நளிர் 7
மறுநாள் காலை பிள்ளைகளை தயார் செய்து பள்ளிக்கு அனுப்பிவிட்டு. அவள் பணிபுரியும் ஹோட்டலுக்கும் லீவ் சொல்லிவிட்டு சோம்பலாக அமர்ந்திருந்தாள் அங்கே உள்ள இருக்கையில்.
சாதாரண கருப்பு நிற பட்டியாலா பேண்ட் மற்றும் டார்க் ரெட் கலர் குர்தாவும் அணிந்திருக்க, அவளது கூந்தல் அலட்சியமாக சிறு கிளிப்பில் அடக்க முயன்றிருந்திருப்பாள் போல. அது அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவளை இதமாய் உரசியபடி இருந்தது. சாதாரணமாய் எந்த மேக்கப்பும் இல்லாமல் இருந்தாலும் அவளை சிறந்த அழகியாக காட்டியது பார்ப்பவருக்கு.
“என்ன தாட்சா எக்ஸ்பிரஸ் இன்னைக்கு ஓடாம ஓரிடத்தில் ஒழுங்காய் உட்கார்ந்திருக்கு…? இந்த குளிர்ல மழை வந்தால் ஜனங்க என்ன ஆவறது?” கேள்வியுடன் தன் தட்டில் தோசைகளோடு அவள் அருகில் அமர்ந்தார் சகாயம்.
கண்களை மூடி யோகியின் நிலையில் அமர்ந்திருந்தவள் மெதுவாய் கண்திறந்து எப்போதும் போல அவர் மிடுக்கை ரசித்தாள். அவரைப் பார்க்கும் போதெல்லாம் மலையாள நடிகர் மம்மூட்டியின் நினைவுதான் வரும் அவளுக்கு.
பேசும்போது இயல்பாகவே வெடுக்வெடுக்கென்றுதான் பேசுவார், ஆனால் நன்கறிந்தவர்களுக்கு மட்டுமே அவர் ஒரு குழந்தை மனதுள்ளவர் என தெரியும். அந்த மீசையை அடிக்கடி முறுக்கி விடுவது, தெனாவெட்டாய் பார்ப்பது, அவர் தோளில் எப்பொழுதும் கிடக்கும் அந்த ஒற்றைத் துண்டு, என சகாயத்தை ஐந்து வயதிலிருந்து இன்று வரை குறையாத ஆச்சரியத்துடன் பார்த்திருப்பாள்.
அது தமிழ்நாட்டு எல்லைக்கும் கேரளா எல்லைக்கும் இடைப்பட்ட பகுதி என்பதால் சகாயத்துக்கும் சந்தனுவுக்கும் பாஷை பெரிய விஷயமாக இருந்ததில்லை. அதுவும் சகாயம் ஹிந்தியும் ஆங்கிலமும் அறிவார். அதனாலேயே அட்ரஸ் கேட்டு வருபவர்களை நேராய் சகாயத்திடம் அனுப்பி வைப்பார்கள்.
தட்டில் இருந்த தோசையை சட்னியில் நனைத்தவர், “என்னம்மா ஜெயராமனுக்கும் உனக்கும் சண்டையா?…” சகாயம் சாப்பிட்டுக்கொண்டே கேட்கவே.
தன் நினைவுகளில் இருந்து களைந்தவள், சகாயம் கேட்டதை உணர்ந்து திகைத்தாள். சண்டைக்கான காரணத்தை எப்படி சொல்வதென அறியாது இருகைகளையும் கோர்த்துக்கொண்டவள் அவர் பேசுவதை கவனிக்காதது போல நடித்தாள்.
அவளை நிமிர்ந்தும் பாராமல், “விக்ரம் நாளைக்கு இங்கே வரானாம்?…” அவர் அவள் தலையில் ஒரு வெடியைப் போட்டார். அனைத்தும் நானறிவேன் என்பது போல.
அவரை அதிர்ந்து பார்த்தாள் எப்படி தெரியும் என்பது போல், “நான் மிலிட்டரியில் கர்னலா இருந்தவனாக்கும்.
நாட்டோட நிலவரத்தை என் விரல் நுனியில் வைச்சுக்கிற எனக்கு, நான் வளர்த்திய பொண்ணு எதுக்கு சிரிப்பா, எதுக்கு கண் கலங்குறா. அவ எப்போ அமைதியாவான்னு தெரியும் மகளே. உங்கப்பன் ஒரு அப்பாவி, வெளுத்ததெல்லாம் வெள்ளைன்னு நினைப்பான். உதட்டு சிரிப்பே அவனுக்கு போதுமானது. அதிலேயே அவன் மனசு நிரம்பிடும். ஆனா நான் உன் கண்ணுல சிரிப்பை தேடுவேன் மகளே…” சகாயம் அவளை பரிவுடன் பார்க்க.
அதில் கண்கள் வழக்கம் போல கலங்கி விடவே, தன்னை சமாளித்துக்கொண்டவள், “கர்னல் சார் கரண்டி பிடிக்க வந்த கதையை சொல்லுங்களேன் கேட்கலாம்…” என்றவள் பேச்சை மாற்றினாள்.
அதைப் புரிந்து கொண்டவராய் உற்சாகமாய் பேசலானார். தன் மிலிட்டரி வாழ்க்கையை பற்றி பேச ஆள் கிடைத்தால் போதும் அவருக்கு. மணிக்கணக்கில் பேசுவார்.
தாட்சா கேட்கவும், “அப்போவெல்லாம் ஊர்ல எங்க சண்டையோ அங்கே கண்ணை மூடிட்டு அதுக்கு காரணம் சகாயம்னு சொல்லிடலாம். அத்தனை கோபம் வரும் எனக்கு. எனக்கு அறிவுரை சொல்லி அடிக்க வந்த அப்பா கூட சண்டை போட்டுட்டு ஊரை விட்டு ஓடிய நான் மிலிட்டரியில் சேர்ந்தேன். ஏதோ என் விதி கடவுள் ஒரு காலை பரிச்சுக்கிட்டார்.
அங்கே எனக்கு வேற வேலை தந்தாலும், திருப்தியில்லை. அதனால நிம்மதியா மீதி வாழ்நாளை கழிக்கணுமேன்னு இங்கே வந்தேன், அப்பா என்மேல உள்ள கோபத்தில் இருக்குற ஒரு வீட்டையும் அண்ணனுக்கே எழுதி தந்துட்டார். சரின்னு இருக்கவும் இடம் இல்லை, இங்கே சத்திரத்துல தங்கி கிடைக்கிற வேலையை பார்த்தேன். ஒரு நாள் உங்கப்பன் கடை வைச்ச புதுசுன்னு நினைக்கிறேன்…” சகாயம் சரியாய் நினைவு வராமல் யோசிக்க.
அவன் தலையில் தன் துண்டால் அடித்த சந்தனு, “சரியான நியாபக மறதிம்மா இவனுக்கு. கேட்டா மிலிட்டரி மேன்னு பெருமைதான்…” என நண்பனை கேலி செய்த சந்தனு.
“நான் கடை வைச்ச புதுசும்மா அது. இவன் என்கூட படிச்ச நண்பன். ஆனா அடையாளமே தெரியலை எனக்கு. மிலிட்டரியில் சேர்ந்து ஆள் சும்மா ஜம்முன்னு முரடனாயிட்டான். கடையில் வேலை கிடைக்குமான்னு வந்து நின்னான்… அப்போ உனக்கு நாலு வயசுன்னு நினைக்கிறேன்…” இப்பொழுது அவர் யோசிக்க.
வாய்விட்டு சிரித்த சகாயம், “பாரும்மா இவனே மறந்துட்டு என்னை சொல்றான். அப்போ உனக்கு நாலு வயசுதான்ம்மா. எனக்கு இப்போ மாதிரிதான் பெரிய மீசை. அப்போவே உனக்கு என் மீசை மேலதான் கண்ணு…” என்று விட்டு கம்பீரமாய் தன் மீசையை முறுக்கிக்கொண்டவர்.
“உங்கப்பனை எனக்கு அடையாளம் தெரியவும் சங்கடமாக போச்சு. என்னடா இவன் முன்னாடி இப்படி நிக்குறோமேன்னு. அப்புறம் நீ என் மீசையை தொட நினைக்க நான் உன்னை தூக்க. இவனுக்கு என்னை அடையாளம் தெரிஞ்சு போச்சு. வாய்க்கு வந்தபடி திட்ட ஆரம்பிச்சுட்டான்னா பாரேன்…” என்றவர் அந்த நாட்களின் நினைவில் நெகிழ.
“எனக்கும் கோபந்தான். அடையாளம் தெரிஞ்சுகிட்டு அப்படியே போறான்னு. ஏன்னா இவன் குடும்பம் பண்ண கூத்தையெல்லாம் கேள்விப்பட்டவன்தானே நான். சரிதான் மிலிட்டரியில் சந்தோசமா இருக்கானேன்னு மனசைத் தேத்திக்கிட்டேன்.. பார்த்தா இப்படி வந்து நிக்கறான். இங்கே இருக்க மாட்டேன் போறேன்னு சொன்னவனை சரிதான்னு நான் போட்ட போடுல ஒழுங்காய் இங்கேயே இருந்துட்டான்…” சந்தனு வெள்ளையாக சிரிக்கவும்.
நண்பர்கள் இருவரையும் சந்தோசமாய் பார்த்திருந்தவளுக்கு ஆச்சரியம், சந்தனு மென்மையானவர், சகாயமோ இடிபோன்றவர். இவர்களுக்குள் எப்படி இப்படி ஒரு நட்பு என்பதுபோல.
சொல்லப் போனால் அந்த கொடுமையான தினத்தில் தான் கருவுற்ற செய்தியை அறிந்து, உறவினர்கள் எல்லாம் அவளைத் தூற்ற. சந்தனு அந்த நிலையிலும் தன் மகளை திட்ட மனது வராமல் கண்கலங்கி நின்றார்.
ஆனால் சகாயம்தான் தன்னிடம் உள்ள பெல்ட்டை எடுத்து அவளை விளாசி தள்ளிவிட்டார். அடி தாங்காமல் அவள் கெஞ்சிக் கதறிய போதும் அவர் விடவில்லை. ஒழுக்க நெறிகளை கடைபிடிக்க வேண்டும் என்று நினைக்கும் முன்னால் கர்னல் அவர். அப்படியிருக்கையில் திருமணத்திற்கு முன்பே கர்பம் என்று வந்தால்?…
அதற்குமேல் அவள் யோசிக்கும் முன்னர்,
அவள் போன் அவளை ஒலி எழுப்பி அழைக்கவும். எடுத்துப் பார்த்தவள் ஜெயராமன்தான் அழைத்திருக்கவும் அழைப்பை ஏற்கவில்லை.
“யாரும்மா போன்ல எடுத்துப் பேசு…” சந்தனு அறிவுறுத்தவும்.
அதை கவனிக்காதவளாய், “சரிதான் கர்னல் சாருக்கு கவர்ன்மெண்ட்ல வேற உத்தியோகம் தருவாங்களே. பின்னே எதுக்கு இந்த வேலையாம்?…” வாய்க்குள் சிரித்தபடி மீண்டும் சகாயத்தை வம்பிழுத்தாள்.
அதற்கு அவளை கேலியாய் பார்த்த சகாயம், “எனக்கு அங்கே பிடிக்கலைம்மா. பூர்வீக இடத்துல காலம் கழிக்க ஆசை. ஆனால் அப்படியே இருந்திருந்தா கண்டிப்பா கவர்ன்மெண்ட்ல கொடுத்த வேலைக்கு போயிருப்பேன்தான். ஆனால் அழகான குட்டிப்பொண்ணு என் மீசையை பிடிச்சு இழுத்து இங்கேயே எங்க கூடவே இருடா முரட்டுப்பயலேன்னு சொல்லிட்டா…” என்றவர் அன்றைய நினைவில் தாட்சாவின் காதை லேசாய் முறுக்கியவாறே சிரிக்க.
அவளையும் அவர் சிரிப்பு தொற்றிக்கொள்ள, வலியில் அவரை போலியாய் முறைத்தபடியே காதைபிடித்துக்கொண்ட தாட்சாவுக்கும் அன்றைய நாற்களின் நினைவுகள். கூடவே தான் விளையாடிய தன் விளையாட்டுத்தோழனின் நினைவும் சேர்ந்து கண்கள் கரித்தது அவளுக்கு.