சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 4 ❤️❤️💞

4.7
(23)

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 4

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

 

“நீ வேலைக்கு பகல்ல தானம்மா போற.. காலையிலேயும் சாயந்திரமும் உன் வீட்டில தானே இருக்கிறே.. அதுக்கு பதிலா தம்பி வீட்டுக்கு போய் அவனுக்கு காலையிலேயும் சாயந்திரமும் சமைச்சு கொடுத்தேன்னா உனக்கு ஒரு வருமானமும் கிடைக்கும்.. அதே சமயம் அவனுக்கும் வீட்டு சாப்பாடு கிடைச்சா மாதிரி இருக்கும்.. அந்த வேலைக்கு நீ போறியாம்மா?”

 

சுந்தரியை பாட்டி கேட்க.. “ஐயோ பாட்டி அவங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்.. பரவால்ல விடுங்க.. நான் கொஞ்ச நாள் ஹோட்டல்லயே சாப்பிடுறேன்..” அவசரமாய் மறுத்து சொன்னான் சுந்தர்..

 

“இல்லப்பா சுந்தர்.. இது கொஞ்ச நாள்ல சரியா போற விஷயம் மாதிரி தெரியல.. திடீர்னு நான் படுத்த படுக்கையா ஆயிட்டேன்.. என் மனசுக்கு ஒரே உறுத்தலா இருக்குதுப்பா.. பாவம் புள்ள.. நீ எத்தனை நாளைக்கு தான் ஹோட்டல்ல சாப்பிடுவே? உனக்கு உடம்புக்கு ஒத்துக்காம போயி ஏதாவது ஆச்சுன்னா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.. சுந்தரி என்னைவிட நல்லாவே சமையல் பண்ணுவா.. அதனாலதான் சொல்றேன்..” என்றார் பாட்டி..

 

“பாட்டி.. நான் ரதியை ஒரு வார்த்தை கேட்டுக்கிட்டு அப்புறம் என் முடிவை சொல்றேன் பாட்டி.. சாயந்தரம் நான் வீட்ல சும்மா தான் இருக்கேன்.. ஒண்ணும் வேலை இல்ல.. அந்த டைம்ல எனக்கு போய் சமைச்சுட்டு வர்றது ஒண்ணும் பிரச்சனையா இருக்காது.. ஆனா காலை வேளையில எல்லாருக்கும் சமைச்சு வச்சுட்டு அதுக்கப்புறம் நான் வேலைக்கு போறேன் பாட்டி.. நான் இவர் வீட்டுக்கு போயிட்டேனா அங்க சமையல் எல்லாம் பாத்துக்க ஆள் இருக்காது பாட்டி.. ஆனா நீங்க கேக்குறப்போ முடியாதுன்னு  சொல்லுறதுக்கும் எனக்கு மனசு வரமாட்டேங்குது.. நான் ஒரு முறை ரதியை கேட்டுட்டு அப்புறம் சொல்றேன்..” என்றாள் சுந்தரி..

 

“சரிமா.. ஒண்ணும் பிரச்சனை இல்ல.. உன்னால போக முடியாதுன்னா கொஞ்சம் முன்னாடியே சொல்லிட்டா தம்பி வேற ஆள் தேடிக்கும்மா” என்றாள் பாட்டி..

 

“நிச்சயமா சொல்றேன் பாட்டி..” என்று பாட்டியிடம் சொன்னவள் சுந்தர் பக்கம் திரும்பி “எனக்கு உங்க ஃபோன் நம்பர் குடுக்குறீங்களா? நான் வீட்ல பேசிட்டு உங்களுக்கு ஃபோன் பண்ணி சொல்றேன்” என்றாள்..

 

“ஷ்யூர்..  ஒரு நிமிஷம்..” என்று அவன் தன் கைபேசி எண்ணை அவளுக்கு சொன்னான்.. அவளும் அதை தன் கைபேசியில் சேமித்து வைத்தாள்..

 

“சரி பாட்டி.. உடம்பை பாத்துக்கோங்க.. நான் போயிட்டு நாளைக்கு காலையில திரும்பி வந்து உங்களை பார்க்கிறேன்..” என்றான் சுந்தர்..

 

“சரிப்பா.. பார்த்து பத்திரமா போயிட்டு வா” என்றாள் பாட்டி..

 

அவன் சென்று சிறிது நேரத்திற்கு பிறகு பாட்டியை பார்க்க ரதிமீனா குழந்தையை எடுத்துக் கொண்டு வந்தாள்.. பாட்டி நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்..

 

சுந்தரியை பார்த்தவள் “சுந்தரி.. டாக்டர் என்ன சொன்னாங்க? பாட்டிக்கு சரியாயிடுமா? இன்னும் எவ்வளவு நாள் ஆகும் பாட்டிக்கு நல்லா ஆகறதுக்கு?” என்று கேட்டாள்..

 

“இல்ல ரதி.. பாட்டிக்கு கொஞ்சம் நடக்கிறது கஷ்டம் தான்னு டாக்டர் சொன்னாரு.. அதான் இனிமே என்ன பண்ண போறாங்கன்னு தெரியல.. ” என்றாள் சுந்தரி குரலில் கவலையுடன்..

 

“நீ என்ன? வீட்டுக்கு வர போறியா இல்ல இங்கேயே இருக்க போறியா?” என்று ரதி கேட்கவும் “இங்க பாட்டியை பாத்துக்குறதுக்கு வேற யாரும் இல்ல ரதி.. நீ குழந்தையை வச்சுட்டு இங்க இருக்கவும் முடியாது.. பேசாம நான் இங்கயே இருக்கேன்..” என்றாள் சுந்தரி..

 

“நீ இப்படித்தான் சொல்லுவேன்னு எனக்கு தெரியும்.. அதனால தான் உனக்கு மாத்திக்கறத்துக்கு டிரஸ் எடுத்துட்டு வந்து இருக்கேன்.. இங்கயே குளிச்சு இதை மாத்திக்கோ.. முடிஞ்ச வரைக்கும் நாளைக்கு பாட்டியை கூட்டிட்டு அவங்க வீட்டுக்கு வர்றதுக்கு பாரு.. எத்தனை நாள் லீவு போட்டுட்டு இப்படியே ஹாஸ்பிடல்ல உன்னால ஒக்காந்து இருக்க முடியும்? நீயும் வேலைக்கு போகணுமே நாளையிலிருந்து..” என்றாள் ரதி..

 

“நீ வேலைன்னு சொன்னப்புறம் தான் ஞாபகம் வருது… பாட்டி ஒருத்தருக்கு சமைச்சு கொடுத்துட்டு இருந்தாங்கல்ல சுந்தர்.. அவரு இப்ப பாட்டி வராததனால ஹோட்டல்ல தான் சாப்பிட்டுட்டு இருக்காராம்.. பாட்டி என்னை அவருக்கு காலையிலயும் சாயந்திரமும் சமைச்சு கொடுக்க முடியுமான்னு கேட்டாங்க.. நான் தான் சாயந்திரம் முடியும்.. ஆனா காலைல நம்ம வீட்ல எனக்கு வேலை இருக்கும்ல.. அதான் யோசிச்சு உங்கிட்ட கேட்டு சொல்றேன்னு சொன்னேன்” என்றாள் சுந்தரி..

 

“அடி பைத்தியக்காரி.. அந்த வேலையில நிறைய சம்பளம் கிடைக்குது டி பாட்டிக்கு.. அந்த காசை கொடுத்தா உனக்கு வேணாங்குதா? பேசாம போயிட்டு வா.. காலையில இருக்கிற வேலை எல்லாம் இப்ப என்ன நீ இல்லன்னா நான் பார்த்துக்கிறேன்.. நீ அங்க போய் சமைச்சேன்னா நீ அங்கேயே உனக்கு சாப்பிட்டுக்கலாம்.. எங்க மூணு பேருக்கு நான் இங்க பாத்துக்குறேன்.. நீ அங்கிருந்து சமைச்சு சாப்பிட்டு அங்கிருந்து வேலைக்கு போயிரு.. சாயங்காலமும் சமைச்சுட்டு வீட்டுக்கு படுக்க வந்தா போதும்.. அதுவும் நீ பாட்டி வீட்ல தான படுப்பே.. பேசாம சூதானமா பொழைக்க பாரு.. வீட்டுக்கு வர்ற மஹாலக்ஷ்மியை வேணாம் வேணாம்னு விரட்டாத..” என்று சொன்னாள் ரதி..

 

பணம் வருகிறது என்று தெரிந்தவுடன் குழந்தையை வைத்துக்கொண்டு எவ்வளவு வேலை வேண்டுமானாலும் செய்வதற்கு அவள் தயாராக இருந்தாள்..

 

“சரி ரதி.. நீ சொல்றபடி நான் ஒத்துக்குறேன் அந்த வேலைக்கு.. இன்னைக்கு கார்மெண்ட்ஸ் வேற போகலை. அது வேற என்ன கதையோ தெரியல”

 

 

சுந்தரி கவலை தோய்ந்த குரலில் சொல்ல.. “அடிப்பாவி.. முதல்ல அங்க போய் காலையிலேயே லீவு சொல்லிட்டு வந்து இருக்க வேண்டாமா? நீ ஏண்டி இப்படி இருக்க? அந்த வேலை போயிடுச்சுன்னா அதுல வர சம்பளம் போயிருமேடி.. ஒரு சம்பளம் கூட வருதுன்னு பாத்தா ஒரு சம்பளத்தை தொலைச்சிட்டு நிக்கிற..” என்று திட்டினாள் ரதி..

 

பணம் போவதற்கும் வருவதற்கும் ஏற்றார் போல் நிமிடத்திற்கு நிமிடம் அவள் பேச்சு மாறுவதை பார்த்து சுந்தரிக்கு எரிச்சலாய் வந்தது.. 

 

“நான் என்ன பண்றது? பாட்டி கூட யாரும் இல்லை.. அப்படியே விட்டுட்டு போக முடியுமா பாட்டியை..?” என்று கேட்டவளிடம் “அந்த பாட்டியோட பிள்ளையே அந்த பாட்டி வேண்டான்னு நடு தெருவுல விட்டுட்டு போயிருக்கான்.. நீ எதுக்கு மேல விழுந்து செஞ்சுகிட்டு இருக்கே..? முதல்ல நம்ம பொழப்பை பாக்கணும் சுந்தரி.. நமக்கு மிஞ்சி தான் அடுத்தவங்களுக்கு செய்யணும்னு நினைக்கணும்.. இப்படியே நீ உன் வாழ்க்கையை பார்க்காம அடுத்தவங்களுக்கு செஞ்சுக்கிட்டே இருந்தன்னா கடைசில ஒண்ணும் இல்லாம தான் நிப்பே..” என்றாள் ரதி..

 

“சரி விடு ரதி.. நான் பாத்துக்குறேன்.. பாட்டியை பார்த்துக்க வந்ததால தான் எனக்கு அந்த சமையல் வேலை கிடைச்சது.. அதை பத்தி யோசிச்சியா நீ?” என்றாள் சுந்தரி..

 

“ம்ம்.. நீ சொல்றதும் சரிதான்.. சரி நாளைக்கு கம்பெனில போய் பேசி பாரு.. என்ன தான் சொல்றாங்கன்னு” என்று ரதி சொல்லவும் “ஆனா நாளைக்கு யார் பாட்டியை பார்த்துப்பாங்கன்னு தெரியலையே” என்றாள் சுந்தரி..

 

“இப்பதானே சொன்னேன்.. முதல்ல உன்னை பத்தி யோசி.. அப்புறம் மத்தவங்களை பத்தி யோசின்னு..” 

 

“காலையில அந்த சுந்தர் வரேன்னு சொல்லி இருக்கார்.. அவர் கிட்ட வேணா கேட்டு பாக்குறேன் என்ன செய்யறதுன்னு.. ஆனா பாட்டியை அப்படியே நான் விட்டுட்டு போக மாட்டேன்..” 

 

“இப்படியே பேசிகிட்டு இருந்தன்னு வை.. நீ தேற மாட்டே.. என்னவோ பண்ணு போ..” என்று சொல்லிவிட்டு “சரி.. எனக்கு நேரம் ஆச்சு.. நான் வீட்டுக்கு போறேன்.. பாட்டியை பாத்துக்கோ..” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் ரதி..

 

அப்போது அவள் கைப்பேசி ஒலிக்கவும் அதை எடுத்தவள் திரையில் ப்ரியாவின் பெயரை பார்த்தவுடன் “ஹலோ.. சொல்லு ப்ரியா..”  என்றாள்..

 

“என்னத்த சொல்ல சொல்றடி? நான் போய் அந்த சூப்பர்வைசர் கிட்ட சொன்னேன் விஷயத்தை.. அவர் இப்படி உங்க இஷ்டத்துக்கு லீவு போட இது என்ன உங்க மாமன் தொறந்து வெச்சிருக்கற கம்பெனியான்னு கன்னா பின்னான்னு கத்திட்டு நாளையிலிருந்து வேலைக்கு வர வேண்டாம்ன்னு சொல்லு அந்த சுந்தரியை.. முந்தா நேத்து சம்பளம் வாங்கிட்டு போயிட்டா.. அதனால இனிமே இந்த வேலைக்கு வர வேணாம்..அவ கணக்கெல்லாம் முடிஞ்சு போச்சு அப்படின்னு சொல்லிட்டாரு டி.. நீ அங்க வந்தா கூட உன்னை கேவலமா பேசி அவமானப்படுத்துவாரு.. தயவு செஞ்சு நீ வேற இடத்தில வேலை தேடிக்கோ சுந்தரி.. அந்த ஆளு வாயில விழுந்து வெக்காதே இங்கே வந்து..” என்றாள் பிரியா..

 

“நிச்சயமா இப்படித்தான் பண்ணுவார்ன்னு நான் நினைச்சேன்.. அவரும் அதே மாதிரி செஞ்சுட்டாரு.. சரி விடு.. பரவால்ல.. நான் வேற வேலை ஏதாவது கிடைக்குதான்னு பார்க்கிறேன்.. என்னால நாளைக்கும் வர முடியாதுன்னு நினைக்கிறேன்.. பாட்டியோட இருக்கணும்.. அதனால எப்படி இருந்தாலும் அவர் என்னை வேலையை விட்டு தூக்கினது தூக்கினது தான்.. நாளைக்கும் வரலைன்னா அவர் என்னை எப்படியும் சேர்த்துக்க போறதில்ல.. சரிடி நான் வெச்சுடறேன்” கைபேசி இணைப்பை துண்டித்தாள்..

 

ஆனால் அவள் கைபேசியில் பேசியது பாட்டியின் காதுகளில் விழுந்தது..

தனக்காக சுந்தரி வேலை இழந்து கஷ்டப்படுவது கேட்டு அவர் கண்கள் பனித்தது.. 

 

“இந்தப் பெண்ணுக்கு ஒரு நல் வாழ்வை கொடு கடவுளே..” என்று மனதார வேண்டிக் கொண்டார்..

 

அடுத்த நாள் காலையில் சுந்தர் சிறிது முன்னதாகவே மருத்துவமனைக்கு வந்திருந்தான்.. 

 

மருத்துவர் வந்தவுடன் அவர் பாட்டியை பரிசோதித்து விட்டு “உங்களுக்கு வேணும்னா  இவங்களை ஹாஸ்பிடல்ல வெச்சி நீங்க பாத்துக்கலாம்.. அப்படியே உங்களுக்கு ரொம்ப செலவாகுதுன்னு தோணிச்சுன்னா அவங்களை டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போயிடலாம்.. நான் இவங்களுக்கு மெடிசின்ஸ் எல்லாம் எழுதி தரேன்.. அதெல்லாம் வேளா வேளைக்கு கொடுத்துட்டு ஆயின்ட்மென்ட் அப்ளை பண்ணிட்டு இருந்தீங்கன்னாலே இவங்களுக்கு கொஞ்சம் இம்ப்ரூவ்மெண்ட் தெரியும் .. வலி குறையும்.. நீங்க டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போறீங்கன்னா அந்த ஃபார்மலிட்டிஸ் எல்லாம் நான் பார்க்க சொல்லிடுறேன்..” 

 

டாக்டர் சொன்னதை கேட்டு சுந்தர் “ஓகே டாக்டர்.. எங்க வீட்லயே பாட்டியை கூட்டிட்டு போய் பார்த்துக்கறோம்.. நான் இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போறேன்..” என்றான்.. 

 

அதற்குள் பாட்டி “அப்பா சுந்தர்.. இங்கன்னா இங்க இருக்குற நர்ஸ் பாத்துப்பாங்க.. இந்த சுந்தரி பொண்ணு ஏற்கனவே ஒரு நாள் லீவு போட்டதில வேலை போயிடுச்சு அவளுக்கு.. அவ அடுத்த வேலை தேடி போகணும்.. அவளாலே இங்க இருக்க முடியாது.. நீயும் எவ்வளவு நாள் தான் கம்பெனியை விட்டுட்டு என்னை பார்த்துட்டு இருப்பே.. எங்க வீட்டில யாரும் கிடையாது.. என்னை பாத்துக்கறத்துக்கு.. பேசாம நான் இங்கேயே இருக்கேன்.. பேங்க்ல நான் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்ச 2 லட்ச ரூபா  இருக்கு.. அதை இங்க ஹாஸ்பிடல்ல கட்டி ஒரு நர்ஸ் வச்சு என்னை பாத்துக்க சொல்லுப்பா.. அந்த பணம் கரையிற வரைக்கும் இருந்துக்கிறேன்.. அப்புறம் என் தலைவிதிப்படி நடக்கட்டும்..” என்றாள் பாட்டி..

 

“என்ன சொல்றீங்க பாட்டி? அப்ப வார்த்தைக்கு வார்த்தை நான் உங்களோட பேரன் மாதிரின்னு சொல்வீங்களே.. அதெல்லாம் சும்மாவா.. நான் எப்படி பாட்டி உங்களை இப்படியே விட்டுட்டு போக முடியும்? நான் உங்களை டிஸ்சார்ஜ் பண்ணி எங்க வீட்டுக்கு தான் கூட்டிட்டு போக போறேன்.. உங்களை பாத்துக்க ஒரு ஆள் ஏற்பாடு பண்றேன்.. வேற ஆளு எதுக்கு? எப்படி இருந்தாலும் சுந்தரிக்கு வேலை போயிடுச்சுன்னு சொல்றீங்க.. சுந்தரியே உங்களுக்கு கூட இருந்து செய்யட்டும்.. அப்படியே எங்க வீட்ல சமையல் வேலையும் பாத்துக்கிட்டா அவங்களுக்கு மாசா மாசம் சம்பளம் கொடுக்கிறது என்னோட பொறுப்பு.. அதனால இனிமே இப்படி நீங்க ஏதோ யாரும் இல்லாதவங்கங்கற மாதிரி பேசாதீங்க பாட்டி.. எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. உங்க பேரன் நான் இன்னும் உங்க கூட தான் இருக்கேன்..”

 

சுந்தர் பேசியதை கேட்டு பாட்டி கண்களில் அருவி போல் கண்ணீர் கொட்டியது..

 

“என் புள்ள என்னை விட்டுட்டு போயிட்டானேனு நான் ரொம்ப வருத்தப்பட்டதுண்டு.‌ ஆனா அவன் போனதும் நல்லதுக்கு தான் போல.. மாணிக்கம் மாதிரி ஒரு பேரனும் ஒரு பேத்தியும் எனக்கு அவன் போனதுனால தான் கிடைச்சு இருக்கீங்க..” புன்னகைத்துக் கொண்டே உணர்ச்சி பொங்க அழுதாள் பாட்டி..

 

“சரி பாட்டி.. நீங்க ரொம்ப எமோஷனல் ஆகாதீங்க .. உடம்பு சரியில்லாம போயிடும்.. நான் டிஸ்சார்ஜ் பண்றதுக்கு என்ன ஃபார்மாலிட்டிஸோ அதெல்லாம் முடிச்சிட்டு வரேன்.. சுந்தரி நீங்க அதுக்குள்ள பாட்டியை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறதுக்கு தயார் பண்ணுங்க..” 

 

சுந்தரியிடம் சொல்லிவிட்டு அவன் மருத்துவமனையில் பாட்டியின் சிகிச்சைக்கு கட்ட வேண்டிய மிச்ச தொகையை கட்டிவிட்டு பாட்டியை ஒரு ஆம்புலன்ஸில் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்..

 

தன் வீட்டில் பாட்டிக்கு என்று ஒரு அறையை ஒதுக்கி கொடுத்தவன்.. சுந்தரியிடம் “சுந்தரி நீங்க இன்னிலிருந்து இந்த வீட்ல சமையல் வேலையில் ஜாயின் பண்ணதா நினைச்சுக்கோங்க.. பாட்டியை பாத்துக்கறதுக்கும் சேர்த்து சம்பளம் கொடுத்துடறேன்”

 

அவன் சொல்லவும் சுந்தரிக்கு முணுக்கென கோபம் வந்தது..

 

“ஏன் சார்.. பாட்டியோட பேத்தி யாராவது வந்து அவங்களுக்கு வேண்டியதெல்லாம் செஞ்சா அவங்களுக்கு கூட இப்படித்தான் பணம் கொடுப்பீங்களா?” என்று கேட்டாள் சுந்தரி கோபமாக.. 

 

“இல்ல.. எப்படியும் பாட்டியை பாத்துக்குறதுக்கு ஒரு நர்ஸ் ஏற்பாடு பண்ணலாம்னு இருந்தேன்.. அவங்களுக்கு எப்படியும் ஏதாவது பணம் கொடுத்திருப்பேன்.. உங்களுக்கு வேலை போயிடுச்சுன்னு பாட்டி சொன்னதுனால தான் அந்த மாதிரி ஒரு நர்ஸ் ஏற்பாடு பண்றத்துக்கு பதிலா உங்களையே பாத்துக்க சொல்லலாம்னு நினைச்சேன்.. நீங்க அவங்களை இன்னும் நல்லா கேர் எடுத்து பாத்துப்பீங்கன்னு உங்களுக்கு அந்த பணத்தை கொடுத்துடறேன்னு சொன்னேன்.. இதில என்ன தப்பு இருக்கு?” புரியாமல் கேட்டான் சுந்தர்..

 

“இல்ல சார்.. நீங்க ஒரு நர்ஸே ஏற்பாடு பண்ணிக்கோங்க.. உங்க வீட்ல சமைக்கிறதுக்கு வேற யாராவது ஆளு ஏற்பாடு பண்ணிக்கோங்க.. நான் கிளம்புறேன்” என்று தீர்க்கமாய் சொன்னாள் சுந்தரி..

 

தொடர்ந்து வருவார்கள்……

 

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து

பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து

காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி

“❤️சுபா❤️”

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 23

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!