அடுத்து வந்த நாட்களில் யுகித்தும், வெண்ணிலாவும் எந்தவித கவலையுமின்றி காதல் பறவைகளாக சுற்றி திரிய, அதனைக் கண்டு
வெண்ணிலாவின் நண்பர்களுக்கும், யுகத்தின் நண்பர்களுக்கும் மிக்க மகிழ்ச்சி தான்.
ஆனால் நகுலனுக்கும், யுகித்துக்கும் மட்டும் அவ்வப்போது முட்டிக் கொள்ளும்.
நகுலன் வெண்ணிலாவிடம் உரிமையாக இருந்தால் அதை யுகித்தால் தாங்கிக்கொள்ளவே முடியாது.
வேண்டுமென்றே நகுலனிடம் வம்பு பண்ணுவான்.
வெண்ணிலாவிற்கு தலையை பிய்த்துக் கொள்ளத் தோன்றும். அன்றும் அப்படித்தான் இருவரும் அடித்துக்கொள்ள தலையில் கை வைத்துக் கொண்டிருந்தாள் வெண்ணிலா.
அங்கு வந்த தீபிகாவோ,” என்னாச்சு? ஏன் இப்படி இருக்க நிலா?” எனக் கேட்க,
“என்ன விஷயம்னு உனக்கு தெரியாதா பேபி? எப்பவும் போல நகுலனும், யுகித்தும் சண்டை போட்டுட்டு இருக்காங்க. எனக்கு ரெண்டு பேருமே முக்கியம். புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க.”
“ஹா! ஹா!” என்று சிரித்தாள் தீபிகா.
“சிரிக்காதே பேபி. எனக்கு டென்ஷனாகுது. ஏன் தான் இந்த யுகித் சின்ன பிள்ளையாட்டம் ரியாக்ட் பண்றான்னே தெரியல.“ என்று வெண்ணிலா புலம்ப.
“அவனுக்கு உன் மேல ரொம்ப பொசசிவ் நிலா. நகுலன் உன் கிட்ட உரிமை எடுத்துக்குறதை அவனால ஏத்துக்க முடியலை. அதான் அவன் கிட்ட சண்டைக்கு போறான். யுகிக்கு நீ மட்டும் தான் எல்லாம். அதே போல உனக்கும் அவன் மட்டும் தான் எல்லாமாக இருக்கணும்னு நினைக்குறான்.”
“ஆமா பாவம் யுகா. அவனுக்கு யாருமில்லைன்னு சொன்னான். ஆனா இவ்வளவு பெரிய காலேஜ்ல எப்படி படிக்கிறான். யாரும் இவனுக்கு ஸ்பான்சர் பண்றாங்களா?” என்று அதி முக்கியமான கேள்வியை வெண்ணிலா வினவ.
அவளை லூசா நீ என்பது போல் பார்த்தாள் தீபிகா.
”ஏன் இப்படி பாக்குற பேபி?”
“ஹே! நிலா… உனக்கு யுகியை பத்தி எதுவுமே தெரியாதா ? அவனைப் பத்தி எதுவும் உன் கிட்ட சொல்லலையா ?
“இல்ல பேபி. அவர பத்தி ஏதாவது சொல்ல வந்தா நான் பேச்சை மாத்திடுவேன். அவருக்கு யாருக்கும் இல்லைன்னு வருத்தப்படுவாரா, அதை என்னால தாங்க முடியாது.”என்று வெண்ணிலா சொல்ல,
“ ஏய்! லூசு! லூசு! யுகிக்கு அம்மா, அப்பா தங்கச்சின்னு ஒரு குடும்பமே இருக்கு. அவங்க வெளியூர்ல இருக்கிறாங்க. அந்த ஊர்ல அவங்க தான் பெரிய பணக்காரங்க. அப்படி இருக்கும்போது பையனா இங்க படிக்க வைக்காம வேற எங்க படிக்க வைப்பாங்க” என்று தீபிகா கிண்டலாக வினவ.
”என்னது யுகாக்கு குடும்பம் இருக்கா? அப்புறம் ஏன் அன்னைக்கு அனாதைன்னு என்கிட்ட சொல்லணும் “ என்று குழப்பத்துடன் வினவினாள் வெண்ணிலா.
“அது ஒரு பெரிய கதை நிலா. அவனுக்கு எல்லாரும் இருந்தும் யாரும் இல்லாதது போல் தான். அவன் மேல யாருக்குமே அக்கறையில்லை. அவனுக்கு தேவையான அன்பு அவங்க குடும்பத்துல கிடைக்கல. அதான் அவங்க கிட்ட இருந்து விலகி, இங்கே ஹாஸ்டல்ல இருந்து படிக்கிறான்.”
வெண்ணிலா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க.
“என்ன நிலா ஒன்னும் சொல்ல மாட்டேங்குற? அவன் எப்பவுமே சொல்லுவான் என்னோட வைஃப்புக்கு திகட்ட திகட்ட என் அன்பு முழுவதையும் கொடுக்கணும். அது போல் இதுவரைக்கும் அனுபவிக்காத அன்பு எல்லாவற்றையும் அவக் கிட்ட இருந்து அனுபவிக்கணும். எங்களுக்கு நடுவில் யாரும் வரக்கூடாதுன்னு சொல்லுவான்.
அவ ஆசைப்பட்ட மாதிரி நீ கிடைச்சிட்ட. ஆனா நீ உன் பிரெண்ட்ஸுக்கு முக்கியத்துவம் குடுக்குற. அதை அவனால ஏத்துக்க முடியாமல் உன் பிரண்ட்ஸோட சண்டை போடுறான்.” என்று கூற,
“பேபி! நான் இன்னும் யுகித்தை பற்றி முழுசா தெரிஞ்சுக்காம, அவரை கஷ்டப்படுத்திட்டேன்.” என்று வருந்தினாள் நிலா.
ஆனால் யுகித்திற்கு ஏதுவுமே பிரச்சனையாக தெரியவில்லை. நகுலனுடன் சண்டை போட்டாலும், வெண்ணிலா மேல் கோபமே அவனுக்கு வரவில்லை. அவளை நினைத்தாலே உள்ளம் மகிழ்ச்சியில் தத்தளித்தது.
இந்த உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியாக மனிதனாக தன்னை மட்டுமே உணர்ந்தான்.
அதே கல்லூரியில் மேல் படிப்பு படிக்க போவதாக மதன் சாரிடம் யுகித் கூறியதும்,
”இதனால தான் வேலையில கான்சென்ட்ரேஷன் பண்ணலையா யுகி? சாரி பா! நான் உன்ன தப்பா நினைச்சுட்டேன்.” என்று அவனை தட்டிக் கொடுத்துவிட்டுச் செல்ல.
அவனுக்கு இறக்கை இல்லாமல் பறப்பது போல் இருந்தது.
வெண்ணிலாவின் காதல் கிடைத்ததும் அவன் இழந்த எல்லாம் மீண்டும் கிடைத்ததாக எண்ணி பூரித்து, அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினான்.
அவ்வப்போது அவளை சீண்டும் வேலையையும் செவ்வனே செய்தான் யுகித்.
அதுவும் பாட்டு ப்ராக்டிஸ் பண்ணும் போதே எல்லாம் அவளிடம் வம்பு வளர்ப்பான்.
பார்க்க நல்ல பிள்ளை போல் இருந்து கொண்டு அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துவிட்டு திடீரென கண் சிமிட்டுவான்.
வெண்ணிலாவிற்கோ முகம் சிவந்து போய்விடும்.
தினமும் கல்லூரியின் மதிய உணவு இடைவெளியின் போது அவனுடன் பத்து நிமிடமாவது செலவு செய்ய வேண்டும்.
என்றாவது படிப்பு ,அசைன்மெண்ட் வேலையால் வெண்ணிலா அவனை பார்க்க செல்லாவிட்டால் வகுப்பிற்கே வந்து வம்பு செய்வேன்.
அங்கு எந்த பேராசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் நல்ல பிள்ளையாக,” சார் வெண்ணிலாவை மதன் சார் வரச் சொன்னார்.” என்றுக் கூறி அழைத்துச் சென்று விடுவான்.
அன்றும் மதன் சார் கூப்பிடுவதாக, வெண்ணிலாவை அழைத்துச் செல்ல.
அவன் கூடச் சென்றவளோ , “என்ன யுகா. இன்னைக்கு அசைன்மென்ட் சம்மீட் பண்ண வேண்டி இருந்துச்சு. அதான் வரல. இப்படி எப்ப பார்த்தாலும் என்ன விளையாட்டு? இது சாருக்கு தெரிஞ்சா அவர் என்ன நினைப்பாரு”. என்று சற்று கோபமாக வினவ.
“சரி போ உன்ன பாக்க முடியலேன்னு கூப்பிட்டா, ரொம்ப தான் பிகுப் பண்ற. காலேஜ் முடிஞ்சாலும் அடுத்த செகண்ட் வீட்டுக்குகெளம்பிடுவ. அப்புறம் உன்னை எப்ப தான் நான் பார்க்கிறது? உனக்கு நான் முக்கியமே கிடையாது” என்றவாறே மரத்தில் சாய்ந்தவன் கண்களை மூடிக்கொள்ள.
”சாரி யுகா. ஆனா மதன் சாருக்கு நம்ம விசயம் தெரிஞ்சா என்ன பண்றதுன்னு தான் கேட்டேன். என்ன பாரேன். ப்ளீஸ யுகா.”என்று கெஞ்ச,
” போ! உனக்கு என்னை விட முக்கியமான வேலை இருக்குல. நீ போ. ”என்று கண்களை திறக்காமலே அவன் கூற.
“யுகா! இப்போ என்னைப் பார்க்க போறியா? இல்லையா?”
“பார்க்க முடியாது போடி.”
“இரு உன்னை எப்படி பார்க்க வைக்கணும்னு எனக்குத் தெரியும். என்ற வெண்ணிலா, அவள் கன்னத்தை பற்றி முத்தமிட்டாள்.
படக்கென்று விழித்தவன்,” நிலா!” என்று தாபமாக அழைக்க.
அவளோ அங்கிருந்து ஓடியே விட்டாள்.
அடுத்து வந்த நாட்களில் வேண்டும் என்றே அவள் வரும்போதெல்லாம் “அன்று காதல் பண்ணியது எந்தன் கன்னம் கிள்ளியது… அடி இப்போதும் நெஞ்சில் மாறாமல் இனிக்கிறதே.” என்று பாடி கண் சிமிட்டுவான்.
அவளுக்கு முகம் எல்லாம் சிவந்து போகும்.
அடுத்த இரண்டு வருடங்களும் காதலும், ஊடலுமாகச் செல்ல அந்த வருட இறுதியில் வந்த கேம்பஸ் இன்டர்வியூல இருவரும் ஒரே கம்பெனியில் செலக்ட் ஆனார்கள்.
வெண்ணிலாவும், யுகித்தும்இனி வாழ்வில் பிரிவென்பதே கிடையாது என்று எண்ணி சந்தோஷத்தில் மிதந்தனர் .
வர்ற சண்டே கொடுக்கலாம்னு இருக்கேன் நீயும் வரணும்”. என்று யுகித் கூற,
“சரி!” என்றாள் வெண்ணிலா.
ப்ரெண்ட்ஸோட போறோம்னு சொன்னா எப்படியும் வீட்டில் விட்டு விடுவார்கள் என்று எண்ணினாள்.
ஆனால் வெண்ணிலாவின் அம்மாவோ, இவளது படிப்பு முடிவதால் வரன் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஒரு நல்ல வரன் அமைய, அவர்களது குடும்பமும் நல்லவிதமாக தெரிய, ஞாயிறன்று கோவிலில் பெண் பார்ப்பதற்காக ஏற்பாடு செய்திருந்தார்.
மாப்பிள்ளை வீட்டார் கேஷுவலா சந்தித்தால் போதும் என்று கூறி விட,
கமலிக்கும் அதுவே நல்லது என்று பட இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக்கொண்டாள்.
வெண்ணிலாவுக்கு வேலைக்கு போக வேண்டும் என்று ஆசை என்பது அவருக்குத் தெரியும்.
கல்யாணம் என்றால் எளிதில் ஒத்துக்கொள்ள மாட்டாள் என்று எண்ணியவர் சும்மா கோவிலுக்கு போவதாக அழைத்தார்.
“ அம்மா! ப்ரெண்ட்ஸுகளோட பார்ட்டி மா. அவசியம் போகணுமா! ப்ளீஸ்…” என்று கெஞ்ச.
“கோவில்ல வேண்டுதல் வச்சிருக்கேன். இன்னைக்கு அவசியம் போகணும் . உன் ப்ரண்ட்ஸோட இன்னொரு நாள் வெளியே போயிக்கோ.” என்று மறுத்து விட்டார்.
அவளால் வர முடியாத சூழ்நிலையை யுகித்துக்கு மெசேஜ் செய்ய.
அதை பார்த்த யுகித்தோ எந்த ரிப்ளையும் செய்யாமல், கோபத்தில் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டான்.
இவளோ கிடைத்த தனிமையில் அவனது போனுக்கு முயற்சி செய்ய போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டதாக வாய்ஸ் வர.
அவளுக்கு படப்பட என்று வந்தது. பெற்றோருடன் கோவிலுக்கு சென்றாலும் அவளது நினைவெல்லாம் யுகித்தையே சுற்றிச் செல்ல நடந்த எதையும் கவனத்தில் வைக்கவில்லை வெண்ணிலா. மாப்பிள்ளையாக வந்த தீரனோ யோசனையுடன் வெண்ணிலாவைப் பார்த்தான்.
வீட்டிற்கு வந்த தீரனிடம்,” பொண்ண பிடிச்சிருக்கா?” என்று நிரஞ்சன் வினவ.
“ எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.” என்று மித்ராவும், மிதுனாவும் கோரஸாக கூற.
“அப்பா! உங்களுக்கும், அம்மாவுக்கும் பிடிச்சிருந்தா போதும். கல்யாணம் வரைக்கும் எந்த எதிர்பார்ப்பும் நான் வச்சுக்க விரும்பல . இருந்தாலும் அந்த பொண்ணுக்கு விருப்பமானு கேட்கணும். அந்தப் பொண்ணோட போன் நம்பர் வாங்கி தாங்க. நான் பொண்ணோட பேசடுறேன்.” என்றான் தீர்மானமாக.
“அப்போ வெண்ணிலா தான் இந்த வீட்டு மருமகள். வெண்ணிலாவுக்கு சம்மதம்னு அவங்க அம்மா அடிச்சு சொல்லுறாங்க. நான் வெண்ணிலா நம்பர் வாங்கி தரேன். நீயே கேட்டுக்கோ. என்று மித்ரா உற்சாகமாக கூறினார்.
இதை எதையும் அறியாமல் மறுநாள் யுகத்தின் கோபத்தை எப்படி சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டே கல்லூரிக்கு கிளம்பினாள் வெண்ணிலா.
எப்போதடா உணவு இடைவேளை வரும் என்று காத்திருந்து, அவனைத் தேடிச் செல்ல.
அவனோ முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
”ப்ளீஸ் யுகா! அம்மா திடீர்னு வேண்டுதல்னு கோவிலுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க.என்னால ஒன்னும் செய்ய முடியல. புரிஞ்சுக்கோ யுகித்” என்று அவள் அவன் கன்னத்தை பிடித்து கெஞ்ச.
அவனோ,அவளது கைகளைத் தட்டி விட்டு அங்கிருந்து திரும்பி பார்க்காமல் கிளம்பினான்.
கண்கள் கலங்க வெண்ணிலா நின்றிருக்க. அவள் முதுகிலே ஓங்கி ஒன்று போட்டார் கமலி.
எதிர்பாராத அடியில் கண்கள் கலங்க திரும்பினாள் வெண்ணிலா.
“அம்மா!”என்று பயத்துடன் அழைக்க.
“ என்ன வேலைப் பார்த்துட்டு இருக்க வெண்ணிலா? இதுக்கு தான் உன்ன காலேஜ்ஜுக்கு அனுப்பினோமா, கடைசியா உங்க அக்கா மாதிரியே நீயும் பண்ணிட்டியே.
அவ பண்ண காரியத்துக்கு இன்னைக்கு எந்த நிலைமையில் இருக்கான்னு உனக்கு தெரியுமா?” என்றவர் அவளை அடித்துக்கொண்டே இருக்க.
முகுந்தன் தான் அவளை தடுத்தார்.
மொத்த கல்லூரியும் இவர்களையே வேடிக்கை பார்க்க.
பார்க்க வேண்டியவனோ கோபத்தில் கிளம்பி விட்டிருந்தான்.
தகவல் தெரிந்து அங்கு வந்த மதன் சார் எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றார்.
கமலி கோபத்தில் கொந்தளிக்க.
முகுந்தன் தான் பொறுமையாக,“சார்! நாங்க வெண்ணிலாவை கூட்டிட்டு போறோம்.” என்றார் .
“ கூட்டிட்டு போங்க.ஆனால் இந்த விசயத்தை கொஞ்சம் பொறுமையா ஹான்டில் பண்ணுங்க. வெண்ணிலா சின்ன பொண்ணு. எடுத்து சொன்னா புரிஞ்சுப்பா.”என்றார் மதன்.
யாரையோ நிலா லவ் பண்ணுகிறாள் என்று மட்டும் அவருக்கு புரிந்தது.ஆனால் அந்த பையன் யார் என்பதை விசாரிக்கவில்லை. காதல் ஒன்றும் அவ்வளவு பெரிய குற்றமில்லையே என்று எண்ணியவர் அத்துடன் அந்த விஷயத்தை விட்டு விட்டார் .
பழைய சம்பவங்களை நினைத்து பார்த்தவர், நிகழ்விற்கு வந்தார்.
வெண்ணிலாவோட அம்மா அவளுடைய காதலுக்கு வேணும்னா தீங்கிழைத்திருக்கலாம். ஆனால் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை தான் அமைத்துக் கொடுத்திருக்கிறார் என்று எண்ணியவர் வெண்ணிலாவை புன்னகையுடன் பார்த்து, “உன்னோட பேமிலி மெம்பர்ஸ் யாரையும் கூட்டிட்டு வரலையா? எங்களுக்கெல்லாம் அவர்களைஅறிமுகப்படுத்தக் கூடாதா?”என்று வினவ,