அத்தியாயம் 12
“ஏமி அர்ச்சனா இங்கேயும் நீங்க ரூமுக்குள்ளயே அடைஞ்சு கிடக்க போறீங்களா? எங்க கூட நீங்களும் ஷாப்பிங் வாங்களேன்” என்று தெய்வானை அழைத்திட, “இல்லை வதனை நீங்களும், அண்ணையாவும் போயிட்டு வாங்க நான் அத்தைகாரு கூட இருக்கேன்” என்றாள் அர்ச்சனா.
“பாவா நீங்க சொல்லுங்க உங்க தங்கச்சி கிட்ட ஊரில் தான் வெளியே போனால் யாராவது எதுனாலும் சொல்லுவாங்கனு ஒரு தயக்கம் இருந்துச்சு. இங்கே அவங்களை யாரு என்ன சொல்ல போறாங்க” என்ற தெய்வானையிடம், “தெய்வா நீயும், வைஷுவும் போங்க நான் அவளை அழைச்சிட்டு வரேன்” என்றான் கார்த்திகேயன்.
“இது நான் யூஸ் பண்ணாத புது சல்வார் தான். அவங்களை இதை போட்டுக்க சொல்லுங்க ப்ளீஸ்” என்று தெய்வானை கூறிட, சரியென்று அந்த உடையை வாங்கிக் கொண்டான் கார்த்திகேயன்.
“அர்ச்சு” என்ற கார்த்திகேயனிடம், “ஏமி அண்ணையா வதனை சொன்னதை தான் நீங்களும் சொல்லப் போறீங்களா? உங்களுக்காக தான் நான் ஹைதராபாத் வந்ததே. வந்த இடத்தில் இஷ்டத்துக்கு ஊர் சுத்துனா அம்மா ஏதாச்சும் சொல்லுவாங்க அது ஏன் உங்க யாருக்குமே புரியவே மாட்டேங்குது” என்றாள் அர்ச்சனா.
“அர்ச்சனா நான் ஒரு விஷயம் சொன்னால் தப்பா எடுத்துக்க மாட்டீங்களே” என்று வந்தான் பிரசாந்த். “அவங்க உங்களோட அம்மா நீங்க சந்தோஷமா இருந்தால் அதற்கு உங்களை திட்ட மாட்டாங்க. அப்படியே திட்டினாலும் உங்க அம்மா தானே திட்டப் போறாங்க. நாளைக்கு திட்டு விழும்னு சொல்லிட்டு இன்னைக்கு சந்தோசத்தை இழந்துறாதீங்க. நாங்க எல்லோரும் வெளியே போகிறோம் நீங்க மட்டும் வராமல் இருந்தால் எப்படி. எல்லோரும் ஒன்றாக போகனும்னு தானே ப்ளான் நீங்க மட்டும் இப்போ வரவில்லை என்றால் நாங்க யாருமே போக மாட்டோம்” என்று கூறினான் பிரசாந்த்.
“ஆமாம் அர்ச்சு பிரசாந்த் சொல்லுறது போல நீ வரலைன்னு சொன்னால் உன் வதனையே வெளியே போக வேண்டாம்னு தான் சொல்லுவாள்” என்றான் கார்த்திகேயன்.
“எல்லோரும் சொல்லுறாங்களே கேளு சித்தி. நீயும் எங்க கூடவே வா சித்தி” என்று வைஷ்ணவி அடம் பிடித்திட அர்ச்சனாவும் வர சம்மதித்தாள்.
“சரி இந்த டிரஸ் போட்டு ரெடியாகு” என்று கார்த்திகேயன் கூறிட, “அண்ணையா இதெல்லாம் வேண்டாமே” என்றாள் அர்ச்சனா. “அர்ச்சனா ப்ளீஸ் எனக்காக” என்று தெய்வானை கேட்டிட, அமைதியாக அந்த உடையை வாங்கிக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.
“ஏமி தெய்வா உன் நாத்தனாரை கிளம்ப வச்சுட்டேன் பாரு” என்ற பிரசாந்திடம், “என் அண்ணையா சாமர்த்தியசாலி தான்” என்று கூறிய தெய்வானை புன்னகைத்திட அர்ச்சனா வந்தாள்.
எந்தவொரு ஒப்பனையும் இல்லாமல் அந்த இளஞ்சிவப்பு நிற சல்வாரில் அழகாக இருந்தாள் அர்ச்சனா. “அர்ச்சனா ரொம்ப அழகா இருக்கம்மா” என்ற கலா ராணியிடம் புன்னகைத்த அர்ச்சனா, “இப்போ கிளம்பலாமா?” என்றாள்.
“இது போதாதே” என்ற தெய்வானை, “என் கூட வாங்க” என்று அர்ச்சனாவை அழைத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.
“ஏமி வதனை” என்று அவள் கேட்டிட, “சின்னதா ஒரு மேக்கப்” என்றாள் தெய்வானை.
“நேனு விதன்டுவுனு , மேக்கப் வெசுக்கோவாடாம் தப்பு, அம்மாவுக்கு தெரிஞ்சா நேனு சம்பேஸ்தானு” என்று அவள் பதறிட, “விதவை, கைம்பெண் இப்படி எல்லாம் சொல்லி உங்களை நீங்களே ஏன் தனிமைப் படுத்திக்கிறீங்க அர்ச்சனா. நாம இருக்கிறது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டுல கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க. அத்தைம்மாவுக்கு தான் புரியலை நீங்களும் ஏன் அப்படியே இருக்க நினைக்கிறீங்க. உங்களை நான் நாளைக்கே ஒரு கல்யாணம் பண்ணிக்க சொல்லவில்லை. ஆனால் இந்த விதவை கோலம் வேண்டாம்னு தான் சொல்கிறேன். வெள்ளை புடவை கட்டிட்டு வீட்டுக்குள்ள ஒரு மூலையிலேயே அடைஞ்சு கிடக்கிறது தான் வேண்டாம்னு சொல்கிறேன். நீங்கள் உங்களுக்குள்ளே போட்டு வச்சுருக்கிற வேலியை தான்டி வாங்க இந்த உலகம் உங்களுக்கானது. அம்மா சொன்னாங்க, பாட்டி சொன்னாங்கனு உங்க வாழ்க்கையில் சின்ன ,சின்ன சந்தோஷத்தை கூட இழந்துறாதீங்க” என்ற தெய்வானை அவளுக்கு அழகான ஒப்பனை செய்து விட்டாள்.
“பொட்டு மட்டும் வேண்டாமே வதனை ப்ளீஸ்” என்று அவள் கேட்டிட சரி என்று சொல்லி அவளை அழைத்து வந்தாள் தெய்வானை.
“அடடா என் கண்ணே பட்டு விடும் போல இருக்கே” என்ற கலா ராணி, “அம்மாடி அர்ச்சனா நீ ரொம்ப அழகா இருக்கே” என்றார். “அதற்கு காரணம் நான் தானே மம்மி” என்ற தெய்வானையிடம், “நீ என்ன பண்ணின லைட்டா பவுடர் அடிச்சு விட்டுருக்க ஆனால் அவள் இயற்கையாகவே அழகு” என்றார் கலா ராணி.
“சரி, சரி அம்மாவும், பொண்ணும் அப்பறமா சண்டை போட்டுக்கோங்க இப்போ ஷாப்பிங் போகலாம்” என்று பிரசாந்த் கூறிட, “ஆமாம் போகலாம்” என்று வைஷ்ணவியும் கூறிட ஐவரும் ஷாப்பிங் கிளம்பினர்.
“என்னங்க ஏன் ஒதுங்கி ஒதுங்கி போறீங்க” என்று பிரசாந்த் கேட்டிட, “அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை” என்று அவள் கூறிட அவளது கையை பிடித்தான் பிரசாந்த்.
“நுவ்வு ஏமி செஸ்டுன்னாவு” என்று பதறினாள் அர்ச்சனா. “ஐயோ தப்பா புரிஞ்சுட்டீங்க நான் உங்களை ஒன்னும் பண்ண மாட்டேன். எஸ்கலேட்டர்ல போக தானே தயங்கி நின்னிங்க அதான் உங்க கையை பிடிச்சு கூட்டிட்டு போக நினைச்சேன்” என்று புன்னகைத்தான் பிரசாந்த்.
அவள் மௌனமாக இருக்க, “என் கூட சேர்ந்து காலை வைங்க” என்று அவன் கூறிட அர்ச்சனாவும் அதே போல் வைத்தாள். “அவ்வளவு தான் இதுக்கு ஏன் தயங்கி நின்னிங்க” என்று அவன் சிரித்திட அவளும் சிரித்து வைத்தாள்.
“நீங்க சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கீங்க” என்ற பிரசாந்தை அவள் முறைத்திட, “ஏங்க நான் மனசுல பட்டதை பட்டுனு சொல்லுற கேரக்டர் அதான் சொல்லிட்டேன் அதுக்காக முறைப்பீங்களா” என்று அவன் சிரித்திட அவளுமே சிரித்து வைத்தாள்.
“அண்ணையாவும் , வதனையும் எங்கே” என்ற அர்ச்சனாவிடம், “வைஷ்ணவி ஏதோ பர்ச்சேஸ் பண்ணனும்னு சொன்னாள். அதான் பாவாவும், தெய்வாவும் அவள் கூட போயிருக்காங்க. நீங்க வாங்க உங்களுக்கு பர்ச்சேஸ் பண்ணுவோம்” என்று பிரசாந்த் கூறிட, “எனக்கு என்ன வாங்க ஒன்றும் வேண்டாம்” என்றாள் அர்ச்சனா.
“என்னங்க நீங்க ஷாப்பிங் வந்துட்டு ஒன்னும் வேணாம்னு சொன்னால் என்ன அர்த்தம்” என்றவன் அவளை தன்னோடு அழைத்துச் சென்றான்.
“இங்கே டிரெஸ் எல்லாமே சூப்பரா இருக்கும் வாங்க உங்களுக்கு பிடிச்சதை எடுத்துக்கோங்க” என்று அவன் கூறிட, “உங்களுக்கு எடுத்துக்கோங்க எனக்கு வேண்டாம்” என்றாள் அர்ச்சனா.
“நல்லா இருக்காதுங்க கண்டிப்பா நல்லாவே இருக்காதுங்க” என்று பிரசாந்த் கூறிட அவனை கேள்வியாக பார்த்தாள் அர்ச்சனா. “நான் புடவை , சல்வார் எல்லாம் போட்டால் கண்டிப்பா நல்லா இருக்காதுங்க இது லேடிஸ் ட்ரெஸ் ஏரியா இங்கே போயி எனக்கு டிரஸ் எடுக்க சொல்லுறீங்களே” என்று பிரசாந்த் சிரித்திட , “ஐய்யய்யோ சாரிங்க” என்று அர்ச்சனாவும் சிரிக்க ஆரம்பித்தாள்.
“என்ன அண்ணையா இரண்டு பேரும் சந்தோஷமா சிரிச்சு பேசிட்டு இருக்கீங்க போல” என்று வந்தாள் தெய்வானை. “அதான் வந்துட்டியே சிவ பூஜையில் கரடி மாதிரி” என்று ஒரு கணம் நினைத்தவன் சிரித்துக் கொண்டே, “அப்படி எல்லாம் ஒன்றும் இல்லையே தெய்வா” என்றான்.
“ஐ கேட்ச் யுவர் மைண்ட் வாய்ஸ் அண்ணையா” என்று தன் தமயனின் காதில் மெல்லமாக கூறினாள் தெய்வானை. அவளைப் பார்த்து அசடு வழிய சிரித்தான் பிரசாந்த்.
“என்ன பிரசாந்த் நீங்க இரண்டு பேரும் ஷாப்பிங் எதுவும் பண்ணவே இல்லை” என்ற கார்த்திகேயனிடம், “உங்க சிஸ்டர் தான் பாவா ரொம்ப தயங்கி எதுவும் வேணாம்னு சொல்லிட்டு இருக்காங்க” என்றான் பிரசாந்த்.
“அர்ச்சனா ஏன் எல்லாத்துக்கும் தயங்கிட்டே இருக்கீங்க. உங்களுக்கு என்ன பிடிச்சுருக்கோ அதை எடுத்துக்கோங்க இது உங்க வதனையோட ஆர்டர்” என்று புன்னகைத்தாள் தெய்வானை.
“இல்லை வதனை” என்று அவள் ஏதோ சொல்ல வர , “நீங்க சொன்னால் கேட்கவே மாட்டீங்க போல” என்ற தெய்வானை அவளை இழுத்துக் கொண்டு அந்த கடைக்குள் சென்று அர்ச்சனாவிற்கு சில உடைகளை தேர்வு செய்து அதை எல்லாம் ட்ரையல் ரூமில் போட்டு பார்க்க சொல்லி வற்புறுத்த வேறு வழி இல்லாமல் அர்ச்சனா அவள் கொடுத்த உடைகளை அணிந்து கொண்டு வந்தாள்.
இத்தனை நாட்கள் வெள்ளை புடவையிலேயே பார்த்த அர்ச்சனாவை காலையில் சல்வாரில் பார்த்ததுமே லேசாக பிடித்து விட்டது. தன் தங்கை செலக்ட் செய்த அனைத்து உடையிலும் அப்சரஸாக ஜொலித்த அர்ச்சனாவை கண் கொட்டாமல் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தான் பிரசாந்த்.
“அண்ணையா ரொம்ப வழியுது துடைச்சுக்கோ” என்று தெய்வானை கூறிட, அவளைப் பார்த்து அசடு வழிய சிரித்தான் பிரசாந்த்.
“சித்தி எல்லா டிரஸ்ஸும் உனக்கு சூப்பரா இருக்கு” என்று கூறிய வைஷ்ணவி, “அத்தைகாரு சித்திக்கு இந்த மாதிரி நிறைய டிரஸ் எடுத்துக் கொடுங்க” என்றாள் வைஷ்ணவி.
“சரி வைஷு உன் சித்திக்கு இன்னும் என்ன எல்லாம் வாங்கனுமோ வாங்கிப்போம்” என்ற தெய்வானை, “உனக்கு என்ன வேணும் சொல்லு அதையும் வாங்கலாம்” என்றாள்.
“அண்ணையா இதெல்லாம் நான் போட்டால் அம்மா திட்டுவாங்க. வதனை தான் புரியாமல் பேசுறாங்க நீங்களாச்சும் சொல்லலாமே” என்ற அர்ச்சனாவிடம், “இதோ பாரு அர்ச்சு அம்மா கிட்ட நான் பேசுறேன் உனக்கு இதெல்லாம் பிடிச்சிருக்கு தானே அப்பறம் என்ன” என்று தங்கையை சமாதானம் செய்தான் கார்த்திகேயன்.
“பாவா சொல்லுறது தான் கரெக்ட் நீங்க ஏன் பயப்படுறீங்க இந்த டிரெஸ் எல்லாமே உங்களுக்கு நிஜமாகவே ரொம்ப அழகா இருக்கு. உங்களுக்கு இந்த மாதிரி உடுத்த பிடிச்சிருக்கு அப்படினா கண்டிப்பா நீங்க உடுத்துங்க. மத்தவங்களை பத்தி யோசிக்காதீங்க”
என்று பிரசாந்த்தும் கூறிட அவள் சரியென்று தலையை அசைத்தாள்.
…மயக்கியே…