அரண் 7
அந்தப் பெண்ணின் கழுத்தில் தாலி ஏறிய பின் அடுத்தடுத்து சம்பிரதாயங்கள் நடைபெறத் தொடங்கின.
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அனைத்து சம்பிரதாயங்களும் முடித்து அனைவரின் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டு எதுவும் பேசாமல் பொறுமையாக அனைத்தையும் பார்வையாளனாகப் பார்த்துக் கொண்டிருந்தான் துருவன்.
விருந்துபச்சாரம் அனைத்தும் முடிந்து அனைவரும் மண்டபத்தில் இருந்து கிளம்பிய பிறகு துருவனும் அந்தப் பெண்ணும் நேரே வீட்டிற்கு வந்தனர்.
மணப்பெண்ணும் மணமகனும் ஒரே காரிலேயே ஏறி வந்தனர். காரில் ஏறியது தொடக்கம் வீடு வந்து சேர்ந்தது வரை அவன் அவளிடம் எதுவும் பேசவில்லை ஏன் அவளை திரும்பி கூடப் பார்க்கவில்லை
நேரே வீடு வந்ததும் வைதேகி வாசலில் வைத்து ஆரத்தி எடுக்க வைதேகியை முறைத்து பார்த்தபடி ஆரத்தித் தட்டை கையால் தட்டி விட ஆரத்தி தட்டு பறந்து போய் தனபாலின் காலடியில் விழுந்தது.
இதனை எதிர்பார்க்காக வைதேகி “துருவா என்ன இது..?” என்று மிகவும் கோபமாகக் கத்தினார்.
“போதும் நிறுத்துங்க அம்மா நீங்க பண்ணின வேலையால எனக்கு எவ்வளவு அவமானம்.. என்னோட பிசினஸ் சாம்ராஜ்யத்திலேயே நான் முடி சூடா மன்னனாக இருந்தேன் அப்படி இருந்த என்ன நீங்க இவ்வளவு கேவலமா மற்றவர்களுக்கு முன்னுக்கு நடத்திட்டிங்கள்ல..
நான் நாளைக்கு எப்படி வெளியே போய் மற்றவர்களின் மூஞ்சில முழிப்பேன்…” இன்று துருவன் கர்ஜித்தான்.
வைதேகி துருவனை எவ்வாறு சமாளிப்பது என்று புரியாமல்,
“கண்ணா நான் உனக்கு தகுந்த காரணம் சொல்லிட்டேன் இதுக்கு அப்புறமும் நீ என்னோட சண்டை போடுறது சரியில்ல. என்னுடைய நிலைமையை நீ நல்லா புரிஞ்சுக்கணும் புரிஞ்சிப்பான்னு நினைச்சு தான் நான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன் ஆனா நீ இப்படி நடந்து கொள்ளுவான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல்ல..” என்று வருத்தமாக கூறினார்.
“என்னமா நடந்துகிட்டேன் அதான் நீங்க நினைச்சபடி எல்லாம் நடந்து முடிஞ்சிடுச்சே பிறகு என்ன இதுல என் விருப்பம், என் சந்தோசம் ஏதாவது இருக்கா..?” எனக் கேட்டான் துருவன்.
“ ஓஹ் உங்க விருப்பமா… அதான் கூட்டி வந்தியே ஒருத்திய.. போ போ போய் அந்த ரேகாவ கல்யாணம் கட்டிக்க சுடுதண்ணி வைக்கிறது எல்லாம் சமையல் என்று சொல்லிகிட்டு திரியிறா அவள்ட முதல் போய் சொல்லு சுடுதண்ணி வைக்கிறதெல்லாம் சமையல் இல்லன்னு தெளிவா விளக்கமா சொல்லிட்டு வா..” என்று வைதேகி பதிலடி கொடுக்க,
“இந்த கிண்டல் பண்ற வேலை எல்லாம் வேண்டாம். நான் சீரியஸா பேசிக் கொண்டிருக்கிறேன்..”
“ஐயையோ அப்போம்புலன்ஸ்க்கு கால் பண்ணவா..? நானும் சீரியஸா தாண்டா சொல்றேன் அவள் எல்லாம் ஒரு ஆளுன்னு அவளை பொண்ணுன்னு கூட்டி வந்து எனக்கு முன்னுக்கு இருக்க வைக்கிற நான் சும்மா இருப்பனா இந்த குடும்பத்துல மருமகளா வாரத்துக்கு அவளுக்கு அருகதையே இல்லை..
நான் ஒன்னும் மற்ற அம்மாக்கள் மாதிரி இல்ல நீ விரும்புறேன்னு சொன்னா கூட பரவாயில்லை ஏதோ பிசினஸ் பார்ட்னர் பிசினஸுக்கு டீல் பேசுற மாதிரி பேசிட்டு வந்து இருக்க உங்க டீலிங் எல்லாம் இங்க சரி வராது
என்ன பார்த்தா கேனச்சி மாதிரி உனக்குத் தெரியுதா அவள் எல்லாம் ஒரு ஆள்ன்னு வந்து எனக்கு முன்னுக்கு காலுக்கு மேல கால் போட்டு தான் இருப்பா.. பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்குறன்னா என்னன்னு தெரியுமா உன்னோட ரேகாக்கு..
பெரிய மைசூர் மகாராணின்னு அவளுக்கு நினைப்பு என் கையில கிடைச்சான்னா கொத்து பரோட்டா மாதிரி கொத்திப் போட்ருவேன்
சொல்லி வச்சுக்கோ உன் மைசூர் மகாராணி கிட்ட..” என்று விடாமல் எகிறி குதித்து வைதேகி பேசிட,
“அம்மா ஸ்டாப்.. ஸ்டாப் இட் இதுக்கு மேல நீங்க எதுவும் பேசத் தேவையில்லை.. இந்தாங்க பிடிங்க உங்க மருமகள் இவளை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்னோட ரூம் பக்கம் இவளைக் காணக்கூடாது..” என்று அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து தனது அன்னையின் கையில் வைத்து விட்டு வேகமாக மாடிப் படிகளில் ஏறி சென்று விட்டான் துருவன்.
அவன் சொல்வதை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்த வைதேகி தனபாலிடம்,
“என்னங்க இப்படி சொல்லிட்டு போறான்..”
“நீயாவது உன் பையனாவது ரெண்டு பேரும் சேர்ந்து ஏதாவது பண்ணிக்கோங்க..”
“சரி அப்போ இனிமே உங்களுக்கும் பையனுக்கு சண்டை வந்தா என்னைய பஞ்சாயத்துக்கு கூப்பிடக்கூடாது..”
“அம்மா சாமி ஆள விடுமா உன்னோட சண்டை பிடிக்க நான் இப்போதைக்கு ரெடி இல்ல எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு நான் தூங்கணும்.. குட் நைட் மா..” என்று அங்கிருந்து தனபால் தனது அறைக்குச் செல்ல தலை குனிந்து கொண்டு நின்றாள் அந்த அழகிய மங்கை.
வைதேகி அவளை அன்பாக பார்த்து,
“அற்புதவல்லி இங்கே வாமா..”
அட ஆமாங்க நமது நாயகியின் பெயர் அற்புதவல்லி அதற்கு பெருங்கதையே இருக்கின்றது. அதை பிறகு பார்ப்போம்.
“உன்ன நான் வல்லின்னு கூப்பிடவா..?”
“சரி அத்தை..”
“அவன் அப்படித்தான் எப்போ பார்த்தாலும் சிடுசிடுன்னு இருப்பான் ஆனால் ரொம்ப நல்லவன் உன்னை கூடிய சீக்கிரம் ஏத்துக்குவான். நீ கவலைப்படாத ரெண்டு நாளைக்கு என் கூடவே படுத்துக்கோ…” என்று அன்பாக கூற,
“பரவால்ல அத்தை அவர் கோபப்படுறது நியாயம் தானே..!”
“அவன விடுமா அவனுடைய கோபம் என்கிட்ட செல்லாது.. என்னோட பேசாம இருக்க மாட்டான் மா அவன் இன்னும் சின்ன பிள்ளை மாதிரி தான்.. போகப் போக நீயே அவனை பற்றி புரிஞ்சிக் கொள்ளுவ..” என்று அவர் மகனை விட்டுக் கொடுக்காமல் பேச அற்புதவல்லிக்கு வைதேகி தன் மகனின் மீது வைத்த அன்பை பார்த்து ஒரு பக்கம் கவலையாக இருந்தது மறுபக்கம் அவரது பேச்சைக் கேட்டு சிரிப்பு வந்தது.
“சரி வா ரொம்ப டயர்டா இருப்ப தூங்கலாம்..” என்று இருவரும் கீழே உள்ள அறை ஒன்றில் உறங்கச் சென்றனர். அற்புதவல்லி உறங்கியிருக்க வைதேகி மட்டும் உறங்காமல் நாளைய நாள் எவ்வாறு தொடங்குமோ என்ற சிந்தனையிலேயே தனது தூக்கத்தைத் தொலைத்தார்.
விடியற்காலைப் பொழுது அழகாக மலர்ந்தது. துருவனை யாரோ எழுப்புவது போல இருக்க,
கண்விழித்து பார்த்த போது தான் தெரிந்தது அற்புதவல்லி அருகில் இருந்து,
“என்னங்க என்னங்க எழுந்திரிங்க லேட்டாயிட்டு அத்தை உங்களை சீக்கிரமா ரெடியாகி கீழே வரச் சொன்னாங்க..” என்று அவள் கூறிட,
ஏதோ புழுவை பார்த்தது போல அருவருத்து போய் உடனே எழுந்து நின்று,
“உன்னை யாரு என் ரூமுக்குள்ள வரச் சொன்னது என்னோட பெர்மிஷன் இல்லாமல் எப்படி இந்த ரூம்குள்ள நீ வருவ..?” என்று அவன் பேசிட,
“இல்லைங்க அத்தை..”
“அத்தை நத்தை கதை எல்லாம் இங்க வேணாம் உடனே வெளியே போ..”
“ காபி..”
“அது யார் போட்டது..?”
“அத்தை போட்டாங்க…”
“சரி வச்சுட்டு போ..” என்று வேறு பக்கம் பார்த்து துருவன் கூற அற்புதவல்லிக்கு சிரிப்பு வந்துவிட்டது.
அவன் முன் சிரித்தால் அதற்குப் பேசி விடுவான் என்று எண்ணிய அற்புதவல்லி திரும்பி சிரித்துவிட்டு அவனது அறையை விட்டு வெளியேறினாள்.
‘அவள் சென்ற பிறகு காப்பியையும் திருப்பி அனுப்பி இருக்கலாம்.. என்ன மானங்கெட்ட கோபமோ தெரியாது..’ என்று காபியை எடுத்து வாயில் வைக்க,
அப்போது அவனது தொலைபேசிக்கு புது நம்பரில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.
செய்தியை திறந்து பார்த்தால், “வாழ்த்துக்கள் துருவன் இன்றிலிருந்து உன்னோட இறுதி நாட்களை எண்ணிக் கொண்டு இரு… கூடிய சீக்கிரம் அந்த நாள் எதுன்னு பிக்ஸ் பண்ணிட்டு உனக்கு சொல்றேன் பாய்..” என இருக்க உடனே அந்த நம்பருக்கு அழைப்பு எடுத்தான் ஆனால் அது வேலை செய்யவில்லை.
உடனே தனது நண்பன் வசந்தனுக்கு கால் பண்ணி,
“ஹலோ வசந்தன் எனக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணனும்..”
“சொல்லுடா என்ன செய்யணும்..”
“நான் ஒரு நம்பர் உனக்கு அனுப்பி இருக்கேன். அந்த நம்பரை சர்ச் பண்ணி எந்த இடம் என்று கண்டுபிடித்து சொல்லணும்..”
“ஓகேடா எனக்கு ஒரு டென் மினிட்ஸ் தா நான் பாத்துட்டு சொல்றேன்..”
“ஓகேடா பாய்..” என்று சொல்லிவிட்டு போனை அணைத்தான்.
துருவனுக்கு காப்பியை கொடுத்துவிட்டு மாடிப்படிகளில் இருந்து அற்புதவல்லி கீழே இறங்க வீட்டு வாசலில் யாரோ நிற்பது போல நிழல் ஆடியது.
வேகமாக மாடிப்படிகளில் இருந்து இறங்கி யார் பார்ப்போம் என்று வெளியே செல்ல அற்புத வள்ளியின் தந்தை அவளைப் பார்த்து கடும் கோபத்தில் முறைத்துக் கொண்டிருந்தார்.