சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 59 ❤️❤️💞

4.8
(16)

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 59

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

“சுந்தரி.. என் வயித்துல ஒரு குழந்தை வளருது சுந்தரி..” என்று சொன்ன ஷாலினியை விழி விரித்து அதிர்ச்சியுடன் பார்த்தாள் சுந்தரி…

ஷாலினி அப்படி அவளிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்த அறையின் வாயில் அருகே அதை கேட்டு சிலையாக நின்றார் ஷாலினியின் தந்தை ரவிக்குமார்..

மெதுவாக உள்ளே வந்தவர் கண்கள் கோவத்தில் சிவப்பேறியிருந்தது.. ஷாலினி அருகில் வந்தவர் ஓங்கி அவள் கன்னத்திலேயே அறைந்தார்.. அவர் பின்னாலேயே அன்னம்மாவும் வந்திருந்தார்..

“அடிப்பாவி.. உன்னை சுதந்திரமான பொண்ணா வளர்க்கணும்னு ஆசைப்பட்டேன்.. நான் கொடுத்த சுதந்திரத்தை இவ்வளவு கேவலமா யூஸ் பண்ணி இருக்க..? ஒரு பொண்ணுங்கறதை மறந்துட்டு இப்படி வயித்துல புள்ளையோட வந்து நிக்கிறியே.. சும்மா விடமாட்டேன் அந்த சுந்தரை.. எவ்வளவு நல்லவன்னு நினைச்சேன் அவனை.. ஆனா இப்படி ஒரு வேலை பண்ணி இருக்கானே.. ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கையை கெடுத்துருக்கான்.. அவனை..”

ரவிக்குமார் பல்லை கடித்து சொல்ல “அப்பா.. என்னப்பா சொல்றீங்க? சுந்தரா..? அவர் என்னப்பா பண்ணாரு?” என்று புரியாமல் கேட்டாள் சுந்தரி..

“என்னம்மா நீ.. இவ்ளோ இன்னசென்ட்டா இருக்க.. என் பொண்ணு ஷாலினி சுந்தரைத்தான லவ் பண்ணிட்டு இருந்தா.. அவங்க ரெண்டு பேரும் தான் எங்கேஜ்மென்ட் நடக்க போற சந்தோஷத்துல ஒன்னா வெளியில சுத்திக்கிட்டு இருந்தாங்க.. அப்படி இருக்கும்போது அவ வயித்துல குழந்தை வளருதுன்னா வேற யார் காரணமா இருப்பாங்கன்னு நீ நினைக்கிற..? அந்த சுந்தர் இவ வயித்துல குழந்தையையும் கொடுத்துட்டு மனசாட்சியே இல்லாம உனக்கும் தாலி கட்டி ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கையையும் சீரழிச்சிருக்கான்ம்மா.. எவ்ளோ பெரிய அயோக்கியன் அவன்.. அவன் மட்டும் இப்ப என் கையில கிடைச்சான்னா அவ்வளவுதான்..”

அவர் பல்லை கடித்துக் கொண்டு கோபத்தில் கைகளை முறுக்கி உறுமினார்..

“இல்லப்பா இல்ல.. நிச்சயமா என் சுந்தர் இப்படி ஒரு தப்பை பண்ணி இருக்க மாட்டாரு.. ஷாலினி.. என்ன வாயை மூடிட்டு இருக்கீங்க..? சொல்லுங்க.. உங்க வயித்துல வளர்ற குழந்தை சுந்தரோடது இல்லன்னு சொல்லி நீங்களாவது அப்பாக்கு புரிய வைங்க..” என்றாள் சுந்தரி படபடப்பாய்..

ஷாலினியோ குழந்தையின் அப்பா சுந்தர் இல்லை என்று சொன்னால் அதன் அப்பா யார் என்ற கேள்வி வரும்.. அப்போது குழந்தையினுடைய அப்பா மாதேஷ் என்று சொன்னால் தன் தந்தை அங்கேயே தன்னை கொன்று போட்டு விடுவார் என்று பயந்து எதுவுமே சொல்லாமல் அமைதியாய் தலையை குனிந்து கொண்டு அமர்ந்திருந்தாள்..

“என்ன ஷாலினி.. எதுவுமே சொல்ல மாட்டேங்கறீங்க.. உங்க அப்பாக்கு சொல்லி புரிய வைங்க.. சொல்லுங்க ஷாலினி.. யார் இந்த குழந்தையோட அப்பா..?”  திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தாள் சுந்தரி..

“அவ எப்படிமா பதில் சொல்லுவா? வேற யார் இந்த குழந்தைக்கு அப்பாவா இருக்க முடியும்..? என் பொண்ணை ஒருத்தனை காதலிச்சிட்டு இன்னொருத்தன் குழந்தையை வயித்துல வாங்குற அளவுக்கு கேவலமானவளா நான் வளர்க்கல.. அவ வயித்துல வளர்றது நிச்சயமா சுந்தரோட குழந்தை தான்.. எனக்கு அதில எந்த சந்தேகமும் இல்லை.. இப்பவே அந்த சுந்தரை உண்டு இல்லைன்னு பண்றேன்..” என்று சொல்லி அவர் சுந்தரை தேடி கிளம்பவும் சுந்தரி அவர் கையைப் பிடித்து தடுத்தாள்..

“அப்பா ப்ளீஸ்.. ஒரு நிமிஷம் பா.. நில்லுங்க..” என்று சொன்னவள்

ஷாலினி பக்கம் திரும்பி “ஷாலினி.. உங்க வயித்துல வளர்ற குழந்தை மேல சத்தியமா சொல்லுங்க.. இந்த குழந்தைக்கு அப்பா சுந்தரா..?” என்று கேட்டாள் சுந்தரி..

அப்போதும் ஷாலினி அமைதியாக இருக்க அவளுக்கு பொறுமை போய்க்கொண்டிருந்தது..

அப்போது உள்ளே நுழைந்த மருத்துவர் “என்ன இங்க சத்தம்? ப்ளீஸ்.. பேஷன்ட்டை டிஸ்டர்ப் பண்ணாதீங்க.. உங்க சத்தம் வெளியில கேக்குது.. மத்த பேஷன்ட்ஸ் எல்லாருக்கும் டிஸ்டர்பன்ஸா இருக்கும்.. மூணு பேரும் கிளம்புங்க இங்கிருந்து.. அவங்களை நர்ஸ் பாத்துப்பாங்க..” என்று சொல்லவும்

சுந்தரிக்கு திடீரென ஏதோ தோன்ற மருத்துவரிடம் வந்து “டாக்டர் எனக்கு உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்..” என்றாள்..

அவர் என்ன என்பது போல் பார்க்க “வயத்துல இருக்கற குழந்தைக்கு டி என் ஏ டெஸ்ட் எடுக்க முடியுமா..?” என்று அவள் கேட்க

“முடியும்.. ஆனா அந்த குழந்தை கன்சீவ் ஆகி ஒரு 60 நாளைக்கு மேல ஆகியிருக்கணும் அட்லீஸ்ட்..”  என்று சொன்னார் அவர்..

“தேங்க்யூ டாக்டர்.. நான் ஒரு அஞ்சு நிமிஷம் ஷாலினியோட பேசிட்டு இங்கிருந்து வெளியே போயிடுறேன்..” என்று மருத்துவரிடம் சொன்னவள்

ஷாலினியின் பக்கம் திரும்பி “ஷாலினி டாக்டர் சொன்னதை கேட்டே இல்ல.. வயித்துல இருக்குற குழந்தைக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க முடியும்.. உங்க வயத்தில இருக்கிற குழந்தைக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தா தன்னால அதோட அப்பா யாருன்னு தெரிஞ்சிடும்.. தயவு செஞ்சு அந்த எக்ஸ்ட்ரீம்க்கு என்னை போக வைக்காதீங்க.. என் சுந்தர் மேல அனாவசியமா பழி போட்டீங்க நான் சும்மாவே இருக்க மாட்டேன்.. உண்மையை சொல்லுங்க.. இந்த குழந்தையோட அப்பா யாரு..?” என்று சுந்தரி தீர்க்கமாக ஷாலினியை பார்த்து கேட்டாள்..

ஷாலினி நிஜமாகவே பயந்து போனாள்..

எப்படியும் உண்மை வெளிவந்தே தீரும் என்ற நிலைமையில் அதை தானே சொல்லி விடுவது நல்லது என்று நினைத்தவள் தன் தந்தையையும் சுந்தரியையும் மாறி மாறி பயந்தபடி பார்த்து “என் குழந்தைக்கு அப்பா மாதேஷ்.. சுந்தர் இல்லை..” என்று அவள் சொல்ல

ரவிக்குமார் தலையில் இடி இறங்கியது போல் அப்படியே தலையில் கையை வைத்துக் கொண்டு அங்கு இருந்த கதிரையில் உட்கார்ந்து விட்டார்..

மறுபடியும் ஷாலினியிடம் சென்றவர் “அம்மா ஷாலினி.. சுந்தரியை கல்யாணம் பண்ணி இருக்கானேங்கறதுக்காக எதுவும் பொய் சொல்லாதம்மா.. உண்மையை சொல்லு.. இந்த குழந்தையோட அப்பா சுந்தர் தானே.. மாதேஷ் இல்லைல்ல..?” என்று அவர் கேட்க

அப்போது அன்னம்மா ரவிக்குமாரிடம் “ஐயா.. அந்த குழந்தைக்கு அப்பா மாதேஷ் ஐயாதான்யா.. அவரு நீங்க இல்லாதப்போ அடிக்கடி நம்ம வீட்டுக்கு வந்து ஷாலினி அம்மாவோட நெருக்கமா பழகிட்டு இருந்தாரு.. நானே பல முறை இவங்க ரெண்டு பேரும் அவ்வளவு நெருக்கமாக இருக்கிறதை பார்த்து உங்க கிட்ட சொல்லிடலாம்னு நினைச்சு இருக்கேன்.. ஆனா ஷாலினி அம்மா தான் அவங்க விஷயத்துல தலையிட வேணாம்னு என்கிட்ட சொல்லி இருந்தாங்க.. அதனாலதான் நான் இதை பத்தி உங்ககிட்ட சொல்லல.. ஆனா இப்ப அனாவசியமா எந்த தப்பும் செய்யாத அந்த சுந்தர் தம்பி மேல பழி வர்றதை நான் விரும்பல.. அதனாலதான் இப்ப கூட இதை உங்க கிட்ட சொல்றேன்..” என்றார்..

ஷாலினியை தீவிரமாக முறைத்த ரவிக்குமார் “அடிப்பாவி.. அந்த மாதேஷ் பத்தி நான் எவ்வளவு தூரம் படிச்சு படிச்சு சொன்னேன்.. நீ என்னடான்னா அவனோட குடும்பம் நடத்தி புள்ளையை வாங்கிட்டு வந்துருக்கே.. ஐயோ நான் இப்ப என்ன பண்ணுவேன்..? உன் வாழ்க்கையை இப்படி நீயே சீரழிச்சிக்கிட்டியே..”

ஒரு தந்தையாய் கதறி கதறி அழ ஆரம்பித்தார்..

“அப்பா நீங்க கவலைப்படாதீங்க.. அந்த மாதேஷை ஷாலினிக்கு கல்யாணம் பண்ணிக்கணும்னா கல்யாணம் பண்ணி வச்சிடலாம்.. இல்ல ஷாலினி கல்யாணம் வேண்டாம்னு முடிவு பண்ணா அட்லீஸ்ட் இந்த குழந்தைக்கு அப்பான்னு நிச்சயமா ஒத்துக்க வைக்கலாம்..” என்று சொன்ன சுந்தரிக்கு சட்டென்று அப்போது தான் ஞாபகம் வந்தது..

“இந்த மாதேஷ் தானே ராகினி தேவியின் மகளை திருமணம் செய்து கொள்ள போகிறதாக பேசிக் கொண்டிருந்தான்..  ஐயோ கடவுளே இது என்ன புது குழப்பம்..?” என்று யோசித்தவள்

ஷாலினியிடம் “அன்னைக்கு சுந்தர் கல்யாணத்துக்கு அவரோட ஃப்ரெண்ட் மாதேஷ் வந்தாரே.. அந்த மாதேஷ் தானே நீங்க சொல்றது..?”

சந்தேகத்தை உறுதி செய்து கொள்ள கேட்டாள்..

“ஆமா சுந்தரி.. அந்த மாதேஷ் தான்.. அவன் தான் என்னை நம்ப வெச்சு ஏமாத்திட்டான்.. எனக்கு ரெண்டு நாளாவே ஒரே வாமிட்டிங்கா இருந்தது.. உடம்பு வேற சரியில்லை.. நாள் வேற தள்ளி போனதுனால எனக்கு ஏதோ சந்தேகமா இருந்தது.. இதை பத்தி அவனை பாத்து சொல்லணும்னு ஃபோன் பண்ணி ஃபோன் பண்ணி அவன் எடுக்கவே இல்ல.. அப்புறம் நான் நேர்ல வரேன்னு மெசேஜ் பண்ணப்போ வேற வழி இல்லாம ஃபோனை எடுத்தான்.. ஆஃபீஸ் வேலையா ரொம்ப பிசியா இருக்கேன்னு சொன்னதனால நானும் அதை நம்பி பிரக்னன்சி கிட்டு வாங்கி நான் பிரக்னண்டா இருக்கேனான்னு மொதல்ல கன்ஃபார்ம் பண்ணலாம்னு அதை வாங்க கடைக்கு போனேன்..”

ரவிக்குமாரோ அவளையே எரித்து விடுவது போல் முறைத்து பார்த்துக் கொண்டிருந்தார்.. அவர் பார்வையை சந்தித்தவள் சட்டென எச்சில் விழுங்கி தலையை குனிந்த படி மேலும் தொடர்ந்தாள்..

“அப்பதான் அந்த கடை எதுருல இருந்த சூப்பர் மார்க்கெட்ல மாதேஷ் ஒரு பொண்ணோட க்ளோஸா பேசி சிரிச்சுக்கிட்டு வெளியில வர்றதை பார்த்தேன்.. அவன் கிட்ட போயி விஷயத்தை சொல்லலாம்னு போகும்போது அவன் என்னை பாத்துட்டான்..

அந்த பொண்ணை கார்ல உட்கார வச்சுட்டு என்கிட்ட வந்தவன் “ஷாலினி இப்ப எதுவும் பேச வேண்டாம்.. நான் அப்புறம் உன்னோட ஃபோன்ல பேசுறேன்”னு சொல்லி என்னை அவாய்ட் பண்ண பார்த்தான்..

ஆனா நான் அவன்கிட்ட விஷயத்தை சொல்லி எனக்கு பயமா இருக்குன்னு சொன்னப்போ “செக் பண்ணு.. அப்படியே ஏதாவது இருந்தா அந்த குழந்தையை கலைச்சுடு”ன்னு சொல்லிட்டான்..

எனக்கு என் வாழ்க்கையே அஸ்தமிச்ச மாதிரி இருந்தது.. அவனை நம்பி நான் எவ்வளவு ஏமாந்து போயிருக்கேன்னு எனக்கு புரிஞ்சுது..

அந்த பொண்ணு யாருன்னு நான் அவன்கிட்ட கேட்டப்போ “நான் தான் உன்கிட்ட சொன்னேன் இல்ல.. என் பிசினஸ் பில்ட் பண்ண ஒரு வழி கண்டுபிடிச்சு இருக்கேன்னு.. அதுதான் அந்த பொண்ணு”ன்னு என்கிட்டயே சொல்லிட்டு போயிட்டான்..

அவன் என்னை கழட்டி விட்டுட்டு அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறான்ற விஷயம் மட்டும் எனக்கு புரிஞ்சுது.. நான் தான் உலகம்னு சொன்னவன் இப்போ வேற உலகத்தை தேடி போயிட்டான்னு புரிஞ்சுது.. அவன் சொன்னதை கேட்டு வாழ்க்கையே வெறுத்து போய் நான் ரோட்ல நடந்து வந்துட்டு இருந்தப்ப தான் மயக்கம் போட்டு விழுந்தேன்..”

அன்று நடந்தது முழுவதையும் விவரித்தாள் ஷாலினி..

“நீ கவலைப்படாத ஷாலினி.. உன்னை ஏமாத்திட்டு அவன் வேற எந்த பொண்ணையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது.. அதுக்கு நான் விடவும் மாட்டேன்.. ஆக்சுவலா அவன் கல்யாணம் பண்ணிக்க போறதா இருக்குற பொண்ணு நான் வேலை செஞ்சிட்டு இருந்த கடையோட முதலாளியோட பொண்ணு தான்.. அவங்க ரொம்ப நல்லவங்க.. அவங்க கிட்ட போய் விஷயத்தை சொன்னா நிச்சயமா இதுக்கு ஒரு வழி பண்ணுவாங்க.. நீ என்னோட வா..”

மருத்துவமனையில் இருந்த ஓய்வு அறையில் அவள் அணிந்திருந்த லெஹங்காவிலிருந்து சாதாரண உடைக்கு மாறியவள் ஷாலினியையும் ரவிக்குமாரையும் அழைத்துக் கொண்டு ராகினி தேவியை பார்க்க புறப்பட்டாள் சுந்தரி..

தான் வேலை செய்து கொண்டிருந்த கடைக்கு சென்றவள் ராகினி தேவியின் அறையின் கதவை தட்ட “எஸ் கம்மின்” என்றார் அவர்..

ஷாலினியுடனும் ரவிக்குமாருடனும் உள்ளே சென்றாள் சுந்தரி..

“ஓ சுந்தரி.. வா வா.. கங்கிராஜுலேஷன்ஸ்.. அந்த ஃபேஷன் ஷோல நல்லா செமையா கலக்கிட்டியாமே நீ.. அதுல டைட்டில் வின்னராமே.. இப்பதான் உன்னோட ஃபோட்டோஸ் எல்லாம் வனிதா எனக்கு அனுப்பிச்சா.. எவ்ளோ அழகா இருக்க நீ..? சத்தியமா என் கடையில முதல் முதல்ல வேலை கேட்டு வந்த சுந்தரியா அதுன்னு ஆச்சரியமா இருந்தது எனக்கு.. சுந்தர் உன்னை எவ்வளவு அழகா மோல்ட் பண்ணி விட்டிருக்காருன்னு எனக்கு நல்லா புரியுது..” என்று புகழ்ந்து தள்ளினாள் ராகினி தேவி நிலைமை புரியாமல்..

இவ்வளவு சந்தோஷமாக தனக்காக புன்னகைத்துக் கொண்டிருப்பவரிடம் விஷயத்தை சொன்னால் நொறுங்கிப் போய் விடுவாரோ என்று மனத்தில் கலக்கம் கொண்ட சுந்தரி ஆனால் அதை சொல்வதை தவிர வேறு வழி இல்லை என்று உணர்ந்து

“மேடம் அது இருக்கட்டும் மேடம்.. நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயமா பேச வந்தேன்.. இவங்க பேரு ஷாலினி..” என்று ஷாலினியையும் அவள் தந்தை ரவிக்குமாரையும் அறிமுகப்படுத்தினாள்..

“சொல்லு சுந்தரி.. உங்க மூணு பேரு முகத்திலயும் இருக்கிற இறுக்கத்தை பாத்தா விஷயம் ரொம்ப சீரியஸா இருக்கும் போல இருக்கே.. என்ன விஷயம்? இவங்களுக்காக நான் எதாவது செய்யணும்னாலும் செய்ய ரெடியா இருக்கேன்..” என்றார் ராகினி தேவி..

“இவங்களுக்கு உங்களால மட்டும் தான் மேடம் ஹெல்ப் பண்ண முடியும்.. அதனாலதான் நாங்க இங்க வந்து இருக்கோம்.. இந்த பொண்ணு ஒருத்தரை லவ் பண்ணி அவர் குழந்தையை வயித்துல சுமந்துகிட்டு இருக்கா… இவளையும் கல்யாணம் பண்ணிக்காம பணத்துக்காக அவரு இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறதா இவ கிட்ட சொல்லிட்டு இவளை ஏமாத்திட்டு போயிட்டாரு..”‌

  “இது என்ன அநியாயம்.. சுந்தர் மாதிரி சில நல்ல பசங்களும் இருக்காங்க.. இந்த மாதிரி கேடு கெட்ட பசங்களும் இன்னும் இருந்துகிட்டு தான் இருக்காங்க.. அது எப்படி ஒருத்தியோட பழகி ஏமாத்திட்டு இன்னொருத்தியை கல்யாணம் பண்ணிட்டு போக முடியும்? யாரு அந்த பையன்? எனக்கு ஏதாவது தெரிஞ்ச பையனா?”

“ஆமா மேடம்.. அன்னைக்கு சிருஷ்டி மேடமோட மாதேஷ்னு ஒருத்தர் வந்தார் இல்ல..?” என்று அவள் சொல்ல

இப்போது அவர்கள் மூவர் முகத்திலும் இருந்த இறுக்கமும் கலக்கமும் ராகினி தேவியின் முகத்தில் ஒட்டிக்கொண்டது..

“அந்தப் பையன் சிருஷ்டியை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லி இருக்கான்.. இந்த கல்யாணத்தை ஏற்பாடு பண்றது அவங்க அப்பா தான்.. ஐயோ என்னம்மா நீ இப்படி சொல்ற..? இந்த பொண்ணு வாழ்க்கையை கெடுத்துட்டு என் பொண்ணையும் கல்யாணம் பண்ணி அவ வாழ்க்கையும் நாசம் பண்ண கிளம்பி இருக்கானா.. இவனையெல்லாம் சும்மாவே விடக்கூடாது.. வாங்க.. மூணு பேரும் சிருஷ்டியோட அப்பா வீட்டுக்கு போலாம்..” என்று அவர் சொல்லவும் சுந்தரிக்கு குழப்பமாக இருந்தது..

தன் கணவர் என்று சொல்லாமல் சிருஷ்டியின் அப்பா என்று சொன்னது அவளுக்கு ஏதோ நெருடலாய் இருந்தது..

அவள் குழப்பத்தை புரிந்து கொண்ட ராகினிதேவி “என் ஹஸ்பண்டுக்கும் எனக்கும் டிவோர்ஸ் ஆயிடுச்சு.. நாங்க ரெண்டு பேரும் இப்ப தனித்தனியா தான் இருக்கோம்.. சிருஷ்டி அவரோட தான் இருக்கா..” என்றாள்..

தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!