அண்ணா என்னை விட்ருங்கண்ணா என்று கூறியவளின் வாயைப் பொத்தியவன் சாலையைக் காட்டி அமைதியா இரு என்றான். சாலையில் வெள்ளையாக ஒரு மர்ம உருவம் இவர்களின் ஆட்டோவை முறைத்துக் கொண்டு நின்றிருந்தது. ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தவன் உருது மொழியில் மந்திரம் போல எதையோ ஜெபித்துக் கொண்டிருந்தான்.
அந்த மர்ம உருவத்தின் மீது மோதி காற்றாய் சீறிப் பறந்தது ஆட்டோ. நேராக சென்று ஒரு கோவிலின் முன் தான் ஆட்டோ நின்றது.
மன்னிச்சுரு தங்கச்சி உன்னை ரொம்ப பயமுறுத்திட்டேன். பஸ் ஸ்டாப்ல ஒரு ஆளு உன்கிட்ட வம்பு வளர்த்தாரே அந்த ஆளு ஆட்டோவை பாலோவ் பண்ணிட்டு வந்தாரு. அவருக்கும், உங்களுக்கும் ஏதோ பிரச்சனைனு தான் ரூட்டை மாத்துனேன். அப்புறம் தான் புரிஞ்சது நான் வந்த ரூட்ல ஒரு பொண்ணோட ஆவி எப்பவும் சுத்திட்டு திரியும் அதை தாண்டி போற பைக், ஆட்டோ நிச்சயம் ஆக்சிடென்ட் தான் அதனால பயந்துகிட்டு தான் அன்வர்க்கு டெக்ஸ்ட் பண்ணினேன். அவரும் வந்தாரு. அவரு பாய் அல்லாவோட கிருபையால அந்த ஆவிகிட்ட இருந்து நம்ம தப்பிச்சோம் என்றார் அந்த ஆட்டோக்காரர்.
என்ன அண்ணா இந்த காலத்தில் போயி ஆவீ, பேய்னு என்றவளிடம் கடவுள் இருக்காருனு நம்புறியா தங்கச்சி என்ற ஆட்டோக்காரரிடம் நம்புறேன் அண்ணா என்றாள் இலக்கியா. அப்பறம் நல்லதுன்னு ஒன்று இருந்தால் கெட்டதுனு ஒன்று இருக்கும். கடவுள்னு ஒன்று இருந்தால் சாத்தான்னு ஒன்று கண்டிப்பா உண்டு தங்கச்சி என்றவர் நீ சொன்ன அட்ரஸ் வந்துருச்சு தங்கச்சி என்று ஆட்டோவை அவளது வீட்டின் முன் நிறுத்தினார்.
நன்றிங்கண்ணா என்றவளிடம் பரவாயில்லம்மா என்று காசை வாங்கிக் கொண்டு ஆட்டோக் காரரும், அவரது நண்பரும் சென்று விட்டனர்.
இலக்கியா வீடு வந்ததும் தான் சகுந்தலாவிற்கு திருப்தியாக இருந்தது. அவள் சாப்பிட்டு விட்டு மெத்தையில் சரிந்தாள்.
அவளுக்கு கார்த்திக்கின் நினைவுகள் வந்தது. அவனை முதன் முதலில் சந்தித்தது முதல் இன்றுவரை நடந்த நிகழ்வுகள் வந்து போக கூடவே அழுகையும் வந்து விட கண்ணீரைத் துடைத்தவள் அவன் முன்பு ஒருநாளும் அழுது விடக் கூடாது என்று வைராக்யமாக முடிவு செய்து படுக்கையில் சாய்ந்தாள்.
காலையில் எழுந்தவள் குளித்து முடித்து ஆபிஸ் கிளம்பிக் கொண்டிருக்கையில் சகுந்தலா மீண்டும் பணம் பற்றி பேசிட ஏன்மா அதான் சேவிங்க்ஸ் இருக்கே அதில் இருந்து கொஞ்சம் எடுத்து இப்போ தீபக்கிற்கு வேலை வாங்கிட்டா அவன் சம்பாதிச்சு அந்த பணத்தை திருப்பி கொடுத்திடப் போறான் என்றாள் இலக்கியா.
என்னம்மா பெரிய சேவிங்க்ஸ் கல்யாண வயசுல பிரதீபா இருக்காள். இப்பவே நாலஞ்சு வரன் வருது அவளுக்காக சேர்த்து வச்ச பணம் அதான் என்று இழுத்தார் சகுந்தலா. நான் கூட கல்யாண வயசுல தான் இருக்கேன் என்று சொல்லத் துடித்த மனதை அடக்கி சரிமா லோன் அப்ளை பண்ணி இருக்கேன் பார்ப்போம் என்றவள் தனது லன்ச் பாக்ஸை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
பஸ்ஸில் அமர்ந்தவளின் எண்ணங்கள் எல்லாம் சகுந்தலாவின் பேச்சில் தான் இருந்தது. ஒருமுறை கூட அவங்களை நான் சித்தினு கூப்பிட்டது கிடையாது ஆனால் அவங்க மனசுல நான் அவங்க பொண்ணுங்கிற நினைப்பே இல்லை போல என்று நினைத்தவளின் கண்கள் கலங்கினாலும் அதை கட்டுப் படுத்திக் கொண்டாள்.
அலுவலகம் வந்தவள் லோனிற்கு அப்ளை செய்து தன் இருக்கையில் அமர்ந்து வேலையை கவனித்தாள். அவள் அமைதியாக வேலை பார்த்துக் கொண்டிருந்த நேரம் அவன் வந்தான். வந்தவன் தன் அறைக்குச் சென்ற பிறகு இண்டர்காமில் அவளை அழைக்க அவன்றைக்குச் சென்றாள்.
என்ன மிஸ்.இலக்கியா உங்களை நான் என்னோட பர்சனல் செகரட்ரியா தானே அப்பாயின்ட் பண்ணி இருக்கேன் என்றான். எஸ் சார் என்றவளிடம் அப்போ உங்களோட கேபின் இது என்று தனதறையில் அவளுக்காக ஒதுக்கப்பட்ட கேபினைக் காட்டினான். கார்த்திக் ப்ளீஸ் நான் என்னோட பழைய கேபின்லையே என்றவளிடம் லுக் மிஸ்.இலக்கியா இங்கே நான் தான் பாஸ். நான் சொல்றதை தான் நீங்க செய்யனும் என்று அவன் கட்டளை இட ஓகே சார் என்றவள் தன் ஹேன்ட்பேக்கை எடுத்துக் கொண்டு அவன்றையில் இருந்த கேபினில் அமர்ந்து தன் வேலையை பார்த்தாள்.
அவன் வேண்டுமென்றே அவள் கொண்டு வரும் பைல்களில் சின்னச் சின்ன மிஸ்டேக் கண்டுபிடித்து அவளைப் படுத்தி எடுத்தான். அதனால் மண்டை சூடாகிப் போனாள். தலைவலி அதிகமாகிப் போக டீ குடிக்கலாம் என்று கேண்டீன் சென்றால் தலைவலி இன்னும் தான் அதிகமானது.
பார்த்தியாடி சிடுமூஞ்சியை ஆபிஸ் வந்த இரண்டாவது நாளே புது எம்.டியை மடக்கிட்டாள். இப்போ அவள் எம்.டியோட பர்சனல்செகரட்ரி. நேத்து வெளியில் இருந்த கேபின்ல வேலை பார்த்தவள் இன்னைக்கு எம்.டி. ரூம்லையே அவளுக்கு கேபின். வேலை மட்டும் தான் பார்ப்பாங்களா என்று சிரித்து விட்டு எப்படித்தான் ஊமைக்கொட்டான் மாதிரி இருந்துட்டு பெரிய இடமா வளைச்சுப் போட்டுட்டாள் என்றனர் இரு பெண்கள். அவர்களின் பேச்சு காதில் விழ ஏற்கனவே இருந்த தலைவலி இரண்டு மடங்கானது தான் மிச்சம். தலையைப் பிடித்துக் கொண்டு டீயும் வேண்டாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம் என்று தன் கேபினுக்குள் வந்து வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
ச்சே எப்படி இவங்க இப்படி பேசுறாங்க அவங்களும் பொம்பளைங்க தானே என்று நினைத்தவளின் கண்கள் ஆத்திரமாக எதிரில் அமர்ந்து கணினி திரையை பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்தது. எல்லாம் இவனால தான் என்று நினைத்தவள் அவனை முறைத்துக் கொண்டு இருக்க.
என் முகத்தில் என்ன படமா ஓடுது என்று அவளைப் பார்த்தான். அவள் முகத்தை திருப்பி விட்டு தன் வேலையை கவனிப்பது போல் ஆமா படம் ஓடுது பரதேசி என்று அவனை மனதிற்குள் அர்ச்சித்து விட்டு தன் வேலையைத் தொடர்ந்தாள்.
வேலையில் மூழ்கியவள் வயிறு பசிக்கவும் மணியை பார்க்க இரண்டரை என்று காட்ட லன்ச் பாக்ஸை எடுத்துக் கொண்டு அவள் கிளம்பிட இலா எங்கே போற என்றான். பசிக்குது சார் அதான் என்றவளை ஒரு நிமிசம் என்றவன் மணியைப் பார்க்க ஓ காட் இரண்டரை மணி ஆச்சா சரி வா கிளம்பலாம் என்றான்.
எங்கே சார் என்றவளிடம் சைட் விசிட் என்றவன் நீ வேணும்னா உன் லன்ச் பாக்ஸை எடுத்துட்டு வா என்றவனிடம் பரவாயில்லை சார் வெர்க் முடிச்சுட்டு வந்தே சாப்பிட்டுக்கிறேன் என்றவள் அவனோடு கிளம்ப பச் சொல்றேன்ல என்று அவன் அதட்டினான். அவளும் வேறு வழி இல்லாமல் அவனுடன் லஞ்ச் பாக்ஸை எடுத்துக் கொண்டே கிளம்பிச் சென்றாள்.
அவனது காரில் அவள் பின்சீட்டில் அமரப் போக மகாராணி முன்னால வந்து உட்காருங்க என்றான் . என்ன என்றவளிடம் நீ என்ன மகாராணியா நான் உனக்கு டிரைவர் வேலை பார்க்க முன்னாடி வந்து உட்காரு என்றவனை முறைத்து விட்டு சாவடிக்கிறான் பாரு பரதேசி் பசி வேற வயித்தைக் கிள்ளுது என்று நினைத்தவள் அமைதியாக வந்து முன்சீட்டில் அமர்ந்தாள்.
இருவரும் சென்று சைட்டை பார்த்து விட்டு அங்கு சில வேலைகளை முடித்து விட்டு வரும் வழியில் ஒரு ஹோட்டலில் வண்டியை நிறுத்தி விட்டு அவன் சென்று பார்சலை வாங்கிக் கொண்டு வந்தான்.
அவள் போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருப்பது தெரிந்து பூனை போல் பதுங்கி வந்தான்.
இன்னைக்கு தான் அப்ளை பண்ணி இருக்கேன். உடனே எப்படிம்மா முடியும் ஒரு வாரம்னாலும் டைம் வேண்டாமா எல்லாம் எவ்வளவு ப்ராசஸ் எம்.டி ஓகே சொன்னால் தான் கிடைக்கும் சரி வேற இடத்திலையும் ட்ரை பண்றேன் என்றவள் போனை வைத்து விட்டு கடவுளே என்று தலையில கை வைத்து அமர்ந்தாள்.
அவன் வந்து அவளருகில் அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்தவன் ஒரு பீச் ஹவுஸின் முன்பு காரை நிறுத்தினான். சார் இங்கே எதற்கு வந்திருக்கிறோம் என்றவளிடம் எனக்கும் பசிக்குது அதான் சாப்பிட்டு ஆபிஸ் போகலாம். இது என்னோட கெஸ்ட்ஹவுஸ் தான் வாங்க இலக்கியா என்று அவளை அழைத்துச் சென்றான்.
விதியே என்று அவளும் அவனுடன் வந்தவள் அமர்ந்திட அவன் தான் வாங்கி வந்த உணவை பிரித்து சாப்பிட ஆரம்பித்தான். அவளும் தன் பாக்ஸில் இருந்த தயிர்சாதத்தையும், பாகற்காய் பச்சடியையும் சாப்பிட்டாள். அவளுக்கு தயிர்சாதம் , பாகற்காய் இரண்டுமே பிடிக்காது ஆனால் என்னால் காலையில் இது தான் ரெடி பண்ண முடியும் என்று சகுந்தலா அதைத் தான் தினமும் கொடுத்து விடுவாள். பிடிக்கவில்லை என்று அவளும் சொல்ல மாட்டாள்.
என்ன இலா தயிர்சாதம் , பாகற்காய்பச்சடி காம்பினேசனே சரி இல்லையே என்றவனைக் கண்டுகொள்ளாமல் அமைதியாக சாப்பிட்டாள். வாயேன் சாப்பாடு ஷேர் பண்ணிக்கலாம் என்றவனிடம் மிஸ்டர்.கார்த்திக் தப்பா எடுத்துக்காதிங்க உங்க வேலையை மட்டும் பாருங்க என்று கூறி விட்டு அமைதியாக சாப்பிட்டாள்.
திமிரு மட்டும் குறைய மாட்டேங்குது பாரு என்று அவளை மனதிற்குள் திட்டி விட்டு அமைதியாக சாப்பிட்டான்.