அரண் 11
ரிசப்ஷன் நெருங்கியது அன்று மாலை அனைவரும் அந்த பெரிய நட்சத்திர ஹோட்டலில் இரவு விருந்துபச்சாரத்திற்காக வந்திருந்தனர் வந்திருந்தனர்.
சீதாவும், வைதேகியும் அற்புத வள்ளியை பியூட்டி பார்லருக்கு அனுப்பி அவளை அங்கு அலங்கரித்து கூட்டி வர ஒழுங்கு செய்திருந்த கார் பழுதடைந்தமையால் துருவனே நேரே சென்று அற்புதவள்ளியை அழைத்து வர சென்றிருந்தான்.
குறித்த நேரத்தில் அற்புத வள்ளி அலங்கரிக்கும் அறையிலிருந்து வெளியே வந்தாள்.
துருவனுக்கோ அது அற்புதவள்ளி தானா என்று சந்தேகமே வந்தது. ஏற்கனவே இயற்கையான அழகில் ஜொலிப்பவள் இன்று அவனது கண்களுக்கு ஒரு கிரேக்க சிற்பம் நடந்து வருவது போலவே தெரிந்தது.
அந்த அழகில் நமது நாயகன் சொக்கி மயங்கி தான் போனான். அவளது ஆடை அலங்காரம் அனைத்தும் அவளை நவீன ரகப் பெண்ணாகவே காட்டியது.
யாராவது அற்புத வள்ளியை பார்த்து இவள் படிக்காத கிராமத்து பொண்ணு என்று சொன்னால் எவருமே நம்ப மாட்டாங்க. அப்படி எழில் கொஞ்சும் பூவாக அன்று மலர்ந்து இருந்தாள்.
இந்திரலோகத்தில் அழகிகளான ரம்பை, ஊர்வசி, மேனகை என அனைவரையும் விட அழகில் மிஞ்சியவளாக அற்புதவள்ளி துருவனின் முன் நின்று இருந்தாள்.
துருவன் அப்படியே திகைப்பூண்டை மிதித்தவன் போல அதே இடத்தில் அசைவற்று நின்றான்.
அவன் மட்டும் அசைவற்று நிற்க வில்லை. அவனது கண்கள் கூட இமைக்க மாட்டேன் என வேலை நிறுத்த போராட்டம் செய்தது.
துருவனின் அருகில் வந்த அற்புதவள்ளி,
“வாங்க போகலாம் நேரமாச்சு..” என்று கூற,
அவனோ முறுக்கி விட்ட பொம்மை போல தலையசைத்து விட்டு அவள் செல்ல அவள் பின்னே சென்றான்.
காரில் ஏறி செல்லும்போது செல்லும் வழியில் அடிக்கடி அருகில் இருந்தவளை ஓரக்கண்ணால் பார்த்தான். அவள் பார்ப்பதை உணர்ந்ததும் தலையை திருப்பிக் கொண்டான் .
“டேய் துருவா மனத்த வேண்டாதடா ப்ளீஸ் அவளை மட்டும் பார்த்திடாதே.. அவள் உனக்கு வேணாம்..” என்று மனமோ எச்சரிக்கை செய்தது.
இருந்தும் அவனது கண்கள் அவளைத்தான் மேய்ந்தன. இதற்கு முன் அவன் எவ்வளவோ இடங்களுக்கு சென்று வந்துள்ளான்.
எத்தனையோ அழகிய பெண்களை சந்தித்திருக்கின்றான். கல்லூரியில் கூட பல பெண்கள் அவனுக்கு காதல் கடிதங்களும் கொடுத்ததுண்டு ஆனால் அவன் அதை எல்லாம் கணக்கே எடுத்ததில்லை.
எந்தப் பெண்ணையும் தவறாக கூட பார்த்ததில்லை. ஆனால் இந்தப் பெண் மீது மட்டும் ஏன் அவனது கண்கள் இவ்வளவு உரிமை கொண்டாடுகின்றதோ தெரியவில்லை. எனது மனைவிதான் என்ற உரிமையில் கண்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றனவோ..!
கார் மண்டபத்தை அடைந்ததும், துருவன் இறங்கி வந்து அவளுக்கு கார்கதவை திறந்து விட்டான்.
அங்கிருந்து அனைவரும் அதை சந்தோசமும் ஆச்சரியமும் கலந்த பார்வையில் பார்த்து ரசித்தனர். அனைவரும் துருவனுக்கு இப்படி ஒரு அழகியா மனைவியாக கிடைத்திருக்கிறாள் என்று அதிசயமாகப் பார்த்தனர்.
இரவுப் பொழுதில் வானில் இருக்கும் மேகமும் நிலவும் ஒன்றாய் இருக்க அங்கு நட்சத்திரங்கள் சூழ்ந்து கிடப்பது போல ரிஷப்ஷனில் துருவனும் அற்புதவள்ளியும் இணைந்து நிற்க அங்கு வந்திருக்கும் விருந்தினர்கள் அவர்களை சூழ்ந்து நின்றனர்.
சிறிது நேரத்தில் அற்புத வள்ளியை காணவில்லை, துருவனும் அருகில் நின்றவள் எங்கு சென்று விட்டாள் என்று அங்கும் எங்கும் துலாவி தேடிக் கொண்டிருக்க,
உணவு பரிமாறும் இடத்தில் ஏதோ சத்தம் கேட்டது, சத்தம் கேட்கும் திசையை நோக்கி சென்று பார்த்தால், அற்புதவள்ளியோ,
“அண்ணா.. அண்ணா.. அந்த நண்டு கால எடுத்து போடுங்களேன்.. ஏன் அண்ணா நண்டு கால் இவ்வளவு சின்னதா இருக்கு பெருசா கிடைக்கலையா.. சிக்கன் கறிக்கு கொஞ்சம் காரம் போதாது..” என்று உணவு பரிமாறும் இடத்தில் பெரும் பிரச்சனை செய்து கொண்டிருந்தாள்.
துருவனுக்கு எங்கே கொண்டு போய் தலையை இடிப்பது என்றிருந்தது. அவள் அருகில் சென்று மெதுவாக உள்ளது காதல் காதல் காதல் அற்புதம் அதைக் கீழ வை
எதைங்க
அதைத்தான்
நண்டு காலையா எனக்கு அது வேணும் பசிக்குதுங்க
“நம்மளுக்காக அங்கே எவ்வளவு பேர் காத்துக்கிட்டு இருக்காங்க நீ இங்க வந்து சாப்பாட்டுக்கு சண்டை பிடிச்சுகிட்டு இருக்க சரியான கும்பகர்னி..” என்று காதுக்குள் மெதுவாக கிசுகிசுத்து பேச,
“நீங்க ஏதோ சொல்ல வர்றீங்க ஆனா எனக்கு புரியல ஏதும் இங்கிலீஷ்ல பேசுறீங்களா..?” என்று தலையைச் சொறிந்தாள்.
இந்த அம்மாவை சொல்லணும் என்று அம்மாவைத் தேட,
வைதேகி அங்கிருப்பவர்கள் முன்னிலையில் மைக்கை கையில் எடுத்துக்கொண்டு,
“எங்களது அழைப்பை ஏற்று வருகை தந்திருந்த அனைவருக்கும் வணக்கம், எனது மகனின் ரிசப்ஷனுக்கு வந்து இதனை திருவிழா போல அலங்கரித்த அனைவருக்கும் முதல் கண் எனது மனமார்ந்த நன்றிகள். கல்யாணத்து அன்னைக்கு நடந்த பல குழப்பங்கள் பற்றி உங்களிடம் சில விஷயங்கள நான் பரிமாறிக் கொள்ளலாம்ன்னு நினைக்கிறேன்..” என்று வைதேகி கூறியதும் அனைவரும் வைதேகி பேசும் இடத்தை ஆர்வமாக திரும்பிப் பார்த்தனர்.
துருவனும் வள்ளியும் வைதேகி இருக்கும் இடத்தினை நெருங்கிச் சென்றனர்.
துருவனுக்கு உள்ளுக்குள் சிறிய பயம் தொற்றிக் கொண்டது. “இந்த அம்மா ஏற்கனவே என் வாழ்க்கையில செய்தது பத்தாதுன்னு இன்னைக்கி வெச்சி செய்யப் போறாங்க போல..” என்று வாய்விட்டே புலம்பி விட்டான்.
இதோ துருவனுக்கு பக்கத்துல இருக்குற அவனோட மனைவி வேற யாருமே இல்ல என்னோட அண்ணன் பொண்ணு தான்.
உங்களுக்கு எல்லோருக்கும் இதைக் கேட்டு ஆச்சரியமாக இருக்கலாம் என்னடா இது அண்ணன் மகள் எப்படி ரூம்குள்ள வந்தான்னு… எல்லாம் அடியேனின் திருவிளையாடல் தான்… என்னோட ஒரே சொந்தம் என்னுடைய அண்ணன் சக்திவேல் மட்டும்தான்… நாங்க காதலிச்சு கல்யாணம் பண்ணினதால அண்ணன் கோவிச்சுட்டு எங்களோட இத்தனை வருஷமா பேசவே இல்ல..
என்னோட அண்ணன் பொண்ண துருவனுக்கு கட்டிக் கொடுக்கணும்ன்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை… அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு தான் அவ்வளவு கலாட்டா.. என் பையன் மேல எந்த தப்பும் இல்லை… நீங்க எல்லாம் கேட்கலாம் உங்களுடைய ஆசைக்காக உங்க மகனுடைய விருப்பத்தை கேட்காமல் ஏன் இப்படி செஞ்சீங்கன்னு…
என் மகன் செலக்ட் பண்ணின பொண்ண விட இந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு அடுத்தது என் மகன் ரேகாவ விரும்பி கல்யாணம் முடிக்கல அது அவங்களுக்குள்ள நடந்த ஒரு பிசினஸ் டீலிங்…
வாழ்க்கையில ஒண்ணா வாழறவங்க பிசினஸ் டீலிங் போட்டுக்கிட்டா பிசினஸ்ல ஏற்றம் இறக்கம் வரும்போது அவங்களோட வாழ்க்கை வந்து கடைசியா பிரிஞ்சு தான் போய் இருக்கும்.
அப்படிப் பார்த்தா நான் என் மகனுக்கு நல்லது தான் செஞ்சிருக்கேன் ஏன்னா இவங்க கல்யாணம் முடிச்சு இன்னும் ஒரு வருஷத்துல கோர்ட்ல டைவர்ஸ் தான் போய் நின்று இருப்பாங்க..
அடுத்த இத உங்க மகனிடம் நேரடியாக சொல்லி கல்யாணத்தை நிறுத்திருக்கலாம் தானே என்று நீங்கள் கேட்கலாம்
என் மகன் இவ வேணாம்னு சொன்னதுக்கு கல்யாணமே வேணான்னு சொல்லிட்டான் அப்போ எனக்கு அந்த நேரம் வேற வழி தெரியல..
நீங்க எல்லாம் நினைக்கலாம் அம்மா அப்படி செய்வாங்களா என்று எப்போதும் மகனுக்கு அம்மா கெட்டது நினைக்க மாட்டாங்க.. கெட்டது செய்ய மாட்டாங்க அறியாமையினால வேற வழியில போற மகனை நல்ல பாதைக்கு கொண்டு செல்வது அம்மாவோட கடமை அதைத்தான் நான் இங்க செஞ்சிருக்கேன்.அடுத்த ரூம்குள்ள என்ன நடந்தது எப்படி துருவன கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சீங்க இதெல்லாம் ரொம்ப சீக்ரெட் நான் அதை இங்க ஷேர் பண்ண விரும்பவில்லை. இதெல்லாம் ஏன் உங்க உங்க கிட்ட சொல்றேன்னா என்னோட பையன் ரொம்ப நல்லவன் அவன் மீது எந்த தப்பும் இல்லை அப்படியான சம்பவம் நடந்ததுக்கு நான் இங்க எல்லோரும் முன்னுக்கும் மன்னிப்பு கேட்டுக்குறேன். ஓகே தட்ஸ் ஆல் என்ஜாய் யுவர் பார்ட்டி..” என்று தனது மனதில் உறுத்திக் கொண்ட விடயத்தை இங்கு அனைவரும் முன்பும் கூறிய பின்பு தான் அவருக்கு நிம்மதியே வந்தது.
தனது மகனின் மீது தானே வீண்பழி சுமத்தியது போல ஒரு குற்ற உணர்ச்சி அவருக்கு இவ்வளவு நாட்களும் மனதை உருத்திக் கொண்டு இருந்தது. இன்று அதனை தன் மகன் இந்த சமூகத்தில் இருந்த சிறு கரும்புள்ளியை துடைத்து எறிந்து விட்டார்.
துருவன் அன்னை தனக்காக அனைவர் முன்னும் இவ்வாறு பேசியது தொடக்கம் மன்னிப்பு கேட்டது வரை அனைத்தையும் கேட்டு பெருமிதத்துடன் மட்டற்ற மகிழ்ச்சியும் அடைந்தான்.
தனக்காக, தனது சுயமரியாதைக்காக, கௌரவத்திற்காக அம்மா இவ்வாறு நடந்து கொண்டது மகனாக அவனைப் பெருமைப்பட வைத்தது.
ரிசப்ஷன் நிகழ்வுகள் அனைத்தும் முடிவடைந்து எல்லோரும் வீட்டிற்கு கிளம்பினர்.
தனபால், வைதேகி, சக்திவேல், சீதா ஆகிய நான்கு பேரும் ஒரு காரில் செல்ல,
துருவன் வேறு வழி இல்லாமல் அற்புத வள்ளியை தனது காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டான்.
போகும் வழியில் அற்புதவல்லி எதுவும் பேசாமல் துருவனே அடிக்கடி திரும்பித், திரும்பி பார்த்தாள்.
‘எதற்காக இப்படி பார்க்கிறாள் நான் அவளை பார்த்தது போல் அவள் என்னை பார்க்கிறாளோ இன்றைக்கு நாம அவ்வளவு அழகாகவா இருக்கிறோம்..’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு முன்னே தெரியும் கண்ணாடியில் அவனது முகத்தை ஒரு தடவை சரி பார்த்துக் கொண்டு வெட்கப் புன்னகை ஒன்றை உதிர்த்தான்.
‘ஆனால் அவளது முகம் ஏன் பாடி இருக்கிறது..’ என்று மனதிற்குள் நினைத்தவன்,
“என்ன அற்புதம் என்ன ஆச்சு..?”
எப்போது துருவன் வாய் திறந்து பேசுவான் என்றிருந்த அற்புத வள்ளிக்கு ஒரு கணத்தில் முகம் பிரகாசித்தது, அந்த ஒரு கணம் பிறை நிலாவாக இருந்த வதனம் முழுநிலாவாக வானில் தோன்றியது போல இருந்தது.
“சொன்னா கோவிக்க மாட்டீங்களே..!” என்று அவள் பயத்துடன் கூற,
“அப்ப ஏதோ இருக்கு சொல்லு பாப்போம் கோவிக்கலாமா வேணாமான்னு..”
“ப.. ப.. ப.. பசிக்குதுங்க..*
“என்னது..” என்று அதிர்ச்சியில் காரை நிறுத்தி விட்டான்.
“நீங்க பாட்டுக்கு நான் நண்டு கால எடுத்து வாயில் வைக்கப் போக அதிலேயே எல்லாத்தையும் போட்டுட்டு வர சொல்லிட்டீங்க நான் இன்னும் சாப்பிடவே இல்ல..” என்று அவள் கூறிக்கொண்டு போக துருவனின் முகம் மாற்றத்தை சடுதியில் பார்த்ததும் அவளது குரல் சற்று அடங்கியது.
வள்ளியை முறைத்தபடி,
“எப்போ பார்த்தாலும் உனக்கு சாப்பாடு தான் என்று காரை நிறுத்திவிட்டு ஒரு பெரிய ஹோட்டலின் அருகில் அவளை இறக்கிவிட்டு எதுவும் கூறாமல் வேகமாக காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.
எங்கு நிற்கின்றோம்? இது எந்த இடம்? ஏன் இவ்வாறு அவர் செய்தார்? என்று புரியாமல் அவள் அந்த இடத்திலேயே சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு நின்றாள்.