திமிர் பிடித்தவள் என்று வேல்விழியைத் திட்டி விட்டுத் தன்னறையில் அமர்ந்திருந்தாள் கயல்விழி. என்னாச்சு கயல் ஏன் டல்லா இருக்க என்ற விஜயலட்சுமியிடம் நடந்தவற்றைக் கூறிய கயல்விழி அவளுக்கு ரொம்ப திமிரும்மா. என்னை ரொம்ப இன்சல்ட் பண்ணுறாள். வெற்றி இவளுக்கு இன்னமும் புருசன் ஆகலை ஆனால் அவர் இப்பவும் என்னோட மாமா பையன் தானே என்றாள் கயல்விழி.
உனக்குத் தான் புருசன் ஆக வேண்டியவன் உன் மனசில் தான் அவன் மேல அபிப்ராயம் இல்லைனு சொல்லிட்டியே கயல் அப்பறம் என்ன பண்ணுறது. மாமன் மகளா , கட்டிகிட்ட பொண்டாட்டியானா பொண்டாட்டிக்குத் தானே உரிமை அதிகம் அதனால இனிமேல் நீ வெற்றி கிட்ட பேசுறதை நிறுத்திடு. அவன் உனக்கு சொந்தம் இல்லை. அவன் இனி வேல்விழிக்கு மட்டும் தான் சொந்தம் என்றார் விஜயலட்சுமி. அம்மா என்ன சொல்றிங்க என்றவளிடம் இப்போ கூட ஒன்றும் கெட்டுப் போகலை உனக்கு வெற்றிமாறனை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசை இருக்கா சொல்லு அந்த வேல்விழியை விரட்டிட்டு உனக்கும், வெற்றிக்கும் அம்மா கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்றார் விஜயலட்சுமி.
அப்படி எல்லாம் ஒரு எண்ணமும் எனக்கு இல்லை என்று கயல்விழி தன் அன்னையிடம் கூறி விட்டு தன்னறைக்குச் சென்றாள். நீயே வந்து சொல்லுவ கயல் எனக்கும் , வெற்றி அத்தானுக்கும் கல்யாணம் பண்ணி வைங்க அம்மானு இப்போ தானே உனக்கும் , வேல்விழிக்கும் நடுவில் சின்ன விரிசல் விழுந்திருக்கு இதுவே பெரிய பகையா மாறும். உன் அம்மா அதற்கான வேலையை பார்த்துக்கிறேன் என்று நினைத்த விஜயலட்சுமி சந்தோசமாக தன் மனதில் வேறொரு திட்டத்தினை யோசித்துக் கொண்டு இருந்தார்.
வேல்விழி என்று வந்த வெற்றிமாறனிடம் சொல்லுங்க அத்தான் என்றாள் வேல்விழி. என் மேல இன்னமும் கோவமா என்றவனிடம் எனக்கு உங்க மேல கோபம் எல்லாம் கிடையாது அத்தான் வருத்தம் தான். முன்னாடி என் கூட பேசுறது உங்க வீட்டில் அத்தையை தவிர வேற யாருக்குமே பிடிக்காது ஆனால் இப்போ அப்படி இல்லை நமக்கு கல்யாணம் ஆகப் போகுது இப்பவும் நீங்க பழையபடி பயப்படுறது கொஞ்சம் வருத்தம் அவ்வளவு தான் என்றவள் சாப்பிட்டிங்களா என்றாள். இல்லைம்மா என்றவனின் கை பிடித்தவள் நீங்க என்ன குழந்தையா நேரத்துக்கு சாப்பிட மாட்டிங்களா என்றவள் அவனை உணவு மேஜையில் அமர வைத்து சாப்பாடு பரிமாறினாள். அவன் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் ஐ லவ் யூ வேல்விழி என்றான். அவள் சிரித்து விட்டு சரி சாப்பிடுங்க என்றாள். நீ சொல்லவில்லை என்றவனிடம் சொன்னால் தானா கல்யாணத்திற்கு அப்பறம் நீங்களே புரிஞ்சுக்குவிங்க என்றாள் வேல்விழி. இன்னும் ஒரு வாரம் தானே இப்படிங்கிறதுக்குள்ள ஓடிப் போயிரும் என்றவனைப் பார்த்து சிரித்தாள்.
நீயும் சாப்பிடு வேல்விழி என்றவனிடம் நீங்க சாப்பிடுங்க அத்தான் என்றாள் வேல்விழி. அவள் ஒருவேளை நீங்க சாப்பிட்ட தட்டில் சாப்பிடுவாளோ என்னமோ என்றாள் கயல்விழி. கண்டிப்பா மாட்டேன் அது என்ன பெண்களுக்கு எழுதப்படாத சட்டம் புருசன் சாப்பிட்ட இலையில் தான் பொண்டாட்டி சாப்பிடனும்னு என்றவள் நம்ம கல்யாணத்திற்குப் பிறகு கூட நான் உங்க இலையில் சாப்பிட மாட்டேன் அத்தான் என்றாள் வேல்விழி. நான் உன்னை சாப்பிட சொல்ல மாட்டேன் வேல்விழி என்றான் வெற்றிமாறன்.
நல்ல ஜோடி தான் என்ற கயல்விழி வெற்றியின் இலையில் இருந்த குலோப்ஜாமூனை எடுத்து சாப்பிட்டாள். என்ன பண்ணுற கயல் நீ என்ற வேல்விழியிடம் எனக்கு குலோப்ஜாமூன் பிடிக்கும், அத்தானுக்கு பிடிக்காது அதான் அவரோட இலையில் இருந்து எடுத்து சாப்பிடுறேன் என்றாள் கயல்விழி. அது எப்படி நீ எடுத்து சாப்பிடலாம் என்ற வேல்விழியிடம் என் மாமா பையன் அவர் அவரோட இலையில் எடுத்து சாப்பிடக் கூடாதுனு சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கு என்ற கயல்விழி அப்பறம் அவர் ஒன்றும் உன்னோட புருசன் இல்லை. ஏன்னா இன்னும் உங்களோட கல்யாணம் நடக்கவில்லை அதனால என்னை கேள்வி கேட்கிற உரிமை உனக்கு இல்லை என்றாள் கயல்விழி.
வெற்றிமாறனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. இந்த கயல் வேற சிவ பூஜையில் கரடி மாதிரி அப்போ அப்போ வந்து எதுனாலும் வம்பு வளர்த்துகிட்டே போறாளே ஆண்டவா என்று நொந்து கொண்டான்.
கயல்விழி அவள் பாட்டிற்கு சாப்பிட வேல்விழிக்குத் தான் நிம்மதி கெட்டது. இவள் ஏன் என்கிட்ட இப்படி போட்டி போடுகிறாள் ஒருவேளை வெற்றி அத்தானை விரும்புகிறாளோ என்று யோசித்துக் கொண்டிருந்தாள் வேல்விழி.
நிச்சயதார்த்தம் முடிந்த இரவு தில்லைநாயகி தன் மகன் கதிரேசனிடம் எனக்கு இந்த சம்மந்தம் சுத்தமா பிடிக்கலை தம்பி அந்த வாயாடிச் சிறுக்கி இப்பவே நம்ம பையனை அடக்கி வச்சுருக்கா இன்னைக்கு பேசுனா பாரு பேச்சு கல்யாணம் ஆன பின்னாலும் புருசன் சாப்பிட்ட இலையில் உட்கார்ந்து சாப்பிட மாட்டாளாமே எம்புட்டு வாய்க்கொழுப்பு என்றார் தில்லைநாயகி.
எல்லாம் ஒரு வாரம் தான்மா நம்ம வீட்டுக்கு மருமகளா வரட்டும் அவளோட மொத்த திமிரையும் அடக்கிருவோம் என்றார் கதிரேசன். ஏது உன் மகனை வச்சுகிட்டு உன் மகன் இப்பவே அவளோட காலில் விழுந்து கிடக்கிறான் அவனை வச்சுகிட்டு ஒன்றும் பண்ண முடியாது என்றார் தில்லைநாயகி.
என்ன நடக்கப் போகுதுனு பொறுத்திருந்து பாருங்கம்மா. அந்த வேல்விழி அவள் அக்காளுக்கும் சேர்த்து கஷ்டத்தை அனுபவிப்பா அந்த ராஜேஸ்வரி புழுவா துடிக்கனும் மகள் படுற கஷ்டத்தை பார்த்து என்ற கதிரேசன் இன்னும் ஆறவே மாட்டேங்குது அவள் வாழ்ந்துட்டு இருக்கிற வாழ்க்கை என் தங்கச்சி வாழ வேண்டியா வாழ்க்கை என்று பற்களைக் கடித்தார் கதிரேசன். எனக்குள்ளையும் அந்த ரணம் இன்னும் அப்படியே தான் தம்பி இருக்கு இன்னும் ஆறலைய்யா ஆறவும் ஆறாது என்ற தில்லைநாயகி அந்த வேல்விழியை நான் படுத்துற பாட்டுல அவள் தினம் தினம் இரத்தக்கண்ணீர் வடிக்கனும் என்றார் தில்லைநாயகி.
என்னம்மா இதெல்லாம் என்ற வெற்றிமாறனிடம் என் மருமகளுக்கு புதுப் புடவைகள், நகைகள் என்றார் தெய்வானை . ஏன் உன் அண்ணன் அவரோட மகளுக்கு கொஞ்சமாவா சேர்த்து வச்சுருக்காரு அதான் இன்னைக்கு நகைக்டை பொம்மை மாதிரி நின்னாளே அவ்வளவு நகை போட்டுகிட்டு என்றான் வெற்றிமாறன். டேய் கண்ணு வைக்காதடா பொண்ணுங்களுக்கு புடவை, நகை மேல இருக்கிற ஆசை எப்பவுமே குறையாது அது எவ்வளவு இருந்தாலும் கம்மியா இருக்குனு தான் தோன்றும் என்றார் தெய்வானை.
அதானே மருமகளை விட்டுக் கொடுப்பிங்களா என்றவனிடம் ஏன்டா என் மருமகளை நான் விட்டுக் கொடுக்கனும் என்றவர் இன்னைக்கு இந்த செயினை நீ அவளோட கழுத்தில் போட்டு விடனும்னு ஆசைப்பட்டு எடுத்துட்டு வந்தேன். அவளுக்கு பூவையே உன் அத்தை கையால தான் வச்சு விடனும்னு உன் அப்பா சொல்லிட்டாரு. அப்பறம் எப்படி இதை உன்னை போட விடுவாங்கனு திருப்பி கொண்டு வந்துட்டேன் இதை என் மருமகளோட கழுத்தில் போட்டு விட்டுரு வெற்றி என்றார் தெய்வானை.
கண்டிப்பாம்மா நாளைக்கே இதை அவள் கழுத்தில் போட்டு விடுறேன் என்ற வெற்றிமாறன் சந்தோசமாக அந்த செயினை கையில் வைத்துக் கொண்டு பார்த்திருந்தான். வேல்விழி இதை உன் கழுத்தில் நாளைக்கு மாட்டி விடுறேன் என்று சந்தோசமாக தன்னறைக்குச் சென்று உறங்க ஆரம்பித்தான்.
கயல்விழிக்கு ஏனோ உறக்கம் என்பதே வரவில்லை. நேற்றுவரை ஒன்றும் தோன்றவில்லை. இன்று அது தனக்கு சொந்தமில்லை என்ற உண்மை புரிந்த பின் தொலைத்து விட்டோமோ என்று மருகினாள். அவள் கண்ணை மூடினாளே வெற்றிமாறனும், வேல்விழியும் மணக்கோலத்தில் இருக்கும் காட்சி தான் தோன்றியது. அவங்க கல்யாணம் பண்ணிகிட்டா சந்தோசம் தானே என்று நினைத்தவளின் மனதிற்குள் உண்மையிலே உனக்கு சந்தோசமா கயல் என்று ஒரு குரல் கேட்டது. ஆமாம் என்றவளிடம் பொய் சொல்லாதே உனக்கு சந்தோசம் கிடையாது. கவலை,வலி , வேதனை, துக்கம் உண்மையாக உனக்கு சந்தோசம் என்பது இல்லை இப்பவே வேல்விழி உன்னையும், வெற்றியையும் பேச அனுமதிப்பதில்லை. நாளை திருமணம் முடிந்த பிறகு அவள் அந்த வீட்டின் மருமகளாக ஆன பிறகு உன்னை அந்த வீட்டிலிருந்து முழுவதும் விலக்கி விடுவாள்.
இந்த வீட்டில் மட்டும் இல்லை இனி அந்த வீட்டிலும் வேல்விழியின் ராஜ்ஜியம் தான் என்று அவளை உசுப்பி விட்ட மனசாட்சியின் குரல் அவளை ஏதோ செய்தது. கடவுளே என்ன இது ஏன் எனக்கு இப்படி எல்லாம் தோனுது என்று புலம்பியவளின் அறையின் விளக்கு ஒளிர்ந்தது.
என்ன கயல் தூங்கலையா என்ற விஜயலட்சுமியிடம் தன் மனக்குமுறலைக் கூறினாள் கயல்விழி. என்ன சொல்லுற கயல் உனக்கு அப்போ வெற்றியை பிடிச்சுருக்கா என்ற விஜயலட்சுமியிடம் அப்படித் தான் தோனுது அம்மா. இந்த வீட்டில் மட்டும் இல்லை இனி நம்ம அம்மாச்சி வீட்டிலும் வேல்விழி தான் மகாராணியாம்மா என்ற கயல்விழியிடம் இங்கே அந்த கிழவி இருக்கிற வரை அவளைக் கொண்டாடும் அப்பறம் என்ற விஜயலட்சுமி என் அண்ணன் வீட்டில் என் மகள் மட்டும் தான் மகாராணி உனக்கு வெற்றியை பிடிச்சுருக்கு தானே உங்க கல்யாணம் நடத்த வேண்டியது இந்ந அம்மாவோட பொறுப்பு நீ கவலைப் படாதே. இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம் நடக்கும் வெற்றிமாறனுக்கும், வேல்விழிக்கும் இல்லை வெற்றிமாறனுக்கும் , கயல்விழிக்கும் என்ற விஜயலட்சுமி சந்தோசமாகவும் அதே நேரம் ஒரு அரக்கத்தனத்துடனும் சிரித்தார்.
என்ன ராஜி ஏன் சோகமா இருக்க என்ற ராஜசேகரனிடம் எனக்கு பயமா இருக்குங்க நம்ம பொண்ணு கொஞ்சம் வாயாடி அந்த வீட்டில் சமாளிச்சுருவாளானு பயமா இருக்கு என்றார் ராஜேஸ்வரி. மூத்தவள் பண்ணிட்டுப் போன அசிங்கத்தை அவங்க இன்னமும் மறக்கவில்லை அந்த கோபத்தை நம்ம வேலுகிட்ட காட்டிட்டாங்கனா என்னால தாங்க முடியாதுங்க என்றார் ராஜேஸ்வரி. நம்ம தெய்வானைக்கு வேலு வேற ரேணுகா வேற இல்லை ராஜி அதனால நீ பயப்படாமல் இரு. நம்ம பொண்ணு ஒன்றும் முட்டாள் இல்லை சாமர்த்தியசாலி அவளுக்குத் தெரியும் எங்கே எப்படி நடக்கனும்னு என்ற ராஜசேகரன் மனைவிக்கு ஆறுதல் கூறினார்.
தோப்பு வீட்டில் இருந்த தன்னறையில் அமர்ந்திருந்தவனின் காதில் அவளது அழைப்பு கேட்டுக் கொண்டே இருந்தது. ரத்னவேல், ரத்னவேல் என்று அவளது அழைப்பு அவனது காதில் விடாமல் ஒலித்துக் கொண்டு இருந்தது. அந்த அழைப்பை நினைத்தவன் கண்களில் கண்ணீர் நிற்காமல் ஓடியது. தன் கண்களைத் துடைத்துக் கொண்டவன் கதவு தட்டும் சத்தம் கேட்டு கையில் இருந்த பொருளை மறைத்து வைத்து விட்டு கண்களைத் துடைத்துக் கொண்டான். தன்னை சரி செய்து விட்டு கதவைத் திறந்தவன் முன்னே அவள் நின்றிருக்க அதிர்ந்து போனான்.
…..தொடரும்….