மதன் சாருக்கான பாராட்டு விழா இனிதே முடிந்தது. நாளை ஃபேர்வேல் பார்ட்டியோடு விழா முடிவுறும்.
ஆகவே யாருமே மாணவ, மாணவிகள் யாரும் அவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு செல்ல ஆர்வம் காட்டாமல் கல்லூரியிலேயே குழு, குழுவாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
மதனும் வெண்ணிலாவையும், யுகித்தையும் அழைத்தார்.
“சொல்லுங்க சார்!” என்று இருவரும் வினவ.
“இந்த ஃபங்ஷன் மனசுக்கு நிறைவா இருந்துச்சு. அதுவும் வெண்ணிலா நீ வருவேன்னு எதிர்பார்க்கவே இல்லை. நீ வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம். ஆனா ஒரே, ஒரு குறை நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எனக்காக பாடலை.” என்றுக் கூற
“அதற்கு என்ன சார்? இப்போக் கூட பாடிட்டா போச்சு.” என்று யுகித் உற்சாகமாக கூற.
‘இவன் ஏன் இவ்வளவு எக்ஸைட் ஆகிறான். சரி இல்லையே!’ என்று மனதிற்குள் எண்ணினாள் வெண்ணிலா.
“என்ன வெண்ணிலா? நீ ஒன்னும் சொல்லாமல் இருக்க?” என்று மதன் வெண்ணிலாவைப் பார்த்து வினவ.
“அது வந்து சார்!” என்று வெண்ணிலா தயங்கினாள்.
“கமான் வெண்ணிலா! சாருக்காக இது கூட செய்ய மாட்டியா?” என்று யுகித் அவரை முந்திக் கொண்டு வினவ.
அவளால் மறுக்க முடியவில்லை. அவனை முறைத்துக் கொண்டே,” சரி!” என்று தலையாட்டினாள்.
‘என்ன பாட்டு பாடலாம்.’என்று வெண்ணிலா யோசிக்கிறதுக்குள்ளே, “நம்ம ஃபேவரைட் சாங் தான் நிலா.” என்றவன் வேண்டுமென்றே அவளை பார்த்துக் கொண்டே பாட ஆரம்பித்தான்.
“ அன்று கண்ணம் கிள்ளியது…” என்ற பாட.
அவளோ அவனது குரலில் தடுமாற ஆரம்பித்தாள்
அவனோ வேண்டுமென்றே அவளைப் பார்த்துக் கொண்டு எப்பொழுதும் போல் கண்சிமிட்டியபடி பிசிறில்லாமல் பாட, கடைசியில் அவள் தான் ஒரு வித தடுமாற்றத்துடன் பாடி முடித்தாள்.
” இது போதும் பா. ரெண்டு பேரும் எப்பவும் போல சூப்பரா பாடினீங்க. உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன். இப்போ தான் சந்தோஷமா இருக்கு.” என்று விட்டு அவர் கிளம்ப.
அதற்கு மேல் வெண்ணிலாவால் தாங்க முடியவில்லை.
அங்கிருந்து ஓடியவள் மரத்தின் மீது சாய்ந்து கண் கலங்கி நிற்க.
அவள் பின்னே வந்த யுகித் கைகளை கட்டிக் கொண்டு அவளைப் பார்த்தான்
அவளது கண்கள் மூடியிருக்க, கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது.
“என்ன நிலா! பழசெல்லாம் மறக்க முடியலையா?” என்று யுகித் மென்மையாக கேட்க.
விழி, விழித்துப் பார்த்தவள், கண்களைத் துடைத்துக் கொண்டு அவனை முறைத்தாள்.
“இல்ல எப்ப பார்த்தாலும் நம்ம தனிமையில் இருக்கும் இடத்திற்கே வர்றியே அதான் கேட்டேன்.” என்று நக்கலாக கூறினான்.
அப்பொழுது தான் அவள் வந்த இடத்தை பார்த்தவள், தன்னையே நொந்து கொண்டு அங்கிருந்து செல்ல பார்க்க.
அவள் கையை பிடித்து இழுத்தான் யுகித்.
அவளோ அவனது கையை உதற
“ ரொம்ப பண்ணாத நிலா! உண்மைக்கே நான் தான் உன் மேல கோபப்படணும். ஈசியா என்னை தூக்கி போட்டுட்ட.” என்று அவன் கூற,
“இங்க பாருங்க யுகித்! மத்தவங்களுக்கு வேணா நம்க்குள்ள என்ன நடந்ததுன்னு எதுவும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு எல்லாம் தெரியும் தானே. நீங்க தான் நான் வேணாம்னு முடிவு பண்ணிங்க. எத்தனை முறை மெசேஜ் பண்ணி இருப்பேன். ஒரு முறையாவது பார்த்தீங்களா?”என்று எகிறினாள் வெண்ணிலா.
அந்த நாளின் நினைவில் முகம் இறுக நின்றான் யுகித். பிறகு தலையை உலுக்கிக் கொண்டு,”என் பக்கம் எதாவது நியாயம் இருக்குன்னு நினைக்கவே மாட்டியா நிலா.” என்று வினவ.
“எந்த விளக்கமும் தேவையில்லை யுகித். காலம் கடந்துருச்சு… நீங்க உங்க வழிய பாத்துக்கோங்க. நான் என் வழியை பார்த்துக்கிறேன்.”
“ப்ளீஸ்டா! ஒரு தடவை எனக்கு சான்ஸ் கொடு. நான் விளக்கம் கொடுக்கிறேன்.” என்று அவள் கையைப் பிடித்து மன்றாடினான் யுகித்.
“யார் பார்த்தா எனக்கு என்ன? எனக்கு எதைப் பத்தியும் கவலைப்படுற அவசியம் இல்லை.”
“அப்படியா? எனக்கும் உங்க விளக்கத்தை எனக்கு கேட்கணும்னு அவசியம் இல்ல. நான் அன்னைக்கு எவ்வளவோ பேச முயற்சி செஞ்சேன். நீங்க ஒத்துழைச்சிங்களா? எனக்கான வாய்ப்பு நீங்க கொடுக்கவே இல்லல. எல்லாம் முடிஞ்சிடுச்சு. யார் மேல உள்ள கோபத்தையோ என் மேல காமிச்சிட்டீங்க. நான் அன்னைக்கே செத்துப் போயிட்டேன் ஏற்கனவே செத்துப்போன பிணத்து கிட்ட போய் விளக்கம் சொல்லுவீங்களா?” என்று ஆக்ரோஷமாக வெண்ணிலா கூற.
அவளது வார்த்தையில் விக்கித்து போனவன், அவளை இறுக அணைத்தான். அவனது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
இவ்வளவு நேரம் அவன் மேல் கோபத்தில் இருந்தவளோ அவன் அழுவதைப் கண்டு தாள முடியாமல் அவளும் கண்ணீர் வழிய அவனை இறுக அணைத்தாள்.
“அன்னைக்கு என் பேச்சை கேட்டிருந்தால் இந்த நிலைமை நமக்கு வந்து இருக்காதில்ல யுகா. எல்லாம் உன்னால தான்…” என்று அவன் நெஞ்சில் சாய்ந்து கதறினாள்.
“நிலா!” என்ற தீரனின் கர்ஜிக்கும் குரலில் பதறி விலகியவளோ, “மாமா!” என்று குற்ற உணர்வோடு அவனருகே செல்ல முயல.
அவள் கையைப் பிடித்து தடுத்தான் யுகித்.
வெண்ணிலாவின் குடும்பம் நாளைக்கு தான் வருவதாக இருந்தது. ஆனால் அவள் குரல் சரி இல்லாதது போல் உணர்ந்த மித்ரா அன்றே கிளம்பலாம் என்று எல்லோரையும் அழைத்துக் கொண்டு வந்தார்.
வந்ததற்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.
“டேய்! கைய விடுடா!” என்றான் தீரன்.
“ இனி மேல் அவளை நான் விட முடியாது.” என்று மல்லுக்கட்டினான் யுகித்.
“ ப்ளீஸ் மாமா! சண்டை போட வேண்டாம்.”என்று வெண்ணிலா, தீரனிடம் மன்றாட.
யுகித்திற்கு வந்ததே கோபம்.
“ ஹே! நிலா… அவன் கிட்ட ஏன் கெஞ்சுற.”என்று யுகித்எகிற.
இங்க என்ன நடக்கிறது என்பது போல அவர்களது நண்பர்கள், அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
‘இந்த யுகி கிட்ட எத்தனை முறை சொன்னேன். வெண்ணிலா கல்யாணம் ஆனவ அவக் கிட்ட எந்த வம்பு வச்சுக்காதேன்னு சொன்னா கேட்குறானா! எப்ப பார்த்தாலும் அடுத்தவன் பொண்டாட்டிய நான் எதுவும் பண்ண மாட்டேன், பண்ண மாட்டேன் சொல்லிட்டே இப்படி செஞ்சுட்டானே… பாவம் இனி அவள் வாழ்க்கை என்னாகுமோ?’ என்று கவலைப்பட்டான் ரகுலன்.
எல்லோருமே அங்கு நடப்பதை அச்சத்துடன் பார்க்க.
சண்டை போட்டுக் கொண்டிருந்த இருவர் மட்டும் அச்சம் என்பதை அறியாமல் ஒருவரை, ஒருவர் முறைத்துக் கொண்டிருந்தனர்.
“ப்ளீஸ் மாமா கோபப்படாதீங்க! பாருங்க பாப்பா பயப்படுறா.” என்று அவனது கையில் இருந்து குழந்தையை வாங்கியவள், அவனை அங்கிருந்து இழுத்துக்கொண்டு செல்ல முயல.
அவனோ, “ இன்னொரு முறை வெண்ணிலா பக்கம் வந்த தொலைச்சிடுவேன்!” என்று யுகித்தை எச்சரிக்க .
சட்டை கையை மடக்கி விட்டப்படி,” அவ இனி மேல் என்னோட தான் இருப்பா, உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோடா!” என்றான் யுகித்.
“அவளுக்கும், உனக்கும் என்ன சம்பந்தம்? நீ யாருடா அவளுக்கு … “என்று தீரன் சினத்துடன் வினவ.
“ நான் யாருன்னு தெரியாதா? வெண்ணிலா கிட்ட கேளு. ஹேய் வெண்ணிலா நான் யாருன்னு சொல்றியா? இல்லையாடீ ? “என்று அவளிடம் கத்த .
அவளோ முகம் இறுக அவனைப் பார்த்தவள்,” உங்களுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.” என்று விட்டு தீரனின் கையைப் பிடித்தாள்.
தீரன் கர்வமாக பார்க்க.
அவளை பிடித்து தன் பக்கம் இழுத்தவன்,” கொன்னுடுவேன்! சொல்லுடி, நான் தான் உன் புருஷன்னு எல்லார் கிட்டயும் சொல்லு.” என்று கத்த.
அந்த இடமே ஒரு நிமிடம் அமைதியானது. யாருமே இதை எதிர்பார்க்கவில்லை
எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்க.
தீரன் மட்டும் கடகடவென நகைத்தான்.
“அவளை அம்போன்னு விட்டுட்டு போகும்போது உன் பொண்டாட்டின்னு தெரியலைய இப்ப வந்துட்டான்… இத்தனை வருஷமா அவ எவ்வளவு கஷ்டப்பட்டா எங்களுக்கு தான் தெரியும். இன்னைக்கு பொண்டாட்டின்னு ஈஸியா உரிமை கொண்டாடிகிட்டு வந்து நீ கூப்பிட்டா அவ வந்துருவாளா? அவ உன்ன கடந்து வாழ பழகிட்டா. அவளுக்கு இப்ப குழந்தை இருக்கு.
பட்டுவ விட்டுட்டு வரமாட்டா.” என்றான் தீரன்.
“பட்டுவை விட சொல்லலையே.
அவ எனக்கும் குழந்தை தான். நான் பார்த்துப்பேன்.”
“ ஆஹா! அப்படியா? ஆனா நாளைக்கு உனக்குன்னு ஒரு குழந்தை வந்தால் எப்படி பாத்துப்ப?” என்று எகத்தாளமாக வினவினான் தீரன்.
“எங்களுக்கு எத்தனை குழந்தை பிறந்தாலும், இவ தான் எங்களுடைய முதல் குழந்தை போதுமா?” என்றவாறே அவன் கையில் இருந்து குழந்தையை வாங்க முயன்றான் யுகித்.