மின்சார பாவை-21

4.9
(9)

மின்சார பாவை-21

வெண்ணிலா வலிக்க வலிக்க அந்த நினைவுகளில் ஆழ்ந்தாள்

 கல்லூரியில் இருந்து எல்லோர் முன்பாக அடித்து இழுத்துச் செல்லும் போது, அழுகையும், ஆத்திரமுமாக வீட்டிற்கு சென்றாள் வெண்ணிலா.

 அவளுக்கு மேலும் அடியாக அக்காவின் இறப்பு, அதைத் தொடர்ந்து குழந்தையையும் கையில் வைத்துக்கொண்டு அவளால் வேறு எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.

ஆனால் யுகித்தை தவிர வேற யாரையும் மணப்பதற்கு பதிலாக உயிரை விடலாம் என்று எண்ணியவளுக்கு அதற்கு கூட வழியில்லாமல் போனது.

கையில் குழந்தை இருக்க, கல்யாணத்துக்கு தலையாட்டுவதை தவிர வேறு வழி இல்லாமல், திருமணத்திற்கு சம்மதம் சொன்னவள், இறுதி முயற்சியாக மாப்பிள்ளையிடம் பேசிப் பார்க்க வேண்டும் என்று எண்ணினாள்.

 ஆனால் அதைப் பற்றி கொஞ்சம் கூட வீட்டில் காண்பித்துக் கொள்ளவில்லை.

 குழந்தைக்காக ஒத்துக் கொள்வதாக தலையாட்டியவள், இன்னொருவருடன் திருமண ஏற்பாடு நடப்பதை தாங்க முடியாமல் தவித்தாள்.

இதற்கு எல்லாம் காரணம் அந்த யுகி தான். ‘அவன் மட்டும் அன்றைக்கு ஃ

நான் பார்ட்டிக்கு வராததுக்கு கோபப்படாமல் இருந்தால் வீட்ல மாட்டி இருக்க மாட்டேன்.

 போன் என் கைல இருந்திருக்கும். அவன் கிட்ட என்னோட சூழ்நிலையை சொல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கும். ‘ என்று தனக்குள் புலம்பியவள், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்க.

குலத்தெய்வ கோவிலே கதியேன்று கிடந்தாள்.

திருமணத்திற்கு முதல் நாள் தீரன், எல்லா ஏற்பாடுகளும் சரியாக இருக்கிறதா என்று கவனிப்பதற்காக வந்தவன், வெண்ணிலா ஏதோ யோசனையுடன் கண்கலங்க கோவிலில் இருப்பதை பார்த்து விட்டு அவள் அருகே சென்றான்.

 கோவிலுக்கு என்பதால் உறவு பெண்ணோடு அனுப்பி இருந்தார் கமலி‌‌.

 அந்தப் பெண்ணோ, மாப்பிள்ளையை பார்த்ததும் வெட்கப்பட்டு கொண்டு, “ நீங்க பேசுங்க. நான் வெளியில வெயிட் பண்றேன்.” என்று சென்று விட.

“நிலா!” என்று மென்மையாக அழைத்தான் தீரன்‌.

திடுக்கிட்டு நிமிர்ந்தவள், அவனைப் பார்த்ததும் பதறி எழ.

“ரிலாக்ஸ் நிலா.” என்றான்.

அவளோ கண்ணீரை அடக்கிக் கொண்டு, அவனைப் பார்த்தாள்.

“என்னாச்சு நிலா? ஏன் அழறீங்க? உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் தானே.” என்று வினவ.

 அவளோ,” ப்ளீஸ் சார் ! நீங்க தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்.” என்று கையெடுத்து கும்பிட்டாள்.

“முதல்ல கையை கீழே போடுங்க. உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்கா? இல்லையா?” என்று வினவ.

“ எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை சார்.” என்று தயக்கத்துடன் கூறினாள் வெண்ணிலா.

“வாட் என்ன சொல்றீங்க நிலா? கல்யாணத்துல விருப்பமான்னு உங்கக் கிட்ட போன்ல எத்தனை முறை கேட்டிருந்தேன்‌.”

“ எங்க அம்மா, அப்பா பக்கத்துல இருந்தாங்க. உங்கக் கிட்ட உண்மையை சொல்ல முடியலை. இப்பவும் என்னால அவங்களை மீற முடியாது. இந்த கல்யாணம் நடந்தாலும் நான் நடைப்பிணமா தான் இருப்பேன். சாகக் கூட முடியாத சூழ்நிலைல இருக்கேன். என்னை நம்பி ஒருத்தி ஒரு ஜீவனை விட்டுட்டு போயிருக்கா.” என்று அழுதுக் கொண்டே கூற.

“ரிலாக்ஸ் வெண்ணிலா! முதல்ல நீங்க என்ன சொல்றீங்கன்னு பொறுமையா சொல்லுங்க. எனக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது.

 உங்களுக்கு என்ன பிரச்சனை?”

“ அது வந்து நான் லவ் பண்றேன். எங்க அம்மா, அப்பா ஒத்துக்கலை. வீட்டை விட்டு போகலாம்னா எங்க அக்கா குழந்தை இருக்கு. நான் தான் பார்த்துக்கணும். அதுவும் இல்லாமல் நான் என் லவ்வரோட பேச முடியாத சூழ்நிலை இருக்கேன். என் ஃபோனையும் வாங்கிட்டாங்க. இப்போ என்னோட நிலைமையை என் யுகா கிட்ட சொல்லக் கூட முடியாமல் தவிக்கிறேன்‌.” என்று வெண்ணிலா அழ.

“ முதல்ல அழுகையை நிறுத்துங்க. யுகானா அவரோட முழு பெயர்?” என்று தீரன் வினவ.

“யுகித்.” என்றாள்‌‌.

“கொடைக்கானல்ல எந்த காலேஜ்ல படிச்ச? யுகித் உன் செட்டா?” என்று பரபரப்பை அடக்கிக் கொண்டு வினவினான் தீரன்.

“இல்லை! யுகித் என்னோட சீனியர்.”

“ யுகித்தைப் பத்தி வேற ஏதாவது தெரியுமா?” என்று கேட்க.

“ அவங்க ஃபேமிலி திண்டுக்கல்ல இருக்குன்னு தெரியும். அவ்வளவு தான். வேற எதுவும் தெரியாது.” என்று கூற.

படபடப்புடன் தனது ஃபோனை எடுத்து, “இவனான்னு பாரு.” என்று யுகித்தின் ஃபோட்டாவை காண்பிக்க.

அதைப் பார்த்தவளுக்கு அழுகை நின்று, வியப்பு ஏற்பட்டது.

“உங்களுக்கு யுகாவைத் தெரியுமா? ப்ளீஸ் யுகா கிட்ட பேசணும். ஒரே ஒரு தடவை பேசணும். ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க. உங்க ஃபோனை தர்றீங்களா?” என்று வெண்ணிலா கெஞ்சினாள்.

“ஏன் உங்கக் கிட்ட போன் இல்லையா ?”

“இல்லை! என் ஃபோனை பிடுங்கி வச்சுக்கிட்டாங்க.”

“ வேற யார் கிட்டேயாவது ஃபோனை வாங்கி பேச வேண்டியது தானே.” என்று எரிச்சலுடன் தீரன் கூற.

“ எனக்கு நம்பர் தெரியாது.” என்று தலை குனிந்தாள் வெண்ணிலா.

“ஓ காட்! இப்ப போன்லயே கால் பண்றதால நம்பரை தெரிஞ்சு வச்சுக்காமல் இருக்குறாங்க.

இப்போ பாருங்க, ஆத்திர, அவசரத்துக்கு நம்பர் தெரியாமல் அவஸ்தைப்பட்டுட்டு இருக்கீங்க.” என்றவன், ஃபோனை எடுத்து தன் தந்தைக்கு அழைத்தான்.

“ அப்பா யுகி கல்யாணத்துக்கு வரேன்னு சொன்னானா?” என்று வினவினான்.

யுகித் அவர் ஒருவரிடம் மட்டும் தான் அரைகுறையாக பேசுவான்.

“கல்யாண வேலையை பார்க்கணும்

கண்டிப்பா இரண்டு நாளைக்கு முன்னாடி வரணும்னு சொல்லியிருந்தேன். ஆனால் அவன் இப்போ தான் கிளம்பி வந்துட்டு இருக்கானாம். லொகேஷன் கேட்டான். அனுப்பி விட்டுருக்கேன். வந்துடுவான். பாவம் உனக்குத் தான் அலைச்சல். எல்லாத்துக்கும் நீயே போற மாதிரி இருக்கு.” என்று அவர் புலம்ப.

“அப்பா! அவனப் பத்தி தான் தெரியும்ல. பரவால்ல விடுங்க.” என்றவன் யோசனையானான்.

“சார்! யுகா வரானா?” என்று விழிகளில் சிறு புள்ளியாக நம்பிக்கை தெரிய வினவினாள் வெண்ணிலா.

 அவளை ஆதுரமாக பார்த்த தீரனோ,

இங்க பாரு நிலா! யுகி என் தம்பி தான்.”என்றுக் கூற.

“ என்னது யுகாவோட அண்ணனா நீங்க. அவருக்கு ஒரு தங்கச்சி மட்டும் தான் இருக்குறதா சொன்னார்.” என்று கூற.

 அவளை வலியுடன் பார்த்தவனோ,” அப்பா ஒன்னு. அம்மா வேற, வேற. நான் அவனை என் கூட பொறந்த தம்பியா தான் நினைக்கிறேன். அவனுக்கு என் மேல கொஞ்சம் கோபம். அதெல்லாம் விடு வெண்ணிலா. உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறது என்னோட பொறுப்பு. நீ அழுறதை நிறுத்திட்டு சந்தோஷமா இரு.” என்ற தீரனை, குற்ற உணர்வோடு பார்த்தவளோ,”சாரி சார்! உங்கள வேற கல்யாணம் வரைக்கும் இழுத்துட்டு வந்துட்டேன்.” என்றுக் கூற.

“அதனால ஒன்னும் பிரச்சனை இல்ல. நான் கல்யாணத்துக்கு முன்னாடி எந்த எதிர்பார்ப்பும் வச்சுக்க கூடாதுன்னு நினைச்சிருக்கேன். சோ நோ இஸ்யூஸ். ஆனால் இதுவே வேற யாராவது மாப்பிள்ளையா வந்திருந்தா எவ்வளவு பெரிய பிரச்சினையா இருந்திருக்கும். காதலிச்சவங்க ஒன்னு கல்யாணம் பண்ணிக்கணும். இல்லையா வேண்டான்னு முடிவு பண்ணிட்டு நம்பிக்கையோடு அடுத்தவனுக்கு கழுத்தை நீட்டனும்.

 சூழ்நிலைக்காக நீங்க சரின்னு சொல்லிட்டு கடைசி நேரத்துல கல்யாணம் வேணாம்னா அவங்களோட நிலைமையை யோசிச்சு பாத்தீங்களா? வேணான்னு சொல்றதுக்கும் ஒரு நேரம் இருக்கு. புடிக்கும் பிடிக்கல என்றது தைரியமா சொல்லி இருக்கலாம். கல்யாணம் மட்டுமே வாழ்க்கை இல்லையே.

குழந்தையை வச்சிட்டு தனியா பாத்துக்குறேன்னு உங்க அம்மாகிட்ட சொல்லி இருக்கலாம். சரி விடுமா. இனியாவது தைரியமா இருக்கணும் புரியுதா? இதுக்கு அப்புறம் தான் இன்னும் நிறைய பிரச்சனைகள் வரும்.” என்று பூடகமாக தீரன் கூற.

“என்ன சொல்றீங்க சார்?” என்று பயத்துடன் வினவினாள் வெண்ணிலா.

“முதல்ல சார்னு கூப்பிடுறதை நிறுத்து. உன் வீட்டுக்காரரோட அண்ணன் தானே. அதனால மாமான்னே கூப்பிடு‌.” என்றுக் கூற.

 நன்றியுடன் அவனைப் பார்த்தவளோ, “என்ன சொல்றீங்க மாமா. எனக்கு ஒன்னும் புரியல.”

“ உனக்கும், யுகிக்கும் கல்யாணம் நடந்தாலும், சின்ன சின்ன பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்கு

 நான் உன்னை விட்டுக்கொடுத்தேங்குறதை அவனால ஜீரணிக்க முடியாது. சோ கோபப்படுவான். கொஞ்சம் பொறுத்துக்கோ. ஏதோ சின்ன வயசுல காயப்பட்டு இருக்கான். அது மாற கொஞ்ச நாளாகும்.” என்று தீரன் கூற.

‘எப்படியோ யுகியுடன் திருமணம் ஆனாலே போதும்.’என்று நினைத்தாள் வெண்ணிலா.

ஆனால் யுகித்தின் கோபத்தால், உயிர் போகும் வலியை அனுபவிக்கப் போவதை அப்பொழுது அவள் அறியவில்லை.

மண மேடையில் கல்யாண பொண்ணாக வந்த வெண்ணிலாவை பார்த்து யுகித் அதிர்ச்சியில் இருக்க‌.

அவளோ யாரையும் கண்டு கொள்ளாமல் வேகமாக ஓடி வந்து அவனை அனைத்து, “ யுகா!”என்று அழுது கரைந்தாள்.

 அங்கு நடப்பதைப் பார்த்த இரு வீட்டுபெரியவர்களும் அதிர்ச்சியில் சமைந்து நிற்க.

 தீரன் தான் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புவதை கூறினான்.

அங்கிருந்த உறவினர்களோ தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்.

“என்ன தீரா சொல்ற?” என்று மித்ரா கண் கலங்க.

“ஆமாம் மா! வெண்ணிலா தம்பி விரும்புன பொண்ணுமா. அவங்க ரெண்டு பேருக்கும் இதே மேடைல கல்யாணம் பண்ணி வச்சிடுங்க. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. பொறுமையா நீங்க எனக்கு நல்ல பொண்ணா பாருங்க.” என்று தீரன் கூற.

 அதை எல்லாம் கேட்ட யுகித்திற்கு வேப்பங்காயா கசந்தது.

 ‘கல்யாணம் முடியும் வரை அமைதியாக இருக்க வேண்டும்.’ என்று எண்ணியவன் பொறுமையாக இருக்க‌.

 கமலிக்கும், முகுந்தனுக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை.

நல்ல குடும்பம் என்று பார்த்த குடும்பத்துக்கே தான் தன் மகள் போக போகிறாள். பிறகென்ன அவள் விரும்பியவனையே கல்யாணம் செய்துக் கொள்ளட்டும்

 என்ற எண்ணி அமைதியாக இருக்க.

யுகித் வெண்ணிலாவின் கழுத்தில் தாலி கட்டினான்.

வெண்ணிலாவின் கண்களில் இருந்து நீர் வழிந்தது.

வெண்ணிலாவிற்கு நடப்பதெல்லாம் கனவு போல இருந்தது. இருந்தாலும் யுகித்தை கரம் பிடித்ததில் சற்று ஆசுவாசமடைந்தாள்.

ஆனால் யுகித் அடுத்து செய்ததைப் பார்த்து அதிர்ந்துப் போனாள் வெண்ணிலா.

கழுத்தில் இருந்த மாலையை அவிழ்த்து வீசியவன், அவளையும் எடுத்து வைக்க சொல்லி விட்டு, “ வா போகலாம்!” என்றழைத்தான்.

“என்ன சொல்ற யுகா?” என்று வெண்ணிலா புரியாமல் பார்க்க.

“ நமக்கு யாரும் வேண்டாம் நிலா. என்னை நம்பி என்‌ கூட வா. நான் உன்னை நல்லா பாத்துக்கிறேன். எக்ஸாம் முடிஞ்சதும் வேலைல ஜாயின் பண்ணிடலாம்.

வெளிநாட்டில வேலை இருந்தா என் ஃப்ரெண்ட்ஸ் சர்குள்லயும் சொல்லி வச்சிருக்கேன். கிடைச்சிரும். நம்ம போய் அங்க செட்டில் ஆயிடலாம்‌.” என்று அவனது நீண்ட நாள் கனவைக் கூற.

“அது வந்து…” என்று வெண்ணிலா எதோ கூற முயன்றாள்‌.

“எதுவும் பேசாத நிலா! ஏற்கனவே டென்ஷனா இருக்கேன். உன்னால என்னோட வர முடியுமா? முடியாதா?”என்று கோபத்துடன் வினவ.

தீரனை தயக்கத்துடன் பார்த்தாள் வெண்ணிலா.

அவன் சொன்னது இப்பொழுது தான் அவளுக்கு முழுமையாக புரிந்தது.

 அவனும் கண் மூடி திறந்து அமைதியாக இருக்கும் படி செய்கை செய்தான்.

 அதை பார்த்த யுகித்திற்கு கோபம் வந்தது.

“ நான் இங்க உன் கிட்ட கேட்டுட்டு இருக்கேன். நீ என்ன அங்க பாத்துட்டு இருக்க? அவன் சொன்ன தான் என் கூட வருவியா?” என்று கோபத்தில் யுகித் குதிக்க.

“ஒரு நிமிஷம் நான் என்ன சொல்ல வர்றேன்னு கேளேன் யுகி.” என்று வெண்ணிலா மன்றாடினாள்.

வெண்ணிலா அவன் கூப்பிட்டதும் வராமல், பேச முயற்சிப்பதே அவனுக்கு தன்மானத்தை சீண்டிப் பார்ப்பதாக தோன்றியது.

“ கடைசியிலே நீயும் என்னை நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்ட இல்லை. நான் கூப்பிட்டா எங்க வேணாலும் வருவேன் சொன்னதெல்லாம் சும்மா தானே. என்ன விட உனக்கும் இவங்கதான் முக்கியமா போயிருச்சு இல்ல.”என்று கசப்புடன் கூறினான் யுகித்.

 “ ப்ளீஸ் யுகா! நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளு.” என்று அவள் குழந்தையை பற்றி கூற முயற்சிக்க.

 அவனோ அதற்கு வாய்ப்பே தராமல் கொதி நிலையில் இருந்தான்.

“உணமையிலே உனக்கு என் மேல அன்பே இல்ல நிலா. நான் மட்டும் இங்கே வராமல் போயிருந்தா, நீ உன் லைஃபை பார்த்துட்டு மூவ் ஆன் ஆகிருப்ப.

உனக்கு நான் முக்கியமா இருந்தா இப்படி மணமேடையில் வந்து நிப்பியா? இப்பவும் அவனை பார்க்கிற,அவன் என்ன சொல்லுவான்னு யோசிக்கிற. ஆனால் நான் கூப்பிட்டா மட்டும் என் கூட வர யோசிக்குற.” என்று வார்த்தைகளை தீக்கங்குகளாக தெறிக்க விட்டான் யுகித்.

அவன் பேச்சைக் கேட்டு அதிர்ச்சியில் சமைந்து நின்றாள் வெண்ணிலா. ‘என்னுடைய யுகாவா இப்படி எல்லாம் பேசுறான்.’என்று இருக்கா அவளுடைய அமைதி அவள் திகைத்து இருக்க.

அவனுக்கோ அவளது அமைதி இன்னும் கோபத்தை உண்டு பண்ணியது.

 எல்லோரையும் வெறுப்புடன் பார்த்தவன் அங்கிருந்து சென்று விட்டான்.

 வெண்ணிலாவோ அழக் கூட திராணியற்று நிற்க.

கமலி,” நிலாமா!” என்று தோளைத் தொட்டார்.

 விடுக்கென்று தள்ளி விட்ட வெண்ணிலா,” இப்ப சந்தோஷமா அம்மா. நீங்க பார்த்த குடும்பம் தான். நல்ல குடும்பம் சொன்னீங்க. ஆனா நான் லவ் பண்ண பையனைப் பத்தி மட்டும் விசாரிக்க கூட இல்ல. அப்படி விசாரிச்சு இருந்தீங்கன்னா, சம்மதம் சொல்லி இருப்பீங்க.இல்லை! இல்லை! அப்பவும் உங்களுக்கு, உங்க ஈகோ தான் முக்கியம்னு எங்க கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிருக்க மாட்டீங்க. உங்களுக்கு உங்க பொண்ணோட வாழ்க்கையை விட, உங்க ஈகோ தானே முக்கியம்.

இதோ கல்யாணம் அன்னைக்கே நான் தனி மரமா நிற்கிறேன் சந்தோஷப்பட்டுக்கோங்க. ஒருத்தி தான் போய் சேர்ந்துட்டா. நானும் இப்படி இருக்கேன்.” என்று கதறி அழ.

அங்கிருந்த எல்லோருக்கும் அவளை நினைத்து நெஞ்சில் ரத்தம் கசிந்தது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!