அரண் 10
இரண்டு நாட்களின் பின் தலையில் பெரிய கட்டுடன் வைதேகி வைத்தியசாலையில் இருந்து வீடு வந்து சேர்ந்தார்.
அற்புதவள்ளி ஆரத்தி எடுக்க திருமண நாளன்று ஆரத்தி எடுத்த சம்பவமே வைதேகிக்கு ஞாபகம் வந்தது.
அதே ஞாபகம் தான் துறுவனுக்கும் தோன்றியது வைதேகி துருவனை பார்க்க துருவன் தனபாலின் பின் ஒளிந்து கொண்டான்.
சக்திவேல் ஜோசனையாக சோபாவில் அமர்ந்திருக்க,
“என்னன்னா என்ன யோசிக்கிறீங்க..?”
“இல்லம்மா நான் வந்து ரெண்டு நாள் ஆயிட்டு ஊருக்கு கிளம்பனும் உங்க அண்ணி எனக்காக வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு காத்திருப்பா..? வந்த விஷயம் என்ன ஆச்சுன்னு அண்ணிக்கு தெரியாதுல்ல அதனால யோசிச்சுகிட்டே இருப்பாள்..”
“அப்போ நீங்க போக போறீங்களா அண்ணா? இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போங்க..”
“இல்லம்மா அது சரிப்பட்டு வராது.. எனக்கும் உன்னோடு இருக்க ஆசைதான் அங்க தோட்டம், பண்ணை எல்லாம் அப்படியே போட்டது போட்டபடி விட்டுட்டு வந்துட்டேன்..” என்று மீண்டும் அவர் யோசிக்க,
“என்னதான் யோசிக்கிறீங்கன்னு தயங்காமல் சொல்லுங்க..”
“இல்லம்மா என் பொண்ணு மாதிரி வளர்த்த உன்னோட கல்யாணத்தையும் எனக்கு பார்க்க கிடைக்கல என் பொண்ணுட கல்யாணத்தையும் எனக்கு பார்க்க கிடைக்கல.. அதுதான் மனசுல ஒரு சின்ன கவலை..”
“வருத்தப்படாதீங்க அண்ணா எப்படியும் ரிசப்ஷன் செய்வோம் அதுக்கு கட்டாயமாக முறைப்படி வாங்க நாங்க உங்கள அழைச்சிட்டு போவோம். அண்ணியை கூட்டிட்டு வந்து ரெண்டு நாள் தங்கிட்டு போங்க…”
இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த துருவனுக்கு எரிச்சல் தான் வந்தது.
“அச்சச்சோ குடும்பம் சேர்ந்திருச்சு அப்ப என்னோட கதை அவ்வளவு தானா..? நான் நினைச்சேன் சக்திவேல் மாமா கோபமா வந்து அவரோட பொண்ணு இழுத்துகிட்டு போயிருவாரு அதோட எனக்கு தொல்ல முடிஞ்சது என்று எல்லாம் இந்த அம்மாவால வந்த வினை..” என்று வாய்விட்டு சொல்லிவிட்டான். நல்ல வேலை யாருடைய காதிலும் விழவில்லை.
“அம்மா அற்புதவள்ளி கல்யாண கட்டி வந்த இடத்துல பக்குவமா நடந்துக்கோ அத்தைக்கு உதவி செய்து கொடுக்கணும் சின்ன புள்ள மாதிரி அங்கேயும் இங்கேயும் ஓடித் திரியக் கூடாது..”என்று சக்திவேல் கூற,
“சரிப்பா…” என்று தந்தையை அனைத்து விடுவிக்க,
“இருந்து சாப்பிட்டு போங்க அண்ணா..”
“இல்லம்மா அங்க அண்ணி என்ன ஏதுன்னு யோசிச்சிட்டு இருப்பாங்க நான் போய் தான் நான் இந்த விஷயங்களை பக்குவமா சொல்லணும் இல்லனா ரொம்ப பயந்துடுவா…”
“சரி நான் போய் அண்ணிய கூட்டிட்டு அடுத்த பஸ்ஸிலேயே கிளம்பி வாரம்..” என்றபடி அற்புத வள்ளியும் பக்கம் திரும்பி அவளது தலையை தடவி விட்டு,
“கவனமா அத்தை சொல்ற பேச்சைக் கேட்டு இருமா… சரி அம்மா நான் போயிட்டு அம்மாவை கூட்டிகிட்டு வாரேன்..”
“சரிப்பா அம்மாவ கேட்டதா சொல்லுங்க..”
“சரிமா சரி கவனமா இரு..” என்று கூறிவிட்டு தந்தை செல்ல தந்தையையே பார்த்துக்கொண்டே இருந்தாள்.
அனைவரும் அங்கிருந்து நகர்ந்து செல்ல அற்புதவள்ளி அதே இடத்தில் தந்தை சென்ற பாதையை பார்த்து கவலையுடன் இருக்க, துருவன் அவள் அருகில்,
“வந்து உன்னோட பேரு என்ன..?”
“என்ன இவருக்கு என்னோட பேரு கூட தெரியாதா..?” என்று துருவனை அதிர்ச்சியுடன் பார்த்தவள்,
“அற்புதவள்ளி..”
“என்னது அற்புதவள்ளியா அப்போ எனக்கு காது நல்லா தான் கேட்டிருக்கு, உங்க அப்பா அந்த பெயர் சொல்லித்தானே கூப்பிட்டேர்.. எனக்கு ஒரு சந்தேகம். ஏன் உனக்கு இந்த பெயர் வச்சாங்க வேற மாடர்னா பெயர் கிடைக்கலையா..?” என்று முகத்தை அஷ்ட கோணலாக வைத்து கேட்டான் துருவன்.
“அதா அது வந்து பெரிய கதைங்க அப்பா கல்யாணம் முடிச்சு ரொம்ப வருஷமா பிள்ளையே இல்லையாம் அப்போ எங்க ஊரு முருகன் கோயிலுக்கு நேர்த்திக்கடன் வச்சாங்க அப்புறம் தான் நான் பிறந்தேன். ஆண் பிள்ளை பிறந்தால் முருகன் என்றும், பெண் பிள்ளை பிறந்தால் வள்ளி என்றும் பெயர் வைப்பதாக நினைச்சுட்டு இருந்தாங்க. நான் பெண் பிள்ளையா பிறந்துட்டேன்ல அதனால வள்ளின்னு வச்சாங்க..” என்று இராகத்துடன் தலையசைத்துக் கூறினாள்.
“ஓகே அப்போ வள்ளின்னு மட்டும் தானே வச்சிருப்பாங்க ஏன் முன்னுக்கு ஏதோ அதிசயமோ அற்புதமோ என்று வந்துச்சு..”
“இருங்க இன்னும் நான் கதைய சொல்லி முடிக்கல. எங்க ஊர்ல இருக்கிறவங்க எல்லாரும் தோட்டம் துறவு வயல் செய்றது தான் வேலையா இருப்பாங்க… அனேகமானவங்கட பொழப்பே அதை நம்பித்தான் இருக்கு. எங்க ஊரு எப்பவும் செழிப்பாவே இருக்கும் அவ்வளவு அழகா இருக்கும் நீங்க வேணும்னா ஒரு நாள் வாங்க போயிட்டு வருவோம்.. அங்க ஒரு வருஷமா மழையே பெய்யல.. எல்லாருக்கும் ரொம்ப கவலை சாப்பிடறதுக்கே கஷ்டப்பட்டாங்க அப்புறம் கோயில்ல எல்லாரும் நேர்த்திக்கடன் வெச்சாங்க, கிடா வெட்டி படையல் போட்டாங்க, பொங்கல் வச்சாங்க ஒண்ணுமே சரி வரல நான் பொறந்த அன்னைக்குன்னு பார்த்து சரியான மழை ஊருக்குள்ள வெள்ளமே வந்துடுச்சு.
பழையபடி உங்க ஊர்ல தோட்டம் துறவெல்லாம் செழித்து வளர்ந்துச்சு, அந்த வருடம் என்னைக்கும் இல்லாம ரெண்டு மடங்கு விளைச்சல் கிடைத்தது. விளைச்சல் அமோகமா இருந்துச்சு.. ஊரே அந்த நாளை கொண்டாடியது. அப்போ நான் பிறந்த அன்னைக்கு அற்புதமா மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டினதால அப்பா எனக்கு பள்ளிக்கு முன்னுக்கு அற்புதத்தை போட்டு அற்புத வள்ளின்னு பேர் வச்சிட்டாங்க.. அம்புட்டு தான்..” என்று சிறு பிள்ளை போல அழகாக கதை கூறினாள்.
அவள் சிரித்து சிரித்து ஏற்ற இறக்கங்களுடன் ராகம்பாடி கதை கூற சிறுபிள்ளை மழலை மொழியில் கவி பாடியது போல் துருவனிக்கு தோன்றியது
“ஆனா என்னோட ரொம்ப பாசமா இருக்கிறவங்க வள்ளின்னு தான் கூப்பிடுவாங்க.. எனக்கு அந்த பேரு தான் புடிச்சிருக்கு…” என்றிட,
“உண்மையிலேயே நீ அற்புதவள்ளி தான். உன்னோட பாசமா இருக்கிறவங்க தானே வள்ளின்னு கூப்பிடுவாங்க.. அப்போ நான் அற்புதம் என்று கூப்பிடுறேன்..” என்று அவன் அவளை வம்புக்கு இழுக்க,
“நீங்க கூப்பிட்டாலே போதுங்க நீங்க எப்படி கூப்பிட்டால என்ன..?” என்று வள்ளி பதிலடி கொடுத்தாள்.
சக்திவேல் ஊருக்கு போய் தனது மனைவி சீதாவிடம் அனைத்து விடயங்களையும் பக்குவமாக எடுத்துக் கூறி அவரை அழைத்துக்கொண்டு அடுத்த பேருந்திலேயே வைதேகியின் வீட்டிற்கு புறப்பட்டு வந்து சேர்ந்தார்.
வைதேகி முதன் முதலாக தனது அன்னியானா சீதாவை பார்த்ததும் சிறிது தடுமாறியவர் பிறகு அவர் அன்பாக பேசவும் இருவருக்குள்ளும் சிறிது நேரத்திலேயே அன்பெனும் பிணைப்பு உருவாகியது.
சீதாவை கண்டதும் ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள் அற்புதவள்ளி.
“இந்த அம்மாட்ட கூட சொல்லனும்னு உனக்கு தோணல்தானே மா..” என்று கண் கலங்கிட,
“அம்மா அழக்கூடாது.. நான் அப்போதே சொல்லி இருந்தா உங்களுக்கு பயத்தோட கவலையையும் சுமந்துகிட்டு இருந்திருப்பீங்க.. அப்பாக்கு பயத்துல என்னையும் போக விட்டிருக்க மாட்டீங்க..”என்று வள்ளி கூறிட அதுவும் சரிதான் என்று மனதிற்குள் சீதா நினைத்துக் கொண்டார்.
கையில் இருக்கும் வாலியைப் பார்த்து,
“அம்மா என்னம்மா கையில வச்சிருக்கீங்க..?”
“உனக்கு பிடிக்கும் என்று சீடை, முறுக்கு, அல்வா, லட்டு செய்து கொண்டு வந்திருக்கேன் மா..”
முகம் முழுதும் புன்னகையுடன், “கொண்டு வாங்க..” என்று அதனை வாங்கி கொண்டு போய் டைனிங் டேபிள் மீது வைத்து பிரித்து ஒவ்வொன்றாக ரசித்து ருசித்து உண்டு கொண்டிருந்தாள்.
அவளுக்குத்தான் உணவைக் கண்டால் இந்த உலகமே மறந்து போய்விடுமே..!
அப்போது அந்தப் பக்கத்தால் அலைபேசியில் உரையாடிக் கொண்டு வந்த துருவன் இதனை கண்டுவிட்டான்.
‘தின்னுவது இல்லன்னா தூங்குவது இல்லன்னா அழுவது இந்த மூனத் தவிர வேறு ஒன்றுமே தெரியாது..
இல்ல இல்ல நேற்று ஒரு கதை சொன்னா.. ம்ம் நல்லா தான் கதை சொல்றா..’ என்று மனம் கூற
‘என்னடா துருவா உன்னோட மனசு அற்புதத்துக்காக பரிந்து கொண்டு வருது நல்லா கதை பேசுறாவாம்ல்ல..’ என்று மீண்டும் அதே மனம் இவ்வாறு கூற,
முதல்முறையாக அற்புத வள்ளியை எண்ணி துருவனின் அதரத்தில் சிறு புன்னகை பூத்தது.
இன்று மாலை ரிசப்ஷன் என்பதால் அதுவும் இந்த குறையும் இல்லாமல் ரிசப்ஷனை செய்து முடிக்க எண்ணி அனைத்து ஏற்பாடுகளும் செய்ய தனபால் நெருங்கிய நண்பர்கள் சொந்தங்களுக்கு மட்டும் சொல்லி செய்வோம் என்று இருக்க விடாப்பிடியாக வைதேகி நின்று திருமணத்திற்கு வந்த வராத அனைவருக்கும் மீண்டும் ரிசப்ஷனுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
துருவன் அன்னையின் பேச்சுக்கு மறுபேச்சு ஏது என்ற படி அனைத்து ஒழுங்குகளையும் திருமணம் போல தடல்புடலாக செய்யத் தொடங்கினான் துருவன்.
அந்த வேலையில் மூழ்கிப் போய் இருக்க அலைபேசியில் புதிதாக வேறொரு எண்ணில் இருந்து,
“யுவர் கவுண்டன் இஸ் ஸ்டார்ட்.. டுடே இஸ் யுவர் கிரேட் டே… பெஸ்ட் ஆப் லக்..” என்று அதில் எழுதி இருந்தது.
துருவனுக்கு அதைப் பார்த்ததும் கமிஷனரிடம் இதைப் பற்றி கட்டாயம் பேச வேண்டும் என்று நினைத்திருந்தவன் வேலைப்பழுவில் அதனை மறந்து விட்டான்.
அந்த செய்தி அவனை ஆபத்தில் கொண்டு போய் முடிக்குமா.? அதை அனுப்பியது யாராக இருக்கும்..?என்று அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.