தீரனின் கேலி பார்வையில் குழப்பமாக யுகித் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க
வெண்ணிலாவோ கையில் இருந்தக் குழந்தையை அவனிடம் கொடுக்காமல், வெடுக்கென்று அவனைத் தள்ளி விட்டாள்.
இருவரையும் மாறி மாறி பார்க்க. அவனுக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. ‘ இவன் ஏன் இப்படி பார்க்குறான்.’என்று குழம்பிய யுகித், அவனது கேலிப் பார்வையை ஒதுக்கி விட்டு, வெண்ணிலாவிடம் திரும்பினான்.
“நிலா!” என்றழைக்க.
“ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் என்னால உன்னை மன்னிக்க முடியாது யுகி. அப்புறம் எனக்கு பட்டு குட்டி ரொம்ப முக்கியம். இந்த குழந்தை என்னோட குழந்தை இல்லன்னு உனக்கு தெரியும். ஆனால் இது என் கூட பிறந்த அக்காவோட குழந்தை. நான் தான் இந்த குழந்தையை பார்த்துக்கணும். என்னை நம்பி தான் விட்டுட்டு போயிருக்கா. பட்டுக்கு எல்லாமே நான் தான்.
அவளுக்கு நான் அவளோட அம்மா இல்லைங்குற விஷயம் தெரிய வந்துச்சுன்னா அவ தாங்க மாட்ட. அவளுக்கு சின்ன கஷ்டத்தை கூட தர மாட்டேன்.” என்று வெண்ணிலா கூற.
“என் மேல நம்பிக்கை இல்லையா நிலா! நான் நல்லா பார்த்துப்பேன் நிலா!” என்று கெஞ்சினான் யுகித்.
“எப்படி பார்த்துப்பீங்க? நாளைக்கு உங்களுக்குன்னு ஒரு குழந்தை பிறந்ததால் இரண்டு பிள்ளைகளையும் ஓரே மாதிரி பார்ப்பீர்களா? ஏதோ ஒரு சூழ்நிலையில் நமக்கு பிறந்த குழந்தையை அடிச்சா, இல்ல இந்த குழந்தைக்கு நான் அதிகமா சப்போர்ட்டுக்கு வந்தா, ஏன் என்று கேள்வி கேட்க மாட்டீங்க? பெத்தா அம்மாவா இருந்துட்டு உன் பிள்ளையை விட அடுத்த பிள்ளை மேல மட்டும் உனக்கு எப்படி இவ்வளவு பாசம் வருதுன்னு எங்க அத்தையை கேட்ட மாதிரி என்னை கேட்க மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்? அவங்களை மாதிரி அதைத் தாங்கிக்கிற சக்தி எனக்கு கிடையாது. என் பட்டுவை, தீரன் மாமா மாதிரி கஷ்டப்படவும் நான் விடமாட்டேன்.” என்றாள் வெண்ணிலா.
அங்கு மௌனமாக மித்ரா கண்ணீர் விட்டுக் கொண்டிருக்க. அவர் தோளில் கை போட்ட தீரனும் மறுபுறம் அணைத்தவாறு வெண்ணிலாவும் நிற்க.
அவரை ஏக்கமாகப் பார்த்தான் யுகித்.
தீரனோ,” பிரசவத்தில் அக்கா இறந்துட்டாங்கன்னா, அவங்க பிள்ளையை பார்த்துக்கணும் என்பதற்காகவே கல்யாணம் பண்ணி வைப்பதெல்லாம் இருபது, முப்பது வருஷத்துக்கு முன்பு சர்வசாதாரண விசயம்டா.அப்படி பண்ணிக்கிட்டவங்க அந்த குழந்தை மேல உயிரை வைக்க மாட்டாங்களா? இல்ல அவங்களுக்குன்னு ஒரு குழந்தை வந்துட்டா சுயநலமா இருக்கணுமா? அந்த மாதிரி சூழ்நிலையில் அம்மா என்னை வளர்க்கணும்னு விதி போல.
அதனால என் மேல அம்மா பிரியமாக இருந்தாங்க. ஏன் நீயும் தானே என் மேல பிரியமா இருந்த. ஆனா என் அம்மா இவங்க இல்லன்னு தெரிஞ்சதிலிருந்து உனக்கு ஏன் என் மேல அவ்வளவு கோபம் வருது? ஏன் பெத்தா தான் அம்மாவா? வளர்த்தா பாசம் இருக்கக் கூடாதா? அன்றைய சம்பவம் நடக்கிற வரைக்கும் அம்மா நம்ம இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி தானே பாசத்தையும். கண்டிப்பையும் காட்டி வளர்த்தாங்க. நானும், நீயும் ஒன்னா விளையாடி, ஒன்னா சாப்பிட்டு,ஒன்னாவே சுத்துவோமே. ஞாபகம் இருக்கா. அதுல எப்பவாவது வேறுபாடு பார்த்திருக்கியா?”என்று தீரனின் கேள்வி ஒவ்வொன்றும் அவனை சாட்டையடியாக அடித்தது
கண்ணை மூடியவனுக்கு முன் தன் தாய், தந்தையையும் அண்ணனையும் வருத்திய காட்சியெல்லாம் கண் முன்னே வந்தது.
டீனேஜ் வரைக்கும் எல்லோர் வீட்டிலும் நடப்பது போல் தான் தீரனுடன் சண்டை நடக்கும். ஆனால் அந்த வீட்டில் எல்லோரும் எப்பொழுதும் தீரனுக்கே சப்போர்ட் பண்ண,”எல்லாரும் எப்பவும் அண்ணனுக்கே சப்போர்ட் பண்ணுங்க” என்று அடிக்கடி வருத்தப்படுவான் யுகித்.
அவன் செய்கின்ற தவறை, பிடிவாதத்தை உணரவே இல்லை. சிறு பிள்ளை என்று தீரன் விட்டுக்கொடுப்பதை பெற்றவர்கள் அறிந்திருந்ததால் அவர்கள் தீரனுக்கு துணையாக நின்றார்கள்.
எப்போதாவது ஊரிலிருந்து வரும் அவர்களடைய பாட்டியும்,” என் ராசா! வாடா தங்கம்!” என்று தீரனை கொஞ்சுவதை கண்டிருக்கான் யுகி.
அவனுக்கு அதுவும் ஏக்கமாக தான் இருக்கும். ‘எல்லோர் வீட்டிலும் இளைய பிள்ளையை தான் எல்லோரும் கொஞ்சுவாங்க. நம்ம வீட்டில் மட்டும் நம்மள கண்டுக்க மாட்டாங்குறாங்களே.என்ற எண்ணம் எப்போதும் யுகி மனதில் ஓடிக் கொண்டே இருக்கும்.
அன்றைக்கு ஸ்போர்ட்ஸ் விளையாடும் போது , யுகித் வீசிய பால் தவறுதலாக, தீரனின் மண்டையை பதம் பார்த்திருக்க.
“ என்ன? எது?” என்று எதுவும் விசாரிக்காமல்,யுகித்தை திட்ட ஆரம்பித்தனர்.
“அண்ணன் மேல உள்ள கோபத்துல வேணும்னு அடிச்சியா?” என்று மித்ரா அவனது முதுகில் ஒன்று போட.
அவனுக்கோ அழுகை வந்தது. “இல்லமா நான் வேணும்னே அடிக்கலை. தெரியாமல் பட்டுடுச்சு…” என்று யுகி சொல்ல.
அதை யாரும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
இவர்களது பாட்டியோ, “இவன் எப்பவுமே இப்படித்தான் உன்னை பார்த்தாலே இவனுக்கு ஆகாது. உங்க அம்மா உயிரோட இருந்திருந்தால் இப்படி ஒரு அநியாயம் இந்த வீட்டில் நடந்திருக்குமா”.என்று அழ.
அந்த வார்த்தைகளை கேட்ட யுகித்தும், தீரனும் அதிர்ந்தனர்.
நிரஞ்சன் எவ்வளவோ தடுக்க பார்த்தும் முடியவில்லை. அவரது மாமியார் வார்த்தைகளை விட்டிருந்தார்.
“அம்மா! என்னம்மா பண்ற?” என்று மித்ராவும் கத்த.
“ நீயும் உன் மகனுக்குதான் சப்போர்ட் பண்ற. என்ன இருந்தாலும் அவன் உன் அக்கா பையன் தானே. பாரு இன்னும் கொஞ்சம் பலமாக தலையில் அடிப்பட்டு இருந்தால் அவன் உசுருக்கே ஆபத்தாயிருக்கும். இல்ல இனி தீரன் இங்கிருந்த நீங்க எல்லாரும் சேர்ந்து கொன்னாலும் கொன்னுடுவீங்க. நான் எம் பேரன என்னோட கூட்டிகிட்டு போறேன்.” என்று அவர் கூச்சலிட.
அந்த இடமே ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு அமைதியாக இருந்தது.
மித்ராவுக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. ‘பெத்த தாயே என்ன நம்பலையே. இனி பசங்க என்ன நினைப்பாங்க…”என்று எண்ணியாவாறே கண்களில் கண்ணீரோடு பிள்ளைகளை பார்க்க,
‘இவன் நம்ம அண்ணா இல்லையா?’ என்று தீரனை பார்த்து யுகித் இறுகிப் போயிருந்தான்.
“நீங்க! என் அம்மா இல்லையாமா?” என்று ஏக்கத்தில் அழுதவாறு வினவினான் தீரன்.
“ஐயோ! அப்படி எல்லாம் இல்லை. நீ என் பிள்ளை தான். அப்படித்தானே தீரனப்பா… சொல்லுங்க… ஏன் எதுவும் பேசாமல் இருக்கீங்க.” நிரஞ்சனை ஆதரவுக்கு அழைத்தார் மித்ரா.
யுகித்தோ,”அம்மா! உண்மையை சொல்லுங்க. இவன் உங்க வயித்துல பொறக்கலை தானே. என்கூட பிறந்த அண்ணன் இல்லை. அப்படித் தானே.” என்று கூற.
“அப்படி எல்லாம் சொல்லாதேடா” என்று மித்ரா பதற.
“அப்ப இவன் உன் வயித்துல பிறந்தானா சொல்லுமா… சொல்லுமா…” என்று ஹிஸ்டரியா வந்தவன் போல் யுகித் கத்த.
தீரனோ, “அம்மா நான் உங்க பையன் தானே! இல்லன்னு சொல்லாதீங்கம்மா…” என்று கண் கலங்க கூற.
அவளுக்கு அப்படியே உயிரை விட்டுவிடலாமா என்று இருந்தது.
தன் தாயை கோபமாகப் பார்த்தவர், “வந்த காரியம் முடிஞ்சதுல. இத்தன வருஷமா நான் கட்டிக்காத்த உண்மைய சொல்லி என் குடும்பத்தையே அழிச்சிட்டிங்களே! இப்போ சந்தோஷமா?” என்று அவரிடம் கோபமாக பேசினாள் மித்ரா.
அவர் சொன்னதே உண்மையை உணர்த்தி விட, யுகித் ,”அப்ப அவனைப் பாட்டியோட போக சொல்லு மா” என்றான்.
உடனே மித்ரா, “என்னடா விளையாடுறியா நீ ? தீரன் தான் இந்த வீட்டுக்கு மூத்த பையன்.” என்று படபடத்தார்.
“அப்ப நான் போறேன். இனிமே இங்க நான் இருக்க மாட்டேன். நான் எங்கேயாவது ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறேன்.”என்றவன் அதற்குப் பிறகு அவர்களிடம் பேசுவதையே குறைத்து கொண்டான்.
பிளஸ் டூவில் நல்ல மதிப்பெண் வாங்கி இருக்க. கொடைக்கானல் ஹாஸ்டலில் தங்கி கல்லூரியில் படிப்பதற்கு வந்தவன், அதற்குப் பிறகு அவர்களிடம் பேச்சுவார்த்தையே வைத்துக் கொள்ளவில்லை.’அதை எல்லாம் நினைத்துப் பார்த்தவனுக்கு, அம்மாவின் மனநிலை புரிய செய்தது. அறியா வயதில் தான் கொடுத்த தண்டனை எண்ணி குற்ற உணர்ச்சியுடன் நிமிர்ந்தான்.
“என்ன மன்னிச்சிடுங்கமா” என்று தன் தாயை கட்டிப்பிடித்து அழுதான்.
அவருக்கும் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
“யுகித் எங்ககிட்ட மன்னிப்பு கேட்டா மட்டும் பத்தாது. உன் அண்ணன் கிட்ட மன்னிப்பு கேளு” என்று மித்ரா கூற,
“ என்னை மன்னிச்சுடு!” என்று எங்கோ பார்த்து கூறினான் யுகித்.
“இதெல்லாம் ஏத்துக்க முடியாது. என் கண்ண பாத்து சொல்லு. அப்புறம், அண்ணா மன்னிச்சிடுங்க அண்ணான்னு சொல்லு. அப்ப தான் உன்னோட மன்னிப்பை கன்ஸிடர் பண்ண முடியும்.” என்று தீரன் அவனை கேலி பண்ண.
யுகித் கோபத்துடன் அவனை முறைக்க.
”பாருங்க மா! யுகி என்னைப் பார்த்து முறைக்கிறான்.” என்று தன் தாயிடம் குறை சொல்ல,
“ ஏன்டா ! “என்று மித்ரா யுகியை பார்த்தார்.”
“நா முறைக்கவே இல்ல! நீங்க அவனுக்கே சப்போர்ட் பண்ணுங்க.” என்று சிறுவயதில் செய்தது போல சண்டையிட.
அதை ரசித்துக் கொண்டிருந்தார் மித்ரா.
நிலாவையும் பேச்சோடு பேச்சாக இழுக்க.
“அத்தை! உங்க அளவுக்கு எனக்கு பரந்த மனப்பான்மை இல்ல.
என்னால பழசு எதையும் மறக்க முடியாது அத்தை. கல்யாணத்தன்னைக்கு, மணக்கோலத்துல என்ன தவிக்க விட்டுட்டு எங்கோ போனது என் மனசுல ரணமா இருக்கு. என்ன சமாதானம் சொன்னாலும் அது அவ்வளவு ஈஸியா ஆறாது.
அன்னைக்கு நான் என்ன சொல்ல வர்றேன்னு ஒரு நிமிஷம் கூட கேட்க அவருக்கு மனசு இல்லை. என் மனதுப்பட்டபாடு, உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன். இவர் திரும்பி வருவார், இல்லை போனாவது பண்ணுவார்னு காத்திருந்தேனே. என் கனவெல்லாம் கானல் நீராகவல்லவா போயிடுச்சு.” என்று கதறி அழுதாள்.
அவளை ஏதோ சொல்லி சமாதானம் செய்ய முயன்றார் மித்ரா .
அவரை அமைதியாக இருக்குமாறு தீரன் தடுத்து விட்டு,
“இங்க பாரு நிலா! அன்னைக்கு உன்னை பேச விடாம அவன் தப்பு பண்ணான். இன்னைக்கு நீ அதையே தான் செய்யுற. மன்னிக்கிறது தான் மனித இயல்பு. என் தம்பிக்காக சப்போர்ட் செய்கிறேன் நினைக்காதே நான் கமலி அத்தைக்காகவும் சேர்த்து தான் சொல்றேன். பாவம் நிலா அத்தை. நீ அவங்க செஞ்ச தப்பையும் மன்னிக்க மாட்டேன் இருக்க. அவங்க எவ்ளோ கஷ்டப்படுறாங்க தெரியுமா? காசு பணம் இருந்தாலும்,வயசான காலத்துல தனிமையில் இருப்பது எவ்வளவு கொடுமை தெரியுமா? அவங்க செஞ்ச தப்ப மனதார உணர்ந்தாலே போதும். அவங்களை நீ மன்னிச்சுடு நிலா. நீ இன்னும் கொஞ்சம் பக்குவப்படணும்.
நிலா நாங்க அத்தையை பார்த்துட்டு தான் வர்றோம்.
பட்டுவைப் பார்த்து அவ்வளவு வேதனைப்படுறாங்க .என் மேல உனக்கு மரியாதை இருந்துச்சுன்னா நாளைக்கு பங்க்ஷன் முடிச்சிட்டு அம்மா வீட்டுக்கு போய் அவங்களை சமாதானப்படுத்து. அப்புறம் என் தம்பிக்கும் முடிஞ்சா ஒரு சான்ஸ் கொடுக்கலாம் நிலா. அவன் என்ன சொல்ல வராங்குறதையும் கேளு” என்று கூறி விட்டு,
“டேய் தம்பி! அண்ணன் உனக்காக சிபாரிசு பண்ணி இருக்கேன். நிலாவும் எனக்குத் தான் சப்போர்ட் பண்ணுவா. “ என்று கண்சிமிட்ட கோபப்படுவதற்கு பதிலா யுகித்திற்கு புன்னகை தான் வந்தது.