தங்கைகளை அவரவர் கிளாசுக்கு தனித் தனியாக ஏற்றிக் கொண்டு போய் விட்டு, மதிய உணவு தயாரிக்க காய்கறிகள் வாங்கிக் கொண்டு வியர்த்து விறுவிறுக்க வீடு வந்த தாமரையை, வாசலில் நின்றிருந்த சிவப்பு நிற ஆடி கார் தான் வரவேற்றது.
ஒற்றைப் பார்வையிலேயே அது தன் கணவனுடையது எனப் புரிந்து கொண்டவளுக்கு, இதயம் படபடக்கும் ஓசை அவளுக்கே கேட்பது போல் இருந்தது.
இங்கே எதுக்கு இப்போ வந்தாரு, தன்னோட முன்னாள் காதலியைப் பார்க்கப் போக வேண்டியது தானே என மனதினுள் சொல்லிக் கொண்டாலும், விழிகள் மட்டும் வேகமாகத் தன்னவனைத் தேடத் தொடங்கியது.
வீட்டு வாசலோடு போடப் பட்டிருந்த மரக்குற்றியில் அமர்ந்து தன் அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தவனைப் பார்க்க அவளுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.
அவன் இருந்த தோரணையைப் பார்த்தால், வந்து நேரம் ஆகி விட்டது போலத் தான் இருந்தது. தமிழ் வேறு யாரையும் தேடிக் கொண்டு வந்திருந்தால், அவர்கள் வீடு பூட்டியிருந்தால் அரை நொடி கூடத் தாமதிக்க மாட்டான். ஆனால் தாமரைக்காக மட்டும் அரை மணி நேரம் கூடக் காத்திருப்பான்.
பார்ப்பவர்கள் அவள் மீது அவனுக்கு அத்தனை காதல் என்று சொல்வார்கள், பாவம் அவளுக்கு மட்டும் தான் தெரியும் தனக்காகக் காத்திருந்து தன்னைத் திட்டி விட்டுச் சென்றால் தான் அவனுக்கு தூக்கமே வரும் என்பது, இது அவளது சிறு வயதில் இருந்தே நடந்து வரும் ஒரு விடயம்.
வேகமாக ஓடிச் சென்று தாமரை வெளி வாசல் கதவைத் திறக்க, கொலுசுச் சத்தத்தில் தலையை நிமிர்த்தி பார்த்தவன் மனைவியைக் கண்டதும் அவளையே பார்த்துக் கொண்டு அவளருகே வந்தான், இப்போது என்ன சொல்லப் போகிறானோ என்பது போல முகத்தில் அரும்பிய வியர்வையை புறங்கையால் துடைத்துக் கொண்டு அவனையே பார்த்திருந்தாள் அவள்.
மிகவும் நெருக்கமாக அவளருகில் வந்தவனோ, அவளது சேலைத் தலைப்பால் அவளது முகத்தில் அரும்பியிருந்த வியர்வையை மெல்லத் துடைத்து விட்டான்.
துடைக்கும் போது அவன் விரல் பட்டதும் தன் கன்னம் சூடாவதை உணர்ந்தவள், பதறிக் கொண்டு அவனிடம் இருந்து விலகி உள்ளே போக எத்தனிக்க, அவனோ அவளது கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான்.
“இப்போ எதுக்குடி.. இப்புடிப் பதறிட்டு ஓடுறே.. வீட்டுக்கு வந்தவனை உள்ள வாங்கனு கூப்பிட மாட்டியோ..”
“உள்ள வாங்க..”
“நீ கூப்பிட்டு தான் நான் உள்ள வரணுமா.. எங்களுக்கு வரத் தெரியும்.. நீ எதுக்கு இப்புடி வியர்த்து வடியிறே.. சைக்கிள்ளயா போனே..”
“ம்ம்..”
“ஏன்டி.. ஸ்கூட்டிக்கு என்ன ஆச்சு.. எங்கையாச்சும் விழுத்தி எடுத்திட்டியோ..”
“ம்ம்..”
“என்னது.. அடிகிடி ஏதும் பட்டிச்சா..”
“பெரிசா இல்லை.. ஆனாலும் கொஞ்சம் கிராச் ஆயிட்டுது.. ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது.. அதான் திருத்த குடுத்து இருக்கேன்..”
“நான் கேட்டது உனக்கு ஏதாவது அடி பட்டிச்சானு..”
என தமிழ் ஆராய்ச்சி பார்வையோடு கேட்க,
“இல்லையே..”
என நெளிந்தவளை அவள் பொய் சொல்கிறாள் என நொடியில் கண்டு கொண்டான் அவன்.
“சரி உள்ள போய் பேசலாம் வா..”
என்று கொண்டு அவளது கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போனவன், வீட்டினுள் நுழைந்ததும் அவளைக் கதவில் சாய்த்து
“சொல்லு.. எங்க அடி பட்டிச்சு ஹாஸ்பிடல் போனியா..”
எனக் குறுக்கு விசாரணை செய்ய, அவன் அழுத்திப் பிடித்த கைப் பக்கம் வலிக்கவே, அவள் வலியில் முகம் சுளிக்க, அவளது கையில் வீங்கியிருந்த காயத்தைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டான் தமிழ்.
“ஏன்டி.. இப்புடி வீங்கிச் சிவந்து இருக்கே.. அதுக்கு மருந்து ஏதும் பூசாமல் இப்புடிப் பத்திரமாப் பொத்தி வைச்சிக்கியே அறிவு இருக்கா உனக்கு..”
என்று கொண்டு மெல்ல அவளது கையைப் பிடிக்க, அவன் கையை அழுத்தி விடுவானோ என்ற பயத்தில் கையை வேகமாக இழுத்தவளை முறைத்தவன், வேகமாக வெளியே போனான்.
கோபித்துக் கொண்டு போகிறானோ எனப் பயந்தவளோ
“என்னங்க..”
என்று கொண்டு அவன் பின்னாலேயே ஓட, தன் காரினுள் இருந்த முதலுதவிப் பெட்டியை எடுத்துக் கொண்டு திரும்பியவன்
“என்னங்க..”
என்று புருவங்களை உயர்த்த, சிறு சிரிப்போடு அவனைத் தொடர்ந்தாள் தாமரை.
ஒரு களிம்பு ஒன்றை எடுத்து அவளது கையில் தேய்க்கப் போனவனது கையை அவள் வேகமாகப் பிடித்துக் கொண்டு அவனைப் பயந்த பார்வை பார்த்தாள்.
“இப்ப என்னடி..”
“நானே பூசிக்கிறனே..”
“ஏன்.. நான் பூசினா என்ன..”
“நீங்கள் அழுத்திப் பூசுவீங்க.. அது வலிக்கும்..”
“ஓரளவாவது அழுத்தமா பூசினாத் தானே வீக்கம் சரியாகும்..”
“நீங்கள் நல்லா அழுத்தீடுவீங்க..”
“என்னடி நீ.. இந்தச் சின்ன வலியையே தாங்கிக்க இந்தப் பாடுபடுறாய்.. நாளைக்கு பின்னே என்னோட குழந்தையைப் பெத்துக்கும் போது அந்த வலியை எப்புடித் தாங்கப் போறாய்..”
என தன் போக்கில் சொல்லிக் கொண்டே போனவன், அவள் சட்டென்று தலையைக் கவிழ்த்துக் கொள்ளவும்,
“என்னடி..”
என்பது போல அவளது கன்னம் பிடித்து தன் முகம் பார்க்க வைத்தான் அவன்.
அவளது கன்னம் தொட்ட அவன் கை லேசான சூட்டை உணரவும்
“ஏய்.. உன்னோட கன்னம் ஏன் இப்புடிச் சூடா இருக்கு.. காயம் பட்டதில காய்ச்சல் ஏதும் வந்திச்சோ..”
என்று கொண்டு தன் புறங்கையால் அவளது கன்னத்தைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தவனின், கைகளை மெல்ல விலக்கியவள்
“இருங்க.. உங்களுக்கு டீ போட்டு எடுத்திட்டு வர்ரேன்..”
என்றவள் அவனது பதிலுக்கு காத்திருக்காமல் எழுந்து உள்ளே ஓடி விட்டாள்.
தமிழுக்கு அக்கறையைக் கூட அன்பாகவோ மென்மையாகவோ வெளிப் படுத்த தெரியாது, எல்லாம் அதட்டல் உருட்டல் தான், அவனது அதட்டல் உருட்டலில் உள்ள அன்பைக் கூட அணுஅணுவாக ரசிக்கும் பொறுமை தாமரைக்கு மட்டும் தான் இருந்தது.
தமிழும் கூட தாமரையிடம் தான் உரிமையோடு அதட்டுவான், இருவருக்கும் இடையில் கடவுள் எப்போதே ஒரு பந்தத்தை போட்டு வைத்ததால் தான், இந்த ஜோடிகள் திருமணத்தில் இணைந்து கொண்டன.
சமையலறையினுள் புகுந்து கொண்டவள், தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு கணவனுக்காக தேநீர் தயாரிக்கத் தொடங்க, இவள் வரவேற்பறையில் விட்டு வந்த அலைபேசி மெல்லச் சிணுங்கி தன் அழைப்பை உணர்த்த, அதில் தெரிந்த பெயரைப் பார்த்ததும் தமிழ் வேகமாக சமையலறையினுள் புகுந்தான். அவனுக்கு பிடிக்காத ஒருவனின் நம்பர் தான் அது.
“இவன் கூட எல்லாம் நீ இன்னமுமா பேசுறாய்..”
“அவரு கூட பேசலை.. அவங்க அம்மா கூட தான் பேசுறேன்..”
“அவரா.. என்னடி அவனுக்கு எல்லாம் மரியாதை கொடுக்கிறாய்..”
“மரியாதையை யாருக்கு வேணாலும் கொடுக்கலாம் தானே..”
“கொடுக்கலாம் தான்.. ஆனா இவனுக்கு கொடுக்காதே..”
“ஏன்..”
“ஏன்னா.. எனக்கு பிடிக்கலை..”
“ஓ..”
“என்ன ஓ..”
“உங்களுக்கு பிடிக்கலைனா இனிக் கொடுக்கலை..”
என்று கொண்டு தாமரை தன் வேலையைப் பார்க்கத் திரும்ப, வேகமாக அவளைப் பிடித்துத் தன் பக்கம் திருப்பினான் தமிழ்.
அவன் திருப்பிய வேகத்தில் வீங்கியிருந்த கை மீண்டும் அழுத்தப் பட,
“வலிக்குது அத்தான்..”
என்று கொண்டு கையைப் பிடித்தவளை, இமைக்க மறந்து பார்த்துக் கொண்டு நின்று விட்டான் தமிழரசன்.
தாமரையின் அத்தான் என்ற அழைப்பு தமிழுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவன் ஒரு போதும் அதை வெளிக்காட்டிக் கொள்வதே இல்லை.
தன்னை மறந்து தாமரை அத்தான் என்று அழைத்தால், அத்தானும் பொத்தானும் என்று எரிந்து விழுவான், அதைக் கேட்டு அவள் அத்தான் என்று சொல்லாமல் விலகிப் போனால் அதற்கும் எரிந்து விழுவான்.
இப்போதும் அவள் தன்னை மறந்து அத்தான் என்றதும் அவனுக்குள் ஏதோ ஒரு மாற்றம், மூச்சு முட்டுவது போல ஒரு உணர்வும் கூட ஏற்பட்டது, சட்டென்று அவளை விட்டு விலகியவன், அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டு கடற்கரைக்கு வந்து விட்டான்.
தன்னை விட்டுப் போனவனையே பார்த்தபடி தாமரை அங்கு நெடு நேரமாக நின்றிருந்தாள்.