சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 54 ❤️❤️💞

4.9
(14)

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 54

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

“நாளைக்கு என்னை காலேஜ்ல கொண்டு விடுறதுக்கு முன்னாடி நம்ப டிவோர்ஸ் விஷயமா ஒரு வக்கீலை போய் பாத்துட்டு போயிறலாம்..”

சுந்தரி தன் முடிவில் உறுதியாக இருப்பதை பார்த்து வருத்தம் கொண்டவன் வேறு வழி இல்லை என்று உணர்ந்து “சரி போகலாம்..” என்று சலிப்புடன் சொல்லிவிட்டு படுத்துக்கொண்டான்..

அடுத்த நாள் காலை சுந்தரி  அவன் தயாரானதும் கையோடு அழைத்துக் கொண்டு வந்து சாப்பாட்டு மேஜையில் அமர வைத்து தானே அவனுக்கு காலை சிற்றுண்டியை பரிமாறினாள்..

அவனும் எதுவும் சொல்லாமல் அவளோடு சாப்பிட்டு முடித்து அவள் கையை பிடித்து அழைத்துக் கொண்டு  அவனுடைய ட்ரைவர் வண்டியை எடுத்து வர அதில் பின் இருக்கை கதவை திறந்து அவளை ஏற்றி தானும் ஏறிக் கொண்டான்..

அவள் “சுந்தர் சார்..” என்று வாயை திறக்கவும் “என் கண்டிஷன் ஞாபகம் இருக்குல்ல..?” என்றான்..

“ம்ம்ம்ம்.. இருக்கு இருக்கு..” என்று சொன்னவள் “ஆமா.. நம்ம இப்போ வக்கீலை பார்க்க தானே போயிட்டு இருக்கோம்..?” என்று கேட்கவும்

“இவ ஞாபக சக்தில தீய வச்சு கொளுத்த..” என்று மனதிற்குள் பொறுமியவன் “ஆமாம்மா.. ஆமாம்.. வக்கீலை பார்க்க தான் போயிட்டு இருக்கோம்.. எனக்கும் ஞாபகம் இருக்கு..” என்று அழுத்தமாய் பற்களை கடித்து பேசிவிட்டு வெளி பக்கமாய் முகத்தை திருப்பிக் கொண்டான்..

அதற்கு மேல் அவன் கோபத்தை கிளற வேண்டாம் என்று அவளும் அமைதியாக அவனோடு பயணித்தாள்..

சுந்தரி சொன்னது போலவே வக்கீலை பார்த்து விவாகரத்துக்கு விண்ணப்பித்தவர்களிடம் அந்த வக்கீல் “இது மியூச்சுவல் கன்சென்ட்ல ஃபைல் பண்ணி இருக்கிறதுனால ஒரு ஆறு மாசத்துக்குள்ளேயே உங்களுக்கு டிவோர்ஸ் கிடைச்சிடும்..” என்றார்..

“இப்ப யாருடா உன்னை அவசர அவசரமா டிவோர்ஸ் வாங்கி கொடுக்க சொன்னா..? வாய்தா மேல வாய்தா வாங்கி இன்னும் ரெண்டு வருஷத்துக்காவது இந்த கேஸை இழுத்திட்டு போடா.. அதுக்குள்ள என் சுந்தரியை நான் சரி கட்டிடுவேன்” என்று மனதிற்குள்ளேயே புலம்பினான் சுந்தர்..

“அடுத்த ஹியரிங் எப்பன்னு நான் சொல்றேன்.. ரெண்டு பேரும் கரெக்டா வந்துருங்க..” என்றார் அவர்..

“நிச்சயமா வந்துருவோம் சார்..” என்று பட்டென பதில் சொன்னாள் சுந்தரி..

சுந்தருக்கோ அவனிடமிருந்து விவாகரத்து வாங்கும் விஷயத்தில் அவள் அவ்வளவு உறுதியாக இருந்தது மேலும் மேலும் கோபத்தையே வரவழைத்தது.. ஆனால் கோபப்படுவதனால் எந்த பயனும் இல்லை என்று உணர்ந்தவன் தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டான்..

இது எல்லாமே தனக்கு தானே விதைத்துக் கொண்ட வினைதான் என்று அவனுக்கு புரிந்தது..

அன்று விதைத்தவன் இன்று அறுவடை செய்கிறான்.. தேவை இல்லாமல் ஒரு சவாலை போட்டு தன் வாழ்க்கையையே தலைகீழாய் அவன் மாற்றி இருப்பது அவனுக்கு புரிந்தது..

ஆனால் அன்று இருந்த மனநிலையில் இருந்து தன் மனம் இப்போது மாறி இருப்பது போல் சுந்தரியின் மனமும் இப்போது இருக்கும் மனநிலையில் இருந்து மாறும் என்று காத்திருப்பதை தவிர வேறு வழி அவனுக்கு தெரியவில்லை..

அதன் பிறகு அங்கிருந்து அவள் கல்லூரிக்கு பயணப்பட்டார்கள்.. கல்லூரியில் அவளை இறக்கி விட்டவன்.. அவளை நோக்கி வனிதா வருவதை பார்த்து வண்டியை எடுக்க சொல்லி கிளம்பி போய் விட்டான்..

“ஏய் சுந்தரி.. என்ன உங்க ரெண்டு பேருக்குள்ள எல்லாம் செட் ஆயிடுச்சா.. அவரோட கார்ல வர்ற?” என்று வனிதா கேட்க

“அதெல்லாம் ஒன்னும் இல்ல.. டிவோர்ஸ் வாங்குற வரைக்கும் அவர் என்னை கொண்டு விட்டு கூட்டிட்டு போவேன்னு சொன்னாரு.. நானும் ஓகே சொல்லிட்டேன்..” என்றாள் சுந்தரி..

அப்போது எதிரே சித்தார்த் ஷ்ரவன் வந்து “குட் மார்னிங் சுந்தரி..” என்றான்..

“குட் மார்னிங் சார்..” என்று சொல்ல “ப்ளீஸ் கால் மி சித்தார்த்.. சார் வேணாமே..” என்றான் அவன்..

“இது என்னடா வம்பா போச்சு..? யாரை பார்த்தாலும் நம்மள சார்ன்னு கூப்பிடாதன்னு சொல்றாங்க..” என்று யோசித்தவளுக்கு சிரிப்பு தான் வந்தது..

“ஓகே சித்தார்த்.. இனிமே உங்களை பேர் சொல்லியே கூப்பிடுறேன்..” என்று அவள் சொல்ல “அப்புறம் சுந்தரி.. உங்க ரெண்டு பேர் கிட்டயும் ஒரு விஷயம் பேசணும்” என்றான் சித்தார்த்..

அங்கே இருந்த சிமெண்ட் பென்ச்சில் வனிதாவுடன் அமர்ந்தவள் அவனையும் பக்கத்தில் உட்கார சொன்னாள்..

“இந்த புரோஷரை பாருங்க” என்று சுந்தரியிடம் ஒரு விளம்பரத் தாளை கொடுத்தான்..

அதை வாங்கி படித்தாள்.. அதில் ஒரு ஃபேஷன் ஷோவில் டிசைனர்களுக்கான போட்டி நடப்பதாக போட்டிருந்தது..

அந்த தாளில் விதிகள் இருந்த பக்கத்தில் கையை வைத்து அவளுக்கு காண்பித்தவன் “இந்த ஃபேஷன் ஷோக்கு நம்ம காலேஜ்ல இருந்து நாலு டீம் பார்ட்டிசிபேட் பண்ண சொல்லி இருக்காங்க.. ஃபர்ஸ்ட் இயர்ல இருந்து ரெண்டு டீம் பார்ட்டிசிபேட் பண்ணனும்.. நீங்களும் வனிதாவும் இதுல பார்ட்டிசிபேட் பண்ணனும்னு நான் நினைக்கிறேன்..” என்றவன் சுந்தரிக்கு நம்பிக்கை கொடுப்பது போல் அவள் கையை பிடித்து “உங்களை கேலி கிண்டல் செஞ்சவங்க அத்தனை பேர் முன்னாடியும் நீங்க இதுல பார்ட்டிசிபேட் பண்ணி வின் பண்ணீங்கன்னா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்..” என்றான் சித்தார்த்..

“இல்ல சித்தார்த்.. இது ரொம்ப பெரிய ஷோ மாதிரி இருக்கு.. எனக்கு எல்லாம் இவ்வளவு பெரிய ஷோல கலந்து கிட்டு எல்லாம் பழக்கம் இல்லை.. அதான் யோசிக்கிறேன்..” என்று அவள் சொல்ல

“எதுக்கு யோசிக்கணும்? உன் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? உன்னால முடியும் சுந்தரி.. நீ இதுல கட்டாயமா கலந்துக்கோ.. ஏன் அங்க இருக்கிறவங்களை எல்லாம் பார்த்து உனக்கு பயமா இருக்கா?” என்று கேட்டுக்கொண்டே சுந்தர் அங்கு வந்தான்..

“சுந்தர் சார்.. நீங்க என்ன திரும்பி வந்து இருக்கீங்க..?” என்று சுந்தரி கேட்க “அது உன் லஞ்ச் பேக் விட்டுட்டு வந்துட்டே வண்டியில.. அதான் கொடுக்க வந்தேன்..” என்று அவள் கையில் அதை கொடுக்க போக..

“இவர் தான் உன் ஹஸ்பண்ட் சுந்தரா.. சுந்தரி..? நீ அன்னைக்கு அனுப்பிச்ச மெசேஜ்ல மாப்பிள்ளையோட பேரு சுந்தர்ன்னு தானே இருந்தது…”

சித்தார்த் கேட்க சுந்தரோ சுந்தரியின் கையை இன்னும் பிடித்திருந்த சித்தார்த்தின் கையையே பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான்.. அதை கவனித்து சட்டென தன் கையை சுந்தரியின் கையில் இருந்து எடுத்து விட்டான்.. சித்தார்த்..

“ஆமா சித்தார்த் இவர்தான் என்னோட ஹஸ்பண்ட்..” என்று அவள் சொல்ல ஆயிரம் தான் அவர்களுக்குள் ஏதேதோ பிரச்சினைகள் நடந்திருந்தாலும் தன்னை இன்னும் உரிமையோடு கணவன் என்று அறிமுகப்படுத்திய அவளுடைய வார்த்தை அவன் மனதுக்கு சிறிது இதம் அளித்தது..

அவன் சுந்தரியை பார்த்து மகிழ்ச்சியோடு புன்னகைத்துக் கொண்டிருக்க சுந்தரி சுந்தரிடம் “சுந்தர் சார்.. இவரு எங்க ப்ரொஃபஸர் சித்தார்த் ஷ்ரவன்” என்றாள் சித்தார்த்தை கைகாட்டி..

தன் கையை சுந்தர் நோக்கி நீட்டிய சித்தார்த் “ஹலோ சார்.. நைஸ் மீட்டிங் யூ..” என்றான்..

சுந்தரும் அவனை சிறிது முறைத்தபடியே அவனோடு கைகுலுக்கினான்..

“சரி அது இருக்கட்டும்.. நீ எதுக்கு இந்த ஃபேஷன் ஷோக்கு போகமாட்டேன்னு சொல்றே..” என்று தொடங்கிய பேச்சை விடாமல் கேட்டான் சுந்தர்..

“இல்ல.. எனக்கு இதுவரைக்கும் அந்த மாதிரி எல்லாம் டிரஸ் டிசைன் பண்ணி பழக்கம் இல்ல.. அது மட்டும் இல்லாம நான் டிசைன் பண்றதை போட்டுக்கறதுக்கு ஒரு மாடல் வேணும் இல்ல..”

“எதுக்கு வேற யாரோ ஒரு மாடலை தேடி போகணும்.. நீ டிசைன் பண்ற ட்ரஸ்ஸை நீயே போட்டுக்கோ.. அந்த ஃபேஷன் ஷோலயும் கலந்துக்கோ..”

சித்தார்த்தும் “ஆமா.. இது நல்லா ஐடியாவா இருக்கே.. உங்களை பத்தி தப்பா பேசினவங்க மூக்கை எல்லாம் உடைச்ச மாதிரி இருக்கும்.. சுந்தரி உங்களுக்கு ஒரு மாடல் ஆர்டிஸ்ட் ஆகறதுக்கான எல்லா தகுதியும் இருக்கு.. உங்க உடலமைப்பு ஒரு அழகான மாடலோடது மாதிரி இருக்கு.. கச்சிதமா மாடலிங்குக்கு ஏத்த மாதிரியான ஸ்டரகச்சர் அன்ட் ஃபிகர் உங்களோடது.. நீங்க அவ்ளோ அழகா இருக்கீங்க..” என்றான்..

சித்தார்த் சுந்தரியை உற்சாகப்படுத்த அப்படி சொல்ல சுந்தருக்கோ அவன் சொன்னதை கேட்டு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது..

ஒரு ஆடை வடிவமைப்பாளராக கூட அவன் சுந்தரியை ரசிப்பது அவனுக்குள் மிகுந்த கோபத்தை உண்டு பண்ணியது.. தன் மனைவியை அப்படி ரசிக்கும் உரிமை தனக்கு மட்டுமே உண்டு என்று எண்ணினான் அவன்.. அதை இன்னொருவன் செய்யும்போது தன்னிச்சையாக அவனுள் இருக்கும் கணவன் என்ற ஜீவன் ஏதோ அவன் அவளை பொத்தி பொத்தி பாதுகாப்பதற்காகவே பிறவி எடுத்தவன் போல ஓடி வந்தான் வெளியே..

ஆனால் அந்த நல்லவன் சித்தார்த்துடன் ஏதும் கைகலப்பில் இறங்குவதற்குள்

“என்ன விளையாடுறீங்களா ரெண்டு பேரும்..? என்னால எல்லாம் அந்த ஃபேஷன் ஷோல கலந்துக்கவே முடியாது.. அவங்க போடுற அந்த ஹை ஹீல்ஸ் ஷூ போட்டு கூட எனக்கு பழக்கம் கிடையாது.. ரெண்டு அடி வச்ச உடனே கீழே விழுந்துருவேன்.. இதுவரைக்கும் நான் பெரிசா பார்ட்டிக்கு எல்லாம் கூட போனது கிடையாது..‌ என்னால முடியாது..”

“சரி.. நீ இப்ப கிளாசுக்கு போ.. இதை பத்தி நம்ம சாயங்காலம் பேசலாம்.. அப்புறம் சுந்தரி நான் உன் கூட கொஞ்சம் தனியா பேசணும்.. வரியா..?” என்று கேட்டான் சுந்தர்..

தனியே வந்தவளிடம் “ஆமா.. அந்த பையன் யாரு.?” என்று சுந்தர் கேட்க சிரித்தவள் “அவர் பையன் இல்லை.. எங்களோட ப்ரொஃபஸர்.. அவரு யூ எஸ் ல மாஸ்டர்ஸ் முடிச்சுட்டு அங்கேயே ஒரு ஃபேஷன் டிசைனிங் கம்பெனி வச்சு நடத்திட்டு இருந்தாராம்..  இந்தியா வந்து இப்போ இந்த காலேஜ்ல வொர்க் பண்ணிட்டு இருக்காரு.. பார்க்க கொஞ்சம் யங்கா இருக்காரு.. அவ்வளவு வயசான மாதிரி தெரியல..” என்று அவள் சொல்ல சுந்தருக்கோ அவள் அப்படி சொன்னதில் கண்களில் பொறாமை தீ பளிச்சிட்டது..

அதை கவனித்த சுந்தரி தனக்கு வந்த சிரிப்பை அடக்கி கொண்டு “என்ன முறைக்கிறீங்க..?” என்று கேட்க “ஏன் நான் மட்டும் என்ன.. ரொம்ப வயசானவன் மாதிரியா தெரியுறேன்..?” என்று கேட்க

 “ம்ம்ம்ம்.. ஆமா இல்ல..? நான் தான் அவசரப்பட்டு ஏமாந்து உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேனா?” என்று யோசிப்பது போல் பாவனை செய்தவளிடம்

“அதான் அவசரப்பட்டு டிவோர்ஸூம் பண்ண போறியே.. அதனால என்ன..? அதுக்கப்புறம் இந்த மாதிரி சின்ன வயசா தெரியறவங்க யாரையாவது பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ..” என்று அவன் சொன்ன வார்த்தை ஈட்டியை போல அவள் நெஞ்சை குத்தி கிழித்தது..

அவள் கண்கள் கலங்க “சரி.. இதை கேட்க தான் என்னை கூப்பிட்டீங்களா..?” என்று கேட்டாள்..

“இல்ல.. அந்த சித்தார்த் என்னவோ உன்னை கேலி கிண்டல் பண்ணவங்க முன்னால நீ சாதிச்சு காட்டணும்ங்கற மாதிரி ஏதோ சொன்னான்.. உன்னை யாரு கிண்டல் செஞ்சது..? என்னன்னு கிண்டல் செஞ்சாங்க?” என்று கேட்டான் சுந்தரியின் முகத்திற்கு மிகவும் நெருக்கமாக முகத்தை வைத்துக்கொண்டு..

“அது ஒன்னும் இல்ல.. பசங்களுக்குள்ள ஏதோ கிண்டல் பண்ணி..” என்று அவள் சமாளிக்க

 “இப்போ உண்மையை சொல்றியா இல்லையா?” என்று அவளை இடைமறித்து கேட்க

“அது இங்க ஃபர்ஸ்ட் டே வந்த அன்னிக்கு..” என்று ஆரம்பித்து முதல் நாள் நடந்ததத்தனையும் சொன்னாள்..

“சரி.. நீ இன்னைக்கு சாயங்காலம் கடையில் இருந்து வீட்டுக்கு போக வேண்டாம்.. நம்ம ரெண்டு பேரும் கொஞ்சம் வெளியே போறோம்..”  என்றவன்

 “அப்புறம் இன்னொரு விஷயம்.. நம்ம ரெண்டு பேருக்கும் டிவோர்ஸ் ஆகற வரைக்கும் நீ என் பொண்டாட்டி.. அடுத்தவன் உன் அழகை ரசிக்கறதை எல்லாம் பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியாது.. அவன் பல்லை பேத்துருவேன்.. இன்னைக்கு மாதிரி இன்னொரு முறை நடந்தா நான் பொறுமையா பார்த்துட்டு இருக்க மாட்டேன்..” என்றவன் அவள் பதிலுக்கு கூட காத்திராமல் அங்கிருந்து சென்று விட்டான்..

அதன் பிறகு மாலை சொன்னது போலவே கடைக்கு வந்து அவளை அழைத்துக் கொண்டு நேரே தன்னுடைய கடைக்கு அவளை அழைத்துச் சென்றான்..

அங்கே சென்று மேற்கத்திய பாணியில் இருந்த நவநாகரீக உடைகள் இருந்த பகுதிக்கு அவளை அழைத்து சென்றான்.. அங்கு அவள் உடல் அளவுக்கு ஏற்றார்போல் நான்கு உடைகளை தேர்வு செய்து அவளிடம் கொடுத்து “இதெல்லாம் டிரையல் ரூமுக்கு போய் போட்டு பாரு..” என்றான்..

“என்னது இதெல்லாம் நான் போடணுமா? இதெல்லாம் எனக்கு போடறதுக்கு ரொம்ப ஒரு மாதிரி இருக்கு.. இதெல்லாம் நான் போட மாட்டேன்” என்று அவள் சொல்ல

 “சுந்தரி.. நீ ஒரு ஃபேஷன் டிசைனர் ஆகணும்னு ட்ரை பண்றே..  இதெல்லாம் போட மாட்டேன்.. ட்ரை பண்ண மாட்டேன்னெல்லாம் சொல்லிட்டு இருந்தா அப்புறம் மத்தவங்களுக்கு எப்படி நீ இந்த மாதிரி டிரஸ்ஸெல்லாம் டிசைன் பண்ண முடியும்? வீட்ல இந்த மாதிரி நிறைய டிரஸ் டிசைன் பண்ணி நீ போட்டு பாத்தாதானே மத்தவங்களுக்கு அதே மாதிரி ட்ரஸ் டிசைன் பண்ண முடியும்.. 24 மணி நேரமும் ஒரு மாடலை உன் கூடயே வச்சுக்க முடியுமா?” என்று கேட்டான்..

அவன் சொல்வதும் சரிதானே என்று யோசித்துக் கொண்டிருந்தவளின் இடையை சுற்றி தன் கையை வளைத்து பிடித்து அவளை தன்னோடு சேர்த்து இறுக்கியவன்  அவள் கன்னத்தில் விரலால் கோலம் இட்டுக்கொண்டே அவளை ரசிக்க தொடங்க அவன் மென்தீண்டலில் சுற்றி இருந்த இடம் பொருள் ஏவல் என அனைத்தையும் மறந்தவள் இமை மூடி நிற்க

“நீ எவ்வளவு சூப்பர் அழகி தெரியுமா..? அப்படியே  செதுக்கி வச்ச சிலை மாதிரி இருக்கடி.. உங்க அக்கா ரதி உன்னை கருப்பா இருக்கேன்னு சொல்லி சொல்லி உன்னை ரொம்ப டீமோட்டிவேட் பண்ணி வச்சிருக்காங்க.. அழகை ரசிக்க தெரியாத கண் தெரியாத கபோதிங்க ரெண்டு பேர் உன்னை பொண்ணு பார்க்க வந்திருக்கானுங்க.. அவனுங்க சொன்னதை நம்பி உன்னை நீயே அண்டர் எஸ்டிமேட் பண்ணி வச்சிருக்கே..  ரோட்ல உன்னை பார்த்து சைட் அடிக்காதவனே யாரும் கிடையாது டி.. உன் கூட வரும்போது அதெல்லாம் பாக்குற எனக்கு தான் தெரியும்.. இன்னிக்கி அந்த யங்க் ப்ரொஃபசர்..” என்று காதருகே உதடுகள் உரச அழுத்தி சொன்னவனை விழி விரித்து பார்த்தாள்..

அவனோடு அவ்வளவு நெருக்கத்தில் இருந்தவளுக்கு பேச்சே வரவில்லை…

“அந்த யங் மேனும் அப்படித்தானே சொன்னான்..  அவன் மட்டும் இல்ல.. உங்க அக்கா புருஷனும்.. நம்ம கார்மெண்ட்ஸ்ல நீ டிரஸ் மாத்த போனப்போ எட்டிப் பார்க்க ட்ரை பண்ணானே.. அவனும் கூட நான் சொல்றதுக்கு சாட்சி.. இது புரியாம இந்த ட்ரஸ்ஸெல்லாம் போட்டா உனக்கு நல்லா இருக்காதுன்னு நீயா நெனச்சிட்டு இருக்க.. நீ போய் இதெல்லாம் போட்டுட்டு வா.. அப்புறம் உனக்கு காட்டுறேன் நீ எவ்ளோ அழகா இருக்கன்னு..” என்று சொல்லி அவளை விடுவித்தவனை படபடக்கும் இதயத்தோடு பார்த்தாள் சுந்தரி..

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!