சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 17– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
சுந்தரியின் குணத்தை பார்த்த மேகலாவுக்கு மனதிற்குள் ஒரு ஆசை பிறந்தது..
பாட்டியின் அறைக்கு சென்று பாட்டியை பார்த்து வரலாம் என்று அங்கே போன மேகலா சுந்தரி பாட்டிக்கு உணவு ஊட்டி கொண்டிருப்பதை பார்த்தாள்..
அப்போது மேகலா உள்ளே நுழைவதை பார்த்து சுந்தரி “வாங்க மேடம்.. உட்காருங்க..” என்று சொல்ல “சுந்தரி.. நீ வேணா வேற வேலை இருந்தா போய் பாரு.. நான் பாட்டிக்கு சாப்பாடு குடுக்கறேன்” என்றார் அவர்..
பாட்டியோ சிரித்தார்… “என்னம்மா.. சிரிக்கிறீங்க?”
மேகலா கேட்க “அதெல்லாம் உங்ககிட்ட கொடுக்க மாட்டா.. அவ கையால எனக்கு கொடுத்தா தான் நான் ஒழுங்கா சாப்பிட்டேன்னு அவளுக்கு ஒரு திருப்தி” என்று சொல்ல சுந்தரியும் “ஆமா மேடம்… எனக்கு சாப்பாட்டை பாட்டிக்கு என் கையால கொடுத்தா ஒரு மாதிரி சந்தோஷமா இருக்கும்” என்றாள்..
“ம்ம்ம்ம்.. இந்த காலத்துல வேலை செய்யவே சோம்பேறித்தன பட்டு வேலை ஏதாவது சொன்னா எப்படி யார் தலையிலயாவது அந்த வேலையை கட்டிட்டு போலாம்னு யோசிக்கற பொண்ணுங்களுக்கு நடுவுல நீ எப்படித்தான் இப்படி இருக்கியோ?” என்று சொன்னார் மேகலா..
“இன்னும் கூட சில பேர் இந்த மாதிரி இருக்காங்க மேகலா” என்று சொல்லியபடி அறைக்கதவிற்கு அருகில் நின்று கொண்டு “உள்ளே வரலாமா?” என்று கேட்டுக் கொண்டு நடராஜன் வந்தார்..
“வாங்க சார்.. உட்காருங்க..” என்று அவர் அமர்வதற்க்கும் ஒரு கதிரையை எடுத்து போட்டாள் சுந்தரி..
மேகலா “அம்மா சுந்தரி.. எங்களை இப்படி மேடம்.. சார்.. ன்னு கூப்பிடாதே.. என்னமோ மாதிரி இருக்கு..” என்று சொல்லவும் “வேற எப்படி கூப்பிடுறது மா?” என்று கேட்க ” ம்…ம்…” என்று யோசித்த மேகலா “அத்தை.. மாமா.. ன்னு கூப்பிடு” என்று சொல்ல மேகலாவை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள் பாட்டியும் நடராஜனும்..
நடராஜன் பார்வையில் ஒரு கேள்வியோடு மேகலாவை பார்க்க மேகலாவும் கண்ணை மூடி திறந்து அவருக்கு பதில் அளித்தார்..
பாட்டிக்கும் மேகலாவுடைய எண்ணம் புரிந்தது.. சுந்தரி “சரிங்க அத்தை.. அப்படியே கூப்பிடுறேன்.. “என்று கூற மேகலா சுந்தரியிடம் “அம்மாடி.. நீ என்ன படிச்சிருக்க? உன் படிப்பு பத்தி எல்லாம் கேட்கிறனேன்னு தப்பா நினைச்சுக்காத..” என்றார்..
“இதில என்ன இருக்கு அத்தை.. நான் பிளஸ் டூ வரைக்கும் முடிச்சிருக்கேன்.. காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிக்கும்போது அப்பா ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாரு… அப்பா இறந்த ரெண்டு மாசத்துல அம்மாவும் இறந்துட்டாங்க.. அதனால என் படிப்பை என்னால தொடர முடியலை அத்தை..”
சுந்தரி தன் விழிகள் லேசாக கலங்க தலையை தாழ்த்தியபடி சொன்னாள்.. அவள் குரலில் அவள் தாய் தந்தையை இழந்த வருத்தம் ஒட்டிக்கொண்டிருந்தது..
“எனக்கு புரியுதும்மா.. நம்ம சுந்தருக்கும் இதே மாதிரி தான் திடீர்னு ஒரு நாள் அவங்க அப்பா அம்மா இறந்துட்டாங்க.. அது எவ்வளவு பெரிய இழப்புன்னு எனக்கு புரியும்.. இப்போ உனக்கு வேற யாரும் இல்லையா? இங்க தனியா தான் இருக்கியா?”
“இல்லம்மா.. எனக்கு ஒரு அக்கா இருக்கா.. அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு.. அவளுக்கு ஒரு குழந்தையும் இருக்கு.. ” என்றாள் சுந்தரி..
பாட்டி அதற்குள் உணவை உண்டு முடித்து விட அவருக்கு பருக நீர் கொடுத்துவிட்டு “சரி பாட்டி.. சாப்பிட்டு முடிச்சிட்டீங்க.. நான் போய் கொஞ்சம் தெக்கிற வேலை இருக்கு.. அதை பார்க்கிறேன்.. நீங்க அத்தை மாமா கூட பேசிட்டு இருங்க..” என்று சிரித்தபடி சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டாள்..
அவர்கள் தன்னை அப்படி கூப்பிட சொன்னதை சுந்தரி ஆராயவில்லை.. அவளை பொருத்தமட்டில் அனாதைகளாக இருந்த தன் அக்காவுக்கும் தனக்கும் பாட்டி ரூபத்திலும் சுந்தரின் குடும்பத்திலும் உறவுகள் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது..
சுந்தரி வெளியே சென்ற பிறகு மேகலா பாட்டியிடம் “அம்மா.. அந்த பொண்ணு குணமா இருக்காம்மா.. இந்த காலத்துல இப்படி ஒரு பொண்ணு கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்.. பெரியவங்க கிட்ட எல்லாம் அனுசரணையா நடந்துக்கறா… செய்யற வேலை எல்லாத்திலயும் ஒரு நேர்த்தி இருக்கு.. படிப்பு கொஞ்சம் கம்மி தான்.. ஆனா யாராவது படிக்க வச்சா நல்லா படிப்பான்னும் தோணுது.. நல்ல புத்திசாலி பொண்ணா தான் தெரியுறா..” என்று சொன்னார்..
“ஆமாமா.. இந்த வயசிலேயே வாழ்க்கையில பாக்க கூடாதெல்லாம பாத்துட்டா.. பாவம் என்கிட்ட தான் ஏதோ தாய் பறவை கிட்ட அடைக்கலம் தேடற குட்டி பறவை மாதிரி அடைக்கலம் தேடிக்கிட்டு இருக்கா.. உண்மையை சொல்லப்போனா பெரிய பணக்கார குடும்பத்தில் இருந்த பொண்ணு தான்மா.. அவங்க அப்பா அம்மா போனப்புறம் பணமும் போயிடுச்சு.. பாவம் இவ அந்த சின்ன வீட்ல கஷ்டப்பட்டுட்டு இருக்கா..”
“ம்க்கும்.. அந்த கதையை ஏன் கேக்குற?” என்று சுந்தரியின் வாழ்க்கையில் அதுவரை நடந்த அத்தனை கதையையும் பாட்டி மேகலாவிடம் சொன்னார்..
“ஐயோ.. தன்னந்தனியா வாழற ஒரு பொண்ணுக்கு இந்த சமூகத்தில பாதுகாப்பே கிடையாது.. இப்படி அப்பா ஸ்தானத்திலிருந்து அந்த பொண்ணுக்கு எல்லாத்தையும் பண்ண வேண்டிய அவங்க அக்கா புருஷனே இந்த மாதிரி கெட்ட புத்தியோட இருந்தா பாவம் அந்த பொண்ணு என்னதான் பண்ணும்?” அங்கலாய்த்தாள் மேகலா..
“ஆமா.. அப்படி ஒரு வரம் வாங்கிட்டு வந்து இருக்கா இவ..என்ன செய்யறது?”
“ஆனா எனக்கு ஒரு ஆசை இருக்கும்மா”
“எனக்கு அது புரிஞ்சது மா.. நீ சுந்தரியை அத்தை மாமான்னு உங்களை கூப்பிட சொல்லும்போதே உன் ஆசை என்னன்னு நான் தெரிஞ்சுகிட்டேன்.. நானும் இப்படித்தான் ஆசைப்பட்டேன்.. ஆனா அது நடக்காது..”
“ஏன் இப்படி சொல்றீங்க..?”
“நீ அந்த டிவில சுந்தர் குடுத்த பேட்டியை பார்த்துட்டு இங்க வந்தன்னு சொன்னே இல்ல..? ஏன் உனக்கு அதுல தான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணை பத்தி அவன் என்ன சொன்னான்னு ஞாபகம் இல்லையா?”
பாட்டி கேட்க “ஐயோ.. ஆமா.. அதை நான் மறந்தே போனேன்.. அவன் ஏன் இப்படி யோசிக்கிறான்னு தெரியல.. நல்ல குடும்ப வாழ்க்கை அமைய கட்டிக்க போற பொண்ணுக்கு நெறம் இருந்தா மட்டும் போதுமா? குணம் வேணாமா ஒரு பொண்ணுக்கு.. அது சுந்தரி கிட்ட நிறைய இருக்கு.. அவன் சொல்ற மாதிரி மேல்நாட்டு பாணியில உடுத்துற பொண்ணு இவ்வளவு பொறுமையா பெரியவங்களை மதிக்கிற மாதிரி…” என்று நிறுத்தியவர் “அப்படி இருக்கவே மாட்டாங்க..ன்னு நான் சொல்லல.. இருக்குறது ரொம்ப அபூர்வம்… அப்படி ஒரு பொண்ணு கிடைக்கறது ரொம்ப கஷ்டம்.. பார்க்கலாம்.. இவங்க தலையில என்ன எழுதி இருக்கோ?” என்றாள் மேகலா பெருமூச்சு விட்டுக்கொண்டு..
“அந்த சுந்தரி பொண்ணு ரொம்ப கஷ்டப்பட்டுட்டா.. அவளுக்கு ஏதாவது ஒரு நல்ல வழி பண்ணிட்டு போகணும்னு நான் நினைக்கிறேன்.. ஏதோ நான் போறதுக்குள்ள என்னை மாதிரியே நினைக்கிற நீங்க இந்த வீட்ல வந்து இருக்கீங்க.. அதுவரைக்கும் சந்தோஷம்.. உங்க ரெண்டு பேர் கிட்டயும் ஒரு வேண்டுகோள் இருக்குமா.. ஒரு வேளை நான் போய் சேர்ந்துட்டாலும்..” என்று பாட்டி சொல்ல இடை மறித்த மேகலா..
“ஐயோ அம்மா.. ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? சுந்தரி எதிருல இந்த வார்த்தையை சொல்லியிருந்தீங்கன்னா அவ ரொம்ப உடைஞ்சு போய் இருப்பா.. இந்த மாதிரி எல்லாம் பேசாதீங்க..” என்றாள் மேகலா..
“அப்படி இல்ல… எல்லாரும் ஒரு நாள் போய் சேர்ந்து தான் ஆகணும்.. அதனால இப்படி சொல்றதுல தப்பே இல்ல.. ஒரு நாள் நான் போய் சேர்ந்துட்டேனா சுந்தரிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கிற பொறுப்பை நான் உங்ககிட்ட கொடுக்கிறேன்.. அம்மா நீ அவளை அத்தை மாமா ன்னு கூப்பிட சொன்னே… நீ எதை நினைச்சு சொன்னியோ.. அது நடக்குதோ இல்லையோ.. ஆனா அத்தை மாமாவா இருந்து அவ வாழ்க்கையை நல்லபடியா ஆக்கி கொடுங்க..” என்றார் பாட்டி கண் கலங்க..
அப்போது நடராஜன் “அம்மா நீங்க கவலைப்படாதீங்க.. நிம்மதியா இருங்க.. நிச்சயமா அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்கிறது எங்களோட பொறுப்பும் கூட..” என்றார்..
பாட்டிக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது… தன் கவலைக்கெல்லாம் ஒரு தீர்வு கிடைத்து விட்டதாகவே எண்ணினார்..
அப்போது வாசலில் சுந்தரின் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கவும் மேகலா “சுந்தர் வந்துட்டான் போல இருக்கு..” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே பாட்டியின் அறைக்குள் சுந்தர் வந்தான்..
அவன் கூடவே இன்னொருவரும் வந்திருந்தார்…
பாட்டியிடம் வந்த சுந்தர் “பாட்டி.. நீங்க ஒரு வக்கீலை கூட்டிட்டு வர சொன்னீங்க இல்ல? இதோ இவர் பேரு ஷாம்.. இவர் ஒரு லாயர்.. இவர்கிட்ட நீங்க எந்த மாதிரி உயில் எழுதணும்னு சொன்னீங்கன்னா அந்த மாதிரி எழுதி கொடுத்திடுவார்..”
பாட்டியிடம் சொன்னவன் “அம்மா அப்பா.. நம்ப எல்லாம் கொஞ்சம் வெளியில போய் இருக்கலாம்.. பாட்டி அவரோட தனியா..” என்று அவன் இழுக்க “புரியுதுப்பா..” என்று சொன்ன நடராஜன் மேகலாவையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்றார்..
அப்போது சுந்தரை அழைத்த பாட்டி “சுந்தர்.. நீ இங்கேயே இருப்பா.. நான் என்ன உயில் எழுதுறேன்னு உனக்கு தெரிஞ்சி இருக்கணும்” என்று கூற அங்கே இருந்த கதிரையில் அப்படியே அமர்ந்தான் சுந்தர்..
அவன் கூடவே வக்கீலும் அமர “எனக்குன்னு இருக்குற அந்த ஒத்த வீட்டை நான் சுந்தர்க்கும் சுந்தரிக்கும் பாதி பாதி போகிற மாதிரி எழுதி கொடுக்கணும்.. “என்று சொன்னார் பாட்டி..
“ஐயோ பாட்டி… எனக்கு எதுக்கு அந்த வீடு? சுந்தரிக்கு முழுசையும் எழுதி குடுங்க..”
சுந்தர் பதற “இல்லப்பா.. நான் உனக்கு அந்த வீட்டை கொடுக்கறதை நெனச்சா அதுவும் பாதியை கொடுக்கறதை நெனச்சா உனக்கு இந்த சின்ன சொத்தை வச்சு நம்ம என்ன பண்ண போறோம் அப்படின்னு தோணும்.. ஆனா நான் அந்த பாதியை உன் பேர்ல எழுதி வைக்கிறதுக்கு ஒரு காரணம் இருக்கு.. சுந்தரி பேர்ல முழு வீட்டையும் எழுதி வச்சா நான் போனப்புறம் என் புள்ள வந்து அவகிட்ட தகராறு பண்ணுவான்.. அந்த புள்ளையை கொன்னு அந்த சொத்தை வாங்கறதுக்கு கூட முயற்சி பண்ணுவான்.. ஆனா உன் பேர்ல பாதி சொத்து இருந்தா நீ அவன் கிட்ட போகாம அதை பாதுகாக்க முடியும்.. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து அந்த வீட்டை வித்து வர்ற பணத்துல என்னை மாதிரி அனாதையா இருக்குற வயசானவங்களுக்கு ஏதாவது உதவி பண்ணா இந்த பாட்டிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.. நீங்க ரெண்டு பேரும் நிச்சயமா அத பண்ணுவீங்கன்னு எனக்கு நம்பிக்கையும் இருக்கு..”
பாட்டி அப்படி சொன்ன பிறகு சுந்தரால் ஒன்றும் பேச முடியவில்லை… பாட்டி சொன்னது அத்தனையும் உண்மைதான்.. என்று அவனுக்கு தோன்றியது..
“சரி பாட்டி.. நீங்க இவ்வளவு தூரம் சொல்றதுனால நான் ஒத்துக்கறேன்.. உங்க ஆசைப்படி நிச்சயமா நான் ஒரு முதியோர் இல்லம் ஓபன் பண்ணி யாருமில்லாத வயசானவங்களுக்கு எல்லாம் நானும் சுந்தரியும் பிள்ளைகளா இருந்து பாத்துக்குறோம்..” என்றான்..
பாட்டிக்கோ கண்களில் கண்ணீர் சொரிந்தது.. அதன் பிறகு வக்கீலிடம் தன் உயிலைப் பற்றி முழுமையும் சொன்னவள் தான் செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்துவிட்டதாக எண்ணி நிம்மதி பெருமூச்சு விட்டார்..
அதன் பிறகு வக்கீலை அழைத்துக் கொண்டு சுந்தர் வெளியேறி போய்விட்டான்..
அப்போது சுந்தரி உள்ளே வரவும் “என்ன பாட்டி.. ஏதாவது வேணுமா?” என்று கேட்க “சுந்தரி.. எனக்கு உங்க அக்கா ரதியை கொஞ்சம் பார்க்கணும்.. அவளோட கொஞ்சம் பேசணும்” என்று பாட்டி சொல்ல “என்ன விஷயம் பாட்டி?” என்று கேட்டாள் சுந்தரி..
“அது உங்க அக்காவுக்கும் எனக்கும் நடுவில இருக்கிற ஒரு ரகசியம்.. உன்கிட்ட எல்லாம் சொல்ல முடியாது.. நீ உங்க அக்காக்கு ஃபோன் பண்ணி இன்னைக்கே வர முடியுமான்னு கேளு..” என்றார் பாட்டி..
சுந்தரிக்கு ஏனோ பாட்டி பாஸ்கர் தன்னிடம் நடந்து கொண்டதை பற்றி ரதியிடம் எதுவும் சொல்லி விடக்கூடாதே என்ற கவலையாக இருந்தது..
“பாட்டி.. அது வந்து..” என்று அதைப்பற்றி பாட்டியிடம் சொல்லலாம் என்று வாயை எடுத்தவள் அப்போது வக்கீலை வாசல் வரைக்கும் கூட சென்று விட்டுவிட்டு அறைக்குள் சுந்தர் வந்துவிட தன் வீட்டு விஷயத்தை அவன் முன்னே பேசுவதற்கு மனம் இல்லாமல் வாயை மூடி கொண்டாள்..
“சரி பாட்டி நான் ரதியை வர சொல்றேன்..” என்று சொல்லிவிட்டு அங்கே இருந்து கிளம்பி வெளியே சென்றாள் சுந்தரி..
“பாட்டி.. வக்கீல் நாளைக்கு உயிலை ரெடி பண்ணிடுறேன்னு சொல்லிட்டாரு.. அதனால நீங்க கவலை இல்லாம இருங்க பாட்டி.. சுந்தரிக்கு அந்த ப்ரோபெர்ட்டி கிடைக்கிறதுக்கு நான் கேரண்டி.. நிச்சயமா அது வேற யாருக்கும் போகாது.. இப்ப சந்தோஷமா?” என்று கேட்டான் சுந்தர்..
பாட்டியோ மனதிற்குள் “நீங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா அந்த சொத்தை அனுபவிச்சீங்கன்னா எனக்கு இன்னும் ரொம்ப சந்தோஷமா இருக்கும்” என்று நினைத்துக் கொண்டே சுந்தரை பார்த்து சிரித்தாள்..
தொடரும்…
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்துகாத்திருக்கும் உங்கள் அன்பு தோழி“❤️சுபா❤️”