“மணி எட்டாகுது.. பாட்டி ஏன் இன்னும் வரல?” என்று யோசித்த சுந்தர் பாட்டியின் கைபேசிக்கு அழைத்தான்.. ஆனால் அதைத்தான் சுந்தரி அணைத்து வைத்திருந்தாளே..
பாட்டி கைபேசியும் அணைத்து வைத்திருக்கவும் சிறிது பதட்டமானவன் “என்ன ஆச்சு பாட்டிக்கு? ஃபோனையும் சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்காங்க.. அவங்களும் வரல.. இந்த மாதிரி சொல்லாம கொள்ளாம வராம இருக்க மாட்டாங்களே.. ம்ம் ம்ம்.. ஏதோ தப்பா இருக்கு.. சரி.. அவங்க வீட்டுக்கு போய் என்ன ஆச்சுன்னு பாத்துட்டு வந்துரலாம்..”
தீவிர யோசனையோடும் கவலையோடும் வீட்டை பூட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பி பாட்டியின் வீட்டிற்கு சென்றான்..
பாட்டி வீட்டின் கதவில் பெரிய பூட்டு தொங்கவே அவனுக்கு மேலும் புதிராய் ஆனது..
“பாட்டி சொல்லாம கொள்ளாம வீட்டையும் பூட்டிட்டு எங்க போயிட்டாங்க? நேத்து நைட் 8 மணிக்கு மேல தான் நம்ம வீட்லருந்து இங்க வந்தாங்க.. ஒரு ராத்திரியில சொல்லாம கொள்ளாம எங்க போய் இருப்பாங்க?” என்று யோசித்தவன் “அக்கம்பக்கத்துல விசாரித்து பார்ப்போம்” என்றெண்ணி ரதிமீனா வீட்டுக்கு வந்தான்..
“ஹலோ எக்ஸ்கியூஸ் மீ” என்று வாசலிலிருந்து யாரோ கூப்பிடும் குரலை கேட்டு ரதிமீனா வாசலில் வந்து “யாரு?” என்றாள்..
“என் பேரு சுந்தர்.. பக்கத்து வீட்ல ஒரு பாட்டி இருப்பாங்க இல்ல.. பார்வதி பாட்டி.. அவங்க எங்க போயிருக்காங்க? வீடு பூட்டி இருக்கு..!?” என்றான் அவன்..
“ஆக்சுவலா அவங்க எங்க வீட்ல சமையல் வேலை பாக்குறாங்க.. தினமும் காலைல 6 மணிக்கு கரெக்டா வந்துருவாங்க.. இன்னிக்கி 8 மணி ஆகியும் அவங்களை காணோம்.. எதுவும் இன்ஃபார்ம் பண்ணல.. அதான் என்னன்னு பாத்துட்டு போலாம்னு வந்தேன்,.”
“ஓ.. நீங்க தான் அந்த சுந்தரா? அவங்க நேத்து நைட்டு கீழே விழுந்துட்டாங்க.. என் தங்கச்சி சுந்தரி தான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் இருக்கா.. அவங்க இடுப்பு எலும்பு உடைஞ்சு இருக்குன்னும் அவங்களால கொஞ்ச நாள் இனிமே படுக்கையை விட்டு எந்திரிக்க முடியாதுன்னும் டாக்டர் சொன்னதா சொன்னாங்க..” என்று ரதிமீனா கூறவும் அதைக் கேட்ட சுந்தருக்கு மிகவும் அதிர்ச்சியாகி போனது..
“என்ன சொல்றீங்க? பாட்டி கீழே விழுந்துட்டாங்களா? ஐயோ… அவங்களுக்கு ட்ரீட்மென்ட் பண்ணினா சரியாயிடும்னு சொன்னாங்களா? என்ன சொன்னாங்க?” என்று அவன் கேட்கவும் “அந்த டீடைல்ஸ் எல்லாம் எனக்கு தெரியாது.. இங்க பக்கத்துல இருக்கிற ஹாஸ்பிடல் தான் கூட்டிட்டு போய் இருக்காங்க.. நான் உங்களுக்கு அந்த ஹாஸ்பிடல் அட்ரஸ் தரேன்.. நீங்க வேணா அங்க போய் பாருங்க..”
“ப்ளீஸ்.. அட்ரஸ் குடுங்க.. நான் போய் பார்க்கிறேன்”
மருத்துவமனை முகவரியை அவனுக்கு கொடுத்த ரதிமீனா அப்போது குழந்தை அழும் சத்தம் கேட்கவும் “என் குழந்தை அழறா.. நான் போய் பாக்கணும்” என்று சொல்ல “ரொம்ப தேங்க்ஸ்ங்க.. நான் கிளம்புறேன்..” என்று சொல்லி கிளம்பினான் அவன்..
மருத்துவமனைக்கு வந்தவன் அங்கு இருந்த வரவேற்பறையில் விசாரிக்க அவர்கள் பாட்டி இருந்த அறைக்கான வழியை காட்டினார்கள்..
அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டே அவர்கள் பக்கம் பார்த்துக் கொண்டே அவர்கள் காண்பித்த திசையில் நடக்க ஆரம்பித்தவன் நேரே சென்று பாட்டிக்கு மருந்து வாங்க வேண்டும் என்று சொல்லி மருத்துவர் எழுதி கொடுத்த மருந்து சீட்டை படித்துக் கொண்டே எதிரே வந்த சுந்தரியின் மீது மோதினான்..
மோதிய வேகத்தில் பெண்ணவள் எதிர்பக்கமாக சாய்ந்து விழப்போக அவள் இடையை அப்படியே தாங்கிப் பிடித்தவன்
அவள் விழாமல் இழுத்து பிடிக்கவும் அவன் மார்பில் வந்து அவள் இதழ் பட அவன் தோள்களை தன்னை நிலைபடுத்திக் கொள்ள இறுக்கமாக பிடித்திருந்தாள்..
ஒரு பெண்ணின் மெல்லிய இதழ் முதன் முதலாக அவன் மார்பில் படவும் அதை எதிர்ப்பார்க்காதவன் அது தன்னில் ஒரு புது விதமான உணர்வை தர சட்டென அவளை தன்னிடம் இருந்து விலக்கி நிறுத்தினான்..
எங்கேயோ பார்த்துக் கொண்டு தன் மேல் வந்து மோதிய ஆணவனை நிமிர்ந்து பார்த்த சுந்தரி “ஏன் சார்.. எந்த பக்கம் சார் பாத்துட்டு வரீங்க? எதிர்ல ஆள் வர்றது கூட தெரியலையா உங்களுக்கு?” என்று கேட்கவும் “நான் தான் அவங்களை திரும்பி பார்த்து பதில் சொல்லிட்டே வரேன்.. நீங்க நேரா பாத்துட்டு தானே வரிங்க? ஏன் நீங்க பார்த்து வரக்கூடாதா?” என்று திரும்பவும் கேட்டான் சுந்தர்..
அந்தப் பாதையில் நடந்து வரும்போது தான் மருந்து சீட்டை படித்துக் கொண்டே வந்தது தன் தவறு தான் என்று எண்ணியவள் “சாரி.. ஆனா நீங்களும் இனிமே முன்ன பார்த்து நடங்க” என்று அவனிடம் கிண்டலாக சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு போனவளையே அந்த வரவேற்பறையின் முனையில் அவள் திரும்பும் வரை பார்த்துக் கொண்டிருந்தவன் பாட்டியின் அறையை நோக்கி திரும்பி நடந்து சென்றான்..
பாட்டியின் அறைக்குள் சென்று பாட்டி பாவமாக படுத்து கிடந்ததை பார்த்தவனுக்கு மனம் மிகவும் இறுக்கமாக ஆனது..
“என்னாச்சு பாட்டி? திடீர்னு ஏன் கீழ விழுந்துட்டீங்க?” என்று கேட்டுக் கொண்டே பாட்டியின் அருகில் சென்று அமர்ந்தான்..
“கண்ணா.. சுந்தர் நீயாப்பா? ஐயோ.. இன்னிக்கி காலைல நான் வரலைன்ன உடனே என்னை தேடி வந்துட்டியா? அது மயக்க ஊசி வேற போட்டு இருந்தாங்களா..? உன்கிட்ட சொல்லணுங்கறதை மறந்துட்டேன்யா.. இல்லனா அந்த சுந்தரி பொண்ணு கிட்ட சொல்லியாவது சொல்ல சொல்லி இருப்பேன்..” என்றார் அவர்..
“அதெல்லாம் இருக்கட்டும் பாட்டி.. என் வீட்டு வேலையை விடுங்க.. டாக்டர் என்ன சொன்னாரு? உங்களுக்கு உடம்பு சரி ஆகிடும்னு சொன்னாரா? என்ன சொன்னாரு? நீங்க எப்ப திரும்பி எழுந்து நடப்பீங்கன்னு ஏதாவது சொன்னாரா?”
அவன் படபடப்புடன் கேட்கவும் “எனக்கு 75 வயசுக்கு மேல ஆகுது.. இப்ப விழுந்திருக்கேன்.. இனிமே எழுந்து முன்ன மாதிரி நடக்கல்லாம் முடியுமா? கஷ்டம் தான்.. ஏதோ இருக்கிற காலத்தை இப்படியே ஓட்டிட்டு போய் சேர வேண்டியதுதான்..” என்றாள் பாட்டி..
“அப்படி எல்லாம் சொல்லாதீங்க பாட்டி யாருமே இல்லாத எனக்கு இருந்த ஒரே துணை நீங்கதான்.. காலையிலயும் சாயங்காலமும் உங்க முகத்தை பார்க்கலைன்னா எனக்கு அவ்ளோ கஷ்டமா இருக்கும் பாட்டி.. சரி சாப்டீங்களா?” என்று கேட்டான் அவன்..
“ஆஸ்பத்திரியிலேயே ஏதோ கொடுத்தாங்கப்பா.. இட்லியும் சட்னியும்.. அதை தான் சாப்பிட்டேன்.. ஆனா பாவம் என் கூட அந்த சுந்தரி பொண்ணு வந்து இருக்குதுப்பா.. அதுதான் எதுவுமே சாப்பிடாம உக்காந்து இருக்குது.. என் பக்கத்தை விட்டு அந்த பக்கம் இந்த பக்கம் நகரல.. இப்ப கூட டாக்டர் ஏதோ மருந்து வாங்க சொன்னாங்கன்னு மருந்து வாங்க போனா..” என்றார் அவர்..
“அப்படியா பாட்டி.. சரி பாட்டி.. நான் அப்படின்னா போய் டாக்டர் கிட்ட உங்க உடம்பை பத்தி விசாரிச்சுட்டு சுந்தரிக்கும் ஏதாவது டிஃபன் வாங்கிட்டு வந்து குடுத்துட்டு போறேன்.. சாயந்திரம் வந்து உங்களை மறுபடியும் பார்க்கிறேன் பாட்டி..”
சொல்லிக் கொண்டே எழுந்தவன் திரும்ப அப்போதும் எதிரே மருந்து வாங்கிக் கொண்டு வந்த சுந்தரியின் மீது மோதினான்..
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து இந்த முறை சிரித்து கொண்டனர்..
“ஏன் சார்.. நம்ப ரெண்டு பேரும் போன ஜென்மத்துல பெரிய எதிரி நாட்டு ராஜா ராணியா இருந்திருப்போமோ?.. எப்ப பாரு இப்படி மோதிக்கிறோம்..” என்று சொன்னாள் சுந்தரி..
சிரித்துக் கொண்டே ” ம்ம்ம்.. ஒருவேளை இருக்கலாம்” என்றான் அவன்..
அதன் பிறகு அவன் யார் என்ற கேள்வியுடன் பாட்டியை எட்டிப் பார்த்தவளிடம் பாட்டி “இவர்தான் சுந்தர்.. இவர் வீட்ல தான் நான் போய் சமைச்சுக்கிட்டு இருந்தேன்.. இன்னிக்கி காலைல நான் போகல.. அதான் எனக்கு என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு பதட்டத்தில வந்திருக்கார்” என்றார் பாட்டி..
“பாட்டி.. நான் உங்களை விட ரொம்ப சின்ன பையன்.. என்னை அவரு இவருன்னு எல்லாம் சொல்லாதீங்க..” என்று அவரிடம் சொன்னவன் “பாட்டி சொன்னாங்க.. நீங்க காலைல இருந்து எதுவுமே சாப்பிடலன்னு.. நீங்க அவங்களை பாத்துக்கோங்க.. நான் போய் உங்களுக்கு டிஃபன் வாங்கிட்டு வந்து குடுத்துட்டு போறேன்”
அவளிடம் சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு வெளியே வந்து ஒரு உணவு விடுதிக்கு சென்று அவளுக்கும் தனக்கும் காலை சிற்றுண்டி வாங்கிக் கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கு வந்தான்..
அவனைக் கண்ட பாட்டி “ஆமா உனக்கு உன் ஆஃபீஸ் போகறத்துக்கு டைம் ஆகலையாப்பா? இவ்ளோ நேரத்துக்கு கிளம்பி நீ போயே போய் இருப்பியே..” தன்னால் அவனுக்கு வேலைக்கு செல்ல தாமதம் ஆகி விடப்போகிறது என்ற அக்கறையில் கேட்டாள்..
“பரவால்ல பாட்டி.. ஒருநாள் லேட்டா போனா ஒண்ணும் ஆயிடாது… நான் லீவு போட்டு இருப்பேன்.. இங்க உங்க ரூம்ல ஒருத்தர் தான் இருக்கணும்னு சொல்றாங்க.. ஏற்கெனவே சுந்தரி இருக்காங்க.. நானும் இருக்கேன்னு சொன்னா நல்லா இருக்காது.. அதனாலதான் நான் கிளம்பி போகலாம்னு பார்க்கிறேன்… இல்லைன்னா இன்னைக்கு லீவ் போட்டு உங்களோடயே இருந்திருவேன்..” என்றான் அவன்..
சுந்தரிக்கு அவளுடைய கார்மெண்ட்ஸில் சொல்லாமல் கொள்ளாமல் இன்று விடுமுறை எடுத்துக் கொண்டால் அவளை வேலையை விட்டு எடுக்க கூட வாய்ப்பு இருக்கிறது என்று தெரியும்..
முதலில் அவனிடம் அவளுக்கு பதிலாக அவன் விடுமுறை எடுத்துக் கொண்டு பாட்டியுடன் இருக்க முடியுமா என்று கேட்கலாம் என்று நினைத்தாள்.. பிறகு பாட்டியுடன் இருக்க ஒரு பெண் துணை இருந்தால் தான் சரியாக இருக்கும் என்று யோசித்தவள் அந்த கேள்வியை தன் உதட்டுக்குள்ளேயே அடக்கி வைத்துக் கொண்டாள்..
“சரி.. ரெண்டு பேருக்கும் டிஃபன் வாங்கிட்டு வந்து இருக்க இல்ல? சுந்தரியோடயே உட்கார்ந்து சாப்பிட்டு போப்பா” என்றார் பாட்டி..
“பாட்டி.. இது ஹோட்டல் சாப்பாடு தான்.. உங்க சமையல் அளவுக்கு டேஸ்ட்டா இருக்காது.. எப்படி இருந்தாலும் கம்மியா தான் சாப்பிடுவேன் பாட்டி.. நீங்க என்ன..? உங்க கண்ணெதிர்ல சாப்பிட்டா ரெண்டு வாய் அதிகமா சாப்பிடுவேன்னு நினைச்சுட்டு இருக்கீங்களா.. உங்க சாப்பாட்டை சாப்பிடற மாதிரி?” என்று கேட்டான் அவன்..
“அதுக்கு இல்லய்யா.. அந்த புள்ள பாவம் தனியா தான் சாப்பிடணும்.. நீயும் வந்து இருக்கே.. ரெண்டு பேரும் ஒண்ணா சாப்பிட்டா அதுக்கும் ஒரு துணையா இருக்கும்..ன்னு பார்த்தேன்..” என்றாள் பாட்டி..
“சரி பாட்டி.. நான் இங்கேயே சாப்பிட்டு போறேன்..” என்றவன் “வரிங்களா சுந்தரி.. சாப்பிடலாம்” என்று கேட்டான்..
அவளும் கூட வர இருவரும் அவன் வாங்கி வந்த சிற்றுண்டியை சாப்பிட்டு முடித்தார்கள்..
“சரி பாட்டி.. அப்ப நான் கிளம்புறேன்.. நீங்க மாத்திரை மருந்து எல்லாம் ஒழுங்கா சாப்பிடுங்க.. சாயந்திரம் வந்து நான் பார்க்கிறேன்..” சொல்லிவிட்டு கிளம்பியவனை கண்கொட்டாமல் பார்த்தாள் சுந்தரி..
எவ்வளவு நல்ல மனிதனாக இருக்கிறான் இவன்.. தன் வீட்டில் வேலை செய்யும் ஒருவருக்காக அவ்வளவு பணம் படைத்தவன் அவள் உடல் நலம் விசாரித்து விட்டு எந்த பாகுபாடும் பார்க்காமல் தன்னுடன் உணவும் உண்டு விட்டு போகிறான் என்று பிரமிப்பாய் பார்த்து இருந்தாள்..
மருத்துவரைப் பார்த்து பாட்டியின் உடல்நிலை பற்றி விசாரித்தான்.. அவர் இனிமேல் பாட்டி எழுந்து நடப்பது கடினம் என்று சொன்னதைக் கேட்டு அவன் கண்கள் குளமாகின..
அதன் பிறகு மருத்துவமனையில் பாட்டியின் வைத்திய செலவுக்கான பணம் அத்தனையும் கட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்..
சுந்தரி தன்னுடன் கார்மெண்ட்ஸில் வேலை செய்யும் பிரியாவை கைபேசியில் அழைத்தாள்..
“ஹலோ பிரியா எங்க வீட்டு பக்கத்துல பாட்டி இருக்காங்க இல்ல.. அவங்க கீழே விழுந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருக்காங்க.. அவங்களோட துணைக்கு யாரும் இல்லை.. நான் தான் இருக்கேன்.. அதனால இன்னைக்கு என்னால கார்மெண்ட்ஸ்க்கு வர முடியாது.. கொஞ்சம் சூப்பர்வைசர் கிட்ட இந்த விஷயத்தை சொல்லிடறியா?” என்று கேட்டாள் அவள்..
“என்னடி இப்படி திடீர்னு சொல்ற? அந்த சூப்பர்வைசர் எவ்ளோ முசுடுன்னு தெரியும் இல்ல? நான் இதை போய் சொன்னா உன்னை வேலையை விட்டு தூக்கினாலும் தூக்கிடுவாரு.. பாட்டிக்கு வேற யாரும் இல்லையா பாத்துக்க?” என்று கேட்டாள் பிரியா..
“இல்லடி.. எப்படியாவது பேசி அவரை சமாளிடி.. விஷயத்தை சொல்லு.. அவர் புரிஞ்சுப்பாரு.. கொஞ்சம் திட்டினா எனக்காக வாங்கிக்கோடி..” என்று சொன்னாள் சுந்தரி…
“சரிடி.. சொல்லி பார்க்கிறேன்..” என்று கைபேசியை வைத்தாள் பிரியா..
பகல் முழுவதும் பாட்டியை கவனமாக பார்த்துக் கொண்டாள் சுந்தரி..
மாலை 5 மணிக்கு மருத்துவமனைக்கு வந்த சுந்தர் “பாட்டி எப்படி இருக்கீங்க இப்ப?” என்று கேட்டான்..
“வலி கொஞ்சம் பரவாயில்லப்பா.. ஆனா அசைஞ்சா கூட வலிக்குது.. இப்படியே சிலை மாதிரி படுத்திருந்தா ஒண்ணும் வலி இல்லை..” என்றாள் பாட்டி..
“அது..பாட்டி.. கொஞ்சம் கொஞ்சமா சரியா போயிடும்..” என்றான் சுந்தர்..
அதற்குள் பாட்டி “ஏம்பா சுந்தர்.. இப்ப சாயந்திரம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவ?” என்று கேட்டார்..
“ஹோட்டல் தான் பாட்டி.. காலையில மத்தியானம் ஹோட்டலில்தான் சாப்பிட்டேன்.. இப்பவும் ஹோட்டல்ல தான் சாப்பிடணும்.. அதை பத்தி எல்லாம் நீங்க கவலைப்படாதீங்க.. உங்களுக்கு உடம்பு சரியாகி வந்த உடனே உங்க கை மணக்க நீங்க சமைச்சு போடுறதை நான் சாப்பிட தான் போறேன்.. கொஞ்ச நாள் ஹோட்டல்ல சாப்பிட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.. ஒண்ணும் பிரச்சனை இல்ல..” என்றான் சுந்தர்..
“உனக்கு ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்காதுன்னு தானப்பா என்னையே வேலைக்கு வச்ச? பேசாம வேற யாரையாவது வேலைக்கு வைக்க வேண்டியதுதானே?” என்று கேட்டார் பாட்டி..
“பாட்டி.. புதுசா வர்றவங்க எப்படி சமைப்பாங்கன்னு தெரியாது.. உங்க சாப்பாடு என் நாக்குக்கு பழகி போச்சு.. இப்போ வேற சமையல் சாப்பிடணும்னு நினைச்சாலே பிடிக்க மாட்டேங்குது பாட்டி..” என்றான்..
“அம்மா சுந்தரி.. நான் ஒண்ணு சொல்றேன்.. நீ கேப்பியா?” என்று கேட்டாள் பாட்டி..
“சொல்லுங்க பாட்டி.. என்ன விஷயம்?” என்று கேட்டாள் சுந்தரி..
“நீ வேலைக்கு பகல்ல தானம்மா போற.. காலையிலேயும் சாயந்திரமும் உன் வீட்டில் தானே இருக்கிறே.. அதுக்கு பதிலா தம்பி வீட்டுக்கு போய் அவனுக்கு காலையிலேயும் சாயந்திரமும் சமைச்சு கொடுத்தேன்னா உனக்கு ஒரு வருமானமும் கிடைக்கும்.. அதே சமயம் அவனுக்கும் வீட்டு சாப்பாடு கிடைச்சா மாதிரி இருக்கும்.. அந்த வேலைக்கு நீ போறியாம்மா?” என்று கேட்டாள் பாட்டி..
தொடர்ந்து வருவார்கள்…
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து