கதவைத் திறந்தவனின் கண் முன்னால் நின்றிருந்தவளைக் கட்டி அணைத்திடப் போக பாவி அவள் காற்றாய் கரைந்து போனாள். ஏன்டி பாவி தினம் தினம் இப்படி வந்து இம்சை பண்ணுற நான் வேண்டாம்னு தானே எவன் கூடவோ ஓடிப்போன என்றவனின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வந்திட ரத்னவேலு என்ற அவளது குரல் அந்த வீடு முழுக்க எதிரொளிப்பது போலவே அவனுக்கு தோன்றிட தேன்மொழி ஆஆஆ என்று கத்தினான் ரத்னவேல்.
அவனது அறையில் அழகான தேவதையாக புகைப்படத்தில் திருமணக்கோலத்தில் அவனுடன் அழகாக முத்துப்பல் தெரிய சிரித்துக் கொண்டிருந்தாள் அவனது மனைவி தேன்மொழி. அவளது போட்டோவையே பார்த்துக் கொண்டிருந்தவன் உன் தங்கச்சிக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணிருக்கிற தேதி தெரியுமா தேனு நம்ம கல்யாணம் முடிஞ்ச அதே தேதி என்றவனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.
ஏன்டி என்னை விட்டு போன விட்டுட்டு போனவள் ஏன் தினம் தினம் இப்படி வந்து என்னை இம்சிக்கிற என்று அழுதவனின் மொபைல் போன் சினுங்கிட அதை அட்டன் செய்த ரத்னவேல் இதோ வரேன்மா என்று போனை வைத்தான்.
வீட்டிற்கு வந்தவன் அமைதியாக சாப்பிட்டு விட்டு தன்னறைக்குச் சென்று படுத்து உறங்கி விட்டான்.
என்ன சொல்ற விஜி என்ற கதிரேசனிடம் நம்ம கயலுக்கு வெற்றியை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசை வந்துருச்சு அண்ணா என்றார் விஜயலட்சுமி. அது எப்படிமா நம்ம திட்டம் என்றவரிடம் விஜயலட்சுமி வேற ஒரு திட்டத்தைக் கூறியவர் இப்படி நடந்தால் தான் அந்த வேல்விழியோட திமிர் கொஞ்சமாவது அடங்கும். மணவறையில் மணக்கோலத்தில் அவள் இருக்கும் பொழுது அவளை கல்யாணம் பண்ணிக்க வேண்டியவன் வேரொருத்தி கழுத்தில் அவளோட கண்ணு முன்னமே தாலி கட்டுற கொடுமையை அவள் அனுபவிக்கனும் அண்ணா. அதைப் பார்த்து அந்த ராஜேஸ்வரி இரத்தக் கண்ணீர் வடிக்கனும். ஒருமுறை மணமேடை வரை வந்து கல்யாணம் நின்னு போச்சுனா அவளை அடுத்து எவன் கட்டிக்க துணிவான் என்ற விஜயலட்சுமி பேய் போல சிரித்தார்.
அதுவும் சரி தான் விஜி என்ற கதிரேசன் கயல்விழி மனசை மட்டும் மாற விட்ராதே அவள் அக்கா, தங்கச்சி பாசம்னு காலை வாரி விடாமல் இருந்தால் போதும் என்ற கதிரேசன் சந்தோசமாக கிளம்பினார்.
தன்னைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் சதி வலை பற்றி அறியாமல் அமைதியாக உறங்கினாள் வேல்விழி.
என்னங்க இன்னைக்கு நம்ம வேலு ரொம்ப அழகா இருந்தாள் தானே என்ற ரேணுகாவிடம் என் தங்கச்சி எப்பவுமே அழகு தான் ரேணு என்றான் சுரேந்திரன். ஆமாம் தங்கச்சியை விட்டுக் கொடுத்திர மாட்டிங்க என்றவளிடம் தங்கச்சியை மட்டும் இல்லை என் பொண்டாட்டியையும் விட்டுக் கொடுத்திட மாட்டேன் என்று கண்ணடித்தவனைப் பார்த்து சிரித்தாள் ரேணுகா.
என்ன அப்பத்தா ஏன் இன்னும் தூங்காமல் இருக்கிங்க என்ற நரேந்திரனிடம் மனசு சரியில்லை தம்பி நம்ம வேல்விழிக்கு ஏதோ தப்பு நடக்கப் போகுதுனே தோனுது. கல்யாணத் தேதி பார்த்தியா தேன்மொழிக்கு கல்யாணம் ஆன அதே தேதி. உன் அய்யா அவளோட கல்யாணத்தப்பவே என் கனவுல அடிக்கடி வருவாரு அவசரப்படாதே வடிவுனு சொல்லிட்டே இருப்பாரு. என் அண்ணன் மகனுக்கு அவளை கட்டி வச்சேன். ஆனால் அவள் என்றவர் அழ ஆரம்பிக்க அப்பத்தா அக்காவுக்கு விருப்பம் இல்லாத கல்யாணம் அதனால தான் அவள் என்றவன் அவளை விடுங்க. நம்ம வேல்விழிக்கு வெற்றியை கல்யாணம் பண்ணிக்க முழு சம்மதம் அதனால எந்த தொல்லையும் இல்லாமல் கல்யாணம் நல்லபடியா நடக்கும் என்றான் நரேந்திரன். நல்லபடியா நடந்தால் சந்தோசம் தான்யா என்றவர் நேரம் ஆச்சு நீயும் போயி தூங்குய்யா என்றார் வடிவுடைநாயகி.
மறுநாள் காலை கண்விழித்த வேல்விழி தன் அறையில் இருந்த கிளிக்கூண்டின் அருகில் சென்று பினு, மீனு என்று தன் செல்லக் கிளிகளை கொஞ்சினாள். வேல்விழி வேல்விழி என்று அந்த கிளி களும் அவளை அழைத்திட சந்தோசமாக குளிக்கச் சென்றாள். குளித்து முடித்து வந்தவள் தயாராகிக் கொண்டிருந்தாள். பக்கத்து ஊரில் இருக்கும் அந்த மலைக்கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி விட்டு வருமாறு ஜோசியர் சொன்னதாக வடிவுடைநாயகி கூறினார். ஜோசியத்தில் அவளுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் தன் அப்பத்தாவிற்காக கோவிலுக்கு கிளம்பினாள் வேல்விழி.
அப்பத்தா நானும் வேல்விழி கூட போயி விளக்கேத்தட்டுமா என்ற கயல்விழியிடம் தாராளமா போத்தா என்ற வடிவுடைநாயகி வேல்விழியைப் பார்த்து இரண்டு பேரும் பத்திரமா போயிட்டு வாங்க என்றார். சரிங்க அப்பத்தா என்ற வேல்விழியும் கயல்விழியை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு கிளம்பினாள்.
ஏன்டி ஸ்கூட்டர் எடுத்துட்டு வந்திருக்கலாம்ல என்ற கயல்விழியிடம் நடந்து போயி விளக்கேத்தி சாமி கும்பிட்டாள் தான் நினைச்சது நடக்குமாம் என்றாள் வேல்விழி. சரி சரி என்ற கயல்விழியும் அவளுடன் நடந்து வர அவர்களுடன் வெற்றிமாறனும் வந்தான். அத்தான் நீங்க எங்கே வந்திங்க என்ற கயல்விழியிடம் அதை நான் கேட்க வேண்டிய கேள்வி அம்மாச்சி சொல்லி விடலையா நானும், வேலுவும் சேர்ந்து தான் விளக்கேற்றனும் என்றான் வெற்றிமாறன். அச்சோ தெரிந்திருந்தால் நான் வராமல் இருந்திருப்பேனே என்றாள் கயல்விழி.
ஏய் ஏன்டி இப்படி சொல்லுற கோவிலுக்கு வந்திருக்க மாட்டேன்னு என்ற வேல்விழியிடம் இல்லை வேலு மூன்று பேரா போகக் கூடாது என்றவள் கலைவாணியை வரச் சொல்லுவோமா என்ற கயல்விழியிடம் இல்லை அவள் இன்னைக்கு வரமாட்டாள்டி என்றாள் வேல்விழி. அவள் வீட்டுக்கு தூரம் என்று வேல்விழி கூறிட அப்போ இரு என்றவள் தன் மொபைலை எடுத்து யாருக்கோ போன் செய்தாள்.
பத்து நிமிடத்தில் ரத்னவேல் வந்தான். மாமா நாங்க மூன்று பேரும் கோவிலுக்குப் போறோம் நீங்களும் வாங்களேன் ப்ளீஸ் என்றாள் கயல்விழி. இல்லை கயலு எனக்கு வேலை இருக்கு என்றவனை வம்பு செய்து கோவிலுக்கு அழைத்துச் சென்றாள் கயல்விழி.
ஒரு கரடி பத்தாதுனு இரண்டு கரடியா கடவுளே அப்படி என்ன பாவம் செய்தேன் வேல்விழி கூட நான் தனியா நேரம் செலவழிக்க எத்தனை முயற்சி பண்ணினாலும் தடங்கல் தானா என்று நொந்து கொண்டான் வெற்றி மாறன்.
வேல்விழி அமைதியாக நடந்து வந்தாள். கயல்விழி தான் வெற்றிமாறனுடனும் , ரத்னவேலுவிடமும் பேசிக் கொண்டே வந்தாள். கோவில் வந்தவுடன் கயல்விழி முன்னே செல்ல வெற்றிமாறன் இரண்டாவதாக மலையேறினான். வேல்விழி வெற்றியின் கை பிடித்து பின்னால் சென்றாள். கடைசியாக ரத்னவேல் சென்றான்.
காலில் முள்ளு குத்திடவே வேல்விழி வெற்றிமாறனின் கையை விட்டவள் காலில் குத்திய முள்ளை எடுத்து விட்டு அடுத்த அடியை வைத்திட அவளது கால் லேசாக சருக்கியதில் அவள் பின்னால் வந்த ரத்னவேலுவின் மீது மோதி இருவரும் கீழே உருண்டு விழுந்து விட்டனர்.
இருவரின் உடலிலுமே சின்ன சின்ன சிராய்ப்புகளுடன் எழுந்திருக்க அவன் நெற்றியில் வைத்திருந்த குங்கும்ம் அவளது உச்சி வகுடில் பதிந்து விட்டது. அவளது நெற்றியில் லேசாக இரத்தம் வர பதறிப்போன வெற்றிமாறன் வேல்விழி உனக்கு ஒன்றும் இல்லையே என்றிட எனக்கு ஒன்றும் இல்லை அத்தான் என்றவள் அவனது கை பிடித்து முன்னே சென்றாள். சித்தப்பா உங்களுக்கு ஒன்றும் என்றவனிடம் ஒன்றும் இல்லை என்ற ரத்னவேல் அவர்களுடன் சென்றான். பின்னே வந்தவர்களின் நிலை என்ன என்பதைப் பற்றி யோசிக்காமல் தனக்கும், தன் மாமன் மகனுக்கும் திருமணம் நடந்திட வேண்டும் என்று வள்ளி, தெய்வானை சமேதமாக நிற்கும் முருகப்பெருமானை வேண்டினாள் கயல்விழி.
என்னாச்சு வேல்விழி, மாமா உங்களுக்கு என்னாச்சு என்று பதறிய கயல்விழியிடம் ஒன்றும் இல்லை என்று கூறியவர்கள் சாமி கும்பிட்டனர். முருகா எல்லாரையும் காப்பாத்துங்க என்று வேண்டிக் கொண்ட இருவரும் இரண்டு விளக்குகளை வாங்கிக் கொண்டு கோவில் ஸ்தல விருச்சத்தின் அருகே சென்று விளக்கேற்றி கண்களை மூடி பிரார்த்தனை செய்தனர். வெற்றிமாறன் ஏற்றிய தீபம் காற்றில் அணைந்து விட அதைக் கண்ட ரத்னவேல் விளக்கினை வெற்றிமாறன் , வேல்விழி இருவரும் கண்ணை திறந்திடும் முன்னமே ஏற்றி வைத்து கடவுளே இவங்க இரண்டு பேருடைய வாழ்க்கையும் சந்தோசமாக அமையனும் என்று வேண்டி விட்டு சென்று விட்டான்.
கண்ணைத் திறந்த இருவரும் கடவுளை வேண்டிக் கொண்டு எழுந்து வந்து மண்டபத்தில் அமர்ந்தனர். என்ன வேலு அடிபட்டது வலிக்குதா என்றவன் அவளது கையில் ஏற்பட்ட சிராய்ப்பிற்கு கோவிலில் இருந்த மஞ்சள்பொடியை தண்ணீரில் குழைத்து தடவி விட வலிச்சது இப்போ இல்லை என்றாள். ஏன் என்றவனிடம் மருந்து போடுறதுக்கு தான் நீங்க இருக்கிங்களே என்றிட எப்பவும் இருப்பேன் என்றான் வெற்றிமாறன்.
அவள் சிரித்து விட்டு கிளம்பலாமா என்றாள். அவங்க இரண்டு பேரும் மட்டும் இல்லைனா உன்னை கையில் ஏந்தி தூக்கிட்டே இறங்கிருவேன் என்றான் வெற்றிமாறன். அதெல்லாம் நம்ம கல்யாணத்திற்கு அப்பறமா என்றவள் எழுந்து ஓடினாள்.
என்ன அத்தான் ரொமான்ஸா என்று வந்தாள் கயல்விழி. அப்படியே நீயும் எங்களை ரொமான்ஸ் பண்ண விட்டுட்டாலும் என்று நினைத்தவன் இல்லை கயல் என்றவன் நீ சாமி கும்பிட்டியா என்றிட கும்பிட்டேன் என்றவள் எனக்காக நீங்க வேண்டிக்குவிங்களா என்றாள் கயல்விழி. என் மனசில் ஒருத்தர் இருக்கிறார் அவருக்கும் , எனக்கும் கல்யாணம் நடக்கனும்னு எனக்காக நீங்க விளக்கு ஏத்துவிங்களா என்றாள். அவ்வளவு தானா வா கயலு என்று அவளுடன் சென்று விளக்கேற்றினான் வெற்றிமாறன்.
ஓரிடத்தில் அமர்ந்திருந்த ரத்னவேலின் அருகில் சென்ற வேல்விழி அவனிடம் மஞ்சளை நீட்டினாள். என்ன இது என்றவனிடம் உங்களுக்கும் அடி பட்டிருக்கு என்றவள் அவனது நெற்றியில் மஞ்சளை பூசி விட நானே பூசிக்கிறேன் என்றான். என்னால தானே விழுந்திங்க அதனால தான் நான் பூசி விடுறேன் கயல் விளக்கு ஏற்ற போயிருக்காள் இல்லைனா அவளையே பூசி விட சொல்லிருப்பேன் என்றவள் அவனுக்கு மஞ்சளைப் பூசி விட்டு சாரி அப்பறம் தாங்க்ஸ். நீங்க என்னைப் பிடிக்கலைனா எனக்கு இன்னமும் பெரிசா அடிபட்டிருக்கும் என்றவள் கிளம்பி வர வெற்றியும் , கயலும் வந்து சேர்ந்தனர்.
நால்வரும் கிளம்பி வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். வேல்விழியின் உடலில் சிராய்ப்புகளைக் கண்ட ராஜேஸ்வரி பதறிட அம்மா பயப்படாதிங்க ஒன்றும் இல்லை என்று அவரை சமாதானம் செய்வதற்குள் வேல்விழிக்கு போதும் போதும் என்றானது.
பாப்பா ஊசி போட்டுட்டு வருவோமே என்ற நரேந்திரனிடம் ஐயோ அண்ணா எனக்கு ஒன்றுமே இல்லை என்றவள் தன்னறைக்கு வந்தாள். என்னடி காயத்துக்கு மருந்து போடாமல் படுக்கப் போற என்ற ரேணுகாவிடம் அத்தானே மருந்து போட்டு விட்டுட்டாரு அண்ணி என்று தன் முகத்திலும், கையிலும் உள்ள சிராய்ப்புகளுக்கு மஞ்சள் வைத்து வெற்றிமாறன் மருந்து போட்டு விட்டதை காட்டினாள். என்னடி மஞ்சளோட குங்குமமும் உன் அத்தான் வச்சு விட்டுட்டாரோ என்று கேலி செய்து விட்டு ரேணுகா கிளம்பி விட்டாள்.
……தொடரும்….