சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 24 ❤️❤️💞

5
(10)

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 24

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

சேகர் கண்களில் கோபத்துடன் வெடித்தான்..

 “நீ எல்லாம் ஒரு அம்மாவா? நான் அவ்வளவு தூரம் அந்த வீடு எனக்கு வேணும்னு கேட்டுட்டு இருக்கேன்.. வேற யாருக்கோ எழுதி வெச்சிட்டேன்னு சொல்ற.. நீ எல்லாம் எதுக்கு தான் உயிரோட இருக்கியோ?”

 பாட்டியின் அருகில் செல்ல முன்னேறியவனை ஒரு வலுவான கை பின்னிருந்து பிடித்திருந்தது..

யார் தன் கையை அவ்வளவு இறுக்கமாக பிடித்திருப்பது என்று பார்க்க திரும்பியவன் அங்கே சுந்தர் மதம் கொண்ட யானை போல் அவனை தீவிரமாய் வெறித்துக் கொண்டிருப்பதை பார்த்து கொஞ்சம் மிரண்டு தான் போனான்..

பின்னர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “டேய் என் கைய விடுடா..” என்று அவன் கைப்பிடியில் இருந்து தன் கையை விடுவிக்க முயன்றான்..

“உனக்கு என்ன தைரியம் இருந்தா பாட்டியை பார்த்து எதுக்கு உயிரோட இருக்கேன்னு கேட்பே.. காரணத்தை தெரிஞ்சுக்கோடா.. அவங்க எங்களுக்காக இருக்காங்க.. எனக்கும் சுந்தரிக்கும் எங்க வாழ்க்கைல அவங்க ரொம்ப முக்கியமானவங்க.. அதான் அவங்களை நிர்க்கதியா விட்டுட்டு சொந்தமா உழைச்சு வாழ முதுகெலும்பு இல்லாம யாரையோ அண்டி பொழைச்சுக்கிட்டு இருக்க இல்ல நீ..?  இப்ப எதுக்கு அவங்களை வந்து தொந்தரவு பண்ணிட்டே இருக்க? மரியாதையா நான் இன்னும் பத்து எண்றதுக்குள்ள நீ இங்க இருந்து வெளியே போற.. இல்ல.. அடுத்த நிமிஷம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..” என்றான் சுந்தர்..

“அவங்க என் அம்மாடா.. என் அம்மாகிட்ட நான் என்ன வேணா கேட்பேன்.. எனக்கு எப்ப தோணுதோ அப்ப வந்து பார்ப்பேன்.. பேசுவேன்.. என்னை அவங்களை பார்க்கக்கூடாது… பேசக்கூடாதுன்னு சொல்றதுக்கு நீ யாருடா..? டேய் பொடிப்பையா.. நீ எல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ண வந்துட்டியா? அம்மா.. உன் புள்ளைய ஒருத்தன் அவமானப்படுத்திக்கிட்டு இருக்கான்.. பாத்துக்கிட்டு அப்படியே சும்மா இருக்க?” பார்வதி பாட்டியை பார்த்து சேகர் எகிறினான்..

“யாருடா என் புள்ள…? இதோ நிற்கிறான் பாரு சுந்தர்.. அவன்தான் என் பேரன்.. அதோ அந்தா நிக்கிறா பாரு சுந்தரி.. எனக்காக அழுதுகிட்டு.. அவ தான் என் பேத்தி.. உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.. என்னைக்கு நீ என்னையும் உங்க அப்பாவையும் நிர்க்கதியா விட்டுட்டு அந்த பெரிய மனுஷன் வீட்டுக்கு வீட்டோட மாப்பிள்ளையா போனியோ.. அன்னைக்கே என்னை பொறுத்த வரைக்கும் என் புள்ள செத்து போயிட்டான்.. உனக்கும் எனக்கும் இருந்த உறவு அப்பவே அறுந்து போச்சு.. இப்போ இவங்க ரெண்டு பேர் தான் எனக்கு எல்லாமே.. அதான் என் பேரன் சொல்றான்ல வீட்டை விட்டு வெளிய போன்னு… மரியாதையா வெளியில போயிரு..” என்று கத்தினாள் பாட்டி..

இதுவரை இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சுந்தரிக்கு பாட்டிக்கு அதிகமான மன அழுத்தம் உண்டாகிறதே என்று கவலையாக இருந்தது..

ஆனால் சேகருக்கு அன்று மிகவும் கெட்ட நேரம் போல.. அவன் அப்படியே வெளியே போகாமல் மேலும் பேச ஆரம்பித்தான்.. “ஏ கெழவி..நீயே என்னை துரத்துற இல்ல..? நீ வேணா பாரு இன்னும் பத்து நாளைக்குள்ள கேக்குறதுக்கு நாதி இல்லாம நீ போய் சேர்ந்திடுவே.. அப்போ உனக்கு கொள்ளி போட நான் தானே வரணும்.. வரமாட்டேன் கெழவி. நீ அனாதை பொணமா தான் போகப் போறே..” என்று சொன்னவன் முடிக்கும் முன் அவன் கன்னத்தில் இடி போல் ஒரு அடி விழுந்திருந்தது..

சுந்தர் தான் தன் கைமுஷ்டியை வைத்து ஓங்கி குத்தி இருந்தான்..சேகரின் கன்னத்தில்..

அவன் குத்தியதில் தடுமாறி போய் அங்கிருந்த மேஜைக்கருகில் போய் விழுந்தான் சேகர்..

“டேய்.. இத்தனை நேரம் ஏதோ வயசுல பெரியவனாச்சேன்னு உனக்கு கொஞ்சம் மரியாதை கொடுக்கணும்னு நினைச்சேன்.. ஆனா நீ எல்லாம் மனுசனே இல்ல டா.. பெத்த தாயைப் பத்தி இவ்வளவு கேவலமா பேசுற..? முதல்ல நீ தாண்டா உயிரோட இருக்க தகுதி இல்லாதவன்.. அவங்க இருக்கிற வரைக்கும் யாராவது ஒருத்தருக்கு உதவியா இருக்கணும்னு நினைச்சு கடைசி வரைக்கும் உழைச்சு கிட்டே இருக்காங்க.. அவங்க உயிரோட இருக்க கூடாதுன்னா நீ எல்லாம் இத்தனை நேரம் மண்ணோட மண்ணா மக்கி போய் இருக்கணும் டா.. எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு உன்னை கொன்னு போட்டுடலாம் போல இருக்கு.. பாட்டி முகத்துக்காக பார்க்கிறேன்.. நீ அவங்க பெத்த பிள்ளைன்ற ஒரே காரணத்துக்காக உன்னை விட்டுடறேன்.. மரியாதையா ஓடிப் போயிரு.. ” என்றான் சுந்தர்..

“ஏண்டா.. எங்க அம்மாவை நான் பார்க்க வந்தா பார்க்க விடாம என்னை அடிக்கிறியா? இரு.. போலீஸ் ஸ்டேஷன் போய் உன் மேல ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன்” என்று சேகர் சொல்ல “நீ என்னடா கம்ப்ளைன்ட் கொடுக்கிறது? சுந்தர்.. போலீஸ்க்கு ஃபோன் பண்ணி இவனை வந்து பிடிச்சுட்டு போக சொல்லுப்பா.. இந்த வீட்டுக்குள்ள வந்து கலாட்டா பண்றான்னு.. நானே இவனுக்கு எதிரா சாட்சி சொல்றேன்..நீ போலீசுக்கு ஃபோன் பண்ணு சுந்தர்.. இன்னைக்கு இவனை புடிச்சி குடுத்துட்டு தான் மறு வேலை.. இவனைப் பிள்ளையா பெத்ததுக்கு இந்த ஒரு நல்ல காரியத்தை நான் செஞ்சிட்டு போறேன்..” என்றார் பாட்டி..

அதற்குள் சுந்தரி அங்கே வந்து “பாட்டி.. வேணாம் பாட்டி.. என்ன தான் இருந்தாலும் அவர் உங்க பிள்ளை… போலீஸ்ல எல்லாம் புடிச்சு கொடுக்காதீங்க..” என்று சொல்ல “ஏய் சும்மா நடிக்காதடி.. எல்லாம் உன்னால வந்தது.. நீ தான் எங்க அம்மாக்கு எதோ சேவை செய்றேன்னு அவங்க மனச மாத்தி இப்படி ஆக்கிட்ட எனக்கு எதிரா.. ” என்றான்  சேகர்..

“இதை பாரு.. உனக்கு அவ்வளவு தான் மரியாதை… பாட்டி சொன்ன மாதிரி நான் போலீஸ்க்கு ஃபோன் பண்ணிடுவேன்.. நீ சுந்தரியை தள்ளி விட்டுட்டு உள்ள வந்ததை பார்த்தப்பவே உன் கைய கால உடைச்சு போட்டு இருப்பேன்.. நீ பார்வதி பாட்டியோட பிள்ளைங்கறதனால தான் நான் உன்னை இதுவரைக்கும் பேச விட்டு வச்சிருக்கேன்.. மரியாதையா இப்ப எழுந்து போறியா? இல்ல நான் போலீசுக்கு ஃபோன் பண்ணட்டுமா? வீட்ல ரெண்டு பொம்பளைங்க தனியா இருக்கும்போது வந்து கலாட்டா பண்ணேன்னு சொல்லி உள்ள புடிச்சு போட்டுருவேன்” என்றான் சுந்தர்..

சுந்தரையும் சுந்தரியையும் முறைத்துக் கொண்டே அங்கிருந்து எழுந்தவன் அவர்களை முறைத்துக் கொண்டே வெளியே போய் விட்டான்.. வெளியே போனவன் அந்த வீட்டை திரும்பிப் திரும்பிப் பார்த்துக் கொண்டு “நான் இங்கிருந்து போயிட்டாலும் உங்களை சும்மா விட மாட்டேன் டா… உங்களுக்கெல்லாம் முதல் எதிரி நான் தான்..” என்று கருவிக் கொண்டே அங்கிருந்து சென்றான்..

பாட்டி கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.. தலையில் அடித்துக் கொண்டு “என்ன பாவம் பண்ணனோ? என் வயித்துல இந்த பாவி வந்து பிள்ளையா பிறந்து இருக்கான்… புள்ளையா இது? தேள் கொடுக்கு..” என்று புலம்பியவள் அருகே சென்ற சுந்தரும் சுந்தரியும் ஆளுக்கு பாட்டியின் இரு பக்கம் நின்று பாட்டியின் கையை பிடித்துக் கொண்டார்கள்..

“பாட்டி.. ரொம்ப கவலைப்படாதீங்க பாட்டி.. ஸ்ட்ரெஸ் எடுத்துக்காதீங்க.. உங்களுக்கு டாக்டர் சொல்லி இருக்கிறார் இல்ல.. உங்க பிள்ளை ஏதோ சொல்லிட்டு போறாரு.. நீங்க எங்களுக்காக நல்லபடியா இருக்கணும் பாட்டி.. எங்க ரெண்டு பேரையும் நினைச்சுக்கோங்க..” என்றாள் சுந்தரி..

“அதானே பாட்டி.. உங்களுக்கு தான் உங்க ஆசை பேரன் நானும்.. உங்க அருமை பேத்தி சுந்தரியும்.. இருக்கோம் இல்ல..? நீங்க எதுக்கு இப்படி கவலைப்படுறீங்க?” என்று  சிரித்துக்கொண்டே கேட்டான் சுந்தர்..

“ஆமாம்பா.. நீங்க ரெண்டு பேரும் எனக்கு பேரன் பேத்தியா கிடைச்சது நான் செஞ்ச புண்ணியம்..” என்று பாட்டி சொல்ல “சரி.. கொஞ்சம் கண்ணை மூடி தூங்குங்க பாட்டி..” என்று சொன்ன சுந்தரி உள்ளே இருந்து பாட்டிக்கு இப்படி மன அழுத்தம் இருக்கும்போது மருத்துவர் கொடுக்க சொல்லிய தூக்க மாத்திரையை எடுத்து கொடுத்தாள்..

அதை வாங்கி சாப்பிட்ட பாட்டி அடுத்த 10 நிமிடங்களுக்குள் உறங்கிப் போனார்..

சுந்தரி அருகில் வந்த சுந்தர் “சுந்தரி உங்களுக்கு எங்கேயாவது அடிபட்டுச்சா? அவன் அப்படி தள்ளி விட்டுட்டு வந்தானே..” என்று கேட்க “சார் லேசா தான்  கதவுல இடிச்சுக்கிட்டேன்..  மத்தபடி வேற எதுவும் இல்ல..” என்றாள் சுந்தரி..

சுந்தர் அவள் கையை பிடித்து தூக்கிப் பார்த்தவன் கதவு தாழ்ப்பாளில் கை முட்டி இடித்து முட்டியில் ரத்தம் வருவதை பார்த்தான்..

“என்ன ஒன்னும் அடி படல? ரத்தம் வந்துட்டு இருக்கு பாருங்க.. இடிச்சுகிட்டு நீங்க பாட்டுக்கு அதை கவனிக்காம ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டு இருக்கீங்க.. வாங்க என்னோட..” என்று அவள் கையைப் பிடித்து தன் அறைக்கு வேகமாக இழுத்துச் சென்றான்..

தன் கட்டிலில் சென்று அவள் இரு தோள்களையும் பிடித்து அவளை அமர வைத்தவன் முதலுதவி பெட்டியை எடுத்து அந்த அடிக்கு முதல் உதவி செய்து கட்டு போட்டு விட்டான்..

“ஆமா.. நீங்க சாப்பிடுறீங்களா இல்லையா? என்ன இவ்வளவு வீக்கா இருக்கீங்க? அந்த ஆள ஒரு ரெண்டு நிமிஷம் கூட உங்களால சமாளிச்சு வெளில தள்ளி கதவை சாத்த முடியல.. அவன் உங்களை அப்படி புடிச்சு தள்ளிவிட்டுட்டு உள்ள வர்றான்.. பொண்ணுங்கள்லாம் நல்ல ஸ்ட்ரென்த்தோட இருந்தா தான் தனக்கு வர்ற ஆபத்திலிருந்து தன்னை காப்பாத்திக்க முடியும்.. நீங்களும் பாட்டியும் வீட்ல இப்படி தனியா இருக்கும் போது பாட்டியோட புள்ள வந்தான் சரி.. அவன் உங்களை எதுவும் பண்ணல.. வேற யாராவது தப்பான நோக்கத்தோட வந்து உங்க கிட்ட தப்பா நடந்துகிட்டா..? பாட்டியாலயும் நடக்க முடியாது.. நீங்க எப்படி சமாளிப்பீங்க? முதல்ல நல்லா சாப்பிட்டு ஸ்ட்ராங்கா இருங்க சுந்தரி..” என்று சொன்னவனை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தாள் சுந்தரி..

“சார்.. நான் நல்லா தான் சார் சாப்பிடுறேன்.. எங்க வீட்ல இருக்கும்போது கொஞ்சமா தான் சாப்பிடுவேன்.. நிறைய பொருள் இருக்காது..  பணக் கஷ்டம் இருந்துச்சு.. ஆனா இங்க வந்தப்புறம் நான் ரொம்ப நல்லா சாப்பிடுறேன் சார்.. ” என்றாள் சுந்தரி…

“ம்ம்ம்.. நீங்க என்னவோ சொல்றீங்க? ஆனா உங்களை பார்த்தா நீங்க சாப்பிடுற மாதிரியே தெரியல..”

“சரி சார்.. நான் நைட்டுக்கு சாப்பாடு செய்யணும்.. நான் போய் வேலையை பார்க்கிறேன்..” என்று எழுந்தவளை “நீங்க ஒன்னும் இப்ப சாப்பாடு எல்லாம் செய்ய வேண்டாம்.. நீங்க உங்க ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்க.. நைட் நான் வெளியில் இருந்து ஃபுட் ஆர்டர் பண்றேன் மூணு பேருக்கும்.. இந்த கையை வச்சுக்கிட்டு எப்படி சமையல் செய்வீங்க?”

“எனக்கு ஒன்னும் இல்ல சார்.. இது லேசான அடி தான்.. என்னால சமைக்க முடியும்.. எதுக்கு அனாவசியமா வெளியிலிருந்து வாங்கி சாப்ட்டு உடம்பை கெடுத்துக்கணும்.. நானே போய் சமைச்சுடறேன் சார்..” என்று சுந்தரி சொல்ல “எனக்கு என்னை ரொம்ப எதிர்த்து பேசினா பிடிக்காது.. நான் சொன்னா சொன்னது தான்.. சொல்லிட்டேன்ல..? நீங்க போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்க.. இன்னிக்கு ஒரு நாள் வெளியிலிருந்து சாப்பிட்டா உடம்பு ஒன்னும் கெட்டுப் போகாது” என்றான்..

அவன்  மிரட்டியதை பார்த்து கொஞ்சம் பயந்தவள் “சரி சார்..” என்று தயக்கமாக தலையாட்டிக்கொண்டு வாத்தியாரிடம் தண்டனை வாங்கி வகுப்புக்கு வெளியே செல்லும் பள்ளி மாணவி போல தலையை குனிந்து கொண்டு அறையை விட்டு செல்ல அவளையே பார்த்துக் கொண்டிருந்த சுந்தருக்கு சிரிப்பு வந்தது..

“வெரி இன்னசென்ட் கர்ல்..!! பாவம்.. ரொம்ப வெள்ளந்தியா இருக்காங்க.. இவங்களுக்கு நல்ல வாழ்க்கையா அமையணும்..” என்று மனதிற்குள் நினைத்தவன்.. ஸ்விக்கியில் இரவு உணவு கொண்டு வர சொல்லிவிட்டு தன் கட்டிலில் படுத்துக்கொண்டான்..

அப்போது தன் நடவடிக்கையில் இருக்கும் முரண்பாட்டை எண்ணி தன்னை நினைத்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தான் அவன்..

தப்பி தவறி கூட வேற எந்த பொண்ணோட கை பட்டாலும் இல்ல மேல இடிச்சாலும் தள்ளிவிட்டுடுவேன்..  அன்னிக்கு ஷாலினி என் தோளை பிடிச்சுக்கும் போது கூட அவங்க கைய வெலக்கி அந்த கார் கதவை புடிச்சுக்க சொன்னேனே.. ஆனா இன்னைக்கு சுந்தரிக்கு அடிபட்ட உடனே அவங்க கைய புடிச்சு இழுத்துட்டு வந்து இருக்கேன் இவ்வளவு தூரம்.. அவங்க ரெண்டு தோளையும் பிடிச்சு கட்டில்ல ஃபோர்ஸ் பண்ணி உட்கார வெச்சு அவங்களுக்கு கட்டு போட்டு விட்டு இருக்கேன்.. என்னதான் அவங்களுக்கு ஹெல்ப் பண்ண நான் செஞ்சாலும் அவங்கள அப்படி ஃபோர்ஸ் பண்ணி பண்ண வைக்கிறதுக்கு எனக்கு என்ன ரைட் இருக்கு? நான் ஏன் சுந்தரி கிட்ட ‌மட்டும் இப்படி நடந்துக்கிறேன்..? சுந்தரி என்னை பத்தி என்ன நினைச்சிருப்பாங்க..? அவங்க அனுமதி இல்லாம அவங்களை அப்படி தொட்டு இருக்க கூடாது.. அவங்களுக்கு உதவி பண்றதாவே இருந்தாலும்..” என்று எண்ணியவன் “இப்போ சாப்பிட போகும் போது முதல்ல அவங்க கிட்ட ஒரு சாரி கேட்டுக்கணும்” என்று எண்ணினான்..

இவன் இப்படி இங்கே சுந்தரியை பற்றி எண்ணிக் கொண்டிருக்க தன் அறைக்கு சென்ற சுந்தரியோ “எவ்வளவு பெரிய மனுஷன்..?! அவரு சகஜமா என்னை அழைச்சுக்கிட்டு போய் என் அடிக்கு பார்த்து பார்த்து கட்டெல்லாம் போட்டு விடுறார்.. என்னை சாப்பிட சொல்லி எவ்ளோ அக்கறையா பேசுறாரு.. என்ன…!? அதை கொஞ்சம் சிரிச்சுக்கிட்டே சொல்லி இருக்கலாம்.. என்னை இப்படி மிரட்டி இருக்க வேண்டாம்..” என்று நினைத்தவள் “இவ்ளோ நல்லவரா இருக்காரு.. இவருக்கு அவர் நெனச்ச மாதிரியே ஒரு நல்ல மனைவி அமைஞ்சு வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கணும்..” என்று மனதார கடவுளை வேண்டிக் கொண்டாள்..

தொடரும்..

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! உங்

க விமர்சனங்களை.. எதிர்பார்த்து

காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி

“❤️சுபா❤️”

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!