நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 13

4.7
(12)

காதல் : 13

நவீன முறையில் இருந்த அந்த காரில் இருந்து வெஸ்டர்ன் ஆடையில் தனது அழகை ஊரே பார்க்கும்படி நளினமாக நடந்து வந்தாள் ஜீவிதா. ஜீவிதாவை அங்கே சக்தி எதிர்பார்க்கவில்லை என்பது அவனது இறுகிய முகத்திலேயே தெரிந்தது. வாசுவும் இங்கே எப்படி ஜீவிதா வந்தாள் என்று யோசித்துக் கொண்டு நின்றிருந்தான். ரகு யாரும் அறியாமல் தனது புன்னகையை உதடுகளுக்குள் மறைத்துக் கொண்டான்.

சபை நடுவே வந்து நின்றாள் ஜீவிதா. அவளைப் பார்த்ததும் சபை நடுவே சலசலப்பு ஏற்பட்டது. அவள் அருகில் வந்த சகுந்தலா, “யாரும்மா நீ…. எதுக்காக இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லிட்டு இருக்க….?” என்றார். 

அவரைப் பார்த்தவள், “நான் யாருனு இங்க இருக்கிற எல்லோருக்கும் முன்னாடி சொல்லத்தான் வந்திருக்கிறன்….. உங்களுக்கு நான் சொல்ற வரைக்கும் அமைதியாக இருக்க முடியலனா, இதோ மணமேடையில உட்கார்ந்து இருக்கிறாரே உங்க பையன் அவர்கிட்ட கேளுங்க நான் யாருனு… ” என்றாள். 

ஜீவிதா அப்படி சொன்னதும் எல்லோருடைய பார்வையும் சக்தி மீது திரும்பியது. அவனின் உடல் விறைத்ததை அருகில் இருந்த சத்தியாவால் உணர முடிந்தது. மெதுவாக யாரும் அறியாமல் அவனது கையைப் பிடித்தாள். அவளது தீண்டலில் திரும்பிப் பார்க்க, கண்களை இமைத்தாள் அமைதியாக இருக்கும்படி. அவனும் தலையாட்டி விட்டு இருந்தான். 

ரகுதான், “என்ன நீ அம்மா உங்கிட்ட யாருனு கேட்டால்… நீ சக்திக்கிட்ட உன்னைப் பற்றி கேட்க சொல்ற….? உனக்கு எப்படி சக்தியை தெரியும்….?” என்றான். உடனே முத்துப் பாண்டியும், “அதுதானே… ஏம்மா யாரு நீ இங்க வந்து என்ன பிரச்சனை பண்ணிட்டு இருக்க….?” என்றார். 

சரஸ்வதி தனது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார். சுமதியும், ‘இது என்ன புதுப் பிரச்சினை… கடவுளே அண்ணா அண்ணி கல்யாணம் எந்த பிரச்சினையும் இல்லாமல் நடக்கணும்..’ என்று முணுமுணுத்துக் கொண்டு நின்றவளை திரும்பிப் பார்த்தான் வாசு. ‘தனது நண்பனின் நல்வாழ்க்கைக்கு கடவுளை வேண்டும் இவள் யார்…?’ என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் உதித்தது. அதைப் பற்றி பின்னர் பார்த்துக் கொள்ளலாம். முதலில் ஜீவிதாவை ஒருவழி பண்ண வேண்டும் என்ற முடிவோடு அவன் பேச வரும்போது, ஜீவிதா, “உங்க பையன் சக்திவேலால் ஏமாத்தப்பட்டவ நான்… என்னை காதலிக்கிறதா சொல்லிட்டு அப்புறம் கல்யாணம் பண்ணிக்க முடியாதுனு சொல்லி ஏமாத்திட்டாரு…” என்றாள் நீலிக் கண்ணீருடன். 

ஜீவிதா கூறுவதைக் கேட்ட சகுந்தலா அதிர்ச்சி அடைந்தார். சகுந்தலா மட்டுமல்ல அங்கிருந்த ஏனையவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் சத்தியா மட்டும் எதுவும் பேசவில்லை. அமைதியாக சக்தியின் கைகளைப் பிடித்தவாறு இருந்தாள். சகுந்தலா, ஜீவிதாவிடம், “எம்மாடி உன்னை இதுக்கு முதலில் நாங்க பார்த்தது கூட இல்லை….. நீ எப்படி என் பையனைப் பற்றி தப்பா சொல்லுவ…. நீ சொல்றதை எப்படி நம்ப முடியும்…..?” என்று கேட்டார். அதுக்கு சௌந்தர பாண்டியனும் உடனே, “ஆமா எங்களோட குடும்பமானம் என்னவாகிறது….. நீ என்ன நினைச்ச…. திடீர்னு வந்து சொன்னா நாங்க நம்பிடுவோமா…..?” என்றார். அவருக்கு எங்கே தங்களது குடும்பமானம் போய்விடுமோ என்ற பயம். அவரைப் பார்த்த ஜீவிதா எதுவும் பேசாமல் தனது பையில் இருந்த சில போட்டோக்களை எடுத்து அங்கே சபை முன் காட்டினாள். அதைப் பார்த்ததும் அவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஜீவிதா சொல்வது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை என்று அவர்களுக்குப் புரிந்தது. அந்த புகைப்படத்தில் சக்தியும் ஜீவிதாவும் மிகவும் நெருக்கமாக இருக்கும்படி கிராபிக்ஸ் செய்யப்பட்டிருந்தது. 

அது கிராபிக்ஸ் செய்யப்பட்டிருப்பது வாசு, ராகுல், சுமதி அவர்களுக்கு மட்டுமே புரிந்தது. ஏனையவர்களுக்கு அதை பார்க்க நிஜத்தில் எடுத்துக் கொண்டது போலவே இருந்தது. அவ்வூர் கிராம மக்கள் அல்லவா, அவர்களுக்கு இதைப் பற்றிய அறிவு சற்று குறைவாகவே இருந்தது. இதைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த ரகுவரன், “என்ன சக்தி இது…? இப்போ என்ன பண்றது…. கண்ணுக்கு முன்னுக்கு இந்த பொண்ணு இப்படி ஒரு போட்டோவை காட்டுது……” என்று சொல்லிக் கேட்க, அதற்கு முத்து, “அதுதானே இப்போதான் தெரியுது…. அமெரிக்காவில செய்திட்டு இருந்த அவ்ளோ பெரிய வேலையை விட்டுட்டு, இங்க வந்து விவசாயம் செய்தார்னு சொல்லி இப்பதான் புரியுது….. இந்தப் பொண்ணை ஏமாத்திட்டு வந்திருக்க…. உனஉனக்கு மனசாட்சியே இல்லையா……?” என்று அவனது சட்டையை பிடித்தார் முத்து. சக்தியின் சட்டை பிடித்து சத்தம் போட்டவர் கையைப் பிடித்து தன்னை விடுவித்துக் கொண்ட சக்தி, அவரை ஒரு பார்வை பார்த்தான். ‘பொண்ணை ஏமாற்றியது பற்றி நீ கேட்கிறாயா….’ என்ற பார்வையை அவரிடம் பதித்தான். அவனது பார்வை அவரைத் தாக்கியது. முத்துப்பாண்டி மௌனம் ஆகிவிட்டார். சரஸ்வதிதான் இருதலைக் கொள்ளியாக தவித்தார். யாரை நம்புவது என்று தெரியவில்லை பாவம் அவர். ஆனால் சத்தியா திடமாகத்தான் இருந்தாள். சுமதி சத்தியாவின் அருகில் வந்து நின்று கொண்டாள். சக்தி அவனது அம்மாவை பார்த்தான். சகுந்தலாவும் ஜீவிதாவிடமிருந்த அந்த போட்டோவை வாங்கி சக்தியிடம் காட்டினார். “என்ன சக்தி இது…. எதுக்காக இந்தப் பொண்ணுகூட இப்படி பழகிட்டு அவளை ஏமாத்தின…. இப்படி போட்டோல நெருக்கமா இருக்கிற அளவு பழகிட்டு அந்த பொண்ண ஏமாற்றலாமா…. இப்படியா உன்னை நான் வளர்த்தேன்….. ஏன் சக்தி இப்படி பண்ணினாய்…. பதில் சொல்லு…. உன்மேல எவ்வளவு நம்பிக்கை வைச்சிருந்தேன்…. இந்த ஒரு போட்டோல அத்தனையையும் உடைச்சிட்ட……” என்றார். அங்கேயே இருகிவிட்டான் சக்தி. 

ஜீவிதா தனது நடிப்பை மேலும் பலப்படுத்துவதற்கு சகுந்தலாவின் கைகளை பிடித்துக் கொண்டாள். “நீங்க பாக்குறதுக்கு நீங்க என்னோட அம்மா மாதிரியே இருக்கிறீங்க… உங்க பையன் என் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கிட்டார்…. இதுக்கு நீங்க என்ன பதில் சொல்லப் போறீங்க….?” என்று அவர் கையைப் பிடித்து அழுதாள். ஊரில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொன்று பேச ஆரம்பித்தனர். “சக்தி நீயே இப்படி பண்ணலாமா….. சக்தி உன்கிட்ட நாங்க இப்படி ஒன்னை எதிர்பார்க்கல…..” என்று சொற்கள் அவனை கசையடிகளாக வந்தன. “அப்போ சக்திக்கும் இந்த சத்தியா பிள்ளைக்கும் ஏதாவது முன்கூட்டியே பழக்கம் இருந்திருக்கு போல இருக்கு…. அதுதான் சௌந்தரபாண்டி ஐயா வேகவேகமா ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்து வைக்க முடிவு பண்ணி இருக்கிறாரு போல இருக்கு….” என்று சத்தியாவையும் சேர்த்து தப்பாக பேசினார். சக்திக்கு கோவம் வந்தது. “நிறுத்துங்க எல்லாரும்…. என்ன பேச்சு பேசிட்டு இருக்கிறீங்க…. யாரோ ஒரு பொண்ணு வந்து சொன்னது உண்மை ஆயிடுமா….” என்று கேட்டான். அதற்கு ஜீவிதா, “என்னைப் பார்த்து சொல்லு சக்தி…. நம்ம ரெண்டு பேரும் உயிருக்குயிராக காதலிக்கலை….” என்று கேட்டாள். சக்தியும் அவளது கண்ணைப் பார்த்தான். “ஆமா காதலிச்சேன்… ஆனா உன் கூட நான் எப்போவாவது தப்பா நான் பார்த்திருப்பேனா…. இல்லை பழகிருப்பேனா…. காதலிச்சா கூடக் கன்னியமாகத்தான் இருந்தேன்… ஆனால் என்னோட காதலுக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்லாத உன்னை காதலிச்சேன் பாரு….. அதுதான் நான் செஞ்ச பெரிய தப்பு…..” என்றான். 

“அப்போ நீ இந்த பொண்ண காதலிச்சுக்கிறியா அண்ணா…..” என்று அந்த நேரத்திலும் சத்தியாவிடம் சக்தியை மறைமுகமாக மாட்டிவிட எண்ணினான் ரகு. 

“ஆமா காதலிச்சேன்….. அதுல என்ன இருக்கு…. அப்புறம் எங்க ரெண்டு பேருக்கும் சரி வராதுனு நினைச்சி பிரிஞ்சிட்டேன்……” என்று சொன்னான் சக்தி தைரியமாக. ஆனால் ஜீவிதா, “இல்லைங்க இவரோட சில பழக்கம் எனக்குப் பிடிக்கலை….. அதுபற்றி இவரிடம் பேசினேன்….. ஆனால் இவரு வேணாம்னு சொல்லிட்டாரு….” என்று நீலிக் கண்ணீர் வடித்தார். 

“உங்க ஊர்கார ஒருத்தரால என்னோட வாழ்க்கையே போய்விட்டது…. இனிமேல் என்னுடைய எதிர்காலம் என்ன ஆகிறது……” என்று அழுதாள். அப்போது சௌந்தரபாண்டியன், “ஏம்மா அழாதம்மா…. அதுதான் எங்க ஊருக்கு வந்துட்டியே உனக்கு ஒரு நீதி கிடைக்காமல் இங்க எதுவும் நடக்காது…..” என்று சொன்னார். சத்தியாவைப் பார்த்து அவர் சொன்னதைக் கேட்ட சுமதிக்கும் வாசுவிற்கும் கோபம் எல்லையற்ற கோபம் வந்தது. 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!