அத்தியாயம் 16
அருணா கத்தியதில் அர்ச்சனா பயந்தே போனாள். கத்திய வேகத்திற்கு வேகமாக வந்த அருணா அர்ச்சனாவின் கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்தாள்.
அருணாவின் சத்தம் கேட்டதும் மொத்த குடும்பமும் வந்து விட அர்ச்சனாவை அருணா அடித்திட, அருகில் நின்றிருந்த பிரசாந்த் அருணாவின் கையை பிடித்து , “என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க” என்று கத்தினான்.
அவனிடம் இருந்து தன் கையை பறித்துக் கொண்ட அருணா, “அவள் என் தங்கச்சி அவளை அடிப்பேன், கொல்லுவேன் அதை கேட்க நீ யாரு” என்று கத்தினாள்.
“வதனை ஏமி சேஸ்டுன்னாரு” என்று வந்த தெய்வானையை முறைத்தவள், “உன் அண்ணனுக்கு சொன்னது தான் உனக்கும். என்னை கேள்வி கேட்ட சம்பேஸ்தானு” என்று அவள் கூறி விட்டு மீண்டும் அர்ச்சனாவை அடிக்க ஆரம்பித்தாள்.
“வதனை” என்ற தெய்வானை அருணாவின் கையை பிடித்து தட்டி விட்டாள். “இது என் வீடு இங்கே வந்து என் நாத்தனாரை நீங்க அடிச்சிங்கனா நான் கேள்வி கேட்க தான் செய்வேன்” என்று கூறிட, “எது உன் வீடா இது என் நைனா வீடு” என்று அருணாவும் கத்தினாள்.
“உங்க நைனா வீடு தான் அதற்காக நீங்க என்ன வேணாலும் பண்ணுவீங்க அதை பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா? இப்போ எதுக்கு நீங்க அர்ச்சனாவை அடிச்சீங்க” என்று பற்களைக் கடித்தாள் தெய்வானை.
“அதை உன் கிட்ட சொல்ல முடியாது” என்று அருணா கூறிட, “என்ன பேசுற அக்கா அர்ச்சனாவை ஏன் அடிச்ச” என்று கார்த்திகேயனும் கேட்டிட, “இவள் ஒரு பொண்ணா கண்டவனையும் கட்டிப் பிடிச்சுக்கிட்டு நடுக் கூடத்தில் நிற்கிறாள். வெட்கம் கெட்டவள்” என்று அருணா கூறிட, “என்ன பேசுறீங்க நீங்க அவங்க கீழே விழப் போனாங்க அதனால் தான் தாங்கிப் பிடிச்சேன் அதுக்காக கூடப் பிறந்த தங்கச்சியை இவ்வளவு கேவலமா பேசுவீங்களா?” என்றான் பிரசாந்த்.
“தாங்கிப் பிடிச்சியா கட்டிப்பிடிச்சுட்டு நின்னுட்டு இருந்தீங்க. ஏன் டீ நீ கல்யாணம் ஆகி புருஷன் செத்துப் போனவள் தானே. ஒழுங்கா அடங்கி அந்த ரூமுக்குள்ள இருந்திருந்தால் ஒழுங்கா இருந்திருப்ப, அதை விட்டுவிட்டு இதோ இந்த மயக்கி சொன்னாள்னு கலர் கலரா சுடிதார் போட்டுட்டு மினுக்கிட்டு இருந்தால் தேவையில்லாத ஆசை எல்லாம் வரத் தான் செய்யும். அந்த ஆசையை தீர்த்துக்க இப்படி கண்டவன் கூடவும் நடுவீட்டில் கூத்தடிச்சுட்டு” என்று அருணா கூறிட அவளது கன்னத்தில் பளார் என்று அறைந்தார் அவளது மாமியார்.
“வாயை மூடு டீ நீயெல்லாம் ஒரு பொண்ணா டீ, ச்சே கூடப் பிறந்த தங்கச்சியை இவ்வளவு மோசமா எந்த அக்காவும் பேச மாட்டாள். இவ்வளவு வன்மமா உனக்கு அதுவும் அர்ச்சனா மேல” என்று அவர் கூறிட உங்க மகனை முழுங்கின விளங்காதவள் இவள், இப்போ எவனோ ஒருத்தன் கூட கட்டிப்பிடிச்சுட்டு நிற்கிறாள் அவளை அடிச்சு தலைமுடியை அறுத்து எறியுறதை விட்டுட்டு என்னை அடிக்கிறீங்க” என்றாள் அருணா தேவி.
“வதனை திரும்ப திரும்ப நீங்க அர்ச்சனாவையும், என் அண்ணையாவையும் சேர்த்து வச்சு தப்பா பேசுறீங்க இது நல்லதுக்கு இல்லை” என்றாள் தெய்வானை.
“உன் அண்ணையா பண்ணின அசிங்கத்துக்கு நீ வேற சப்போர்ட்டா” என்று தெய்வானையை பிடித்து தள்ளி விட்டாள் அருணா.
அவளைத் தாங்கிப் பிடித்தான் பிரசாந்த். “என்ன பண்ணிட்டு இருக்கீங்க நானும் எதுவும் பேசக் கூடாதுனானு பொறுமையா போயிட்டு இருந்தால் உங்க இஷ்டத்துக்கு பேசிட்டே போறீங்க. முதலில் அர்ச்சனாவை அடிச்சீங்க, இப்போ தெய்வாவை தள்ளி விட்டுட்டு இருக்கீங்க. அவள் கர்ப்பமா இருக்காள் அது தெரிஞ்சும் எப்படி அவளை தள்ளி விடுறீங்க” என்ற பிரசாந்த்திடம், “அண்ணையா அமைதியா இரு எதுவும் பேசாதே” என்றாள் தெய்வானை.
“ஏன் தெய்வானை உன் அண்ணனை பேச வேண்டாம்னு சொல்லுற இவள் மிருகமாகிட்டாள்” என்று சிவநேசன் கூறிட , “ஆமாம் நைனா நான் மிருகம் தப்பு பண்ணின உங்க செல்லப் பொண்ணு தேவதை” என்று கண்ணை கசக்கிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள் அருணா தேவி.
“என்ன நடக்கிறது தெய்வா நீ கன்சிவா இருக்கு அந்த நாலேஜ் கொஞ்சம் கூடவா அவங்களுக்கு இல்லை புடிச்சு தள்ளி விடுறாங்க. நான் மட்டும் உன்னை பிடிக்கலைன்னா நீ கீழ விழுந்துருப்ப” என்று கத்திக் கொண்டிருந்தான் பிரசாந்த்.
“அண்ணையா கொஞ்சம் பொறுமையா இரு அவங்க அப்படித்தான். அவங்க கேரக்டரை மாத்த முடியாது” என்று தெய்வானை கூறினாள்.
“எனக்கு ரொம்ப பயமா இருக்கு நீயும் , பாவாவும் கிளம்பி நம்ம ஊருக்கு நம்ம வீட்டுக்கு வந்துருங்க அட்லீஸ்ட் குழந்தை பிறக்கிற வரைக்கும். எனக்கு உன்னை இங்கே விட்டு போக பயமா இருக்கு” என்றான் பிரசாந்த்.
“அண்ணையா ஏமி செப்பன்டி எனக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு நான் பாவாவோட மனைவி. பாவா கூட தான் இருக்கணும் இங்கிருந்து நம்ம வீட்ல வந்து தங்க சொல்லுற. பாவா என்ன வீட்டோட மாப்பிள்ளையா இருக்கணும்னு சொல்றியா? அதெல்லாம் முடியாது நான் இங்கதான் இருப்பேன். அருணா வதனை எப்பவாச்சும் தான் இங்க வருவாங்க. எங்க வீட்ல அத்தைம்மா, மாவய்யா, அர்ச்சனா பாவா நாலு பேரும் என்னை எப்படி பார்த்துட்டு இருக்காங்கன்னு உனக்கு தெரியாதா? அவங்களுக்காக வேண்டி நான் என் மேல உயிரா இருக்குற இந்த உறவுகளை ஏன் இழக்னும். அதனால இந்த பேச்சை இத்தோடு நிறுத்திக்கோ” என்றாள் தெய்வானை.
“தெய்வா என்ன நடந்துச்சுன்னு பாத்துட்டு தானே இருக்க. அவங்களை யாராலும் கண்ட்ரோல் பண்ண முடியலை. அர்ச்சனா கீழே விழப் போனாங்க அவங்கள தாங்கிப் பிடிச்சேன் அது ஒரு குத்தமா அந்த பொண்ணை பேசக் கூடாத அத்தனை வார்த்தைகளும் பேசி காயப்படுத்துறாங்க. எனக்கு இருந்த கோபத்துக்கு அவங்க மட்டும் பாவாவோட அக்காவா இல்லாமல் இருந்திருந்தாங்கன்னு வச்சுக்கோயேன் பளார், பளார்னு கொடுத்து இருப்பேன்” என்று பற்களை கடித்தான் பிரசாந்த்.
“அண்ணையா என்ன இது பொம்பள மேல கை வைக்குற அளவுக்கு கோவம் வருமா. இது தப்பு இல்லையா” என்றாள் தெய்வானை.
“தப்புதான் ஆனால் அவங்களை பொம்பளைங்கற லிஸ்ட்லயே நான் வைக்கல சரியான ராட்சசி. இவங்க கூடலாம் இப்படித்தான் அவங்க புருஷன் குடும்பம் நடத்துகிறாரோ” என்று அவன் கூறினான். “அந்த கவலை உனக்கு எதுக்கு” என்று நக்கலாக கேட்டு தன் தமயனின் மனநிலையை மாற்ற நினைத்தாள் தெய்வானை.
“தெய்வா ப்ளீஸ் என் மைண்ட்டை மாத்த முயற்சி பண்ணாதே தெய்வா எனக்கு செம கோவமா இருக்கு” என்று பிரசாந்த் கூறினான்.
“என்னை மன்னிச்சிடு பிரசாந்த்” என்றான் கார்த்திகேயன்.
“பாவா நீங்க ஏன் மன்னிப்பு கேக்குறீங்க” என்ற பிரசாந்திடம் , “இல்லை அக்கா பேசினது எல்லாமே தப்பு என்னால அந்த இடத்துல கண்டிக்க முடியலை . அக்கா பேசுற பேச்சுக்கு அவளை பளார், பளார்னு அறையனும் போல தான் எனக்கே தோணிச்சு ஆனால் எங்கே அவள் மேல கை வச்சா உன் பொண்டாட்டி சொல்லி என்னை அடிக்கிறியானு, பிரச்சினையை வேற பக்கமா திருப்பி விட்டுருவா அதனாலதான் பொறுமையா போக வேண்டியதாக இருந்துச்சு. தெய்வாவை புடிச்சு தள்ளுவாள்னு சத்தியமா நானே எதிர்பார்க்கலை. நல்ல வேலை நீ தாங்கி பிடிச்சிட்டே இல்லைனா என்னால நினைச்சு கூட பார்க்க முடியலை” என்று அவன் வருந்தினான்.
“பாவா எனக்கு தான் ஒன்னும் ஆகலையே எதுக்கு நீங்க டென்ஷன் ஆகுறீங்க” என்றாள் தெய்வானை.
“இல்லை தெய்வா பிரசாந்த் சொல்றது தான் சரி நீ குழந்தை பிறக்கிற வரைக்கும் அத்தகாரு கூட ஊருக்கு போ” என்றான் கார்த்திகேயன்.
“என்னை பார்க்காமல் உங்களால இருக்க முடியுமா பாவா” என்ற தெய்வானையிடம், நான் கண்டிப்பா வாரத்துல மூன்று நாள் உன்கூட இருக்கேன். ஒன்னுமே இல்லாத பிரச்சினையை பெருசாக்கி உன்னை பிடிச்சு தள்ளிவிட்டு எனக்கே பயமா இருக்கு. அந்த நேரத்துல பிரசாந்த் சுதாரிச்சு உன்னை பிடிச்சுட்டாரு இல்லைன்னா என்ன பண்றது” என்று வருந்தினான் கார்த்திகேயன்.
“பாவா கண்டிப்பா என்னால உங்களை, அத்தைம்மா, மாவய்யா ,அர்ச்சனா நான்கு பேரையும் விட்டுட்டு இங்கிருந்து போக முடியாது. அதனால நீங்க எதை யோசிக்காதீங்க உங்க அக்காவை பத்தி தான் நமக்கு தெரியும் தானே” என்றாள் தெய்வானை .
“அவளை பத்தி தெரியும், தெரியும்னு அவள் பண்ணுற எல்லா தப்பையும் பொறுத்துட்டு போகனும்னு எந்த அவசியமும் இல்லை, நான் பாவா கிட்ட தெளிவா பேசிருவேன் நமக்கு குழந்தை பிறக்கிற வரைக்கும் அவள் இந்த வீட்டு பக்கமே வரக்கூடாது” என்றான் கார்த்திகேயன்.
“பாவா அப்படி பண்ணாதீங்க ஏற்கனவே இது என் வீடுன்னு நான் சொன்னதுனால தான் அவங்க ரொம்ப ட்ரிகர் ஆனாங்க. இப்ப நீங்க அந்த மாதிரி பண்ணீங்கன்னா நான் தான் என்னவோ உங்க கிட்ட சொல்லி அவங்கள இங்கே வரவிடாமல் பண்ணது மாதிரி நினைச்சுப்பாங்க, அதனால நீங்க அந்த மாதிரி எல்லாம் பண்ணாதீங்க” என்றாள் தெய்வானை.
“இல்லை தெய்வா” என்று அவன் எதோ சொல்ல வர, “நான் தான் சொல்றேன்ல பாவா நான் எங்கேயும் போக மாட்டேன். நான் உங்க கூட தான் இருப்பேன்” என்று கூறியவள், “சரி நீங்க அண்ணையா கூட பேசிட்டு இருங்க” என்று அந்த இடத்தை விட்டு சென்றாள் தெய்வானை.
“தெய்வானை” என்ற சௌந்தரவள்ளியிடம், “சொல்லுங்க அத்தைம்மா” என்றாள் தெய்வானை .
“என்னை மன்னிச்சிடு தெய்வானை அருணா ஏன் இந்த மாதிரி நடந்துகிட்டாள்னு” என்று அவர் ஆரம்பிக்க , “அய்யோ அத்தைம்மா முடிஞ்சு போனதை பத்தி பேச வேணாம். அவங்க குணம் நமக்கு தெரிஞ்சதுதானே விடுங்க, அர்ச்சனாவை நீங்க எதுவும் காயப்படுத்தறது மாதிரி பேசிடாதீங்க ஏற்கனவே வதனை ரொம்ப காயப்படுத்திட்டாங்க நீங்களும் அவங்கள காய படுத்த வேண்டாம் ப்ளீஸ் எனக்காக” என்றாள் தெய்வானை.
“இல்லைம்மா நான் எதுவும் சொல்ல மாட்டேன்” என்று சௌந்தரவள்ளி கூறிட, தெய்வானை அர்ச்சனாவின் அறைக்குச் சென்றாள்.
அங்கு அர்ச்சனா தன் கையை கத்தியால் அறுத்துக் கொண்டு இரத்த வெள்ளத்தில் கிடக்க பதறிப் போனவள், “அர்ச்சனா” என்று கத்திட, “தெய்வா என்ன ஆச்சு” என்று கார்த்திகேயனும் பிரசாந்த்தும் ஓடி வர அர்ச்சனா தன் கையை அறுத்துக் கொண்டு மெத்தையில் கிடந்தாள்.
அர்ச்சனா என்று அவள் பதறிய கார்த்திகேயன் அர்ச்சனாவை தூக்கிக் கொண்டான். “பிரசாந்த் சீக்கிரமாக வண்டியை எடு” என்று கூறிட பிரசாந்த் சென்று காரை எடுக்க கார்த்திகேயன் தன் தங்கையை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றான்.
“ஏன் இந்த மாதிரி பண்ணின அர்ச்சனா” என்று கார்த்திகேயன் கேட்டிட, “என்னை மன்னிச்சிடுங்க அண்ணையா” என்று கூறியபடி அர்ச்சனா மயங்கினாள்.