சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 43 ❤️❤️💞

4.5
(21)

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 43

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

சுந்தரியை பற்றியும் சுந்தரை பற்றியும் தப்பு தப்பாக பேசிக் கொண்டிருந்த பாஸ்கரின் கழுத்தை ஒரு வலிய கரம் இறுக பற்றி இருந்தது..

சுந்தரி அது யார் என திரும்பி பார்க்க “மரியாதையா சுந்தரி கைய விடுடா..” என்று சொல்லியபடி அவன் கழுத்தை இன்னும் இறுக்கமாக நெருக்கி கொண்டு இருந்தான் சுந்தர்..

அப்போதும் பாஸ்கர் சுந்தரியின் கையை விடாமல் இருக்க அவன் கழுத்தில் இன்னும் அழுத்தம் கொடுத்து நெருக்கி இருந்தான்.. மூச்சு திணறிய பாஸ்கர் சுந்தரி கையை விடவும் “சுந்தரி உள்ள போங்க..” என்று அழுத்தமான குரலில் சொன்னான் சுந்தர்..

“சார்… அது வந்து..” என்று சுந்தரி பேசத் துவங்க அவளை திரும்பி பார்த்தவனின் கண்கள் கோவத்தில் சிவப்பேறி இருந்தது.. “உள்ள போ…ங்கன்னு சொன்னே..ன்” என்ற அவன் குரல் சிங்கத்தின் கர்ஜனை போல் இருந்தது..

அதைக் கேட்டவள் தயக்கத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டே சுந்தரி உள்ளே சென்று கதவை சாற்றிக் கொள்ளவும் ரதி அந்த கதவை வெளிப்பக்கமாக தாழிட்டு அதன் முன்னே தடுப்பாக நின்று கொண்டாள்.. அதன் பிறகு பாஸ்கரை இறுகப் பிடித்தவன் ஓங்கி அவன் வயிற்றிலேயே குத்தினான்..

 ரதி “நல்லா போடுங்க சார்.. என்ன பேச்செல்லாம் பேசிச்சு அந்த வாய்.. எங்களை பத்லி தப்பு தப்பா பேசின அந்த வாயை உடைச்சு போடுங்க சார்..” என்று சுந்தரை இன்னும் உசுப்பேற்றி விட்டாள்..

ஒரே குத்தில் சுருண்டு விழுந்திருந்த பாஸ்கரை இன்னும் வெறி கொண்ட வேங்கையாய் அவன் பேசிய வார்த்தைகளின் வீரியத்தை தாங்க முடியாமல் சுந்தர் அடித்து துவைக்க அவன் வாயில் இருந்து ரத்தம் வந்தது..

இதை கண்ட ரதி “சார் சார்.. விட்டுருங்க சார்.. அவன் குடிகாரன் சார்.. செத்து கித்து போயிட போறான்.. நீங்க ஏன் சார் இங்க வந்தீங்க.? ஏற்கனவே இங்க ரொம்ப பிரச்சினையா இருக்கு.. இப்ப இந்த மனுஷன் வேற காலையிலிருந்து பிரச்சனை பண்ணிட்டு இருந்தாரு.. இப்ப நீங்க வந்ததுனால இன்னும் பிரச்சனை அதிகம் தான் ஆகுமே தவிர குறையாது சார்..” என்றாள் ரதி புலம்பலாய்..

அவன் வந்ததனால் பிரச்சனை பெரிதாகும் என்று பயந்தாளே தவிர அந்த நேரத்தில் அவன் வந்து தனக்காகவும் சுந்தரிக்காகவும் பரிந்து பாஸ்கரை அடித்தது அவளுக்கு மனதுக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது.. தங்களைக் காக்கவும் ஒருவன் இருக்கிறான் என்று மனதிற்குள் தைரியம் வந்தது..

பாஸ்கர் பேசிய பேச்சுக்கு அவளுக்கே அவனை குத்தி கொன்று விடலாம் என்று தோன்றியது.. அந்த வேலையை சுந்தர் செய்தது அவளுக்கு சந்தோஷமாக இருந்தாலும் அவன் இன்று வந்ததால் அடுத்த நாளிலிருந்து அந்த இடத்தில் இன்னும் என்னென்ன பிரச்சனை நடக்குமோ என்று பயப்படத் தான் செய்தாள் அவள்..

“என்ன பேசுறீங்க நீங்க? நல்ல வேளை நான் வந்தேன்.. இல்லன்னா இதோ இந்த பொறுக்கி உங்க தங்கை வாழ்க்கையை நாசம் பண்ணி இருப்பான்..”

கீழே விழுந்து கிடந்த பாஸ்கரை நோக்கி கையை காட்டிக் கொண்டே சுந்தர் சொன்னான்..

“ஏ.. ரதி.. என்னடி ஆள் வச்சு அடிக்கிறியா? அவ்வளவு பெரிய ஆள் ஆயிட்டீங்களா நீங்க..? சுந்தரி விட்டுட்டு வந்ததுனால அவனால இருக்க முடியாம தானே மறுபடியும் சுந்தரியை தேடி வந்து இருக்கான்.. திரும்பவும் அவளை கூட்டிட்டு போய் வ***டியா வச்சுக்க போறானா?” என்று கேட்க உள்ளே இருந்த சுந்தரி இதைக் கேட்டு காதுகள் இரண்டையும் பொத்திக்கொண்டு கண்ணில் நீர் வழிய கண்களை இறுக்க மூடி அமர்ந்திருந்தாள்..

சுந்தரோ அதற்கு மேல் பொறுக்க முடியாமல் காலாலேயே அவனை எட்டி உதைத்தான்..

“யோவ்.. உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா..? எவ்வளவு அடி வாங்கினாலும் உனக்கு புத்தி வராதா? ” என்று ரதி கேட்க “என் புத்திக்கென்ன? அதெல்லாம் நல்லா தான்டி இருக்கு.. நான் விவரமா தான் இருக்கேன்.. இந்த மனுஷன் இதுக்கு மேல உன் தங்கச்சியை வச்சி மெயின்டைன் பண்ண முடியாதுன்னு வீட்டை விட்டு அனுப்பி விட்டுட்டான்.. நீயும் என்னை இங்கே இருந்து துரத்தி விட்டுட்ட.. அப்போ இந்த வீட்ல என்ன நீயும் உன் தங்கச்சியும் சேர்ந்து வேற மாதிரி ஏதாவது..” என்று அவன் வாயை திறக்க சுந்தர் அவன் பக்கம் முன்னேறி “டேய்.. வேணாம்டா.. இதுக்கு மேல ஏதாவது பேசினே சாவடிச்சுடுவேன் உன்னை..” என்றான்..

“நீங்க போங்க சார்.. நான் பாத்துக்குறேன்.. நீங்க இங்க இருக்க இருக்க பிரச்சனை பெருசுதான் ஆகும்.. இந்தாளு மேல மேல உங்களையும் தப்பாதான் பேசுவான் ” சுந்தரை பார்த்து கையெடுத்துக் கும்பிட்டாள் ரதி..

கதவில் சாய்ந்திருந்த சுந்தரி இவர்கள் பேசுவதை தாங்க முடியாமல் அழுது கொண்டிருந்தாள்.. அழுது அழுது தன் கண்ணில் கண்ணீர் கூட மிச்சம் இருக்காது என்று தோன்றியது அவளுக்கு..

பாஸ்கரோ தட்டு தடுமாறி எழுந்தவன்  “ஏ.. சுந்தரி.. இவன் பணம் கொடுத்தான்னு தானே இவனோட போய் இருந்துட்டு வந்த..? எங்கேயாவது கடன் வாங்கி நான் நிறைய பணம் கொண்டு வந்து கொடுக்கிறேன் டி.. என்னோட ஒரு நாள் நைட் ஜாலியா இரு..” என்று சொல்ல சுந்தரி அதைக் கேட்டு உள்ளே அப்படியே உடைந்து போய் தலையில் அடித்துகொண்டு கதறி அழ ஆரம்பித்தாள்.. அவள் சத்தம் வெளியே சுந்தரின் காதுகளிலும் விழுந்தது..

“இன்னைக்கு இவன் காசு கொடுத்தான்னு இவனோட இருந்த.. நாளைக்கு இன்னொருத்தன் எவனாவது பணம் கொண்டு வந்து கொடுத்தா அவனோடயும் இருப்ப தானே..? இவங்களை மாதிரி ஒரு மாசம் ரெண்டு மாசம்லாம் என்னோட இருக்க வேண்டாம் சுந்தரி குட்டி.. ஒரே ஒரு நாள்.. அதுக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் கேளு.. நான் கடன் வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கிறேன்.. என்னோட ஒரே ஒரு நாள் மட்டும் சந்தோஷமா இருந்துடு”

அவன் தலை முடியை கொத்தாக பிடித்த ரதி “டேய்.. நீ எல்லாம் ஒரு மனுசனாடா?” என்று சொல்லி அவன் இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தாள்..

அந்த காலனியில் இருந்த அத்தனை பேரும் அங்கே சுற்றி நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. சுந்தரியைப் பற்றியும் ரதியைப் பற்றியும் கிசுகிசுவென வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டிருந்தார்கள்..

“அந்த ஆளு சொல்றது உண்மையா இருக்குமோ?” என்று ஒருத்தி கேட்க “நெருப்பில்லாம புகையாதுடி.. அதான் ராசாத்தி அக்கா வந்து அங்க பார்த்ததை அப்படியே சொன்னாங்க இல்ல..?” என்றாள் இன்னொருத்தி..

“உன் தங்கை இந்த பய கொடுக்கிற பணத்துக்காக இவன் வீட்டில போய் இருந்துட்டு வந்து இருக்கா… எல்லாரும் உன் தங்கச்சி இவன்கிட்ட சோரம் போயிட்டான்னு தான் பேசிகிட்டு இருக்காங்க.. நீயும் என்னை துரத்தி விட்டுட்ட.. ரெண்டு பேரும் இந்த வீட்ல தனியா இருக்கீங்க.. இனிமே போற வரவனெல்லாம் வந்து உங்களை கையை பிடிச்சு இழுத்து என்ன ரேட்னு தான் கேக்க போறான்.. அப்ப என்னடி பண்ண போற? எப்படி இருந்தாலும் உங்களால இனிமே மானத்தோட வாழ முடியாது.. ஊர் முழுக்க உங்க ரெண்டு பேர் பேரும் கெட்டு போச்சு.. உன் தங்கச்சியை நான் கட்டிக்கலைன்னா நீயும் உன் தங்கச்சியும் பலான தொழில் செஞ்சு பொழைக்கிற நிலைமைக்கு தான்டி போயிடுவீங்க.. உங்களை மானத்தோட ரோட்ல நடக்க விடமாட்டான் எவனும்..” என்றான் பாஸ்கர்..

அவன் பேசியதை கேட்ட சுந்தரிக்கோ உள்ளுக்குள் பெரிய நடுக்கமே எடுத்தது.. என்னதான் அவன் தவறாக பேசினாலும் அவன் சொல்வது அத்தனையும் உண்மைதான்..

இன்று ஏற்கனவே அந்த காலனியில் எல்லோரும் அவர்களை பற்றி தவறாக பேசிக் கொண்டிருக்க பாஸ்கர் வந்து இன்று ரகளை செய்ததால் இன்னும் அவர்கள் பெயர் கெட்டுப் போயிருக்கும்..

இப்போது அந்த எரியும் தீயில் எண்ணெய் விடுவது போல சுந்தர் வேறு வந்திருக்க அடுத்த நாளிலிருந்து அந்த ஊரிலேயே அவர்கள் நடமாட முடியாது என்று அவளுக்கு தோன்றியது..

உள்ளுக்குள் கிலி பிடிக்க சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்து யோசித்தவள் கண்ணை துடைத்துக் கொண்டு ஏதோ தீர்மானத்திற்கு வந்தவளாய் கதவை தாழிட்டு சமையல் அறைக்கு ஓடினாள்..

சுந்தரி கதவை தாழிடும் சத்தம் கேட்ட ரதி “ஐயோ சுந்தரி.. எதுக்கு உள்ள தாழ் போடுற?” என்று ஓடிப் போய் கதவை தட்ட சுந்தரியோ கதவை திறக்கவே இல்லை..

வீட்டை சுற்றி சென்றவள் சமையல் அறை பக்கம் சென்று ஜன்னல் வழியே பார்க்கவும் அங்கே சுந்தரி மண்ணெண்ணெயை கையில் எடுத்துக் கொண்டிருந்தாள்..

“ஐயோ சுந்தரி.. வேணாம் சுந்தரி.. சொன்னா கேளு..” என்று ரதி கத்த அவள் பின்னாலே ஓடி வந்த சுந்தரும் ஜன்னல் வழியே ரதி செய்வதை பார்த்தான்..

“சுந்தரி வேண்டாம்.. அந்த கேடு கெட்டவன் குடிச்சிட்டு எதையோ உளர்றான்.. நீ அதைக் கேட்டு ஏதாவது பண்ணிக்காத.. சுந்தரி.. சொல்ற பேச்சைக் கேளு சுந்தரி.. வேண்டாம் சுந்தரி..”

அவள் கதற கதற தன் மேல் அந்த மண்ணெண்ணெயை ஊற்றிக் கொள்ளப் போனவள் “என்னை மன்னிச்சிடு ரதி.. எனக்கு இதை விட்டா வேற வழி தெரியல.. என்னால மானத்தை இழந்து மாமா சொல்ற மாதிரி ஒரு வாழ்க்கையை வாழவே முடியாது.. அதுக்கு என் உயிரை விட்டுடறது எனக்கு சுலபம்தான்.. தினம் தினம் செத்துப் பொழைக்கிறதை விட ஒரேயடியா நான் போயிடறேன் ரதி” என்று சொன்னவள் மண்ணெண்ணெயை மறுபடியும் ஊற்ற போக சுந்தர் “சுந்தரி.. ஒரு நிமிஷம்.. நான் சொல்றதை கேளுங்க” என்றான்..

“நீங்க பேசாதீங்க சார்.. எத்தனை முறை உங்க கிட்ட சொன்னேன்.. என்னை சந்திக்க முயற்சி பண்ணாதீங்க.. என் வீட்டுக்கு வராதீங்கன்னு.. அன்னைக்கு அவ்வளவு தெளிவா சொல்லியும் இன்னைக்கு என் வீட்டுக்கு வந்து என்னை இப்படி ஒரு நிலைமைக்கு ஆளாக்கிட்டீங்களே சார்.. எங்க மாமா ஏதாவது பேசி இருந்தா கூட குடிபோதையில் பேசுறார்ன்னு சொல்லி நாங்க விரட்டி அடிச்சிருப்போம்.. ஆனா அவர் பேசும்போது சரியா நீங்க வந்ததுனால இப்போ நாங்க என்ன சொன்னாலும் எங்க பேச்சு எடுபடாது.. அவர் சொல்றதெல்லாம் உண்மைன்னு தான் இங்க எல்லாருமே நினைப்பாங்க.. இனிமே நாங்க மானத்தோட வாழவே முடியாது சார்.. எங்க அக்கா அவ குழந்தைக்காக வாழ்ந்து தான் ஆகணும்.. ஆனா எனக்கு அப்படி யாரும் இல்லை.. என்னை நம்பி எந்த உயிரும் இல்லை.. அதனால நான் போனா யாரும் கவலையும் படமாட்டாங்க.. நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க.. என்னால உங்க பேரும் கெட்டு போச்சு” என்றவளிடம்

சுந்தர் “சுந்தரி.. ப்ளீஸ் எதுவும் அப்படி பண்ணிடாதீங்க.. உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா அதோட என் உயிரும் போயிரும்..  நானும் என்னால தான் நீங்க உயிரை விட்டீங்கன்னு நினைச்சு குற்ற உணர்ச்சியிலயே செத்துருவேன்..  சொன்னா கேளுங்க சுந்தரி.. எனக்கும் ஷாலினிக்கும் நிச்சயதார்த்தம் இன்னும் ஒரு வாரத்தில.. அந்த பத்திரிகையை கொடுக்க தான் நான் வந்தனே தவிர உங்களை களங்கப்படுத்தனுங்கிற எண்ணமெல்லாம் எனக்கு கிடையாது..” என்று சொன்னான் அவன்..

“நீங்க ஷாலினியோட நல்லா இருக்கணும் சார்.. அவங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு நூறு வருஷம் நல்லா வாழணும்.. என்னை பத்தி கவலைப்படாதீங்க சார்.. நான் சாகறதுக்கு எந்த விதத்திலயும் நீங்க காரணம் இல்ல.. என் சூழ்நிலை தான் காரணம்.. என்னை சுத்தி யாரும் கிடையாது.. இனிமே என்னால இங்க மானத்தோட வாழ முடியாது.. இந்த ஊருல இருக்குற  அத்தனை பேரும் என்னை வேற வேற மாதிரி பேர் சொல்லி கூப்பிட்டு பேசி பேசியே உயிரோட என்னை சாகடிச்சுடுவாங்க.. தினம் தினம் அப்படி சாகறதுக்கு பதிலா நான் ஒரேடியா செத்துப் போறேன்.. ஒருத்தரோட ****டினு நாலு பேர் என்னை கூப்பிடுறதை கேட்டுட்டு என்னால உயிரோட நடமாட முடியாது..” என்று சொன்னவள் மண்ணெண்ணெயை எடுத்து தலையில் ஊற்றியும் விட்டாள்..

அந்த காட்சியை கண்டவனுக்கோ ஒரு நொடி அவன் உயிர் கூடு சருகாய் காய்ந்து போனது போல் இருந்தது.. அவள் இல்லாமல் போனால் அந்த நொடி தன் இதயம் துடிப்பை நிறுத்தி விடுமோ என்று பயந்தான் அவன்.. அதுவரை உணர்ந்திடாத ஒரு படபடப்பும் உடலை விட்டு உயிர் பிரியும் நேரம் மூச்சுக்காக தவித்து கிடப்பது போன்ற உயிர் துடிப்பும் அவனை ஒரே நொடியில் உருக்குலைத்து போட்டது.. அவன் உலகமே ஸ்தம்பித்து நின்று விடுமோ என்ற அச்சம் அவனை ஆட்டி படைக்க சுந்தரி இல்லாமல் தனக்கு வாழ்க்கையே இல்லை என்பதை அந்த நொடி புரிந்து கொண்டான் சுந்தர்..

அதன் பிறகு இமைப்பொழுதும் தாமதிக்காமல் வீட்டின் வாசலுக்கு சென்று கதவை உடைக்க ஆரம்பித்தான்.. அவன் வலுவான உடலுக்கு எதிரே இரண்டு மூன்று மோதலிலேயே அந்த கதவு விட்டுக் கொடுத்து திறந்து கொண்டது…

நேரே உள்ளே சென்றவன் சுந்தரி கையில் தீப்பெட்டியை வைத்திருக்கவும் அதை பிடுங்கி எறிந்து விட்டு அவளை ஆழ்ந்து முறைத்த படி ஓங்கி அறைந்தான்..

“அறிவு இருக்காடி உனக்கு..? எவனோ ஏதோ சொல்றான்னு உன்னை நீயே அழிச்சிக்க பாக்குற.. ஒரு நிமிஷம் உயிரே போயிடுச்சுடி எனக்கு.. உன்னை சுத்தி இருக்கிற இந்த மனுஷங்க மட்டும் தான் உலகம்னு நினைச்சுட்டு இருக்கியா? உலகத்தில எவ்வளவோ இடம் இருக்கு.. அன்பு காமிக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க.. இன்னிக்கு உனக்கு ஏதாவது ஆகி இருந்தா எ… என்னால அதை நினைச்சி பார்க்கவே முடியலடி.. ஏன் சுந்தரி இப்படி பண்ண..?” அவன் கண்களிலும் கண்ணீர் வடிந்து கொண்டிருக்க சுந்தர் ஆதங்கத்துடன் சுந்தரியை கேட்டான்..

அவளின் இரு தோள்களையும் தன் கைகளால் அழுந்த பற்றி உலுக்கிய படி கேட்டவனின் விழிகளிலோ அவ்வளவு பதட்டம்.. ஒரு நொடி தான்.. தனக்கானவளை நிரந்தரமாய் இழந்து விடுவோமோ என்ற ஒரு நினைப்பு.. அப்படி ஒரு எண்ணம் அவனுக்கு தோன்றிய நொடி அவளை எந்த காரணத்திற்காகவும் இழந்து விட கூடாது என்ற உறுதி தோன்றி இருக்க அந்த க்ஷணப்பொழுது மாற்றம் தான் அவனை சுந்தரியின் உயிர் காக்க அவளை நோக்கி உந்தி தள்ளி இருந்தது..

சுந்தரியோ அவன் விழிகளில் தனக்கான கண்ணீரை கண்ட நொடி இன்னும் உருகி உடைந்து போனாள்.. தன்னை மறந்து அப்படியே அவன் மார்பில் சாய்ந்து அவள் கதற அவன் கைகளோ தனிச்சையாக அவள் தலையை வருடிவிட்ட படி “என்ன காரியம் பண்ணிட்ட சுந்தரி.. இதுக்கு பேசாம நீ என்னை கொன்னு போட்டு இருக்கலாம்.. அது கூட எனக்கு இவ்வளவு வலிச்சு இருக்காதுடி..”

அவன் வார்த்தைகளின் வலி அவளுக்குள் ஊடுருவிய கணம் சட்டென சுயத்தை உணர்ந்து சுதாரித்தவள் விலுக்கென அவன் அணைப்பில் இருந்து விலகி “விடுங்க சுந்தர் சார்.. என்னை எதுக்கு நீங்க காப்பாத்துறீங்க..? எனக்கு வாழ வேண்டாம்.. இப்ப என்ன..? நீங்க இங்க இருந்து கிளம்பி உங்க வீட்டுக்கு போயிடுவீங்க.. அப்புறம் எங்க வாழ்க்கையை நாங்க தானே பாக்கணும்.. அப்ப எவனாவது வந்து என்னை உங்களோட ***ட்டின்னு சொன்னா என்னால என்ன பதில் சொல்ல முடியும்? ஒவ்வொருத்தர் கிட்டயும் நான் பாட்டிக்காக தான் உங்க வீட்டுக்கு வந்தேன்‌‌.. பாட்டிக்காக தான் வந்தேன்னு சொல்லி புரிய வச்சுட்டு இருக்க முடியுமா? நீங்க சொல்ற மாதிரி வேற ஒரு இடத்துக்கு நான் போனேனா என்னை தெரிஞ்ச யாராவது அங்க வந்து என் பேர் கெட்டு போற மாதிரி ஏதாவது சொல்லிடுவாங்களோன்னு பயந்து பயந்து சாகணும்.. அந்த வாழ்க்கை நித்தம் நித்தம் பயத்தோட இன்னும் கொடுமையான நரகமா தான் இருக்கும்.. அந்த எண்ணமே என்னை அரிச்சே கொன்னுடும்.. என்னை விடுங்க.. நான் சாகுறேன்..” என்றவள் மறுபடியும் தீப்பெட்டியை எடுக்க போக

 அவள் கையை இறுக்க பிடித்தவன் “ஏய்.. சு..ந்தரிஇஇஇஇஇ..” என்று அவளை தன்னை நோக்கி இழுத்தபடி அந்த வீடே அதிர உறுமினான்..

“சொல்லிக்கிட்டே இருக்கேன்.. உனக்கு இன்னும் புரியலையாடி.. இப்ப என்ன? சாகணுமா? வா.. அந்த மண்ணெண்ணெயை என் தலையிலயும் கொஞ்சம் ஊத்து.. உன்னோட இந்த நெலமைக்கு நான் தானே காரணம்.. ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம்” என்று கத்தியவன் அவளை கூர்ந்து பார்க்க அவன் பார்வையின் தீட்சண்யம் அவளை கொஞ்சம் நிதானத்திற்கு கொண்டு வந்தது..

அடுத்த நொடி அவள் கையை பிடித்திருந்த பிடியை இன்னும் இறுக்கியவன் ஏதோ ஒரு முடிவெடுத்தவன் போல் அவளை தரதரவென  இழுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தான்..

அவளை இழுத்துக் கொண்டு அந்த தெருமுனையில் இருந்த சிறிய அம்மன் கோயிலுக்குள் சென்றவன் அம்மன் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து வந்து அதை அவள் கழுத்துக்கு நேராய் வைத்து பிடித்து ஒரு நொடி அவளுடைய வியப்பிலும் என்ன செய்ய போகிறானோ என்ற குழப்பத்திலும் நிகழ்வதை நம்பமுடியாத பார்வையோடு விரிந்திருந்த அவளின் கலங்கிய கண்களை அழுத்தமாய் பார்த்தவன்

“சுந்தரி.. உனக்கு ஒரு விஷயத்தை இந்த நேரத்துல அழுத்தமா சொல்ல நெனைக்கிறேன்.. என் மனசுல என் வாழ்க்கையில இனி என்னிக்கும் வேற எந்த பொண்ணுக்கும் இடம் கிடையாது.. இப்ப நீ இந்த தாலியை ஏத்துக்கிட்டாலும் சரி இல்ல வேணாம்னு சொன்னாலும் சரி.. இனிமே இந்த சுந்தர் வாழ்க்கையில பொண்டாட்டின்னு ஒருத்தி வந்தா அது நீயா மட்டும் தான் இருப்ப.. சொல்லு சுந்தரி.. உனக்கு இதுல சம்மதமா?”

அந்த நேரத்திலும் அவன் நிதானம் இழக்கவில்லை..

தாலியை அவள் கழுத்துக்கு நேராக விரித்து பிடித்த படி அவன் கேட்க அவன் எதிரில் உணர்ச்சி குவியலாய் நின்றிருந்தவளோ முகத்தில் குழப்ப ரேகைகளோடு “அது.. ஷாலினி மேடம்..” என்று அலை‌ பாய்ந்த விழிகளோடு அவள் இழுக்க “இது வரைக்கும் என் மனசுல ஷாலினி இல்ல.. அது எனக்கு நீ உயிரை விட போன நேரம் புரிஞ்சிடுச்சு.. இனிமேலும் ஷாலினி மட்டும் இல்ல வேற எந்த பொண்ணும் என் மனசுக்குள்ள நுழைய முடியாது..” தெளிவாய் வந்து விழுந்தன அவன் வார்த்தைகள்..

அதை கேட்டவள் குழப்பம் நீங்கிய முகத்தோடு அவன் விழிகளோடு விழிகளை கலக்க விட்டு சம்மதம் என்பது போல் அவன் கட்ட போகும் தாலியை ஏற்க தலையை குனிந்த நொடி அந்த தாலியை சுந்தரி கழுத்தில் கட்டி இருந்தான் சுந்தர்..

“இனிமே யார் கேட்டாலும் நீ என்னோட பொண்டாட்டினு சொல்லு.. மிஸஸ். சுந்தரி சுந்தர்..” என்றான் அவன்..

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!