அத்தியாயம் 21
“என்ன பிரசாந்த் டிரான்ஸ்ஃபர் எந்த ஊருக்கு” என்று கேட்டார் கலா ராணி. “நம்ம பாவா ஊருக்கு தான் அம்மா” என்றான் பிரசாந்த்.
“அப்போ ரொம்ப நல்லது நம்ம தெய்வானையை அடிக்கடி நீ போயி பார்த்துக்குவ, எனக்கு தான் கஷ்டம் இரண்டு பிள்ளைகளையும் பிரிஞ்சி இருக்கனும்” என்று வருந்தினார் கலா ராணி.
“நீங்களும் என்கூட வந்து விட வேண்டியது தானே அம்மா” என்ற பிரசாந்திடம், “மகனே உனக்கு மட்டும் தான் டிரான்ஸ்ஃபர் உன் நைனாவுக்கு ட்ரான்ஸ்பர் கிடையாது. நைனாவை பார்த்துக்கனும் இல்லையா நானும் உன் கூட வந்துட்டேன்னா நைனா சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டப்படுவாரு. ஏற்கனவே உன் நைனாவுக்கு பிபி சுகர் எல்லாமே இருக்கு. அதனால அம்மா அங்கே வர முடியாது. பரவாயில்லை லீவுக்கு நீ இங்கே வந்துடனும் சொல்லிட்டேன் பாத்துக்கோ” என்றார் கலாராணி.
“வாரவாரம் எப்படிம்மா எனக்கு லீவு கொடுப்பாங்க மாசத்துல ஒன் டைம் வந்துடுறேன். தெய்வாவையும் பாக்கணுமே லீவு டைம் தான் தெய்வாவையும் போய் பாக்கணும் அதனால புரிஞ்சுக்கோங்க” என்றான் பிரசாந்த்.
“சரி சரி ஊருக்கு போக எல்லாம் எடுத்து வைக்கிறேன். தெய்வா வீட்டுல நீ தங்க வேணாம்” என்று கலாராணி கூறினார். “எனக்கு தெரியாதா அம்மா அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். ஒரு நாள் மட்டும் தெய்வா வீட்ல தங்கிட்டு அப்புறம் எனக்கு வீடு பார்த்து தங்க ஏற்பாடு பண்ணிக்கிறேன்” என்றான் பிரசாந்த்.
“சரிப்பா உன் பாவா கிட்டயும், தெய்வா கிட்டயும் ஃபோன் பண்ணி சொல்லிடு” என்று கலா ராணி கூறிட, “நான் ஏற்கனவே பாவா கிட்ட பேசிட்டேன்ம்மா, வீட்டுக்கு வர சொன்னாங்க” என்றான் பிரசாந்த்.
“சந்தோஷம்” என்ற கலாராணி கண்கலங்கினார். “என்னமா ஏன் கண் கலங்குறீங்க” என்ற பிரசாந்திடம், இல்லைப்பா தெய்வானை கல்யாணம் முடிந்து வீட்டை விட்டு போனப்ப கூட சந்தோஷமா ஆனந்த கண்ணீர் தான் வந்துச்சு ஆனால் பையன் நீ வீட்டை விட்டு விட போகும்போது கொஞ்சம் கஷ்டமா இருக்குடா” என்றார் கலா ராணி .
“கஷ்டமா இருக்கா. உங்க கஷ்டத்தை போக்க என்ன பண்ணட்டும் பேசாமல் வேலையை விட்டுட்டு மா”என்ற பிரசாந்திடம்,
“பைத்தியக்காரா அதுக்காக வேலையை விடுவியா சந்தோஷமா போயிட்டு வாடா உன்னை கல்யாணம் பண்ணி மாமியார் வீட்டுக்கு அனுப்பிட்டேன்னு நினைச்சுக்கிறேன்- என்று சிரித்தார் கலராணி.
“அம்மா உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்னு நினைச்சிட்டு இருக்கேன். கேட்கலாமா” என்ற பிரசாந்திடம் , “கேளுடா என் கிட்ட கேட்க என்ன தயக்கம்” என்றார் கலாராணி.
“அர்ச்சனா பத்தி என்ன நினைக்கிறீங்க” என்றான் பிரசாந்த்.
“நினைக்கிறதுக்கு என்ன இருக்கு ரொம்ப நல்ல பொண்ணு வாழ வேண்டிய வயசுல வாழ்க்கையை இழந்துட்டு இருக்காள். அந்த பொண்ணுக்கு திரும்ப ஒரு நல்லது நடந்தால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்” என்றார் கலாராணி.
“அந்த நல்லத நம்மளே நடத்தி வைக்கலாமே” என்று பிரசாந்த் கேட்டிட, “புரியலை” என்றார் கலாராணி.
“அர்ச்சனாவை நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன்” என்று பிரசாந்த் கூறிட பட்டென்று அவனது கன்னத்தில் அறைந்து விட்டார் கலாராணி.
“என்னமா இப்போ தான் அந்த பொண்ணுக்கு ஒரு நல்லது நடந்தால் சந்தோஷப்படுவேன்னு சொன்னீங்க, ஆனால் அதையே உங்க பையன் பண்றேன்னு சொன்னால் ஏத்துக்க முடியலையா” என்ற பிரசாந்திடம், “நீ அர்ச்சனாவை கல்யாணம் பண்ணிக்கிறேன் சொன்னதுக்காக நான் அறையலை. அர்ச்சனாவுக்கு உன் மேல அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லை ஏற்கனவே அந்த பொண்ணை நீ தடுக்கி விழும்போது புடிச்சதுக்கு எவ்ளோ பெரிய பிரச்சனை நடந்துச்சு. இப்போ உனக்கு கல்யாணம் பண்ணிக்க ஆசைனு பொய் சொன்னன்னு வச்சுக்கோயேன் அந்த அருணா அன்னைக்கு நான் சொன்னது உண்மைதான்னு சொல்லி எல்லாரும் முன்னாடியும் இன்னும் அந்த பொண்ணை அசிங்கப்படுத்துவாள். அதனால தான் உன்னை அறைந்தேன் அப்போ அன்னைக்கு இந்த மாதிரி ஒரு எண்ணத்தோடு தான் நீ அந்த பொண்ணு கிட்ட பேசி இருக்க பழகி இருக்க” என்றார் கலாராணி .
அம்மா அந்த பொண்ணை முதல் முதலாக பார்த்த அன்னைக்கே எனக்கு ரொம்ப புடிச்சி போச்சு அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்னு இன்னைக்கு நேத்து இல்ல நான்கு மாசத்துக்கு முன்னாடியே நான் ஆசைப்பட்டேன். எனக்கு அந்த பொண்ணை புடிச்சிருக்கு. அவங்களுக்கும் என்னை பிடிச்சிருந்தால் மட்டும் தான் நான் அவங்களை கல்யாணம் பண்ணிப்பேன். உங்களுக்கு அர்ச்சனாவை நான் கல்யாணம் பண்ணிக்கிறதுல விருப்பம் இருக்கா இல்லையா” என்றான் பிரசாந்த்.
“விருப்பம் இல்லைன்னு நான் சொல்ல மாட்டேன் பிரஷாந்த் என் பிள்ளைகளோட விருப்பம் தான் எனக்கு முக்கியம். அது மட்டும் இல்லாமல் அர்ச்சனா ரொம்ப தங்கமான பொண்ணு நம்ம வீட்ல இருந்த மூன்று நாளிலையே அவளை பத்தி நல்லாவே புரிஞ்சு கிட்டேன். அந்த பொண்ணு இருக்கிற வீடு நிஜமா சொல்றேன் ரொம்ப சந்தோஷமா இருக்கும் ஆனால் அவங்க நமக்கு பொண்ணு கொடுப்பாங்களான்றது தான் இப்ப கேள்வி” என்றார் கலாராணி.
“ஏன் கொடுக்க மாட்டாங்க” என்ற பிரசாந்திடம், “பிரஷாந்த் மாப்பிள வீட்டோட வசதிக்கு நம்ம கொஞ்சம் கூட ஈடு கிடையாது. முதலில் அதை புரிந்துகொள் தெய்வானையும் ,நீயும் நல்லா படிச்சு இருக்கீங்க. சம்பாதிக்கிறீங்க அப்பாவும் வேலைக்கு போறாரு சம்பாதிக்கிறார் எல்லாமே ஓகே. ஆனால் மாப்பிள்ளை அந்த கிராமத்திலும் சொந்தமா அவ்வளவு நிலம், பண்ணை அது இதுன்னு பெரிய ஆளா இருக்காரு. நல்ல வசதியா இருக்காங்க அவங்க வசதியோட நம்மளை கம்பேர் பண்ணும் போது ரொம்ப கம்மி. அவங்க வீட்டு பொண்ணை எப்படி நமக்கு கொடுப்பாங்கன்னு நீ முதலில் யோசிச்சியா? எனக்குமே ஆசை இருந்துச்சு அர்ச்சனா இங்க இருந்த மூன்று நாளில் அவள் ஏன் நம்ம வீட்லயே இருக்க கூடாது அப்படின்னு தான் நான் யோசிச்சேன். ஆனால் அவங்க பொண்ணு கொடுக்க மாட்டாங்க டா அது மட்டும் இல்லாமல் அந்த ஊர்ல உள்ள மூடநம்பிக்கை எல்லாம் பார்த்தா நிச்சயமா அந்த பொண்ணுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைப்பாங்கன்னு எனக்கு தோனலை அதனால நீ அந்த எண்ணத்தை விட்டுவிடு” என்றார் கலாராணி.
சரிங்கம்மா என்ற பிரசாத் ஊருக்கு கிளம்ப தயாராகினான்.
“நீ தெய்வா வீட்ல தங்குறது ஒரு நாள் மட்டும் தான் இருக்கணும். அங்கே தங்கும் ஒரு நாளும் அர்ச்சனாவை எந்த ஒரு தொந்தரவும் பண்ணக்கூடாது” என்று கலா ராணி கூறிட “அம்மா விருப்பமில்லாத ஒரு பொண்ணை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்க என்னைக்குமே உங்க பையன் நினைக்க மாட்டான். அர்ச்சனாவுக்கு என் மேல விருப்பம் இருந்தால் மட்டும் தான் நான் அவங்களை கல்யாணம் பண்ணிப்பேன் அதனால நீங்க என்னை நம்பலாம்” என்றான் பிரசாந்த்.
“என் பையன் மேல எனக்கு நிறையவே நம்பிக்கை இருக்கு. இருந்தாலும் சொல்றேன்” என்றார் கலராணி
“என்னடி என்னென்னமோ சொன்ன” என்ற சௌந்தரவள்ளியிடம், “இதோ பாருங்க இந்த மேட்ரிமோனி சைட்ல உங்க பொண்ணு அர்ச்சனா போட்டோவை உங்க மருமகள் தெய்வானை அப்லோட் பண்ணி இருக்காள்” என்று அருணா தேவி தன் போனை காட்டினாள்.
அதை பார்த்த சௌந்தரவள்ளி அதிர்ச்சியாகினார்.
“இதை தெய்வானை தான் பண்ணினாள்னு உனக்கு யார் சொன்னது” என்ற சௌந்திரவள்ளியிடம், “இந்த போட்டோவுக்கு கீழேயே இன்னாரு தான் இதை ஷேர் பண்ணி இருக்காங்கன்னு தான் போட்டு இருக்கேன். பதிவு பண்ணவங்களோட பெயர் தான் போட்டு இருக்கே தெய்வானை கார்த்திகேயன்னு” என்றாள் அருணா தேவி.
உன் மருமகள் தானே தெய்வானை கார்த்திகேயன் அப்புறம் அவள் தானே இதெல்லாம் பண்ணி இருக்காள்” என்று அருணா கூறிட, “எதுக்கு தெய்வானைக்கு இந்த வேண்டாத வேலை. என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க எங்களுக்கு தெரியாதா ஏற்கனவே கல்யாணம் ஆகி புருஷனை பறிகொடுத்துட்டு இருக்கிற பொண்ணுக்கு திரும்ப கல்யாணம் பண்ணி வைக்க இவள் யாரு இருக்கட்டும் அவளுக்கு” என்று பற்களை கடித்த சௌந்தரவள்ளி கோபமாக வீட்டிற்கு சென்றார்.
தன் அன்னையை தூண்டி விட்ட சந்தோஷத்தில் அருணா தேவி தன் வீட்டிற்கு கிளம்பினாள்.
செல்லும் வழியெங்கும் சௌந்தரவள்ளிக்கு யோசனையாக இருந்தது .
எதுக்கு இந்த பொண்ணுக்கு இந்த வேண்டாத வேலை அர்ச்சனாவுக்கு இப்போ எதுக்கு இவ கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறாள். ஒருவேளை அர்ச்சனா வீட்ல இருக்கிறது அவளுக்கு இடைஞ்சலா இருக்கா.
ச்சே ச்சே அப்படி இருக்காது அர்ச்சனாவுக்கு ஒரு நல்லது பண்ணனும்னு நினைச்சிருப்பாள். ஆனால் எதுக்கு இதை பண்ணிட்டு இருக்காள். இது அர்ச்சனாவுக்கு நல்லது கிடையாது. அது பெரிய பாவம்” என்று யோசித்துக் கொண்டே வந்தார் சௌந்தரவள்ளி.
“என்ன வள்ளி யோசனையாக உட்கார்ந்திருக்க” என்ற சிவநேசனிடம், “பாவா நம்ம அர்ச்சனா போட்டோவ மேட்ரிமோனி சைட்ல போட்டு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து இருக்கிறாள் தெய்வானை . எனக்கு அவளை திட்டவும் மனசு வரமாட்டேங்குது. நான் கோவமா ஏதாவது சொல்லிட்டேனா மாசமா இருக்கிற பொண்ணு வேற அதனால தான் கொஞ்சம் தயக்கமா இருக்கு” என்று சௌந்தரவள்ளி கூறிட, “நல்ல விஷயம் தானே வள்ளி” என்றார் சிவநேசன்.
“என்ன பாவா நீங்க நம்ம ஊரை பத்தி தெரிஞ்சும் இப்படி சொல்றீங்க அர்ச்சனாவுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சா நம்ம ஊரே நம்மளை காரி துப்பும். அது உங்களுக்கு தெரியுதா தெரியலையா” என்று சௌந்தரவள்ளிடம், “நம்ம பொண்ணோட வாழ்க்கை இப்படி ஆனதுக்கு காரணம் இந்த ஊரோட கட்டுப்பாடு தான். பதினைந்து வயசுல அந்த பிள்ளைக்கு நம்ம கல்யாணம் பண்ணி வச்சோம். ஒரு நல்லவனா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சோமா குடிகாரன், பொறுக்கி, ஊதாரி. உன் மூத்த பொண்ணு பேச்சை கேட்டு அர்ச்சனாவை அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சோம் ஆனால் என்ன பண்ணினான். ஒரு வாரம் கூட நம்ம மகள் கூட வாழாமல் போய் சேர்ந்துட்டான். அவன் செத்து பத்து வருஷம் ஆச்சு இன்னும் அவனையே நினைச்சுகிட்டு நம்ம பொண்ணை காலம் முழுக்க முழுக்க இப்படியே இருக்க வைக்கிறது கொஞ்சம் கூட சரி கிடையாது. தெய்வானை எடுத்த முடிவு நல்ல முடிவு நாமளே நம்ம அர்ச்சனாவுக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம்” என்றார் சிவநேசன்.
“பாவா” என்ற சௌந்திரவள்ளியிடம், “இந்த ஊரே நமக்கு வேணாம் ஒதுக்கி வச்சா ஒதுக்கி வைத்துவிட்டு போறாங்க நம்ம யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை . என் பொண்ணோட வாழ்க்கை நல்லா இருக்கணும்னா தெய்வானை எடுத்து அந்த முடிவுக்கு நான் சம்மதிக்கிறேன் நீயும் சம்மதிக்கணும்” என்றார் சிவநேசன்.