சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 49
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
சுந்தர் அனுப்பிய திருமண வரவேற்பிற்கான அழைப்பிதழை பார்த்து
“இனிமே அவங்க சந்தோஷமா வாழவே முடியாது.. இன்னிக்கு சாயங்காலமே அதுக்கு ஒரு விதை விதைச்சுட்டு வந்திடறேன்..”
கண்களில் குரூரத்துடனும் வன்மத்துடனும் இதழில் ஒரு ஏளன புன்னகையுடனும் ஷாலினியிடம் சொன்னான் மாதேஷ்..
“ஆமா ஷாலினி.. உனக்கு சுந்தர் இந்த ரிசப்ஷன் இன்விடேஷன் அனுப்பி இருக்கானா..?” என்று கேட்க ஷாலினி தன் கைபேசியை எடுத்து பார்த்தாள்.. அவளுக்கும் ஒரு அழைப்பிதழ் அனுப்பி இருந்தான் சுந்தர்..
“காலையிலே இங்க அவ்வளவு பிரச்சினை நடந்தும் வேணும்னே எனக்கும் இன்விடேஷன் அனுப்பி இருக்கான்.. அந்த சுந்தர்.. அவனுக்கு ரொம்ப திமிர்தான்..” என்று ஷாலினி சொல்ல
“இந்த இன்விடேஷன் அனுப்புனது நமக்கு சாதகமாக தான் இருக்க போகுது ஷாலினி.. சாயந்திரம் நீ அந்த ரிசப்ஷனுக்கு கட்டாயம் வர்ற..” என்றான் மாதேஷ்..
“என்ன..? நான் ரிசப்ஷனுக்கு வரணுமா..? உனக்கு என்ன ஏதாவது பைத்தியம் கிய்த்தியம் பிடிச்சிருச்சா..? அவன் தான் கூறுகெட்ட தனமா எனக்கு இன்விடேஷன் அனுப்பி இருக்கான்னா நான் எதுக்கு வரணும்னு சொல்ற அங்க.. அங்க வந்து அந்த சுந்தரியோட அவன் சந்தோஷமா இருக்கிறதை பார்த்து நான் வயிறெரியணுமா? அங்க போய் அவங்களை பார்த்தாலே எனக்கு காலைல அவன் என்னை அவமானப்படுத்திட்டு போனது தான் ஞாபகம் வரும்..” என்று சுந்தர் மீது இருந்த வெறுப்பை உமிழ்ந்தாள் ஷாலினி..
“நீ அங்க வந்தேன்னா அவங்க சந்தோஷமா இருக்குறதை பார்த்து வயிறெரிய வேண்டாம்.. இனிமேல் அவங்க ரெண்டு பேரும் நெனச்சா கூட சந்தோஷமா இருக்கமுடியாதபடி நீ செஞ்சுட்டு வரலாம்..”
“என்ன சொல்ற மாதேஷ்..? எனக்கு புரியல..”
“இப்ப நான் சொல்றபடி நீ செய்.. அதுக்கப்புறம் அங்கே என்ன நடக்குதுன்னு பாரு..” என்று அவளிடம் தன் திட்டத்தை கூறினான் மாதேஷ்..
அதைக் கேட்டவுடன் “என்ன சூப்பரா ப்ளான் போடுற நீ? சரி.. நான் நிச்சயமா ரிசப்ஷனுக்கு வரேன்.. என்னை அவமானப்படுத்தினவனுக்கும் என்னை அவன் அவமானப்படுத்த காரணமா இருந்தவளுக்கும் லைஃப்ல சந்தோஷமே இல்லாம பண்றதுக்காக அந்த ரிசப்ஷனுக்கு நான் வர்றேன்..” என்று அவள் சொல்ல “இதை செஞ்சு முடிச்சிட்டு வந்து நம்ம சந்தோஷமா என்ஜாய் பண்ணலாம் பேபி..” என்றான் மாதேஷ்..
###############
சுந்தர் சிறிது ஓய்வெடுத்துவிட்டு பிறகு ராகினி தேவியை பார்க்க கிளம்பி சென்றான்.. உள்ளே செல்ல கதவை தட்டி அனுமதி பெற்று ராகினி தேவியின் அறைக்குள் சென்றவனிடம் “வாங்க சுந்தர்.. என்ன விஷயம்..? திடீர்னு சொல்லாம கொள்ளாம வந்து இருக்கீங்க..?” என்று ராகினி தேவி கேட்க “மேடம்.. அது வந்து.. சுந்தரி..” என்று இழுத்தான் சுந்தர்.. எங்கே ஆரம்பித்து எங்கே சொல்லி முடிப்பது என்று தெரியாமல்..
“சுந்தரி இன்னைக்கு வரல.. எங்களுக்கு ஏன் வரலங்கறதை பத்தி எதுவுமே தெரியலை.. நானே வனிதா கிட்ட ஃபோன் பண்ணி கேட்க சொல்லி இருந்தேன்.. வனிதாவும் என்னவோ ஃபோன் எடுக்கலன்கிற மாதிரி சொல்லிக்கிட்டு இருந்தா.. நீங்க சுந்தரியை மீட் பண்ணனும்னா அவ வீட்டுக்கு தான் போகணும்..”
“மேடம் சுந்தரி இப்போ எங்க வீட்ல தான் இருக்கா.. நான் இப்ப வந்தது அதை பத்தி சொல்ல தான்..” என்று அவன் தயங்கி சொல்ல ஆச்சரியத்தில் விழி விரித்தாள் ராகினி தேவி..
“சுந்தரி உங்க வீட்ல இருக்காளா..? ஏன்..? திரும்பி உங்க வீட்ல வேலை செய்ய வந்துட்டாளா..?”
“இல்ல மேடம்.. என் வாழ்க்கை துணையா வந்துட்டா எங்க வீட்டுக்கு..” என்றான் அவன்..
ராகினி தேவியோ ஒன்றும் புரியாமல் புருவத்தை சுருக்கி “என்ன.. வாழ்க்கை துணையா வந்துட்டாளா..? என்ன சொல்றீங்க சுந்தர்..?” என்று மறுபடியும் கேட்க அவரிடம் நிகழ்ந்ததை எல்லாம் விளக்கிக் கூறினான்..
“பாவம் சுந்தரி.. எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கா..?! நீங்க ரெண்டு பேருமே ரொம்ப நல்லவங்க.. வாழ்க்கையில ஒன்னு சேர்ந்திருக்கீங்க.. நல்லா இருப்பீங்க.. கங்க்ராஜுலேஷன்ஸ் என்ட் ஆல் த பெஸ்ட்.. நீங்க எடுத்தது ஒரு நல்ல முடிவு.. ஆனா.. இப்படி சிம்பிளா கல்யாணத்தை முடிச்சிட்டீங்க..? எங்களுக்கெல்லாம் ஒன்னும் ட்ரீட் எல்லாம் கிடையாதா..?”
“அதுக்கு தான் மேடம் வந்தேன்.. இன்னைக்கு ஈவினிங் ****** ஹோட்டல்ல ரிசப்ஷன் வச்சிருக்கேன்.. நீங்க கட்டாயம் வரணும்..” என்று சொன்னான் சுந்தர்..
“இதைவிட சந்தோஷமான விஷயம் வேற எதுவும் இருக்க முடியாது.. ரெண்டு பேருமே என்னோட க்ளோஸ் ரிலேஷன்ஸ் மாதிரி.. எங்க ஃபேமிலில ஒருத்தர் மாதிரி.. நிச்சயமா உங்க ரிசப்ஷனுக்கு நான் வரேன்.. தேங்க்யூ சுந்தர்..” என்று சொன்னவர் “நீங்க இன்னும் ஏதோ என்கிட்ட பேசணும் போல இருக்கே..” என்று அவன் முகத்தை பார்த்து கேட்கவும் “ஆமாம் மேடம்.. நான் இன்னொரு விஷயம் பேசத்தான் இங்க வந்தேன்..” என்றான் அவன்..
“அது.. சுந்தரி.. இப்ப என்னோட வைஃப்.. ஆனா அந்த காலேஜ்ல படிக்கிறதுக்கு நீங்க அவளுக்கு ஸ்பான்சர் பண்ணிட்டு இருக்கீங்க.. என்னுடைய வைஃப்ப படிக்க வைக்கிறது என்னோட கடமைன்னு நான் நினைக்கிறேன்.. அதனால அவளோட ஃபீஸை நான் தான் கட்டணும்னு எனக்கு தோணுது.. அது என்னோட உரிமையும் கூட.. அதனால நீங்க இந்த ஃபர்ஸ்ட் டெர்ம்க்கு எவ்வளவு ஃபீஸ் கட்டுனீங்கன்னு சொன்னீங்கன்னா நான் அதை உங்களுக்கு கொடுத்துடுவேன்.. தயவுசெய்து என்னை தப்பா நினைக்காதீங்க மேடம்..” என்றான் சுந்தர்..
“சுந்தர்.. சுந்தரியை இந்த கடையில வேலை செய்ற ஒரு பொண்ணா மட்டும் நான் நினைக்கல.. ஆக்சுவலா சுந்தரியை என் மகளா தான் நான் பார்க்கிறேன்.. தன் பொண்ணுக்கு ஒரு அம்மா ஃபீஸ் கட்டக்கூடாதா..?” என்று கேட்டார் ராகினி தேவி..
“நிச்சயமா கட்டலாம் மேடம்.. ஆனா அம்மா கூட பொண்ணை அவ கல்யாணம் ஆகுற வரைக்கும் தான் படிக்க வப்பாங்க.. அதுக்கப்புறம் அந்த பொண்ணே சுயமா சம்பாதிச்சு படிப்பாங்க.. இல்லைன்னா அவ புருஷன் தான் படிக்க வெப்பாங்க.. இப்போ சுந்தரி என்னோட வைஃப்.. அதனால அவங்களை இப்ப நான் படிக்க வைக்கிறது தான் முறையா இருக்கும்னு நான் நினைக்கிறேன்.. அது மட்டும் இல்லாம சுந்தரி மாதிரி படிக்க ஆசைபடறவங்க காலேஜ்ல சேர்ந்து படிக்க முடியாம.. பணம் கட்ட முடியாம.. அவளை மாதிரியே படிக்க ஏங்கிக்கிட்டு நிறைய பேர் இருக்காங்க.. இப்போ சுந்தரிக்கு பணம் கட்ட முடியாத நிலைமை இல்ல.. நான் இருக்கேன் அவளை படிக்க வைக்கிறதுக்கு.. நீங்க அந்த மாதிரி வேற யாருக்காவது ஸ்பான்சர் பண்ணீங்கன்னா இன்னொரு ஸ்டூடண்ட் படிக்கிறதுக்கு உங்க பணம் உதவும்.. அதுக்கு தான் நான் உங்களுக்கு அந்த பணத்தை கொடுக்கலாம்னு வந்தேன்.. தயவு செஞ்சு நீங்க மறுக்காம இந்த பணத்தை என்கிட்டே இருந்து வாங்கிக்கணும்..” என்றான் அவன்..
“எனக்கு புரியுது சுந்தர்.. உங்க வைஃப் இன்னொருத்தர் செலவுல படிக்கறதை நீங்க விரும்பல.. உங்க வைஃபுக்கு நீங்க தான் செலவு பண்ணனும்னு நினைக்கிறீங்க.. நான் அந்த ஃபீஸை கட்றது நான் உங்களுக்கு சுந்தரி மேல இருக்கிற உரிமையை உங்ககிட்ட இருந்து தட்டி பறிக்கிறதா நீங்க நினைக்கிறீங்க.. அப்படித்தானே..”
“ஆமாம் மேடம்.. என் சுந்தரியை நான் தான் படிக்க வைப்பேன்.. வேற யாருக்கும் அந்த உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டேன்..” என்று தலையை குனிந்து கொண்டு சொன்னான் உறுதியான குரலில் சுந்தர்..
அந்த கல்லூரியில் கட்டிய பணத்திற்கான ரசீதை எடுத்து அவனிடம் கொடுத்த ராகினி தேவி.. “இதுல போட்டு இருக்கிற அமௌன்ட்ட நீங்க என் அக்கவுண்டுக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிடலாம் சுந்தர்..” என்றார்..
“ரொம்ப தேங்க்ஸ் மேடம்.. என்னை தப்பா நினைக்காம சரியா புரிஞ்சுக்கிட்டதுக்கு.. இன்னிக்கே நான் இந்த அமௌன்ட்ட டிரான்ஸ்ஃபர் பண்ணிடறேன்.. அப்பறம் நான் மத்தவங்களையும் பார்த்து ரிசப்ஷன்க்கு இன்வைட் பண்ணிட்டு போகணும்.. அதுக்கு உங்க பர்மிஷன் வேணும்.. ப்ளீஸ்..” என்று கேட்டான் சுந்தர்..
“சுந்தரியும் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வரணும்னு எக்ஸ்பெக்ட் பண்ணிட்டு தான் இருப்பா.. என்ன.. சுந்தரிக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு கேட்டா அவங்களுக்கெல்லாம் அது கொஞ்சம் ஷாக்கிங்கா தான் இருக்கும்.. ஆனாலும் பரவால்ல.. அப்பப்போ இந்த மாதிரி சர்ப்ரைஸ் எல்லாம் இருந்தா தானே லைஃப் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்..” என்று சொல்லி அவனை வழி அனுப்பி வைத்தார் ராகினி தேவி..
வெளியே வந்த சுந்தர் நேரே சென்றது வனிதா இருந்த பகுதிக்கு… வனிதாவிடம் விவரத்தை சொல்லி திருமண வரவேற்புக்கு வரவேற்க அவள் முகத்தில் உற்சாகம் கரை புரண்டு ஓடியது..
“ரொம்ப சந்தோஷம் சார்.. சுந்தரி எப்பவுமே கொஞ்சம் சோகமா தான் இருப்பா.. அன்னைக்கு நீங்க ஃபோன் பேசினீங்க இல்லை.. அன்னைக்கு கூட அவ அழுதுட்டு தான் இருந்தா.. அவ மனசுல உங்க மேல நிறைய அன்பு வச்சிருக்கா சார்.. ஆனா வெளில காட்ட மாட்டேங்குறா.. நீங்கதான் அதை வெளியில கொண்டு வந்து அவளுக்கு பல மடங்கு அந்த அன்பை திருப்பிக் கொடுக்கணும்..” என்றாள் வனிதா..
“எனக்கு தெரியும் வனிதா.. சுந்தரி அன்பு காட்டினா அதுக்கு அளவே இருக்காது.. அவளை மாதிரி ஒரு மென்மையானவளை அன்பானவளை இந்த உலகத்துல எங்கயுமே பார்க்க முடியாது.. நான் அவளை பத்திரமா எந்த கஷ்டமும் வராம பாத்துக்குறேன்.. கவலைப்படாதீங்க..” என்று சொன்னவன் “உங்க மத்த ஃப்ரெண்ட்ஸ கொஞ்சம் கூப்பிடுறீங்களா? நான் அவங்ககிட்டயும் சொல்லி இன்வைட் பண்ணிட்டு வரணும்னு சுந்தரி ஸ்டிரிக்ட்டா சொல்லி அனுப்பி இருக்கா..” என்று சொன்னான் சுந்தர்..
அதைக் கேட்டு சிரித்த வனிதா “ஒரு நிமிஷம் சார்..” என்று எல்லோரையும் கூப்பிட எல்லோரிடமும் விஷயத்தை சொல்லி திருமண வரவேற்புக்கு அழைத்தவன் “எல்லாரும் ஈவினிங் மறக்காம கட்டாயமா ரிசப்ஷனுக்கு வந்துருங்க.. அப்போ நான் கிளம்புறேன்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்..
வனிதா ஏதோ தன் சொந்த சகோதரிக்கு சிறப்பான வாழ்க்கை கிடைத்தது போல் மகிழ்ச்சியாகவும் குதூகலமாகவும் உணர்ந்தாள்..
###############
திருமண வரவேற்புக்கு சுந்தரியும் அந்த வீட்டில் இருந்தவர்களும் அணிய வேண்டிய உடைகளையும் நகைகளையும் வீட்டிற்கே வரவழைத்து வாங்கி தந்தான் சுந்தர்..
சுந்தரி அருகில் தானே அமர்ந்து ஒவ்வொரு புடவையையும் அவள் மேல் வைத்துப் பார்த்து தனக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து அவளுக்கும் பிடித்திருக்கிறதா என்று கேட்டு பிறகு ஒரு அழகான மஜந்தா நிற புடவையை வரவேற்பு நிகழ்ச்சிக்காக அவளுக்காக தேர்ந்தெடுத்தான்..
சுந்தரி “சுந்தர் சார்.. நான் ஒன்னு கேக்கறேன்.. தப்பா நினைக்காதீங்க..” என்று சொல்ல “என்ன..?” என்பது போல் அவளை பார்த்தான் சுந்தர்..
“அது வந்து.. இந்த புடவை ரொம்ப அழகா இருக்கு.. ஆனா இந்த ரிசப்ஷனுக்கு நான் புடவை தான் கட்டணும்னு நினைக்கிறீங்களா..? இந்த லெஹங்கா அந்த மாதிரி ஏதாவது போடணும்னு நினைக்கிறீங்களா? அப்படி ஏதாவது உங்களுக்கு ஆசையா இருந்தா சொல்லுங்க சுந்தர் சார்.. நான் அதே மாதிரி போட்டுக்குறேன்..” என்று சுந்தரி சொல்ல அவள் எப்போதும் தன்னைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறாள் என்பது சுந்தருக்கு ஒரு புறம் மகிழ்ச்சியை தந்தாலும் மறுபுறம் அவளுடைய ஆசையை அவள் புறக்கணிக்கிறாள் என்பது அவனுக்கு வருத்தத்தை அளித்தது..
அவள் கன்னத்தில் தன் கையை வைத்து முகத்தை பார்த்தவன்.. “உனக்கு ஏதாவது அந்த மாதிரி ஆசை இருக்கா சுந்தரி மா..? எங்கிட்ட உண்மையை மட்டும் தான் சொல்லணும்..” என்று கேட்டான்..
சுந்தரி இல்லை என்பது போல் தலையாட்டியவள் “நீங்க நான் அந்த மாதிரி டிரஸ் போட்டுக்கணும்னு ஆசைப்பட்டீங்கன்னா உங்க ஆசைக்காக நான் அதை போட்டுக்கறேன் சுந்தர் சார்..” என்று சொன்னாள்..
அவள் கண்ணை பார்த்தவன் “இதை பாரு சுந்தரி.. நீ எங்க வீட்டுக்கு முதல் முதல்ல வந்ததிலிருந்து நான் உன்னை புடவையிலதான் பார்த்திருக்கேன்.. நீ மாடர்ன் டிரஸ் எல்லாம் போட்டுக்கணும்னு நான் ஆசைப்படுறேன்.. இல்லைன்னு சொல்லலை… ஆனா புடவைல நீ ரொம்ப அழகா இருக்க சுந்தரி.. நீ புடவை கட்டுற விதம்.. அதை நீ கேரி பண்ற விதம்… இதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதனால இந்த ரிசப்ஷனுக்கு நீ புடவையே கட்டிக்கோ.. இப்ப லெஹெங்கா எல்லாம் போட்டுக்க வேண்டாம்.. இதுக்கப்பறம் உனக்கு எல்லா விதமான டிரஸ்ஸூம் போட்டு நான் அழகு பார்க்கிறேன்.. அப்புறம் வேணா மாடர்ன் ட்ரஸ் போட்டுட்டு ஒரு ரிசப்ஷன் வெச்சுக்கலாம்.. ஓகேவா…?” என்று கண் சிமிட்டி அவன் கேட்க வெட்கத்தில் தலை குனிந்து சிரித்தாள் அவள்..
சுந்தர் முழுமையாய் சுந்தரியை தன் மனைவியாய் பார்க்கத் தொடங்கியிருந்தான்.. அவன் சுந்தரியை காதலிக்கிறானா இல்லையா என்று அவன் அறியவில்லை.. ஆனால் அவள் இல்லை என்றால் அவன் மனம் வெறுமை அடைகிறது என்பதை அவன் உணர்ந்திருந்தான்.. அவள் இல்லாமல் அவனால் ஒரு நாளை கூட முழுதாய் கடக்க முடியவில்லை என்பதை உணர்ந்திருந்தான்.. தன் மனம் முழுவதும் அவள் மட்டுமே நிறைந்திருக்கிறாள் என்று உணர்ந்திருந்தான்.. இவை எல்லாவற்றிற்கும் காரணம் காதல் என்றால் அவனுக்கு காதல் வந்துவிட்டது என்றுதான் அர்த்தம் என்று அவன் எண்ணிக் கொண்டான்..
அதன் பிறகு அந்த புடவைக்கேற்ற நகைகளை தேர்ந்தெடுத்தார்கள்.. காதணி.. கைவளை.. கழுத்தணி.. கொலுசு..என ஒவ்வொரு வகையிலும் 40 50 நகைகளை மாற்றி மாற்றி ஒவ்வொன்றையும் அவளுக்கு அணிவித்து அவளுக்கு அழகாக இருக்கிறதா என்று பார்த்து பார்த்து அதிலிருந்து தேர்வு செய்தான் சுந்தர்..
இப்படி அவள் அன்னையும் ரதியும் கூட அவளுக்கு நகையும் புடவையும் தேர்ந்தெடுத்ததில்லை.. தன்னை இளவரசி ஆக்கி இப்படி பார்த்து பார்த்து செய்யும் சுந்தருக்கு தான் என்ன திருப்பி தர போகிறோம் என்று நெகிழ்ந்து தான் போனாள் சுந்தரி..
அதன் பிறகு மாலை 5 மணிக்கு எல்லாவற்றையும் வாங்கி முடித்தார்கள்.. மேகலாவும் நடராஜனும் அவர்களுடைய அறைக்கு செல்ல ரதியும் சுந்தரும் சுந்தரியும் மட்டும் இருந்தார்கள் அந்த வரவேற்பறையில்..
ரதி சுந்தரியிடம் “சுந்தரி ரிசப்ஷன் 6.30க்கு.. அதுக்குள்ள உன்னை ரெடி பண்ணிட்டு நான் ரெடி ஆகணும்.. நீ அவர்கிட்ட சொல்லிட்டு ரூமுக்கு வந்துரு..” என்று சொல்லிவிட்டு அவளும் சுந்தரியின் அறைக்கு சென்றாள்..
“சரி.. சுந்தர் சார்.. நான் அப்ப போய் டிரஸ் சேஞ்ச் பண்ண ஆரம்பிக்கிறேன்..” என்று சுந்தரி தன் அறைக்கு போக திரும்ப அவள் கையைப் பிடித்து வேகமாக தன் பக்கம் இழுத்தான் சுந்தர்..
அவன் இழுத்த இழுப்பின் வேகத்தில் அவன் மார்பில் வந்து மோதியவள் அந்த திடீர் அணைப்பு தந்த அதிர்ச்சியில் நிமிர்ந்து கண்கள் படபடக்க அவனை பார்த்து..”எ….எ…என்ன.. சுந்தர் சார்?” என்று மிரட்சியுடன் கேட்க அந்தக் கண்ணின் அழகில் அப்படியே தன் நிலை மறந்து போனான் சுந்தர்..