வீட்டிற்கு ஓடி வந்த அன்னத்திற்கு, கிருத்திஷை ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து வெற்று மார்புடன் இருந்த அவனை பார்த்தது ஒரு மாதிரியாக இருந்தது.
“ஐயோ முருகா.. அவங்க என்ன நெனச்சாங்களோ தெரியலயே.. ஏன் அன்னம் நீ எதுக்கு அவர பார்த்த?” என்று தனக்குள் பேசிக் கொண்டு இருந்தாள்.
வேலுச்சாமி முகம் முழுவதும் புன்னகையுடன் வீட்டிற்கு வந்தார். வரும்போதே அன்னத்தை அழைத்துக் கொண்டு வர, அன்னம் முன்கூடத்திற்கு வந்தவள், “என்னாச்சு அப்பா முகம் எல்லாம் சிரிப்பா கெடக்குது..”
“ஆமா கண்ணு.. மனசு சந்தோஷமா இருக்கு.. அந்த சந்தோஷம் முகத்தில தெரியுது..”
“அப்பிடி என்ன சந்தோஷமான விஷயம் அப்பா? சொன்னா நானும் சந்தோஷப்படுவன்ல..” என்று கேட்டு தான் சொல்லப்போகும் விஷயத்தை கேட்க ஆவலாக இருந்த தனது மகளைப் பார்த்தார். அவளுக்கு பொறுமை இல்லாமல் போக, தந்தையின் கையை பிடித்து ஆட்டியவள், “அப்பா சொல்லுங்கப்பா..” என்றாள்.
“சொல்றன் கண்ணு.. ரெண்டு நாள்ல உன்னை பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டுல இருந்து வர்றாங்க..”என்றார். தன்னை பெண்பார்க்க வருகிறார்கள் என்றதும், அன்னத்தின் முகம் வாடியது. மகளின் முகத்தில் இருந்த வாட்டத்தை கவனித்த வேலுச்சாமி, “என்ன அன்னம் மாப்பிள்ளை வீட்டில இருந்து வர்றாங்க என்றதும் உன் முகம் வாடிப்போச்சு..”
“அப்பா இந்த கல்யாணம் எதுவும் எனக்கு வேணாம்பா.. நான் உங்ககூடயே இருந்துக்கிறனே.. வர்றவங்க எல்லோரும் என்னோட குறையை ஒரு குத்தமா சொல்லிட்டு போயிடுறாங்க.. எனக்கு யார் முன்னாடியும் அலங்கரிச்சிட்டு பொம்மை மாதிரி நிற்க விரும்பவில்லை.. அதே மாதிரி உங்களை விட்டுட்டு என்னால இருக்க முடியாது அப்பா..” என அன்னம் சொல்லும் போதே அவளது கண்களில் கண்ணீர் தேங்கியது.
அவளது கண்ணீரை துடைத்து விட்ட வேலுச்சாமி, “இங்க பாருடா, இந்த மாப்பிள்ளை வீட்ல இருக்கிறவங்களுக்கு உன்னோட பிரச்சனை தெரியும்.. அதெல்லாம் தெரிஞ்சுதான் வர்றோம்னு சொல்லி இருக்கிறாங்க.. அதுமட்டுமல்ல, எல்லாப் பொண்ணுங்களும் கல்யாணம் பண்ணி புருஷன் வீட்டிற்கு போய்தானாகணும் கண்ணு.. என் தங்கம்ல எனக்கு அப்புறம் உன்னை பார்த்துக்க யாரு இருக்காங்க?”
“அப்பா ஏன்பா இப்பிடி எல்லாம் பேசுறீங்க?”
“இல்ல அன்னம் அதுதான் நெஜம்.. இந்த இடம் ரொம்ப நல்லவங்க மாதிரி இருக்கு.. பேசி முடிச்சிட்டா எனக்கு நிம்மதி அன்னம்..” என்றவர் முகத்தைப் பார்த்த அன்னம், “சரி அப்பா உங்க விருப்பப்படியே செய்ங்க..” என்றாள்.
கிருத்திஷ் பஜ்ஜியை சாப்பிட்டு விட்டு, தனது லேப்டாப்பை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு அவனது வேலையைப் பார்க்க ஆரம்பித்தான். பார்வதிக்கு என்ன செய்வது என்று தெரியாமல், ‘ஊரை சுற்றிப் பார்த்து விட்டு அப்படியே குலதெய்வப் பூஜை செய்வது பற்றி பூசாரியுடன் பேசிவிட்டு வரலாம்..’என நினைத்துக் கொண்டு, கிருத்திஷிடம் சொல்லிவிட்டுச் சென்றார்.
அவர் செல்லும் போது வழியில் அன்னத்தின் வீட்டைக் கடந்தது தான் செல்ல வேண்டும். திண்ணையில் இருந்து அரிசியில் கல் எடுத்துக் கொண்ட அன்னத்தை பார்த்த பார்த்தார். அவளையும் தன்னுடன் அழைத்துச் செல்லலாம் என்று நினைத்து,
“அன்னம் ஊரை சுற்றிப் பார்க்க போறேன்.. தனியாக போக ஒரு மாதிரி இருக்கு நீயும் என்னோட வர்றியா..? அப்பிடியே பூசாரிட்டையும் போயிட்டு வந்துடலாம்?”
“சரிங்க அத்தை இதோ வர்றேன்.. இருங்க இதை உள்ளே வச்சிட்டு வந்துடுறேன்..” என்றவள் ஒரு நொடியில் உள்ளே சென்று அரிசியை வைத்து விட்டு வந்து, “போலாம் அத்தை..” என்றாள் புன்னகையுடன். இருவரும் சேர்ந்து ஊரை நன்றாக சுற்றி விட்டு, கோயில் பூசாரியிடம் பூஜைக்கான நாளையும் சொல்லிவிட்டு வந்தனர். பார்வதியிடம் அமெரிக்கா பற்றி சிறு குழந்தைபோல கேட்டுக் கொண்டு வந்தாள். பார்வதியும் அவளது குழந்தைத் தனத்தை இரசித்துக் கொண்டு, அவள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.
…………………………………………………
ரோகித்திடம் இரா அவனைக் காதலிப்பதாக சொன்னதும் ரோகித் அமைதியாக நின்றான். இரா மறுபடியும், “என்ன சீனியர் அமைதியாக இருக்கீங்க? என்னை உங்களுக்கு பிடிக்காதா?” என்று மறுபடியும் கேட்க,
“இரா எனக்கு ஒன்னும் உன்னை புடிக்காம இல்லை.. நான் முன்னாடியே சொன்ன மாதிரி எனக்கு உன்னை பிடிக்கும்.. ஆனா அதை நான் லவ்வரைக்கும் கொண்டு போக நினைக்கல.. அது மட்டும் இல்ல எனக்கு இந்திய கேர்ள்லதான் கல்யாணம் பண்ணிக்க விருப்பம்..” என்றான். அதற்கு இராவும், “நானும் இந்தியன் ஃபேமிலி தான்.. சீனியர் உங்களுக்கு இப்ப வேணும்னா உங்களுக்கு என்னை பிடிக்காம போகலாம்.. ஆனா என்னைக்காவது என்னை உங்களுக்கு பிடிக்கும் என்று நான் நம்புறேன்.. உங்களுக்காக நான் வெயிட் பண்ணுவேன் சீனியர்.. உங்களோட மனச கஷ்டப்படுத்தற மாதிரி ஏதாவது பேசி இருந்தா என்னை மன்னிச்சிடுங்க.. ஆனா இந்த இரா உங்க மேல வெச்சிக்கிற காதல மட்டும் தவறாகவோ குறைவாகவோ என்னைக்கும் நெனச்சிடாதீங்க..” என்று சொன்னவள் அங்கிருந்து சென்று விட்டாள்.
ரோகித்துக்கு தான் என்ன சொல்வது என்று தெரியவில்லை. எல்லோரிடமும் சகஜமாக பழகக்கூடிய ஒருவன். அப்படித்தான் அவன் இராவிடமும் பழகியிருக்கிறான். அவளது குண்டு கன்னங்களும், அழகான இரு கயல் விழிகளும் அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே ரோகித்தை கவர்ந்தது என்பது உண்மையே. ஆனால் அதை காதலாக ஏற்றுக்கொள்ளத் தான் அவனுக்கு யோசனையாக இருந்தது.
“நோ இஸ்யூஸ் வாங்க போகலாம்..” என்று நண்பர்களை அழைத்துக் கொண்டு சென்றான்.
…………………………………………………
கிருத்திஷ் லேப்டாப்பில் தனது வேலைகளை முடித்துவிட்டு, இரு கைகளையும் முன்னால் நீட்டி, சோம்பல் முறித்தான். ஹாலுக்கு வந்து பார்க்க தாயார் இன்னும் வந்திருக்கவில்லை.
‘என்ன இந்த அம்மா இன்னும் வரல.. சரி நம்மளுக்கு உள்ள இருக்க போரிங்கா இருக்கு.. வெளிய போய் பாத்துட்டு வரலாம்..’ என்று அவனும் நடக்க ஆரம்பித்தான்.
சிறிது தூரம் சென்றதும், அன்னமும் பார்வதியும் கையில் மாங்காயை வைத்துக் கொண்டு இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டு வந்தனர். இடையிடையே மாங்காயை ஒரு கடி கடித்துக் கொண்டனர். இதை பார்த்த
கிருத்திஷ், “அம்மா..” என்று அழைத்துக் கொண்டு அவர்கள் அருகில் செல்ல, அவனைப் பார்த்ததும் அன்னலட்சுமிக்கு சங்கடமாகப் போக தலையைக் குனிந்து கொண்டாள்.
அவள் தன்னைப் பார்த்ததும் தலையை குனிந்து கொண்டது கிருத்திஷ்க்கு ஒரு மாதிரியாகிவிட்டது.
இவனைப் பார்த்த பார்வதி, “என்ன கண்ணா வேலை முடிஞ்சிதா?”
“ஆமா அம்மா.. வேலையை முடிச்சிட்டு பார்த்தன் உங்களை காணவே இல்லை.. அதுதான் உங்களைத் தேடி வந்தேன்..” என்றான்.
“வீட்ல இருக்க போரிங்கா இருந்திச்சு.. அதுதான் அன்னத்தோட ஊரைச் சுற்ற வந்தனான்.. அப்படியே தோப்புல போய் மாங்காயையும் பறிச்சுட்டு வந்தோம்.. அப்படித்தானே அன்னம்..” என்று கிருத்திஷிடம் ஆரம்பித்து அன்னத்திடம் முடித்தார். அன்னமோ அவர் சொன்னதற்கு எதுவும் சொல்லாமல் அமைதியாக தலையை குனிந்து கொண்டு நிற்பதைப் பார்த்த பார்வதிக்கு, அவள் நின்ற கோலத்திற்கான காரணம் புரிய சிரித்தவர்,
“அன்னம்…” என்று நிமிர்ந்து பார்த்தாள். அன்னம் நீ இன்னும் சாயந்தரம் நடந்தத நினைச்சுக்கிட்டு இருக்கேனு நான் நினைக்கிறேன்.. அமெரிக்காவில் இப்பிடி ட்ரெஸ் போடுறது சாதாரணம் அன்னம்.. நீ தப்பா நினைச்சுக்காதம்மா..”
“ஐயோ அத்தை.. நான் எதுவும் நினைக்கல.. மாமாவை பார்த்ததும் தயக்கம் வந்திட்டு அத்தை.. வேற எதுவும் இல்லை..”
“அன்னம் என் பிள்ளை சொக்கத் தங்கம்..” என்று அவர் சொன்னதும் அன்னத்திற்கு ஏற்பட்ட சங்கோஜம் விலக, அவளுக்கு குறும்புத்தனம் தலைதூக்க,
“ஏன் அத்தை மாமா தங்கம்னா அடகு வைச்சா பெரிய அளவில பணம் கிடைக்கும் போல..” என்று சிரித்துக் கொண்டு கேட்க, அவளது கேலியில் சிரித்தார் பார்வதி. கிருத்திஷ் சிரித்துக் கொண்டு நிற்கும் அன்னத்தை ஒரு பார்வை பார்த்து விட்டு, “போலாமா அம்மா..” என்றான்.
“போலாம் கண்ணா..” என்றவர் ஒருபுறம் கிருத்திஷூம் மறுபுறம் அன்னம் வர பேசிக் கொண்டு சென்றனர்.
செல்லும் வழியில் நாலைந்து சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். இவர்கள் அந்த சிறுவர்களைக் கடந்து செல்லும் போது அன்னம் தடாலென கீழே விழுந்தாள்.