புகைப்படம்!!

5
(3)

புகைப்படம்!!

 

“தாத்தா!! உங்க அம்மாவோட ஃபோட்டோ ஒண்ணு கூட இல்லையா? நீங்க ஏன் பிக்(big) பாட்டியை ஃபோட்டோ எடுக்கல? இப்ப எனக்கு பிக் பாட்டி எப்படி இருப்பாங்கன்னு தெரியலையே” என்றாள் என் ஏழு வயது நிரம்பாத குட்டி பேத்தி ஸ்ரேயா.

 

“இல்லம்மா அப்போலாம் ஃபோட்டோ எடுத்தா  எங்களுடைய life-time குறைஞ்சுடும்னு  நினைச்சாங்க. அதனால அவங்க எங்களை ஃபோட்டோ எடுக்க விடமாட்டாங்க..பிக் பாட்டி தாத்தாக்கு 5 வயசு இருக்கும் போதே சாமிகிட்ட போயிட்டாங்க. அதனாலதான் பிக் பாட்டியோட ஒரு ஃபோட்டோ கூட நம்ம வீட்டில கிடையாது” என்று விளக்கினேன் நான்.

 

” அம்மா, அப்பாகிட்ட என்னை விட்டுட்டு ஃபோர் டேஸ்க்கு பாட்டி வீட்டுக்கு போயிட்டாங்கன்னா அவங்க ஃபோட்டோவை பார்த்து கொஞ்சம் ஜாலியா ஆயிடுவேன். அப்புறம் அவங்க வந்தப்புறம் அவங்களோட பேசுவேன். உங்களுக்கு உங்க அம்மா ஞாபகம் வந்ததுனா நீங்க என்ன பண்ணுவீங்க? உங்ககிட்ட ஃபோட்டோவும் இல்லை.. உங்க அம்மாவோட ஃபேஸ் உங்களுக்கு ஞாபகம் இருக்கா?” என்று கேட்டாள் அவள்.

 

“ஓ.. என் அம்மாவோட ஃபேஸ் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கே” என்றேன் நான்.

 

“அது எப்படி உங்களுக்கு ஞாபகம் இருக்கு? எல்கேஜி படிக்கும் போது எனக்கு ஒரு மிஸ் வந்து இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்தாங்க. ஆனா இப்போ அவங்க ஃபேஸ் சுத்தமா எனக்கு ஞாபகம் இல்ல. உங்களுக்கு மட்டும் எப்படி நீங்க 5 இயர்ஸ்ல பார்த்த உங்க அம்மாவோட ஃபேஸ் இவ்ளோ இயர்ஸுக்கப்பறம் ஞாபகம் இருக்கு?” என்று கேட்டாள் மழலைக் குரலில்.

 

“அதுவா… பிக் பாட்டியோட எல்லா ஃபீச்சர்ஸும் உங்க அப்பா, உன் அத்தை, என்னோட பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் ஸ்ரீனிவாசன் தாத்தா, சரோஜா  பாட்டி, நாராயணன் தாத்தா, வாசுகி பாட்டி அவங்க பசங்க அவங்க எல்லார் கிட்டயும் இருக்கு.  அவங்களை பார்க்கும் போதெல்லாம் எனக்கு பிக் பாட்டி ஞாபகம் வரும். அதனால எனக்கு பிக் பாட்டி ஃபேஸ் மறக்கவே மறக்காது.” என்றேன் நான்.

 

“ஓ அப்படியா…!! அப்படின்னா எனக்கு கொஞ்சம் யார் யார்கிட்ட பிக் பாட்டியோட என்னென்ன ஃபீச்சர்ஸ் எல்லாம் இருக்குனு சொல்றீங்களா?” என்றாள்.

 

“ஓ… சொல்றேனே” என்றேன் நான்.

 

“ஓகே..  ஃபர்ஸ்ட் பிக் பாட்டியோட ஃபேஸ் ஷேப் யாரை மாதிரி இருக்கும்?”

 

” ம்ம்ம்ம்ம்ம்…பிக் பாட்டியோட ஃபேஸ் ஷேப் அப்படியே நாராயணன் தாத்தா மாதிரியே இருக்கும்” என்றேன்.

 

“ஓ… ஓகே.. பாட்டியோட ஸ்கின் கலர் எப்படி இருக்கும்?” என்றாள்.

 

“உங்க அப்பா அப்படியே பிக் பாட்டியோட கலர்தான்” என்றேன்.

 

“வாவ்… அப்ப பாட்டி சூப்பர் ஃபேரா இருப்பாங்களா?” என்றாள்.

 

“ஆமாண்டா செல்லம்… அப்படியே பிக் தாத்தாக்கு கான்ட்ராஸ்ட்டா இருப்பாங்க.. பிக் தாத்தா கருப்பு.. பிக் பாட்டி  நல்ல செவப்பா இருப்பாங்க..” என்றேன்..

 

இப்படியே  பாட்டியின் ஒவ்வொரு அங்கமும் எப்படி இருக்குமென யாரை போன்று இருக்கும் என எப்படி எல்லாம் தன்னை அலங்கரித்துக் கொள்வாள்… எப்படி தலை பின்னி இருப்பாள் என மாறி மாறி பல கேள்விகள் கேட்டு தெரிந்து கொண்டு, கேட்டு தெரிந்து கொண்டதை ஒரு நோட்டிலும் எழுதி வைத்துக் கொண்டாள். 

 

“எதுக்குடா இப்படி எழுதி வச்சிக்கிற குட்டி?” என்று கேட்டேன்.

 

“வெயிட் பண்ணுங்க. இன்னும் டூ டேஸ்ல உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தரேன்” என்று கூறி விட்டு  ஓடினாள்.

 

அந்த சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும் என்று  எனக்குள் ஒரு குறுகுறுப்பு இருந்தது. காத்திருந்தேன்.

 

சொன்னதுபோலவே இரண்டு நாட்கள் கழித்து ஒரு பெரிய கவரைக் கொண்டு வந்து என்னிடத்தில் கொடுத்தாள்.

 

“தாத்தா…அதை பிரிச்சுப் பாருங்க. அது யாரோட ஃபோட்டோன்னு சொல்லுங்க பார்க்கலாம்..” என்றாள் என்னை ஆவலோடு பார்த்துக் கொண்டு.

 

உள்ளே பிரித்து பார்த்தபோது என் அம்மாவின் புகைப்படம் அப்படியே தத்ரூபமாக அதில் இருந்தது கண்டு ஆச்சரியத்தில் எனக்கு பேச்சே வரவில்லை. கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. அப்படியே என் பேத்தியை வாரி அணைத்துக் கொண்டேன்.

 

“பிக் பாட்டி இப்படித்தான் இருப்பாங்களா தாத்தா?” என்று கேட்டாள்.

 

“கண்ணு.. உன் பிக் பாட்டியை அப்படியே என் கண்ணு முன்னாடி  கொண்டு வந்து நிறுத்திட்டம்மா. நாங்க அன்னைக்கு ஃபோட்டோ எடுக்கலன்னாலும் எங்க அம்மாவோட உருவத்தை அப்படியே மீட்டு கொடுத்துட்டேடா கண்ணம்மா… எப்படிம்மா இதை பண்ண?” என்றேன் மேலே பேச முடியாமல். தொண்டை அடைத்தது.

 

“நீங்க பாட்டி ஃபீச்சர்ஸ் மேட்ச் ஆயிருக்குனு சொன்ன அத்தனை பேரோட ஃபோட்டோவும் கலக்ட் பண்ணினேன். அதில  பாட்டியோட எந்த ஃபீச்சர்ஸ் எல்லாம் மேட்ச் ஆகியிருக்கோ  அந்த ஃபீச்சர்ஸ் எல்லாம் ஃபோட்டோஷாப் பண்ணினோம். இப்போ  பாட்டியோட பிச்சர் கிடைச்சிருச்சு. ஷ்ரவன் அண்ணாதான் இதை செஞ்சு கொடுத்தான்.” என்றவளைப் பார்த்தபோது என் தாயே என் பேத்தி உருவத்தில் வந்தது போலிருந்தது.

 

“தேங்க்யூ வெரி மச் டா செல்லம்.. எனக்கு கெடைச்சதிலயே பெஸ்ட் கிஃப்ட் இதுதான். ” என்று கூறி என் பேத்தியை… இல்லை… இல்லை.. என் அம்மாவை வாரி அணைத்துக்கொண்டேன்.

 

– சுபஸ்ரீ எம்.எஸ். ” கோதை”

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!