சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 50
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
சுந்தருடைய திடீர் அணைப்பு தந்த அதிர்ச்சியில் நிமிர்ந்து கண்கள் படபடக்க அவனை பார்த்து..”எ….எ…என்ன.. சுந்தர் சார்?” என்று மிரட்சியுடன் கேட்க அந்தக் மைவிழியின் அழகில் அப்படியே தன் நிலை மறந்து போனான் சுந்தர்..
தன் சுட்டு விரலை அவள் கன்னத்தில் வைத்து ஏதோ மெல்லிய கோடு வரைவது போல் வருடியவன் குனிந்து அவள் நெற்றியில் தன் இதழ் பதிக்க அவன் வாய் பேசாவிட்டாலும் அவன் சொல்ல நினைத்ததை எல்லாம் அந்த இதழ் முத்தம் சொல்லியது..
அவள் நாடியில் கை வைத்து முகத்தை நிமிர்த்தி தன் கண்களை பார்க்க வைத்தவன்.. “சுந்தரி.. எனக்கு நீ ஒரு ப்ராமிஸ் பண்ணனும்..” என்று கேட்டான்..
கண்களை மூடியபடி அவன் இதழ் முத்தத்தை நெற்றியில் வாங்கியவள் கண்ணை திறந்து “என்ன ப்ராமிஸ் பண்ணனும் சுந்தர் சார்..?” என்று கேட்க
“இனிமே எந்த காரணத்தை கொண்டும் நீ தற்கொலைக்கு முயற்சி பண்ணக்கூடாது.. யாருக்காகவும்.. எனக்காகவா இருந்தாலும் சரி.. முதல்ல எனக்கு ப்ராமிஸ் பண்ணு..” என்று அவன் சொல்லி தன் கையை நீட்ட
அவன் கையில் தன் கையை வைத்து “இனிமே எந்த காரணத்துக்காகவும் நிச்சயமா அப்படி பண்ண மாட்டேன் சுந்தர் சார்.. ஏன்னா அப்படி பண்ணறதுக்கு எந்த காரணமும் இருக்காதுன்னு எனக்கு தோணுது.. நீங்க எப்பவும் சந்தோஷமா இருக்கிறதை பார்க்கிறதுக்காகவாது நான் உயிரோட இருக்கணும்னு நினைக்கிறேன்.. நிறைய நாள் உங்களோட வாழணும்னு நினைக்கிறேன்..” என்று அவள் சொல்ல அவளுடைய இரு கண்களிலும் மெலிதாக முத்தமிட்டான்..
“அப்புறம் இன்னொரு விஷயமும் உன்கிட்ட சொல்லணும்.. ஆக்சுவலா கேக்கணும்..” என்று அவன் சொல்லி அவளை இன்னும் தன் அணைப்புக்குள் இறுக்கிக் கொள்ள “எ…என்ன வி..விஷயம் சுந்தர் சார்..?” என்று கேட்டாள் அவள் குரலில் அந்த இறுக்கம் தந்த தடுமாற்றத்துடன்… அவனின் இறுகிய அணைப்பில் இருந்த படியே அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தபடி கேட்டவளின் வதனத்தில் தலை குனிந்து தன் பார்வையை அலைய விட்டவனுக்கோ கேட்க வந்த விஷயம் கூட ஒரு நொடி மறந்து போனது..
அவன் அணைப்பில் அவள் இதயமோ தாறுமாறாய் துடித்துக் கொண்டிருந்தது.. உடல் முழுவதும் ஏதோ ஆனந்த படபடப்பு கூடியிருக்க கை கால்களில் எடுத்த நடுக்கத்தை மறைக்க அவன் முதுகு பக்க சட்டையை இறுக்கமாய் பிடித்திருந்தாள் அவள்..
இப்படியே தன் அணைப்புக்குள் அவளை வைத்தபடி அவள் முகத்தை பார்த்தபடியே இருந்து விடலாமா என்று தோன்றியது அவனுக்கு..
சுந்தரிக்கோ அவன் பார்வையின் ஊடுருவல் உள்ளுக்குள்ளே குறுகுறுக்க சட்டென விழி தாழ்த்தி “சார்.. என்ன சார் கேட்கணும்.. கேளுங்க..” என்றாள்..
அவள் கேள்வியில் தன் நிலைக்கு வந்தவன் தொண்டையை சற்றே செருமி “ம்க்கும்.. என்னை சார் சார்ன்னு கூப்பிடற இல்ல.. அது வேண்டாமே.. என்னவோ உன்னை விட்டு என்னை ரொம்ப தள்ளி வைக்கிற மாதிரி இருக்கு..” என்று அவன் சொல்ல “வேற எப்படி சார் உங்களை கூப்பிடறது?” என்று கேட்டுவிட்டு நாக்கை கடித்துக்கொண்டாள் அவள்..
“அதான் எனக்கு பேர் வச்சிருக்காங்க இல்ல அழகா.. சுந்தர்னு.. அதுவும் உன் பேருக்கு மேட்ச் ஆகற மாதிரி… அதை வச்சு கூப்பிடுறது..” என்று அவன் சொல்ல
தன் வாயில் கை வைத்தவள் “அது எப்படி.. உங்களை பேர் சொல்லி கூப்பிட முடியும்..? அது.. மத்தவங்க முன்னாடி மரியாதையா இருக்காதே..” என்று அவள் சொல்ல
“ம்ம்ம்ம்.. இது பெரிய பிராப்ளமா இருக்கும் போல இருக்கே.. என்ன பண்ணலாம்..?” என்று யோசித்தவனின் கைகளோ தன் பாட்டுக்கு அவள் இடையை வருடியபடி அதன் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தது..
சுந்தரிக்கோ அந்த தீண்டல் அவளுக்குள் இல்லாத மோக உணர்வை கிளறி விட அவன் அணைப்புக்குள் நெளிந்த படியே எச்சில் விழுங்கி கொண்டாள்..
புது வித அனுபவம் அவளுக்கு.. மனம் பறித்தவனின் கரங்கள் அவள் இடையில் தனிச்சையாய் விளையாட அவள் உடலின் அணுக்கள் அத்தனையும் அவன் தீண்டலுக்கு அத்து மீறி எதிர்வினை ஆற்றிக் கொண்டிருந்தன.. அவள் கட்டுப்பாட்டுக்குள் அடங்காமல் அவன் விரல் பட்ட இடங்கள் தாறுமாறாய் சிலிர்த்து போக அவன் சட்டையை பிடித்திருந்த பெண்ணவளின் கைகளோ அந்த இறுக்கத்தை கூட்டிக்கொண்டே போனது..
அதை உணர்ந்த அந்த கள்வனும் இதழுக்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டு
“ஆமா எதுக்கு இப்படி நெளியிற?” என்று வேறு கேட்டு அவளை மேலும் சீண்டி சங்கடப் படுத்தினான்..
அவள் விழிகளில் சங்கடத்தோடு அவனைப் பாவமாய் பார்க்க அதற்கு மேல் அவளை சோதிக்க விரும்பாமல் தன் விரல்களின் வருடலை நிறுத்தியவன்
“சரி.. நீயே உனக்கு பிடிச்ச பேரா ஏதாவது செலக்ட் பண்ணி என்னை கூப்பிடு.. அந்த பேரு நமக்குள்ள மட்டும் இருக்கட்டும்.. மத்தவங்க எதிர நீ சொல்ற மாதிரி மரியாதையா ஏதாவது சொல்லி கூப்டுக்கோ..” என்று அவன் சொல்ல அவள் யோசித்தாள்..
அவ்வளவு நேரம் அவனோடு பேசியதில் சிறிது இயல்பு நிலைக்கு திரும்பியவள் அவன் தோளில் கைகளை போட்டு கழுத்தை சுற்றி கை இரண்டையும் பிணைத்துக் கொண்டவள் “நீங்க எனக்கு அந்த சாமி மாதிரி.. சாமின்னு கூப்பிட்டட்டுமா உங்களை..?” என்று கேட்டாள்..
அவளை தீவிரமாய் முறைத்தவன் “சார்ன்னு கூப்பிட்டாலே தள்ளி வச்ச மாதிரி இருக்குங்கறேன்.. நீ என்னடான்னா சாமினு கூப்பிட்டு என்னை ரொம்ப தள்ளி வைக்க பாக்குறியே.. ப்ளீஸ்.. என்னை சுந்தர்னே கூப்பிடேன்.. நம்ம ரெண்டு பேர் மட்டும் தனியா இருக்கும்போது கூப்பிடு அட்லீஸ்ட்..” என்று அவன் செல்லமாய் கொஞ்சி கேட்க
“முடியாது.. உங்க பேர் சொல்லி நான் கூப்பிட மாட்டேன் சார்..” என்று தீர்மானமாய் அவள் தலையை இடவலமாய் ஆட்டி சொல்ல “ஓகே.. சுந்தரி மேடம்..” என்றான் அவன்..
“என்ன.. சுந்தரி மேடமா..?” என்று அவள் புருவத்தை சுருக்கி அவனைப் பார்க்க “ஆமாம்.. நீ என்னை சார்ன்னு கூப்பிட்டா நான் உன்னை மேடம்னு கூப்பிடுவேன்.. இனிமே நானும் இப்படித்தான் கூப்பிடுவேன்.. நான் சுந்தரின்னு கூப்பிட மாட்டேன்.. வாங்க சுந்தரி மேடம்.. என் கூடவே எப்பவும் இருங்க சுந்தரி மேடம்.. அப்படின்னு மரியாதையா கூப்பிடுறேன்..” என்று அவன் சொல்ல அவளுக்கு தர்ம சங்கடமாய் போனது..
தன் கைகளை அவனிடமிருந்து விடுவித்தவள் “போங்க சுந்தர் சார்.. எனக்கு என்ன கூப்பிடுறதுன்னு தெரியல..” என்று முகம் சுருங்கி போனவளின் கைகளை தன் கைகளுக்குள் பொத்திவைத்துக் கொண்டான்..
“நீ என்னை என்ன வேணா கூப்பிடு.. ஆனா சார் மட்டும் வேண்டாம்.. அது ஏதோ நீ என்கிட்ட வேலை பார்க்கிற மாதிரி இருக்கு.. அந்த ஷாலினி அதை சொல்லி சொல்லி தானே பல நாள் உன் மனசு நோகுற மாதிரி பேசி இருக்கா.. அப்படி மட்டும் என்னை கூப்பிடாதே.. ப்ளீஸ்.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..” என்று மன வருத்தத்தோடு சொல்ல அவன் வருத்தத்தை கண்டவளுக்கு அதற்கு மேல் மனம் தாங்கவில்லை..
சட்டென குறும்பாய் இதழ் விரித்து “ஓகே டா என் செல்ல அழகா..” என்று அவன் கன்னம் கிள்ளி சொன்னவளை அப்படியே ஆச்சரியத்தில் விழி விரித்து பார்த்தவன் பார்வையில் வெட்கம் கொண்டு அவள் அவனிடமிருந்து விலகி ஓட பார்க்க அவளை பிடித்து இழுத்து “என்ன சொன்ன..?” என்று கேட்டான்..
“ஒன்னும் இல்ல..” என்று மறுபடியும் ஓடப் போனவளை பிடித்து இழுத்து அவள் கன்னங்களை தன் கைகளில் தாங்கி “என் கருப்பட்டி அழகி..” எனவும் அவன் அழைத்த பேரில் அப்படியே வெட்கத்தோடு சிரித்தபடி தலையை குனிந்து கொண்டாள் சுந்தரி..
அவள் தலையை நிமிர்த்தியவன் அவள் இதழை நோக்கி குனிய அப்போது ரதி உள்ளிருந்து “சுந்தரி.. டைம் ஆச்சு.. வா.. கிளம்பணும்..” என்று அழைக்க “ஐயோ ரதி கூப்பிடுறா..ங்க” என்று சொல்லி அவன் கையை தன் கன்னத்தில் இருந்து எடுத்து விட்டு ஓடிட அவனோ தலையை குனிந்து இடவலமாய் ஆட்டி சிரித்து கொண்டான்..
பத்தடி தூரம் சென்றவள் திரும்பவும் அவனருகில் வந்து கால்களை எக்கி அவன் கன்னத்தில் சட்டென முத்தமிட்டு ஓடிவிட இன்ப அதிர்ச்சியில் அவள் போவதையே பார்த்து வியப்பில் ஆழ்ந்து நின்று கொண்டிருந்தான் அவள் செய்ததை நம்ப முடியாமல்..
அதன் பிறகு இடுப்பில் கை வைத்து தலையை கோதிய படி “கருப்பட்டி அழகி.. கொல்றடி என்னை..” என்று சொல்லி இதழ் விரித்தவன் அவள் “அழகா..” என்று தன்னை அழைத்ததை நினைக்கவும் உடல் சிலிர்க்க இந்த புது வித உணர்வை ரசித்து அனுபவித்து சீட்டி அடித்தபடியே தன் அறைக்கு சென்றான்..
மாலை வரவேற்புக்கு எல்லோரும் தயாராகி வரவேற்பு நடக்கும் உல்லாச விடுதிக்கு சென்றனர்.. சுந்தர் வாங்கி கொடுத்த மஜந்தா நிற புடவையில் அதற்கு ஏற்ற டெம்பிள் ஜுவல்லரி நகைகளும் போட்டிருந்த சுந்தரி அழகு தேவதை போல் இருந்தாள்..
சுந்தரால் அவளை விட்டு தன் கண்ணை அகற்றவே முடியவில்லை.. மிகவும் கஷ்டப்பட்டு மற்றவர்களை கவனித்துக் கொண்டிருந்தான்..
வரவேற்புக்கு மெல்ல மெல்ல அவர்களுடைய நண்பர்களும் உறவினர்களும் ஒவ்வொருவராய் வந்து கொண்டிருந்தனர்..
சுந்தருடைய தோழி சைத்ரா.. அவன் கல்லூரியில் அவனோடு படித்த மற்ற நண்பர்கள்.. மாதேஷ்.. சுந்தரின் கார்மெண்ட்ஸிலும் துணிக்கடையிலும் வேலை செய்பவர்கள் என்று ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தார்கள்..
ரவிக்குமார் ஷாலினியுடனும் அன்னம்மாவுடனும் வந்திருந்தார்.. ஷாலினியை பார்த்து சுந்தரிக்கு சிறிது சங்கடமாய் தான் இருந்தது இன்னும்.. அவள் நெளிவதை பார்த்த சுந்தர் அவள் கையைப் பிடித்து கண்ணை மூடி திறந்து அவளை அமைதி படுத்தினான்..
ராகினி தேவி.. வனிதா மற்றும் அந்த கடையில் வேலை செய்பவர்கள் அத்தனை பேரும் ஒன்றாக உள்ளே நுழைந்தார்கள்.. அவர்களைப் பார்த்ததும் சுந்தரிக்கு உற்சாகம் தொற்றிக் கொண்டது.. மேடையில் இருந்து அவர்களை பார்த்து கையாட்டினாள் சுந்தரி..
அவள் கல்லூரியில் சேர்ந்து கொஞ்சம் காலம்தான் ஆகியிருக்க அங்கே அவளுக்கு சித்தார்த் மட்டும் தான் கொஞ்சம் நெருங்கிய நண்பன் என்பதால் அவனை மட்டும் அழைத்திருந்தாள்.. சுந்தரி..
ஆனால் அவன் அவசர வேலையாக வெளியூர் போயிருந்ததால் தன்னால் வர முடியாது என்று அவள் குறுஞ்செய்திக்கு பதில் அனுப்பி விட்டான்..
யாருக்கும் தெரியாமல் மாதேஷை பார்த்து ஷாலினி புன்னகைக்க அவனும் யாருக்கும் தெரியாமல் அவளை பார்த்து கண்ணடித்தான்..
சிரித்துக் கொண்டு திரும்பியவள் தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று சுற்றி முற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்..
அதன் பிறகு ஒவ்வொருவராக மேடையில் சுந்தரிடமும் சுந்தரியிடமும் பரிசு பொருட்களை கொடுத்துவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டு இறங்கினார்கள்..
ராகினி தேவி மேடையேறி.. “சுந்தரி.. எங்களுக்கெல்லாம் சொல்லாம கொள்ளாம திடீர்னு கல்யாணம் முடிச்சுட்ட இல்ல..” என்று கேட்டார் சுந்தரியிடம்..
“அது இல்ல மேடம்.. வந்து..” என்று சுந்தரி இழுக்க “நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்.. சுந்தர் எல்லாம் சொன்னாரு.. ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க.. எனக்கு ரொம்ப சந்தோஷம் நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டது..” என்று சொல்லிவிட்டு ராகினி தேவி சென்று விட்டார்..
அவர் பின்னே வந்த வனிதாவோ அவளை இறுக தழுவிக் கொண்டு ஆனந்த கண்ணீர் வடித்தாள்..
“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சுந்தரி.. எத்தனை நாள் நீ அழுததை நான் பார்த்துருக்கேன்.. சேர்த்து வச்சு இனிமே சிரிக்க போற.. இல்ல..?” என்று தலையை குனிந்து வெக்கப்பட்டிருந்த சுந்தரியின் முகத்தை இன்னும் கீழே குனிந்து பார்த்து கேட்க “ஏய் போதும்.. போடி” என்றாள் சிணுங்கலாய் சுந்தரி.. சுந்தரும் அவள் வெட்க சிணுங்கலை ரசித்திருந்தான்..
சுந்தர் அவர்கள் எல்லோரிடமும் சாப்பிட்டுவிட்டு தான் போக வேண்டும் என்று சொல்லி அனுப்பினான்..
அப்போது அவனுடன் கல்லூரியில் படித்த நண்பர்களும் யு எஸ்ஸில் அவனுடன் படித்துவிட்டு இந்தியாவில் தொழில் தொடங்கியிருக்கும் நண்பர்களும் மேடை ஏறி வந்தனர்.. அவர்களுடன் மாதேஷும் சைத்ராவும் வந்திருந்தார்கள்..
எல்லோரும் பரிசு பொருளை ஒன்றாக சேர்ந்து கொடுத்துவிட்டு புகைப்படம் எடுத்துக் கொள்ள எல்லோரிடமும் சுந்தர் “சாப்பிட்டு தான் போகணும்..” என்று சொல்ல…
“டேய் மச்சான்.. நீ என்ன அவ்வளவு சீக்கிரம் எங்களை எல்லாம் அனுப்பிடலாம்னு நெனைச்சியா..? அதெல்லாம் நடக்காது.. ரிசப்ஷன் முடிஞ்சதும் இங்கே உட்கார்ந்து ஒரு அரை மணி நேரம் ஒரு அரட்டைக்கச்சேரி நடத்திட்டுதான் நாங்க எல்லாரும் கிளம்புவோம்.. நம்ம ஃபிரெண்ட்ஸ் எல்லாம் இப்படி ஒன்னா மீட் பண்றது ரொம்ப ரேர் டா.. அதனால நாங்க சாப்பிட்டு வந்து நிதானமா அங்கே உட்கார்ந்துருக்கிறோம்.. நீ எல்லாரையும் அனுப்பிச்சுட்டு எங்களோட பேச வா.. மறக்காம உன் வைஃபையும் கூட்டிட்டு வா..” என்று சொல்லிவிட்டு மேடையிலிருந்து இறங்கினான் மாதேஷ்..
அடுத்து மேடை ஏறிய ரவிக்குமாரும் ஷாலினியும் அன்னம்மாவும் அருகில் வந்து அவர்களுக்கு பரிசு பொருளை கொடுத்தார்கள்..
புகைப்படம் எடுத்த பின் ரவிக்குமார் அவர்களிடம் “ரெண்டு பேரும் சந்தோஷமா பல வருஷம் இதே மாதிரி ஜோடியா ஒண்ணா சிரிச்சுக்கிட்டே இருக்கணும்.. ரெண்டு பேருக்கும் எந்த கஷ்டமும் வரக்கூடாது” என்று வாழ்த்தினார் தன் மகளினால் தான் அவர்களுக்கு பெரிய துன்பம் வரப்போகிறது என்பதை அறியாமல்..
சுந்தரை பார்த்து சினேகமாய் சிரித்தார் அன்னம்மா.. “நல்லா இருங்கப்பா..” என்று வாழ்த்தி சென்றார்..
ஷாலினி சுந்தரியிடம் “எனக்கு முதல்ல கோவமா இருந்தாலும் நான் அப்புறம் அப்பா சொன்னதை பத்தி யோசிச்சு பார்த்தேன்.. உங்க கல்யாணம் முடிஞ்சிடுச்சு.. இனிமே கோபப்பட்டு என்ன செய்ய..? ரெண்டு பேரும் நல்லா இருங்க..” என்று சொல்லிவிட்டு ஏதோ உலக மகா சோகம் அவளை ஆட்கொண்டது போல் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு கீழே இறங்கினாள்..
கீழே இறங்கியவள் மாதேஷை கட்டை விரலை மட்டும் தூக்கி சைகை காட்டியவள் திரும்பவும் அதே சைகையை அவன் காட்ட சிரித்துவிட்டு போய் அமர்ந்து கொண்டாள்..
ரவிக்குமார் ஷாலினியிடம் “ஷாலினி.. நம்மளும் போய் சாப்பிட்டுட்டு கிளம்பலாம்..” என்று அழைக்க “அப்பா சாயந்திரம் அன்னம்மா எனக்கு செஞ்சு கொடுத்த பஜ்ஜியே வயிறு ஃபுல்லா இருக்குப்பா.. இங்கேயே இருந்துட்டு ஒரு அரை மணி நேரம் கழிச்சு சாப்பிடலாம்ப்பா” என்று சொன்னாள் ஷாலினி..
அடுத்த அரை மணி நேரத்தில் எல்லோரும் கிளம்பி விட சுந்தரையும் சுந்தரியையும் அழைத்து வந்த அவனுடைய நண்பர்கள் வட்டமாக நாற்காலிகளை போட்டு நடுவில் அவர்கள் இருவரையும் அமர வைத்து சுற்றி அவர்கள் அனைவரும் அமர்ந்து கொண்டார்கள்..
ஷாலினி தன் தந்தையுடனும் அன்னம்மாவுடனும் சாப்பிட சென்றுவிட்டாள்..
சுந்தரின் நண்பர்கள் அவனுடன் பழைய கல்லூரி விஷயங்களை பற்றி உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தனர்.. சைத்ரா சுந்தரியின் பக்கத்திலேயே உட்கார்ந்து கல்லூரியில் சுந்தர் எப்படி எந்த பெண்ணிடமும் ரொம்பவும் பேசாமல் சாமியார் போல் இருந்தான் என்று சொல்லி கேலி செய்து கொண்டிருந்தாள்..
அடுத்த பத்து நிமிடங்களுக்கு பிறகு சாப்பிட்டு வந்த ஷாலினி கையில் ஒரு தட்டு நிறைய பழச்சாறு நிறைந்த குவளைகளை எடுத்து வந்திருந்தாள்..
எடுத்து வந்தவள் அதை கொண்டு வந்து சுந்தரின் நண்பர்களுக்கெல்லாம் கொடுத்துவிட்டு கடைசியாக சுந்தருக்கும் கொடுத்துவிட்டு சுந்தரியிடம் நீட்டியவள் தவறுதலாய் சாய்ப்பது போல் தட்டை சாய்த்து விட சுந்தரி எடுப்பதற்குள் அந்த பழச்சாறு நிறைந்த குவளை கீழே விழுந்தது..
பழச்சாறு அவளுடைய புடவையில் எல்லாம் தெரித்து விட “அய்யய்யோ.. சாரி சுந்தரி.. எனக்கு தெரியாம..” என்று சொல்ல “இல்ல பரவால்ல ஷாலினி.. இருக்கட்டும்..” என்று சொன்னாள் சுந்தரி..
“சரிவா.. உடனே போய் வாஷ் பண்ணிட்டு வந்துடலாம்.. இல்லன்னா ரொம்ப கரையாயிடும்..” என்று சொன்னவளை கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் பார்த்தாள் சுந்தரி..
ஆனால் அவள் சொல்வது போல் சுந்தர் ஆசையாய் வாங்கி கொடுத்த பட்டு புடவை கரை ஆவதை அவள் விரும்பவில்லை.. அதனால் அவளுடன் சென்று புடவையை கழுவி விட்டு வந்தாள்..
அப்போது மறுபடியும் அந்த நண்பர் கூட்டத்தோடு அமர வந்தவள்.. அங்கே மாதேஷ்.. சைத்ரா சுந்தர் மற்றும் அவனது நண்பர்கள் பேசிக் கொண்டிருந்த உரையாடலை கேட்டு அப்படியே இடிந்து போய் ஸ்தம்பித்து நின்றாள்..