சுந்தர் தன்னுடைய கார்மெண்ட்ஸ்க்கு கிளம்பி சென்றவுடன் சுந்தரிக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை.. தன் அக்கா ரதி கேட்டபடி தனக்கு வேலையும் கிடைத்துவிட்டது. அதே நேரம் பாட்டியையும் பார்த்துக் கொள்ள முடிகிறது.. சமையல் வேலையும் செய்ய முடிகிறது.. என்று எண்ணியவள் சுந்தரை மனதிற்குள்ளேயே நினைத்து நினைத்து அவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருந்தாள்..
“எவ்வளவு அழகா எல்லா பிரச்சினைக்கும் ஒரு தீர்வு கொடுக்கிற மாதிரி ஒரே நிமிஷத்துல எனக்கு வேலை கொடுத்துட்டு போயிட்டாரு.. என்ன நிதானமா யோசிச்சு யார் மனசும் கஷ்டப்படாத மாதிரி அதே சமயம் எல்லோருக்கும் உதவற மாதிரி முடிவெடுக்கறாரு… ம்ம்ம்.. அவரை கட்டிக்க போற மகராசி யாரோ தெரியல.. ரொம்ப குடுத்து வச்சவ…” என்று எண்ணிக் கொண்டாள் அவள்..
பாட்டியின் அறைக்கு சென்ற சுந்தரி என்றைக்கும் இல்லாத திருநாளாய் முகத்தில் மகிழ்ச்சியின் சாயலோடு துள்ளி குதித்துக் கொண்டு ஓடி வருவதை பார்த்தார் பாட்டி..
“என்ன சுந்தரி? ரொம்ப சந்தோஷமா இருக்க போல.. துள்ளிக்கிட்டு ஓடி வர..”
“ஆமாம் பாட்டி.. இனிமே நான் உங்களோடயே இருந்து உங்களுக்கு ஃபுல்லா எல்லா வேலையும் செய்ய போறேன்.. கூடவே எனக்கு புடிச்ச தையல் வேலையும் செய்யப் போறேன்..” என்றாள் குரலில் உற்சாகம் பொங்க..
“அப்படின்னா சுந்தருக்கு சமையல் பண்ண போறதில்லையாம்மா?”
பாட்டி கவலையுடன் கேட்க “இல்லை பாட்டி.. அதுவும் நான் தான் பண்ண போறேன்.. காலையில சமையல் பண்ணுவேன்.. பகலெல்லாம் உங்களை பாத்துக்கிட்டே தையல் வேலையும் பண்ணுவேன்.. எனக்கு இப்ப எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா பாட்டி? இதெல்லா சந்தோஷத்துக்கும் சுந்தர் சார் தான் காரணம்..”
அவனை புகழ்ந்து மாளவில்லை அவளுக்கு..
“ஆமா சுந்தரி.. அந்த புள்ள மாதிரி ஒரு நல்ல பையன் கிடைக்கறதுக்கு கொடுத்து வச்சிருக்கணும்.. அவன் மட்டும் இல்ல.. உன்னை மாதிரி ஒரு நல்ல பொண்ணு கிடைக்கிறதுக்கும் கொடுத்து வச்சிருக்கணும்.. எனக்கு ஒன்னு தோணுது.. சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டே இல்ல..?” என்றார் பாட்டி..
“என்ன விஷயம் பாட்டி? என்கிட்ட சொல்றதுக்கு உங்களுக்கு எதுக்கு இவ்வளவு தயக்கம்?”
“அது இல்ல.. எனக்கு என்னவோ நீங்க ரெண்டு பேரும் வாழ்க்கையில ஒண்ணு சேர்ந்தீங்கன்னா அமோகமா வாழ்வீங்க.. மத்தவங்களையும் நல்லா வாழ வைப்பீங்கன்னு தோணுது..”
பாட்டி சொன்ன வார்த்தைகள் சுந்தரி மனதில் சிறிய சந்தோஷப்பூவை பூக்க வைத்து இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை அவள்..
“ஐயோ பாட்டி.. என்ன சொல்றீங்க? அவர் எவ்வளவு பெரிய ஆளு.. ?! எவ்ளோ பெரிய பிசினஸ்மேன்?! அவர் எங்க.. நான் எங்க.. நான் அவர் வீட்டு வேலைக்காரி.. நானும் அவரும் எப்படி ஒன்னு சேர முடியும்? எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வானத்துக்கும் பூமிக்கும் இருக்கிற வித்தியாசம் இருக்கு.. அதனால இந்த நினைப்பு எல்லாம் விட்டுட்டு.. இந்தாங்க.. இந்த மருந்தை முதல்ல சாப்பிடுங்க.. இது சாப்பிடுறதுக்கு முன்னாடி போட்டுக்க வேண்டிய மருந்து.. அதுக்கப்புறம் ஒரு பத்து நிமிஷம் கழிச்சு நான் உங்களுக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுக்கிறேன்..” என்று சொன்னவள் பாட்டி வாயில் மருந்தை வைத்து தண்ணீரையும் கொடுத்தாள்..
“என்னவோ போ.. நீ எனக்கு மருந்து கொடுக்கிறே சாப்பாடு கொடுக்கிறேன்னு நான் இப்படியே படுத்த படுக்கையா இருக்கேன்.. ஓடியாடி நாள் முழுக்க வேலை செஞ்ச கட்டை இல்ல..? போர் அடிக்குது சுந்தரி..”
பாட்டி அலுத்துக்கொள்ள அப்போது தான் சுந்தரி கவனித்தாள்.. அந்த அறையில் ஒரு தொலைக்காட்சி பெட்டி இருந்தது..
“பாட்டி போர் அடிக்குதுன்னு சொல்றீங்களே.. டிவி பாக்குறீங்களா? நான் டிவி போட்டு விடவா?” என்று கேட்டாள்..
“அதுல மட்டும் என்ன போட போறாங்க? சரி போடு..”
அவள் தொலைக்காட்சி பெட்டியை இயக்கலாம் என்று நினைத்திருந்த போது அழைப்பு மணி சத்தம் கேட்டது..
“பாட்டி.. வாசல்ல யாரோ வந்து இருக்காங்க போல இருக்கு… நான் போய் யாருன்னு பார்க்கிறேன்..” என்று சொன்னவள் வாயிலுக்கு சென்று கதவை திறந்தாள்..
அங்கே ஒரு ஆள் நின்று கொண்டிருந்தான்.. 45 முதல் 50 வயது இருக்கும் போல இருந்தது அவரை பார்த்தால்…
“சொல்லுங்க சார்.. யார் நீங்க..?” என்றாள் அந்த ஆளிடம்..
“என் பெயர் சேகர்.. எங்கம்மா பார்வதி எங்க இருக்காங்க? அவங்களை நான் பார்க்கணும்..” என்றார் அந்த ஆள்..
பாட்டியை பார்க்க அவர் பிள்ளை வந்திருக்கிறார் என்றவுடன் ஒருவேளை பாட்டி விழுந்தது கேட்டு உடல் நலம் சரியில்லாதவரை பாசத்தோடு பார்க்க வந்திருக்கிறாரோ என்று தோன்றியது சுந்தரிக்கு..
“ஓ..நீங்களா? பாட்டி உள்ள தான் இருக்காங்க.. வாங்க..”
அவரை உள்ளே அழைத்தவள் பாட்டியின் அறைக்கு முன்னே நடந்து செல்ல சேகரும் அவளை பின் தொடர்ந்தார்..
பாட்டியின் அறைக்கு சென்றவுடன் பாட்டி படுத்திருப்பதை பார்த்து சேகர் உள்ளே சென்று பாட்டி பக்கத்தில் அமரவும் அவரை பார்த்து பாட்டி “சேகரா.. நீயா..?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்..
“ஆமா.. நான் தான்.. அந்த வீட்டுக்கு போய் இருந்தேன்.. அங்கதான் உன் பக்கத்து வீட்டுல இவங்களோட அக்கா இருக்காங்களே.. அவங்க சொன்னாங்க.. நீ இங்கே இருக்கன்னு.. அதான் இங்கேயே வந்துட்டேன் உன்னை பாக்க..” என்றான் சேகர்..
“ஓ.. அப்படின்னா நீ எனக்கு உடம்பு சரியில்லைன்னு கேள்விப்பட்டு பார்க்க வரலையா? அது தெரியாம வேற விஷயமா அங்க வந்தியா என்னை பாக்க..? என்ன விஷயமா வந்த?”
பாட்டி கேட்கவும் “ஆமா.. அந்த வீட்டு விஷயமா உன்கிட்ட பேசலாம்னு தான் வந்தேன்.. அப்போ நீ இங்க இருக்கன்னு சொன்னதும் இங்க வந்து பேசலாம்னு வந்தேன்..” என்றார் அவர்..
சுந்தரிக்கோ அவரை நினைத்து அப்படியே கோபம் கோபமாக வந்தது..
உடம்பு சரியில்லைன்னு கேட்டதும் பதறி போய் மனசு தாங்காம வந்தேன் என்று ஒரு பேச்சுக்கு கூட சொல்லாமல் வீடு விஷயமாகத்தான் உன்னை பார்க்க வந்தேன் என்று சொல்லும் பிள்ளையை என்னவென்று சொல்வது என்று நினைத்தாள்..
“அம்மா.. அதான் நீ கீழ விழுந்துட்டன்னதும் இங்க கூட்டிட்டு வந்து உன்னை இந்த சுந்தர் நல்லா பாத்துக்குறான் இல்ல..? இவங்களும் உன்னை கண்ணும் கருத்துமா பாத்துக்கிறாங்க.. இப்ப அந்த வீட்ல யாரும் புழங்கல.. அப்புறம் அந்த வீட்டை வெச்சுக்கிட்டு நீ என்ன பண்ண போற? எப்படியும் இதுக்கு மேல உன்னால எழுந்து நடக்க எல்லாம் முடியாது.. இப்படியே போய் தான் சேர போற.. அதுக்கு அந்த வீட்டை என் பேர்ல எழுதி வெச்சனா என் மாமனாருக்கும் என் பொண்டாட்டி பிள்ளைங்களுக்குமாவது உதவும்.. பேசாம நான் நாளைக்கு டாக்குமெண்ட் எல்லாம் எடுத்துட்டு வரேன்.. கையெழுத்து போட்டு அந்த வீட்டை என் பேருக்கு மாத்தி கொடுத்துடு.. ஏன்னா ஒருவேளை திடீர்னு நீ போய் சேர்ந்துட்டேனா அப்புறம் அந்த வீட்டை மாத்தி எழுதறது எனக்கு கஷ்டமாயிடும்..” என்றான் சேகர் மனசாட்சியின் அடையாளம் கூட இல்லாமல்..
“அடச்சே.. என்ன மனுஷன் இவரு.. பெத்த தாய் இந்த நிலையில் இருக்கும்போது கூட சொத்தை எப்படியாவது அவங்ககிட்டேருந்து அபகரிக்கணும்னு நினைக்கிறாரே… என்ன மாதிரி ஜென்மம் இவரு..” மனதிற்குள் புலம்ப ஆரம்பித்தாள் சுந்தரி..
பார்வதி பாட்டியோ “டேய்.. நான் கூட நான் விழுந்ததை கேட்டு என்னை உன் கூட கொண்டு போய் வச்சுக்கலாம்... யார் வீட்டிலயோ எதுக்கு உங்க அம்மா இருக்கணும்னு நினைச்சு இங்க வந்து இருக்கேன்னு நினைச்சேன்.. ஆனா நான் அனாதை மாதிரி யாரோட வீட்லயோ இருந்தா கூட என்னை பத்தி கவலைப்படாம அந்த சொத்தை பிடுங்குறதிலேயே குறியா இருக்கிற இல்ல நீ..? நிச்சயமா உனக்கு அந்த சொத்தை எழுதி தர மாட்டேன் டா.. அது யாருக்கு போகணுமோ அவங்களுக்கு தான் போகும்.. உன்னை மாதிரி ஒரு சுயநலம் பிடிச்சவனுக்கு நிச்சயமா அதை எழுதி கொடுக்க மாட்டேன்.. உங்க அப்பாவும் அதை விரும்ப மாட்டார்.. உன்னை பத்தி தெரிஞ்சு தான் அவர் அந்த சொத்தை உன் பேர்ல எழுதாம என் பேர்ல மாத்தி எழுதி வச்சிட்டு போனாரு.. நீ ஒழுங்கான புள்ளையா இருந்திருந்தா சொத்தை உன் பேருக்கு மாத்தி என்னை பார்த்துக்க சொல்லிட்டு போயிருப்பார்.. எங்களை அனாதையா தவிக்க விட்டுட்டு நீ அந்த வீட்டோட மாப்பிள்ளையா போகும்போதே அவருக்கு தெரிஞ்சுருச்சு போல.. நீ எப்படியும் கடைசி காலத்தில எனக்கு கஞ்சி ஊத்த மாட்டேன்னு.. அதான் வீட்டை என் பேருக்கு மாத்தி எழுதி வச்சிட்டு போயிருக்காரு.. அதனால இப்ப அந்த வீட்டை உன் பேருக்கு நான் மாத்தி எழுதுவேன்னு கனவு கூட காணாத..” தெளிவாய் சொன்னாள் பாட்டி..
அதைக் கேட்டுக் கொண்டிருந்த சேகர் “நீ எல்லாம் ஒரு அம்மாவா? அவங்க அவங்க பிள்ளைக்காக என்னென்னவோ செய்றாங்க.. இந்த சொத்தை எனக்கு கொடுக்காம நீ எடுத்து தலையில தூக்கிட்டு போக போறியா? இப்ப என்ன நீ எழுதி கொடுக்கலைன்னா நாளைக்கு உன் புள்ள நான் தான்னு நீ போய் சேர்ந்தப்புறம் ப்ரூவ் பண்ணுனா தன்னால அந்த சொத்து எனக்கு வந்துரும்.. ஆனா என்ன..? கோர்ட்டு கேஸ்னு அலைய வேண்டாம்.. இப்பவே பத்திரத்தில எழுதி கொடுத்தா எங்க மாமனாருக்கும் இப்ப இருக்குற நெருக்கடி நிலைமைக்கு உதவியா இருக்குமேன்னுதான் கேட்க வந்தேன்.. இப்ப என்ன..இந்த சொத்தை எப்படி வாங்கணும்னு எனக்கு தெரியும்” என்று சொன்னவனை கண்களில் கோவத்தோடு பார்த்தாள் சுந்தரி..
“ஹலோ நீங்க ஏதோ பாட்டியோட புள்ளையாச்சே.. வயசுல என்னோட பெரியவர் ஆச்சேன்னு வாயை மூடிட்டு நீங்க பேசறது எல்லாம் கேட்டுட்டு இருந்தா அப்போலருந்து பாட்டி போய் சேர்ந்துருவாங்க சேர்ந்துருவாங்கன்னு சொல்லிக்கிட்டே இருக்கீங்க.. நீங்க எல்லாம் ஒரு புள்ளையா? வெக்கமா இல்ல உங்களுக்கு? உங்க அம்மாவை பத்தி இப்படி பேசுறதுக்கு.. அவங்களை நல்லா கவனிச்சு பல காலம் வாழ வைக்கலனா கூட பரவால்ல அவங்க போயிடணும்னு நினைக்கிறீங்க.. சீ.. நீங்க என்ன ஈவு இரக்கமே இல்லாத ராட்சசனா..?” கத்தினாள் அவள்..
“ஏய்.. இது எங்க அம்மாவுக்கும் எனக்கும் நடக்கிற எங்க குடும்ப விஷயம்.. என்ன.. இந்த மாதிரி எல்லாம் எங்க அம்மாக்கு சேவை செஞ்சு எங்க அம்மாக்கு சப்போர்ட் பண்ற மாதிரி பேசி அவங்களை ஏமாத்தி இந்த சொத்தை எழுதி வாங்கிடலாம்னு நினைக்கிறியா? கொன்னுடுவேன் உன்னை..” என்றவன் “நீ எப்படி இந்த சொத்தை எனக்கு கிடைக்க விடாம பண்றேன்னு நான் பாக்குறேன்..” என்று தன் அம்மாவை பார்த்து கூறிவிட்டு அதோடு அங்கே நிற்காமல் விடுவிடுவென அப்படியே வீட்டை விட்டு வெளியே சென்றான்..
அவன் பேசுவதை கேட்ட சுந்தரிக்கு பாட்டியை நினைத்து மீண்டும் கவலை தொற்றிக் கொண்டது.. பாட்டிக்கு மறுபடியும் உடல்நிலை சரியில்லாமல் போய் விட போகிறதே என்று கவலையாக பாட்டியை பார்த்தவள் பாட்டி கண்ணில் கண்ணீர் அருவி போல் வழிந்து கொண்டிருப்பதை பார்த்து உளமுடைந்து போனாள்..
“சாரி பாட்டி.. உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னு தெரியல.. ஒரு புள்ளையால தன் அம்மா இப்படி இருக்கும்போது எப்படி இப்படி எல்லாம் பேச முடியுதுன்னு எனக்கு புரியல.. என்ன மனுஷன் அவரு..?” என்று கேட்கவும் “இவனை பெத்ததுக்கு ஒரு அம்மி குழவியை பெத்து போட்டு இருந்தா கூட எனக்கு உதவியா இருந்திருக்கும்மா” என்ற பாட்டி அப்படியே படுத்துக் கொண்டாள் அமைதியாக..
“சரி பாட்டி.. நீங்க கவலைப்படாதீங்க .. அவர் பேசினதெல்லாம் மறந்துருங்க.. நீங்க தான் சொல்லி இருக்கீங்க இல்ல அவரு எப்பவுமே அப்படித்தான்னு.. அப்புறம் எதுக்கு இவ்வளவு கவலை படுறீங்க..? ஆமா.. நீங்க போர் அடிக்குதுன்னு சொன்னீங்க இல்ல.. டிவி பார்க்கலாமா?” என்று கேட்டாள் சுந்தரி பேச்சை மாற்றுவதற்காக..
“சரி போடுமா..” என்று பாட்டி சொல்லவும் தொலைக்காட்சி பெட்டியை இயக்கினாள்..
தொலைக்காட்சி பெட்டியை உயிர்பித்த உடனேயே அதில் சுந்தரின் முகம் வர இருவருமே விழி விரித்து ஆச்சரியத்துக்குள்ளானார்கள்…
“அட நம்ம சுந்தரு.. இவன் என்னம்மா இவன் வீட்டு டிவியில அவன் முகமே தெரியிற மாதிரி வச்சுட்டு போயிருக்கானா?”
பாட்டி கேட்கவும் அதை கேட்டு சிரித்தாள் சுந்தரி..
“இல்ல பாட்டி.. இது ஏதோ வளர்ந்து வரும் தொழிலதிபர்னு ஒரு ப்ரோக்ராம்.. அவர் கார்மெண்ட்ஸ் நடத்துறார் இல்ல..? அதனால அவரை பேட்டி எடுக்கிறாங்கன்னு நினைக்கிறேன்”
“ஓ.. அப்படியா..? பேட்டி எடுக்க வேண்டியதுதாம்மா.. அந்த புள்ள உழைக்கிற உழைப்புக்கு இதெல்லாம் எப்பவோ நடந்து இருக்கணும்.. உழைப்பாளிம்மா அந்த புள்ள..”
“எனக்கு அதனாலதான் அந்த புள்ளையையே ரொம்ப பிடிக்கும்.. அதே மாதிரி நீயும் நல்ல உழைப்பாளி.. எந்நேரமும் உங்க வீட்டிலயும் சரி.. அங்க கார்மெண்ட்ஸ் போகும்போது சரி.. அதுக்கப்புறம் வீட்டுக்கு வந்த அப்புறமும் நீ உழைச்சிக்கிட்டே இருப்ப.. அதனால தான் உங்க ரெண்டு பேரையுமே எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதனாலதான் நான் உன்கிட்ட சொன்னேன் நீங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்தா அவ்வளவு நல்லா இருக்கும்னு..”
பாட்டி மறுபடியும் சொல்லவும் சுந்தரிக்கு மனதில் ஒரு சிறு ஆசை துளிர் விட்டது..
ஏற்கனவே சுந்தரின் மேல் வந்திருந்த மதிப்பு மேலும் அதிகமாகி அவன் பால் ஒரு ஈர்ப்பு உண்டானது.. அவள் பாட்டி சொல்வது மட்டும் நிஜமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்.. என்று எண்ணத் தொடங்கினாள்..
ஆனால் அதே சமயம் தொலைக்காட்சி பெட்டியில் சுந்தரை பார்த்தவள் அந்தக் கருப்பழகனின் முகத்திலேயே அவள் பார்வை பதிந்து இருக்க அப்படியே அவனை விழுங்கி விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்..
பேட்டி தொடங்கியது..
அந்தப் பெண் நிருபர் “வணக்கம் சார்.. இன்னிக்கு நீங்க ரொம்ப பெரிய தொழில் அதிபர்.. ஆனா நீங்க எங்க பொறந்தீங்க? உங்க பூர்விகம் என்ன? இது பத்தி தெரிஞ்சுக்கணும்னு நாங்க ஆசைப்படுறோம்.. உங்களை பத்தி சொல்ல முடியுமா?” என்று கேட்டாள்..
சுந்தரிக்கும் அவனை அறிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கவே அவன் என்ன சொல்லப் போகிறான் என்று அவன் முகத்தையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்..
தொடரும்…
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை
தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து