டுட்டு போய் அனாதை ஆக்கிடாதீங்க..” என்று அவன் நாதழுதழுக்க சொல்ல சித்தப்பா அழுதபடி அவனை அப்படியே அணைத்துக் கொண்டார்..
“டேய்.. எனக்கு புள்ளையே பொறக்கல.. என்ன பாவம் செஞ்சேனோன்னு நெனச்சேன்.. ஆனா என்ன புண்ணியம் செஞ்சேனோ தெரியல.. இந்த வயசான காலத்துல நீ எங்களுக்கு புள்ளையா வந்து சேர்ந்து இருக்க.. உன்னை மாதிரி புள்ள கிடைக்கிறதுக்கு நான் கொடுத்து வெச்சிருக்கணும்டா கண்ணா.. உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன் டா.. நீ என் புள்ளடா. நாங்க ரெண்டு பேரும் தான்டா உன்னோட அம்மா அப்பா.. இனிமே நீ சித்தப்பா சித்தின்னு எங்களை கூப்பிடாத.. அம்மா அப்பானே கூப்பிடுறா என் ராசா”
சுந்தருக்கோ சந்தோஷத்தில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. கண்ணில் கண்ணீர் சொரிந்து கொண்டிருக்க சித்தப்பா மடியில் தலை வைத்து அப்படியே படுத்துக் கொண்டான்.. அவர் அவன் தலையை தடவி விட்டுக் கொண்டே “சரிப்பா.. எங்கேயோ கிளம்பிட்டு இருக்க போல இருக்கு..” என்று கேட்டார்..
“ஆமா சி.. ” என்று நிறுத்தியவன் “ஆமாப்பா.. என் கார்மெண்ட்ஸ்க்கு போலாம்னு தான் கிளம்பிட்டிருக்கேன்.. ஆனா நீங்க ரெண்டு பேரும் வந்து இருக்கீங்க.. நான் வேணா லீவு போட்டுடவா?” என்று கேட்டான் அங்கு ஷாலினியை வர சொல்லி இருப்பது கூட ஞாபகம் இல்லாமல்..
“இல்லப்பா.. நாங்க வந்ததுனால உன் வேலை கெடக்கூடாது.. நீ போயிட்டு வா.. சாயந்திரம் வந்து பேசிக்கலாம்..” என்றார் சித்தப்பா..
அவனும் அப்போதுதான் நினைவு வந்தவனாக “அப்பா.. இவங்க பேரு சுந்தரி.. நம்ம வீட்ல சமையல் வேலை செஞ்சுகிட்டு இருக்காங்க.. அது தவிர கார்மெண்ட்ஸ்லருந்து துணி எடுத்துட்டு வந்து இங்கேயே தைப்பாங்க..” என்று சுந்தர் சொல்ல சித்தப்பாவும் சித்தியும் பார்த்த விதத்தை பார்த்து அவனுக்கு அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று புரிந்தது..
“எனக்கு புரியுதுப்பா.. எனக்கும் கல்யாணம் ஆகல.. கல்யாணம் ஆகாத ஒரு பொண்ணை வீட்ல வேலைக்கு வெச்சிருக்கிறேனேன்னு தானே யோசிக்கிறீங்க? ஆக்சுவலா சுந்தரி மட்டும் வீட்ல இல்லப்பா.. இங்க ஒரு பாட்டியும் இருக்காங்க..” என்று அவன் சொல்ல புருவத்தை சுருக்கினார் ஒரு கேள்வியோடு நடராஜன்..
“பாட்டியா?” என்று அவர் கேட்க “ஆமாப்பா.. சுந்தரிக்கு முன்னாடி இந்த வீட்ல அவங்க தான் சமைச்சுக்கிட்டு இருந்தாங்க.. அம்மா அப்பா இடத்துலருந்து என்னை அவ்ளோ பத்திரமா பாத்துக்கிட்டாங்க.. ஆனா சமீபத்துல அவங்க கீழ விழுந்து அவங்களுக்கு இடுப்புல ஃபிராக்சர் ஆயிடுச்சு.. வயசானவங்களா இருந்ததுனால கொஞ்சம் படுத்த படுக்கையிட்டாங்க.. சுந்தரி தான் அவங்களுக்கு எல்லா வேலையும் செய்றாங்க.. கூடவே சமையல் வேலையும் பாத்துக்குறாங்க.. சுந்தரியும் அவங்களை தன்னோட பாட்டியா தான் நினைக்கிறாங்க.. அதனால தான் இந்த வீட்டோட இருக்காங்க..” என்று அவன் விளக்கி சொன்னான்..
“ஆமா.. இப்பதான் நாங்க வந்துட்டோம் இல்ல? வேணும்னா அந்த பாட்டியை உங்க சித்தியை பாத்துக்க சொல்றேன்.. இந்த பொண்ணை அவங்க வீட்டுக்கு அனுப்பிடுப்பா.. கல்யாணம் ஆகாத நீ உன் வீட்ல வயசு பொண்ணை வெச்சிருக்கே.. தப்பு பா சுந்தர்..” என்று சித்தப்பா சொல்ல சுந்தரி அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றாள்..
தொடரும்…
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து
பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து