அரண் 15
ஆதவன் தனது ஆட்சியை உலகம் முழுவதும் நிலைநாட்டி தனது பொற்கரங்களை பூமித்தாயின் மீது அரவணைத்த வண்ணம் வியாபித்து உலாவும் அந்த அதிகாலைப் பொழுதில் துயில் நீங்கி, சோம்பல் முறித்த வண்ணம் அற்புதவள்ளி சோபாவில் இருந்து எழுந்தாள்.
எழுந்ததும் சில வினாடிகள் தான் எங்கே இருக்கின்றோம் என்று புரியாமல் தடுமாற,
பின்பே இரவு நடந்த அனைத்தையும் சிந்தித்து சிறு புன்னகை உதிர்த்து விட்டு தனது கணவனை நாடிச் சென்றாள்.
அன்றைய பொழுது ஒரு புத்துணர்ச்சியான மனநிலையை அவளுக்குள் தக்க வைத்துக் கொண்டது.
அவளுக்கு மிகவும் பிடித்த கணவனின் வதனத்தில் அல்லவா இன்றைய நாள் ஆரம்பித்திருக்கின்றது.
துருவன் அருகில் போய் மெத்தையில் அமர்ந்து துருவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அலைபாயும் கேசங்களும், தடித்த புருவங்களும், அதற்கு மெருகூட்டும் வகையில் பார்வையிலேயே பெண்களை சொக்க வைக்கும் விழிகளும், விரிந்த மார்பும், பறந்த நெஞ்சமும், திமிறிய புஜங்களும் கட்டுக்கோப்பான உடல்வாகையும் பார்த்து வள்ளியின் வதனத்தில் வெட்கம் பூத்தது.
அவனது அழகை கண்களால் வருடிய வள்ளிக்கு கையும் அவனது அலைபாயும் கேசத்தை வருட பரபரத்தது.
மெல்ல தனது வளையல் பூட்டிய கரத்தை உயர்த்தி சிறு பயத்துடன் அவனது தலைக்கு அருகில் கொண்டு சென்றாள்.
அவனோ நடப்பது எதுவும் அறியாமல் தனது நித்திரையை நிம்மதியாக தொடர்ந்து கொண்டு இருக்க,
இவளுக்கு அந்த நிமிடங்கள் பெரும் பாட ஆகிவிட்டது. என்னதான் தனது கணவன் என்றாலும் அவனது சிகையை தொடக்கூட அவளுக்கு சிறு தடுமாற்றம் இருந்ததுதான் பெரும் உண்மை.
‘சேச்சே ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இப்படி எல்லாம் செய்யலாமா அவரது விருப்பமில்லாமல் அவரை எவ்வாறு தீண்டுவது என்னதான் நான் அவர் மீது உள்ளத்திலேயே காதலை சுமந்து கொண்டிருந்தாலும் அவரது சம்மதம் இல்லாமல் அவரைத் தீண்டுவது தவறு..’ என்று மனதிற்குள் நினைக்க தலைக்கு அருகில் கொண்டு சென்ற கரம் பின்வாங்கியது.
திருமணம் நடந்த அன்று தனது அத்தையுடன் ஒரேயறையில் உறங்கும் போது எண்ணினாள் எப்போது துருவனின் அறையில் அவரது வதனம் பார்த்து எனது காலைப் பொழுது தொடங்கும் என அன்று நினைத்தவள் இவ்வளவு சீக்கிரம் அந்த கனவு நனவாகுமென்று அவள் நினைக்கவே இல்லை.
வள்ளியின் ஆசைகள், கனவுகள் ஒவ்வொன்றும் மிக மிகச் சிறியது. அந்த சிறிய ஆசைகளிலேயே அவளுக்கு பெரிய சந்தோஷம் தங்கியுள்ளது.
அந்த ஆசைகளை எண்ணியப்படியே அவளது வாழ்வு மிகவும் திருப்தியாகவும் நிம்மதியாகவும் கடந்து செல்லும் அப்படிப்பட்ட ஒரு சிறுமிதான் வள்ளி.
துருவன் திடீரென்று அசைந்து மறுபக்கம் சரிந்து படுக்க அப்போது தான் அவளுக்கு சுயம் வந்தது.
தனது கரத்தினால் லேசாக தனது தலையில் அடித்து சிரித்தபடி நேரத்தைப் பார்த்தால் நேரம் ஐந்து அரை. உடனே குளியல் அறைக்குள் சென்று குளித்துவிட்டு வெளியே வந்து நெற்றியில் குங்குமம் விட்டு கண்ணாடியில் பார்த்தபோது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது அந்த செங்குங்குமத்தில் அவளது வதனம் மேலும் அழகில் மேலோங்கித் தெரிந்தது.
‘ஒருவேளை நம்மளுக்கு மட்டும்தான் அப்படி இருக்குதோ..!’ என்று நினைத்துக் கொண்டு தனது கன்னத்தை கிள்ளி தானே ஒரு முத்தம் கொடுத்து வைத்தவள் அலங்காரத்தை முடித்துவிட்டு திரும்ப துருவன் மெத்தை மேல் இருந்து அவள் செய்த அனைத்து விஷயங்களையும் சிறு புன்னகையுடன் பார்த்து ரசித்து கொண்டிருந்தான்.
“என்ன மேடம் என்ன நடக்குது..?”
ஏனோ தெரியவில்லை நேற்றைய தினம் இருந்த பயம் இன்று தூரம் சென்றது. ஆனால் பயம் இருந்த இடத்தில் வெட்கம் வந்து தொற்றிக் கொண்டது. அவன் கேட்ட கேள்விக்கு தலையை நிமிர்த்தி ஒன்றுமில்லை என தலையாட்டினாள்.
அவள் தலையாட்டி விட்டுச்செல்ல இவனும் எழுந்து,
“யாரோ கண்ணாடிய பார்த்து..” என்று இழுத்தான்.
வெட்கம் பிடுங்கித் தின்ன உடனே அந்த அறையில் இருந்து தாவிக் குதித்து வெளியே வந்து விட்டாள் வள்ளி.
வெளியே வந்தவள் சாமி அறைக்குள் சென்று தனது சிறு ஆராதனையை முடித்துவிட்டு கீழே வர, வைதேகி காலை உணவை தயாரித்துக் கொண்டிருந்தார்.
என்னதான் பெரிய பணக்காரர் என்றாலும் வைதேகி எப்போதும் தனது வேலையை தானே பார்த்துக் கொள்வார்.
உணவு சமைப்பதில் இருந்து உணவு பரிமாறுவது வரை அனைத்து வேலைகளையும் அவரே பார்த்துக் கொள்வார்.
அதில் அவருக்கு பெரும் திருப்தியும் உண்டு. தனது கணவருக்கும், மகனுக்கும் தனது கையாலேயே வகை வகையாக ருசியாக சமைத்துக் கொடுத்து அவர்கள் உண்டு விட்டு அது அருமையாக இருக்கிறது என்று சொன்னாலே அவருக்கு பெருமானந்தம் இதைவிட ஒரு மனைவியாக ஒரு தாயாக அவருக்கு வேறு என்ன வேண்டும்.
வைதேகி அருகில் சீதாவும் விரைவாக உணவு தயாரித்துக் கொண்டிருந்தார்
சீதாவின் அருகில் சென்று அவரை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டாள் வள்ளி.
சீதா, “என்ன என் பொண்ணுக்கு காலையிலேயே பாசம் பொங்கி வழியுது..” என்று வள்ளியை சீண்ட,
“இல்லம்மா நீங்க இன்னைக்கு ஊருக்கு..”
“ஆமாமா நான் சொல்ல மறந்துட்டேன் இன்னைக்கு மதியமே கிளம்பி போறோம் உன்கிட்ட சொல்லனும் என்று இருந்தேன் எப்படி சொல்றதுன்னு தெரியல நீ ரொம்ப கஷ்டப்படுவா என்று எனக்கு தெரியும்மா ஆனா..”
“இன்னைக்கு நின்னுட்டு நாளைக்கு போங்கமா..”
“இல்லம்மா ஊருல முக்கியமான வேலை இருக்கு அப்பா சொன்னாரு தானே எனக்கு உன்னோடு இருக்க விருப்பம் தான்மா நீ அப்பாட்ட பேசு அப்பா சம்மதிச்சா சரி..” என்று கூறியதும் அப்பாவை தேடி துள்ளிக் குதித்துக் கொண்டு வள்ளி சென்றாள்.
வள்ளியை பார்த்ததும் சிறு புன்னகையுடன் சக்திவேல்,
“வாடா செல்லம்..” என்று அன்புடன் வள்ளியை அழைக்க,
வள்ளியோ சிறு கோபத்துடன்,
“என்னபா இன்னைக்கு நின்று நாளைக்கு போகலாமேப்பா..!”
“இல்லம்மா ஊர்ல தலைக்கு மேல வேலை இருக்கு போயிட்டு ரெண்டு நாள்ல திரும்பி வரேன் சரியா..?” என்று அவளது தலையை பாசமாக தடவினார்.
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த வைதேகி அருகில் வந்து,
“அண்ணா பொண்ணுதான் ரொம்ப வருத்தப்படுறாளே ஒரு ரெண்டு நாள் நின்னுட்டு போங்களேன்..”
“இல்லம்மா நீயாவது புரிஞ்சுகொள்ளு அவ தான் சின்ன புள்ள அங்க போட்டது போட்டபடியே கிடக்கு போயிட்டு வேலைய முடிச்சுட்டு ரெண்டு நாள்ல திரும்பி வந்துடறேன்..”
அவர் கூறியதற்கு பதில் எதுவும் கூறாமல் வைதேகி வள்ளியின் அருகில் சென்று,
“சரி சரி அப்பா அம்மாவை கொஞ்சினது போதும் கொஞ்சம் என்னோட பிள்ளையையும் கவனிம்மா.. இந்தாம்மா கொண்டு போய் துருவனுக்கு டீ யைக் கொடு எப்பவும் சூடாத்தான் அவன் டீ குடிப்பான் வேகமாக கொண்டு போய் டீயை குடுத்துட்டு அவன் குடிச்ச பிறகு இருந்து டீ கப்பை எடுத்துட்டு வா குடுத்துட்டு சட்டுன்னு ஓடி வர்றதில்லை..”
“சரிங்க அத்தை..” என்று கூறி சிறு துள்ளலுடன் மாடிப்படிகளில் ஏறி மேலே சென்றாள்.
கதவைத் தட்டாமல் உள்ளே நுழைய ஆடை மாற்றிக் கொண்டிருந்தவன் வள்ளியின் திடீர் வருகையால் திகைப்படைந்தான்.
“ஏய் உன்ன தான் சொல்லி இருக்கேன்ல்ல வரும்போது கதவை தட்டிட்டு வரணும்னு நான் டிரஸ் சேஞ்ச் பண்ணிக் கொண்டிருக்கேன்..”
என்று கூறியபடி சேட்டை எடுத்து போட்டவன்
“அச்சச்சோ மறந்துட்டேங்க..” என்று வெளியே செல்ல வள்ளி திரும்ப,
“ஒன்றும் தேவையில்லை சரி சரி உள்ள வா நான் டிரஸ் சேஞ்ச் பண்ணி முடிஞ்சு..”
“என்ன விஷயம் அம்மா வர சொன்னாங்களா..?”
“இல்லங்க அம்மா டீ கொடுத்து விட்டாங்க..”
“சரி அதுல வச்சுட்டு போ..”
“இல்ல..” என்று நகராமல் அதே இடத்தில் விழித்துக் கொண்டு நின்றாள்.
“என்ன சொல்லு..”
“டீ கப் எடுத்துட்டு வர சொன்னாங்க..”
“சரி கொண்டு போ..”
“இல்ல நீங்க குடிச்ச பிறகு..” என்றதும் அருகில் உள்ள சோபாவில் அமர்ந்து அந்த டீயை எடுத்து பருகிக்கொண்டு வள்ளியைப் பார்த்து
“ஈவினிங் பை டூ சிக்ஸ் மட்டும் நாம படிப்போம் ஓகே யா.? நான் வேர்க் முடிஞ்சு வரும்போது உனக்கு படிக்கிறதுக்கு தேவையான புக்ஸ் எல்லாம் வேண்டி வாரேன் நாம ஸ்பீக்கிங் அண்ட் ரைட்டிங் இரண்டுமே கொஞ்சம் கொஞ்ச நேரம் படிப்போம்..”
படிப்பு பற்றி கூறியதும் அவளுக்கு சந்தோசம் மனதில் முளைக்க உடனே சோபாவிற்கு அருகில் அமர்ந்தவள்,
“சரிங்க நாம இன்னைக்கு படிக்கிறத நாளைக்கு நீங்க கேளுங்க நான் மறக்காமல் ஞாபகம் வைத்து உங்களுக்கு சொல்றேன் ஒரு வாரத்துக்கு ஒரு தடவை நீங்க எக்ஸாம் வைங்க மார்க்ஸ் எல்லாம் போடுங்க சரியா..?” என்று தலையாட்டி ஆர்வமாகக் கேட்க,
அவளது கண்களும், உதடுகளும் அசைந்தாடி கதை கூறவும், அதற்கு ஏற்றார் போல் காதில் போட்டிருந்த ஜிமிக்கி நர்த்தனம் ஆடி தனது இருப்பைக் காட்டியது.
அதனைப் பார்த்து ரசித்தப்படியே நேரத்தை பார்க்க அவனது மாடர்ன் ரிச்சர்ட் நியூ மாடல் வாட்ச் நேரம் ஏழு மணி எனக் காட்டியது.
“ஓஹ் ஓ சாரி அற்புதம் உன்னோட பேசினா டைம் போறதே தெரியல மீட்டிங் இருக்கு நான் கிளம்புறேன்..” என்று சொல்லிவிட்டு வள்ளியிடம் இருந்து விடை பெற்று அவசரமாக தனது வேலைக்குப் புறப்பட்டான்.
அவன் காரில் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்த வள்ளிக்கு ஏக்கமாக இருந்தது. மீண்டும் எப்போது அவரை சந்திப்பது என்று, இந்த ஒரு நாளில் சிறு பிரிவையே அவளால் தாங்க முடியாமல் தவித்தாள்.
மதியம் சக்திவேலும், சீதாவும் புறப்பட்டு ஊருக்கு செல்ல, வீடு வெறிச்சோடி பொய் காணப்பட்டது. வள்ளிக்கு அன்னை சென்ற கவலையில் மிகவும் சோர்வாக சோபாவில் அமர்ந்திருக்க,
வள்ளி கவலையுடன் இருப்பதைக் கண்ட வைதேகி வள்ளியின் அருகில் வந்து,
“உனக்கு போர் அடிக்குதாமா..?”
“இல்லைங்க அத்தை..”
“பரவால்ல இங்கே பக்கத்திலேயே ஒரு கோயில் இருக்கு சிவன் கோயில் அது ரொம்ப சக்தி வாய்ந்த கோயிலுமா அங்க போய் நீ நினைச்சதை வேண்டினா கட்டாயம் நடக்கும்.
உனக்கும் கொஞ்சம் மனசுக்கு ஆறுதலாய் இருக்கும். நானும் கூட வருவேன் ஆனால் ஈவினிங் ஒரு பங்க்ஷன் இருக்கு அதுக்கு போகணும் அதனால நான் டிரைவர கூப்பிட்டு விடுறேன் டிரைவரோட பக்கத்துல இருக்க கோயிலுக்கு தானே போயிட்டு சீக்கிரம் வாமா..” என்று வைதேகி அன்பாக கூற,
அவளுக்கும் வைதேகி கூறுவது சரியெனவே பட்டது.
“சிவன் கோயிலா..? எனக்கும் ரொம்ப நாளா கோயிலுக்கு போகாம மனசுக்கு ஒரு மாதிரியாவே இருந்துச்சு. அப்படியே நினைச்சுக்கிட்டு இருக்க நீங்களும் சொல்றீங்க..”என்று பெரும் சந்தோஷத்துடன் கூறிவிட்டு வள்ளி புறப்பட்டு கோயிலுக்குச் சென்றாள்.
மாலை 5 மணி அளவில் துருவன் சில கொப்பி புத்தகங்களுடன் வீட்டுக்கு வர, துருவனின் பின் எதையோ பதற்றத்துடன் தேடியபடி வைதேகி நின்றார்.
“என்னம்மா..? எதையோ தேடிக்கிட்டு இருக்கீங்க..”
“இல்லப்பா வள்ளி பக்கத்துல இருக்க கோயிலுக்கு போனா இன்னும் வரல அதுதான் பார்த்துட்டு இருக்கேன்..”
“எப்போ போனா..?” என்று துருவன் சிறு சந்தேகத்துடன் கேட்க,
“ஒரு நாலு மணி அப்படி இருக்கும்பா..” என்று வைதேகி மனம் படப்படக் கூறினார்.
“சரி சரி வந்துருவா நீங்க போய் டீ போடுங்கம்மா..” என்று அன்னையின் பயத்தை உணர்ந்து மிகவும் இயல்பாக நடந்து கொண்டான்.
“இல்லடா நான் ஈவினிங் ஃபங்ஷனுக்கு போகணும்னு சொல்லிட்டு இருந்தேன் சீக்கிரம் வந்துற தான் சொன்னா இன்னும் காணல எனக்கு என்னமோ பயமா இருக்கு..”
“நான் போய் பாத்துட்டு வரவா..?”
“சீக்கிரமா போப்பா..” என்று அவன் எழுந்திரிக்க அவனது அலைபேசி சிணுங்கியது.
எடுத்து காதில் வைத்தவன் அப்படியே அதிர்ச்சி அடைந்து வேரூன்றிய மரமாக நின்றான்.
துருவனுடன் அலைபேசியில் அவனுடன் பேசியது யார்?
அவர் கூறிய செய்தி என்ன..?
அதைக் கேட்டு துருவன் ஏன் அதிர்ச்சி அடைய வேண்டும்..?