அரண் 2
தனபால் தொலைபேசியில் உரையாடிக் கொண்டு மாடிப்படிகளில் இருந்து இறங்கி வந்து கொண்டிருக்க துருவன் வீட்டில் இருந்து வேகமாக வெளியேறினான்.
உரையாடலை நிறுத்தி விட்டு தொலைபேசி அனைத்து வைத்த தனபால் தனது அன்பு மனைவி வைதேகி அருகில் வந்து,
“என்ன வைதேகி உன் பையன் ரொம்ப அதிசயமா ஈவினிங் டைம்ல வந்துட்டு போறான்..” என்று மகனைப் பற்றி பேசி வைதேகியை வம்புக்கு இழுத்தார்.
வைதேகி தான் துருவனைப் பற்றி பேசினாலே கோபம் பொத்துக் கொண்டு வந்திடுமே..!
வைதேகியை சீண்டிப் பார்ப்பதில் தனபாலுக்கு அமோக சந்தோசம்..
வைதேகி தனபால் இருவரும் காதலித்து திருமணம் முடித்துக் கொண்டவர்கள்.
பிசினஸ் விஷயமாக சென்னைக்கு வந்திருந்த போது வைதேகி சென்னையில் உள்ள கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். ஒரு புகையிரத பயணம் மூலம் நண்பர்கள் ஆகி பின் காதலர்களாக மாறினர்.
அன்றைய கால கட்டத்தில் கடிதங்கள் மூலம் தனது காதலை பரிமாறிக் கொண்டதாலும் சென்னையில் இருந்ததினாலும் கிராமத்திலிருந்து வைதேகியின் குடும்பத்திற்கு அவர்களது காதல் மூன்று வருட காலமாக தெரியவில்லை.
பின்பு கல்லூரி முடிந்த கையுடன் வைதேகி தனபாலுடன் மாலையும் கழுத்துமாகவே கிராமத்திற்கு போய் நின்றார்.
ஆம் வைதேகி சென்னைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்த பெண்.
அவளுக்கு சிறுவயதிலேயே தந்தையும், தாயும் இறந்து போனதால் அவளது ஒரே ஒரு அண்ணன் சக்திவேலின் அன்பிலும், அரவணைப்பிலுமே வளர்ந்தாள்.
தனது தங்கை திருமணம் செய்த பிறகு தான் நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தனது வாழ்க்கையை தங்கைக்காக அர்ப்பணித்தவர். அப்படிப்பட்ட பாசமிகுந்தவர் தான் நமது சக்திவேல்.
அவருக்குத் தெரியாமல் திருமணம் முடித்து அவர் முன் போய் நிற்க, தங்கையை ஒரு வார்த்தை கூட அவதூறாக பேசாமல்,
“தயவுசெய்து இங்கிருந்து போய் விடுமா.. என் முகத்திலேயே முழிக்காதே..” என்று கையெடுத்து கும்பிட்டு அவரை கவலையுடன் அனுப்பி வைத்து விட்டார்.
வைதேகி தனது தங்கையாக சக்திவேல் வளர்க்கவில்லை. தனது குழந்தையாகவே தான் பார்த்துக் கொண்டார்.
அப்படிப்பட்ட வைதேகி மீது இதுவரையில் அவர் சிறிதாக கூட கோபத்துடன் திட்டியதே இல்லை.
இவ்வளவு பெரிய துரோகம் செய்தும் அவரால் அவளிடம் கோபமாகக் கூட பேச முடியவில்லை. மிகவும் கவலையுடனும் கண்ணீருடனும் போகச் சொல்லிவிட்டார்.
அண்ணா எப்படி இருந்தாலும் தன் மீது உள்ள பாசத்தில் தனபாலை ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்த்து இருந்த வைதேகிக்கு சக்திவேலின் முடிவு மனதிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
அப்படி இருந்தும் சக்திவேல் ஓரிரு வார்த்தை பேசி, அடித்து தனது கோபத்தை வெளிப்படுத்தி இருந்தால் வைதேகியின் மனது ஆறுதல் அடைந்திருக்கும்.
ஆனால் ஒரு வார்த்தை கூட அண்ணா திட்டாமல் இப்படி திருப்பி அனுப்பியது வைதேகியின் மனதை என்றும் குத்தீட்டியாகக் குத்திக் கொண்டே இருக்கிறது.
அன்று தனபாலுடன் மும்பைக்கு வந்த வைதேகி தான் இன்றுவரை தனபாலுக்கு துணையாகவும் அவரது வெற்றிகளுக்கு பக்க பலமாகவும் அவருடன் இருந்து தோள் கொடுத்து அனைத்தையும் கவனித்து வருகின்றார்.
வைதேகி திருமணம் முடிக்கும்போது சிறிய அளவில் தனது பிசினஸினை மேற்கொண்ட தனபால் வைதேகி திருமணம் முடித்த ஒரு வருடத்திலேயே பெரிய அதிர்ஷ்டம் அடித்தது போல் நான்கைந்து கம்பெனிகளை ஏலத்தில் எடுத்தார்.
வைதேகியை இதுவரை அவரது வாழ்க்கையில் பெரும் அதிர்ஷ்டமாகவே எண்ணி போற்றி வருகின்றார். ஏனென்றால் வைதேகியை திருமணம் முடிக்கும் முன் அவரது தொழிலில் பல ஏற்ற இறக்கங்கள் இருந்தது.
வைதேகியை திருமணம் முடித்த பின்பு அவரது வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றிக் கொடிதான்.. இதுவரையில் எதிலும் அவர் தோற்றதே இல்லை..
அவ்வாறே இதோ 30 வருடங்களாக இருவருக்குள்ளும் சேட்டைகள், குறும்புகள், அன்புச் சண்டைகள் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.
சிறு கோபத்துடன் “அவனை வம்புக்கு இழுக்கலைன்னா உங்களுக்கு தூக்கம் வராதே..” என்று வைதேகி கூறிட,
“டீ குடிக்கல்லாம் வீட்டு பக்கம் உன் பையன் ஒதுங்க மாட்டானே..”
“எனக்கு மட்டும் தான் பையனா உங்களுக்கு பையன் இல்லையா..?””
“சரி சரி என்ன விஷயம் சொல்லு..”
“எல்லாம் நல்ல விஷயம்தான் உங்க பையன் கல்யாணத்துக்கு ஒத்துக்கொண்டான்..”
“எது அந்த தூத்துக்குடி பொண்ணா..? இல்ல கோயம்புத்தூர் பொண்ணா..?”
“ஒரு மண்ணும் இல்லை அவன் ஏதோ பிசினஸ்ல தெரிஞ்ச பொண்ணாம் நாளைக்கு வீட்ட கூட்டி வாரானாம்..”
“சரி யாராவது ஒரு பொண்ண பார்த்து கட்டினால் போதும்..”
“அதைத்தான் நானும் யோசிக்கிறேன் காலாகாலத்துக்கு ஒரு கல்யாணத்தை செய்து வைத்தால் அது போதும் ஒரே ஒரு பையன்னு செல்லம் கொடுத்து இப்படி வளர்த்து வைத்தால்.. அவன் இன்னும் கல்யாணம் என்கின்ற நினைப்பே இல்லாமல் சுத்திக்கிட்டு இருக்கான்..” என்று உண்மையிலேயே வருத்தப்பட்டார் வைதேகி.
“சரி அவன் தான் கல்யாணம் கட்டிக்கிறேன்னு சொல்லிட்டான்ல.. பிறகு ஏன் சும்மா கவலைப்படுற.. அவன் சொல்லும்போதே சீக்கிரமா செய்து வெச்சிரனும்..”
“முதல் அந்தப் பொண்ணு நல்ல பொண்ணா என்று பார்க்க வேணும்.. எங்க குடும்பத்துக்கு சரி வருமா என்று பார்த்து தானே கல்யாணத்தை முடிவு பண்ணனும்..”
“அவனுக்கு பிடிச்சிருக்கில்ல பிறகு என்ன..?
“அதுக்காக குடும்பத்துக்கு ஒத்து வராத பொண்ண கட்டி வைக்கிறதா அவன் பிசினஸ் டீல் பேசிட்டு வர்ற மாதிரி பேசிட்டு வந்திருக்கான் அந்த பொண்ணு எப்படி என்ன மாதிரி அவ குடும்பத்தில் இருக்கிறவங்க என்ன மாதிரி எல்லாத்தையும் விசாரிக்க வேண்டும் தானே..”
‘அதெல்லாம் என் பையன் பார்த்துப்பான்..” என்று பெருமையாக கூறினார் தனபால்.
“அவன் எங்க பார்க்கப் போறான் நான் நாளைக்கு பொண்ண பார்த்துட்டு தான் இருக்கு விஷயமே.. நல்ல பொண்ணா இருக்கனும்..!” என்று கவலையுடன் சிந்தனையில் ஆழ்ந்து போனார் வைதேகி.
“பார்த்தியா இவ்வளவு நாளும் அவன் கல்யாணம் முடிக்கல முடிக்கலைன்னு ஒரே பேசிக்கொண்டு இருந்தா இப்போ அவன் கல்யாணம் முடிக்க ஒத்துக்கொண்டு பொண்ண கூட்டி வாரன்னு சொல்றான்..
பொண்ணு நல்ல பொண்ணா இருக்கணும் என்று கவலைப்படுறா.. நீ கவலைப்படுவதற்கு ஒவ்வொரு விஷயமும் தேடித் தேடி கண்டுபிடிப்பாய்.. கவலையை விடு வைதேகி எல்லாம் நல்லதே நடக்கும்..” என்று மனைவியின் வருத்தம் தாங்காமல் ஆறுதல் அளித்தார் தனபால்.
“அம்மான்னா அப்படி தாங்க பிள்ளைகளுக்கு எல்லாத்தையும் பார்த்து பார்த்து தான் செய்வாங்க ஒவ்வொன்னையும் நினைச்சு பிள்ளைக்கு சரியா செய்யணும்னு கவலைப்பட தானே வேணும்..”
“சரி சரி பிள்ளையை நினைத்து கவலைப்பட்டது போதும் கொஞ்சம் புருஷனையும் நினைத்து பார்த்தீங்க என்றால்…” என்று தனபால் இழுக்க..
“கிழவனுக்கு குசும்பப் பாரு..” என்று வைதேகி கிண்டல் அடித்துச் சிரிக்க தனபாலும் சேர்ந்து சிரித்து மகிழ்ந்தனர்.
****************************************
வைதேகி முன்பு இருக்கையில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு
“சொல்லுங்க ஆன்ட்டி என்ன பாக்கணும்னு சொன்னீங்களாம்..” என்று கூறி முடிக்கும் முன்பே…
“உன் பேரு என்னமா..?” என்ன சட்டெனக் கேட்டார் வைதேகி.
“ரேகா.. என்னோட பெயரை சுருக்கி ரேன்னு கூப்பிடலாம்..”
“உன் பெயரே ரெண்டு எழுத்து தான் அதுல என்னம்மா சுருக்கி.. ஏற்கனவே சுருங்கிப் போய் தான் இருக்கு.. உன் டிரஸ்ஸும் உன் பெயரும் நான் ரேகான்னே கூப்பிடுறேன்…” என்று கூறிவிட்டு வைதேகி தலை முதல் கால் வரை ரேகாவை கண்களால் அளந்தார்.
மெல்லிய உடல்வாகு, இடுப்பு தெரியும் அளவுக்கு மிகவும் இறுக்கமான வெள்ளை நிற டி-ஷர்ட், முழங்காலுக்கு மேல் கருப்பு நிற பாவாடை அதிலும் ஒரு வெட்டு, உதடுக்கு பொருந்தாத லிப்ஸ்டிக், முகத்திற்கு பொருந்தாத மேக்கப், கண்களுக்கு கீழ் கருவளையம், மிகவும் உயரமான கீழ்ஸ்.. அதோடு பெரியவங்க முன் திமிரான தோரணை..
கால் மேல் கால் போட்டுக்கொண்டு அதனையும் ஆட்டிக்கொண்டு இருப்பதை வைதேகி பார்த்து முறைத்து வைக்க, தான் கால் ஆட்டுவதை தான் பார்த்து வைதேகி முறைக்கிறார் என்று புரிந்ததும் மெதுவாக காலை கீழே இறக்கினாள் ரேகா.
“உனக்கு என்ன சமைக்க தெரியும்..?” என்று ஆவலாக வைதேகி கேட்க,
“அதுவா ஆன்ட்டி அது வந்து நான் நான்..” என்று யோசிப்பது போல் ரேகா தடுமாற..
“ம்ம்.. சொல்லுமா..” இன்று வைதேகி ஊக்கப்படுத்தினார்.
“சுடுதண்ணீர் வைப்பேன்..” என்று கூறியதும் வைதேகி தலையில் உடியே விழுந்தது போல இருந்தது.
“என்னது சுடுதண்ணி சமையலா..?” என்று வாய்விட்டு கேட்டுவிட்டார்.
“ஆமா ஆண்ட்டி இன்னும் இருக்கு.. அப்புறம் 5 மினிட்ஸ்ல ரெடியாகுமே நூடுல்ஸ் அது நல்லா செய்வேன்.. அப்புறம் ஆம்லெட் போடுவேன் என்னோட ஃபேவரிட் பிரட்டும் ஆம்லெட்டும்.. வேற.. வேற.. அவ்வளவுதான்..” என்று கூறிவிட்டு ஏதோ பலவிதமான ஐட்டங்களை சொன்னது போல மூச்சு வாங்கியது அவளுக்கு,
“அப்பா இவ்வளவு சமையல் உனக்கு தெரியுமாம்மா..” என்று கண்கள் விரித்து ஆச்சரியத்துடன் கேட்டார் வைதேகி.
“ஆமா ஆன்ட்டி இந்த பிசியான பிசினஸுக்கு நடுவுல கஷ்டப்பட்டு பழகினேன்..” என்று அவள் கூற, வைதேகி எங்கு கொண்டு போய் தன் தலையை இடிப்பது என்றிருந்தது.
‘சரி கல்யாணத்துக்கு அப்புறமும் நான்தான் சமைக்கணும் போல.. பரவால்ல இவ சமைக்கிற சுடுதண்ணிய விட என் சமையலை என் பையன் சாப்பிட்டு உயிரோடு இருக்கட்டும்..’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே நமட்டுச் சிரிப்பு சிரித்தவர்,
பின் ரேகா வித்தியாசமாக தன்னைப் பார்ப்பதைப் பார்த்து,
“இந்தக் கல்யாணத்துக்கு உங்க அம்மா, அப்பா சம்மதம் சொல்லிட்டாங்களாம்மா..?”
“அவங்க கிட்ட கேட்கவே தேவையில்லை ஆன்ட்டி. நான் எடுக்கிறது தான் எங்க விட்டு முடிவு என்னோட இஷ்டத்துக்கு அவங்க மறு பேச்சு பேசறதே இல்லை அந்த அளவுக்கு அவங்களுக்கு தைரியமும் இல்லை..” என்று அவள் திமிராக கூட வைதேகிக்கு மூக்கின் மேல் கோபம் வந்தது.
“ஓ அப்படியா ஆனா இங்க அப்படி இல்ல நான் என்னோட கணவர் எடுப்பது தான் முடிவு..” என்று கூறிக் கொண்டிருக்கும் போது வைதேகிக்கு அருகில் வந்து,
“நான் ராம்குமார் வீட்ட முக்கியமான விஷயமா போயிட்டு வாரன்மா.. வர கொஞ்சம் லேட் ஆகும் மறக்காம சாப்பிடு..” என்று கூறிட,
“சரிங்க இதுதான் உங்க பையன் சொன்ன பொண்ணு..” என்று கூற, தனபால் மேலிருந்து கீழ் வரை ரேகாவை கண்களால் ஆராய்ந்தவர்,
ரேகாவிடம் எதுவும் பேசத் தோன்றவில்லை போலும் வைதேகிப் பார்த்து தலையாட்டி விட்டு புறப்பட, வைதேகியும் அவருடன் வாசல் வரை சென்று வழி அனுப்பி விட்டு வந்தார்.
“என்ன ஆன்ட்டி அங்கிள் போறேன்னு சொன்னாங்களே ஏன் வாசல் மட்டும் போய் அனுப்பிட்டு வாரிங்க போறேன்னு சொன்னா அவர் போவார் தானே..” என்ற அவள் புரியாமல் கேட்க,
“எங்க குடும்பத்துல இதுதான்மா வழக்கம் புருஷன் வேலைக்கு போறேன்னு சொன்னா நாங்க வாசல் மட்டும் போய் அவங்கள சந்தோஷமா வழி அனுப்பி வைத்துவிட்டு தான் வருவோம் அதுதான் எங்க வழக்கம் அதோடு மனைவியிட கடமையும் அதுதான்..”
“ஓ அப்படியா..”
“அப்படித்தான்..” என்று கூறிக் கொண்டிருக்கும் போது துருவனின் கார் வீட்டின் முன்பு வந்து நின்றது.
அவன் வருவதை பார்த்ததும் வைதேகி எழுந்து சென்று அவனுக்கு டீ போட்டுக் கொண்டு வந்து மேசை மீது வைத்தார்.
மேசை மீது இருந்த தேனீரை எடுத்துக் கொண்டு வைதேகி அமைந்திருக்கும் இருக்கைக்கு அருகில் அமர்ந்த துருவன் தனது அன்னையைப் பார்த்து,
“என்னம்மா உங்களுடைய இன்டர்வியூ முடிந்ததா உங்களுக்கு ரேகாவ பிடிச்சிருக்கு..?” என்று ரேகா முன்பே கேட்க, வைதேகிக்கு சங்கடமாகிப் போனது.
‘எப்படி அவள் முன்பே உண்மையைச் சொல்வது, அது தான் அவன் அவளையே திருமணம் செய்யப் போகிறேன் என்று முடிவு எடுத்துவிட்டானே இந்த பொண்ணு வேணாம் என்று சொன்னால் இனிமேல் திருமணமே செய்து கொள்ள மாட்டான் என்று வேறு சொல்கிறான்..’ என்று எண்ணியபடி கவலையுடன் துருவனைப் பார்த்து,
“ஓஹ் ரொம்ப பிடிச்சிருக்கு அதோட ரேகா நல்ல சமைப்பாலாமே அதுதான் அவளோட பிளஸ் பாயிண்ட்.. பரவால்ல நல்ல பொண்ணா தான் செலக்ட் பண்ணி இருக்கே..” என்று கூற,
“ஓகே மா பைன்.. இந்த மாதமே ஏதாவது ஒரு டேட் பிக்ஸ் பண்ணிருங்க ஏன்னா நான் நெக்ஸ்ட் மந்த் ஆஸ்திரேலியா போறேன் பிசினஸ் ட்ரிப் ஒன்னு இருக்கு.. அது வெரி வெரி இம்போர்ட்டண்ட் அதனால நெக்ஸ்ட் மந்த் நான் ரொம்ப பிசி..”
“என்னடா இப்படி திடீரென்று சொல்ற சட்டென்று கல்யாணம் செய்துக்க முடியாது எவ்வளவு பேருக்கு சொல்லணும், பத்திரிகை அடிக்கணும், புடவை எடுக்கணும், தாலி செய்யக் கொடுக்கணும், மண்டபம் புக் பண்ணனும், சமையல் ஆர்டர் கொடுக்கணும்..” என்று வைதேகி சொல்லிக் கொண்டே போக
“அம்மா.. அம்மா.. எல்லாம் செய்யலாம் டோன்ட் வெரி நீங்க என்னென்ன வேலை செய்யணும்னு சொல்லுங்க எல்லாத்தையும் நானே பாத்துக்கிறேன் நீங்க ஒன்றும் கவலைப்பட தேவையில்லை இந்த மாசம் ஒரு நல்ல முகூர்த்த நாள் பார்க்க ஐயரை கூப்பிடுங்க முதல் டேட்ட பிக்ஸ் பண்ணுங்க.. இந்த துருவன் இருக்கப் பயமேன்..” என்று அவன் கையை உயர்த்தி காட்ட வைதேகியின் முகம் மலர்ந்தது.
இருவரும் உரையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தது ரேகாவிற்கு தனது நாடகம் அரங்கேறிக் கொண்டிருப்பதை எண்ணி மனதிற்குள் சந்தோஷக் குத்தாட்டம் போட்டாள்.
‘பொறுத்திரு துருவன் ரேகாவின் கேம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் ஸ்டார்ட்.. வெயிட் அண்ட் வாட்ச்..’ என்று ரேகா மனதிற்குள் கணக்கிட்டு கொண்டிருக்க துருவனோ ரேகாவின் முகத்தை கூட பார்க்காமல் சுவாரசியமாக தனது அன்னையுடன் உரையாடிக் கொண்டிருந்தான்.
ரேகாவின் திட்டம் பலித்திடுமா..?
அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்..