தேடித் தேடி தீர்ப்போமா

4.5
(10)

அத்தியாயம் 19

மூன்று வருடங்களுக்கு பிறகு

இன்றோடு மீனா இவர்களை விட்டுச் சென்று மூன்று வருடங்கள் ஆகிவிட்டன.

வீட்டில் உள்ள அனைவரும் அந்த பெரிய வீட்டில் ஆள் உயர அளவுக்கு மீனாவின் புகைப்படத்திற்கு பெரிய மாலையை போட்டு அவளுக்கு பிடித்த உணவுகளையும் படைத்து குடும்பமே தங்களின் மகளை நினைத்து கண்ணீரோடு வழிபட்டனர்.

அதேபோல மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்த ரயில் விபத்தால் மிகப்பெரிய உயிர் இழப்புகள் ஏற்பட்டதால் விபத்து நடந்த இடத்தின் அருகில் விபத்தில் இறந்தவர்களுக்கு அங்கேயே கல்லறை கட்டப்பட்டு அதில் இறந்தவர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டிருந்தன.

ஒரு சில கல்லறையில் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நின்று கொண்டிருக்க மீனாவின் பெயர் பொறிக்கப்பட்ட கல்லறைகளோ அவளுக்கு பிடித்த வெள்ளை நிற ரோஜா பூக்கள் நிறைந்த பெரிய பொக்கே ஒன்றை வைத்து கண்களில் கண்ணீர் வழிய அந்த கல்லறையை பார்த்து நின்று கொண்டிருந்தான் விஹான்.

ஆம் மீனா அவனை விட்டு பிரிந்து சென்றிருந்தாலும் விஹான் தன்னுடைய நாட்டிற்குத் திரும்ப செல்லாமல் அவளுடைய அறையில் அவளுடைய நினைவுகளோடு தான் இந்த மூன்று வருடங்களை கழித்தான்.
விக்ரமும் சித்ராவும் அவனை எவ்வளவோ வற்புறுத்தி அழைத்தும் வரமாட்டேன் என்று மறுத்து விட்டான்.

மீனா உயிரோடு இருக்கும் பொழுது தான் அவளைத் தான் கண்டுகொள்ளாமல் இருந்ததை நினைத்து வேதனை உற்றவன் இனியாவது அவளுடைய நினைவுகளோடு இருக்க நினைத்தவன் தன்னுடைய நாட்டிற்கு செல்லாமல் இங்கேயே தங்கி விட்டான்.

விக்ரமும் சித்ராவும் கூட கொஞ்ச நாள் அவன் இங்கே இருந்தால் அவனுடைய மனம் மாறுபடலாம் என்று நினைத்தவர்கள அவர்கள் இருவரும் மட்டும் ஆஸ்திரேலியாவிற்கு சென்றார்கள்.

அவனோ மீனாவிற்கு பிடித்த விடயங்களை பாட்டியிடம் கேட்டு கேட்டு செய்வான்.
அதில் அவனுக்கும் ஒரு மகிழ்ச்சி.
முப்பொழுதும் அவள் நினைவுகள் என்பதுபோல மீனாவின் நினைவில் தான் இருந்தான் விஹான்.

இந்நேரம் அவள் சாகாமல் இவனுடன் இருந்திருந்தால் அவளை ஒரு ராணியாக பார்த்திருப்பான் இந்த விகான்.
ஆனால் விதியோ சதி செய்து விட்டது.

தன்னுடைய கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்தவன்,
“ என்ன மீனா என்ன இப்படி தவிக்க விட்டு நீ சந்தோஷமா போயிட்டல்ல நீ என் பக்கத்துல இருந்த வரைக்கும் ஒரு நாள் கூட நான் உன்கிட்ட சிரிச்சு பேசினது கூட கிடையாது ஆனா இப்போ என் சிரிப்பே என்கிட்ட இல்ல என்னோட மொத்த சந்தோஷமும் எப்பவோ போயிட்டு இப்போ ஒரு ஜடமா வாழ்ந்து கிட்டு இருக்கேன்‌ உன் ரூம்ல தான் இருக்கேன்.

அப்படி உன் ரூம்ல இருக்கிறது ஏதோ உன் மடியில படுத்த மாதிரி இருக்கும் மீனா. ஆனா அந்த நிம்மதி கூட இனி எனக்கு கிடைக்காது. அப்பாவுக்கு உடம்பு சரியில்லையாம் நான் இப்போ ஆஸ்திரேலியா போய் தான் ஆகணும் வேற வழி இல்ல.

நான் எங்க போனாலும் உன் நினைவுகளோடு தான் இருப்பேன்.

இன்னைக்கு ஈவினிங் ஃப்ளைட் நான் போறேன் மீனா” என்றவன் ஒரு பெருமூச்சு எடுத்து விட்டு கடைசியாக மீனாவின் கல்லறையை பார்த்தவன் கிளம்பி விட்டான்.

தன்னுடைய லக்கேஜை எடுத்தவன் மீனாவின் அறையை விட்டு வெளியேறி அங்கு ஹாலுக்கு வந்தவன் அனைவரிடமும் விடை பெற்று லல்லுவின் அருகில் வந்தவன்,
“ சாரி லாலி உன் விசையத்துல நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்”
“ ஐயோ என்ன விஹான் நீங்க அது நடந்து மூன்று வருஷம் ஆச்சு.

அதோட நான் எப்பவோ அதை எல்லாம் மறந்துட்டேன் நீங்களும் மறந்துடுங்க. இதுக்கு பிறகும் நீங்க இப்படி கில்ட்டியா பீல் பண்ணாதீங்க.

முடிஞ்சா நீங்க சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோங்க” என்று அவள் சொல்ல விஹானோ சட்டென,
“ எனக்கு மூணு வருஷத்துக்கு முன்னாடியே கல்யாணம் முடிஞ்சிட்டு. என் மனைவி மீனா. இப்ப அவ என் கூட இல்ல ஆனா எனக்குள்ள என் மீனா வாழ்ந்துகிட்டு இருக்கா” என்றவன் தன்னுடைய நாடு நோக்கி பயணமானான்.

*****
மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் ஒரு வீட்டின் கதவை ரொம்ப நேரமாக தன்னுடைய பிஞ்சு விரல்களால் கட்டிக் கொண்டிருந்தது அந்த பெண் குழந்தை.

பார்க்க சீனி பாகில் ஊரிய குலாப் ஜாமுன் போல இருக்கும்.

வட்ட முகம் திராட்சை பழம் போல இரண்டு கண்கள் ஜெர்ரி பழ மூக்கு பன்னீர் ரோஜா இதழ்கள் குண்டு கன்னங்கள் தொடை அளவு இருக்கும் ஒரு பிராக் ஒன்று அணிந்து கொண்டு தன்னுடைய இடது கையில் சின்னதாக காயம் பட்டிருக்க அதை பார்த்துக்கொண்டு அழுது அழுது தன்னுடைய தாயைத் தேடி வந்தது அந்த குழந்தை.

“ அம்மா அம்மா கதவைத் திறங்க விழிக்கு காயம் பட்டிருக்கு வலிக்குது சீக்கிரம் வாங்க” என்று அழுதவாறு கதவைத் தட்டிக் கொண்டு அழைத்தது விழி.

குளித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணோ தன்னுடைய குழந்தையின் அழுகுரல் கேட்டு வேக வேகமாக குளித்து முடித்தவள் கையில் கிடைத்த ஒரு துண்டை எடுத்து தன் உடலை சுற்றிக்கொண்டு வெளியே வந்தாள் அந்தப் பெண்மணி.

தன் குழந்தை கையை தூக்கி வைத்துக்கொண்டு அழுவதைப் பார்த்த அந்த தாயுள்ளமோ பதறி தன் குழந்தையின் அருகில் வந்து அமர்ந்தவள்,

“ அச்சோ என் விழி குட்டிக்கு என்ன ஆச்சு ஏன் அலறீங்க டா தங்கம்.. அச்சச்சோ இந்த காயம் எப்படி வந்தது ரத்தம் வேற வந்திருக்கு என்ன செஞ்சுகிட்டு இருந்த.. உன்னை விட்டு கொஞ்ச நேரம் தானே இருக்கும் நான் குளிக்க போய் அதுக்குள்ள இப்படி கைல ரத்தத்தோட வந்திருக்க நான் என்ன செய்வேன்.. ஐயோ என்னால உன்ன ஒழுங்கா கவனிக்க முடியவில்லை.

நான் எப்படி உன்னை வளர்க்க போறேன் நான் உனக்கு நல்ல அம்மாவே இல்ல” என்று தன் குழந்தையின் கையில் சின்னதாக இருக்கும் அந்த ரத்த காயத்தை பார்த்தவளுக்கோ என்ன பேசுகிறோம் என்று கூட தெரியாமல் உளறிக் கொண்டிருந்தாள் அவள்.

தன்னைவிட கண்களில் கண்ணீரோடு தேம்பித் தேம்பி தன் தாய் அழுவதை பார்த்த அந்த குட்டி குழந்தையோ ஏன் தன் தாயிடம் சொன்னோம் என்று நினைக்கும் அளவிற்கு இருந்தது அவளுடைய அம்மாவின் செயல்.

“ அம்மா அம்மா இங்க பாருங்க விழிக்கு ஒன்னும் இல்ல விழி நல்லா இருக்கேன் இது சின்ன காயம் தான் இதுக்கு போய் நீங்க இப்படி அழறீங்க அழாதீங்க பாப்பாவுக்கு ஒண்ணுமில்ல மருந்து போட்டா சரியாகிவிடும்” என்று அம்மா பிள்ளைக்கு சொல்லி ஆறுதல் படுத்துவதைப் போல இந்த பிஞ்சு குழந்தையும் தன்னை நினைத்து தன் தாய் படும் வேதனையை தாழாமல் அது தன் தாய்க்கு ஆறுதல் சொல்லியது.

“இல்ல விழிமா அம்மா உன்னை சரியா கவனிக்கல எல்லா தப்பும் என் மேல தான் இருக்கு இப்ப பாரு என்னோட இந்த குட்டி விழி கையில எவ்வளவு பெரிய காயம் வந்து இருக்கு” என்று அவள் விடாமல் தேம்பி அழுக விழியோ வெளிப்படையாகவே தன்னுடைய தலையில் தட்டிக் கொண்டு ஏண்டா தன் தாயிடம் வந்து சொன்னோம் என்று வருந்தியது.

குடு குடு என்று ஓடிச் சென்று அங்கு வீட்டில் இருக்கும் பஸ்ட் எய்ட் பாக்ஸை எடுத்துக் கொண்டு வந்து தன் தாயிடம் கொடுத்தவள்,
“ அம்மா விழிக்கு மருந்து போட்டா சரியாகிவிடும் எனக்கு வலிக்கல நீங்க அழுகாதீங்க” என்று நீட்டியது விழி.

அவளுடைய தாயான மீனாவோ, ஆம் மீனாதான் மூன்று வருடத்திற்கு முன்னதாக இறந்து விட்டால் என்று நினைத்த அதே மீனாதான்.

அழுது கொண்டே அந்த பெட்டியை வாங்கியவள் விழிக்கு அவள் கையில் பட்ட காயத்தை துடைத்தவள் அதற்கு மருந்திட்டு முடித்து இப்பொழுதுதான் அந்த கேள்வியை கேட்டாள் அந்த பிஞ்சுக் குழந்தையிடம்.

“ எப்படி விழிமா இந்த காயம் வந்துச்சு”

“ அம்மா நீங்க குளிக்க போனீங்களா விழி பாப்பாவுக்கு தண்ணி தாகமா இருந்துச்சா அதான் அந்த டேபிள் மேல இருந்த வாட்டர் பாட்டில் எடுக்கும் போது தண்ணீர் கீழே கொட்டிடுச்சு அதுல பாப்பாவுக்கு வழுக்கி விட்டுச்சா கீழ விழுந்துட்டேன் அதுல தான் அடிபட்டிச்சு” என்று தன்னுடைய குட்டி இதழ்களை பிரித்து தன் தாயிடம் சொல்லியது விழி.

அதைக்கேட்ட மீனாவோ,

“ என்ன விழிமா நீ அம்மாகிட்ட சொல்லி இருக்கலாம் தானே நான் உனக்கு தண்ணி எடுத்து கொடுத்துட்டு நான் குளிக்க போயிருப்பேன்ல இனி நீ எதுவும் செய்யக்கூடாது உனக்கு என்ன வேணுமோ அம்மா கிட்ட தான் கேக்கணும் சரியா” என்று பாச கட்டளை போட விழியோ தன்னுடைய செப்பு இதழ்களை பிரித்து அழகாக புன்னகை செய்து தலையை ஆட்டியது மீனாவின் கூற்றுக்கு.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “தேடித் தேடி தீர்ப்போமா”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!