அத்தியாயம் 25
“என்ன எல்லாரும் ஏதோ மும்முரமாக பேசிட்டு இருக்கீங்க போல” என்று வந்தால் கார்த்திகேயன்.
“ இங்கே என்ன எல்லாம் நடந்துச்சுன்னு தெரியுமா கார்த்தி உனக்கு” என்ற சௌந்திரவள்ளியிடம், “பவித்ரா இங்கே இருக்கிறதை பார்த்தால் அக்கா பண்ணுன தப்பு எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிருச்சாம்மா” என்றான் கார்த்திகேயன்.
“கார்த்தி” என்ற சௌந்திரவள்ளியிடம், “ஏற்கனவே எனக்கு தெரியும் பவித்ரா ஒரு வாரத்துக்கு முன்னாடியே என்கிட்ட எல்லாம் உண்மையையும் சொல்லிட்டாள். அக்கா உன்கிட்ட இவ்ளோ மோசமான ஒரு குணம் இருக்குன்னு சத்தியமா நான் நினைச்சு கூட பாக்கல அப்படி என்ன பாவம் பண்ணுனோம் உனக்கு என் கல்யாணத்தை கெடுக்க நினைச்ச சரி பரவாயில்ல கடவுளா பார்த்து எனக்குன்னு ஒரு பொண்ணை அனுப்பி வச்சிருக்காரு. அவளை நான் கல்யாணம் பண்ணி எங்களுக்கு ஒரு குழந்தை வரப் போகுது அந்த குழந்தை உனக்கு என்ன துரோகம் பண்ணுச்சு. நீ வச்ச விஷத்தை தெய்வானை சாப்பிட்டு இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நினைத்தாலே எனக்கு பதறுது. நல்ல வேலை பவித்ரா சரியான நேரத்துக்கு போன் பண்ணி அந்த லட்டை சாப்பிடாதீங்கன்னு சொன்னாள். அதனால அதை தூக்கி குப்பையில் போட்டோம் இல்லன்னா என்ன ஆகிறது” என்று கார்த்திகேயன் கேட்டிட அருணா தேவி மௌனமாக நின்றிருந்தாள்.
“பேசுக்கா பேசு” என்று கார்த்திகேயன் கூறிட, “எப்படி பேசவாள் கார்த்தி? அவளோட குட்டு தான் உடைஞ்சு போச்சே. இப்படி ஒரு கேவலமான பிறவி கூட தான் இத்தனை வருஷம் குடும்ப நடத்தி ஒரு பிள்ளையை பெத்துருக்கேன்னு நினைக்கும்போது அருவருப்பா இருக்குடி. பெத்த பொண்ணை விட அதிக அன்பையும் பாசத்தையும் கொட்டி வளர்த்த உன் சித்தப்பா, சித்திக்கு இவ்ளோ பெரிய துரோகத்தை பண்ணி இருக்கனா நாளைக்கு எனக்கும், என் பொண்ணுக்கும் நீ எப்படிப்பட்ட துரோகத்தை பண்ண மாட்ட” என்று கோபமாக திட்டினார் கண்ணன்.
“பாவா எல்லாம் நம்ம பொண்ணுக்காக தான்” என்று அருணா தேவி கூறினார். “எது டீ என் பொண்ணுக்காக பண்ணின அர்ச்சனாவோட வாழ்க்கையை கெடுத்ததா, இல்லை தெய்வானையோட குழந்தையை கொல்ல பார்த்தியே அதுவா, ஏன்டி உன்னோட சுயநலத்துக்காக நீ பண்ணின எல்லாத்தையும் என் பொண்ணுக்காக பண்ணேன்னு சொல்லுற. என் பொண்ணுக்காக நீ பாவ முட்டையை தான் சேர்த்து வச்சிருக்க. அர்ச்சனாவோட வாழ்க்கையை அழிச்சு தெய்வானையுடைய குழந்தையை அழிக்க பார்த்து எல்லா பாவமும் என் பொண்ணு தலையில தாண்டி வந்து விடியும். அது ஏன்டி உனக்கு புரிய மாட்டேங்குது நீ எல்லாம் ஒரு பொம்பளை உன் கூட வாழ்ந்ததை நினைத்தாலே அருவருப்பா இருக்குடி. இப்ப சொல்றேன் கேட்டுக்கோ உன் மனசுல உள்ள கெட்ட எண்ணத்தை எல்லாம் தலை முழுகிட்டு நம்ம வீட்டுக்கு வரதா இருந்தால் வா. அங்கே வந்த பிறகு இனி எந்த காலத்துலையும் இந்த வீட்ல நடக்கிற நல்லது கெட்டதுல நீ மூக்கு நுழைக்கவே கூடாது. இந்த வீட்டுக்கும், உனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அப்படி இல்லாமல் நான் திரும்பவும் இந்த சொத்துக்காக அலையுவேன் இந்த சொத்துல எனக்கு பங்கு இருக்குன்னு ஆடுனேன்னு வச்சுக்கோ உன்னை தலை முழுகிட்டு போறதை தவிர எனக்கு வேற வழியே கிடையாது. அப்புறம் உன் தம்பி கொடுத்தானே சொத்து அது எதையுமே நானும் என் பொண்ணு அனுபவிக்கணும்னு நினைச்சதே இல்லை. அது அவனோட சுய சம்பாத்தியம் ஏதோ ஒரு நிலத்தை உங்க அப்பா அம்மா கொடுத்தாங்கன்னு சொன்னில அந்த நிலத்தை மட்டும் நாம வாங்கிக்கலாம். மத்தபடி கார்த்தியோட சுயசம்பாத்தியம் எதுலயுமே எனக்கும் என் மகளுக்கும் பங்கு வேண்டாம் இதை நான் அன்னைக்கே அவன் கிட்ட சொன்னேன். அவன் தான் இல்லை பாவா இது என் அக்காவுக்கு செய்யுற சீர்னு சொல்லிக் கொடுத்தான். ஆனால் அவனோட வாழ்க்கைவே அழிக்க பார்த்த உனக்கு சீர் தான் ஒரு கேடு” என்று திட்டி விட்ட கண்ணன் சென்று விட அருணா தேவி அழுது கொண்டே தன் கணவனின் பின்னால் சென்றாள்.
“பாவா அர்ச்சனாவை பொண்ணு மாப்பிள்ளை வருவதா அண்ணையா சொன்னாங்களே எப்போ வராங்க” என்றாள் தெய்வானை.
“ஹைதராபாத்திலிருந்து மாப்பிள்ளையோட நைனா, அம்மா வரணும். அவங்க நாளைக்கு காலையில தான் வருவாங்க மாப்பிள்ளை இங்கே பக்கத்துல தான் வேலை பார்க்கிறார் அதனால சாயந்திரமே வந்துருவாரு” என்று கார்த்திகேயன் கூறினான்.
“என்ன பாவா சொல்றீங்க மாப்பிள்ளை பக்கத்துல தான் இருக்காரா” என்று கேட்டாள் தெய்வானை.
“ ஆமாம் பக்கத்தில் தான் நம்ம பண்ணை வீட்ல தான் தங்கி இருக்கிறார்” என்று கார்த்திகேயன் கூறிட, “பாவா பண்ணை வீட்டில் என் அண்ணையா தானே தங்கி இருக்காரு” என்றாள் தெய்வானை.
“உன் அண்ணையா தான் மாப்பிள்ளை அர்ச்சனா மனசுலையும் அவன் தான் இருக்கான் அது தெரிஞ்சதுக்கு அப்புறம் நான் என் தங்கச்சிக்கு வெளியில் ஏன் மாப்பிள்ளை பார்க்கணும்” என்றான் கார்த்திகேயன்.
“என்ன சொல்றீங்க பாவா அர்ச்சனா மனசுல என் அண்ணையா இருக்காரா!” என்று ஆச்சரியமாக கேட்டாள் தெய்வானை.
“ஆமாம் உன் அண்ணையா தான் இருக்கான்” என்ற கார்த்திகேயன் அர்ச்சனா என்று அழைத்திட தன் அறையில் இருந்து வெளியே வந்தாள் அர்ச்சனா.
“என்ன அர்ச்சனா உனக்கும், பிரசாந்துக்கும் கல்யாணம் பண்ணி வைக்க நான் ஏற்பாடு பண்ணி இருக்கேன். அதுல உனக்கு சம்மதம் தானே” என்று கார்த்திகேயன் கேட்டிட மௌனமாக கண்ணீர் வடித்தாள் அர்ச்சனா.
பதில் சொல்லு அர்ச்சனா உன் மனசுல பிரசாந்த் தான் இருக்கிறான். அது எனக்கு நல்லாவே தெரியும் நீ உன் வதனை கிட்ட மறைக்கலாம், உன் அம்மாகிட்ட நீ மறைக்கலாம் , ஏன் பிரசாந்த் கிட்ட கூட நீ மறைக்கலாம் ஆனால் என்கிட்ட நீ மறைக்க மாட்டேன்னு நம்புறேன் உண்மையை சொல்லு உன் மனசுல பிரசாந்த் தானே இருக்கான்” என்றான் கார்த்திகேயன்.
“அண்ணையா அது வந்து” என்று அவள் தயங்கிட, “உன்னோட கல்யாணத்துக்கு அம்மா ,நைனா அத்தைகாரு, மாவய்யா எல்லாருமே சம்மதம் சொல்லிட்டாங்க. பிரசாந்துக்கும் உன்னை கல்யாணம் பண்ணிக்க தான் விருப்பம் நீ சொல்லு உன் மனசுல அவன் தானே இருக்கான்” என்றான் கார்த்திகேயன்
“அண்ணையா என் மனசுல அவர்தான் இருக்காரு நான் இல்லைன்னு சொல்லல ஆனால் என்னை கல்யாணம் பண்ணி அவருக்கு ஏதாவது ஆயிருச்சுன்னா. சத்தியமா என்னால தாங்கிக்க முடியாது அதனால தான் சொல்றேன் தயவு செஞ்சு என்னை வற்புறுத்தாதீங்க. அவர் ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கணும். அத்தைகாரு, மாவய்யா வதனை இவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க அதைவிட ரொம்ப ரொம்ப நல்லவரு வதனையோட அண்ணையா. ரொம்ப கண்ணியமானவரு அவரை புடிக்கலைன்னு நான் இல்லை எந்த பொண்ணுமே சொல்ல மாட்டாள். ஆனால் என்னை கல்யாணம் பண்ணிட்டு அவருக்கு ஏதாவது ஆயிருமோன்ற பயத்தோட என்னால வாழ முடியாது. அவர் சந்தோஷமா வாழனும் அதனால தான் சொல்றேன் என்னை விட்ருங்க நான் இப்படியே இருந்துட்டு போறேன் எனக்கு கல்யாணம் வேண்டாம்” என்றாள் அர்ச்சனா.
“ என்ன சொல்றீங்க அர்ச்சனா என் அண்ணையாவை புடிச்சிருக்குன்னு சொல்றீங்க கல்யாணம் வேணாம்னு சொல்றீங்க என்ன அர்த்தம். காலம் முழுக்க கல்யாணம் பண்ணாமல் இந்த மூலைக்குள்ளே அடைந்து உங்க வாழ்க்கைய தொலைக்க போறிங்களா அர்ச்சனா. தயவு செஞ்சு புரிஞ்சுக்கோங்க மரணம் என்பது ஒரு மனுஷனுக்கு எப்ப வேணாலும் வரலாம் அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு தெரியாத ஒரு உலகத்துல தான் நம்ம வாழ்ந்துட்டு இருக்கோம். அப்படி இருக்கும் போது இந்த ராசி ,ஜாதகம் இதெல்லாம் நம்பி ஏன் உங்களோட சந்தோஷத்தை நீங்க தொலைச்சிட்டு இருக்கீங்க. தயவு செஞ்சு புரிஞ்சுக்கோங்க இந்த மூடநம்பிக்கையை விட்டு வெளியில வாங்க உங்க ராசியால என் அண்ணையாவுக்கு எந்த கெட்டதும் நடக்காது . இன்னும் சொல்லப்போனால் நல்லது தான் நடக்கும்.
யார் சொன்னா நீங்க ராசி இல்லாதவங்கன்னு நீங்கதான் ரொம்ப ரொம்ப ராசியானவங்க. இந்த வீட்டுக்கு நான் கல்யாணம் பண்ணிட்டு வந்த உடனே மனசார என்னை வாழ்த்துனீங்க. நீங்க மனசார வாழ்த்துனதுனால தான் நான் குழந்தை உண்டாகி இருக்கேன். முதல் முதலாக என் குழந்தை உண்டான செய்தியை உங்க அண்ணையா கிட்டயும் உங்ககிட்டயும் தான் அந்த டாக்டர் சொன்னாங்க. அதனாலதான் என் குழந்தைக்கு வந்த ஆபத்து இரண்டு முறை தடுக்கப்பட்டு என் குழந்தை என் வயித்துல நல்லபடியா வளருது. அதனால சும்மா நீங்க ராசி இல்லாதவள் ராசியில்லாதவள்ன்னு சொல்லி மூளையில இருக்க பாக்காதீங்க. வெளில வாங்க உங்களுக்கு என் அண்ணையாவை புடிச்சிருக்கு அப்படின்னா அவனும், நீங்களும் கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழனும். இதுதான் எங்க எல்லாரோட ஆசை தயவு செஞ்சு புரிஞ்சுக்கோங்க அர்ச்சனா” என்று கெஞ்சினாள் தெய்வானை.
“ அதெல்லாம் என் தங்கச்சி புரிந்து கொள்ளுவாள் தெய்வானை. என் மேல சத்தியம் அர்ச்சனா நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கணும். உனக்கு பிரசாந்த் பிடிக்காமல் நான் இந்த கல்யாணத்தை பண்ணி வச்சா தான் தப்பு அவனுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்,கு உனக்கும் அவனை பிடிச்சிருக்கு அப்படி இருக்கும் போது நீங்க ரெண்டு பேரும் தான் சேரனும். நான் அத்தைக்காருகிட்டயும், மாவய்யாகிட்டயும் பேசிட்டேன் அவங்களுக்கும் இந்த கல்யாணத்துல பரிபூரண சம்மதம் அப்படி இருக்கும் போது நீ எதுக்கும் பயப்படாத எதையும் யோசிக்காதே இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கும். கண்ணன் பாவா கூட பிரசாந்துக்கும், உனக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் என்று தான் சொன்னாரு. அதனால நீ ஒழுங்கா இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு” என்றான் கார்த்திகேயன்
“எனக்கு சம்மதம் தான் அண்ணையா” என்று அவள் கூறிட அவளை அணைத்துக் கொண்டவள் “அர்ச்சனா இல்லை வதனை சரியா” என்று தெய்வானை கேட்டிட அவளோ மெலிதாக புன்னகைத்தாள்.
“அத்தைம்மா உங்களுக்கு இதுல சம்மதம் தானே” என்று தெய்வானை கேட்டிட என் பையன் ஒரு முடிவு எடுத்தால் அது சரியா தான் இருக்கும் தெய்வானை. அர்ச்சனாவோட வாழ்க்கைக்கு அவன் எடுத்திருக்கிற இந்த முடிவு நல்லதா தான் இருக்கும் எனக்கு சம்மதம் தான்” என்றார் சௌந்திரவள்ளி .
“பாவா மாவய்யா” என்று தெய்வானை தயங்கிட, “நைனா கிட்ட ஏற்கனவே பேசிட்டேன் நைனா அர்ச்சனாவுக்கும் பிரசாந்துக்கும் ஜாதகம் பார்க்க தான் போயிருக்காங்க” என்றான் கார்த்திகேயன்.
“ ஜாதகம் எல்லாம் எதுக்கு பாவா” என்று தெய்வானை கேட்டிட, “கல்யாணத்துக்கு நாள் குறிக்க வேண்டாமா அதுக்கு தான்” என்றான் கார்த்திகேயன்