முராணாய்த் தாக்கும் அரண் அவன் – 3

4.7
(14)

அரண் 3

 

வைதேகி துருவனின் விருப்பத்திற்கு அமைய யோசியரை அழைத்து அந்த மாதத்திலேயே ஒரு நல்ல திகதியை பார்த்துக் குறித்தார்.

நாட்கள் வேகமாக ஓடின. கல்யாண வேலை தடல்புடலாக நடந்து கொண்டிருந்தது.
நாளை மும்பையிலேயே பெரிய மண்டபத்தில் கல்யாணம்.

கல்யாணத்திற்கு துருவனே பிசினஸ் வட்டாரங்கள் முதல் நெருங்கிய சொந்தம், நண்பர்கள் அனைவரையும் அழைத்திருந்தான்.

அவனுக்கு பெரிதாக திருமணத்தை விமர்சையாக செய்ய விருப்பம் இல்லை தான் இருந்தும் அன்னையின் கட்டாயத்தின் பேரில் மிகவும் விமர்சையாக அந்த மும்பை மாநகரமே அசந்து போகும் அளவிற்கு பிரம்மாண்டமாக அனைத்தையும் ஒழுங்குப்படுத்தி செய்து இருந்தான்.

மண்டப அலங்கரிப்பு தொடக்கம் உணவு அனைத்திலும் அவனது செல்வத்தின் செழிப்பு நிரம்பி வழிந்தது.

வைதேகி தனது ஒரே ஒரு மகனுக்கு செய்யும் முதல் விசேஷம் என்பதனால் காசு பணம் ஒன்றையும் கணக்கில் பாராமல் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வதற்கு பணத்தினை அள்ளி விதைத்திருந்தார்.

நாளை திருமணம் என்றவுடன் அனைவரும் நிற்க நேரமில்லாமல் அனைத்து வேலைகளிலும் பரபரப்பாக இருக்க,
வைதேகி அவசரமாக எங்கோ புறப்பட்டு கொண்டிருந்தார்.

அன்னையைத் தேடி வந்த துருவன் எங்கோ அவர் புறப்படுவதை பார்த்து,

“என்னம்மா இந்த நேரம் எங்கு அவசரமா புறப்படுறீங்க..?” என்று சற்று கோபமாகக் கேட்க,
‘தெரியாமல் செல்வோம் என்று நினைத்தேனே பார்த்து விட்டானே..’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு,

“இல்லடா உனக்கு நல்லபடியா கல்யாணம் ஆச்சுன்னா நான் நூறு தேங்காய் உடைக்கிறதா வேண்டுதல் வைத்து இருந்தேன்.. ரொம்ப நாள் ஆச்சா அதனால மறந்து போயிட்டேன்.. நேற்றுதான் ஞாபகம் வந்துச்சு வேண்டுதல கட்டாயமா நிறைவேற்றனும் அதுதான் கோயிலுக்கு கிளம்பிட்டு இருக்கேன்..” என்று புறப்படும் அவசரத்தில் வேக

வேகமாக கூறி முடித்தார்.

“சரி மா கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் கோயிலுக்கு ஆறுதலா போகலாம் நானே உங்கள கூட்டி போறேன் இப்ப தனியா போக வேண்டாம்..” என்று அவன் தடுக்க,

“துருவா வேண்டுதல உடனே நிறைவேற்றனும் நாளைக்கு கல்யாணத்தில் ஏதும் தடங்கல் வந்துச்சுன்னா எனக்கு ரொம்ப கவலையா இருக்கும் அதனால என் பேச்ச கேளு நான் ஈவினிங்குள்ள வந்துருவேன்.. என் அச்சா பையன்ல..” என்று அவன் தடுத்ததும் பயந்து அவனை கொஞ்சிக் கெஞ்சிக் கொண்டிருந்தார்.

அன்னையின் கெஞ்சலை கேட்டு மனமிரங்கிய துருவன்,

“சரி எந்த கோவிலுக்கு போறீங்க..?”

“இங்க பக்கத்துல தான் பா..”

“பொய் சொல்லாதீங்க எங்க போறீங்க ஈவினிங் வருவீங்கனா பக்கத்துல இருக்க கோயிலுக்கு போயிட்டு வர ஈவினிங் ஆயிடுமா..” என்று அவன் விடாப்பிடியாக கேள்விகளை தொடுக்க,

‘இவன் வேற நேர காலம் புரியாம போலீஸ் மாதிரி விசாரணை நடத்திக்கிட்டு இருப்பான் இதுக்கு இவங்க அப்பா பரவால்ல’ என்று மனதிற்குள் தன் அருமை மகனுக்கு திட்டிவிட்டு,

“கொஞ்சம் தூர தான்ப்பா வச்ச வேண்டுதல் அந்த கோயில்லதான் நிறைவேற்றனும் இல்லன்னா தெய்வ குத்தம் ஆயிடும் சரி வேலை எல்லாம் முடிஞ்சுது.. நீ எல்லாத்தையும் பார்த்துக் கொள்ளுவ தானே. நான் இதோ போயிட்டு வந்துடறேன்..” என்று பூசி பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தார்.

“அம்மா..” என்று துருவன் கோபமாக அழைக்க,

“என்னடா அப்பாகிட்ட நான் சொல்லிட்டேன் எப்படியும் ஈவினிங் வந்துருவேன் சரிப்பா நான் கிளம்புறேன்..” என்று தப்பினேன் பிழைத்தேன் என்று
வைதேகி புறப்பட்டு வெளியே வர, காரில் இருந்து இறங்கி உள்ளே வந்த தனபால் வைதேகியை அர்த்தமுள்ள பார்வை பார்த்தார்.

வைதேகி தலையசைத்து விட்டு காரில் ஏறி வேகமாக புறப்பட்டுச் சென்றார்.
கல்யாண வேலைகளில் மூழ்கிப் போன துருவன் தனது பிசினஸ் வேலைகளை தொலைபேசியில் கவனித்துக் கொண்டான்.

பிசினஸ் வட்டாரங்கள் தொடக்கம் அரசியல் பிரமுகர்கள், சினிமா நடிகர்கள் என அனைவருக்கும் திருமணத்திற்கு முதல் நாள் இரவு பெரிய பேச்சுலர் பார்ட்டி ஒன்றை ஒழுங்கு செய்திருந்தான்.

அந்த இரவு நேர உணவு மற்றும் மதுபான விருந்திற்கு வந்திருந்த அனைவரும் துருவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பார்ட்டியை சிறப்பித்துக் கொண்டிருந்தனர்.

அனைவரும் ஒரு கையில் மதுவை ஏந்தியபடி ஆடல் பாடல்கள் உடன் ஜோடியாக இணைந்து நடனமாடி இரவு முழுவதும் தங்களது சந்தோஷத்தை துருவனுடன் பகிர்ந்து கொண்டனர்.

பொதுவாக துருவன் எப்பொழுதும் மது அருந்துவதில்லை. அவனது உடல் நலத்தில் எப்பொழுதும் கவனமாகவே இருப்பான். அதனால் மது, புகைத்தல் என்பது அவனுக்கு எப்போதும் தூரம் தான்.

அன்றும் அவ்வாறே மது கிண்ணத்திற்கு அருகில் அவன் செல்லவே இல்லை. ஆனால் அவனது சிறு வயது முதல் ஒன்றாகப் படித்த நண்பர்கள் அனைவரும் குடித்து மகிழ இவன் அருகில் இருந்து அவர்களுடன் பேசி சிரித்து இருக்க அவர்களில் ஒருவன்,

“துருவா இன்னைக்கு மட்டும் நீ எங்களோட சேர்ந்து குடிக்கணும் நாளைல இருந்து நீ குடும்பஸ்தன் அப்போ எங்களை மாதிரி நீயும் பொண்டாட்டி கிட்ட மாட்டிகிட்டு கஷ்டப்படுவ இன்னையோட உன் சந்தோசம் முடிஞ்சுடா..” என்று பொய்யாக கண்ணீர் வடித்தான்.

“டேய் போதையில பேசிக்கிட்டு இருக்காத உனக்கு ரொம்ப ஓவர் ஆச்சு நீ வீட்டுக்கு கிளம்பு..” என்று கூற,

“என்ன துருவா உன்னோட பார்ட்டில நீயே குடிக்காம இருந்தா நல்லா இருக்குமா..? என்று மற்றவனும் அவனுடன் சேர்ந்து பாடினான்.

“டேய் நான் எப்பவுமே குடிக்கிறதில்ல என்று உங்களுக்கு தெரியும் தானே டா அப்புறம் என்ன..?” என்று அங்கிருந்து எழ,

“துருவா ப்ளீஸ் எனக்காகக் குடி..” என்று துருவனின் கையைப் பிடித்து இழுத்தான் மற்றொருவன்.

அவன் கையைப் பிடித்து இழுத்த கோவத்தில், “அடி வேண்டாமா வீட்டை கிளம்புடா..” என்று நண்பர்களுடன் சீறிப்பாய்ந்தான்.

“எனக்காக துருவா..” என்று அவனது கைகள் இரண்டையும் இருவர் பிடிக்க வாய்க்குள் மதுவை ஒருவன் திணித்தான்.

ஒரு போத்தல் மதுவினை அப்படியே அவனது தொண்டைக்குள் சரித்து வலுக்கட்டாயமாக இருவரும் அதனை ஊற்ற மது தொண்டைக்குள் இறங்கியவுடன், தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டு அவனுக்கு புதைக்கேறி இடைவிடாமல் இருமத் தொடங்கினான்.

உடனே இருவரும் பிடித்திருந்த கையை உருவிக்கொண்டு மதுவை தட்டி விட்டு,
“புல் ஷிட்..இதுக்குத்தான் உங்களோட நான் எங்கேயும் பார்ட்டிக்கு வாரதில்லை என்ன காரியம் பண்ணிட்டீங்க டா இங்க பாரு சட்ட ஃபுல்லா பேட் ஸ்மெல் அடிக்குது…” எனக் கர்ச்சித்துவிட்டு, எழுந்து நடக்க அவனது கால்கள் ஒன்றுடன் ஒன்று பின்னத் தொடங்கின.

தலையும் மெதுவாகச் சுற்ற நிலை தடுமாறி அருகில் உள்ள கதிரையைப் பிடிமானமாகப் பிடித்து நின்றான்.

அருந்திய மதுவின் போதையினால் அவனது தலை கிறுகிறுக்கத் தொடங்கியது.
அப்படியே தலையை ஒரு கையால் அழுத்திப் பிடித்த படி மெதுவாக அங்கும் இங்கும் தள்ளாடித் தள்ளாடி தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் சென்று உடை கூட மாற்றாமல் அப்படியே சரிந்து விழுந்து படுத்தான்.

இன்று முழுவதும் அங்கும் இங்கும் ஓடி ஆடி கல்யாண வேலைகளை பார்த்ததினாலோ என்னவோ அல்லது மது அருந்தியதாலோ என்னவோ அவனுக்கு கண்கள் சொக்கிக்கொண்டு போனது.

தனைமறந்து அப்படியே உறங்கியும் போனான்.
துருவனைத் தேடி வந்த அன்னை துருவன் மெத்தை மேல் தூங்க அருகில் வந்து அவனது தலைமுடியை பாசமாக கோதிவிட்டு எழுந்து வெளியே சென்று விட்டார்.

அவர் துருவனின் அறைக்குள் வந்து சென்றதை பார்த்துக் கொண்டிருந்த ரேகா பின்பு சிறிது நேரத்தில் துருவனின் அறைக்குள் சென்று எதனையோ தேடினாள்.

அவள் அங்கு அனைத்தையும் ஆராய்ந்து கொண்டிருக்க திடீரென்று உள்நுழைந்த வைதேகி.

“என்னம்மா என்ன செய்து கொண்டிருக்கிறாய் ஏதாவது வேணுமா என்ன தேடுகிறாய்..?” என்று சற்று குரலை உயர்த்தி அதட்டலாகக் கேட்க,
வைதேகி அந்நேரம் உள்ளே வருவார் என்று எதிர்பார்க்காத ரேகா அவரது குரல் கேட்டு அதிர்ந்து திரும்பி,

“இல்லை ஆண்ட்டி ஒன்றும் இல்லை துருவனை பார்க்கத்தான் வந்தேன் துருவன் நல்லா தூங்கிக்கிட்டு இருக்காரு..” என்று திக்கித் திணறி கூறி சமாளித்தாள்.

“துருவன் தூங்கிட்டான் நாளைக்கு கல்யாணம்ல்ல நேரத்துக்கு எழும்பனும் முகூர்த்த நேரத்துக்கெல்லாம் ரெடியா இருக்கணும் நீ போய் நேரத்துக்கு தூங்குமா..” என்றிட,

“ஓகே ஆன்ட்டி பாய் குட் நைட்..” என்று வராத சிரிப்பை வரவழைத்துக் கொண்டு கூறினாள் ரேகா.

“குட் நைட்..” என்றபடி,
‘எதை இவள் துருவனின் அறைக்குள் தேடுகிறாள் என்று சிறிது யோசனை எட்டிப் பார்த்தது வைதேகிக்கு,
காலையில் வந்த ரேகாவின் உறவினர்கள், தாய், தந்தை தொடக்கம் சகோதரர் வரை அனைவரின் முகமும் சரியாகவே இல்லை.

அனைவரும் கும்பலாகத் திருடச் செல்வர்கள் போலவே இருக்கிறார்கள். இப்போ என்னவென்றால் இவள் துருவனின் அறைக்குள் எதனையோ அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்றாள். இப்படிப்பட்ட குடும்பத்தில் போய் என் மகனுக்கு கல்யாணம் கட்டிக் கொடுக்கணும்னு எனக்கு என்ன தலை எழுத்தா இவளையும் பிடிக்கவில்லை இவளது குடும்பத்தையும் பிடிக்கவில்லை.

என்னோட பிள்ளையின் வாழ்க்கையை நான் எப்படித்தான் காப்பாத்த போறேனோ தெரியல..
அந்தக் கடவுள் தான் இதுக்கெல்லாம் வழி வகுக்கணும்..’ என்று சிந்தித்தபடி வைதேகி துருவனின் அறையை நன்றாக பூட்டி விட்டு தனது அறைக்குள் போய் தனபாலிடம் நாளைய திருமணம் பற்றி ஒரு சில வார்த்தைகள் பேசிவிட்டு உறங்கச் சென்றார்.

‘நாளைய நாள் இந்நேரம் மகனுக்கு திருமணம் முடிந்திருக்கும்..’ என்று சிந்தித்தபடி அவரது மகனின் முடிவால் ஏற்படப் போகும் விபரீதத்தினை எண்ணியபடி தூக்கமின்றி தவிக்க நீண்ட நேரத்திற்கு பின்னே அவரை அணைத்துக் கொண்டது உறக்கம்.

 

மறக்காமல் உங்களது கருத்தை பகிரவும்

உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கும் உங்கள் தோழி

இயல் மொழி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!