- அரண் 9
மாடியில் இருந்து நடந்த அனைத்தையும் அமைதியாக இருந்து பார்த்துக் கொண்டிருந்த தனபால் உடனே வைதேகி உடைந்து அழவும் மனம் தாங்காமல் மேலிருந்து கீழ் இறங்கி வந்து அவரது தொளினைத் தொட்டு தூக்கி ஆறுதல் அளிக்கும் வகையில் அணைத்துக் கொண்டார்.
துருவனும் உடனே அன்னையின் அருகில் வந்து அவரது கையை ஆதரவாக பிடித்துக் கொண்டான்.
“என்ன நாடகமா ஆடுற.. நான் உன்னை ஏத்துக்கல என்றதால இப்படி எல்லாம் பொய் சொல்றியா இதுக்கு மேல நான் ஏமாற தயாராக இல்லை.. வா வள்ளி என்று அற்புதவள்ளியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தரதரவென வாசல் வரை சென்று விட்டார்.
வைதேகி சக்திவேலின் பின் “அண்ணா.. அண்ணா..” என்று சக்திவேலை தடுக்கும் எண்ணத்தில் ஓடிச் செல்ல வாசலிலே உள்ள கால் மிதியில் திடீரென கால் இடறி கீழே வீழ்ந்து விட்டார் வைதேகி.
விழுந்ததும் அவரது தலையில் பலமாக அடிபட்டு தலையிலிருந்து குருதி மிகவும் வேகமாக வெளியேற வவைதேகி மயக்கமடைந்தார்.
இவை அனைத்தும் ஒரு கணப்பொழுதில் நடந்தேற அங்கிருந்த அனைவருக்கும் கண் முன்னே நிலைமை கை மீறிப் போவது தெரிந்தது.
உடனே வைதேகியை துருவன் தூக்கிக்கொண்டு காரில் ஏறி தனபால், வள்ளி ஆகியோரோடு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
வைதேகி உடனே அவசரப் பிரிவிற்கு மாற்றினர். வைத்தியர்கள் வேகமாக வைதேகிக்கு அவசர சிகிச்சை மேற்கொள்ள,
அந்த அறைக்கு வெளியே நின்ற தனபால், துருவன், அற்புதவள்ளிக்கு நெஞ்சே வெடித்து விடும் போல அவ்வளவு பதற்றமாக இருந்தது. இதயம் தாளம் தப்பித் துடிக்கத் தொடங்கியது.
வைத்தியர்கள் உள்ளே செல்வதும் வருவதுமாகவே இருந்தனர். இறுதியில் ஒரு வழியாக வெளியே வந்த பெரிய மருத்துவர்,
மூவரின் அருகில் வந்து, “நௌவ் சி இஷ் அல்ரைட் ஹாஃப் அன் ஹவருக்கு பிறகு அவங்க கண் முழிச்சுடுவாங்க அதுக்கு அப்புறம் போய் பாருங்க…” என்று கூறி விட்டு வைத்தியர் அங்கிருந்து சென்று விட்டார்.
அரை மணி நேரத்திற்கு பின் உள்ளே செல்ல வைதேகி கண் முழித்து சிரித்த வண்ணம் அனைவரையும் கண்களால் ஆராய்ந்தார்.
தனபால் அருகில் வந்து வைதேகியின் தலையை அன்பாக வருடி விட்டுக் கொண்டு,
“யாரு உன்னோட அண்ணனையாமா தேடுற..?” என்று அவரது பார்வையை வைத்தே கணித்தார் தனபால்.
தன் மனதை அறிந்த கணவனை எண்ணி பெருமிதத்துடன் ஆம் என தலையசைத்தார்.
“இப்போ வந்துருவாங்க நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு..” என்று கூறிவிட்டு அன்றைய நாள் முழுதும் மூன்று பேரும் வைதேகி அருகில் இருந்து அவரை கவனித்துக் கொண்டு அங்கேயே இரவுப் பொழுதையும் கழித்தனர்.
காலையில் மருத்துவர் வந்து வைதேகியை பரிசோதித்து விட்டு வைதேகிக்கு எடுக்கப்பட்ட பரிசோதனைகளை கோப்பில் ஆராய்ந்து கொண்டிருந்தார்.
அதில் சில மாறுதல்கள் இருப்பதை பார்த்து புருவம் சுருக்க துருவனுக்கு வைத்தியரின் தடுமாற்றம் நன்கு விளங்கியது.
அருகில் சென்ற துருவன் “எனிதிங் பிரபலம் டாக்டர்..”
“எஸ் துருவன் சம்திங் ராங்..”
“என்னாச்சு டாக்டர்..?”
“இதுல சில டெஸ்டுகள் பாசிட்டிவ்னு வந்திருக்கு.. நேற்று ஒரு பிளட் சாம்பில் எடுத்து டெஸ்ட் பண்ணும் போது சில விஷயங்கள் தெரிய வந்துச்சு..” என்று கூற
வைதேகி மெதுவாக எழுந்து கட்டிலில் அமர்ந்திருந்தார். துருவனுக்கு டாக்டரை நன்றாக தெரியும் என்பதால்,
“டாக்டர் என்னன்னு நேரடியாகவே சொல்லுங்க சுத்தி வளைக்காம..”
“இது வைதேகிக்கு நன்றாக தெரியும் வைதேகி உங்களிடம் சொல்ல வேண்டாம் என்று சொன்னாங்க ஆனால் சொல்ல வேண்டிய தருணம் வந்துட்டு அவங்களுக்கு இது அடுத்த ஸ்டேஜுக்கு வந்துட்டு..”
தனபால் வைத்தியரின் அருகில் சென்று,
“என்ன டாக்டர் சொல்றீங்க நோயா என் பொண்டாட்டிக்கா என்ன நோய் டாக்டர்..?”
“அவங்களுக்கு பிளட் கேன்சர் இருந்துச்சு அவங்க இரண்டாவது ஸ்டேஜ்ல இருக்கும்போது அதை கண்டுபிடிச்சாங்க அதுக்கு ட்ரீட்மென்ட் செய்து கொண்டு இருந்தாங்க.. இப்போ மூன்றாவது ஸ்டேஜுக்கு வந்துட்டு. இனி அவங்களை காப்பாத்துறது கஷ்டம்..”
“என்ன டாக்டர் இப்படி சொல்றீங்க நான் இந்த உலகத்துல எங்க வேண்டுமென்றாலும் கூட்டிட்டு போய் ட்ரீட்மென்ட் செய்ய தயாராக இருக்கிறேன்.. ஸ்பெஷல் டாக்டர்ஸ் யாரையாவது பாரின்ல இருந்து வர வைக்கணுமா சொல்லுங்க எவ்வளவு செலவானாலும் நான் பார்த்துக்கிறேன் என்னோட வைஃப் குணமான போதும்..”
“இல்ல கண்டிஷன் ரொம்ப கிரிட்டிக்கலா இருக்கு ஆரம்பத்திலேயே இந்த நோயை கண்டுபிடிச்சி இருந்தா க்யூர் பண்ணி இருக்கலாம் இப்ப அடுத்தடுத்த ஸ்டேஜ் க்கு நோய் பரவத் தொடங்கிட்டு..”
தனபால் வைதேகியை கவலையுடன் பார்க்க வைதேகி மெலிதாக சோகத்துடன் சிரித்தார்.
வைத்தியர் கூறும் அனைத்து விடயங்களையும் வாசலில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த சக்திவேலுக்கு கையில் இருந்த பழங்கள் கைநழுவி கீழே விழுந்து சிதறிப் போயின.
பழங்கள் விழுந்த சத்தத்தில் திரும்பி பார்க்க அங்கு சக்திவேல் உயிர் இல்லா உடல் போல அப்படியே அசைவற்று நின்றிருந்தார்.
அவருக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை. மகளை விட அதிக அன்பாக போற்றி வளர்த்த தங்கை ஆயிற்றே மொத்த பாசத்தையும் கொட்டி வளர்த்தவர் இன்று நோய்வாய் பட்டிருக்க அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
என்னதான் கோபம் இருந்தாலும் தங்கை ஏதோ ஒரு தேசத்தில் தனக்கு பிடித்த ஆண்மகனுடன் சந்தோஷமாக வாழ்கின்றார் என்ற நிம்மதியில் இவ்வளவு நாள் சக்திவேல் சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார்.
ஆனால் வைதேகிக்கு இப்படி ஒரு நோய் இருப்பது அறிந்ததும் அவரது ஆவி கூடு விட்டு சென்றது போல தோன்றியது.
இப்போதுதான் அவருக்கு நன்கு விளங்கியது இவ்வளவு காலமும் இல்லாமல் வைதேகி இந்த நேரம் இப்பொழுது என்னை பார்த்தே ஆக வேண்டும் என்னோடு இருக்க வேண்டும் என்னோடு சில காலங்கள் கழிக்க வேண்டும் என்று எண்ணியதற்கான காரணம் இதுதானா கடைசி காலம் தனது நோயால் பீடிக்கப்பட்ட நேரம் என்னுடைய பாசத்திற்காக அவள் ஏங்கி இருக்கின்றாள்.
எவ்வளவு பெரிய கொடூரனாக மாறிட்டேன் என்னுடைய கோபம் அவளது பாசத்தை மறைத்து விட்டது.
வைதேகி அருகில் சென்று அமர்ந்து, “இப்ப எப்படி இருக்குமா..?”
“பரவால்ல அண்ணா என்ன நீங்க மன்னிச்சிட்டீங்கல்ல..”
“பெரிய வார்த்தை எல்லாம் பேசாதமா உன்னோட சூழ்நிலை அப்படி அதனாலதான் நீ அப்படி செஞ்சிருக்க இத நான் புரிஞ்சுக்காம உன்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காம உன்னைய திருப்பி அனுப்பினது என்னோட தப்பு தான்..”
“அப்போ என்ன மன்னிச்சிட்டீங்களா அண்ணா..” என்று ஆனந்த கண்ணீரில் சக்திவேலை கட்டி அணைத்து அழுதார்.
அவருக்கு அவரது கண்களில் இருந்து மட்டும் தான் கண்ணீர் வடிந்தது ஆனால் உதடுகளோ புன்னகையே சிந்தின.
எத்தனை வருட கால அன்பு, பரிதவிப்பு, ஏக்கம் என இருக்கும் அனைத்தையும் அவர் அந்த அனைப்பிலேயே கொட்டி விட்டார்.
வைதேகிக்குரிய ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் செய்வதற்காக துருவனும் தனபாலும் பல இடங்களில் விசாரித்து, தொலைபேசி மூலமாகவும் சில வைத்தியர்களை நேரிலும் சந்தித்து ஆலோசனைகள், ஐயங்கள்,கருத்துக்கள், அறிவுரைகள் கேட்டு அறிந்து கொண்டனர். இந்த நோய் பற்றி பல விடயங்களை அறிந்து கொண்டு அதனை எவ்வாறு சுகப்படுத்துவது என்று ஆராய்ந்து அறிந்து கொண்டனர்.
வைதேகிக்கு இப்பொழுது அதிக அளவில் அந்த புற்றுநோய் பரவி இருப்பதால் மாற்றுவது கடினம் என்று அநேகமான வைத்தியர்கள் கூறியிருந்தனர்.
இருந்தும் அவர்கள் முயற்சியை கைவிடாமல் வெளிநாடுகளிலும் தொடர்பாடலை மேற்கொண்டு வைதேகி சுகப்படுத்துவதற்காக இரவு பகலாய் ஓடித்திரிந்தனர்.