மாமனே உன்னை காணாம 01

4.8
(8)

ஓம் சரவணபவ 

 மாமனே உன்னை காணாம 

அத்தியாயம் 01 

 தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் வாசுதேவ கிருஷ்ணாவின் வீட்டு தோட்டத்தில் தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் வாசுதேவ கிருஷ்ணாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தனர்..

 அவர்கள் வந்து அரை மணி நேரம் ஆகியும் இன்னும் வாசுதேவ் அவரது வீட்டை விட்டு வெளியே வரவில்லை.. 

வந்தவர்கள் அனைவரும் திடீரென வாசு அழைத்து இருப்பதற்கான காரணம் என்னவென்று அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.. 

வாசு அறையின் முன்பு அவர் பி ஏ ராம் நின்று கதவை தட்டி தகவல் சொல்வதற்காக பயத்துடன் கதவில் கை வைப்பதும் எடுப்பதுமாக முயற்சி செய்து கொண்டிருந்தார்..

 வெகு நேரமாக அதை பார்த்துக் கொண்டிருந்த வாசு மகள் மஞ்சு எழுந்து வந்து 

“ ஹலோ.. என்ன சார் நீங்க இப்படியே தயங்கிகிட்டு நின்னா இன்னைக்கு அப்பாவை கூப்பிட்டு விடுவீங்களா?.. எவ்வளவு நேரம் அவங்க வெளிய வெயிட் பண்றாங்க. ரொம்ப நேரமா அவங்களை வெயிட் பண்ண வச்சுட்டு நீங்க இப்பதான் நேற்று வந்து வேலைக்கு ஜாயின் பண்ணின புது ஆள் மாதிரி இப்படி பம்மிக்கிட்டு நின்னா இது ஆகுற காரியம் இல்லை.  தள்ளுங்க நானே அப்பாவை கூப்பிடுறேன்.. ” என்றாள்..

“ என்ன மஞ்சு பாப்பா.  அப்பா கோபம் உனக்கு தெரியாததா?.  அவர் ஏதாவது வேலையா இருந்து அதை தொல்லை பண்ணினா எனக்கு தானே அதோட பாதிப்பு வந்து சேரும்.. ” 

“ அட..  ராம் அங்கிள் நீங்க சொல்றது சரிதான்..  ஆனால் அவங்களையும் பார்க்கணுமே..! அவங்க பாவம் தானே எவ்வளவு வேலையை வச்சுட்டு இங்க வந்து அவருக்காக காத்துக்கொண்டிருக்காங்க. நாளைக்கு இதுவே அப்பாக்கு ஒரு கெட்ட பெயரை உண்டு பண்ணிடுமே.. ” 

“ சரி பாப்பா நீ சொல்றதும் வாஸ்தவம் தான்.  சரி நீயே சார் கூப்பிடு. நான் வெளியே அவங்களோட இருக்கேன்.. ” என்று கூறி ராம் அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டார்..

 ராம் சென்ற வேகத்தை பார்த்து மஞ்ச சிரித்துக்கொண்டே தந்தை இருக்கும் அறையின் கதவை தட்டினாள்..

“ உள்ளே இருந்து “ யார் ” என்று  கர்ஜனையாக ஓர் குரல் கேட்டது..

“ அப்பா நான் மஞ்சு உள்ள வரலாமா?.. ” 

“ உனக்கு என்னடா அனுமதி. நீ அப்பா கிட்ட அனுமதி கேட்கலாமா?.. உள்ள வா.. ” 

“ அப்பா வெளியே எல்லாரும் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க… வாங்க போகலாம்.. ” 

“ அடடே கல்யாணம்னு சொன்னதும் என் பொண்ணுக்கு எவ்வளவு வெட்கம்.. நீ உள்ள அம்மாவோட இருடா. அப்பா போய் பேசிட்டு வரேன்..  ஆமா எங்க உன் அண்ணன காணல வந்துட்டானா?.. ” 

“ எஸ் பா அண்ணா வந்து அதோட அறைக்கு போட்டார்.. ” 

“ ஓகே மா.. தெரியும் தானே அவங்க போற வரைக்கும் நீங்க யாரும் வெளியே வரக்கூடாது.. அப்பா போய் உங்களோட கல்யாணத்தை பத்தி அவங்களுக்கு அறிவிப்பு கொடுத்துட்டுவரேன்.. ” என்று கூறிவிட்டு வாசுதேவ் பத்திரிகையாளர்கள் இருக்கும் தோட்டத்திற்கு சென்றார்..

 அவர் வருவதை கண்டதும் அனைவரும் எழுந்து நின்றார்கள்..  ஏனென்றால் நீண்ட காலமாக ஒரே இடத்தில் ஒரு துறையில் நிலைத்து நிற்பது மிகவும் கடினமான ஒன்று இப்போது இருக்கும் போட்டி காலத்தில்..

 அவருக்கு முன்பு இருந்தவர்கள் அவருக்கு பின்பு வந்தவர்கள் என அனைவரையும் கடந்து முதல் இடத்தில் இருக்கும் வாசுதேவ கிருஷ்ணாவிற்கு புகழ் போதையில் சற்று திமிரும் அதிகம்.. 

அவருக்கு என்று போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து “ ஹாய் காய்ஸ் ஹவ் ஆர் யூ?.. காபி, பலகாரம் சாப்பிட்டீங்களா? …” என்றார்..

“ கோரசாக ஐ அம் பைன் சார். எஸ் எல்லாம் ஆச்சு”  என்றனர்.

 இளம் வயது பெண் எழுந்து நின்று “ ஹொவ் ஆர் யூ சார்?.. வாவ் லுக்கிங் பியூட்டிஃபுல்.. இந்த அறுபது வயசுலயும் இவ்ளோ அழகா எப்படி சார் இருக்கீங்க?.. நானெல்லாம் உங்கள பாக்குறதுக்காகவே இந்த பீல்டுக்கு வந்தேன்.. ” என்றாள் வாயெல்லாம் பல்லாக..

“ ஐ அம் பைன் பேபி.. தேங்க்யூ.. ஓகே இப்ப நீங்க வந்ததுக்கு என்ன காரணம் என்று நீங்களே நிறைய கற்பனை பண்ணி வச்சிருப்பீங்க.  அதெல்லாம் விடுத்து இப்ப நான் சொல்றத நோட் பண்ணுங்க.. ” என்று வாசு கூறியதும் அனைவரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்..  கேமரா அனைத்தும் அவனையே குறி வைத்தது..

 அவன் வாய் திறக்காமல் மேலதிகமான கேள்வி அவனிடம் கேட்பது அவனுக்கு பிடிக்காது..  எழுந்து அவ்விடத்தை விட்டு சென்று விடுவான்.. அதனால் வந்தவர்களுக்கு  காரியம்  ஆக வேண்டும்.  அப்பொழுதுதான் அவர்களது சேனலின் டிஆர்பி அதிகரிக்கும். அதனால் அமைதியாக என்ன சொல்லப் போகிறான் என காத்திருந்தார்கள்..

 அவனும் அனைவரையும் ஒரு முறை பார்த்து விட்டு பேச ஆரம்பித்தான்..

“ சென்னையின் பிரபல தொழில் அதிபர் மகேசன்,  மாலதி தம்பதிகளின் மகன் மாதவன் மற்றும் மகள் மதிவதனிக்கும். வாசுதேவ கிருஷ்ணா மணிமேகலை தம்பதிகளின் மகன் முத்துக்கிருஷ்ணா,  மகள் மஞ்சு இரு ஜோடிக்கும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி திருமணம்.. மெஹந்தி பங்க்ஷன். நிச்சயதார்த்தம்,  திருமணம் எல்லாமே  மகாலட்சுமி திருமண ஹாலில் நடைபெறும்.. அனைத்துமே நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் மக்கள் அனைவரும் பார்த்து எங்களது பிள்ளைகள் முத்துகிருஷ்ணா மதிவதனி, மாதவன் மஞ்சு ஜோடிகளை  வாழ்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.. நன்றி வணக்கம்.. ” என்று கூறிவிட்டு வேகமாக அவனது வீட்டுக்குள் சென்று விட்டான்..

 வந்தான் அவனுக்கு தேவையானதை பேசினான்…  எழுந்து சென்றுவிட்டான். மேலதிகமான பேச்சு, செயல் எதற்கும் அவனிடம் இடமில்லை..

 தமிழ்நாட்டு மக்களுக்கு அவனால் முயன்ற உதவிகளை செய்வான்..

 மழை பெய்து வெள்ளம் அதிகமானால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு. உணவு, உடை என கொடுத்து இருக்கிறான்.. திறமை இருந்தும் படிப்பிற்கு கஷ்டப்படும் பிள்ளைகளுக்கு  பண உதவி செய்திருக்கிறான்.. இப்படி பல உதவிகளை செய்து வருகிறான்..  ஆனால் இதை வைத்து அவன் நல்லவன் என்றும் நினைக்க முடியாது அவனது திமிர், கோபத்தை பார்த்து கெட்டவன் என்றும் நினைக்க முடியாது இரண்டும் கலந்த கலவை..

வாசு ஹாலில் வந்து அமர்ந்ததும் அவன் மனைவி மேகலை மாதுளை ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள். 

 அதை கையில் வாங்கியதும் 

“ எங்கடி உன் மகன்?.. கூப்பிடு அவனை.. ”

“ இதோங்க.. ” என்று கணவனிடம் கூறிவிட்டு முத்துவின் அறைக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார்..

 அழைப்பு சென்று அங்கே ஏற்கப்பட்டது.

“ கண்ணா அப்பா உன்னை வரட்டுமாம் கீழ வா தம்பி.. ” 

“ ஓகே மா இதோ வரேன்.. ” என்று கூறிவிட்டு வைத்தான்..

 தாய் அழைத்ததும் அவன் செய்த வேலையை வைத்துவிட்டு தந்தையை காண வந்துவிட்டான்..

  அவன் நடந்து வரும் போது அவன் நடைக்கு ஏற்ப தாளம் போடும் அவன் தலை முடி அழகென்றால்..

 வசீகரமான  முகத்தின் அழகை கூட்டும் படி இருக்கும் தெத்து பல் இன்னும் அழகே..

 பெண்களுக்கு மட்டுமா கண்கள் மீன் போன்று அழகாக இருக்கும். அவனது இரு கண்களும் காந்த கண்கள் தான்..

 மொத்தத்தில் அழகே உருவாக ஒருவன் இருந்தானே அவனே நம் நாயகன்  இளம் இயக்குனர் முத்துக்கிருஷ்ணன். 

 அவன் தந்தைக்கு சினிமா மீதும் தமிழ் திரை உலகின் மீதும் இருக்கும் மோகத்தை பார்த்து வளர்ந்ததனால் அவனும் சினிமா துறையிலேயே  தன் விருப்பத்தோடு ஆர்வத்தை திருப்பினான்.. 

 

 முறையாக படித்து பயிற்சி பெற்று பல குறும்படங்களை இயக்கி அது வெற்றி பெற்று தற்பொழுது தமிழ் திரை உலகின் இளம் இயக்குனராக வளம் வருகிறான்.. 

 இதற்கு முன்பு மூன்று திரைப்படங்களை இயக்கி அது யாரும் எதிர்பாராது வெற்றியையும் வசுலையும் கொடுத்ததால் அனைவராலும் அறியப்பட்ட இயக்குனர் ஆவான்..

 திரை உலகிற்கு அவனது அடையாளம் எம் கே என்று தான் தெரியும் இன்னும் அவனது முழு அடையாளம்,  பெயர் யாருடைய மகன் என்று எந்த தகவலும் இன்று வரைக்கும் தெரியாது..

 வாசுதேவிற்கு ஒரு பழக்கம் இருக்கிறது இன்றுவரையிலும் மனைவி,  பிள்ளைகளை எந்த ஒரு மீடியாவிற்கும் அறிமுகம் செய்து வைத்ததில்லை.. அவர்கள் தேவைகளை வெளியே சென்று சுகந்திரமாக பார்த்து வருவார்கள்.. ஆனால் இன்றுவரை வாசுதேவ் மனைவி, பிள்ளைகள் என்று யாருக்கும் தெரியாது..

 எத்தனையோ திரைப்படங்களை நடித்து வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் இதுவரை எந்த ஒரு திரை நிகழ்ச்சிக்கும் தனது குடும்பத்தை அழைத்துச் சென்றதில்லை..

 பல ஊடகங்கள் அவரிடம் அதிகம் கேள்வி எழுப்பியது குடும்பத்தை அறிமுகப்படுத்தம்படி.  ஆனால் வாசுவின் ஒரே பதில்.  நான் நடிகன் என்னை தெரிந்தால் போதும்..  எனது குடும்பத்தை  யாருக்கும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை..  என் நடிப்பு பிடித்திருந்தால், மக்கள் விரும்பினால் என் படத்தை பாருங்கள். இல்லையென்றால் பார்க்காதீர்கள்.. யாரையும் நான் கட்டாயப்படுத்தவில்லை..  என்று எந்த ஒரு பாராபட்சமும் இல்லாமல் முகத்திற்கு நேராக கூறிவிட்டார்.. 

 அவர் வீட்டுக்கு வேலையாட்கள் கூட அவருக்கு மிகுந்த நம்பகமான ஆட்களை மட்டுமே தேர்ந்தெடுப்பார்.. நம்பிக்கையை மீறினால் என்ன நடக்கும் என்று மீறிய ஒருவருக்கு காட்டினால் அதை பார்த்து மற்ற யாரும் மீற மாட்டார்கள்.. 

 தன் பிள்ளைகளுக்கு திருமணம் என்று அறிவித்து விட்டார்.. ஆனால் தன் பிள்ளைகளை இதுவரைக்கும் காட்டியதில்லை..  இந்த திருமணத்தின் மூலமாகத்தான் காட்ட விரும்புகிறார் ஏன் என்று தெரியவில்லை.. 

 முத்துகிருஷ்ணனை இயக்குனராக தெரியும்.. ஆனால் வாசுதேவின் மகன் என்று யாருக்கும் தெரியாது..

 அவனும் தந்தையின் பின்புலத்தை வைத்து இல்லாமல் அவனது சொந்த முயற்சியில் வெற்றி பெற்றான்..

ஒவ்வொரு படியாக இறங்கும் பொழுதும் முத்து அவனது தந்தையை தான் பார்த்துக் கொண்டே வந்தான்..

 வந்து வாசுவின் எதிர் இருக்கையில் அமர்ந்தான் முத்துகிருஷ்ணா..

“ என்னங்க முத்து வந்துட்டாங்க.. ” என்றார் மேகலை..

“ ஏண்டி எனக்கு கண்ணுல ஏதும் பிரச்சனையா என்ன?..  ஏன் எனக்கு அவன் வந்து இருக்கிறது தெரியாதா?..  இல்ல அவனுக்கு நான் எதிரில் இருக்கிறேன் அப்பாவுக்கு காலை விஷ் பண்ணி பேசணும்னு தெரியாதா?.. எல்லாத்துக்கும் முந்திரிக்கொட்டை மாதிரி முந்தாதன்னு உனக்கு பல தடவை சொல்லிட்டேன் இனி வாயால பேச மாட்டேன்.. ” அதட்டலாக கூறி மணிமேகலையை திரும்பி முறைத்து பார்த்தார். மேகலைக்கு உண்மையிலேயே உடல் எல்லாம் ஆடிவிட்டது..

 வாசுதேவ் அப்படி சொன்னதும் இனி நீ தான் பேச வேண்டும் என்ற அர்த்தத்தை புரிந்து கொண்ட முத்துகிருஷ்ணா வாய் திறந்தான்..

“ அப்பா குட் மார்னிங்.. ” 

“ குட் மார்னிங், குட் மார்னிங் எல்லாம் என் நேரம் உங்க கிட்ட எல்லாம் கேட்டு வாங்க வேண்டியது இருக்கு.. அது சரி போன விஷயம் என்ன ஆச்சு?.. ” 

 திருமணம் பேசிய அன்று கிளம்பி போனவன் இதோ பத்து நாள் கழித்து சூட்டிங் பண்ண வேண்டிய அனைத்து இடங்களையும் நேரில் சென்று பார்த்துவிட்டு இன்று காலை தான் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.. 

“ ஓகே பா எல்லாம் ரெடி தான்..  இன்னும் ஒரே ஒரு இடத்துக்கு போகணும்..  அதுக்கு நீங்க பர்மிஷன் தந்தா எல்லாம் முடிச்சிடலாம் கல்யாணத்துக்கு முன்னாடி..” 

“ எந்த ஊருக்கு போகணும்.. ” 

“ பொள்ளாச்சி போகணும் பா..  அங்க பிரபலமான கோயிலில் ஒரு கல்யாண ஷூட்டிங் இருக்கு.  அதை முடிச்சுட்டு கிராமத்துல தான் ஆரம்பம் சூட்டிங் நடத்தணும்.. மூவி ஃபுல்லாவே வில்லேஜ் ஸ்டோரி தானே.. வேட்டைக்காரன் புதூரில் தான் ஷூட்டிங்.. முடிஞ்சா சூரிய வம்சம் மூவி எடுத்த அதே வீடு கிடைத்தாலும் ஓகே தான்.. ப்ரொடியூசர் தந்த டைம் ரொம்பவே கம்மியா இருக்கு.. அதனால எனக்கு அதிகமா பிரேக் எடுக்க முடியாது..  இன்னும் பைவ் டேஸ் இருக்கு தானே..!  நான் த்ரீ டேஸ் உள்ள போயிட்டு எல்லாம் முடிச்சுட்டு வெடிங்க்கு முதல் நாள் வந்துடுவேன்.. ” என்றான்.. 

 அவனும் வளர்ந்து இந்த அளவிற்கு இருந்தாலும் இன்னும் தந்தை மேல் சிறிய அளவு பயமும் இருக்குகிறது..

“ கட்டாயம் நீ பொள்ளாச்சில தான் ஷூட்டிங் எடுக்கணுமா?..  வேற வில்லேஜ் செட் பண்ண முடியாதா?.. ”

“ அப்படி பண்ண முடியாதுப்பா..  எல்லாம் ரெடி பண்ணியாச்சு.  ப்ரொடியூசர் பட்ஜட்டுக்கு ஏத்த மாதிரி பக்கா வில்லேஜ் ஸ்டோரியா இருக்கணும்னு சொன்னார்.. அவரே தான் பொள்ளாச்சி சூஸ் பண்ணினார்..  அப்ப அவர் கேட்ட மாதிரி தானே பண்ண முடியும்.. உங்களுக்கு தெரியாதது இல்ல.  எல்லாரோட விருப்பமும் தான் முக்கியம்..  நம்ம விருப்பத்துக்கு எல்லாரையும் வளைக்க முடியாது.. ” 

 அவன் அப்படி பொதுவாக தான் சொன்னான்..  ஆனால் அவன் சொன்ன வார்த்தை என்னவோ வாசுதேவை தான் பதம் பார்த்தது..

“ இங்க பாருடா எல்லாம் சரிதான்.. உன்னோட விருப்பத்துக்கு தான் விட்டு இருக்கேன்.. பிள்ளைகளோட விருப்பத்தை மறுக்கிற தகப்பன் நான் இல்ல.. 

 நீயோ சரி. உன் தங்கச்சியும் சரி விரும்பின படிப்பை படிச்சீங்க..  நீங்க விரும்பின துறையில் இருக்கீங்க. எனக்கு மஞ்சு குட்டியை பத்தி கவலை இல்லை..  அப்பா சொன்ன மாப்பிள்ளைக்கு மனப்பூர்வமா சம்மதம் சொல்லிட்டா..  உனக்கு பல தடவை சொல்லிட்டேன்..  நம்ம குடும்பத்துக்கு காதல் கருமாந்திரம் எல்லாம் செட் ஆகாது.  கடைசி நேரத்துல கல்யாணத்துல ஏதாவது குளறுபடி பண்ணினா அப்புறம் இவ்வளவு அமைதியா இருந்து பேசுற அப்பாவை நீ பாக்க முடியாது.. 

இப்ப உனக்கு 25 வயசு. ஆனா நான் உனக்கு 21 வயசிலேயே உன் படிப்பு முடிஞ்ச உடனே கல்யாணம் பண்றதுக்கு ஏற்பாடு பண்ணினேன்..  நீ தான் எனக்கு இன்னும் கொஞ்ச காலம் டைம் தாங்க. நான் என்னோட கேரியர்ல முன்னேறினத்துக்கு அப்புறம் நீங்க காட்டுற பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறேன்னு டைம் கேட்ட.

  நான் எதிர்த்து பேசாமல் உன் விருப்பத்துக்கு மதிப்பு கொடுத்து  ஓகே  சொல்லி நானும் அஞ்சு வருஷம் உனக்கு டைம் தந்திருக்கிறேன்.. இன்னும் அஞ்சு நாள்ல கல்யாணம் இருக்கும்போது நீ இப்படி செய்வது எனக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை.. ஆனால் நானும் அதே  ஃபீல்டுல இருக்கேன்.. இந்த சூழ்நிலை எனக்கு புரியும் அப்படிங்கிறதால நான் இதுக்கு சம்மதிக்கிறேன்.. நீ போய் உன்னுடைய வேலையை முடித்துவிட்டு சீக்கிரமா வந்தோமா கல்யாணம் பண்ணினோமானு இருக்கணும்..  அதை விட்டுட்டு வேற ஏதாவது தகிடு தத்தம் பண்ணி இந்த கல்யாணத்தை நிறுத்துவதற்கு ஏதாவது பண்ணினால் உன்னோட வயசு,உயரம்,  நிலை எதையும் பார்க்க மாட்டேன்..  எனக்கு கோவம் வந்தா நான் எப்படி இருப்பேன்னு உங்க எல்லாருக்குமே தெரியும் அந்த நேரம்  நீ இயக்குனர் பெரிய ஆள் அப்படின்ற எதுவும் என் கண்ணுக்கு தெரியாது. நீ என் பிள்ளைன்னு மட்டும் தான் எனக்கு தெரியும்.  அடிச்சு தோலை உரிச்சு தொங்க விட்டுடுவேன்.  அதை மட்டும்  நல்லா மனசுல வச்சுக்கிட்டு உன் வேலையை போய் பார்..” என்றான் வாசு தேவ கிருஷ்ணன்.. 

“ அப்படி எல்லாம் எதுவும் பண்ண மாட்டேன் பா..  உங்க கோபத்துக்கு நான் ஆளாக மாட்டேன்.. நீங்க சொன்ன மாதிரி கல்யாணம் பண்ணிபேன்..” என்றான்..

“ சரி எத்தனை மணிக்கு கிளம்புற பத்திரமா  போயிட்டு சீக்கிரமா வா.. ” 

“ லஞ்ச் முடிய கிளம்பதான் ப்பா.. ”

“ மணி லஞ்ச் ரெடியா எடுத்து வை.. ” 

“ இதோங்க முடிஞ்சு எல்லாம் ரெடிதான் நீங்க வாங்க.. ” என்றார் மணிமேகலை..

 பிள்ளைகள் மீது பாசம்  இருப்பது இயல்புதான் எல்லா பெற்றோர்களுக்கும்..

 சில பெற்றோர் பிள்ளைகள் என்ன தவறு செய்தாலும் அதை முறையாக சொல்லி திருத்தி புள்ளைகளை நல்வழிப்படுத்த நினைப்பார்கள்..

 சில பெற்றோர் பாசம் காட்டி பிள்ளைகளை தங்கள் கைகளுக்குள் வைத்திருக்க நினைப்பார்கள். பிள்ளைகள் எப்பொழுது அவர்களை மீறி தங்கள் விருப்பம் என்று போகிறார்களோ அப்பொழுது அவர்களது சுயரூபம் வெளிப்படும்.. 

 பாசம்,நேசம்,அன்பு எல்லாம் அவர்களது சொல்பேச்சு கேட்கும் வரை தான்.. அதை மீறினால் பிள்ளைகளே இல்லை எக்கேடோ கெட்டு ஒழிந்து போங்கள் என்று விட்டுவிடுவார்கள்..  

 இதில் எந்த வகையான பெற்றோர்  இந்த வாசுதேவ கிருஷ்ணன் மணிமேகலை என்று பார்க்கலாம்..

 முத்துகிருஷ்ணனுக்கு காட்டப்பட்ட மதிவதனியின் புகைப்படத்தில் அவனுக்கு அவளை பிடிக்கவில்லை என்று கூற எந்த விதமான தடையும் இல்லை.. 

 அழகாகவே இருந்தாள். அவளது படிப்பு, உயரம் எதற்கும் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் சொல்ல முடியாது..

 அவள் ஒரு தமிழ் ஆசிரியை.. 

 மஞ்சு ஒரு ஆங்கில ஆசிரியை..

 இருவரும் சிறு வயது முதல் ஒன்றாகவே படித்தவர்கள்.. அதனால் மஞ்சுவிற்கும் மதிவதனிக்கும் நட்பையும் தாண்டி அதிகமான நெருக்கம்..

 திருமணத்திற்கு பின்பும் இருவரும் பிரியாமல் இருக்கலாம் என்ற ஒரே காரணம் மஞ்சுவிற்கு மதிவதனியின் அண்ணன் மாதவனை திருமணம் செய்ய காரணமாக இருந்தது.. 

 வாசுதேவ் சொன்னது போல் இருவரும் யாரையும் சந்தித்து பேசியதில்லை.. 

 இதுவரைக்கும் தங்கையின் தோழி என்ற அளவில் மதிவதனியை கேள்விப்பட்டிருக்கிறானே தவிர நேரில் பார்த்ததில்லை.. 

 அதே போல்தான் மஞ்சு மாதவனை நேரில் பார்த்ததும் இல்லை பேசியதும் இல்லை..

 இரு குடும்பத்து பெண்களும் வெளியே கோவிலில் அப்படி சந்தித்துக் கொள்வார்கள்.. ஆண்கள் தொழில்முறையில் சந்தித்துக் கொள்வார்கள்..  மற்றும் படி குடும்பமாக இதுவரையும் சந்தித்து கலந்த பேசி உறவாடியது இல்லை.. 

 மணிமேகலையின் கை பக்குவத்தில் ருசியாகவும் நிறைவாகவும்  உணவு உண்டு விட்டு மகனைப் பார்த்து தலையசைத்து விட்டு வாசுதேவ் எழும்பி அவரது அறைக்கு சென்றுவிட்டார்..

 அவனும் கை கழுவி விட்டு எழுந்த நேரம் அவனது கைபேசிக்கு அழைப்பு வந்தது.. 

 கைபேசியை எடுத்து பார்த்தான்..  அது புது எண்ணில் இருந்து அழைப்பு என்றதும் யாரோ என்று முதல் அழைப்பை ஏற்காமல் விடத்தான் நினைத்தான்..  ஆனால் யாரேனும் இன்றைய பயணத்தை பற்றி பேசுவதற்காக முக்கியமான அழைப்பாக இருக்கப்போகிறது என்று எடுத்து காதில் வைத்துக் கொண்டே  அறையை நோக்கி தாயைப் பார்த்து தலையாட்டிவிட்டு சென்றான்..

“ ஹலோ ஹூ ஆர் யூ?.. ” 

 சிறிது நேரம் அந்த பக்கம் இருந்து எந்த  பேச்சும் வரவில்லை..  அதனால் அழுத்து போய் கைபேசியை அணைக்க இருக்கும் பொழுது 

“ ஹெலோ ப்ளீஸ் வச்சுடாதீங்க முத்து.. நான் மதி உங்களோட கொஞ்சம் தனியா பேசணும் ப்ளீஸ்.. ” 

“ வேகமாக அறைக்குள் சென்று கதவை அடைத்தான்.. மதியா?..  யாருன்னு தெரியலையே ?.. ” 

 தனது கைபேசிக்கு ஒரு பெண்ணிடம் இருந்து அழைப்பு என்றாலே வாசுதேவ் ருத்ரமூர்த்தியாக தாண்டவம் ஆடி விடுவான்.  இதில் யார் என்று தெரியாத ஒரு பெண் என்றால் சரி கேட்கவும் வேண்டுமா?.. 

 இது மட்டும் அவர் காதில் விழுந்தால் இன்றைய பயணம் முற்று முழுதாக தவிர்க்கப்பட்டு அவன் இந்த அறையிலேயே சிறைவாசம் இருக்க வேண்டியது வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.. 

 சிந்தனையில் இருக்க அந்த பக்கம் “ ஹெலோ,  ஹெலோ இருக்கீங்களா? முத்து.. ” என்றாள் பரிதவிப்போடு..  இந்த சந்தர்ப்பத்தை விட்டால் அவளுக்கு வேற வாய்ப்பு கிடைக்காது என்ற அவசரம் அவள் பேச்சில் இருந்தது.. 

“ ஆன் இருக்கேன்..  சொல்லுங்க யார்னு கேட்டேனே?.. ” 

“ நான் தாங்க உங்களுக்கு பாத்து இருக்குற பொண்ணு மதிவதனி பேசுறேன்.. ” 

“ ஓஹோ நீங்களா..!  சொல்லுங்க என்ன விஷயம்?.. ” 

“ நான் உங்களை மீட் பண்ணணுமே வர முடியுமா?.. ”

“ இப்ப டைம் இல்லங்க. நான் அர்ஜெண்டா  ஷூட்டிங் விஷயமா வெளியே போக வேண்டி இருக்கு பிறகு மீட் பண்ணுவோம்.. சாரி.. ”

“ ஏங்க ப்ளீஸ்..  நம்ம கல்யாணம் பத்தி பேசணும்.. ஹாஃப் அண்ட் ஹவர் போதுங்க ப்ளீஸ்ங்க. ”

 நேரத்தை பார்த்துவிட்டு “ ஓகேங்க எனக்கு வேற எங்கேயும் வர முடியாது. ஏர்போர்ட் போற வழியில ஒரு காபி ஷாப் இருக்கு அந்த லொகேஷன் அனுப்புறேன். நீங்களும் டைரக்டா அங்கேயே வந்துருங்க.. ” என்று பேசி விட்டு அழைப்பை துண்டித்தான்..

 திடீரென்று பயணம் மேற்கொள்ள இருப்பதால் இரண்டு மூன்று சூட்கேஸ் அவனது பயணத்திற்கு எப்பொழுதுமே தயாராக இருக்கும்.. 

 முகம் கழுவி உடைமாற்றிவிட்டு அவனது பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே வந்து ஹாலில் மாட்டப்பட்டிருந்த அவனது அக்கா தாமரையின் படத்திற்கு முன்பு நின்று வணங்கி விட்டு தாய் தந்தையிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றான்..

 அவனது இந்த பயணம் அவனது வாழ்க்கையே திசை மாற்ற இருப்பது தெரிந்து இருந்தால் இதை தவிர்த்து இருப்பானோ என்னவோ..!

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!