அரண் 37
வள்ளி எட்டிப் பார்த்ததும் கதிரை விழும் என்று சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. அந்தச் சத்தத்தை கேட்டு அவர்கள் இருவரும் கிட்டே நெருங்கி வர என்ன செய்வதென்று தெரியாமல் முழிகள் பிதுங்க, உடல் பயத்தில் உதற தனக்கு பிடித்த இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டிருந்தாள்.
அந்த முரடர்களோ இடுப்பில் சொருவி இருந்த நவீன ரக துப்பாக்கியை எடுத்து லோட் பண்ணிவிட்டு சத்தம் வந்த இடத்தை நோக்கி பதுங்கிப் பதுங்கி வந்தனர்.
அப்படியே மெதுவாக பின்னோக்கி நகர்ந்து சென்ற வள்ளி கதவின் மூலைக்குள் மறைந்து கொள்ள என்ன அதிசயம் அந்தக் கதவு தானாகத் திறந்தது.
‘அப்பாடா கதவு திறந்து விட்டது இதுக்குள்ள போய் ஒழிஞ்சிக்கலாம்..’ என்று அந்த திறந்த கதவிற்குள் புகுந்து அங்கு அடுக்கப்பட்டு இருக்கும் பெட்டிகளுக்கு நடுவில் மறைந்து கொண்டாள்.
அவள் மறைந்ததும் அருகே வந்து பார்த்த அந்த இரு ரவுடிகள்,
“என்னடா இங்கிருந்து தானே சத்தம் வந்துச்சு ஆனா ஒண்ணுத்தையும் காணல..” என்று கூற,
அருகில் இருந்தவன்,
“இந்தக் கதவு திறந்து கிடக்கே உள்ள போய் பார்க்கலாம் வா..” என்று கூற இங்கு வள்ளிக்கு ஜீவன் உடலை விட்டு பிரிந்து எங்கோ செல்வது போல இருந்தது.
அவர்களது கையில் இருக்கும் துப்பாக்கியோ நொடிப்பொழுதில் உயிரை பறிக்கும் ஆயுதமாக அவளுக்குத் தென்பட்டது. இதுவரைக்கும் அவள் நேரில் துப்பாக்கியை பார்த்ததே இல்லை. என்ன செய்வதென்று புரியாமல் அவள் தவித்துக் கொண்டிருக்க இதயமோ நொடிப் பொழுதில் வேகமாக நான் இருக்கிறேன் என்பதை காட்டுவதற்காக வேக வேகமாக அடித்துக் கொண்டது.
மூளையோ அதைவிட மோசமாக வேலை செய்ய மறுத்தது என்ன செய்யலாம் என்று அவள் சிந்திக்கும் ஆற்றலை இழந்து பயத்தின் அகோரப்பிடியில் மாட்டிக்கொண்டாள்.
இருவரும் உள்ளே நுழைய கதவில் கை வைக்கும் போது ஜன்னல் ஓரமாக பூனை கத்தியபடி பாய்ந்து ஓடியது.
அதனைப் பார்த்த இருவரும்,
“அடேய் பூனைடா மடையா வா சீக்கிரம் போகலாம் அவன் கண்ணு முழிச்சிட்டான் அவனுடைய கதையை தீர்த்து கட்டிட்டு சீக்கிரமா இங்கே இருந்து கிளம்பனும்னு பாஸ் சொன்னாரு..” என்று இருவரும் தங்களுக்குள் பேசிக்கொள்ள அது நன்றாக வள்ளியின் காதில் ஈயத்தை கரைத்து ஊற்றியது போல விழுந்தது.
அவர்கள் சென்ற பிறகு வள்ளி அப்படியே வேரோடு பிடுங்கிய கொடி போல அந்த இடத்திலேயே தொய்ந்து போய் அமர்ந்து விட்டாள்.
“அவரோட உயிரை எவ்வாறு காப்பாற்றுவது என்னால எதுவும் செய்ய முடியாதா..?” என்று மனதிற்குள் தன்னைத்தானே பலவீனமாக எண்ணிக் கொண்டாள்.
சிறிது நேரம் அவ்விடத்திலேயே உடலில் இருந்து மொத்த பலமும் வடிந்து ஊடுருவி எங்கோ சென்றது போல் உணர்ந்தவள் நிலைமையை கைக்குள் கொண்டுவர எண்ணி கண்களை மூடி மனதை அமைதிப் படுத்த முயற்சி செய்தாள்.
தனக்குத்தானே ஒரு உத்வேகத்தை உண்டாக்கி கொள்ள எண்ணம் கொண்டவள் ஊரில் விளையாடும் கபடி போட்டிகளில் தோல்வியை தழுவும் நேரங்களில் எல்லாம் தனக்குத்தானே சொல்லிக் கொள்ளும் மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கினாள்.
“வாடித் துன்பமிக உழன்று — பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து — நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் — பல வேடிக்கை மனிதரைப் போலே — நான் வீழ்வே னென்று நினைத் தாயோ..?” என்று மீண்டும் மீண்டும் அவள் தனக்குத்தானே மனதிற்குள் வேகமாக பாரதியார் கவிதையினைப் பாடிக் கொண்டிருந்தாள்.
எங்கிருந்து அவளுக்கு அவ்வளவு பலம் வந்தது என்று தெரியவில்லை. மனதில் உறுதி பிறக்க கண்ணீரை அழுந்தத் துடைத்துவிட்டு சேலை தலைப்பை எடுத்து இடுப்பில் சொருவி கைகள் இரண்டையும் இடுப்பில் வைத்து நிமிர்ந்து நின்று ஜன்னல் வழியாக துருவனைப் பார்த்தாள்.
அவளது மனதிலும், உடலிலும் யானை பலம் வந்தது போல இருந்தது. பாரதியாரின் கவிதைகள் என்றால் சும்மாவா சிறு எறும்பையும் பெரும் பாறையை தூக்க வைத்து விடும். அப்படி ஒரு வலிமை மிகுந்த கவிதை வரிகள் அவருடையது. அதற்கு நிகர் வேறு ஏது..?
‘அவர எப்படியும் காப்பாற்ற வேண்டும் எனது உயிர் போனாலும் பரவாயில்லை அவரது உயிரை நான் காப்பாற்றியே ஆவேன்..’ என்று மனதிற்குள் உறுதி பூண்ட வள்ளி. முதலில் நடப்பவை அனைத்தையும் ஒன்று விடாமல் கவனிக்கத் தொடங்கினாள்.
துருவனின் அருகில் ஒரு அழகான ஆடவன் வந்து நிற்க அதன் அருகில் நவீன உடை அணிந்து ஒரு பெண்ணும் வந்து நின்றாள்.
“அவளை எங்கோ பார்த்தது போல இருக்கின்றதே இவதான் துருவன கல்யாணம் பண்ண வேண்டிய பொண்ணு ஏதோ பெயர் சொன்னாங்களே அத்தை என்ன பேரு ஏதோ வெண்டைக்காவோ பாவக்காவோ இல்ல இல்ல ரேகா அந்தத் தில்லாலங்கடி செய்த வேலையா இது அடியேய் உனக்கு இன்னைக்கு இருக்குடி என்னோட புருஷனையே கடத்திக்கிட்டு வார உன்னோட கை கால முறிச்சி அடுப்புல வைக்கிறேன் பாரு..” என்று மனதிற்குள் கருவிக் கொண்டாள் வள்ளி.
துருவன் கண்களை விழித்துப் பார்க்க அங்கு பத்துக்கு மேற்பட்ட தடியர்கள் நிற்க அதன் நடுவே ஒரு ஆணுடன் ரேகா திமிராக நின்று கொண்டிருக்க இது இவளோட வேலையா என்று அதனைப் பார்த்து கோபம் தலைக்கேற,
“ரேகா நீ என்ன காரியம் பண்ணிட்டு இருக்கேன்னு உனக்கு புரியுதா முதல்ல கை கட்டை அவிழ்த்து விடு இல்லன்னா நடக்கிறது வேற என்ன பத்தி உனக்கு தெரியாது தெரிய வச்சிராத..” என்று துருவன் உரும,
“டேய் முதல் நீ வாய மூடுடா இப்போ நீ பல்லு புடுங்கினா பாம்பு அடங்கித்தான் ஆகணும் நாங்க ஆடுன்னு சொன்னாதான் நீ ஆடனும் இல்லாட்டி பெட்டிக்குள்ள அப்படியே பொத்திகிட்டு அடங்கி இருக்கணும்..” என்று பதிலுக்கு ரேகாவும் துள்ளினாள்.
“என்னடி வாய் ரொம்ப தான் நீளுது..” என்று கூறிக் கொண்டிருக்கும்போதே ரேகாக்கு அருகில் இருந்தவன் வேகமாக வந்து துருவனது கழுத்தைப் பிடித்து நெறித்தான்.
அந்த ஆளுயர்ந்த திடமா திடகாத்திரமான ஒரு ஆடவன் திடீரென்று இப்படி செய்ய இங்கு வள்ளிக்கோ தூக்கி வாரிப் போட்டது.
‘யார் இவன் எதற்காக துருவனை இப்படி தாக்கிக் கொண்டிருக்கின்றான்..’ என்று எண்ண அருகில் இருந்த ரேகா,
“அண்ணா விடு முதல் அவனை செத்துடப் போறான் அவன்கிட்ட நாம முக்கியமான விஷயங்கள் எல்லாம் கேட்டு அறிஞ்சிக்கணும் அதுக்கப்புறம் நீ அவன என்ன வேணா வெச்சு பண்ணிக்கோ இப்ப நானே பேசிக்கிறேன் நீ சத்தம் போடாமல் கொஞ்சம் பொறுமையா இரு..” என்று அருகில் வந்து அந்த ஆடவனை கையைப் பிடித்து இழுக்க,
“விடு ரேகா உன்னால தான் இவ்வளவும் வந்துச்சு இல்லன்னா எப்பயோ இவனோட கதையை முடித்து இருக்கணும்..” என்று துருவனின் கழுத்தில் இருந்து பிடியை விடுவித்தான்.
அப்போதுதான் துருவன் கண்களால் அவனை ஏறெடுத்து அளந்து பார்த்தான். அடங்க மறுக்கும் அவனது அலைபாயும் கேசமும், குத்தீட்டியாக எதிரியை கொள்ளும் சிவந்த கண்களும், தடித்த பெரிய அதரங்களே அவனை திமிர் பிடித்தவன் என்று காட்டியது. படிக்கட்டுகளாக அமைந்த உடல்வாகோ அவன் எதற்கும் சலைக்காதவன் என்பதை பறைசாற்றியது.
ஆனால் அதையெல்லாம் பார்த்து பயப்படுபவனா நமது நாயகன் அவனுக்கு நானும் சலைத்தவன் அல்ல என்று நிமிர்ந்து அவனை நேருக்கு நேர் கண்களாலே எரிக்கும் பார்வை பார்த்தான்.
“என்ன பங்காளி எப்படி இருக்க என்ன பத்தி உனக்கு தெரியாதுல்ல முதல் நான் என்ன இண்ட்ரடியூஸ் பண்ணி வைக்கிறேன் வெல் ஓகே எப்படியும் என்னை நீ ஊகித்து இருப்ப நான் தான் ரேகாவோட ஒன் அன்ட் ஒன்லி பிரதர்.
ஆனா உனக்கு இது ஒரு பெரிய சொக்கா இருக்கலாம் ஏன் சந்தேகமும் வரலாம் அப்படி அண்ணனாய் இருக்கிறவன் ஏன் ரேகாவோட கல்யாணத்துக்கு வரலன்னு
நீ பார்த்த அம்மா, அப்பா சொந்த பந்தங்கள் எல்லாம் ஒரு நாடகம் தான் அதெல்லாம் உண்மை இல்லை. அதெல்லாம் நான் உனக்கு விரிச்ச சிலந்தி வலை ஆனா நீ மாட்டாம தப்பிச்சிட்ட உனக்கு அன்னைக்கு நல்ல காலம் என்று நினைக்கிறேன் உங்க அம்மா போட்ட டிராமாவால என்னோட பிளான் எல்லாம் சொதப்பிடிச்சு ஆனா இன்னைக்கு உன்ன காப்பாற்ற இங்க யாருமே இல்ல ஹா… ஹா… ஹா…” என்று இராடசசன் போல அந்த இடமே எதிரொலிக்கும் வண்ணம் சிரித்தான்.
அவனது சிரிப்பொலி எட்டுத்திக்கும் அதிர்ந்தபடி மீண்டும் மீண்டும் ஒலித்தது.
“டேய் உனக்கு என்னடா வேணும் ஏன் இப்ப அண்ணனும், தங்கச்சியும்மா சேர்ந்து என்ன கடத்தி வச்சிருக்கீங்க நீங்க என்கிட்ட இருந்து என்னை எதிர்பார்க்கிறீங்க எதுக்கு இந்த ட்ராமா, கடத்தல் எல்லாம் ஆனா நீங்க இடம் தெரியாம மோதிரீங்க என்கிட்ட வம்பு வளர்த்தீங்கன்னா யாருமே உயிரோடு இருக்க மாட்டீங்க ஒருத்தனையும் விட்டு வைக்க மாட்டேன்..” என்று ஒவ்வொரு வார்த்தைகளையும் கடித்து துப்பினான் துருவன்.
“என்னடா எகுறுற இங்க நீ வெறும் மண்ணு தான் டா இந்தியாவில் வேண்டுமென்றால் நீ ஆடலாம் இங்க எல்லாம் உன் ஆட்டம் செல்லாது..”
ரேகா அருகில் வந்து துருவனி கன்னத்தில் தனது ஆட்காட்டி விரலால் கோடு வரைந்தபடி,
“டியர் ஹேண்ட்சம் இன்னும் சில மணி நேரத்துல நீ பரலோகம் போக போற மிஸ் யூ பேபி அன்ட் ஆல் த பெஸ்ட்..” என்று கூற,
அவளது விரல் பட கம்பளிப்பூச்சி ஊறுவது போல அருவருப்பை உணர்ந்தவன்,
“ச்சீ கைய எடுடி அதையும் பார்க்கலாம் ரேகா இப்படியான துரோகிகளை நான் எப்படி எதிர்கொள்வேன்னு எனக்கு தெரியும் இதெல்லாம் தொழில் சாம்ராஜ்யத்தில சாதாரணம்னு என்னோட அப்பா அப்பவே சொன்னாரு நான் எல்லாத்துக்கும் தயாராத்தான் இருக்கேன் உங்களால என்ன செய்ய முடியுமோ செய்ங்க..” என்று நிமிர்ந்து ரேகாவைப் பார்த்து நிதானமாகக் கூறினான் துருவன்.
என்னோட அப்பா சொன்னாரு என்று துருவன் கூறியதும் ரேகாவின் அண்ணனான ருத்ரபிரசாத்துக்கு பெரும் கோபம் எழுந்தது.
உடனே துருவனின் அருகில் வந்து ஓங்கி கன்னத்தில் ஒரு அறை விட்டான். அறைந்த அறை அவனுக்கு இடி முழங்கியது போல இருந்தது அண்டமே அதிர்ந்தது போல அவன் உணர்ந்தவன், அந்த வலியில் இருந்து மீள முடியாமல் சில நிமிடங்கள் அப்படியே அசையாமல் சில நிமிடங்களில் தலையை உழுப்பி அவனை கோபம் கனன்ற கண்களோடு எதிர்கொண்டான்.
“என்னடா பார்க்கிறாய் உங்க அப்பன் என்ன பெரிய யோக்கியனா அவன பத்தி என் முன்னாடி பேசாத அவன் எல்லாம் உயிரோட இருக்குறதுக்கு செத்துப் போகலாம் அவன கடத்தி போட்டுத் தள்ளாம ஏன் உன்னை கடத்தினேன் என்று தெரியுமா..?
உங்க அப்பன் இப்போ செத்த பாம்பு அவனை கடத்தி கொல்றதெல்லாம் பெரிய வேலை இல்லை நாலு அடி போட்டால் அவனாவே செத்துருவான் ஆனா அவனுக்கு காலம் பூராவும் வலியோட வாழனும்.
அவன் பிள்ளை இல்லாத வலியை அனுபவிக்குனும் அதுதான் எனக்கு வேணும் அதைப் பார்த்து நான் சந்தோசப்படனும்…” என்று தன் முகத்தை வருடி தனக்குத்தானே சிறு முத்தம் வைத்தான்.
ருத்ர பிரசாத்தின் கண்களில் தெரியும் கொலை வெறியை பார்த்ததும் துருவனுக்கு பெரிய அதிர்ச்சியாகிப் போனது.
‘ஏன் இவன் தனது தந்தையின் மீது இவ்வளவு பழி வெறி பிடித்து இருக்கின்றான் அப்பா அப்படி தப்பு செய்கிற ஆள் இல்லையே..’ என்று மனதிற்குள் எண்ணியபடி,
“டேய் எங்க அப்பாவ பத்தி பேசுறதுக்கு உனக்கு அருகதை இல்லடா அவரைப் பத்தி இதுக்கு மேல என்கிட்ட தப்பா பேசின நான் மனுசனா இருக்க மாட்டேன்…”
“உங்க அப்பனை பத்தி பேசினாதும் உனக்கு கோவம் வருதே உங்கப்பன் என்ன செஞ்சான் தெரியுமா..?” என்று தனது வாழ்வில் நடந்த விபரீதங்களை கவலை, கோபம், கொலைவெறி, ஆதங்கம் என்பவற்றுடன் ருத்ர பிரசாத் கூறத் தொடங்கினான்.