நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 12

5
(9)

காதல் : 12

அவரது குடும்பத்தினர் செய்த துரோகம் வேணியை மிகவும் காயப்படுத்தி விட்டது.. அவங்க மனசு உடைஞ்சி போயிட்டாங்க.. எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்த அம்மா ஒரு முடிவு எடுத்தாங்க.. என்னை கூட்டிட்டு அந்த வீட்ல இருந்து வெளியே வந்திட்டாங்க… 

அவங்க யாரும் எங்களை தடுக்கல.. நானும் அம்மா சொல்றதுதான் சரினு என்னோட படிப்பு சம்மந்தமான சர்டிபிகேட் மட்டும் எடுத்திட்டு அம்மாகூட வந்திட்டேன். 

வீட்ல இருந்து வந்திட்டோம், ஆனால் எங்க போறதுனு தெரியாம டவுன்ல பஸ் ஸ்டாண்ட்ல நின்னுட்டு இருந்தோம்.. அப்போ அம்மா அவங்க மனசில இருந்தது எல்லாத்தையும் எங்கிட்ட சொல்லி அழுதிட்டு இருந்தாங்க.. நானும் அவங்க சொல்றதை கேட்டு அவங்களை சமாதானப்படுத்திட்டு இருந்தன்.. அப்போ எங்க பக்கத்தில இருந்த இவங்க எங்ககிட்ட பேசினாங்க.. அம்மாவும் எங்களை பற்றி இவர்கிட்ட சொன்னாங்க.. அதைக் கேட்ட இவங்களுக்கு கோபம் வந்திட்டு.. 

அப்புறம் அவங்ககிட்ட எடுத்து சொல்லி அம்மா புரிய வச்சாங்க.. இவங்க என்னை டவுன்ல ஒரு காலேஜ்ல சேர்த்து விட்டாங்க.. எங்களுக்கு ஒரு வீடு வாடகைக்கு எடுத்துக் கொடுத்தாங்க.. மாசம் மாசம் பணம் கொடுப்பாங்க.. அப்பிடியே இருக்கும் போது அம்மா ஒருநாள் திடீர்னு செத்துட்டாங்க.. என்னால அவங்க இழப்பை தாங்க முடியல..” என்று அழுதவளை தேற்றினாள் சத்தியா.

“சுமதி நீ எதுக்காக எங்கிட்ட சொல்லிட்டு இருக்க.. பாரு இப்போ உனக்கு பழசெல்லாம் ஞாபகம் வருது.. கஷ்டமா இருக்கும் சுமதி விடு.. அம்மா உங்ககூட தான் எப்பவும் இருப்பாங்க சரியா…..?”

“இல்லை நான் சொல்லணும்.. இவங்க எனக்கு யாருனு தெரியுமா….?” என்று சத்தியாவிடம் கேட்டாள் சுமதி. 

“யாரா இருந்தா என்ன சுமதி உனக்கு உதவி பண்றாங்கல பெரியையா.. அது போதும்…..”

“யாரோ ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்திருக்கிறாரு உங்களுக்கு அவர் மேல சந்தேகமே வரலையா…..?”

“இல்லை சுமதி.. பெரியையாக்கு யாரையும் ஏமாற்ற வராது.. அவருக்கு ரொம்ப நல்ல மனசு…..” 

“நீங்க கேட்கலனாலும் நான் சொல்லணும் பின்னாடி இது பிரச்சனையாகிடக்கூடாது…. “

“எதுக்கு சுமதி……?”

“நான் சொல்றதை கேளுங்க பிளீஸ்….”

“சரி சொல்லு…..”

“இவங்க என்னோட அண்ணா…..”

“நல்லது சுமதி அண்ணா இருந்தா எந்த துன்பமும் நம்ம கிட்ட கூட வராதுனு சொல்லுவாங்க….”

“உங்களுக்கு புரியலை.. இவங்க உதவி பண்ணதால நான் அண்ணாணு கூப்பிடல.. அண்ணாவோட அப்பாதான் எனக்கும் அப்பா… என்னோட அம்மாவை ஏமாத்தினவரு முத்துப் பாண்டி.. இது யாருக்கும் தெரியாது அண்ணி…..”

“என்னமா சொல்ற…? அவரா இப்பிடி சகுந்தலா அம்மாக்கு இது தெரிஞ்சா அவங்களால தாங்கிக்க முடியாதே.. கடவுளே….”

“அண்ணி என்னை தப்பா நினைக்கல தானே….” 

“இதில உங்களை தப்பா நினைக்க என்ன இருக்கு சுமதி.. உன்னோட அம்மா ரொம்ப பாவம்.. அதே நேரத்தில சகுந்தலா அம்மாவும் பாவம்.. அவங்களுக்கு இப்பிடி அவங்க புருஷன் துரோகம் பண்ணிட்டாருனு தெரிஞ்சா உயிரையே விட்டுடுவாங்க….. “

“அண்ணி, இப்போதைக்கு இதை யார்க்கிட்டையும் சொல்லாதீங்க…” என்று கேட்டாள் சுமதி. சத்தியாவும், “கண்டிப்பா நான் இதை யார்க்கிட்டையும் சொல்ல மாட்டேன்….” என்றாள். 

பின்னர் சக்தியைப் பார்த்தவள், “பெரியையா உங்களுக்கு உண்மையிலேயே ரொம்ப பெரிய மனுசுங்க…. வேற யாராக இருந்தாலும் சுமதியை நிச்சயம் கைவிட்டிருப்பாங்க…. ஆனால் நீங்க எவ்வளவு உயர்ந்த குணத்தோட நடந்துக்கிறீங்க….” என்றாள். 

சக்தியும், “என்னதான் அம்மா வேற வேறனு இருந்தாலும் அப்பா ஒண்ணுதானே….. அம்மா அந்த மனுசனை எவ்வளவு நம்புறாங்க, ஆனால் அவரு இப்படி பண்ணினது அவங்களுக்கு தெரிஞ்சால், நிச்சயமா நீ சொல்ற மாதிரி உயிரையே விட்டுடுவாங்க…. சுமதி எங்களோட கல்யாணம் முடிந்த பிறகு நீ டவுனுக்கு போயிடு…. அங்க என்னோட பிரண்ட் ராகுல் இருக்கிறான். அவன்கிட்ட உன்னைப் பற்றி சொல்லியிருக்கிறன். உனக்கு லா காலேஜ்ல சீட் வாங்கி குடுத்திடுவான். நாங்களும் உன்னை அடிக்கடி வந்து பார்த்திட்டு வர்றம். உன்னோட படிப்பை மட்டும் எப்போதும் விட்டுடாத சுமதி. எதைப் பற்றியும் கவலைப்படாமல் படிக்கிற வழியைப் பாரு…. ” என்றான். 

அவளும், “சரி அண்ணா, நீங்க சொல்ற மாதிரியே இனிமேல் நடந்துக்கிறன். அண்ணி போலாமா….?” என்று சத்தியாவிடம் கேட்க, அவளும் சரி என்றவள், சக்தியிடம் சொல்லிவிட்டு சென்றாள். 

சுமதியும் சத்தியாவும் வீட்டிற்கு வந்தனர். வீட்டுக்குள் வந்ததும் சுமதி சத்தியாவின் கைகளை பிடித்தவள், “அண்ணி என் மேல எந்த வருத்தமும் இல்லைல என்னோட அம்மாவுக்கும் அவங்க முன்னாடி கல்யாணம் பண்ணவங்கன்னு தெரியாது அண்ணி….. தெரிஞ்சிருந்தா அம்மா நிச்சயமாக அவங்களை கல்யாணம் பண்ணி இருக்க மாட்டாங்க…” என்றாள். 

அதற்கு சத்தியா, “புரியுது சுமதி நீ யோசிக்காத இப்போ உன்னோட முழு சிந்தனையும் உன்னோட படிப்பில மட்டும் தான் இருக்கணும்…. பெரியையா சொன்னாங்கல்ல அதே மாதிரி நீ படிச்சு பெரிய ஆளா வந்து நிற்கணும்…. உங்க அம்மாவோட இந்த நிலமைக்கு காரணமான உங்க மாமா முன்னாடி நீ தலை நிமிர்ந்து நிக்கணும்….. அதுதான் நீ உங்க அம்மாவுக்கு செய்யப்போற பெரிய கைமாற இருக்கும்…. உனக்கு என்ன உதவி வேணும்னாலும் நானும் பண்ண தயாரா இருக்கேன் சுமதி….” என்றவளை அணைத்துக் கொண்டு கண்கலங்கினாள் சுமதி. 

ஊரில் உள்ள எல்லோருக்கும் சத்தியாவிற்குமான திருமண செய்தி அறிவிக்கப்பட்டது. ஊரில் உள்ளவர்கள் சத்தியாவை பார்த்து ‘அந்த குடிகாரனுக்கு போயா இப்படி ஒரு பொண்ணு’ என்று பரிதாபப்பட்டனர். ஒரு சிலர், ‘சக்தி ஐயாவோட குடும்பம் எப்படிப்பட்ட பெரிய குடும்பம்…. எதுக்காக அவங்க இப்படி வேலைக்காரியோட பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்கணும்…’ என்று ஒரு சிலர் புரளி பேசினர். மேலும் ஒரு சிலர் ‘வீட்டில் தானே வேலை பார்க்கிறது… என்ன ரெண்டு பேருக்கும் ஏதாவது தப்பாக ஏதாவது இருந்திருக்கும் அதனால் தான் ஐயா கல்யாணம் பண்ணி வைக்கிறார்’ என்று ரகுவின் அடி ஆட்களும் இவ்வாறு செய்தியை ஊருக்குள் பரப்பி விட்டிருந்தனர். 

இது எப்படி இருந்த போதும் சத்தியாவுக்கும் சக்திக்குமான திருமணநாள் வந்தது. ஊரில் உள்ள எல்லோரும் அந்த வீட்டு திருமணத்திற்கு வந்திருந்தனர். பின்னர் ஊரின் பெரிய வீட்டு திருமணம் அல்லவா…? அதில் சிலர் என்ன நடக்கின்றது என்று வேடிக்கை பார்க்க வந்திருந்தனர். மற்றும் சிலரோ ஏதாவது பிரச்சினை வருமா என்றும், தங்களுக்கு பேச கொஞ்சம் வதந்தி கிடைக்கும் என்று தகவல் திரட்ட கொஞ்சம் பேரென்று அவ்விடத்தில் ஆட்கள் குழுமி இருந்தனர். சுமதி சத்தியாவுடன் இருந்தாள். சுமதியே சத்தியாவிற்கான அலங்காரங்களை செய்து கொண்டிருந்தாள். சரஸ்வதி அங்கிருந்த கல்யாண வேலைகளை ஆடியோடி செய்து கொண்டிருந்தார். சகுந்தலாவும் மகனுடனே இருந்தார். ஆனால் சக்தி தனது வாயை திறந்து ஒரு வார்த்தை கூட தாயுடன் பேசவில்லை. சக்தியின் அழைப்பிற்கிணங்க ராகுலுடன் அவனது உயிர் நண்பன் வாசுவும் வந்திருந்தான். வாசுவிற்கு ராகுல் நன்றாக சிகிச்சை அளித்ததன் பலன் வாசு நன்றாக குணமாகி பழையபடி நன்றாகியிருந்தான். 

அவனை அணைத்து கண் கலங்கினான் சக்தி. இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். ராகுல்தான் இருவரையும் தேற்றினான். 

சக்தியை தயார் படுத்திக் கொண்டு இருந்தனர் நண்பர்கள். சிறிது நேரமாகியிருந்தது. சகுந்தலாவிற்கு இதற்கு மேல் அங்கு இருக்க மனம் வரவில்லை. வெளியே சென்று வந்திருப்பவர்களை கவனிக்க ஆரம்பித்தார். சௌந்தரபாண்டியன் முத்துப்பாண்டியன் விதியே என்று அமர்ந்திருந்தனர். முத்துப்பாண்டி இன்னும் சுமதியைக் கண்டு கொள்ளவில்லை. சுமதி அங்க இருப்பாள் என்றும் அவர் எதிர்பார்க்கவில்லை. இங்கே ஒரு பக்கம் தனது அறையில் இருந்த ரகு ஜீவிதாவிற்கு ஃபோன் பண்ணிக் கொண்டே இருந்தான். “ஹலோ ஜீவி…”

“சொல்லு ரகு….”

“என்னாச்சு ஜீவி….. எங்கே இருக்க… ஊருக்கு வந்திட்டியா….?” என்று கேட்டான். அதற்கு ஜீவிதாவும், “இதோ ஒரு டென் மினிட்ஸ்… வந்துகிட்டு இருக்கிறன்….” என்று சொன்னாள். ரகு ஜீவிதாவிடம், “சீக்கிரம் ஜீவி….. முகூர்த்தத்துக்கு நேரமாச்சு…. அவன் தாலி கட்டுறதுக்கு முதல்ல அவனை அவமானப்படுத்தியாகனும்…..” என்றான்.

ஜீவிதாவும், “கண்டிப்பா…. செம்மையாக செஞ்சிடலாம்….” என்றாள். இருவரும் மேலும் சில விஷயங்களைப் பேசிவிட்டு போனை வைத்தனர். 

ஐயர் பொன்னையும் மாப்பிள்ளையும் அழைத்து வரச் சொன்னார். முதலில் ராகுலும் வாசுவும் சக்தியை அழைத்து வந்து மணமேடையில் அமர வைத்தனர். மாலையை எடுத்துக் கொடுக்க சக்திக்கு ராகுலும் வாசுவும் சேர்ந்து மாலையை போட்டுவிட்டனர். சிறிது நேரத்தில் மந்திரங்கள் சொல்லி அவனுக்கு உரிய சடங்குகள் முடிந்ததும் பெண்ணை அழைத்து வரச் சொன்னார். அங்கே சரஸ்வதி ஒருபுறமும் சுமதி ஒரு புறமும் கைபிடித்து அழைத்து வர வெட்கத்துடன் குனிந்த தலை நிமிராது அழகுக் பொட்டகமாக நடந்து வந்தாள் சத்யா. 

சத்தியாவை இதுவரை யாரும் இப்படி பார்த்தது இல்லை. சுமதி தன் கை வண்ணத்தினால் அவள் அண்ணியை மெருகேற்றி இருந்தாள். சக்தி கூட சத்தியா இவ்வளவு அழகாக இருப்பாள் என்று நினைக்கவில்லை. மேலும் அவன் அதை எதிர்பார்த்ததும் இல்லை. 

மெல்ல நடந்து சபைக்கு வந்தவள் மணமேடையில் அமர்ந்தாள். சபைக்கு வணக்கம் வைத்த சத்தியாவை ஓரக்கண்ணால் பார்த்தான். அவளும் தன் மைவிழியால் அவனைப் பார்த்தாள். சுமதி சத்தியாவுக்கு பின்னால் நின்றிருந்தாள். இந்தப் பெண் யாரு ஊருக்கு புதுசா இருக்கு என்று எல்லோரும் அவளையும் பார்த்தனர். சுமதி யாரையும் பொருட்படுத்தாமல் தனது அண்ணன் திருமணத்தில் கலந்து கொண்டிருந்தாள். அதே நேரம் சௌந்தர பாண்டியனை அழைக்க வந்த முத்துப்பாண்டி எதேர்ச்சியாக மேடையைப் பார்த்தவர் அங்கே நின்றிருந்த சுமதியைப் பார்த்து, ‘இது சுமதி மாதிரி இல்ல இருக்கு… இவன் எப்படி இங்க வந்தா..? ஒரு வேளை சக்திக்கு இவளை பற்றிய உண்மை தெரிந்து இருக்குமா…? ஆனால் சக்திக்கு எப்படி சுமதியை தெரியும்…. கடவுளே நீ தான் எப்படியாவது என்னை காப்பாத்தணும்…’ என்று கடவுளை துணைக்கழைத்தார். பின் அய்யர் மந்திரங்கள் சொல்ல மங்கள வாத்தியங்கள் முழங்க ஐயர் கொடுத்த தாலியை வாங்கிய சக்தி சத்யாவின் கழுத்தில் கட்ட போனான். அப்போது, “நிறுத்துங்கள்…..” என்ற சத்தம் கேட்டது. 

அங்கே நின்றிருந்தவளை பார்த்த சக்தி அதிர்ச்சி அடைந்தான். 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!