சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 25
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
சுந்தர் சொல்லியிருந்த உணவு வகைகளை ஸ்விக்கியில் கொண்டு வந்து கொடுக்க அதை சென்று வாங்கிய சுந்தர்.. சுந்தரியை தேடி அவளை ஓய்வு எடுக்க சொல்லி அனுப்பிய அறைக்கு செல்லவும் அங்கே சுந்தரி இல்லை..
“ரெஸ்ட் தானே எடுக்க சொன்னேன்.. எங்க போனாங்க?” என்று நினைத்தவன் ஒருவேளை பாட்டியின் அறைக்கு சென்றிருக்கிறாளோ என்று பார்க்க பாட்டியின் அறைக்கு போனான்..
பாட்டியின் அறையில் சுந்தரி பாட்டியின் அருகில் அமர்ந்திருக்க பாட்டி கண்களிலேயோ கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது..
“என்னாச்சு பாட்டி? ஏன் அழுதுட்டு இருக்கீங்க?” என்று கேட்டபடி உள்ளே நுழைந்த சுந்தரை பார்த்து சுந்தரி “இப்போ இல்ல சார்.. பாட்டி ஒரு மணி நேரமா இப்படித்தான் அழுதுட்டு இருக்கிறாங்க..” என்றாள்…
சுந்தரும் பாட்டியின் அருகில் போய் அமர “அவங்க புள்ள செஞ்சத நெனச்சு அப்போலருந்து எவ்வளவு சமாதானப்படுத்தினாலும் சமாதானம் ஆகாம அழுதுட்டே இருக்காங்க.. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல..” என்றாள் கவலையாக சுந்தரி..
“ஏன் பாட்டி.. இப்பதான் ஹாஸ்பிடல்ல இருந்து வந்து இருக்கீங்க.. மறுபடியும் ஏன் இப்படி உங்களை பற்றி கவலைப்படாத உங்க பிள்ளைய நினைச்சு நினைச்சு கவலைப்பட்டு நீங்க உடம்பை கெடுத்துக்குறீங்க?” என்றான் சுந்தர்..
“இல்லப்பா சுந்தர்.. அவன் எப்பவுமே கொஞ்சம் சுயநலம் புடிச்சவன் தான்னு எனக்கு தெரியும்.. ஆனா இவ்வளவு மோசமா இருப்பான்னு நான் நினைக்கவே இல்ல.. என்னை பாத்து ஏன் உயிரோட இருக்கன்னு கேட்கிறானே பா.. அவன பெத்த வயிறு பத்திக்கிட்டு எரியுது..” என்று கண் மூடி கரைந்தாள் பாட்டி..
“ஐயோ பாட்டி.. அவர் பண்ணினதுக்கெல்லாம் அவர் அனுபவிப்பார்.. பெத்தவங்கள அழ வச்சா அவங்க நிம்மதியா இருக்க முடியாது.. நீங்க அவரையே நெனச்சு உங்களுக்கு ஏதாவது ஆயிடப்போகுது பாட்டி.. உங்களுக்கு தான் நாங்க ரெண்டு பேரும் கூட இருக்கோம் இல்ல..” என்று சுந்தர் கேட்க.. “அதனால தான் பா நான் இன்னும் உயிரோட இருக்கேன்.. இல்லன்னா என் வீட்டுக்காரர் போனப்பவே நானும் போய் சேர்ந்து இருப்பேன்..” என்றாள் பாட்டி..
“சரி சுந்தரி.. பாட்டி அழுதுகிட்டே இருக்காங்க.. அவங்கள பார்த்தா எனக்கு என்னவோ சாப்பிட கூட தோணல.. அவங்க அழுதுக்கிட்டே இருக்கட்டும்.. நம்மளும் இன்னிக்கு நைட் சாப்பிடாமயே இருக்கலாம்..” என்று சுந்தர் சுந்தரியிடம் சொல்ல.. அவளும் ஆமோதிப்பது போல் தலையாட்டினாள்..
“ஐயோ நான் அழல.. எனக்காக நீங்க ரெண்டு பேரும் சாப்பிடாம எல்லாம் இருக்காதீங்க.. போய் மொதல்ல சாப்பிடுங்க..” என்று பாட்டி சொல்ல “அப்படின்னா அழுகைய நிறுத்திட்டு முதல்ல நீங்க சாப்பிடணும்.. நீங்க சாப்பிட்டு முடிச்சு நிம்மதியா தூங்குங்க.. அதை பார்த்துட்டு தான் நாங்க சாப்பிடுவோம்..” என்று சொன்னான் சுந்தர்..
அவன் பிடிவாதத்தை நினைத்து புன்னகைத்த பாட்டி “சரியான பிடிவாதக்காரப் புள்ள.. சரி சுந்தரி.. நீ எனக்கு சாப்பாடு கொடு.. நான் சாப்பிடுறேன்” என்றார் பாட்டி..
“சுந்தரி நீங்க இருங்க.. நான் சாப்பாடு கொடுக்கிறேன் பாட்டிக்கு.. உங்களுக்கு ஏற்கனவே கைல அடிபட்டு இருக்கு..இல்ல?” என்று சுந்தர் சொல்ல பாட்டி “அதுதான் பா நானும் சொல்லிட்டு இருந்தேன்.. பாரு.. என்னால தானே இந்த அடி எல்லாம் பட்டது சுந்தரிக்கு..” என்று புலம்ப ஆரம்பித்து விட்டாள்..
“ஐயோ சார்.. பாட்டி இப்பதான் என் கைல பட்ட அடிய பத்தி புலம்பி அழுதிட்டிருந்தாங்க.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் சமாதானம் ஆனாங்க.. இப்ப நீங்க மறுபடியும் ஞாபகப்படுத்தி விட்டுட்டீங்களா? இன்னும் கொஞ்ச நேரம் புலம்பிட்டே இருப்பாங்க இவங்க..” என்று சுந்தரி சொல்ல “பாட்டி.. உங்களால சுந்தரி கிட்ட எனக்கு திட்டு விழுது.. பேசாம சாப்பிடுங்க பாட்டி..” என்று பாவமாக சொன்னான் சுந்தர்..
“சரி சரி..ரெண்டு பேருக்கும் நடுவுல என்னால சண்டை வேண்டாம்.. சாப்பாடு கொடுப்பா சுந்தர்.. நான் சாப்பிடுறேன்..” என்று பாட்டி சிரித்துக் கொண்டே சொல்ல பாட்டிக்கு உணவை கொடுத்தான் சுந்தர்..
பாட்டி உண்டு முடித்த பிறகு சுந்தர் அறையை விட்டு வெளியேற எப்போதும் போல் பாட்டிக்கு மாத்திரை கொடுத்து தூங்க வைத்துவிட்டு அறைக்கு வெளியே வந்தாள் சுந்தரி..
சுந்தர் சாப்பாட்டு மேஜையில் உணவைப் பிரித்து இருவருக்கும் இரு தட்டுகளை வைத்து பரிமாறி வைத்திருக்க அதை பார்த்த சுந்தரி “நீங்க எதுக்கு இதெல்லாம் பண்றீங்க? நான் வந்து செஞ்சிருப்பேன் இல்ல?” என்று சொல்லவும் “இப்ப என்ன கடையிலிருந்து வாங்கின சாப்பாடு தானே? அதை அப்படியே பிரிச்சு தட்டில வச்சிருக்கேன்.. நாங்களும் கொஞ்சம் வேலை செய்வோம்.. ” என்று புருவத்தை சுருக்கி சொன்னவனை பார்த்து சிரித்தாள் சுந்தரி..
“நீங்க எவ்ளோ வேலை செய்வீங்கன்னு எனக்கு தெரியும் சார்.. அவ்வளவு வேலை செஞ்சு உழைக்கலைன்னா இந்த அளவுக்கு முன்னேறி இருக்க முடியாது உங்களால..” என்றாள் சுந்தரி..
“அதவிடுங்க சுந்தரி.. ரொம்ப நாளா நான் உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்னு நெனைச்சுடடு இருந்தேன்.. நீங்க ப்ளஸ்டூ பாஸ் பண்ணி இருக்கீங்களா?” என்று சாப்பிட்ட படியே கேட்டான் சுந்தர்..
அவள் கதையைக் கேட்டவனுக்கு தன் அன்னையும் தந்தையும் இறந்த தினம் ஞாபகம் வந்தது.. “ஐ அம் சாரி சுந்தரி… அந்த வயசுல அம்மா அப்பா இரண்டு பேரும் இறந்து போயிட்டா அது எவ்வளவு கஷ்டமான விஷயம்ன்னு எனக்கும் தெரியும்.. ஆமா நீங்க ஏன் மறுபடியும் காலேஜ்ல படிக்க கூடாது?” என்று சுந்தர் கேட்க “எப்படி சார் முடியும்? கார்மெண்ட்ஸோட துணி தைக்கிற வேலை.. இங்க சமையல் வேலை.. பாட்டிய பார்த்துக்கறது.. இது எல்லாத்துக்குமே நாள் பூரா நேரம் சரியா இருக்கு சார்.. காலேஜுக்கு போகணும்னா அட்லீஸ்ட் ஒரு மூணு மணி நேரமாவது போக வேண்டி இருக்கும்.. எங்க சார் அவளோ டைம் இருக்கு?” என்று கேட்டாள் சுந்தரி..
“ம்ம்ம்ம்.. எனக்கு புரியுது.. உங்கள ஏதாவது ஈவினிங் காலேஜ்ல போட முடியுமான்னு நான் பாக்குறேன்.. மதியம் போயிட்டு சாயங்காலம் வர மாதிரி..” என்று அவன் சொல்ல ” அப்ப கூட பாட்டிய பார்த்துக்கனுமே சார்.. அவங்கள பாத்துக்க யாரும் இல்லையே..” என்று கேட்டாள் சுந்தரி..
“அது ஒன்னும் ப்ராப்ளம் இருக்காது சுந்தரி.. நம்ம ஒரு நர்ஸ்ஸ அப்பாயிண்ட் பண்ணிக்கலாம் அந்த டைமுக்கு மட்டும்..” என்றான் சுந்தர்..
“சார் என்ன இருந்தாலும் நான் செய்யற மாதிரி வராது சார் பாட்டிக்கு.. பரவால்ல சார்.. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல..” என்று சுந்தரி சொல்ல “சரி.. நீங்க காலேஜ் போய் படிக்க வேண்டாம்.. கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ்ல சேர்த்து விடுறேன்.. படிக்கிறீங்களா?” என்று கேட்டான் சுந்தர்..
“அப்படின்னா சரி சார்.. நைட் முழிச்சிருந்து கூட நான் படிச்சிடுவேன்..” என்று அவள் சொல்லவும் அவள் ஆர்வத்தை கண்டு வியந்து போனான் சுந்தர்..
“அப்படின்னா சரி.. உங்களோட பிளஸ் டூ மார்க் ஷீட்.. சர்டிபிகேட்..எல்லாம் நாளைக்கு எடுத்துட்டு வந்து குடுங்க.. நான் நாளைக்கு உங்களோட கோர்ஸ்க்கு அப்ளை பண்றேன்.. ” என்றான் சுந்தர்..
“சரிங்க சார்.. நான் ரதிய நாளைக்கு கொண்டு வந்து கொடுக்க சொல்றேன்..” என்றாள் சுந்தரி.. அதன் பிறகு இருவரும் சாப்பிட்டு முடித்து விட்ட பிறகு சுந்தரி பாத்திரங்களை கழுவி வைக்க சமையலறை உள்ளே செல்ல சுந்தர் தண்ணி எடுத்துக் குடிக்க தானும் சென்றான்..
பாத்திரங்களை கழுவிக்கொண்டு இருந்த சுந்தரி கையில் அடிபட்டு இருப்பதால் கொஞ்சம் மெதுவாக கஷ்டப்பட்டு செய்து கொண்டிருக்க.. அதை பார்த்தவன் ” சுந்தரி நான் பாத்திரத்த கழுவறேன்.. உங்களுக்கு கை வலிக்குது போல இருக்கு..” என்று சொல்லி அவளிடமிருந்து பாத்திரத்தை வாங்கினான்..
” சார்.. இதெல்லாம் சின்ன அடிதான்.. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.. நானே செஞ்சுப்பேன்..” என்று சுந்தரி சொல்ல “சரி முழுசா பண்ணல.. நீங்க பாத்திரத்தை தேய்ச்சு கொடுங்க.. நான் வேணா அத கழுவி வெக்கிறேன்..” என்று சொல்லி அவள் பக்கத்தில் நின்று அவள் ஒரு ஒரு பாத்திரமாக தேய்த்து கொடுக்க அவன் அதை அலம்பி எடுத்து வைத்தான்..
அப்போது பாத்திரம் தேய்த்துக்கொண்டு இருந்த சுந்தரியின் முகத்தில் ஒரு மெல்லிய கற்றை முடி குறுக்கே வந்துவிழ அதை தன் தோள்களால் ஒதுக்க முயற்சி செய்து கொண்டே இருந்தவள்.. அது ஒதுங்காமல் மறுபடி மறுபடி முகத்தின் எதிரே விழ அப்படியே தன் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தாள்..
அதை பார்த்த சுந்தர் அந்த முடியை எடுத்து தன்னையும் அறியாமல் அவள் காதிற்கு பின்னால் கோதி விட்டான்..
அவன் அப்படி செய்து கொண்டே இருக்கும் போதே அதை எதிர்பார்க்காத சுந்தரி சட்டென திரும்பி அவன் பக்கம் பார்க்க இருவரின் கண்களும் ஓர் அரை நிமிடம் சந்தித்துக் கொண்டன..
அவர்கள் கண்கள் இரண்டும் என்ன பேசியதோ அவர்களுக்கு தெரியாது.. சுந்தரியின் முடியை கோதிவிட்ட சுந்தரின் கைகள் அப்படியே நின்று இருந்தது.. அவள் கண்களை பார்த்தவன் அதன் அழகில் தன்னை மறந்து நிற்க அரை நிமிடத்திற்கு பின்னால் தன்னை தானே சுதாரித்துக் கொண்டு தன் கையை மெதுவாக அவள் தலையில் இருந்து எடுத்தான்..
“இல்லை.. உங்க முடி குறுக்க வந்து விழுந்தது.. ரொம்ப நேரமா அதை பின்பக்கம் தள்ளி தள்ளி பார்த்து முடியாம கஷ்டப்பட்டுட்டு இருந்தீங்க.. அதான்..” என்று அவன் இழுக்க “ப…பரவாயில்ல சார்..” என்றவள்.. ” சார்.. சொன்னா கேளுங்க.. நானே மெதுவா செஞ்சுகிறேன்.. சார்.. ப்ளீஸ்” என்று அவன் அருகாமையை அதற்கு மேல் தாங்க முடியாமல் அவள் மறுபடியும் சொல்லவும் அவனுக்கும் அதற்கு மேலாக அங்கு நிற்க தர்ம சங்கடமாக இருக்க அங்கிருந்து தன்னறை நோக்கி சென்றான் சுந்தர்..
சுந்தரி அருகில் இருந்தால் தனக்கு என்ன ஆகிறது என்று அவனுக்கு புரியவில்லை.. அவளுக்கு சிறு கஷ்டம் இருந்தாலும் ஏனோ அவன் மனது தாங்காமல் அந்த கஷ்டத்தை போக்க உடனே அவன் கை பரபரவென செயல்பட்டு விடுகிறது அவன் அனுமதி இல்லாமலேயே..
இரவு மிக நேரமாகியும் சுந்தருக்கும் தூக்கம் வரவில்லை.. பாட்டி அறையில் படுத்திருந்த சுந்தரிக்கும் தூக்கம் பிடிக்கவில்லை.. இருவருமே விடியலின் பொழுது அருகில் இருக்கும் போது தான் உறங்கினார்கள்..
ஆனால் ஆதவனோ சரியான சமயத்துக்கு உறங்கி சரியான சமயத்துக்கு எழுந்தும் விட்டான்..
சுந்தரி காலையில் எழுந்து வழக்கம்போல் தன் வேலைகளை தொடங்கினாள்.. சுந்தரும் கிளம்பி தன்னலுவலகத்திற்கு செல்ல அங்கே வந்த ஷாலினி “ஹாய் சுந்தர்.. பாட்டிக்கு இப்ப எப்படி இருக்கு?” என்று கேட்டாள்..
அவள் வந்த உடனே பாட்டியை பற்றி விசாரித்தது சுந்தர் மனதுக்கு இதமாக இருந்தது.. ” பரவாயில்லை ஷாலினி.. அப்புறம் அன்னிக்கு நம்ம வெளியில போற புரோகிராம் பாட்டிக்கு உடம்பு சரி இல்லாம போனதுனால கேன்சல் ஆயிடுச்சு இல்ல? இன்னைக்கு ஈவினிங் போகலாம்..” என்று அவன் சொல்லவும் ஆச்சரியமாக “நிஜமாவா சொல்றீங்க சுந்தர்..?” என்றாள் ஷாலினி..
“நான் எதுக்கு உங்க கிட்ட பொய் சொல்ல போறேன்.. நிச்சயமா இன்னைக்கு போலாம் ஷாலினி..” என்று சுந்தர் சொல்ல சந்தோஷமாக தன்னுடைய இருக்கைக்கு சென்றாள் ஷாலினி..
சுந்தரையும் அந்த மகிழ்ச்சி தொற்றிக்கொள்ள அவனும் படப்படவென வேலையை பார்த்தான்..
அன்று மாலை இருவரும் சுந்தரின் காரில் கிளம்பி ஒரு உணவு விடுதிக்கு சென்றனர்.. அங்கே சுந்தர் அவர்களுக்கு என்று ஒரு இருக்கையை முன்பதிவு செய்து வைத்திருந்தான்..
அந்த உணவு விடுதிக்குள் நுழைந்தவுடன் ஷாலினியின் புறம் தன் கையை நீட்ட அவன் கை விரல்களை பற்றியவள் அவனை நிமிர்ந்து பார்க்க அவளைப் பார்த்து அழகாக புன்னகைத்தான் சுந்தர்..
“நீங்க ஸ்மைல் பண்ணும் போது ரொம்ப ஹான்ட்சமா இருக்கீங்க சுந்தர்..” என்று ஷாலினி சொல்லவும் அதற்கும் ஒரு புன்னகையையே பதிலாய் தந்துவிட்டு அவள் கையை பிடித்து அழைத்து கொண்டு போய் தான் முன்பதிவு செய்து வைத்திருந்த மேஜைக்கருகில் இருந்த கதிரையை பின்னால் இழுத்து அவளை அதில் அமர சொல்லிவிட்டு அதை ஒழுங்கு படுத்தி போட்டுவிட்டு “கம்ஃபர்டபிளா இருக்கா ஷாலினி?” என்று கேட்டான் சுந்தர்..
அவள் தலையாட்டி “ஆமாம்..” என்று சொல்லவும் அவன் எதிர்பக்கம் சென்று அங்கிருந்த கதிரையில் அமர்ந்து கொண்டான்..
“அப்புறம் ஷாலினி.. ஃபர்ஸ்ட் டைம் என்னோட வெளியில வந்து இருக்கீங்க.. என்ன சாப்பிடுறீங்க?” என்று கேட்கவும் “எனக்கு ஐஸ்கிரீம் சாப்பிடணும் போல இருக்கு.. சுந்தர்..” என்று கேட்டாள் ஷாலினி..
” ஓ ஷ்யூர்..” என்று சொன்னவன் இரண்டு ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தான்.. உணவு விடுதியின் சிப்பந்தி அந்த ஐஸ்கிரீம்களை எடுத்து வந்து இருவர் முன்னேயும் வைக்க தன் ஐஸ்கிரீம் கோப்பையில் இருந்து சிறிது ஐஸ்கிரீம் எடுத்து சாப்பிட நினைத்தவன் சாப்பிட வாயருகே அதை கொண்டு செல்லவும் அப்போது ஷாலினி அவளுடைய ஐஸ்கிரீமில் இருந்து கொஞ்சம் ஐஸ்கிரீமை எடுத்து அவன் வாய்க்கு அருகில் நீட்டவும் சரியாக இருந்தது..
அதை எதிர்பார்க்காதவன் ஆச்சர்யத்தில் அவள் முகம் பார்க்க அவளோ வெட்கத்தோடு முகத்தை குனிந்து கொண்டு ஐஸ்கிரீமை அவனுடைய வாய்க்கு இன்னும் அருகில் எடுத்து செல்ல அதை சாப்பிட சென்றவனை ஒரு குரல் தடுத்தது..
அவனுக்கு பின்னே இருந்து ஒருவர் வந்து “ஹாய் ஷாலினி.. வாட் எ ப்ளெசன்ட் சர்ப்ரைஸ்..!? நான் உன்னை இங்க மீட் பண்ணுவேன்னு நினைக்கவே இல்ல.. ஆமா உன்னோட பாய்ஃப்ரெண்ட் மாதேஷ் எங்க? ரெண்டு பேரும் எங்க போனாலும் ஒண்ணா லவ் பேர்ட்ஸ் மாதிரி தானே சுத்திக்கிட்டு இருப்பீங்க?” என்று கேட்க அவன் கேட்ட கேள்வியில் அப்படியே திடுக்கிட்டு இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தர்..
ஷாலினியும் இதை எதிர்பார்க்காதவள் பயத்தில் தொண்டைக்குள் எச்சிலை விழுங்கியபடி சுந்தரையும் அந்த இளைஞனையும் மாற்றி மாற்றி பார்த்திருந்தாள்..
தொடரும்..
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து