அன்று சம்யுக்தா துணிக்கடையை விட்டு வெளியேறிய போது, துணையாகப் போகிறவனைப் சந்தித்துப் பேசியதோடு சரி!
அவனின் ‘சம்யு’ என்ற சுருக்க அழைப்பு தந்த பெயர் தெரியா இதத்துடன், அகம் தித்திக்க அவன் இறக்கிச் சென்ற இடத்திலே உறைந்து நின்றிருந்தவளை, அரவம் கேட்டு வெளியே வந்த சத்யா தட்டி எழுப்பி நிஜத்துக்கு அழைத்து வந்ததெல்லாம் வேறு கதை.
அதற்கு மறுநாள் அவன் அழைப்பு விடுத்த போது, அவளின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
அவனிடமிருந்து வந்திருந்த அழைப்பை வெகு நேரம் கழித்துப் பார்த்தவள் தயங்கித் தயங்கி அவனுக்கு அழைப்பு விடுத்து, மன்னிப்பு இறைஞ்சி ஒருவாறு அவனை சமாளித்துவிட,
‘இனிமே மறக்காம சார்ஜ்ல போடு சம்யு!’ என்றவன்,
‘உன் பேர் கொஞ்சம் பெருசாருக்கு. ஸோ நான் உன்னை இப்படி கூப்பிட்டுக்கலாம் தானே?’ என தன் சுருக்க விளிப்புக்கான காரணத்தை இயம்பி, அவளின் இணக்கத்தையும் பெற்றுக் கொள்ள மறக்கவில்லை.
ஆனால், ‘இதுக்கெல்லாம் போய் அனுமதி கேட்கலாமா என்ன?’ என மனதினுள் பல நாட்கள் மறுகித் தவித்ததென்னவோ சம்யுக்தா தான்.
அதன் பிறகு வந்த நாட்களிலும் பல தடவைகள் அவனிடமிருந்து அழைப்புகள் வந்தன. ஒரு தடவையேனும் அவன் அழைத்த கையோடு அழைப்பை ஏற்று யுக்தா பேசியதாகத் தெரியவில்லை.
ஒன்று, அவன் அழைக்கும் போது அவளின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருக்கும். இல்லையேல் அழைப்பு சென்றும் கூட வேலை காரணமாகவோ அல்லது அலைபேசி செய்யும் எதிர் சதியாலோ அவள் அந்த அழைப்பைத் தவற விட்டிருப்பாள்.
நேரம் சென்ற பிறகு அவளாகவே தான் பதறித் துடித்துக் கொண்டு யதுநந்தனுக்கு அழைப்பு விடுத்து, காரணத்தை திக்கித் திணறி எடுத்து இயம்புவாள். இப்படியே தான் நாட்கள் கடந்திருந்தன.
பாவம், அவளும் என்ன தான் செய்வாள்?
தலை மீது ஆயிரம் வேலைகள் குவிந்திருக்கும் பட்சத்தில் நினைவு கூர்ந்து அலைபேசியை சார்ஜில் போட மறந்து போவாள். முன்பெல்லாம் அலைபேசி அவ்வளவாக உபயோகத்துக்கு உதவவில்லை என்றபடியால், இப்பொழுதும் அது வேண்டாப் பொருள் தான் என்ற எண்ணம், அலைபேசியை சார்ஜில் போட முடியாமல் அவளை மறக்கடிக்கச் செய்கிறது போலும்!
அதுவுமன்றி அந்த டப்பா அலைபேசி, நாள் ஒன்றுக்கு நாலைந்து தடவைகள் சார்ஜ் ஏற்றினால் தான் இருபத்திநான்கு மணி நேரமும் விழிப்பில் இருக்கும்.
புதிதாக ஒரு அலைபேசி வாங்கி விடலாமா என்று நினைக்கும் போதெல்லாம், ‘அந்த பணத்துக்கு ஏதாவது உருப்படியா பண்ணலாமே’ என்ற எண்ணமும் கூடவே தோன்றி, அவளது ஆசையை முளையிலே கிள்ளி எறிந்து விடும்.
எது எப்படியோ, வழமை போல் இன்றும், சாந்தனாவுடன் உரையாடிவிட்டு கூடத்து மேஜையிலே அலைபேசியை வைத்து விட்டு வீட்டு வேளைகளில் ஆழ்ந்து போன தன் மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டவள், கைகளைப் பிசைந்தாள்.
அவன் கேள்வி தொடுத்தும் பத்து நிமிடங்கள் கடந்து போயின.
அவளையே சில நொடிகள் பார்த்திருந்த யதுநந்தன், “எல்லாம் கரெக்ட்டா இருக்கா?” என்று கேட்க, படக்கென்று தலை தூக்கிப் பார்த்தவள்
“ஆங்! என்ன?” என புரியாமல் விழிகளை சுருக்கினாள்.
சட்டென்று உதட்டோரம் துளிர்த்த புன்னகையை அவள் காணாதவாறு மறுபுறம் திரும்பி மறைத்துக் கொண்டவன், “கைவிரல் நகம் எல்லாம் கரெக்ட்டா இருக்கானு கேட்டேன். எவ்ளோ நேரமா தான் அதையே ஆராய்ஞ்சிட்டு இருப்ப..” என்க,
“சார்..” என்றவளுக்கு முகத்தை எங்கு கொண்டு சென்று வைப்பதென்றே தெரியவில்லை.
“லன்ச் எடுத்துட்டியா?” என்று கேட்டவன் மணிக்கட்டைத் திருப்பிப் பார்த்துவிட்டு, நேரம் மூன்றரை மணி என கடிகார முட்கள் உணர்த்தி நின்றதும், சம்யுக்தாவை ஏறிட்டான்.
ஆமெனும் விதமாகத் தலை அசைத்தவளுக்கு மனமெங்கும் சில்லென்ற உணர்வு பரவியது.
இந்த சாதாரணமான அக்கறை வார்த்தை கூட அவளுக்கு தேவாமிர்தமாய் இனித்தது.
சாவித்திரி கட்டிலோடு ஆகிவிட்ட பிறகு, இம்மாதிரியான அக்கறை வார்த்தைகள் அரிதிலும் அரிது! அவளே சென்று அவருக்கு உணவூட்டி கவனித்துக் கொள்வதால், அவளும் வேளா.வேளைக்கு வயிற்றை நிரப்பிக் கொள்வாள் என்ற நம்பிக்கையில், ‘சாப்பிட்டியா?’ என்று அவர் கேட்பது கூட அத்தி பூத்தாற்போல என்றோ ஒருமுறை தான்..
அநேகமாக சத்யாவுடன் சேர்ந்தே உணவருந்துவதால், அவளுக்கு அக்காளிடம் அக்கறை காட்ட சந்தர்ப்பம் கிட்டவில்லை என்றிருக்க, மற்றவளைப் பற்றி சொல்லவும் தான் வேண்டுமா என்ன..
கீழுதட்டைக் கடித்தபடி மூச்சை இழுத்து வெளியேற்றி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், ‘நீங்க?’ என்ற கேள்வி தொக்கிய முகத்தோடு அவனைப் பார்த்தாள்.
அதை அவன் புரிந்து கொண்டானோ இல்லையோ, “நானும் லன்ச் எடுத்துட்டு தான் வந்தேன். நீ ஏதும் வேலையா இல்லையே? பாப்பாவை வெளிய கூட்டிட்டு போய் பல நாளாச்சு..” என்றான்.
அவன் கூற வருவதன் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்டவள், குதூகலிக்கும் மனதுடன், “நான் ஃப்ரீ தான்..” என்று கூறியபடி யுவனியைத் தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்டாள்.
மகிழுந்து மெல்ல சாலையில் வழுக்கியது!
அவ்வளவு நேரமும் கை, முகம் என பூசிக் கொண்டு இனிப்பை வெகு ரசனையுடன் ருசித்துக் கொண்டிருந்த யுவனி, திடீரென்று காற்றில் பறக்கும் உணர்வில் பயந்து மெல்ல தலை தூக்கிப் பார்த்தாள்.
அன்னையைக் கண்டதும் சிறியவளின் தாமரை வதனம் பளிச்சிட்டது.
“மம்மீ.. மம்மிஈ..” என்ற இடைவிடாத ராக அழைப்பினூடே முத்தங்களால் இனிப்பை யுக்தாவின் முகத்துக்கு இடம் மாற்றினாள், யுவனி.
அவளது கள்ளமற்ற அன்பில் மனம் நெகிழ்ந்தது, வஞ்சிக்கு.
இருவரின் பாசப் போராட்டத்தைக் கடைக் கண்ணால் பார்த்தபடி லாவகமாக கார் செலுத்திக் கொண்டிருந்த நந்தனிடமிருந்து, வருத்தத்தைப் பறைசாட்டும் ஈரப் பெருமூச்சொன்று வெளிப்பட்டது.
‘இங்க பல்லவி இருந்திருந்தாலும் இப்படித் தான் பாப்பா கொஞ்சி இருப்பால்ல?’ என்ற எண்ணம் அவனையும் மீறி எழ, தொண்டைக்குள் துக்கப் பந்து உருண்டது.
சற்று நேரத்தில் கார் வந்து ஒரு பூங்காவுக்கு முன் தன் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும் வரை, சதங்கை அவிழ்ந்து சிதறியதோ சந்தேகிக்க வைக்கும்படியான யுவனியின் மழலை சிரிப்பும், இடைக்கிடையே ‘மம்மி’ என்ற கொஞ்சல்களும் மட்டுமே அவ்விடத்தை நிறைத்திருந்தது.
காரை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கிக் கொண்டவன் மறுபக்கக் கதவை அவளுக்காகத் திறந்து விட்டு நகர்ந்து நிற்க, சம்யுக்தா சிறியவளுடன் இறங்கிக் கொண்டாள்.
யுவனியின் சாக்லேட் வண்ணம் பூசிய தோற்றத்தைப் பார்த்ததும் நந்தனுக்கு மனப்பாரம் நீங்கப் பெற்று, முகத்தில் சிரிப்பு மலர்ந்தது.
“இதுக்கு தான் வீட்டுக்கு போறப்போ சாக்லேட் வாங்கி தரேன்னு சொன்னேன். கேட்கவே இல்ல, பெரிய மனுஷி! அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி என்கிட்ட வாங்கி எடுத்தா..” எனக் கன்னம் கிள்ளி விட்டவாறு மகளிடம் தொடங்கிய பேச்சு, யுக்தாவில் முடிவுற்றது.
உதட்டில் நெளிந்த முறுவலோடு, “முன்னாடி போங்க, இதோ வந்திடறோம்..” என்றவள் மெல்ல நகர்ந்து, பூங்காவின் இரும்பு கேட்டோடு அமைக்கப்பட்டிருந்த குழாயை நெருங்கினாள்.
மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டியபடி இருவரையும் கவனித்த நந்தன், யுவனியை சுத்தப்படுத்தி விட்டு நிமிர்ந்தவளின் முகம் பார்த்து மானசீகமாக தலையில் தட்டிக் கொண்டான்.
சிறியவள் செய்த கைங்காரியத்தினால் பெண்மானின் முகத்தில் ஒட்டிக் கொண்டிருந்த இனிப்பு, இப்போது காய்ந்து வடுவைப் போல் தோற்றமளித்தது.
அவளருகே சென்று யுவனியை வாங்கிக் கொண்டவன், தன் கன்னத்தில் ஆள்காட்டி விரலால் தட்டிக் காட்ட, பாவையின் முகம் அவளின் உள்மன அதிர்வைப் பட்டவர்த்தனமாய்க் காட்டியது.
“எ.. என்ன!”
“உன் கன்..” அவன் மேற்கொண்டு தொடர முன்பே, “என் கண்ணுல என்ன?” எனப் பதற்றத்துடன் வினவி கண்களை கசக்கத் தொடங்கினாள் சம்யுக்தா.
வாயினுள் நாவை சுழற்றியவனின் பார்வை அவளை மெல்லமாய் முறைத்தது. சொல்ல வருவதை முழுதாகக் கேட்காமல் அவளாகவே ஒன்றை ஊகித்துப் பதறியும் விட்டாளே எனக் கூடவே சிரிப்பும் வந்து தொலைத்தது.
தலையை இருபுறமாக ஆட்டி தன் சிரிப்பை கட்டுப்படுத்தியவன், குனிந்து குழாயைத் திருகி தன் வலக்கரத்தை முழுவதுமாக நனைத்துக் கொண்டு நிமிர்ந்தான்.
“சொல்லுறதை முழுசா கேட்க மாட்டியா? உன் கன்னத்துல சாக்லேட் ஒட்டி இருக்கு..” என்று கொண்டே தன் ஈரப் புறங்கையை அவளின் கன்னத்தில் வைத்து அழுத்தி மெல்ல நகர்த்தினான்.
உலகமே தன் இயக்கத்தை நிறுத்தி விட்ட பிரமையில் ஸ்தம்பித்து பனிக்கட்டியாய் உறைந்தாள் சம்யுக்தா. அவன் அணிந்திருந்த மோதிரம், நீர் பட்டுக் குளிர்ந்து, அவளை சிலிர்க்க வைத்தது.
அவன் எதையும் பெரிதாய் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. மீண்டும் குனிந்து கையை கழுவிக் கொண்டவன், பாக்கெட்டிலிருந்த கைக்குட்டையை எடுத்து ஈரத்தை ஒற்றி எடுத்தபடி யுவனியுடன் அங்கிருந்து அகன்றான்.
செவ்வானமென சிவந்த கன்னங்களோடு முகத்தை நீரால் அடித்துக் கழுவிக் கொண்ட சம்யுக்தா, இதயத்தின் இருப்பிடத்தை நீவி விட்டபடி அவனைப் பின் தொடர்ந்தாள்.
இருவரும் ஒரு கல் இருக்கையில் அமர, யுவனி தந்தையிடமிருந்து அன்னையாகப் போகிறாளின் கைகளுக்குத் தாவிக் கொண்டாள். தன்னை விட பாப்பாவுக்கு அவள் முக்கியமாகப் போயிற்றே என சிறுபிள்ளைத் தனமான பொறாமை எட்டிப் பார்த்தது யதுநந்தனுக்கு.
பருவங்கண்ட பிறகு அவளது வாழ்வில், அவள் தனக்கென்று செலவு செய்த நேரங்களைக் கூட்டி கழித்துப் பார்த்தால் முழுதாக ஒருவார கால நேரம் கூடத் தேறாது. மனதின் ஓரத்தில் சேமித்து வைக்கத் தகுந்த ஒரு இனிய நினைவிது என குத்தாட்டம் போட்டது, அவள் மனம்!
யுவனி அவளது கழுத்தைக் கட்டியபடி கன்னத்தோடு இழைந்து கொண்டிருக்க, சிறியவளைச் சுற்றி தன் கைகளால் அணைகட்டிக் கொண்டு இயற்கையில் லயித்திருந்தாள் சம்யுக்தா.
இருவரின் அந்நியோன்யம், ரசனை மிகுந்த ஒருவனுக்கு கவி படைக்கும் ஆவலை நொடிப் பொழுதில் தூண்டி விடும் என்பதில் சந்தேகமில்லை.
கவிக்கு வரிகள் படைத்தது, அவர்களின் அந்த இறுகிய அணைப்பும், ஆத்மார்த்தமான கொஞ்சலும்!
அலைபேசித் திரையை வெகு தீவிரமாகத் தட்டிக் கொண்டிருந்த நந்தனின் பார்வை ஏதேர்ச்சையாக அவர்களில் பதிந்தது. இமைக்க மறந்தன, ஆடவனின் விரிந்த கண்கள்..
அன்று மூர்த்தி அழைத்து வந்து, இதே பூங்காவில், இதே கல் இருக்கையில் அமர்ந்து கை நீட்டிக் காட்டிய கண்குளிர வைக்கும் காட்சிகளை இன்று கண்ணெதிரே பார்ப்பதும் மூச்சடைத்தது நந்தனுக்கு.
கருநீலத்தில் இடைக்கிடை மஞ்சளை விசிறியடித்தாற் போன்ற வண்ண சுடிதாரில், சிறியவளைக் கனிவுருக நோக்கியிருந்த மஞ்ஞையின் பார்வையும், மகளின் களிப்பு விஞ்சிய மழலை முகமும் அவனை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தியது.
அன்று பிற மழலைகள் தாயன்பில் கிண்கிணி நாதம் எழுப்பியதைக் கண்டு யோசனையில் மூழ்கிய மனம், இன்று தன் உதிரத்தின் உற்சாகத்தைக் கண்டு பேருவகை அடைந்தது.
அவனின் உதடுகள் அனிச்சை இளநகையில் விரிந்து, சிந்தை ஆனந்த வாவியில் அண்டித் திளைத்திருந்தது.
பார்வை மெல்ல, மரத்துக்கு மரம் பறந்து திரியும் பட்சியாய் மகளிடமிருந்து விலகி கருங்குழலுடையாளின் நிர்மலமான முகத்தில் நிலைத்தது.
அவனது ஆழ்ந்த பார்வை அவளுக்குள்ளும் ஒருவித குறுகுறுப்பை ஏற்படுத்த, அவன் முகம் பார்க்க வெட்கி அவஸ்தையுடன் சிரம் தாழ்த்தியவளின் பார்வை, தன் கன்னம் தீண்டி ‘நாணம்’ என்ற சொல்லுக்கு அர்த்தம் உணர்த்திச் சென்ற காளையின் வலக்கரத்தில் பதிந்தது.
மோதிரம்! ஆமாம், நீலக் கல் பதித்த இந்த மோதிரம் தானே தன்னை சிலிர்க்கச் செய்தது என எண்ணியவளின் முகத்திலிருந்த உட்சாகம் திடீரென்று வடிந்து போனது.
‘ஆனா இந்த ரிங் ஏன் அவரோட மோதிர விரல்ல இருக்கு?’ என்று மனசாட்சி தொடுத்த கேள்விக்கான விடையை யோசிக்க முற்பட்டவளின் முகத்தில் மெல்ல இருள் படர்ந்தது.
மடியில் துள்ளிக் கொண்டிருந்த யுவனியை பத்திரத்துக்காக தன் நெஞ்சோடு சாய்த்தபடி ஆடவனின் புறமாகத் திரும்பி அமர, அவளின் அசைவில் தன்னிலை மீண்டவனது கண்கள் அலைபாய்ந்தது, அவனின் மனத்தைப் போலவே!
“நான் ஒன்னு கேட்கலாமா?”
சம்மதமாகத் தலை அசைத்து, “என்ன?” என்று வினவியவன் குறுஞ்செய்தி வந்ததாக அலைபேசி குரல் எழுப்பியதும், தொடுதிரையில் எதையோ வேகமாகத் தட்டினான்.
அவளிடம் அமைதி தொடர்ந்தது.
அதற்குள் இருக்கையில் விட்டு வேகமாக எழுந்து நின்றவன், “இப்போதைக்கே இருட்டிடுச்சு. வா போகலாம்!” என்று கூறிக் கொண்டு நடக்க,
“கேட்கலாமா, வேண்டாமா?’ என்ற யோசனையோடு பின்னோடு சென்றவளுக்கு, அதை அறிந்து கொள்ளவில்லை எனில் இனி வரும் நாட்களில் ராத் தூக்கத்துக்கும், நிம்மதிக்கும் ‘பாய் பாய்’ தான் சொல்ல வேண்டும் என தெள்ளத் தெளிவாய் புரிந்தது.
ஆனால் தயக்கம் அவளைக் கேட்க விடாமல் தடுத்தது.
உரிமையாய் கேட்கும் அளவுக்கு நெருக்கமில்லை இருவரிடையே! அந்த உரிமையை அவன் தனக்குத் தரக்கூட தயாராக இல்லை எனும் போது, தான் இதைக் கேட்கப் போய், ‘உனக்கெதுக்கு இதுலாம்?’ என முகத்திலடித்தாற்போல் எதையாவது அவன் பேசி விட்டால்?
அவள் யோசனையுடனே காரருகே வந்து நிற்கும் போது, வேக நடையிட்டு அங்கு வந்திருந்த நந்தன் சற்றுத் தள்ளி யாருடனோ உரையாடிக் கொண்டிருந்தான்.
வந்தவன் கீர்த்தனாவின் கணவன் என்பதை சற்று உற்றுக் கவனித்த பிறகு சந்தேகத்துக்கு இடமின்றி இனங்கண்டு கொள்ள முடிந்தது யுக்தாவால்.
ஆதவன் தன் கையிலிருந்த ஒரு சிறு பையை அவனிடம் கொடுப்பதையும், பக்கமாக அணைத்து விடுவித்து நன்றி புகன்றபடி நந்தன் அதை வாங்கிக் கொள்வதையும் பார்த்திருந்தவள்,
‘ஓ..ஹோ சம்யு! அவர் இதுக்காக தான் நேரம் போகுதுனு சொல்லி அவசரமா வெளிய வந்திருப்பாரு போல. நீதான் நான் சொல்ல வருவதை இவர் கேட்கவே இல்லனு டென்ஷன் ஆகிட்ட!’ என்று நினைத்துக் கொண்டாள்.
அவளின் எண்ணத்தைப் போலவே, சற்று நேரத்தில் ஆதவனை அனுப்பி வைத்து விட்டு அங்கு வந்தவன் கையிலிருந்த பையை குனிந்து காரினுள் வைத்து விட்டு, “ஏதோ கேட்க வந்தியே சம்யு?” என்று வினவியபடி யோசனையுடன் அவள் முகம் நோக்கினான்.
இமைகளை பலமுறைகள் சிமிட்டி தன்னை சமன்படுத்திக் கொண்டவள், “அ.. அது.. உங்க கைல மோதிரம்..” எனத் தொடங்கி, மேலும் பேச நா எழாமல் அமைதியாகிப் போக,
“மோதிரம்.. இதுவா?” என்று கேட்டபடி கையிலிருந்த மோதிரத்தை வருடினான், திடீரென்று கண்களில் குடி வந்த ரசனையுடனே.
“ம்ம்..”
“இது பல்லவியோட செலக்ஷன். என் கலியாண மோதிரம்!” என்றவன் மணிக்கட்டைத் திருப்பி நேரத்தைப் பார்த்து விட்டு, “நேரமாகுது. போகலாமா?” என்றபடி ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டான்.
எதிர்பார்த்த பஷில் தான் என்றாலும் மனம் வலித்தது சம்யுக்தாவுக்கு. அவன் விளக்காமலே அந்த ‘பல்லவி’ யாரென்றும் புரிந்தது.
உட்சாகம் வடிந்த, சோர்ந்த உடல் மொழியோடு காரினுள் ஏறிக் கொண்டாள், சமயுக்தா.
‘யுவனிக்காக மட்டுந்தான்!’ என அவன் பல தடவைகள் அழுத்திக் கூறியபோதே, அவனுக்கு தன் மனைவி மீதான நேசம் மிக ஆழமானது என்பதை ஊகித்துத் தான் வைத்திருந்தாள்.
உண்மையை சொல்லப் போனால், தொடக்கத்தில் அவளைப் பொறுத்த வரை இந்தத் திருமணம் சாந்தனாவின் எதிர்காலத்தையிட்டு அவள் எடுத்த முடிவு!
அதனால், ‘எதுவாயினும் சமாளித்து கொள்ளலாம்’ என்ற எண்ணப் போக்கோடு தான், மறுமணமாக இருப்பினும் சரியே என தலை அசைத்து வைத்திருந்தாள்.
ஆனால் பாதியிலே, உணர்வுகள் தன் வேலையைக் காட்டி நேச விதைகளை மனதெங்கும் தூவி வேர்விடச் செய்து விட்டதால், சமாளிப்பதை மீறி அவளுக்கு வெகுவாக வலித்தது.
‘இவ்வளவு வலிக்கும்னு நான் நினைக்கவே இல்ல..’ என மனம் குமுறியது, யுக்தாவுக்கு.
முதல் தடவையாக ஒரு ஆடவனிடத்தில் விருப்புக் கொண்டிருக்கிறாள். அந்த விருப்பம், தரகர் பாதியை முழுங்கி மீதியை மட்டும் சாவித்திரியிடம் சொல்லிச் சென்றிருந்த போது, பெண் வீட்டு சீதனம் எதிர்பார்க்காத ஆண்மகன் என்ற சிலிர்ப்பினால் துளிர் விட்டது.
அவளைப் பொறுத்தவரை, நந்தனுக்கு முன்பு தன்னைப் பெண் பார்க்க வந்த அத்தனை பேரும் பெண் வீட்டினரை எதிர்பார்க்கும் முதுகெலும்பு இல்லாத ஆண்மக்கள்.
இவன் மட்டுமே அவர்களுக்கு விதிவிலக்கென்று நினைத்திருக்க, அந்த எண்ணத்திலும் மண் விழுந்தது, அவனுக்கிது மறுமணம் என அறிந்ததும்!
ஆனால் முதல் சந்திப்பில் அவனின் குணம் அவளை ஈர்த்தது. பார்த்ததுமே மம்மி என ஒட்டிக் கொண்ட சிறியவளின் மாசற்ற அன்பு அவளை நெகிழச் செய்தது.
துளிர் விட்ட நேசத்தோடு, சாந்தனாவின் திருமணம் வேறு அந்நேரத்தில் மண்டையைக் குடைய, உடனே சரியென்று விட்டவளை, தன் வருங்கால கணவனுக்கென்று அவள் சேர்த்து வைத்த காதல் மொத்தமும் இன்று படுத்தி எடுக்கின்றது. அவ்வளவே!
அவள் சிந்தனையில் ஆழ்ந்து கண்ணாடி வழியாக வெளியே இலக்கின்றி வெறித்திருக்க, அவளது திடீர் அமைதிக்கான காரணம் என்னவாக இருக்குமென்ற யோசனையோடு காரை செலுத்தியவன், அடுத்த அரைமணி நேரத்தில் அவளது வீட்டை அடைந்திருந்தான்.
தனக்கு தெரிந்த பாஷையில் கைகொட்டி பாடிக் கொண்டிருந்த யுவனியின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டவள் அவளைத் தூக்கி நந்தனின் மடியில் அமர்த்தி விட்டுக் கீழிறங்கப் போக,
“சம்யு!” என அழைத்து நிறுத்தி, கண்ணாடி வழியே குனிந்து என்னவென்று கேட்டவளிடம், “அது உனக்கு தான்..” என பின்சீட்டில் இருந்த பையைக் கண் காட்டினான்.
அது ஆதவன் எடுத்து வந்து கொடுத்த அதே பை தான்!
“எ.. என்ன?”
“என்னனு சொன்னா தான் வாங்கிப்பியாக்கும்!”
அசுவாரஷ்யமாக கை நீட்டி பையை எடுத்தவள் அதை நாலாபுறமும் திருப்பிப் பார்த்துவிட்டு, “எதுக்கு? எ..எனக்கு வேண்டாம் சார்..” என்க,
“வேண்டுமா வேணாமானு கேட்கல. உனக்காக தான் ஆதவன் கிட்ட சொல்லி வாங்கினேன். உனக்கு உதவும் சம்யு..” என்றான், அவள் மறுத்ததால் எழுந்த மெல்லிய சினத்துடனே!
கண்களை சுருக்கி அவனை நோக்கியவளின் பார்வை நொடி நேரம், ஸ்டீயரிங் வீலைப் பற்றியிருந்த அவனின் கரத்தில் பதிந்து மீண்டது.
“தேங்க்ஸ்.” என்றவள் அழுகையில் பிதுங்கிய இதழ்களோடு தன்னைப் பார்த்திருந்த யுவனியின் கன்னம் தட்டி விட்டு பின்னகர்ந்து நிற்க, கார் வழுக்கியது.
அந்நேரம் சிறியவளின் அழுகை சத்தமும் மெல்ல மேலெழுந்து காற்றோடு கலந்தது.
வீட்டினுள் நுழைந்ததும் முதல் வேலையாக கையிலிருந்த பையைப் பிரித்தவளைப் பார்த்து உள்ளிருந்து தலை நீட்டிப் பார்த்து பல்லிளித்தது, புதிய மாடல் சாம்சுங் ஸ்மார்ட் அலைபேசியொன்று!
மகிழ்வதை விடுத்து, ஏற்கனவே வருந்திக் கொண்டிருந்தவளின் மனம், ‘என்னால இதை கூட வாங்க வக்கில்லைனு நினைச்சிட்டாரு போல!’ என எண்ணி எரிச்சலடைந்தது.
பனிமழை பொழிந்து மனம் குளிரச் செய்தவனின் இந்த அன்புப் பரிசு, அவளின் தன்மானத்தை சீண்டிவிட்டு இருக்கையில் ஒய்யாரமாய் குந்தி வேடிக்கைப் பார்த்தது.
கனத்த மனதோடு தரையில் சரிந்து அமர்ந்தாள், சம்யுக்தா.