சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 55 ❤️❤️💞

4.8
(21)

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 55

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

திடீரென சுந்தரின் அணைப்பிலிருந்து விடுபட்ட அதிர்ச்சியில் அவனை பார்த்து அப்படியே சுந்தரியே நின்றிருக்க அவன் இதழோரம் புன்னகையுடன் “போ சுந்தரி.. போய்.. இந்த டிரஸ்ஸை மாத்திட்டு வா..” என்று அவளை அனுப்பி வைத்தான்..

“உன்னால நிச்சயமா என்னை விட்டு போக முடியாது சுந்தரி” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் சுந்தர்..

அவள் ஒவ்வொரு உடையாக மாற்றிக் கொண்டு வர அந்த உடைகள் அவளுக்கு கன கச்சிதமாக பொருந்தி இருந்தது கண்டு அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது..  ஆனால் அவளுடைய தலை முடியை இறுக்கமாக பின்னி இருந்ததாலும் அந்த உடைகளுக்கு ஏற்ற நகைகள் அணியாமல் இருந்ததாலும் அவை தனக்கு அவ்வளவாக எடுக்கவில்லையோ என்று அவளுக்கு தோன்றியது..

“சோ.. இதெல்லாமே உனக்கு ஃபிட்டா இருக்கு இல்ல..? இது எல்லாத்தையுமே உனக்கு வாங்கிக்கலாம்..” என்றான் சுந்தர்..

“என்ன..!? எனக்கு வாங்க போறீங்களா..?” என்று விழியை உருட்டி ஆச்சரியப்பட்டவள்.. “இதெல்லாம் எப்படி நான் போட முடியும்.. சுந்தர் சார்? எனக்கு புடவை கட்டினாதான் நல்லா இருக்கும்.. இதெல்லாம் போட்டா எனக்கும் இதுக்கும் ஏதோ சம்பந்தம் இல்லாத மாதிரி இருக்கு..” புலம்பினாள் அவள்..

“நீ மறுபடியும் மறுபடியும் என்னை சுந்தர் சார்னு கூப்பிடுற இல்ல..? அதுக்காகவே நிச்சயமா நீ அழுதாலும் அடம்பிடிச்சாலும் உனக்கு இதை போட்டுத்தான் விடுவேன்..” என்று சொல்லி அவளை அழைத்துக்கொண்டு அந்த உடைகளை வாங்கிக் கொண்டு கிளம்பினான்..

அவை எல்லாமே மேற்கத்திய பாணியில் இருந்த உடைகளே தவிர அது அவளுடைய அங்கங்களை அளவுக்கதிகமாக ரொம்பவும் வெளி காட்டாமல் அவள் உடல் அழகை இன்னும் மெருகேற்றி காட்டும் விதமாக கனகச்சிதமாக அவள் தோள்கள் மட்டும் தெரியும் படி கால்வரை முழுதாக மூடி இருந்த கவுன், கடல் நீல நிறத்தில் ஒரு கோட் வைத்த ஷர்ட்டோடு ஜீன்ஸ், ஒரு பிங்க் நிற பென்சில் ஸ்கர்ட்டோடு நெட்டட் டாப்ஸூம்  வாங்கி இருந்தான்..  அந்த ஸ்கர்ட் முட்டிக்கு மேலே உடலை இறுக்க பிடித்திருக்குமாறு அமைந்திருந்தது..

அதன் பிறகு அவர்கள் சென்றது ஒரு காலணி கடைக்கு.. அப்போது மணி 8 ஆகி இருந்தது.. என்னதான் வேலையில் இருந்து சுந்தரியை 9 மணிக்கு பதிலாக ஏழு மணிக்கே அவன் அழைத்து வந்திருந்தாலும் அவளுக்கு உடை எடுத்து அதன் பிறகு காலணி கடைக்கு செல்ல நேரமாகி விட கடையை மூடிவிட்டு திரும்பிய அந்த கடைக்காரர் அவனுக்காக மீண்டும் கடையை திறந்தார்..

அங்கே நல்ல உயரமான ஹீல்ஸ் வைத்த காலணிகளை எடுத்தவன்.. ஒவ்வொன்றாய் அவள் காலில் போட்டு பார்த்து அவளை நடக்க சொல்லவும் அவளோ அதை அணிந்து நடக்க தெரியாமல் அவன் மேலேயே தடுமாறி தடுமாறி விழுந்தாள்..

 அவ்வப்போது அவன் தோள்களையும் கைகளையும் பிடிமானத்திற்காக இறுக்க பிடிக்க அவனோ அந்த ஆனந்தத்திலும் அவள் தீண்டல் தந்த குதூகலத்திலும் திக்கு முக்காடி போனான்..

ஒவ்வொரு முறை அவள் விழும்போதும் தாங்கி பிடித்தவன் அவளை பார்த்து “இனிமே எப்பவுமே ஹை ஹீல்ஸ் போட்டுட்டே நட சுந்தரி.. எனக்கு ரொம்ப ஜாலியா இருக்கு..” என்று சொன்னான் சுந்தரியின் காதில் ரகசியமாய்..

வெட்கம் கொண்டவள் அவன் மார்பில் கையை வைத்து பிடித்து தள்ளிட அவன் பின்பக்கமாய் சாய  அதே சமயத்தில் அவள் பிடிமானம் இல்லாமல் அந்த ஹை ஹீல்ஸ் காலணியில் தானே நிற்க முடியாமல் நிலை தடுமாறி எதிர் பக்கமாய் சாய்ந்து விழும்போது அவளை இழுத்து அணைத்தாற்போல் பிடித்தவன்.. தன்னையே நிலைப்படுத்தி நிற்க முடியாமல் அவள் மேலேயே சரிந்து கொண்டு இருவரும் தரையில் விழுந்தார்கள்..

விழுந்த வேகத்தில் இருவரின் உதடுகளும் உரசி கொண்டன.. அதில் அதிர்ந்த சுந்தரி கண்ணை உருட்டி பார்க்க அந்தப் பார்வையில் மொத்தமாய் விழுந்து போனான் சுந்தர்..

ஒருவர் கண்ணை ஒருவர் பார்த்தவர்கள் அப்படியே கண்களுக்குள் முழுகி முத்து எடுத்து கொண்டிருக்க பிறகு சுதாரித்த சுந்தர் அவள் மேல் இருந்து எழுந்து நிற்க அவளும் வெட்கப்பட்டுக் கொண்டே எழுந்து நிற்க முயன்று மறுபடியும் விழப்போனவளை கைபிடித்து நேராக நிறுத்தினான் சுந்தர்..

“எனக்கு இந்த செருப்பு வேண்டாம்.. சுந்தர் சார்.. நான் விழுந்துகிட்டே இருக்கேன்..” என்று சொல்ல

“எனக்கு இதுதான் வேணும்.. நீ விழாம பாத்துக்கறதுக்கு தான் நான் இருக்கேன் இல்ல.. இதையே வாங்கிட்டு போலாம்..” என்று சொல்லி அதே போல் இன்னும் இரண்டு காலணிகளை வாங்கியவன் வீட்டுக்குச் சென்றான்..

வீட்டுக்கு சென்றவுடன் அந்த காலணியை அவள் காலில் மாட்டி கையை பிடித்துக் கொண்டு அவளுக்கு நடக்க பழகி விட்டான்..

ஒரு அரை மணி நேரம் நடை பழகியவள் அதன் பிறகு நன்றாக நடக்க பழகி விட்டாள்.. அந்த உயரமான ஹீல்ஸ் செருப்பில்.

“ஓகே.. இப்ப கான்ஃபிடன்ஸ் வந்துடுச்சா சுந்தரி..? இனிமேல் இந்த மாதிரி செருப்பு வேண்டாம்ன்னு சொல்ல மாட்ட இல்ல..?” என்று கேட்டான்..

“சொல்ல மாட்டேன்.. இப்போ என்னால இதை போட்டுக்கிட்டு ஓட கூட முடியும்..” என்றாள் அவள்..

“என்னை விட்டுட்டு இப்போதைக்கு நீ எங்கேயும் ஓட முடியாது.. சரி இந்த டிரஸ்ஸை போட்டுக்கோ”  அந்த பிங்க் நிற ஸ்கர்ட்டையும் டாப்பையும் கொடுத்தான் அவளிடம்..

“அய்யய்யோ வீட்ல அத்தை மாமால்லாம் இருக்காங்க.. ரதி வேற கிண்டல் பண்ணுவா.. நான் இதெல்லாம் போட மாட்டேன்..”

“இப்போ நீ போட்டுக்கிறியா? இல்ல நான் போட்டு விடட்டுமா..?” என்று கேட்டு அவள் முந்தானையை பிடித்து இழுக்க அவசரமாய் தன் முந்தானையை அவன் கையில் இருந்து விடுவித்தவள் “இல்ல.. நானே போட்டுக்குறேன்.. நீங்க போங்க.. நான் மாத்திட்டு வரேன்..” என்றாள்..

அவன் வெளியே காத்திருக்க அந்த உடையை மாற்றிக் கொண்டு அதற்கேற்ற நகையையும் போட்டுக் கொண்டு வந்தவள் அவ்வளவு அழகாய் இருந்தாள்..

அவள் அருகே சென்றவன் அவள் தோள் வழியாக இரு கைகளையும் கொண்டு போய் அவள் பின்னந்தலையை தன் கையால் அழுத்தி பிடித்தவன் முகத்தின் அருகே அவள் முகம் இருக்க “என்ன செய்யப் போகிறானோ?” என்ற படபடப்பில் அவளுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க படபடக்கும் கண்களோடு அவனை பார்த்திருந்தாள் பெண்ணவள்..

அவள் இதழுக்கு நூலளவு இடைவெளியில் தன் அதரங்களை கொண்டு சென்றவன் வரியோடிய அவள் இதழை கண்களால் ஆழ்ந்து நோக்கி அளவெடுத்தபடி தன் கீழ் உதட்டை கடிக்க அவள் இதயமோ ஒரு நொடி நின்று துடிக்க பஞபடப்பு தாங்காமல் மெல்ல கண்களை மூடி அவன் இதழ் மோதலை சந்திக்க தயாராகி இருந்தாள்..

அவளின் மோக நிலையை கண்டு மெலிதாய் புன்னகைத்தவன் அவள் தலை முடியை முடிந்து வைத்திருந்த கிளிப்பை எடுத்து முடி கற்றைகளை சுதந்திரமாக அவள் தோளில் தவழ விட்டான்.. பிறகு அவளிடம் இருந்து பின்னே தள்ளி அவன் வந்தவுடன் அவள் படபடப்பு குறைய கண்ணை திறந்தவள் ஒரு பெருமூச்சு விட்டு அப்படியே அமைதியடைந்து கண்ணை மூடி திறந்தாள்..

அவள் முகத்தில் ஒரு நிமிடத்தில் ஏற்பட்ட பலவித மாற்றங்களை கண்டவன் இதழில் சிறிதாய் முறுவலித்து “இந்த டிரஸ்ல உன்னை பழைய சுந்தரியா அடையாளம் காட்டுற ஒரே விஷயம் என்னன்னு சொல்லவா? உன் தலை முடி மட்டும்தான்.. கொஞ்சம் உனக்கு ஹேர் ஸ்டைல் மாத்தணும்.. அப்படி மாத்தினா உனக்கும் இங்கே இருக்கிற டாப் மாடல்ஸுக்கும் வித்தியாசமே இருக்காது.. இப்ப என்ன.. இப்படியே உன்னை பார்த்தா ரதி கிண்டல் பண்ணுவா.. அவ்வளவுதானே.. யாருக்கும் தெரியாம நான் உன்னை கூட்டிட்டு போறேன்.. வா போலாம்..” என்று மறுபடியும் அவளை அழைத்துக் கொண்டு போக “எங்க சுந்தர் சார்..” என்று அவள் கேட்க “சைத்ரா வீட்டுக்கு..” என்றான் அவன்..

“சுந்தர் சார் இப்ப டைம் என்ன தெரியுமா மணி 9.. இவ்வளவு லேட்டா அவங்க வீட்டுக்கு போனா என்ன நினைப்பாங்க சுந்தர் சார்..?”

“அதை பத்தி எல்லாம் நீ கவலைப்படாத… அதெல்லாம் அவ ஒன்னும் சொல்ல மாட்டா..” என்று சொல்லி அவளை சைத்ராவின் அழகு நிலையத்திற்கு கூட்டிப் போனான்..

சைத்ரா அந்த நேரத்தில் அவன் சுந்தரியை அழைத்துக் கொண்டு வந்ததை பார்த்து ஆச்சரியமடைந்தாலும் இருவரும் ஒன்றாய் வந்தது அவளுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது… சுந்தரியை அந்த மேற்கத்திய உடையில் பார்த்தவள் அப்படியே ஆச்சரியப்பட்டு போனாள்..

“சுந்தரி.. நீயா இது.. எவ்வளவு அழகா இருக்க இந்த டிரஸ்ல..? உனக்கு புடவை தான் நல்லா இருக்கும்னு நானே நினைச்சேன்.. பரவால்லடா சுந்தர்.. சுந்தரியை அணு அணுவா அளந்து வெச்சிருக்கே.. உன்கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கவே இல்ல டா..”

சுந்தரை அவள் கேலி செய்ய “போதும்.. நீ என்னை ஓட்டினதும் வாயடிச்சதும்.. இந்த ட்ரஸ்க்கு ஏத்த மாதிரி இவளுக்கு ஹேர்ஸ்டைல் பண்ணி விடு..”

அவளிடம் சொல்லிவிட்டு கீழே வந்து அமர்ந்து சைத்ராவின் கணவனோடு பேசிக் கொண்டிருந்தான்..

அடுத்த அரை மணி நேரத்தில் மேலிருந்து அந்த பிங்க் நிற நவநாகரிக உடையில் ஆளே அடையாளம் தெரியாத வகையில் மாடிப்படி இறங்கி வந்து கொண்டிருந்தவளின் அழகை பார்த்தவன் அப்படியே அந்த தேவதையின் அழகில் மயங்கி போனான்..

“ஆசம் சுந்தரி… எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா..? அழகா மட்டும் இல்ல.. ரொம்ப கம்ஃபர்டபிளா இருக்கிற மாதிரி லுக்ல இருக்கே.. தேவதை மாதிரி இருக்க..” என்றான் சுந்தர்..

சைத்ராவை பார்த்து “தேங்க்யூ சைத்ரா..” என்றவன் அவள் கணவன் பக்கம் திரும்பி “உங்களுக்கும் ரொம்ப தேங்க்ஸ் சார்.. இப்படி நைட்ல வந்து சைத்ராவை டிஸ்டர்ப் பண்ணாலும் நீங்க எதுவும் சொல்லாம அவ சுந்தரிக்கு மேக் ஓவர் பண்ண அலவ் பண்ணதுக்கு..” என்று சொல்ல “நோ ப்ராப்ளம்.. யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம்” என்றார் அவர்..

“சுந்தர்.. சுந்தரி இந்த டிரஸ்க்கேத்த மாதிரி நல்லா சிக்னு அழகா தான் இருக்கா.. இத்தனை நாளா இந்த மாதிரி டிரஸ் போடாததுனால அவளுக்கு இது இவ்வளவு அழகா இருக்கும்னு நமக்கு தெரியாமலே இருந்தது..‌ இந்த மாதிரி டிரஸ் போட்டாலும் சுந்தரி மாடர்ன் சுந்தரியா அழகா தான் இருக்கா..” என்றாள் சைத்ரா..

“சரி.. அப்ப நான் கிளம்புறேன்.. எனக்கு ஒரு வேலை இருக்கு.. ரொம்ப டைம் ஆயிடுச்சு..” என்று சொன்னான் சுந்தர்…

“ஓகே..” என்று இருவருக்கும் அவள் விடை கொடுக்க அங்கிருந்து கிளம்பிய சுந்தர் நேரே ஒரு உல்லாச விடுதியை அடைந்து அதன் வாசலில் வண்டியை நிறுத்தினான்..

சுந்தரியை இறங்க சொல்லி அவள் இறங்கியவுடன் அவள் பக்கம் போய் அவள் கைகளை தன் கைகளுக்குள் கோர்த்தவன் அவளை அழைத்துக் கொண்டு அந்த விடுதிக்குள் நுழைந்தான்..

அங்கு ஒரு இரவு நேர பார்ட்டி நடந்து கொண்டு இருந்தது.. பலவிதமான விளக்குகளுடன் அது உயர் தட்டு மக்கள் கலந்து கொள்ளும் பார்ட்டி என்று தோன்றியது.. கணவன் மனைவியாய் பல பேர் வந்து இருந்தனர்..  அங்கு சில பேர் மது அருந்தி கொண்டு இருந்தனர்.. சில சிறு வயது பெண்கள் ஆண்களோடு நடனம் ஆடிக் கொண்டிருந்தனர்..

சுந்தரி முகத்தை சுளிக்க “இதெல்லாம் நீ பழகிக்கணும் சுந்தரி.. நான் உன்னை குடிக்கணும்னு சொல்லல.. நானும் இந்த மாதிரி பார்ட்டி எல்லாம் அப்பப்ப அட்டென்ட் பண்ணாலும் குடிக்க மாட்டேன்.. ஆனா அதுக்காக இங்க வரவே மாட்டேன்னு சொல்றது தப்பு.. இதெல்லாம் நீ பழகிக்கணும்.. நாளைக்கு நீ ஒரு பெரிய ஃபேஷன் டிசைனர் ஆனா இந்த மாதிரி நிறைய பார்ட்டி எல்லாம் அட்டென்ட் பண்ண வேண்டி இருக்கும்.. ஆக்சுவலா இது எங்க கார்மெண்ட்ஸ் அசோசியேஷன்ல இருக்குற ஒருத்தர் அவரோட கம்பெனி ஸ்டார்ட் பண்ணி 20 இயர்ஸ் ஆயிடுச்சுன்னு கொடுக்கிற பார்ட்டி.. அதனால நீ இங்க பயப்பட வேண்டாம்.. இங்க நிறைய ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் அப்புறம் பிஸினஸ்மென் தான் வந்திருப்பாங்க.. நீ ஃப்ரீயா இருக்கலாம்..” என்று சொன்னவன்.. அதன் பிறகு அந்த பார்ட்டி கொடுத்தவர் அங்கே வந்து சுந்தரியிடம் பேச அவரிடம் சுந்தரியை தன் மனைவி என்று அறிமுகப்படுத்தினான்..

அவர் சுந்தரியிடம் “ஹலோ ப்யூட்டிஃபுல் லேடி..” என்று கைநீட்ட சுந்தர் அவளுக்கு கண்ணை காட்டவும் அவளும் அவருடன் பட்டும் படாமல் கை குலுக்கியவள் “ஹலோ..” என்றாள்..

அந்த ஆள் சுந்தரியை பார்த்தபடி இருக்க “மிஸ்டர் சமர்.. நானும் சுந்தரியும் கொஞ்சம் டான்ஸ் பண்ணலாம்னு பார்க்கிறோம்..” என்று சுந்தர் சொல்ல

“ஓ.. குட்.. திஸ் வே ப்ளீஸ்..” என்று சொல்லி அங்கு எல்லோரும் ஆடிக்கொண்டிருந்த இடத்திற்கு கையை காட்டினார் அந்த பெரிய மனிதர்..

சுந்தர் கையை நீட்டவும் அவன் கையை பிடித்தவள் அவனோடு மெதுவாக அந்த நடனமாடும் மேடைக்கு நடந்து சென்றாள்..

அங்கே ஏற்கனவே ஒரு ஜோடி நடனம் ஆடிக் கொண்டிருந்தது.. அவர்கள் வேறு யாரும் இல்லை ஷாலினியும் மாதேஷூம்தான்..

சுந்தர் சுந்தரியின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு போய்விட்டு வந்த பிறகு மறுபடியும் மாதேஷ் ஷாலினியை சந்திக்காமலே இருக்க தன்னை எங்கேயாவது வெளியில் கூட்டி சென்றே ஆக வேண்டும் என்று சொன்ன ஷாலினியை சுந்தர் இது போன்ற இரவு நேர பார்ட்டிகளுக்கு வரமாட்டான் என்ற தைரியத்தில் அங்கே கூட்டி வந்திருந்தான் மாதேஷ்..

சுந்தரியை மேற்கத்திய உடையில் பார்த்த ஷாலினி அவளுக்கு அந்த உடை அவ்வளவு அழகாய் பொருந்தி இருந்ததை பார்த்து பொறாமை கொண்டாள்..

ஏற்கனவே அவளை பார்த்து ஸ்தம்பித்து நின்ற ஷாலினியை அவர்கள் கண்ணில் படுவதற்கு முன் கூட்டத்திற்குள் இழுத்துச் சென்றான் மாதேஷ்..

“ஐயோ.. இவன் எங்க இங்க வந்தான்..? நம்ம விஷயம் தெரிஞ்சுதுன்னா அவ்வளவுதான்..”

மாதேஷ் பதட்டம் நிறைந்த குரலில் சொல்ல “ஏ மாதேஷ்.. இனிமே அவனுக்கு நம்ம விஷயம் தெரிஞ்சா என்ன..? அவன்தான் சுந்தரியை கல்யாணம் பண்ணிக்கிட்டான் இல்ல..?” என்று ஷாலினி கேட்டாள்..

“இல்ல ஷாலினி.. நான்தான் சொல்லி இருக்கேன் இல்ல..? எங்க வீட்டுக்கு நம்ம விஷயம் தெரிய கூடாதுன்னு..”

“சரி.. இப்ப என்ன..? ஒரு ஃப்ரெண்டா நீ என்னை இந்த பார்ட்டிக்கு கூட்டிட்டு வந்தேன்னு சொல்லிட்டு போ.. அதுக்கு எதுக்கு இவ்வளவு பயப்படுற..?” என்று சொல்லிவிட்டு வேண்டும் என்றே சுந்தர் சுந்தரியின் எதிரில் முன் வரிசையில் இருந்த கதிரையில் மாதேஷூடன் போய் கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள் ஷாலினி..

சுந்தருக்கு ஆடத் தெரியாதே.. அவன் எப்படித்தான் சுந்தரியை வைத்துக் கொண்டு ஆடுகிறான்.. இல்லை ஆட முயன்று கீழே விழுகிறான் என்று பார்க்க அவள் அப்

படி வந்து அமர்ந்திருந்தாள்..

ஆனால் அங்கே நடந்ததோ அவள் எதிர்பார்த்ததற்கு அப்படியே மாறாய் இருந்தது..

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!