வண்ணாத்துப் பூச்சிகள் சிறகடித்து வண்டுகளின் தோழமையுடன் பூக்களிடம் அங்கும் இங்கும் அசைந்தாடி கதை பேசும் பூங்காவில், இவை அனைத்தையும் ரசிக்கும் எண்ணமே இல்லாமல் தனிமையில் துருவேந்திரன் என்கின்ற துருவன் கடும் கோபத்துடன் வேகமாக நடைபயின்று கொண்டு இருந்தான்.
‘20 நிமிடங்களுக்கு மேலாக அவளுக்காக காத்திருந்தாயிற்று இன்னும் அவள் வரவில்லை எங்குதான் போனாலோ தெரியவில்லை புல் ஷீட்..’ என்று மனதிற்குள் அவளுக்கான அர்ச்சனைகளை பொழிந்து கொண்டிருந்தான்.
20 நிமிடங்கள் கழித்து அவனது கனல் கக்கும் கோபத்திற்கான சொந்தக்காரி ஆறுதலாக நடந்து வந்து அவன் முன் நின்றாள்.
“ரேகா உனக்கு எத்தனை தடவை கால் பண்றது..?” என்று அவள் அருகில் வந்தவுடன் அவனது வார்த்தைகள் குத்தீட்டியாக அவள் முன் போய் நின்றது.
அவ்வளவு பற்களையும் வெளியே காட்டியவாறு, “சாரி துருவன் நான் இம்போர்ட்டண்ட் மீட்டிங்ல இருந்ததால கால் அட்டென்ட் பண்ண முடியல..” என்று கூறி அசடு வழிந்தாள்.
அவளது சிரிப்பு அவனுக்கு மேலும் எரிச்சலைக் கூட்ட,
“மீட்டிங் முடிஞ்சதும் கால் அட்டென்ட் பண்ணி இருக்கலாம் தானே..!” என்று அவன் விடாப்படியாக அவளுடன் சண்டைக்கு நிற்க,
“ஓகே கூல்.. மீட்டிங்கே கால்ல தான் நடந்துகிட்டு இருந்துச்சு ஒரு கான்பிரன்ஸ் மீட்டிங் போய்கிட்டு இருந்துச்சு அதனால உங்க கால அட்டென்ட் பண்ண முடியல கார்ல பார்குக்கு வந்து கொண்டிருக்கும் போது தான் மீட்டிங்கு ஸ்டார்ட் ஆச்சு.. வந்து சேர்ந்ததும் மீட்டிங் முடிஞ்சிருச்சு.. அப்படியே நேரா உங்கள பார்க்க வந்துட்டேன்..” என்று கூறி அருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு காலை ஆட்டிக்கொண்டு கூறினாள்.
ஏனோ தெரியவில்லை அவளது திமிரான செயலும், பேச்சும் அவனுக்கு மேலும் கோபத்தையே தூண்டி விட்டது. இருந்தும் அதை நீ அடக்கி கொண்டு, தனக்கான காரியம் ஆகும் வரை பொறுமை காத்தவன்,
“இந்த 20 மினிட்ஸ் எனக்கு எவ்வளவு லாஸ் தெரியுமா..? நாலு மீட்டிங்க கேன்சல் பண்ணிட்டு தான் நான் வந்து இருக்கேன்.. முக்கியமான விஷயம் என்ற படியா தான் நேர்ல பேசணும் என்று வந்தேன் இல்லன்னா நான் வந்திருக்கவே மாட்டேன்.. அப்படி என்ன போன் பண்ணி பேச முடியாத முக்கியமான விஷயம்..”
அவன் விடாமல் அந்த நேர தாமதத்திலேயே நிற்க அவளுக்கு தலையே வெடித்து விடும் போல இருந்தது. எப்படி இவனை சமாளிப்பது என்று புரியாமல்,
“சாரி துருவன்..” என்றதும் மேலிருந்து கீழாக வெறுப்புடன் பார்த்தான் நமது நாயகன். அவ்வளவு சீக்கிரம் அவளை விட்டு விடுவானா..? அவள் மன்னிப்பு கேட்டும் காதில் கேளாதவன் போல் நேராக விடயத்திற்கு வந்தான்,
“என்ன அவசரமா பேசணும்னு சொன்னே.. சீக்கிரமா சொல்லு..” என்று சிடுசிடுத்துக் கொண்டு வந்தது துருவனின் வார்த்தைகள்.
“அது வந்து துருவன் நீங்க பிசினஸ்ல எப்படி உயரத்துல இருக்கீங்களோ அதே மாதிரி தான் நானும் இருக்கேன் ஏன் நாம ரெண்டு பேரும் கல்யாணம் கட்டிக்கக் கூடாது நம்மட பிசினஸுக்கும் நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் ஹெல்ப் பண்ணிக்கொள்ளலாம்…
எனக்கும் பாக்குறாங்க யாரோ தெரியாதவரை கட்டிக்கிறத விட பிசினஸ்ல என்னோட நண்பனா இருக்குற உங்களை கல்யாணம் பண்ணிக்கிறது நான் ரொம்ப ஹாப்பியா பீல் பண்றேன்..
ஏன்னா என்னோட ஸ்டேட்டஸ்க்கு இந்த மும்பையிலேயே ஏற்றவர் நீங்க ஒருத்தர் மட்டும் தான் என்று நான் நினைக்கிறேன் இதுல உங்களோட ஒப்பினியன் என்னன்னு சொன்னீங்கன்னா…?” என்று அவள் அவனது கண்ணை நேராகப் பார்த்து எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் சொல்ல,
அவளுக்கு எதிரே உள்ள பெஞ்சில் அமர்ந்து அவளைப் போல கால் மேல் கால் போட்டு காலை ஆட்டியாபடி சிறிது நேரம் சிந்தித்தான்.
அவன் சிந்திப்பதை பார்த்து ரேகா, “எனக்கு ஓகே உங்களுக்கு ஓகேன்னா உங்க வீட்ட பேசிட்டு சொல்லுங்க.. இல்லன்னா…” என்று இழுக்க,
“வெயிட் ரேகா.. நீ சொல்ற மாதிரி உடனே இந்த விஷயத்துக்கு நான் முடிவு எடுக்க முடியாது.. எங்க வீட்ட அப்பா, அம்மா இரண்டு பேருகிட்டையும் பேசணும் அம்மாட்ட ஃபர்ஸ்ட் விஷயத்தை சொல்லிட்டு… நான் உனக்கு கால் பண்றேன்… நீ உங்க வீட்ட..?” என்று துருவன் கேட்க,
“எங்க வீட்டை நான் எதுவுமே சொல்ல வேண்டிய தேவை இல்லை. என் வீட்டில் எல்லாமே என்னுடைய இஷ்டம் தான்.. என்னுடைய இஷ்டத்துக்கு மறுபேச்சு கிடையாது.. நான் எது செய்தாலும்.. யாரும் என்னை எதிர்த்து கேள்வி கேட்க மாட்டாங்க.. வீட்ட என்னோட முடிவுக்குத்தான் இம்போர்டன்ஸ் அதிகம்…” என்று சற்றுத் திமிராகக் கூறினாள்.
“சரி அவ்வளவு தானே நான் கிளம்புறேன்..” என்று துருவன் இருக்கையில் இருந்து எழுந்திட,
“ஓகே.. அப்போ கல்யாணத்தை இந்த மாசமே வெச்சுக்கலாமா..?” என்று மயக்கும் புன்னகையில் அவள் கேட்க,
“நான் என்னோட அம்மாகிட்ட பேசிட்டு உனக்கு பதில் சொல்றேன்..”
“ஓகே துருவன்..”
“ஓகே பாய்.. எனக்கு இம்போர்ட்டண்ட் மீட்டிங் இருக்கு நான் கிளம்புறேன்..” என்று துருவேந்திரன் செல்ல அவன் செல்லும் பாதையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் ரேகா.
அவளது பார்வையில் அவ்வளவு வஞ்சகம், பொறாமை அனைத்தும் நீ நானென்று போட்டி போட்டுக் கொண்டு நின்றது. என்னோட பிசினஸையே முடக்கப் பாக்குறியா..? உன்ன நாலு சுவத்துக்குள்ள நான் முடக்கி போடுறனா இல்லையா என்று பாருடா.. என்னையா பிசினஸ்ல தோற்கடிக்க பாக்குற உன்னை என் பின்னால நான் நாய்க்குட்டி மாதிரி அலைய விடேல்ல… என் பேரு ரேகா இல்லைடா..’ என்று மனதிற்குள் கருவிக்கொண்டாள்.
காரில் ஏறி திரும்பி ரேகாவை பார்த்து பின்பு தலை அசைத்து விட்டு காரை வேகமாக எடுத்துக்கொண்டு புறப்பட்ட துருவன்,
நீயெல்லாம் என் கால் தூசிக்கு வருவியாடி என்னோட போட்டி போடுறியா..
உன்கிட்ட இருந்து உன்னோட பிசினஸ் சாம்ராஜ்யத்தைப் புடுங்கி எடுத்துட்டு உன்னைய என் காலுக்கு கீழே வச்சு மிதிக்கல.. என் பேரு துருவேந்திரன் இல்லடி..” என்று அவனும் கருவிக்கொண்டான்.
இருவரின் எண்ணங்களும் ஒவ்வொரு திசையில் ஒருவரை ஒருவர் வீழ்த்தி அதில் இன்பம் காணவே சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் வாழ்க்கை பயணத்தில் விதி எங்கே எதனை கொண்டு முடித்து போடும் என்று யாருக்கும் தெரியாது. பொறுத்திருந்து பார்ப்போம்.
மும்பையில பட்டி தொட்டி தொடக்கம் அனைத்து இடங்களிலும் பிசினஸில் முடி சூடா மன்னனாக விளங்குபவன் நமது நாயகன் துருவேந்திரன்.
குறிப்பிட்ட காலத்திற்குள் கல்லூரி படிப்பை முடித்த பின்பு தந்தையின் பிசினஸை கையில் எடுத்தவன் துரிதமாக மூன்றே வருடங்களில் வெற்றிக் கொடியை நாட்டி விட்டான் என்றே சொல்லலாம்.
மும்பையில் துருவேந்திரனின் பிசினஸ் இல்லாத இடமே இல்லை. அனைத்து மூலை முடுக்குகளிலும் கொடி கட்டி பறக்கின்றது.
அவன் கால் வைக்கும் இடத்தில் எல்லாம் எப்பொழுதும் வெற்றி கொடி நாட்டி விட்டு தான் திரும்புவான்..
சில நாட்களாகவே ரேகா அவனது வழியில் குறுக்கிட்டு ஒவ்வொன்றாக அவனது பிசினஸில் மூக்கை நுழைத்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு ஒரு முடிவு கட்ட அவனுக்கு இது ஒரு பெரும் வாய்ப்பாக விளங்கியது. இந்த கல்யாணத்தை வைத்து அவளை இந்த பிசினஸ் சாம்ராஜ்யத்தில் இருந்து தவிடு பொடி ஆக்கி விடலாம் என்று எண்ணத்திலேயே அவன் இந்த கல்யாணத்திற்கு ஆம் என்றும் கூறவில்லை ஆனால் இல்லை என்று மறுவார்த்தை பேசாமல் அவளது கொட்டத்தை அடக்க முடிவு செய்தான்.
ரேகா ஓரளவு அழகுதான் என்ன இருந்தாலும் அவளது அழகை விட திமிர் கூடுதலாக காணப்படுவதால் அவனுக்கு பெரிதாக அவள் மீது பிடித்தம் ஒன்றும் இல்லை.
அவன் முதன் முதலாக தந்தை வெளிநாட்டிகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி செய்த தொழிலை விரிவாக்கி இப்பொழுது தமிழ்நாடு தொடக்கம் அனைத்து இடங்களிலும் அவன் ஏற்றுமதி இறக்குமதியை செய்து அத்துடன் துணி வியாபாரம் தொடக்கம் நகைக்கடை வரை அனைத்து தொழில்களிலும் கடந்த மூன்று வருடத்திற்குள் விரிவாக்கம் செய்துள்ளான்.
துருவன் மிகவும் ஒழுக்கமானவன். எப்பொழுதும் நேர தாமதம் என்பது அவனது பிசினஸில் தோல்வியை நாடிச் செல்லும் ஒரு விடயமாக கருதிக் கொள்பவன். நேர முகாமைத்துவம் என்பது அவனது இரத்தத்தில் ஊறிய விடயமாகும்.
அப்படி அவனது கம்பெனியில் யாராவது நேர தாமதமாக வந்தால் கூட அவர்களுக்கு உரிய தண்டனை கொடுத்து விட்டு தான் அடுத்த வேலையைப் பார்ப்பான்.
அதற்காக நேர்மையானவன் என்றெல்லாம் சொல்லி விட முடியாது. தனது தொழில் சாம்ராஜ்யத்தில் வெற்றி கொடி நாட்ட வேண்டும் என்றால் எந்த எல்லைக்கும் செல்வான். அதற்காக எதையும் செய்வான்.
அவனுக்கு எப்பொழுதும் சுயமரியாதை தான் முக்கியம்.
தனது சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும் பட்சத்தில் மிகவும் கொடூரனாக மாறிவிடுவான். அந்த வகையில் இவள் செய்வதற்கெல்லாம் தலையாட்டி கொண்டிருக்கின்றான் அவனது திட்டம் வேறு..
ரேகாவை பற்றி எண்ணியப்படியே வீடு வந்து சேர்ந்த துருவேந்திரன் நேராக சமையலறைக்குள் சென்று தனது அன்னை வைதேகியை பின்னிருந்து அணைத்துக் கொண்டான்
“அம்மா இன்னைக்கு என்ன ஸ்பெஷல்..?”
அவனது அனைப்பிலேயே தனது மகன் தான் என்று அறிந்த அன்னை,
“என்ன அதிசயம்.. மூன்று நாட்கள் கழித்து வீட்டு ஞாபகம் இப்போ தான் வந்ததா..? நீ இன்னைக்கு வருவேன்னு என் மனசு சொல்லுச்சு அதனாலதான் உனக்கு பிடிக்கும் என்று கோதுமை அல்வா செய்திருக்கேன் வா டீ குடித்துக்கொண்டு சாப்பிடுவோம்… நாம சேர்ந்து டீ குடிச்சு ரொம்ப நாள் ஆகுற மாதிரி இருக்கு..” என்று அவனை அழைத்துக் கொண்டு ஹாலிக்குச் சென்றார்.
“வாவ்.. என் செல்ல அம்மா.. வாங்க.. நான் ஒரு விஷயம் உங்ககிட்ட பேசணும்..” என்று அவனும் கூடவே
“அம்மா.. அது இல்லம்மா..” என்று அவன் சற்று கோபமாகக் கூற,
“அது இல்லையா அப்போ சென்னையில புதுசா ஒரு வீடு வாங்கணும் என்று சொன்னேனே அதுவா.. நான் எப்போ சொன்னது டா மறந்தே போச்சு நீ வாங்கிட்டியா? ஞாபகம் வச்சு வாங்கிட்டியே..! என்னோட அச்சா பையன்..” என்று கன்னம் கிள்ளிக் கொஞ்சினார்.
“அது இல்லம்மா.. அதுதான் அம்மா கல்யாண விஷயமா..?” என்று இழுக்க,
“உங்க அப்பாவ கட்டிட்டு படுற பாடு போதாதா எனக்கு எதுக்குடா இந்த வயசுல இன்னொரு கல்யாணம்..” என்று கூறிவிட்டு நமட்டு சிரிப்பு சிரித்தார்.
“வர வர உங்களோட காமெடி தாங்க முடியல..” என்றவன் முறைத்துக் கொண்டு கூற வைதேகி சிரித்தே விட்டார்.
“இப்போதான் புரோக்கர் கிட்ட பேசினேன்.. புரோக்கர் அண்ணா 20 போட்டோ எடுத்துட்டு வந்தாங்க அதுல எனக்கு இந்த எட்டு பொண்ணுங்க தான் புடிச்சி இருந்துச்சு அவங்கட போட்டோவ எடுத்து வச்சிருக்கேன் நீ பார்த்துட்டு அதுல எது நல்லா இருக்குன்னு சொன்னா.. சரி வரும்போது கல்யாணத்தை வெச்சுக்கலாம்..” என்று வேகமாக பையன் கல்யாணத்துக்கு ஒத்துக்கொண்ட சந்தோஷத்தில் வைதேகி கூறி முடித்தார்.
“அம்மா… அம்மா.. கொஞ்சம் பொறுங்க நான் இன்னும் சொல்லி முடிக்கல..” என்று வைதேகி பேச்சினை தடை செய்ய,
துருவனை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு,
“என்னடா லவ்வு கிவ்வுண்ணு பொண்ணு ஏதாவது..?” என்று கேட்க,
“இல்லம்மா இல்ல.. அதுக்கு எல்லாம் சான்ஸ்சே இல்ல.. உங்க பிள்ளையப் பத்தி உங்களுக்கு தெரியாதா..?” என்று கூற,
“பிசினஸ் சம்பந்தமா தெரிஞ்ச பொண்ணுமா.. பெயர் ரேகா.. அவளும் பிசினஸ் செய்து கொண்டிருக்கின்றாள்.. அவங்களும் பெரிய கோடீஸ்வரர் தான்.. அவள் தான் ஃபர்ஸ்ட் வந்து மேரேஜ் பற்றி என்னோட பேசினாள்…”
“அதுக்கு நீ என்ன சொன்ன..?” என்று வேகமாக வைதேகியின் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவந்தன.
“அம்மா நான் தான் உங்க செல்லப் பிள்ளையா ஆயிட்டே எங்கட வீட்ட கதைச்சுட்டு என்னன்னு சொல்றேன்னு சொன்னேன்..”
“என்னடா இது பிசினஸ் டீல் பேசுற மாதிரி பேசிட்டு வந்திருக்க கல்யாணம் பண்றதுன்னா சும்மாவா ரெண்டு வீட்டு பெரியவங்கள்ட்டையும் சம்மதம் கேட்டு தான் முடிவு பண்ணனும் நாள், நட்சத்திரம் பார்த்து தான் சம்பந்தம் பேசணும்..” என்று சிடு சிடுத்தார் வைதேகி.
“அம்மா அதுக்கு எல்லாம் டைம் இல்லமா இந்த மாதமே கல்யாணத்து சிம்பிளா வச்சுப்போம்..”
“ஏதோ மார்க்கெட்ல மீனுக்கு விலை பேசிட்டு வார மாதிரி நீ அந்தப் பொண்ணோட பேசிட்டு வந்துட்டு.. எப்படிடா இந்த மாசமே கல்யாணம் வைக்கிறது..”
“அம்மா எனக்கு இதைப் பற்றி ஒன்னும் தெரியாது நான் வேணும்னா பொண்ண கூட்டிட்டு வாரேன்.. நீங்க நேர்ல பாருங்க பார்த்து பேசுங்க பேசினதுக்கு அப்புறம் ஒரு நாளா பார்த்து கல்யாணத்துக்கு பிக்ஸ் பண்ணிடுவோம்..”
“ஓகே.. நான் பொண்ண நேர்ல பாத்துட்டு சொல்றேன்.. ஆனா எனக்கு பிடிக்கலன்னா..?”
“மா எனக்கு கல்யாணமே வேணா இதோட இந்த பேச்சை நிப்பாட்டுங்க..” என்று இருக்கையில் இருந்து எழுந்திரிக்க
“ஓகே.. ஓகே.. நீ அந்தப் பெண்ணையே மேரேஜ் பண்ணிக்கோ.. ஆனா நான் அந்த பொண்ண ஒரு தடவை நேரில் சந்திக்கணும்..”
“ஓகே மா..” என்று அலைபேசியில் எதனையோ ஆராய்ந்து படி எழுந்தான்.
“எங்கடா இப்போதானே வந்த.. அதுக்குள்ள எங்கடா கிளம்புற..?” என்று முகம் சுளிக்க,
“அம்மா ஒரு இம்போர்ட்டண்ட் மீட்டிங் மா இதோ வந்துடறேன்.. நாளைக்கு மார்னிங் ரேகாவ வீட்டுக்கு வர சொல்றேன்..” என்று கூறிவிட்டு வேகமாக வீட்டை விட்டு வெளியேறினான்.
அவன் வேகமாக செல்லும் பாதையை பார்த்தபடி வைதேகி ஆழ்ந்த சிந்தனையில் சிக்குண்டு போனார்.
அன்பின் சிகரமான அன்னையின் கவலைகள் வரப்போகும் மருமகளால் குறையுமா..? அல்லது பல மடங்கு அதிகரிக்குமா..?