நிதர்சனக் கனவோ நீ! (Part 2) : 1:

4.7
(46)

அத்தியாயம் – 1

இன்னுமே அவளின் அதீத கற்பனை திறன் மிகுந்த இவ்வளவு நீண்ட கனவை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.

 

தன்மேல் அவனுக்கு அதே காதல் இருக்குமா? என மனதில் எழுந்த கேள்வியுடன் பதைபதைப்பாக திரும்பியவள் திகைத்தாள்.

 

அவனோ, மென் புன்னகையுடன் தான் நின்று இருந்தான்.

 

இவ்வளவு நேரம் விபீஷனுடன் வார்த்தைக்கு வார்த்தை பேசிக் கொண்டு இருந்தவளுக்கோ இப்போது ஜெய் ஆனந்த்தை பார்த்ததும் வார்த்தைகளோ தொண்டைக் குழிக்குள் சிக்கிக் கொண்டு சதி செய்தன.

 

“தியா, ஆர் யூ ஆல்ரைட்?” என்று தன் முதல் வார்த்தையை உதிர்த்து இருந்தான் ஜெய் ஆனந்த்.

 

ஆக, தன் முக உணர்வுகளை படித்து விட்டானா என்ன?

 

அடி வயிற்றில் குறுகுறுத்தது.

 

அவன் கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் கூறும் நிலையில் அவள் அல்லவே!

 

திருதிருவென விழித்தவள் “ஹான்”, என்றவள் குரல் அடைத்துக் கொண்டது.

 

அவனை பார்த்த விழி பார்த்த படி நின்று இருக்க, அவளின் பார்வை வீச்சோ அவனது பார்வையுடன் கலக்க, “தியா” என்றான் மென்மையாக …

 

அப்பப்பா… இந்த குரலை கேட்கவே பல ஜென்மங்கள் தவம் இருக்கலாம் போலவே என்று எண்ணிக் கொண்டவளுக்கு அவனது காதலை மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்ற பேராவல் எழுந்தது.

 

அவள் வாயை திறந்து பேசுவதற்குள் அங்கே வந்த வித்யா “என்னடி தூங்கி எழுந்து அப்படியே வந்திருக்க. ஆம்பளை பசங்க இருக்க வீட்ல இப்படியா வந்து நிற்கிறது?” என்று பேசிக் கொண்டே போக, அவளுக்குத் தான் தன்னவன் முன்னிலையில் இப்படி அன்னை திட்டுகின்றாறே என நினைத்து நொந்து கொண்டவள் “சாரி” என்ற படி மேலும் இங்கு நின்றால், தன்னவன் முன் மானம் போய்விடும் என்று ஊகித்தவள் வீட்டின் நுழைவாயிலை நோக்கி நடந்தாள்.

“அத்தை எதுக்காக தியாவை பேசுறீங்க?” என்ற அவனின் குரல், போகும் அவளின் செவியில் தேன் போல பாய்ந்தது.

 

‘அதே போல தான் பேசுறான். நம்ம கனவுல வந்தது மாதிரி ஒன்னும் நடக்கலைனாலும் இதுவும் லைட்டா நல்லா தான் இருக்கு’ என்று தனக்குள் பேசிக் கொண்டே தன் வீட்டை அடைந்தவள் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள வேகமாகத் தன் அறைக்குள் புகுந்திருந்தாள் பெண்ணவள்.

 

சற்று நேரத்திலேயே குளித்து விட்டு மீண்டும் ஜெய் ஆனந்த்தை பார்க்கத் துடித்த அவளின் மனதை சிரமப்பட்டு அடக்கியவள் அவன் அணிந்திருந்த ஷர்ட்டின் நிறத்திலேயே வெண்ணிற சுடிதாரொன்றை அணிந்துக் கொண்டவள் தன்னை அலங்கரிக்க ஆளுயரக் கண்ணாடியின் முன் அமர்ந்தும் விட்டாள்.

 

இங்கோ, ஜெய் ஆனந்த்தின் தோள் மேல தன் கையை போட்டுக் கொண்டே அவனைப் பார்த்தவன் “இத்தனை வருஷமா எப்படிடா பிட்டா பாடிய மெயின்டெய்ன் பண்ணிட்டு இருக்க?” என்று கேட்க…

 

அதற்கு மெலிதாக சிரித்துக் கொண்டவனோ “ நீ எப்படி மெயின்டெய்ன் பண்றியோ அதுபோல தான்” என்று தோள்களை குலுக்கிக் கொள்ள, “சரி தான் என்று சொன்னவன்  “நீ இல்லாம செம்ம போர் டா” என்று சொன்னவனை பார்த்து “ இஸ் இட்?” என்றான் கேள்வியாக…

 

“ஒப்கார்ஸ், என்றவன் குரலை செருமிக் கொண்டே அப்புறம் லவ் எல்லாம் எப்படி போகுது?” என்றான் ஒரு மார்க்கமாக…

 

“என்னை பார்த்தா லவ் பண்ணிட்டு வந்த போலவா தெரியுது?” என்றான் புருவம் உயர்த்தி…

 

“போட்டு வாங்க தான் கேட்டேன். நீ மேரேஜ் பண்ணிக்கிட்டா தானே என் ஆளை எனக்கு கல்யாணம் பண்ணிக்க முடியும்” என்றான் விபீஷன்.

 

இதழ் குவித்து ஊதிக் கொண்டே “லவ்வா ? நைஸ் ஜோக் என்று சத்தமாக சிரித்தவன் நோ ஐடியா வீட்டுல பார்க்குற பொண்ணை மேரேஜ் பண்ணிக்கிற எண்ணம் தான்” என்ற ஜெய் ஆனந்த்தின் வார்த்தைகள் வீட்டின் உள்ளே சந்தோஷமாக அவனைப் பார்க்கவென்றே ஓடி வந்த ஆஹித்யாவின் காதில் விழ,

அவ்வளவு தான் துடித்துப் போனாள்.

‘அப்போ அவ்வளவு தானா?’ என்று மனதில் கேட்டுக் கொண்டவள் புத்தி பேதலித்து போனவள் போல விழிகள் இரண்டும் கலங்க மீண்டும் கனவேதும் காண்கின்றோமா? என்ற எண்ணத்தில் தன் கையை நறுக்கென்று கிள்ளிப் பார்த்தாள் பேதை பெண்.

அந்தோ பரிதாபம்.

அடுத்த கணமே சுளீர் என்ற வலி அவளின் கையில் பரவி நிதர்சனத்தை விளக்கியது.

 

அப்படியென்றால் அவனின் தன் மீதான காதல் வெறும் கனவு தானா?

 

இதயம் விம்மியது.

 

அடுத்த நொடியே அவளின் மூளையோ, ‘ முட்டாள், கனவில் நடந்தவை யாவும் அச்சு பிசகாமல் நடக்கும் என்று யார் சொன்னது?’ என்ற கேள்வியை எழுப்ப, அவனின் கரை காணாத காதல் வேண்டும் என்று அவளின் மனதோ துடியாய் துடித்தது.

 

விபீஷனுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ஜெய் ஆனந்த்தை வெறித்தாள்.

 

கனவில் ஒரு வாழ்க்கையே வாழ்ந்து விட்டாள்.

 

அவனுக்காக மட்டும் அல்லவே ஒட்டுமொத்த குடும்பத்தின் கண்ணீரையும் அவள் அல்லவா உணர்ந்து படுக்கையிலேயே அழுது கரைந்தாள்.

 

இன்னுமே மனதின் ரணம் குறைந்த பாடும் இல்லை. இதில் மீண்டும் மீண்டுமா? நினைக்கையிலே ஆயாசமாக இருந்தது.

அவன், நான் கிடைக்கவில்லை என்றதும் பட்ட துன்பங்களை உணர்ந்தாள் அல்லவா!

இப்போது அனைத்தும் தலைகீழாக போய்விட்டதே!

இதயம் படபடக்க அங்கே இருந்த சோஃபாவில் தொப்பென அமர்ந்து விட்டாள்.

 

காலையிலிருந்து பைத்தியம் போல சுற்றித் திரிந்தவள் இப்போது விரக்தியாக அமர்ந்து விட, அவளையே யோசனையாக நோக்கிய படி தேனீரை அருந்திக் கொண்டே அவளருகில் வந்தமர்ந்த பவ்யாவோ “ சாரி டி” என்றாள்.

 

தன்னருகில் கேட்ட பவ்யாவின் குரலில் தன்னை நிலைப் படுத்திக் கொண்டே “என்ன சொன்ன?” என்று கேட்டாள்.

“என்னடி என்னை கெஞ்ச வைக்கிறியா?” என்று கேட்டாள்.

உள்ள தலைவலியில் இவள் வேறு என்று நொந்துக் கொண்டவள் “நான் எதுக்காக உன்னை கெஞ்ச வைக்க போறேன்? நீ கேட்டது என்னனு என் காதுல உண்மையாவே விழல பிகாஸ் நான் வேற திங்க் பண்ணிட்டு இருந்தேன்”. என்றாள் நெற்றியை அழுத்தி விட்ட படி…

“ஓகே, என்றவள் மார்னிங் உன்ன ரூடா ஏசிட்டு வந்துட்டேன் சோ அதுக்காக  சாரி. இப்படி மூஞ்சை தூக்கி வச்சிட்டு இருக்காத பார்க்க சகிக்கல” என்றாள்.

 

‘ஓஹோ மேடம் இவங்களுக்காக சோகமா இருக்கேன்னு நினைச்சிடாங்க போல, ஆஹி அப்படியே மெயின்டெய்ன் பண்ணிக்கோ’ என்று மனதில் சொல்லிக் கொண்டவள் “இட்ஸ் ஓகே நமக்குள்ள சண்டை வர்றது புதுசா என்ன?” என்றவள் வலுக்கட்டாயமாக சிரித்து வைத்தாள்.

 

“உன்னை அத்தை கூட்டிட்டு வர சொன்னாங்க சோ நானே வீட்டுக்கு வர்லாம்னு இருந்தேன் பட் தேங் கோட் நீயே வந்துட்ட என்ற படி தேனீர் கோப்பையை அவளின் கையில் திணித்தவள் நான் காலேஜ் கிளம்புறேன் என் செல்லம்ல கழுவி வச்சிடு”. என்று சொல்லி விட்டு சென்றவளை ஜெய் ஆனந்துடன் பேசிக் கொண்டு இருந்த விபீஷனின் பார்வை காதலாக அவளைப் பின் தொடர்ந்தது.

 ‘ ஒரு சாரியை கேட்டுட்டு என்னை வேலைகாரியாக்கி விட்டுட்டு போறா’ என்று கறுவிய படி எழுந்து கொண்ட பெண்ணவளோ சலிப்புடன் சமையலறைக்குள் நுழைந்திருந்தாள்.

 

அவளுள் ஆயிரம் எண்ணங்கள்.

 

அவன் தன்னை காதலிக்கவில்லை என்றாலும் வேறு யாரையும் அவன் விரும்பவில்லை என அவனின் பேச்சுக்களில் இருந்து புரிந்து கொண்டவளுக்கு சற்றே ஆசுவாசமாக இருந்தது.

 

ஒரு பெரு மூச்சுடன் சமையற் கட்டில் பாய்ந்தேறி அமர்ந்தவள் மனமோ ‘ வீட்டுல கல்யாண பேச்சு எடுத்த நாம குறுக்குல புகுந்திட வேண்டியது தான் சாருக்கு வீட்டுல பார்க்குற பொண்ணாமே வேணும்’ என்று நொடித்துக் கொண்டவளுக்கு சட்டென தூக்கி வாரிப் போட்டது.

 

என்னவோ மனதில் உறுத்தலாக இருக்க, கனவே என்றாலும் அவளின் கன்னித் தன்மையை அறிந்து ஆக வேண்டும் என்று மனம் ஒருநிலையில் இல்லாது தவித்தது.

இதை எண்ணும் போதே முட்டாள் தனமாக இருந்தாலும் காலையிலிருந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற நம்ப முடியாத அதிர்ச்சியில் அவளால் சாதாரணமாக இருக்கவே உடல் கூசியது.

 

அப்படியென்றால் நீ கன்னித்தன்மை உடையவள் இல்லையென்றால் என்ன செய்யப் போகிறாய்? என்ற கேள்வி எழ, திடுக்கிட்டு கலங்கிப் போனாள்.

 

எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டவள் ‘ இல்லையென்றால் கலங்கமான நான், என்னவனுக்கு தேவையே இல்லை. மொத்தமாக விலகி விடலாம்’ என்ற பதிலை அவள் மனம் சொல்லும் போதே இதயத்தை கசக்கிப் பிழிவது போல வலி எழுந்தது.

 

கிராமம் வேறு! எங்கே செல்வது? செல்ல வேண்டும் என்றால் அவன் நிருவகிக்கின்ற மருத்துவமனைக்கல்லவா போக வேண்டும்.

தலையில் கையை வைத்துக் கொண்டாள்.

 

என்ன சொல்லி எப்படி கேட்பது?

பரிசோதிக்க சென்றால் காரணம் கேட்டால் என்ன சொல்வது? என்ற எண்ணம் உள்ளத்தை பதற வைத்தது.

 

இது சரிப்பட்டு வராது சதையில் முள் குத்திவிட்டால், அப்புறப் படுத்த முள்ளை வலிக்க வலிக்க எடுத்தாலே அன்றி அதன் வழி குறையப் போவதே இல்லையே!

 

அதுபோல எதையாவது செய்தாவது தன் மனதின் உறுத்தலை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வெறியில் சமயற் கட்டில் இருந்து இறங்கிக் கொண்டவள் மெதுவாக ஹாலிற்குள் எட்டிப் பார்த்தாள்.

 

அவளவன் என்னவோ அழைப்பில் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

 

உடற்பயிற்சி செய்ய மேலே மொட்டை மாடிக்கு தானே வந்ததாக வேண்டும்.

‘பார்த்து பதமா கேட்டுடலாம் ரீசன் கேட்டா எதாச்சும் ரீசர்ச் அது இதுன்னு சொல்லி சமாளிச்சிடலாம்’ என்று தனக்குள் திட்டங்களை வகுத்துக் கொண்டே வேகமாக மொட்டை மாடிக்கு செல்லும் படிகளில் ஏறினாள்.

 

***********************************************************

 

 

துப்பட்டாவை கரத்தால் திருகிவிட்ட படி கேட்போமா? வேண்டாமா? என்று மொட்டை மாடியில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டு இருந்தாள்.

 

என்னவோ கேட்டு விட வேண்டும் என்ற எண்ணம் அலைக்கழிக்க, தடுமாற்றத்துடன் கைகளை பிசைந்த படி அடிக்கொரு தடவை படிகளை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவள் செவியோ கூர்மை பெற்றது.

 

‘ஹையோ… ஆஹி, என் ஜெய் பேபி தான் வர்றார் எப்படியோ சொதப்பாம கெத்தா நின்னு கேட்டுடு’ எனத் தனக்குள் தானே எச்சரித்துக் கொண்டே மாடிப் படியை வெறித்தவள் இதழ்களில் இருந்த புன்னகை வடிந்து போனது.

 

‘ இந்த வீணா போனவன் எதுக்கு இங்க வர்றான் இரிட்டடேங் இடியட். இவனால தான் எனக்கு இப்போ இந்த அவஸ்தை. சைக்’ என்று கறுவிக் கொண்டே விபீஷனை தீயாக முறைத்தாள்.

 

இவள் என்ன காலையில் இருந்து என்னை முறைத்துக் கொண்டே சுற்றுகின்றாள் என்ற யோசனையுடன் அவளைக் கடந்துச் சென்று டம்பல்ஸ்ஸை எடுத்து உடற் பயிற்சி செய்ய ஆரம்பித்து விட, அவளுக்கு தான் அவனைப் பார்க்க பார்க்க எரிச்சலாக வந்தது.

 

அதே கணம், காதில் ப்ளூ டூத்துடன் அழைப்பில் பேசிக் கொண்டே மேலே வந்த ஜெய் ஆனந்த்தைக் கண்டவள் முகமோ சட்டென பிரகாசமானது.

 

அவள் இங்கு நிற்பதை பார்த்தவன் புன்னகைத்துக் கொண்டே “ஐ வில் கால் யூ பேக்” என்று அழைப்பை துண்டித்து விட்டு திரும்பி அவளை நோக்கியவன் “இங்க என்ன பண்ற?” என்று கேட்டான்.

 

‘வாய்ல நல்லா வருது’ என்று மனதில் கவுண்டர் கொடுத்தவள் இதழ் பிரித்து புன்னகைத்தவள் “அதுஉஉஉ.. என்று இழுத்தவள் நீங்க எனக்கு ஒரு சின்ன ஃபேவர் பண்ணனும் மாமா” என்க…

 

“ஷோர்.. தியா” என்று ஜெய் ஆனந்த் சொன்னது தான் தாமதம், அவளோ “நான் வெர்ஜின்னானு டெஸ்ட் பண்ணனும்” என்று வேகமாக கூறி முடித்து இருந்தாள்.

 

உடற்பயிற்சி செய்து விட்டு நீரை அருந்திக் கொண்டு இருந்த விபீஷனுக்கோ குடித்த தண்ணீர் யாவும் மூக்கின் வழியாக வெளியில் வந்தே விட்டது.

 

இருமிக் கொண்டே மீதி இருந்த நீரில் முகத்தை அடித்து கழுவியவன் ‘ என்ன பொண்ணுடா இவ’ என்று மனதில் எண்ணிக் கொண்டே “ஜெய் நான் ஹால்ல வெயிட் பண்றேன்” என்று சொன்னவன் வேகமாக படிகளில் கீழிறக்கி சென்று இருந்தான்.

 

அவள் கேட்ட கேள்வியில் தன் செவியில் வந்து வீழ்ந்த வார்த்தைகள் யாவும் உண்மை தானா என்று மீண்டும் உறுதி செய்து கொள்ள நினைத்தான் போலும்.

 

“சாரி எனக்கு சரியா கேட்கலன்னு நினைக்கிறேன் என்று ஏர்பொட்ஸை கழற்றி விட்டு அவளை கேள்வியாக நோக்க…

 

அவன் மீண்டும் கேட்கவும்  இம்முறை இதயமோ தடதடக்க ஆரம்பித்தே விட்டது.

 

இருந்தும் தான் இன்னும் கன்னித் தன்மையாகத் தான் இருக்கின்றோமா? என்று அவளுக்கு அறிந்தே ஆக வேண்டிய கட்டாயம்.

 

மனதின் உறுத்தலை அறிந்து கொண்டால் தான் என்ன?

 

எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டே, “ வெர்ஜின்… டெஸ்ட்…” என்று வார்த்தைகளை கோர்க்க முடியாது திணறினாள்.

 

அவளின் வார்த்தைகளில் அதிர்ந்தவன் “ஆர் யூ லாஸ்ட் யுவர் மைண்ட்” என்று கேட்டே விட்டான்.

 

அவனின் கர்ஜனை குரல் அவளை நொடிப் பொழுதில் கலங்க வைத்திருந்தது.

 

இனிமேல் நடக்க போறது எல்லாமே நிஜம். நிதர்சனமான உண்மை 😍🙈 கனவு எல்லாம் இல்லை அந்த சொல்லே use பண்ண மாட்டேன் போதுமா 😂 பதறாமல் படிக்கலாம் பை த வே இதுல வில்லனும் இல்லை வில்லியும் இல்லை 💘❤️

 

லவ் and love மட்டுமே 😁♥️

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 46

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!