நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…(11)

4.7
(3)

என்ன சொல்லிட்டுப் போராங்க என்று நினைத்தவள் கண்ணாடி முன் நிற்க அவளது உச்சி வகிடில் குங்குமம் இருக்க அவள் நன்கு யோசித்துப் பார்த்தாள். ரத்னவேலின் நெற்றியில் இருந்த குங்குமம் தனது உச்சியில் அதை பட்டென்று அழித்து விட்டாள். இது என்ன சோதனை கடவுளே என்று நொந்து கொண்டவள் இந்த கல்யாணம் நல்லபடியா நடக்குமா என்று வருந்தினாள்.

 

முகூர்த்தப் பட்டு எடுப்பது, தாலிக்கு தங்கம் உருக்குவது என்று எல்லா வேலைகளும் தடபுடலாக நடக்க ஆரம்பித்தது.  அடுத்து வந்த நாட்களில் வேல்விழி வீட்டை விட்டு எங்குமே செல்வதில்லை. வீட்டிலே இருந்தாள். அவளிடம் பேச நினைத்த வெற்றிமாறனுக்கு தான் ஏமாற்றம். எப்பொழுதும் அவர்கள் பேச வந்தாளே கயல்விழி கரடி போல் வந்து விடுவாள். அதில் பயங்கரக் கடுப்புடன் இருந்தான்.

 

நாட்கள் கடகடவென ஒடியது. விடிந்தால் திருமணம் என்றிருக்க மொத்த குடும்பமும் சந்தோசமாக இருந்தனர். வேல்விழிக்கு ஏதோ தவறாகவே தோன்றியது. இந்த கல்யாணப் பேச்சு ஆரம்பமான நாளில் இருந்தே அவளுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத தவிப்பு இருந்து கொண்டே இருந்தது.

 

என்னடி கல்யாணப் பொண்ணு மருதானி வைக்காமல் இருக்க என்ற ரேணுகா தன் நாத்தனாருக்கு மருதானி வைத்தவள் என்னடி நெவர்ஸா இருக்கா என்றிட இல்லை அண்ணி என்றாள் வேல்விழி. அது அப்படித் தான் இருக்கும் சும்மா பயப்படாதே என்ற ரேணுகா கல்யாணப் பொண்ணு எப்பவுமே சந்தோசமா இருக்கனும் என்றாள் . வேல்விழியும் சிரித்தாள்.

 

என்னம்மா மருதானி எல்லாம் வச்சுட்டிங்களா என்று வந்ந ராஜேஸ்வரியிடம் எல்லாம் வச்சாச்சு அத்தை வாங்க என்ற ரேணுகா எழுந்து சென்றாள். வேல்விழி ரொம்ப அழகா இருக்கம்மா என் செல்ல மகளுக்கு கல்யாணக் கலை வந்துருச்சு என்றவர் புருசன் வீட்டில் பெரியவங்களுக்கு மரியாதை கொடுத்து நடக்கனும் அந்த அம்மா உன்னை எதுவும் சொன்னாலும் நம்ம பாட்டி தானேன்னு கடந்து போகனும். உங்க அத்தை உன்னை நல்லபடியா பார்த்துப்பாங்கனு தெரியும் இருந்தாலும் நீ பொறுப்பா நடந்துக்கனும் என்றவரின் கண்கள் கலங்கியது. மகளைக் கட்டிக் கொண்டு அழுதார். எப்படி அம்மு உன்னை விட்டுட்டு அம்மா இருக்கப் போறேன். இவ்வளவு நாள் நீ ஹாஸ்டல்ல படிச்சாலும் என்னோட பொண்ணு நாளையில் இருந்து இன்னொரு வீட்டோட மருமகள் என்றவர் தன் மகளைக் கட்டிக் கொண்டு அழுதார்.

 

ராஜி என்று வந்த ராஜசேகரன் மனைவியும், மகளும் அழுவதைக் கண்டு என்னம்மா அவள் சின்னப் பொண்ணு அழுதுட்டு இருக்காள்னா நீ சமாதானம் படுத்தாமல் நீயும் சேர்ந்து அழுதால் என்ன அர்த்தம் என்றவரிடம் முடியலங்க என் பொண்ணு நாளைக்கு வேற வீட்டுக்கு போயிருவாள் என்று ராஜி கூறிட ராஜசேகரின் கண்களும் கலங்கிட மகளைக் கட்டிக் கொண்டு அவரும் அழ ஆரம்பித்தார்.

 

என்னங்க நீங்க என்னைய சொல்லிப்புட்டு இப்போ நீங்க அழறிங்க நம்ம பொண்ணு என்ன வெளியூருக்கா போறாள். அடுத்த தெருவில் உள்ள உங்க தங்கச்சி வீட்டுக்கு தானே என்று கணவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தவர். நல்லா தூங்கு அம்மு நாளைக்கு காலையில் சீக்கிரம் எழுந்திருக்கனும் என்று கூறி விட்டு ராஜேஸ்வரி சென்று விட்டார்.

 

என்னத்தா தூங்கலையா என்று வந்த வடிவுடைநாயகியிடம் எனக்கு ஏதோ தப்பாவே தோனுது அப்பத்தா. இந்தக் கல்யாணம் என்றவரிடம் உனக்கு நாளைக்கு கண்டிப்பா கல்யாணம் நடக்கும் வேலு என்றவர் எதையும் யோசிக்கக் கூடாது என்றவர் ஒருவேளை இந்த கல்யாணம் நடக்காமல் போயிட்டால் என்று கேட்டிட நான் தப்பான முடிவு எதுவும் எடுக்க மாட்டேன் அப்பத்தா என்றாள். எது நடந்தாலும் அது நமக்கு நல்லதுக்கா தான் இருக்கும்னு நீங்க சொல்லி இருக்கிங்களே என்றவளிடம் கவலையை விடுத்தா இந்த வீட்டிலிருந்து மண்டபத்துக்கு போகும் நீ கழுத்தில் தாலியோட தான் வீட்டுக்கு வருவ என்றார் வடிவுடைநாயகி ஏதோ அருள் வந்தவர் போல.

 

அப்பத்தா என்னாச்சு என்று அவரை அவள் உலுக்கிட என்னாச்சுத்தா என்றார். எனக்கு கல்யாணம் நடக்கும்னு சொன்ன என்றவள் உன் மடியில் படுத்துக்கவா அப்பத்தா என்றிட வாத்தா என்று தன் பேத்தியை மடியினில் படுக்க வைத்தார் வடிவுடைநாயகி.

 

என்ன ரேணு எல்லாம் அடுக்கியாச்சு தானே என்ற ராஜேஸ்வரியிடம் எல்லாமே அடுக்கியாச்சு அத்தை. அந்த அதிரசம் முறுக்கு, லட்டு எல்லாம் சேர்த்து பதினோரு அண்டா  துணி வச்சு கட்டிட்டோம். தனியா ஒரு இரண்டு அண்டாவில் இருந்த பலகாரத்தை தாம்பூலப் பை போட்டாச்சு என்ற ரேணு இந்த சின்ன அத்தை இங்கே எவ்வளவு வேலை இருக்கு அதை பார்க்காமல் மாப்பிள்ளை வீட்டுக் காரங்களாம் அவங்க. அவங்களும் , கயல்விழியும் இப்போ தான் அங்கே போயிட்டாங்க எப்படி அத்தை இப்படி இருக்க முடியுது அவங்களால. இப்போ கயலுக்கு கல்யாணம்னாலும் நீங்க இப்படித் தான் இழுத்துப் போட்டு எல்லா வேலையையும் பார்ப்பிங்க ஆனால் அவங்க என்றவளிடம் விடு ரேணு போ போயி நேரத்தோட தூங்கு. விடியற்காலை எழுந்திருக்கனும் என்றார்.

 

 

என்ன சித்தப்பா நீங்களும் எங்க கூட மண்டபத்தில் இருக்கிங்க என்ற சுரேந்திரனிடம் வேல்விழி என்னோட மகள். அவளோட கல்யாணத்திற்கு இந்த சித்தப்பா வேலை பார்க்காமல் வேற யாரு வேலை பார்க்கிறதாம் என்றவர் கிடா எல்லாம் சரியா பார்த்து தானே வாங்கினிங்க என்றார் விஜயசேகரன். நானும், ரத்னவேல் மாமாவும் சேர்ந்து தான் எல்லாமே வாங்குனோம் சித்தப்பா என்ற சுரேந்திரன் இதோ மாமாவே வந்துட்டாரு என்றான்.

 

வாங்க மாப்பிள்ளை உங்க வீட்டில் உங்களை மண்டபத்தில் பொறுப்பு எடுத்துக்க சொல்லிட்டாங்களா என்ற விஜயசேகரனிடம் அப்பாவும் வந்திருக்காங்க அத்தான் என்ற ரத்னவேல் அவர்களுடன் பேசிவிட்டு மண்டபத்தில் வேலை எல்லாம் எப்படி நடக்கிறது என்று பார்வையிட ஆரம்பித்தான்.

 

என்ன அண்ணா எல்லாம் நல்லபடியா நம்ம திட்டப்படி தானே நடந்துட்டு இருக்கு என்றார் விஜயலட்சுமி. பின்ன நம்ம திட்டம் எப்பம்மா சொதப்பிருக்கு நாம நினைச்சது மட்டும் தானே இதுவரை அந்த ராஜசேகரன் குடும்பத்தில் நடந்திருக்கு என்றார் கதிரேசன் . ஆசைப்பட்ட வாழ்க்கை இல்லாமல் போகும் வலி இருக்கே அந்த வலியை அந்த ஆளோட பொண்ணு அனுபவிக்கனும். அப்போ தான் அந்த வலி எப்படி இருக்கும்னு அந்த ஆளு உணருவாரு என்ற விஜயலட்சுமி வெற்றி எங்கே என்றிட எங்கே இருக்கனுமோ அங்கே இருப்பான். நாளைக்கு அவன் மண்டபத்துக்கு வர மாட்டான். அப்படியே வந்தாலும் வேல்விழி கழுத்தில் தாலி கட்டமாட்டன் என்று சிரித்த கதிரேசன் நாம ரொம்ப நேரம் மாடியில் நின்று பேசிட்டு இருந்தால் உன் அண்ணிகாரிக்கு மூக்கு வேர்த்திடும் வா கீழே போகலாம் என்று அண்ணனும், தங்கையும் இறங்கிச் சென்றனர்.

 

என்னடா மாப்பிள்ளை எங்களுக்கு சரக்கு வாங்கி கொடுத்துட்டு நீ மட்டும் குடிக்காமல் இருக்க என்ற சுகுமாறனிடம் ஏன்டா நான் தண்ணி அடிக்க மாட்டேன்னு உனக்கு தெரியாதா அதுவும் விடிந்தால் எனக்கும் என் வேல்விழிக்கும் கல்யாணம் இப்போ போயி குடிச்சுகிட்டு இருப்பேனா என்றான் வெற்றிமாறன். அதுவும் சரிதான் மாப்பிள்ளை இப்ப இருந்தே பொண்டாட்டி தாசனாகிரு என்ற சந்துருவிடம் அதில் என்னடா தப்பு.

 

என்னோட சின்ன வயசுல இருந்து இப்ப வரை நான் கண்ட கனவு என்னோட வேல்விழி . அவளை நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு நினைக்கும் போது எவ்வளவு சந்தோசம் என்ற வெற்றி மாறனிடம் மாப்பிள்ளை இந்த கூல்டிரிங்க்ஸ் மட்டுமாவது குடிடா என்றான் சுகுமாறன். வெற்றிமாறனும் கூல்டிரிங்க்ஸை வாங்கி குடித்தான்.

 

காலையில் அந்த வீடே பரபரப்பாக இருந்தது. வேல்விழி குளித்து விட்டு வர அவளது அண்ணி ரேணுகா அவளது அடர்த்தியான நீண்ட முடிக்கு சாம்பிராணி புகை காட்டி தலையை உலர்த்தினாள். அண்ணி இதெல்லாம் நீங்க ஏன் செய்றிங்க என்றவளிடம் ஏய் இதில் என்னடி இருக்கு உனக்கு நான் செய்யாமல் வேற யாரு இதெல்லாம் செய்யிறதாம் என்றவள் இந்தப் புடவையை கட்டிக்கோ என்று புதுப்பட்டுப் புடவையை கொடுத்திட அவளும் அதை அழகாக கட்டிக் கொண்டாள்.

 

வளையல் ரொம்ப கம்மியா இருக்குடி என்றாள் ரேணுகா கிண்டலாக . போங்க அண்ணி என்றாள் வேல்விழி. திருமணம் என்பதால பொன்வளையல் கை நிறைய போட்டிருந்தாள் வேல்விழி. அவளுக்கு அழகாக ஜடை பின்னி மணப்பெண் அலங்காரம் செய்தாள் ரேணுகா. அண்ணி கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் என்கிட்ட இறக்கிட்டிங்க போல என்றாள் வேல்விழி். ஒரு பியூட்டிசியனை பார்த்து என்ன சொல்லுற இன்னைக்கு உன்னை அழகு தேவதையா ஜொளிக்க வைக்கிறேன் என்றாள் ரேணுகா. இப்போ கூட நான் அழகு தான் என்றவளைப் பார்த்து யாரு இல்லைனு சொன்னது என்று சிரித்தவள் மற்ற அலங்காரமும் முடித்து நகைகளை அணிவித்து விட்டிருந்தாள்.

 

அமமாடி வேலு என்று வந்த ராஜேஸ்வரி தன் மகளுக்கு திருஷ்டி கழித்தவர் என் ராசாத்தி இப்படியே எப்பவும் நீ சிரிச்சுகிட்டே இருக்கனும் ஆத்தா என்றவர் மகளுக்கு திருஷ்டிப் பொட்டு வைத்தார். சரி சரி வெரசா கிளம்புங்க என்று அவர்களை கிளப்பி விட்டார்.

 

வேலும்மா வா வந்து  சாமி கும்பிடு என்ற வடிவுடைநாயகி அவருடன் சேர்ந்து சாமி கும்பிட்டு அவரது காலில் விழுந்த  பேத்திக்கு ஆசிர்வாதம் செய்து நூறுவருசம் புருசன் பிள்ளையோட சந்தோசமா வாழுவ ஆத்தா என்றார். அவளும் சந்தோசமாக எழுந்து தாய் , தந்தையிடம் ஆசி பெற்றாள். அனைவரும் அவளை வாழ்த்தி திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

 

மணப்பெண் அழைப்பு சிறப்பாக நடைபெற்றது. விஜயலட்சுமி தான் வேல்விழிக்கு ஆரத்தி எடுத்து மண்டபத்திற்குள் அழைத்து வந்தார்.

 

எங்கடா இருக்கிங்க என்ற தெய்வானையிடம் தோப்பு வீட்டில் தான் அம்மா என்றான் சுகுமாறன். வெற்றி எங்கடா என்றவரிடம் அவன் குளிச்சுட்டு இருக்கான் அம்மா என்றான். பொண்ணு அழைப்பு முடிஞ்சுருச்சு அடுத்து மாப்பிள்ளை அழைப்புக்கு பத்து நிமிசம் தான் இருக்கு அதுக்குள்ள வந்து சேருங்க  என்றவர் இந்த பையனுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை என்று திட்டினார்.

 

என்னடி எங்கே உன் மகன் என்ற கதிரேசனிடம் தோப்பு வீட்டில் தான் இருக்கானாம். குளிச்சுட்டு இருக்கானாம் இப்ப வந்துருவான் என்றார் தெய்வானை.

சரி சீக்கிரம் வரச் சொல்லு என்றவர் ஐயரிடம் பொண்ணுக்கு செய்ய வேண்டிய சடங்கெல்லாம் செய்யுங்க பையன் வந்துருவான் என்றிட அது எப்படி மச்சான் என்றார் ராஜசேகரன்.

 

நம்ம பையன் தானே அத்தான் நீங்க முதல்ல வேல்விழிக்கு காப்பு கட்டி செய்ய வேண்டிய சடங்குகளை ஆரம்பிங்க என்றதும் சரியென்று வேல்விழிக்கு செய்ய வேண்டிய சடங்குகள் ஆரம்பிக்கப் பட்டது. முகூர்த்தப்புடவை கொடுத்து அவளை கட்டி வருமாறு பணித்தனர். அவளும் சென்று முகூர்த்தப்புடவை கட்டிக் கொண்டு மணமேனைக்கு வந்த நேரம் வெற்றிமாறனும் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தான்.

 

…..தொடரும்…

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!