தேடித் தேடி தீர்ப்போமா

4.8
(12)

அத்தியாயம் 17

தன்னுடைய ட்ராயிங் காதலி விழி லலிதா இல்லை மீனா என்று கண்டறிந்த விஹானோ லலிதாவிடம் அவளை திருமணம் செய்ய முடியாது என்று கூறியவன் உடனே மீனுவை தேடி செல்வதாக கூறியவன் அந்த அறை எண் கதவைத் திறந்து கொண்டு வெளியே வர மொத்த குடும்பமும் இவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தன.
இவன் உள்ளே லலிதாவிடம் பேசியது வெளியில் இருந்த அனைவருக்கும் கேட்டது.
கேட்டவர்களுக்கோ எதுவும் புரியாது அவனை கேள்வியாக பார்க்க உடனே விக்ரம் அவனின் அருகே வந்தவர்,
“விஹான் என்னப்பா நீ உள்ள ஏதேதோ பேசிக்கிட்டு இருந்த எங்களுக்கு எதுவும் புரியல என்ன நடக்குது இங்க” என்று கேட்க கண்களில் தேங்கிய கண்ணீரோடு தந்தையை பார்த்தவன் அவரை இறுக அணைத்துக் கொண்டு,
“ டாட் நான் காதலிச்ச விழி லாலி இல்ல டேட் அது மீனா அந்த பைத்தியக்காரி அவ தான் என்னோட விழி என்னை சுத்தி சுத்தி வந்திருக்கா ஆனா என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல நானும் கண்ணால் கண்டதெல்லாம் மெய்ங்குற மாதிரி நான் பார்த்ததை வச்சு என் விழி லாலி தான்னு நினைச்சுட்டேன்” என்று அவன் சொல்ல உடனே விக்ரம்,
“ என்ன சொல்ற விஹான் மீனா தான் விழின்னு எப்படி உனக்கு தெரிய வந்தது கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லு”
என்று கேட்க விஹானோ நேற்று இரவு மீனாவின் அறைக்குச் சென்றது முதல் அவன் கண்டறிந்த அனைத்தையும் கூறினான்.
“ என்ன சின்ன வயசுல இருந்து அவ விரும்பி இருக்காப்பா என்னோட பத்து வயசுல நான் எப்படி இருந்தேனோ அப்படியே வரைந்து வைத்திருக்காப்பா. என்ன அவ பார்த்தது கூட கிடையாது. என்கிட்ட பேசுனது கிடையாது பழகினது கிடையாது. ஏன் இப்ப கூட நான் இங்க வந்ததுல இருந்து அவ என்கிட்ட சாரி மன்னிச்சிடுங்க இந்த ரெண்டு வார்த்தை தான் பேசி இருக்கா. அப்போ எல்லாம் அவளை பார்க்கும் போது எனக்கு கோபமும் ஒரு அலட்சியமும் தான் வரும் ஆனா அவளோட முகத்துல ஏதோ ஒரு எதிர்பார்ப்பு இருந்துகிட்டே இருக்கும் ஆனா இந்த மரமண்டைக்குத் தான் அப்போ எதுவுமே புரியல” என்று அவன் ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டிருக்க மொத்த குடும்பமும் செய்வதறியாது திகைத்து நின்றன.
அறையின் உள்ளே இருந்த லல்லுவோ விஹானின் மேல் அவளுக்கு அளவு கடந்த கோபம் வந்தது.
‘ நானா இவனிடம் காதலிக்கிறேன் என்றேன். நானா இவனிடம் கல்யாணம் செய்து கொள்ள வற்புறுத்தினேன். இவனாக வந்தான். காதலிக்கிறேன் என்றான். கல்யாணம் என்றான். இப்பொழுது நான் விரும்பிய பெண் நீயில்லை உன் அக்கா என்று சர்வ சாதாரணமாக என்னிடம் சொல்லிவிட்டு செல்கிறான். இதற்கு எதற்கு என் மனதில் ஆசையை வளர்க்க வேண்டும் என்னை பார்த்தால் இவனுக்கு எப்படி தெரிகிறது’ என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கோ ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
அதே வேகத்தில் அறையை விட்டு வெளியே வந்தவள் அவன் தன் தந்தையிடம் கண்ணீர் வழிய சொல்லியதைக் கேட்டு அமைதியாக நின்றாள்.
பாட்டி அவனின் முன்னே வந்தவர்,
“விஹான் இங்க பாருப்பா மீனுக்கு நீன்னா அவ்வளவு பிடிக்கும்.
சித்ரா இங்க இருந்து போனதுக்கு அப்புறம் மறுபடியும் என்கிட்ட பேசுனதுல இருந்து நான் எப்பெல்லாம் அவகிட்ட போன் பேசுறேனோ அப்ப எல்லாம் மீனுவும் என்கூட தான் இருப்பா. சித்ரா உன்ன பத்தி என்கிட்ட சொல்லும்போதெல்லாம் அவளும் கேட்டுகிட்டே இருப்பா. எனக்கு ஒரு ஆசை இருந்தது உனக்கும் மீனுவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு அதை அவகிட்ட நான் அப்பவே சொல்லி இருந்தேன் அப்பத்துல இருந்து அவ உன்ன விரும்ப ஆரம்பிச்சிட்டா நீ எப்போ இங்க ஊருக்கு வருவேன்னு அவளோட எதிர்பார்ப்பு அதிகமாக இருந்துச்சு. ஆனா பாவி மகளுக்கு உன் மேல ஆசை வைக்க தெரிஞ்சதே தவிர அதை உன்கிட்ட சொல்ல தெரியல. சரி வீட்ல பெரியவங்களா பார்த்து பேசலாம் அப்படின்னு தான் அன்னைக்கு கல்யாணப் பேச்ச ஆரம்பிச்சோம்.
நாங்க ஆரம்பிச்சது மீனுவுக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு தான் இடையில உங்க அப்பா நீயும் லல்லுவும் விரும்புறதா சொல்லவும் எங்களுக்கு என்ன செய்யறதுன்னு தெரியல. அந்த நிமிஷம் மீனாவோட முகமே மாறி போச்சு அதுக்கப்புறம் நான் அவளை பார்க்க போனேன் ரொம்ப நேரம் அழுதுகிட்டே இருந்தா. நான் சொன்னேன் இப்ப கூட ஒன்னும் கெட்டு போகல நான் போய் விஹான் கிட்ட பேசுறேன் அப்படின்னு சொன்னேன். ஆனா அவ என்ன வேண்டாம்ன்னு தடுத்துட்ட.
என்னோட காதல் ஒரு தலைக் காதல் பாட்டிமா அவங்க ரெண்டு பேரும் விரும்புறாங்க அவங்களோட காதல பிரிச்சிட்டு என்னோட காதலை சேர்த்து வைக்கிறதுல எந்த ஒரு அர்த்தமும் இல்லைன்னு சொன்னா. அப்பறம் இந்த விஷயம் யாருக்கும் தெரிய கூடாதுன்னு என்கிட்ட சத்தியமும் வாங்கிக்கிட்டா” என்று பாட்டி ஒவ்வொன்றாக சொல்ல விஹானின் இதயமோ சுக்கு நூறாக உடைந்தது.
அப்பொழுது அந்த வீட்டு வேலையாள் ஒருவர்,
“ ஐயா விஹான் தம்பிக்கு கொரியர் வந்திருக்கு” என்று சொல்ல அங்கு அனைவரின் முன்னால் மண்டியிட்டு அமர்ந்து முகத்தை தன் இரு கைகளாலும் மூடிக்கொண்டிருந்த விஹானின் காதில் இந்த வார்த்தைகள் விழ வில்லில் இருந்து பாய்ந்த அம்பை போல வெடுக்கென தலையை அவரை நோக்கி திருப்பியவன் எழுந்து வாசலுக்கு ஓடிச் சென்றான்.
அவனைத் தொடர்ந்து மொத்த குடும்பமும் அங்கு வெளியே வர அந்த கொரியர் காரரோ தன் கையில் உள்ள கொரியரை அவனிடம் கொடுத்தார்.
தன் கையில் வாங்கிய அந்த கொரியரை வேக வேகமாக பிரிக்க ஆரம்பிக்கப் போனவனை தடுத்தது அந்த கொரியர் காரரின் வார்த்தைகள்.
“ தம்பி ஒரு நிமிஷம் ஒரு சின்ன தப்பு நடந்து போச்சு” என்று சொல்ல அவனோ புருவங்கள் இடுங்க அவரை கேள்வியாக பார்த்தான்.
“ இல்ல தம்பி இந்த கொரியர் வந்து ரெண்டு வாரம் ஆகுது நான் வந்த மறுநாளே இங்க வந்து பார்த்தேன் ஆனா நீங்க வீட்ல இல்ல தம்பி சரி நாளைக்கு கொண்டு வரலாம் அப்படின்னு நான் திரும்ப போயிட்டேன் ஆனால் மறுநாள் இந்த கொரியர நான் தேடும் போது ஆபீஸ்ல எங்கேயோ மிஸ் ஆகி போச்சு தம்பி அதுக்கு பிறகு எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல நானும் அப்படியே மறந்துட்டேன் தம்பி இன்னைக்கு காலையில தான் எங்க மேனேஜர் இதை எடுத்துக் கொண்டு வந்து என்கிட்ட கொடுத்தாரு எனக்கு எந்த வேலை இருந்தாலும் முதல்ல இந்த கொரியரை டெலிவரி பண்ண சொல்லி அவர் சொன்னாரு சாரி தம்பி” என்று சொன்னார் கொரியர்.
அவனுக்கோ தானே அவசரத்தில் பெரிய தவறை செய்து விட்டோம் இதில் இவரை என்ன சொல்வது எல்லாம் என்னுடைய நேரம் இதில் யாரை குற்றம் சொல்வது லேட்டாக கொண்டு வந்த இந்த கொரியரை குற்றம் சொல்வதா இல்லை அவசரப்பட்ட தன்னுடைய மடத்தனத்தை குற்றம் சொல்வதா என்று நினைத்தவன் அவரிடம் சிறு தலை அசைப்போடு ஒன்றும் கூறாமல் அவரை வழி அனுப்பி வைத்துவிட்டு வேக வேகமாக மீனா அனுப்பிய கொரியரை திறந்து பார்த்தான்.
பார்த்தவனுடைய விழிகளிலோ நின்ற கண்ணீர் மீண்டும் பெருக ஆரம்பித்தன.
அதிலிருந்த ஓவியம் ஒரு கடற்கரை ஓரத்தில் விஹான் வெள்ளை உடை அணிந்து கடலை பார்த்தவாறு நிற்பது போன்றும் அவனுக்கு பின்னே மீனா ஒரு சிகப்பு நிற சேரியில் அவனுடைய இடது கையை அவளுடைய வலது கையால் தொடுவது போலவும் இருந்தது.
அதற்கு கீழே வழக்கமாக இரண்டு வரியில் கவிதை எழுதுபவள் இன்று ஒரு வாக்கியமாகவே எழுதி இருந்தாள்.
“ அத்தான் உங்ககிட்ட என்னோட காதல சொல்றதுக்கு எவ்வளவோ முயற்சி பண்ணி பாக்குறேன் ஆனா உங்க முன்னாடி என்னால பேசவே முடியல வார்த்தை தடுமாறுது. உங்க கண்ணை பார்த்தா என்னால பேச முடியல அதனால இன்னைக்கு இந்த ஓவியத்தின் மூலமாக என்னோட காதல உங்களுக்கு சொல்லலாம்னு முடிவு பண்ணிட்டேன். எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து உங்கள மனசார விரும்புறேன் எப்ப உங்கள பார்ப்போம்னு ஆர்வமா இருக்கும் இத்தனை வருஷம் கழிச்சு நீங்க நேர்ல வந்ததும் எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா நானும் எவ்வளவோ ஆசைப்பட்டேன் உங்ககிட்ட என் மனசுல இருக்குற காதலை புரிய வைக்கணும்னு பட் அதுக்கு வாய்ப்பே இல்லை. என்னோட காதல ஏத்துப்பீங்களா ?
வரமாய் உங்களுடைய காதலை எனக்கு பரிசளிப்பீங்களா இப்படிக்கு விழி” என்று முடித்திருந்தாள்.
அவனுடைய கண்களில் இருந்து சொட்டு சொட்டாக கண்ணீர் வடிந்தன.
அந்த ஓவியத்தை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன் அப்படியே கீழே மடங்கி அமர்ந்து வாய்விட்டு அழத் தொடங்கினான்.
“ ஐயோ ஐயோ என்னோட பொக்கிஷத்தை தொலைச்சிட்டேனே” என்று அழுதான்.
மொத்த குடும்பமும் அவனுடைய இந்த நிலையைக் கண்டு அருகில் வந்தார்கள். அப்பொழுது விக்ரம் அவனின் தோளைத் தொட,
“ இங்க பாருங்க டேட் நான் தான் அவசரப்பட்டுட்டேன் அவ எப்பவோ எனக்கு தெரியப்படுத்தி இருக்கா நான் தான் மிஸ் பண்ணிட்டேன். இந்த ஓவியத்தை நான் பார்த்ததுக்கு அப்புறம் அவ கிட்ட என்னோட காதலை சொல்லுவேன்னு அவ எவ்வளவு எதிர்பார்ப்போட இருந்திருப்பா ஆனால் எல்லாமே இப்படி தலைகீழா மாறி போச்சு டாட் என்னோட மீனாவை மிஸ் பண்ணிட்டேன்” என்று தன்னுடைய தலையில் அடித்துக் கொண்டு அழ, பாட்டியோ அவனின் கைப் பிடித்து எழுப்பி,
“ இங்கே பாரு கண்ணா இப்ப ஏன் நீ இவ்ளோ அழுகுற அதான் உனக்கு இப்ப தெரிஞ்சிருச்சில்ல மீனு எங்க போயிடப் போற மும்பை தானே போயிருக்கா? திரும்பி வர சொன்னா வந்துற போற” என்று சொல்ல அவனுடைய விழிகளோ பாட்டியை அதிர்ச்சி கலந்த ஆர்வத்தோடு ஏறிட்டன.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “தேடித் தேடி தீர்ப்போமா”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!