நினைவுகள் -3

5
(4)

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் கதையின் அடுத்த அத்தியாயம்.

*******************

 

அத்தியாயம் – 3

 

அன்று…

 

” ஸ்கூல் லெவல்ல ஃபர்ஸ்ட் த்ரீப்ளேஸ்ல கூட வரலை.” எனக் கூறிய வகுப்பாசிரியர், ராதிகாவின் வாடிய முகத்தைத் பார்த்து விட்டு, டோண்ட் வொர்ரி ராதிகா. தவுசண்ட் ஒன் செவன்டி சிக்ஸ் நல்ல மார்க் தான்… பட் உன் ஆம்பிஷன் மெடிக்கல் தானே … அதான் யோசிச்சேன். ஃபர்ஸ்ட் த்ரீ ப்ளேஸ்ல வந்தா படிப்பு செலவை நம்ம ஸ்கூல்லேயே ஏத்துப்பாங்க.

 

பரவாயில்லை விடுமா. மேபி நீட் எக்ஸாம் இருந்தாலும், இருக்கலாம் என்று சொல்றாங்க பார்ப்போம். ஆல் த பெஸ்ட் ராதிகா.” என்றார்.

 

ராதிகாவின் முகமோ தெளிவில்லாமல் இருந்தது.

 

அவரது ஆசிரியரோ, அவளது தெளிவில்லாத முகத்தைப் பார்த்து, ” ராதிகா…” என்று அழைத்தவர், அவள் நிமிர்ந்து பார்க்கவும் தனியே அழைத்துச் சென்று சற்று நேரம் பேசினார்‌.

 

சண்முகமோ, மகளது கனவு மருத்துவராவது தான் என்பதை அறிந்து கவலையில் ஆழ்ந்தார்.

 

திரும்பி வந்த ராதிகா, தன் அப்பாவை பார்க்க… அவர் முகமோ கவலையாகத் தெரிந்தது… “அப்பா.”, என அழைத்தாள்.

 

” இங்கே ஏதும் பேச வேண்டாம் மா.வீட்டில் போய் பேசலாம்.”, என்றார் சண்முகம்.

 

போகும் போது இருந்த உற்சாகம், வரும் போது இருவரிடமும் இல்லை. அமைதியாக வீட்டிற்குள் நுழைந்த இருவரையும் பார்த்த சுந்தரி,”ஏன் டா… டல்லா இருக்கே. மார்க் குறைஞ்சிடுச்சா? பரவாயில்லை விடு டா.” என்று மகளை சமாதானம் படுத்தினார்.

 

வீட்டிற்கு போய் பேசலாம் என்ற அப்பாவும், ஒன்றும் சொல்லாமல் ரூமிற்குள் சென்றது, அவளுக்கு இன்னும் கொஞ்சம் பயத்தைக் கொடுத்தது. அவர் தான் தனக்கு சப்போர்ட்டா இருப்பார் என நினைத்திருக்க… அவரின் மௌனம் இவளை கவலையில் ஆழ்த்தியது.

 

இதையெல்லாம் கவனிக்காமல் மகளை கேர் செய்கிறேன் என்று சுந்தரி தனது வட்டத்திற்குள்ளே இருந்தார்.” இந்தாடா…”, என ஒரு கப் ஆரஞ்சு ஜூஸைக் கொண்டு வந்து நீட்டினார்.

 

அதை வாங்கி அருந்தியவாறே,” அப்பாவுக்கு எங்கே மா?”, என.

 

“இதோ அவருக்கு குடுக்குறேன். நீ முதல்ல குடி டா.”

 

” இல்லை மா. நானே போய் குடுக்குறேன். “, என்றவள், அவருக்கும் எடுத்துக் கொண்டு போய் கொடுத்து விட்டு, அவளும் அருந்தினாள்.

 

அவர் குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்தவள்,” அப்பா… என்னப்பா ஒன்னும் சொல்ல மாட்டேங்குறீங்க.” என அவர் கையைப் பிடித்துக் கொண்டு வினவ…

 

” ராது மா. நீ கேட்டு என்னால படிக்க வைக்க முடியாதுன்னு சொல்ல சங்கடமா இருக்கு. ” என மகளை பார்த்துக் கூற

 

” ஏன் பா… செலவு அதிகமாகும் என்று யோசிக்கிறீங்களாப்பா? ” என.

 

“அது வந்து மா… நீட் எக்ஸாம் இருந்தாலும், இருக்கலாம் என்று சொல்றாங்க. ஒரு வேளை நீட் எக்ஸாம் இருந்தா, அதுல செலக்டாகணும். அது மட்டுமில்லாமல் கவர்மென்ட் காலேஜ்ல சீட் கிடைச்சா பரவாயில்லை. அதுவே தனியார் காலேஜ்ல சீட் கிடைச்சாலும், நீ படிச்சு முடிச்சுட்டு வரதுக்குள்ளே கோடிக்கணக்கில் செலவாகும். அவ்வளவுக்கு நமக்கு வசதியில்லை மா.” என குரல் கம்ம கூறினார்.

 

அவர் மனமோ குன்றியது. ‘ இருப்பதோ, ஒத்த புள்ளை‌… அதை படிக்க வைப்பதற்கு கூட முடியாமல் இருக்கிறேனே!’ என தனக்குள் மறுகிக் கொண்டிருந்தார்.

 

அவரது முகத்தைப் பார்த்தவள் பதறி, ” அப்பா… நீங்க கவலைப் படாதீங்க. அவ்வளவெல்லாம் செலவாகாது. இங்க படிச்சா தான் நீங்க சொல்ற மாதிரி செலவாகும்.

 

பிலிப்பைன்ஸில் படிச்சா செலவு குறைவாகத் தான் ஆகும். ஓவெரால் தெர்டி லெக்ஸ் தான் ஆகும் பா.” என்று அலுங்காமல் அடுத்த குண்டை எடுத்துப் போட்டாள் ராதிகா …

 

டங்கென்று சத்தம் கேட்டு சண்முகமும், ராதிகாவும் திரும்பிப் பார்த்தனர்.

 

அங்கு சுந்தரி அதிர்ச்சியில் தன் கையில் இருந்த கிண்ணத்தை கீழே போட்டு இருந்தாள்.

 

மகளுக்காக செய்த அல்வாவை கிண்ணத்தில் போட்டு எடுத்து வந்து இருந்தாள். அங்கு ராதிகா கூறியதை கேட்டவள், அதை கீழே தவற விட்டிருந்தாள்.

 

ராதிகாவோ அம்மாவை பார்த்ததும் தலையில் கையை வைத்துக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டாள்.

 

எப்படியாவது அம்மா வருவதற்கு முன்பு, அப்பாவை கன்வின்ஸ் செய்து விடலாம் என்று நினைத்திருக்க… இப்படி ஒரு திருப்பத்தை அவள் எதிர்பார்க்கவில்லை.

 

சண்முகம் முதலில் செலவை நினைத்து தயங்கியவர், அடுத்து தனது மகள் கூறியது கேட்டதும், ” ஜயோ!” என்று ஆகிவிட்டது.

 

‘தனது மனைவி, தங்கள் மகளை விட்டு பிரிந்து இருக்க மாட்டாளே! இதை நன்கு அறிந்த ராதிகா எப்படி இப்படி ஒரு முடிவை எடுத்தாள். தாங்கள் இன்னமும் அவளை சின்னக்குழந்தை என நினைத்திருக்க… அப்படி எல்லாம் இல்லை என்று நிரூபித்து விட்டாளே!’ என்று தனக்குள்ளே புலம்பிக் கொண்டிருக்கையில், சுந்தரி வந்ததும் அல்லாமல் ராதிகா பேசியதை கேட்டும் விட்டாள்.

 

இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் சண்முகம் மகளைப் பார்க்க. அவளோ இறுக்கமாக அமர்ந்து இருந்தாள்.

 

“ம்” என்று பெருமூச்சு விட்டுக் கொண்ட சண்முகம், ” சுந்தரி…” என அவளது தோளைத் தொட…

 

அதுவரை ஸ்தம்பித்து இருந்த சுந்தரி, சுய உணர்வுக்கு வந்ததோடு அல்லாமல், தன்னை அழைத்த கணவனைக் கூட கண்டுக் கொள்ளாமல் மகளிடம் சென்றவர். ராதிகா அருகே அமர்ந்து, அவளது தலையை வருடி விட்டு,” அம்மாடி… அம்மாவால உன்ன விட்டுட்டு இருக்க முடியாதுடா. இங்கே நீ ஸ்கூலுக்கு போயிட்டு வரும் வரைக்குமே நான் எப்படி தவிப்பேன் தெரியுமா? கொஞ்சம் லேட்டானாலும் அம்மாவுக்கு உசுரே இருக்காதுடா… வாசல்லே வந்து நின்னுட்டு இருப்பேனே… நீ கூட ஏன் மா நிக்குறீங்க என்று திட்டுவியே… அப்போ கூட நான் கேட்க மாட்டேன் தானே… அப்படி இருக்கப்ப… உன்னை அவ்வளவு தூரம் அனுப்பிட்டு என்னால நிம்மதியாக இருக்க முடியாதுடா.” என அவர் பேசிக் கொண்டே இருக்க.

 

அவர் பேசப் பேச ராதிகாவின் கண்களிலிருந்து,கண்ணீர் நிற்காமல் வடிந்துக் கொண்டே இருந்தது.

 

“ஏன் டா தங்கம் இப்படி அழற… இங்கே இருக்கேன் சொல்லேன் டா. அம்மாவுக்காக போகாதடா.” என்று கெஞ்சியவள், திடீரென்று ஏதோ நினைவு வந்தவளாக, ” ஐயோ! கடவுளே! போன வருஷம் கூட ஒரு பொண்ணு நீட் எக்ஸாம் நினைத்து டிப்ரெஷன்ல தற்கொலை பண்ணிக்கிச்சே. அப்போதே என் பொண்ணு டாக்டருக்கெல்லாம் படிக்க ஆசை படக் கூடாது என்று சாமியெல்லாம் வேண்டிக்கிட்டேனே அந்த கடவுளுக்கு கண் இல்லையா ” என சுந்தரி புலம்ப .

 

அவளோ அசைந்தாளில்லை. அவர் பேச பேச இன்னும் பிடிவாதமாக இருந்தாள்.

 

முதலில் மகள் வெளிநாட்டிற்கு செல்வதாக கூறவும், அதை மட்டுமே தடுக்க முயன்றவளுக்கு, பிறகு தான் மகளின் டாக்டர் கனவு முழுவதுமாக விளங்கியது.

 

“ஏதாவது பேசுடா… டாக்டர் படிப்பே வேண்டாம் டா. எல்லாருமே பண பேய்ங்க. நாமளே நேரடியா பாதிக்கப்பட்டிருக்கோமே. அப்படி இருந்தும் டாக்கருக்கு படிக்கணும்னு சொல்லிட்டு இருக்கியே.”

 

” எல்லாரும் அப்படியே இருக்க மாட்டாங்க. உயிரைக் கொடுத்து வைத்தியம் செய்றவங்களும் இருக்காங்க. டாக்டர்ஸெல்லாம் கடவுள் மாதிரி. அவங்களை எல்லாம் அப்படி பேசாதீங்க. ஐ டோண்ட் லைக் தட். நான் டாக்டரா தான் ஆவேன். ” என்று உறுதியாக ராதிகா நிற்க.

 

“சரி… உனக்கு என்ன டாக்டருக்கு தானே படிக்கணும். அப்பா கிட்ட சொல்லி எப்படியாவது உன்னை நான் இங்கேயே சேர்க்க சொல்லுறேன். இந்த வீடு வித்தாவது நாங்க உன்னை படிக்க வைக்கிறோம்.” என்று இறங்கி வந்தவர், சண்முகத்திடம் திரும்பி, ” என்னங்க… ஒன்னும் சொல்லாமல் நிக்குறீங்க.” என அவரிடம் பாய்ந்தார்…

 

‘ இவ்வளவு வெள்ளந்தியா இருக்காளே…’ என அவளை பரிதாபமாக பார்த்தார் சண்முகம்.

 

“அம்மா புரியாம பேசாதீங்க. வீட்டை வித்தா எவ்வளவு வரும் என்று நினைச்சிட்டு இருக்கீங்க. கோடிக்கணக்குல வருமா? அப்புறம் வீட்டை வித்துட்டு எங்கே போய் இருக்கிறது. கடைக்கு வாடகை கொடுக்கணும், அப்புறம் வீட்டுக்கு வாடகைக் குடுக்கணும், ஸ்டாப்ஸுக்கு சேலரிக் கொடுக்கணும். அதுக்கெல்லாம் கடை வருமானம் போதாதுமா. இதுவே வெளிநாட்டுல படிச்சா, நம்மால சமாளிக்க முடியும்.” என்று கூறி விட்டு தாயைப் பார்த்தாள் ராதிகா.

 

” அதெல்லாம் எனக்கு தெரியாது டா தங்கம். உன்ன விட்டுட்டு என்னால இருக்க முடியாது. ப்ளீஸ்மா… இங்கே இரு ராது மா.”

 

” மா… என்னோட இலட்சியமே டாக்டராவது தான். நான் இங்கே இருந்தா என்னோட லட்சியத்தை அடைய முடியாது. அங்கே போனால் என்னுடைய லட்சியம் நிறைவேற ஒரு வாய்ப்பு இருக்கு. ப்ளீஸ் மா. அதை தடுக்காதீங்க.” என அழ.

 

பிறந்ததிலிருந்து எல்லோரும் அவளை தாங்கு தாங்கென்று தாங்கியது என்ன? இன்றைக்கு இவ்வளவு கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறாளே… அவளது கண்ணீரை நிறுத்த முடியாத தங்களோட நிலைமையை எண்ணி, கலங்கியவள், கணவரைப் பார்த்தாள்.

 

அவரோ, மகளுக்கு ஆதரவாக இருப்பதா? இல்லை மனைவிக்கு பார்ப்பதா? என தெரியாமல் மாட்டிக் கொண்டு தவித்தார்.

 

தன் கணவர் இப்போதைக்கு வாயைத் திறக்கப் போவதில்லை என்பதை உணர்ந்துக் கொண்ட சுந்தரி, என்ன சொல்வதென்று தெரியாமல் சொன்னதையே திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். ” உன்ன விட்டுட்டு என்னால இருக்க முடியாது. உன்ன விட்டுட்டு என்னால இருக்க முடியாது.” என்று புலம்ப.

 

சுந்தரி புலம்புவதைக் கேட்ட ராதிகா, காதை இறுகப் பொத்திக் கொண்டாள்.

 

கடந்த இரண்டு வருடமாக அவள், தன் சுயத்தை விட்டுக் கொடுத்திருந்தாள். ‘இதே நிலை தொடர்ந்தால், மூச்சு முட்டி கொஞ்ச நாளில் பைத்தியமாகி விடுவோம். ‘ என்று எண்ணியவள் வாயை விட்டிருந்தாள்.

 

” ஐயோ! மா… நிறுத்துங்க… இங்கேயே இருந்தேன்னா, பைத்தியம் பிடிச்சு செத்துடுவேன் போல…” என்று கத்தினாள் ராதிகா.

 

எள் விழுந்தால் கூட கேட்கும் போல அவ்வளவு நிசப்தம் அங்கே…

 

தான் சொல்லிய வார்த்தை, தன் காதிலே விழுந்த பிறகே தான் செய்த தவறை உணர்ந்து தலையை தட்டிக் கொண்டவளுக்கு, “ஐயோ! ” என்று ஆனது.

 

தனது தந்தையையும், தாயையும் பார்க்க… அவர்களோ அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்றனர்.

 

” அம்மா…” என்று ராதிகா சமாதானம் செய்ய முயல.

 

” ராது… நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு.” என்றவர், வேற எதுவும் பேசாமல் கீழே கிடந்தவற்றை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

 

” அப்பா…” என…

 

” உன் கிட்ட இதை எதிர்பார்க்கலை மா.” என்றவர் சட்டையை போட்டுக் கொண்டு வெளியே கிளம்பி விட்டார்.

 

காலையில் இருந்த மகிழ்ச்சி இப்பொழுது இல்லை. சுந்தரி அவளுக்காக செய்த இனிப்பை சாப்பிடும் மனநிலையில் யாரும் இல்லை.

 

தனித்து விடப்பட்ட ராதிகா, அங்கிருந்து வெளியேறி அவளது அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

 

அப்பாவும், அம்மாவும் பேசாமல் போனதை நினைத்து அப்படி ஒன்றும் கவலைப் படவில்லை ராதிகா. ஏனென்றால் அவளிடம் பேசாமல் கொஞ்சம் நேரம் கூட அவர்களால் இருக்க முடியாது. அவர்களே சற்று நேரத்தில் வந்து பேசிவிடுவார்கள். ஆனால் அவர்களது முகம் பயத்தால் வெளுத்ததைக் கண்டவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது

 

‘இருந்தாலும் அந்த வார்த்தையை நான் சொல்லி இருக்க கூடாது.’ என்று வருத்தப்பட்டு கொண்டு இருந்தாள் அவள்.

 

” சொல்லாத வார்த்தைக்கு நாம் எஜமான். சொல்லிய வார்த்தை நமக்கு எஜமான்.” என்பதன் பொருளை இப்பொழுது தான் நன்றாக புரிந்து கொண்டிருந்தாள்.

 

வெளியே வந்த சுந்தரியோ, சாமியலமாரிக்கு முன்பு சென்று,” தன் மகளுக்கு எந்த ஆபத்தும் வராமல் நீதான் அவளுக்கு துணையாக இருக்கணும் கடவுளே!” என்று மனமுருக வேண்டியவள் மஞ்சத்துணியில் குலதெய்வத்துக்கு காசு முடிந்து வைத்து விட்டு சமையலறைக்குச் சென்று மகளுக்கு பிடித்த காளான் பிரியாணியை செய்தாள்.

 

இது தான் சுந்தரி. கோபமோ, தாபமோ எதுவாக இருந்தாலும் ஐந்து நிமிடம் தான். அதற்கு மேல் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்க மாட்டாள். அவர் மட்டுமல்ல நாட்டில் தொண்ணூறு சதவீதம் அம்மாக்கள் அப்படித் தான்.

 

ராதிகாவோ பசி தாங்க மாட்டாள். ‘ காலையில் ரிசல்ட் பரபரப்பில் ஒழுங்காக சாப்பிடவில்லையே.’ என பரிதவித்தவர் தட்டில் சூடான காளான் பிரியாணி, ரைத்தாவை எடுத்து வைத்தவளின் கால்கள், மகளது அறைக்கு விரைந்தது.

 

“ராது மா…” என்று கூப்பிட்டுக் கொண்டே விரைந்தாள்.

 

ராதிகாவோ அழுதழுது தூங்கி விட்டிருந்தாள்.

 

கட்டிலில் உட்கார்ந்த சுந்தரி, மகளை எழுப்பினாள்.

 

தூக்கக்கலக்கத்தில் கண்விழித்த ராதிகா, ” மா… சாரி மா… நான்… இல்லை… தெரியாமல் வாயில வந்துடுச்சு மா.” என்று உளற‌…

 

அருகில் படுத்திருந்த மகளின் தலையை கோதிவிட்டு, ” தெரியாமல் கூட அப்படி சொல்லாதடா‌… அந்த வார்த்தையை கேட்டாலே நான் செத்து போயிடுவேன்.” என்றாள் சுந்தரி.

 

” சாரி மா‌…” என்று மறுபடியும் மன்னிப்பு கேட்டாள் ராதிகா.

 

” சரி டா… எழுந்திரு… சாப்பிடலாம் வா. அம்மா ஊட்டி விடுறேன்.” என்றவள் மேஜை மேலிருந்த தட்டை எடுத்து ஊட்ட…

 

” ஆ”வென வாயைத் திறந்து ஒரு வாய் வாங்கியவள், ” நீங்க சாப்பிட்டிங்களா? அப்பா வந்துட்டாங்களா?” என ராதிகா வினவினாள்.

 

” சாப்பிடும் போது பேசாதே அம்மு. அப்பா இன்னும் வரலை. வந்ததும் நாங்க சாப்பிடுறோம்.” என்றவள் அடுத்த கவளத்தை வாயில் வைத்தாள்.

 

” சரி மா. நான் அப்பாவுக்கு ஃபோன் போடுறேன்.”

 

” இப்போ தான் நான் ஃபோன் போட்டேன். வந்துட்டுருக்கறாம்.” என்றவள் மகளுக்கு ஊட்டுவதிலே கவனமாக இருந்தார்.

 

சற்று நேரத்தில் வீட்டுக்குத் திரும்பியிருந்த சண்முகம், கை, கால் கழுவி விட்டு, மனைவி, மகளைத் தேடி கிச்சனுக்குள் நுழைந்தார்.

 

அங்கு அவர்கள் இல்லை எனவும், மகளது அறைக்கு வந்தார்.

 

அங்கே அம்மா, மகளது பாசத்தைப் பார்த்தவருக்கு, சுந்தரியை நினைத்து கொஞ்சம் கவலையாக தான் இருந்தது.

 

‘சுந்தரிக்கு இந்த வீடு தான் உலகம். இங்கே உள்ள ஒவ்வொருவரின் நலம் தான் அவளுக்கு முக்கியம். அவள் எப்படி ராதிகா இல்லாமல், ஐந்தரை வருடத்தை சமாளிக்கப் போகிறாளோ தெரியவில்லை.’ என் வருந்தியவர் “சாப்பிடவும் வெளியே வாங்க.” என்று இருவரையும் பார்த்துக் கூறிவிட்டு, ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்து கண்களை மூடி இருந்தார்.

 

அவரது மனதிலோ பலவித எண்ணங்கள் ஓடியது. தனது அருகில் மகள் உட்காரும் அரவத்தில் கண் திறந்தவர்,மகளைப் பார்க்க.

 

அவரது கைகளைப் பிடித்து,” சாரி பா.” என்றாள்.

 

” சரி பரவால்ல விடு மா. இனி தெரியாமல் கூட அந்த வார்த்தைகளை நீ உச்சரிக்காத. அப்படி செய்யணும்னு நெனைச்சாலே, அதுக்கு முன்னாடி எங்க ரெண்டு பேரோட உயிரும் போய்டும். அதை மட்டும் மனசுல வச்சுக்க. நான் போய் நம்ம விக்ரமைப் போய் பார்த்தேன். வீட்டுப் பத்திரத்தை வச்சு பேங்க்ல லோன் வாங்கலாம் என்று சொன்னான்.

 

நீ எப்போ பிலிப்பைன்ஸ் போகணும்? அதுக்கு என்ன ப்ரொசிஜர் என்று விசாரி.” என்று தன் சம்மதத்தை மறைமுகமாக கூறியிருந்தார்.

 

சண்முகம் கூறியதைக் கேட்ட ராதிகாவின் முகம் மலர்ந்தது..

 

****************************

இன்று …

 

விஸ்வரூபனின் முகம் இறுகியது, ” வாட்? என்ன சொன்ன? செத்துடுவேன்னா? ஆர் யூ மேட். அவக் கிட்ட பேசலைன்னா செத்துடுவீயா? ” என்று உறும…

 

அவனது கோபத்தைப் பார்த்து மிரண்டாள் அனன்யா.

 

“ஷிட்” தன் தலையை தட்டிக் கொண்டவன், அந்த அறையை கால்களால் அளந்துக் கொண்டிருந்தான்.

 

ரூம் பாய் வருவதற்காக காத்திருந்தவன், அவர் கொண்டு வந்த ஜூஸை வாங்கி அனன்யாவை அருந்த சொன்னான்.

 

அவள் குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்தவன், ” லுக் அனு… நான் அவளை என் வாழ்க்கையில் எப்போதும் சந்திக்க கூடாது என்று நினைச்சிட்டு இருக்கேன். புரியுதா? ராதிகா இஸ் அவர் பாஸ்ட். என்னோட வாழ்க்கையில வந்துட்டு போன பாசிங் க்ளோவுட். இது தான் நிதர்சனம். வேறு எதுவும் பேசாமல் சீக்கிரம் கிளம்பு.”

 

அவனது கோபத்தை நினைத்து பயம் வந்தாலும், இப்போது பேசவில்லை எனில் அப்புறம் ராதிகாவை எப்பொழுதும் பார்க்க முடியாது என்பதை உணர்ந்த அனன்யா, தொண்டையைக் கணைத்து விட்டு பேசினாள்.

 

” மாமா… நான் ராதிகா கிட்ட பேசணும். நடந்த எல்லாத்தையும் சொல்லணும். அவக் கிட்ட மன்னிப்பு கேட்கணும். அப்புறம் உங்க இரண்டு பேருக்கு நடுவுல நான் எப்போதும் வர மாட்டேன். எனக்கு டைவர்ஸ் கொடுத்துட்டு …” அடுத்து என்ன சொல்ல வந்தாளோ, அதற்குள் விஸ்வரூபன், அவள் குடித்து விட்டு வைத்திருந்த கண்ணாடி க்ளாஸை தட்டி விட்டான்.

 

அந்த கண்ணாடி க்ளாஸோ, அவர்கள் இருவரது மனதைப் போல சுக்குநூறாக நொறுங்கியது.

 

அனன்யாவோ வாயை மூடிக் கொண்டு அதிர்ந்து நின்றாள். அவளது உடலோ வெடவெட என நடுங்கிக் கொண்டிருந்தது.

 

தன் தலையை கோதியவன், அந்த உடைந்த கண்ணாடித் துண்டுகளை கவனமாகத் தவிர்த்து விட்டு அவளருகில் வந்தான்.

 

மெல்ல அவளை ஆசுவாசப் படுத்தியவன், அவளது தலையை லேசாக வருடி, ” இதோ இந்த கண்ணாடி கிளாஸ் மாதிரி தான் எங்களுடைய காதல் உடைந்து போயிடுச்சு. இனி ஒன்று சேர்க்க முடியாது. அனும்மா புரிஞ்சுக்கோடா… நீ பேசறதை அத்தைக் கேட்டா எவ்வளவு வருத்தப்படுவாங்கத் தெரியுமா?”

 

மெல்ல அவனிடமிருந்து விலகியவள், அத்தை என்ன நினைப்பாங்க… பாட்டி என்ன நினைப்பாங்க? அத்தை என்ன நினைப்பாங்க? ஆட்டுக்குட்டி என்ன நினைக்கும். இப்படியெல்லாம் கவலைப்படுறீங்களே… உங்களை உயிருக்கு உயிராக நேசிச்சாளே ஒருத்தி. அவளைப் பத்தி ஏதாவது யோசிச்சிங்கிளா… யூ ஆர் செல்ஃபிஷ்…” என.

 

“ஆமாம் நான் செல்ஃபிஷ் தான் போதுமா? என்னை வளர்த்த பாட்டி, மரணப்படுக்கையில் என்கிட்ட யாசகம் கேட்க்கும் போது என்னால மறுக்க முடியலை போதுமா? நான் எடுத்த ஒரு முடிவால, உன் வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கு. நான் செய்த தவறின் விளைவை, நான் தானே சரி செய்ய வேண்டும்.”

 

“ஐயோ! மாமா. நீங்க எனக்கு நல்லது தான் செய்தீங்க. நான் தான் அவசரப்பட்டுட்டேன். அதுக்கு நீங்களும், ராதிகாவும் ஏன் சிலுவை சுமக்கணும். சொல்லுங்க மாமா.”

 

“திரும்பத் திரும்ப நமக்குள்ள ராதிகாவை இழுக்காதே. காதலிச்சா எல்லோரும் கல்யாணம் பண்ணிக்கணுமா என்ன? அதுவும் ஒரு வருஷ காதல் தானே… சீக்கிரம் மறந்துட்டு, வேற வாழ்க்கையை அமைச்சுக்குவா… நீ ஒன்னும் கவலைப்பட தேவையில்லை.”

 

“அவளே காதலை சொன்னதால, அவளுடைய காதல் உங்களுக்கு இளப்பமா போயிடுச்சா மாமா?. உங்களுக்கு வேணா இது ஒரு வருஷ காதலாக இருக்கலாம். அவளுக்கு இது ஏழு வருஷ காதல். அந்த காதலுக்கு சாட்சியாக நான் மட்டும் தான் இருக்கேன்.

 

அப்புறம் இன்னொன்னு மாமா… நீங்க மறந்துட்டேன் சொல்றது பொய். நீங்க அவளை மறக்கவே இல்லைன்னு சொல்றதுக்கு என் கிட்ட ஆதாரம் இருக்கு.” என ஆக்ரோஷமாக அனன்யா கூற…

 

இதயம் துடிக்க வேகமாக கைகளை பின்னால் மறைத்துக் கொண்டான். “என்ன சொல்ற புரியல ?” என மெதுவான குரலில் கூற…

 

” அதான் உங்க ஃபோன் ரிங்டோன். அதைத் தான் சொல்றேன். இன்னும் மாத்தாமல் வச்சிருக்கீங்களே. ” என.

 

சரியாக அதே நேரத்தில் அவனுடைய போன் இசைத்

தது.

 

“யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே

கண்ணனோடோடுதான் ஆட..

பார்வை பூத்திட பாதை பாத்திட

பாவை ராதையோ வாட…” என ராதிகாவின் தேன் குரலில் ஒலித்தது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!