ஹோட்டலில் இருந்து நேராக தன்னுடைய வீடு சென்றாள். அதை வீடுன்னும் சொல்ல முடியாது. பத்து சென்ட் அளவிலான இடத்தில் ரெஸ்ட்டாரெண்ட் கட்டி, அதில் அவர்களுக்கு என்று இரண்டு அறைகளும் ஒரு சின்ன கிட்சனும் கட்டியிருந்தார்கள்.
ரெஸ்டாரண்டுக்குள் சென்றுதான் வீட்டுக்குள் செல்ல முடியும்.
சந்தனு சாதாரண நடுத்தரவர்க்கத்தை சேர்ந்த மனிதர்தான். அதற்குள்தான் மகளையும் பேரப்பிள்ளைகளையும் அடக்கியிருந்தார்.
அவள் வீட்டிற்கு வர சற்று நேரம் ஆகிவிட்டதால் சந்தனுவே குழந்தைகளுக்கு சத்துப்பானம் கலக்கித்தந்து விட்டார்.
அவரை நன்றியுடன் பார்த்தவள், படபடவென தயாராகிக்கொண்டு சாதாரண உடை ஒன்றை அணிந்து கொண்டவள், தங்களுக்கென, காய்கறிக்கூட்டும், ராகி அடையும் வார்த்து ஹாட்பாக்சில் வைத்தாள்.
“சஜித், அபிம்மா…! ரெண்டு பேரும் என்னோட வர்றீங்களா?… இல்லை தாத்தாவோட இருந்து ஹோம் ஒர்க் செய்யறீங்களா?…” அவள் அவர்கள் இருவரையும் கேள்வியாய்ப் பார்க்கவே.
அவளைப் பார்த்து கேலியாய்ச் சிரித்த சஜித், “மாம் இங்கேதானே இருக்கப் போறீங்க? இதிலே என்ன கேள்வி வர்றீங்களான்னு?…” அவன் சொல்லவும் அபியும் சேர்ந்து சிரித்தாள். பின்னே ரெஸ்ட்டாரெண்டும் வீடும் ஒண்ணுக்குள் ஒன்றாகவே உள்ள நிலையில் தாட்சா இப்படிப் பேசுவது சரியா?…
அதுவும் அளவற்ற அறிவுச்செல்வம் குவிந்துள்ள குழந்தைகளிடம். அப்பாவைப் போலவே புத்திசாலித்தனம். ஆனால் இருவரும் இரட்டைக்குழந்தைகள் என்பதால் ஜாடை எல்லாம் ஓரளவு தாட்சாவைக் கொண்டே இருந்தனர். அபியை நன்றாக உற்றுப்பார்த்தால் அவள் பாட்டியின் ஜாடை தெரியும்.
ஜாடை மட்டும்தான் ஓரளவுக்கு அவளைப் போலவே, மற்றபடி அவர்கள் தந்தையின் குணநலன்கள் அப்படியே வாய்த்திருந்தது. இப்படியே யோசிக்க யோசிக்க தான் மிகவும் பலவீனமானது போல இருக்கவும், விட்டால் பைத்தியம் ஆகிவிடுவோம் என்று தோன்றியது அவளுக்கு.
விக்ரம் வருகிறான் என்று தெரிந்ததில் இருந்து அவள் இப்படித்தான் ஆகிறாள். வந்தால் வரட்டுமே இப்போ என்னவாம்!… சில பெருமூச்சுகளை எடுத்துவிட்டு தன்னை நிலைப்படுத்திக்கொண்டாள்.
“தாட்சா சகாயம் தனியா சமாளிச்சுட்டு இருக்கான் கிச்சன்ல. நீ போய் அவனுக்கு கூடமாட ஒத்தாசை பண்ணு…” சந்தனுவின் குரல் அவளை தட்டி எழுப்பவும் விழிப்பிற்கு வந்தாள்.
அடுத்து அவளுக்கு எதையும் யோசிக்கவே நேரம் இல்லாமல் போனது. ரெஸ்ட்டாரெண்ட் சென்றாள்.
சகாயம் சந்தனுவின் நண்பர். மிலிட்டரியில் இருந்தவர் ஒரு சண்டையின் பொழுது ஒரு கால் போய்விட்டதால் அங்கே இருந்து வந்துவிட்டார். வந்தவர் அவருக்கும் யாரும் இல்லாததால் அவர்களுடனேயே தங்கிக்கொண்டார். சந்தனு அவருக்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்பதுவும் ஒரு காரணம் ஆகும்.
கிச்சன் சென்றவள் அச்சுதன் அண்ணா காற்கறிகளை சீராய் கட் பண்ணிக்கொண்டிருக்கவும் அவர் அருகில் சென்றவள் எதுவும் பேசாது தன் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.
அப்பொழுது கஸ்டமர் யாரோ காபி கேட்டிருக்கவும் சகாயம் அவர்களுக்கு கொடுத்துவிட்டு இன்னொரு கப்பை எடுத்துவந்து, தாட்சாவிடம் வலுக்கட்டாயமாகக் கொடுத்தார்.
“இதைக் குடி முதல்ல, அப்புறம் வெட்டி முறிப்பியாம் உன்னோட வேலைகளை…” அவர் தன்னுடைய முரட்டுத்தனமான குரலில் தன் இயல்பான வெடுக்கென்ற பேச்சில் பேசவும்.
அது அவளுக்கு சற்று ஆறுதலாய் இருந்தது போலும், “காபிக்கு தேங்க்ஸ் அங்கிள்…” லேசாய் புன்னகை ஒன்றை அவருக்கு கொடுத்தாள். ஆனால் அதில் உயிர்ப்பில்லை.
தாட்சாயினி என்றாலே புன்னகை அரசி என்றுதான் சொல்வார்கள். அவ்வளவுக்கு பேச்சுக்குப் பேச்சு சிரிப்பாள். தேக்கடியில் அவள் சிரிப்புக்கென்றே ரசிகர்களும் இருக்கிறார்கள்.
ஆனால் கடந்த பத்து வருடங்களாக அதெல்லாம் போயே போயிற்று என்றும் சொல்லலாம். அப்பாவுக்காக, பிள்ளைகளுக்காக, சகாயம், அச்சுதன் அண்ணாவுக்காக ஏதோ சிரிக்கிறாள் அவ்வளவே. மற்றபடி அது மனதில் இருந்து வருவதில்லை.
“காலைல எழுந்தா கால்ல சக்கரம் கட்டின மாதிரி ஓடற. நைட் தூங்க பதினொன்னு ஆகிடுது. கொஞ்சமாவது உடம்புக்கு ஓய்வு கொடு பொண்ணு… பாரு கழுத்தெழும்பெல்லாம் வெளியே தெரியுது?…” சகாயம் வழக்கம் போல புலம்பிக்கொண்டே தன் வேலைகளைப் பார்க்கலானார்.
சகாயம் அங்கிளின் பரிவில் அவளது கண்களில் மளுக்கென்று கண்ணீர் வரப்பார்க்கவே, அதை அவருக்கு தெரியாது மறைத்தவள், தன்னிடம் இருந்த டம்ளரைக் கழுவி வைத்தாள்.
என்னதான் எதிரே பிரம்மாண்ட ஹோட்டல் இருந்தாலும் எல்லோரும் அதாவது சாமான்ய மக்களால் அங்கே சாப்பிட முடியாத நிலையில்தான் அங்கே கொடுக்கப்படும் உணவுகளின் விலைகள் இருக்கும். அதாவது மேல்தட்டு மக்களுக்கென்றே கட்டப்பட்ட ஹோட்டல் அது. ஒரு நாளுக்கு தங்குவதற்கான வாடகை மட்டுமே கிட்டத்தட்ட பத்தாயிரம் ஆகும்.
அதனால் தேக்கடிக்கு வெளியூரில் இருந்து வேலை செய்ய வந்தவர்கள், மற்றும் அங்கே இருப்பவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் பொழுதுபோக்க ஏதுவான இடமாக யவனா ரெஸ்ட்டாரெண்ட் இருக்கும் என்பதில் சிரிதும் ஐயமில்லை.
சந்தனுவின் வயதை ஒத்தவர்கள் மாலை சரியாய் எட்டு மணி அளவில் ரெஸ்ட்டாரெண்டுக்கு வந்துவிடுவார்கள். அப்புறமென்ன சகாயம் தன்னுடைய எல்லாப் பணிகளையும் ஸ்டாப் பண்ணிவிட்டு அவர்களோடு சேர்ந்துகொள்வார். பாட்டும் பேச்சும். ஏன் நடனமும் கூட ஆரம்பிப்பார்கள். மனதளவில் இளமையாக உள்ள முதியவர்கள் ஆயிற்றே அவர்கள். அப்புறம் உற்சாகத்திற்கு கேட்கவும் வேண்டுமா.
தாட்சா அதை எல்லாம் ரசித்துப் பார்த்திருப்பாள். உண்மையை சொல்லணும் என்றால் தாட்சாவை இன்னும் உயிர்ப்போடு வைத்திருப்பது அவர்களின் அந்த உற்சாகம்தான் எனலாம்.
அவர்களுக்கு இஞ்சியும் உப்பும் கலந்த ராகிகஞ்சியும் அதோடு சூடாய் பருப்பு வடையும் தயார் செய்து கொடுத்தாள் தாட்சா.
“ம்ம்…! தாட்சாவோட ஸ்பெஷல் ராகிமால்ட் வந்திடுச்சு. தாட்சா உன்கிட்டே ஒன்னு சொல்லனும்மா. ஓல்ட்மேன் திரும்ப திரும்ப சொல்றாரேன்னு நினைக்க வேண்டாம்…” நீலகண்டன் அவளைப் பார்த்து சொல்லவே.
“இதை ஸ்பெசலா நிலக்கடலையும் சுக்கும் வறுத்து ராகியோட சேர்த்து அறைச்சேன் போதுமா?…” தாட்சா அவர்கள் இதைத்தான் கேட்பார்கள் என்று புரிந்தவளாக குறும்பு சிரிப்போடு முன் கூட்டியே சொல்லிவிட்டாள்.
“அடடே சமர்த்துப்பொண்ணு…” அவளிடம் அவர்கள் சற்று நேரம் பேச. தானும் அவர்களிடம் கொஞ்ச நேரம் பேசியவள், அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு விலகினாள்.
நேரம் ஒன்பது ஆகிவிடவும், “அம்மா வாங்க தூங்கலாம்…” அபி அவளை வந்து அழைக்கவே, சகாயம் அண்ணாவிடம் சொல்லிக்கொண்டு மகளுடன் உறங்கச் சென்றுவிட்டாள். இனி அவர்கள் பாடு சில நேரங்களில் பதினோரு மணியையும் தாண்டும் அவர்களின் ரெஸ்ட்டாரெண்ட் க்ளோஸ் பண்ண.
ஒவ்வொரு சமயங்களில் டூரிஸ்ட் பஸ் வந்து நின்றுவிட்டால் தாட்சாவும் எழுந்து அவர்களோடு சென்று உதவ வேண்டியது இருக்கும். பஸ்ஸில் குழந்தைகள் முதல் பெண்கள் வரை வருவார்கள் அல்லவா? அதனால் அவர்கள் செல்லும் வரை திறந்தே வைத்திருக்க வேண்டும்.
சந்தனுவும் சகாயமும் உழைப்புக்கு என்றும் பயப்பட்டது இல்லை. அவர்கள் கவலை எல்லாம் தாங்கள் வளர்த்திய பெண்ணை சீரும் சிறப்புமாக வாழவைக்க முடியவில்லையே என்பதுதான்.
எந்த தகப்பனுக்குமே தன் பெண் கணவன் குழந்தைகள் என்று இருக்க வேண்டும்னுதானே ஆசை இருக்கும். இதற்கு சந்தனுவும் விதிவிலக்கு அல்லவே.
படுக்கையில் தன் மக்களை அணைத்துக்கொண்டு படுத்த தாட்சாவுக்குள் அனலாய் அவன் நினைவுகள். அவளும் உணர்வுகள் உள்ள பெண்தானே விட்டகுறை தொட்டகுறையாய் அவனின் ஸ்பரிசம் நெருக்கம் இதெல்லாம் அவளை படுத்தி எடுக்க, அதன் தகிப்பை தாங்க இயலாதவளாய் அருகில் உள்ள தலையணையை எடுத்து தன்னோடு அணைத்துக்கொண்டவளுக்கு ஒரே கேள்விதான் “ஏன் இப்படியெல்லாம்…” என்று.
அவனின் அருகாமை கொடுக்கும் நினைவுகளில் படுக்கையில் படுக்க முடியாதவளாய் எழுந்தமர்ந்தவளுக்கு மூச்சு வாங்கியது.
அத்தோடு முதன் முதலாக அவன் காதல் சொன்ன தருணங்களும் அவள் நினைவுகளில் எழலானது.
ஆம் சிறுவயது தோழியான அவளை சூழலின் பொருட்டு கிட்டத்தட்ட ஒருமாதம் பார்க்க முடியாது போகவே, அவளைப் பார்க்க முடியாது தவித்துக்கொண்டிருந்தவன் அவள் மீது இருந்த பிரியத்தை, காதலை உணர்ந்தான்.
அவளை பார்க்க சென்றவனை, ராமு தடுத்து நிறுத்தி, “விக்ரம் தம்பி இப்போ பார்க்க கூடாதுங்க. இன்னும் ஒரு வாரம் கழிச்சு பேசிக்குங்க அவளோட” என்றவர் அவனை நாசுக்காய் அனுப்பிவிட்டார்.