என்ன மச்சான் மாப்பிள்ளை இன்னமும் வரவில்லை என்ற ராஜசேகரனிடம் வந்துருவான் மச்சான் நீங்க வேல்விழியை மணவறைக்கு அழைச்சுட்டு வாங்க அதெல்லாம் தாலி கட்ட என் மகன் வந்துருவான் என்றார் கதிரேசன். அது எப்படி மாப்பிள்ளை இல்லாமல் பொண்ணை மட்டும் மனையில் அமர வைப்பது என்று கேட்ட விஜயசேகரனிடம் அதெல்லாம் வெற்றி வந்துருவான் நீங்க பொண்ணுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்யுங்கள் என்றார் கதிரேசன்.
வேல்விழியோ என்ன சொல்லுறிங்க அண்ணி இன்னும் அத்தான் வரவில்லையா அவர் வராமல் நான் மட்டும் மனையில் எப்படி உட்காருவது என்ன விளையாட்டா இது என்றவளிடம் அப்பா தான் சொல்லுறாரே அண்ணன் வந்துரும் நீ வாடி என்ற ரேணுகா தன் நாத்தனாரை அழைத்துக் கொண்டு வந்து மனையில் அமர வைத்த அந்த நேரம் சரியாக வெற்றிமாறன் மாப்பிள்ளைக் கோலத்தில் மண்டபத்திற்குள் வந்து சேர்ந்தான். உடன் தன் மனைவி கயல்விழியுடன்.
அவர்களைக் கண்ட மொத்தக் குடும்பமும் , சொந்த பந்தங்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
என்னடா வெற்றி இது என்ற தெய்வானையிடம் எனக்கு கயல்விழியைத் தான் பிடிச்சுருக்கு அம்மா என்றான் வெற்றிமாறன். என்னது கயல்விழியைப் பிடிச்சுருக்கா அப்ப என்ன இதுக்குடா என் தங்கச்சியை நிச்சயம் பண்ண சம்மதிச்ச என்ற சுரேந்திரன் வெற்றிமாறனின் சட்டையைப் பிடித்தான் . அத்தான் அது அப்பாவோட முடிவு அதை மீற முடியவில்லை என்றவன் எனக்கு கயல்விழியைத் தான் பிடிச்சுருக்கு என்றான் மறுபடியும்.
வேல்விழி உடைந்தே விட்டாள். இந்த துரோகத்தை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தன்னை பிடிக்கவில்லை என்று அவன் கூறி இருந்தாலும் மனசு ஆறி இருக்கும். ஆனால் தன் தங்கையை பிடித்திருக்கிறது அதுவும் திருமணம் நடக்கப் போகும் நாளில் வந்து சொல்கிறானே எப்படிப் பட்ட துரோகம் என்று நினைத்தவள் கற்சிலை போல் அமர்ந்திருந்தாள்.
சுரேந்திரனும், நரேந்திரனும் வெற்றிமாறனை அடித்திட அண்ணா நிறுத்துங்க என் புருசனை அடிக்க நீங்கள் யாரு என்றாள் கயல்விழி. என்னது புருசனா உன்னை தான்டி முதலில் அடிக்கனும் என் தங்கச்சி அப்படி என்னம்மா துரோகம் பண்ணினாள் உனக்கு இப்படி அவளோட வாழ்க்கையைவே கெடுத்துட்டியே என்ற சுரேந்திரனிடம் நான் யாரோட வாழ்க்கையையும் கெடுக்கவில்லை எனக்கு பிடிச்ச வாழ்க்கையை ஏத்துக்கிட்டேன் என்றாள் கயல்விழி.
என்னடி பிடிச்ச வாழ்க்கை உனக்கு இவனைப் பிடிச்சுருந்தால் முன்னாடியே சொல்லி இருந்திருக்கலாமேடி இப்படி மணமேடை வர வந்து வேல்விழி அசிங்கப் பட்டிருக்க மாட்டாளே என்ற விஜயசேகரன் மகள் கயல்விழியை அடித்திட மாமா அவளை விடுங்க என்றான் வெற்றிமாறன். நான் என் பொண்ணை அடிக்கிறேன் என்ற விஜயசேகரனிடம் அவள் என்னோட மனைவி என்றான் வெற்றிமாறன்.
டேய் என்னடா பண்ணி வச்சுருக்க என்ற கதிரேசன் மகனை அடித்திட வர சிறு சலசலப்பு கைகலப்பு ஏற்பட்டிட போதும் உங்களோட நாடகத்தை நிறுத்திருங்களா என்று கத்தினாள் வேல்விழி. அனைவரும் அமைதியாகிட என்ன நடக்குது இங்கே என்றவள் வெற்றிமாறனின் சட்டையைப் பிடித்து உனக்கு என்னைப் பிடிக்கலைனா நிச்சயம் பண்ணும் போதே சொல்லி இருக்கலாமே என்றாள். என்னையை பார்த்தால் கேனைச்சிறுக்கி மாதிரி இருக்குதா. நான் பட்டுச்சேலை , நகைநட்டு எல்லாம் போட்டு அலங்காரம் பண்ணி பொம்மை மாதிரி உனக்காக மணவறையில் காத்திருந்தால் நீ இவளை தாலி கட்டி கூட்டிட்டு வந்துருக்க என்றவள் ஏன் இப்படி பண்ணுன அப்படி என்ன பாவம் பண்ணுனேன் நான். இப்படி மணவறை வரை வந்து அசிங்கப்பட்டு நிற்கிறேன் என்றாள் வேல்விழி.
வேலு அவர் சட்டையில் இருந்து கையை எடு என்ற கயல்விழியின் கன்னத்தில் பளாரென்று அறைந்தவள் துரோகி துரோகி நீயாவது சொல்லி தொலைஞ்சுருக்க வேண்டியது தானடி இவனை விரும்புறேன்னு நான் தேவையில்லாமல் என் மனசில் ஆசையை வளர்த்திருக்க மாட்டேன் இல்ல என்றவள் ஏன்டா இப்படி பண்ணுன ஏன்டா இப்படி பண்ணுன என்று வெற்றிமறனின் சட்டையைப் பிடித்து உலுக்கிட வேல்விழி அவர் என்னோட புருசன் என் புருசன் சட்டையில் கை வைக்க நீ் யாருடி என்றவள் அவளைப் பிடித்து தள்ளிட வேல்விழி கீழே விழுந்து விட்டாள். ஏய் என்ற கயல்விழி உன்னை அவருக்கு பிடிக்காமல் போன காரணம் தானே தெரிஞ்சுக்கனும் நல்லா கேளு உன் அக்கா வேலைக்காரனோட ஓடிப் போனது போல நீயும் ஓடிப் போக மாட்டனு என்ன நிச்சயம் உன் அம்மா ஓடி வந்தவங்க உன் அக்கா ஓடிப்போனவள் நீ மட்டும் என்ன ஒழுக்கமாவா இருப்ப அந்த பயம் தான் உன்னை வேண்டாம்னு என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டாரு என்றாள் . ஏய் கயல் உன்னை என்று கோபமாக வந்த வேல்விழியைப் பிடித்து மீண்டும் தள்ளி விட்டாள் கயல்விழி.
மகளைத் தாங்கிப் பிடித்த ராஜேஸ்வரியைக் கட்டிக் கொண்டு அழுதாள் வேல்விழி. அம்மா பாருங்கம்மா என்ன பேசுறாள்னு என்றவள் நான் யாருக்கு என்ன துரோகம் பண்ணினேன் அம்மா என்னை ஏன் இப்படி என்றவள் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு அம்மா போகலாம் வாங்க என்றாள்.
எங்கம்மா என்ற ராஜேஸ்வரியிடம் நம்ம வீட்டுக்குத் தான் அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே என்ற வேல்விழி கிளம்பிட நில்லுடி எங்கே போற என்றார் வடிவுடைநாயகி. எங்கே போறனா நம்ம வீட்டுக்குத் தான் அப்பத்தா என்றவளிடம் மனையில் உட்கார்ந்த பொண்ணு கழுத்தில் தாலி ஏறாமல் மண்டபத்தை விட்டு போகக் கூடாது வேலு என்ற வடிவுடைநாயகி இந்த பொறுக்கிப் பயல் இல்லைனா என் பேத்திக்கு வேற மாப்பிள்ளையா கிடைக்காது என்றவர் தன் அண்ணன் துரைப்பாண்டியனிடம் சென்றவர் அண்ணே எனக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்விங்க தானே என்றார் வடிவுடைநாயகி.
சொல்லு வடிவு என்ன செய்யனும் என்ற துரைப்பாண்டியனிடம் என் பேத்தியை உங்க மருமகளா ஏத்துக்கனும் என்ற வடிவுடைநாயகி ரத்னவேலுவின் கழுத்தில் மாலையை போட்டு மணவறைக்கு அழைத்து வந்தார்.
என்ன மதனி இது என்ற தில்லைநாயகியை துரைப்பாண்டியன் பார்த்த பார்வையில் வாயை மூடினார். அப்பத்தா என்ன இது என்ற வேல்விழியிடம் இது தான் இறைவன் தீர்ப்பு ஆத்தா என்றவர் அவளை மணமேடையில் அமர வைத்தார்.
ஐயர் மந்திரங்கள் ஓதி கெட்டிமேளம் கொட்டிட வேல்விழியின் கழுத்தில் ரத்னவேல் திருமாங்கல்யத்தைக் கட்டி அவனது மனைவியாக்கிக் கொண்டான். கண்களில் கண்ணீர் வழிய வேண்டா வெறுப்பாக அவன் கட்டிய தாலியை ஏற்றுக் கொண்டாள் வேல்விழி.
எப்படி எல்லாம் நடக்க வேண்டிய கல்யாணம் இப்படி நடந்திருச்சே என் மகள் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பபடனுமா ஆண்டவா என்று நொந்து போன ராஜசேகரன் கூனிக் குறுகி நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சாய்ந்தார்.
அப்பா என்று பதறிய வேல்விழி தன் தந்தையின் அருகில் ஓடி வர மொத்தக் குடும்பமும் அதிர்ந்து போயினர். நரேந்திரனும், சுரேந்திரனும் அவரைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர். பின்னாலே மற்றவர்களும் ஓடினர்.
வெற்றிமாறன் கிளம்ப எத்தனிக்க அவனது கையைப் பிடித்துக் கொண்ட கயல்விழி எங்கே போறிங்க அத்தான் என்று அவனை இழுத்துச் சென்று தன் அம்மாவிடமும், மாமாவிடமும் ஆசிர்வாதம் வாங்கினாள்.
சரி வாங்க நாம போகலைனாலும் தப்பாகிரும் என்ற விஜயலட்சுமி அவர்களை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்.
ஐசியு வாசலில் நின்று அழுது துடித்துக் கொண்டிருந்தாள். விருப்பம் இல்லாமல் தாலி கட்டி இருந்தாலும் அவள் தன் மனைவி என்பதை அவன் உணர்ந்தாலும் ஏதோ ஒன்று அவளிடம் அவனை நெருங்க விட வில்லை.
அண்ணன்களின் தோளில் சாய்ந்து குழந்தை போல அழுதாள் வேல்விழி. ஒரு பக்கம் மகளின் வாழ்வு இப்படி ஆனதை நினைத்து துடித்துக் கொண்டிருந்த ராஜேஸ்வரிக்கு கணவனின் உயிர் ஊசலாடுவது பேரிடியாக அவர் தலையில் இறங்கிட அப்படியே வாய்பொத்தி அழுது கொண்டிருந்தார்.
வடிவுடைநாயகி மருமகளை சமாதானம் செய்து கொண்டிருந்தார். வேண்டாத வீட்டிற்கு விருந்தாளியாக வந்தது போல் ஒரு ஓரமாக விஜயலட்சுமி நின்று கொண்டிருந்தார். வெற்றிமாறனைக் கண்ட தெய்வானைக்கு கோபம் தலைக்கு ஏற ஏன்டா நாயே எங்கடா வந்த என்று மகனை அடித்தார். அத்தை என்ற கயல்விழியின் கன்னத்தில் பளாரென்று அறைந்தவர் இவன் என் புள்ளைடி அப்பறம் தான் உன் புருசன் வேல்விழிகிட்ட பேசுனது மாதிரி என்கிட்ட பேசுன வாயைக் கிழிச்சுருவேன் ராஸ்கல் என்றார் தெய்வானை.
அண்ணி என்ன பேசுறிங்க என்ற விஜயலட்சுமியிடம் இவ்வளவு நேரம் வாயை மூடிகிட்டு நடக்கிறதை எல்லாம் மனசு குளிர ரசிச்சுட்டு நின்னுட்டு உங்க மகளை அடிச்சதும் வக்காளத்து வாங்க வரீங்களா உண்மையை சொல்லுங்க இந்த மாதிரி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என் மகன் வேல்விழியை எந்த அளவுக்கு நேசிச்சான்னு எனக்கு நல்லாவே தெரியும் அண்ணனும், தங்கச்சியும் கூடிக் கூடிப் பேசி என் அண்ணன் குடியைக் கெடுத்துட்டிங்களே என்றார் தெய்வானை.
என்னடி தெய்வானை சொல்லுறது எல்லாம் உண்மையா நீயும், உன் அண்ணனும் நடத்துற நாடகமா எல்லாம் என்ற விஜயசேகரன் தன் மனைவி விஜயலட்சுமியை அடித்திட சித்தப்பா போதும் நிறுத்துங்க. உங்க எல்லோரையும் கை எடுத்து கும்பிடுறேன் தயவுசெய்து வீட்டுக்குப் போங்க என் அப்பா சாகக் கிடக்கிறார். நீங்க எல்லோரும் நடத்துற நாடகத்தை பார்க்கிற அளவுக்கு எங்க உடம்புலையும் தெம்பில்லை , மனசிலையும் தெம்பில்லை என்ற வேல்விழி தரையில் விழுந்து அழுதாள்.
பாப்பா அழாதடா அப்பாவுக்கு எதுவும் ஆகாது என்ற நரேந்திரனும், சுரேந்திரனும் தங்கையை சமாதானம் செய்ய முயன்று தோற்று தாங்களும் அவளுடனே அழது தவித்தனர்.
விஜயலட்சுமி, கதிரேசன், தில்லைநாயகி மூவரும் வெற்றிமாறன் , கயல்விழியை அழைத்துக் கொண்டு சென்றனர். துரைப்பாண்டியன் , ரத்னவேல், தெய்வானை மூவரும் அவர்களுடன் செல்லவில்லை.
வீட்டிற்கு வந்த மணமக்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற விஜயலட்சுமி பாலும், பழமும் கொடுத்திட வெற்றிமாறன் அதைக் கீழே தட்டி விட்டவன் எழுந்து தன்னறைக்குச் சென்றான். அவன் பின்னே சென்ற கயல்விழி அத்தான் என்றிட அவளது கழுத்தை நெறித்து சுவற்றோடு தள்ளினான். அத்தான் விடுங்க என்றவள் தன் சங்கு நெறிபடுவதை தடுத்திட கையையும், காலையும் உதைந்தாள். அதில் பக்கத்தில் மேஜையில் இருந்த கண்ணாடி ஜாடி உடைந்து விட அந்த சத்தம் கேட்டு மற்ற மூவரும் பதறிக் கொண்டு ஓடி வந்தனர்.
வெற்றிமாறனை கஷ்டப்பட்டு இழுத்த கதிரேசன் மகனின் கன்னத்தில் பளாரென்று அறைந்தவர் பைத்தியமாடா உனக்கு என்றிட ஆமாம் பைத்தியம் தான் எனக்கு வர கோபத்திற்கு இவளை மட்டும் இல்லை உங்க மூன்று பேரையும் சேர்த்து கொலை பண்ணினால் தான் என் ஆத்திரம் தீரும் என்றவன் ஏன்டி இப்படி பண்ணுன என்று கயல்விழியை மீண்டும் நெருங்கினான். வெற்றி வேண்டாம்டா அவளை எதுவும் பண்ணிராதே என்ற கதிரேசனை கோபமாக பார்த்தவன் கொலை வெறியில் இருக்கேன். அப்பன்கிற மரியாதை மனசுல இருக்கிறதால மட்டும் தான் இவள் மேல மட்டும் கை வச்சுருக்கேன் என்றான் வெற்றிமாறன்.
….தொடரும்….