இருள் சூழ ஆரம்பித்து சில மணி நேரத்தில் ருத்ரதீரனின் கார் வீட்டினை வந்தடைய அவனது வீட்டைப் பார்த்து மலைத்துப் போய் நின்றாள் மைவிழி.
“எந்தப் பெரிய வீடு…., எங்க ஊரே இங்கே இருக்கலாம் போலவே” என கூறிக் கொண்டே இறங்கினாள் மைவிழி.
“எங்க ஊர்ல யார்கிட்டையும் தட்டு வீடு இல்லை, இவ்வளவு நாளா நான் இப்படி வீட்டை புத்தகத்தில தான் பார்த்திருக்கேன் இப்போ தான் முதல் தடவை நேர்ல பார்க்கிறேன்” என வாயை பிளந்த படி பார்த்துக் கொண்டிருந்தாள் மைவிழி.
“தட்டு வீடா…, அது என்னது..?” என ருத்ரதீரன் கேட்க,
“இதோ இருக்கே இதுதான் தட்டு வீடு ஏன் உங்களுக்கு தெரியாதா..?, ஒரு வேளை உங்க ஊர்ல வேற பேர் ஏதும் வைச்சிருப்பாங்க போல,” எனப் பேச,
மைவிழியிடம் பேச்சுக் கொடுத்தால் மீண்டும் எதையாவது கூறி குழப்புவாள் அதுமட்டுமில்லாமல் தான் சொல்வதை பிழை எனக் கூறுவாள் ஆகவே எதற்கு இவளிடம் வம்பு என நினைத்த ருத்ரதீரன்,
“ஆமா ஆமா இதுதான் அந்த தட்டு வா உள்ளே போவோம்” என அழைத்துச் சென்றான்.
“நீ இந்த ஊருக்கு புதுசு தானே, சோ அதனால என்னோட அவுட் ஹவுஸ்ல உன்னை தங்க வைக்கலாம்னு நினைச்சிருக்கேன்” என்றான்.
“சார் நீங்க ஆடு வளர்க்குறீங்களா….?, ஏன் இதை என்கிட்ட முன்னாடியே சொல்லலை” என அவுட் ஹவுஸ்ஸை ஆடு என எண்ணி மைவிழி கேட்க,
“எஸ் வீட்டுக்கு பின்னாடி நாலு ஆடு கட்டி வச்சிருக்கேன் அதான் கேட்டேன்” என்று ருத்ரதீரன் கூற,
“அப்படின்னா நான் அங்கேயே இருக்கேன்..” என வதனத்தில் மகிழ்ச்சியோடு மைவிழி கூறினாள்.
“அம்மா தாயே என்னால முடியலை இங்கே வா” என அவளது கையினை பிடித்து வீட்டின் வெளியே கொண்டு போன ருத்ரதீரன்,
“அதோ தெரியுது பார் ஒரு வீடு அங்கதான் நீ இனி இருக்கனும்” என தன் கையினால் வெளியே உள்ள அவுட் ஹவுஸ்ஸை காட்டினான் ருத்ரதீரன்.
“அங்கேதானா ஆட்டை கட்டி வைச்சிருக்குறீங்க..?, நான் போய் ஒரு தடவை பார்த்துட்டு வர்றேன்” என செல்ல தயாரானவளை பிடித்து இழுத்து நிறுத்தியவன்,
“இங்கே ஆடு ஏதும் இல்லை நான் சும்மா தான் சொன்னேன்” என்று மேலும் அவளுக்கு விளக்கம் கொடுத்தவாறு சிரித்துக் கொண்டே கூறினான்.
அவன் கூறியவுடன் முகமோ சற்று தளர, “சும்மா சொன்னீங்களா….?, அப்படின்னா இங்கே ஆடு இல்லையா” எனக் கேட்க,
“எஸ் இங்கே இல்லை, நீ அதிகம் பேசாம போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு” என அவளை தன் அவுட் ஹவுஸ்க்கு அனுப்பி வைத்தான் ருத்ரதீரன்.
அவளும் ஆட்டுக் குட்டி இல்லை எனும் கவலையுடனே நடந்து செல்ல அவள் முன் சென்ற வீட்டில் வேலைப் பார்க்கும் பெண் அவுட் ஹவுஸ் கதவை திறந்து அவளை உள்ளே அனுப்பி வைத்து விட்டு வெளியே செல்கையில்,
“அக்கா நீங்க எங்கே போறீங்க..?,”என கேட்க அந்தப் பெண்,
“நான் வீட்டுவேலைகளை பார்க்க போறேன்மா ஏன் உங்களுக்கு ஏதும் பண்ணணுமா..?” எனக் கேட்க,
“அப்படின்னா இந்த வீட்டில யார் இருப்பாங்க”
“இங்கே நீங்க மட்டும் தான் இருப்பீங்க..” என்று கூற தனியாக இருக்கும் பயத்தில்,
“பரவாயில்லை அக்கா நீங்களும் இங்கேயே இருங்க” என தன் பயத்தை வெளிக்காட்டாமல் சாதரணமாக அந்தப் பெண்ணிடம் கேட்டாள் மைவிழி.
“இல்லைம்மா இங்கே உங்களை மட்டும் தான் தங்க வைக்கனும்னு ஐயா சொல்லியிருக்கார்” என்றாள் அந்தப் பெண்.
‘இப்படி தனியா மாட்டி விட்டுட்டாரே உங்க ஐயா, இங்கே எப்படி நான் இருப்பேன்’ என சிந்தித்துக் கொண்டிருக்கையில் அந்தப் பெண்ணோ அவளிடம் கூறி அங்கிருந்து விடைப் பெற்றாள்.
மைவிழியின் விழிகள் இரண்டும் வெளியே விழுவது போல விழித்தவாறே இருக்க, மருண்ட பார்வையுடன் வீட்டினுள் நுழைந்தாள் அவள்.
சிறுவயதில் இருந்தே பேய் என்றால் பயத்தில் நடுங்கும் மைவிழி எப்போதும் தனியாக இருந்ததே கிடையாது.
இருள் தோன்றினால் கூட்டில் அடையும் பறவை போல வீட்டினுள் இருப்பவளோ எங்கு சென்றாலும் பாட்டியுடன் செல்பவளை பிடித்து தனியாக இருக்க சொன்னதால் நடுங்கித்தானே போவாள்.
தனக்கு பயம் என வெளியே கூறினால் கிண்டல் செய்வார்கள் என நினைத்தவள் எவ்வாறாவது சமாளிக்க வேண்டும் என எண்ணினாள்.
‘மைவிழி இன்னைக்கு எப்படியாவது சமாளிச்சு இங்கேயே இருந்திடனும், இதைப் பத்தி வெளியே சொன்னா ரொம்ப அசிங்கமா போய்டும்” என தனக்குள்ளேயே தன்னை சமாதானப்படுத்தியவள் ஓர் அறையை திறந்து உள்ளே சென்றாள்.
ஒவ்வொரு அறைகளும் பெரிதாக காணப்பட,
‘ஏன் இவ்ளோ பெருசா கட்டி வைச்சிருக்காங்கன்னு புரியலையே இதுலாம் பார்க்கும் போது பாட்டி சொன்ன பேய் கதையிலே வர்ற பங்களா மாதிரியே இருக்கு’ என உள்ளே செல்கையில் தூரத்தில் நாய் ஒன்று ஊளையிடுவதைப் போல சத்தமிட்டது.
நாய் கத்தும் சத்தம் கேட்க உள்ளே சென்றவள் அப்படியே சிலை போல நின்று விழிகளை உருட்டியபடி அந்த சத்தத்தை கேட்டுக் கொண்டிருந்தாள் அப்போது அவளது இதயமும் வேகமாக துடிக்க தொடங்கியது.
‘நாய்க்கு பசி போல அதான் யாரையோ கூப்பிட்டு சாப்பாடு கேட்குது, நான் இதுக்குலாம் பயப்படக் கூடாது’ என கூறுகையில் அவுட் ஹவுஸ்ஸின் பின்னே “தொப்” என எதோ விழும் சத்தம் கேட்டது.
“அம்மாச்சீஈஈஈஈஈஈ என்னை காப்பத்துங்க பேய்…… பேய்…..” என கையில் இருந்த பைகளை அவ்விடத்திலேயே போட்டுவிட்டு தரையில் கால் படுவது கூட தெரியாத அளவுக்கு ஓட்டம் பிடித்தவள் ருத்ரதீரனின் வீட்டினுள் சென்றுதான் நின்றாள்.
“அய்யோஓஓ……, அம்மாஆஆ என்னைக் காப்பாத்துங்க” எனும் மைவிழியின் அலறல் சத்தம் அவனது வீட்டையே ஆட வைத்தது.
அறையினுள் இருந்த ருத்ரதீரனின் காதுகளுக்கு இவளது அலறல் சத்தம் கேட்டவுடன் உள்ளம் பதறியபடி என்னவாகிற்றோ என அறியாமல் வெளியே ஓடி வந்தான்.
அதுமட்டுமல்லாமல் அங்கிருந்த வேலையாட்களும் வெளியே ஓடி வந்தார்கள்.
வெளியே வந்து பார்த்த ருத்ரதீரனின் கண்ணில் தென்பட்ட காட்சியில் ஒரு கணம் அனைத்தும் ஸ்தம்பித்து நின்றது போல இருந்தது.
ஆம் மைவிழியோ தரையில் இருந்து அலறியபடி அமர்ந்திருக்க,
“அம்மு என்னாச்சு..?,” என கேட்டுக் கொண்டே மாடிப்படிகளின் வழியே வேகமாக நடந்து வந்தான் தீரன்.
“பே… பேய்.. வந்திருச்சு சார் உங்க வீட்டில பேய் இருக்கு” என பயத்துடன் கூற ஓடி வந்த ருத்ரதீரன் வாய் விட்டு சிரிக்க அங்குள்ள அனைவரும் மைவிழியை பார்த்து சிரிக்கத் தொடங்கினார்கள்.
“பேயா…., ஏன் கண்ணாடியை பார்த்துட்டா ஓடி வந்த” எனக் கூறிக் கொண்டே கீழே இருந்த மைவிழியை தூக்கினான் ருத்ரதீரன்.
“உங்க எல்லாருக்கும் சிரிப்பா இருக்குல்ல? உண்மையா உங்க ஆட்டுக் கொட்டாய்ல பேய் இருக்கு” என அச்சம் கலையாமல் கூறினாள் மைவிழி.
ஆட்டுக் கொட்டாய் என்றதும் அங்கிருப்பவர்கள் மீண்டும் சிரிக்க அவர்களை பார்த்து மைவிழியின் முகம் வாடியது.
அவளது வதனத்தில் மாற்றம் தோன்ற சுற்றி இருப்பவர்களை ருத்ரதீரன் ஒரு பார்வை பார்க்க அனைவரது சிரிப்பும் அடங்க அடுத்த கணமே அங்கிருந்து சென்றார்கள் அவர்கள்.
“சார் உண்மையா ஏதோ சத்தம் கேட்டுச்சு அப்புறம் தூரத்தில நாய் எல்லாம் சத்தம் போட்டுச்சு இப்படிலாம் இருந்தா பேய் இருக்குன்னு எங்க ஊர்ல சொல்லுவாங்க” என்று அவள் கூற,
“உங்க ஊர்ல எல்லாரும் பேய்கிட்ட கேட்டுதான் தெரிஞ்சுக் கொண்டாங்க போல, பேய்ன்னு ஒன்னும் இல்லை எல்லாமே கட்டுக்கதை தான்” என அவளுக்கு கூற,
“உங்களுக்கு இதைப் பத்தி ஒன்னும் தெரியாது எங்க ஊர்ல வந்து பாருங்க தெரியும் எத்தனை பேருக்கு பேய் ஓட்டுறாங்கன்னு”
“நான் உங்க ஊர்ல பார்த்த பேய் நீ மட்டும் தான் வேற ஒன்னும் பார்க்கலை, சோ இதை விட்டுட்டு போய் தூங்கு” என அவளை அனுப்ப நினைத்தான் ருத்ரதீரன்.
“என்னால இனி அந்த வீட்டுல இருக்க முடியாது, நான் இங்கேயே இருக்கேன்” என்று அவள் கூற,
“நோ அம்மு நீ அங்க தனியா இருக்கறதுதான் நல்லது.” என மறைமுகமாக அவளை தன் வீட்டில் இருக்க வேண்டாம் என அவன் கூறினான்.
ஏனெனில் இவளோ ஏதும் அறியா சிறுபிள்ளை போன்றவள் தன்னால் அவளுக்கு அவப்பெயர் வந்து விடக்கூடாது என நினைத்தான்.
ஆனால் மைவிழியோ, “முடியாது நான் இங்கே தான் இருப்பேன். நான் தனியா இருக்க மாட்டேன்” என அடம்பிடித்துக் கொண்டு அங்கிருந்து செல்லவே மாட்டேன் என நிற்க வேறு வழியில்லாமல் அவனும் உடன்பட்டான்.
“ஓகே நீ இங்கேயே இரு, நீ முதலாவது போய் குளிச்சிட்டு வந்து சாப்பிடு” என்றான் ருத்ரதீரன்.
“உடுப்பு ஒன்னும் கொண்டு வரலையே.., இப்போ என்ன பண்றது” என அவள் கேட்க,
“நீ ஊர்ல இருந்து கொண்டு வந்த பேக் எங்கே…?” எனக் கேட்க தலையை சொறிந்தவாறு,
“அது….. என்னன்னா….., அதை நான் ஆட்டுக்கொட்டாய்லயே விட்டுட்டு வந்திட்டேன்” என அப்பாவி போல சிரித்தாள்.
“அடியேய் இம்சை அது ஆட்டுக் கொட்டாய் இல்லைடி அவுட் ஹவுஸ். ஹா ஹா ஹா, பெரிய ஆள் மாதிரி பேசுவ.. இப்போ இப்படி பயப்படுற பேய் லாம் இல்லை போய் எடு” என ருத்ரதீரன் கூற,
“எனக்கு பயம் கிடையாது, நீங்க ஒன்னும் சிரிக்க வேணாம்” என சற்று அழுத்தமாக அவள் கூற,
“அப்படியா சரி நான் சிரிக்கலை நீ போய் அந்த பேக்க கொண்டு வா” என்றான்.
“ஈஈஈஈ….., நடந்து வர கஷ்டமா இருக்கு நாளைக்கு பகல் நேரம் போவோம்” என பற்களை பளிச்சென்று காட்டியவாறு நின்றாள் மைவிழி.
இவ்வாறு மாறி மாறி இருவரும் பேசி முடிய மைவிழியின் பேக்கை எடுத்து வரக் கூறி ஒருவரை அனுப்பி எடுத்து வர வைத்தான் ருத்ரதீரன்.
“ஓகே நீ போய் குளிச்சிட்டு சாப்பிடு நான் தூங்கப் போறேன். நீ அந்த ரூம்ல தூங்கு” என தன் அறைக்கு பக்கத்து அறையை காட்டினான் ருத்ரதீரன்.
“பக்கத்து அறையா, ஏன் உங்க ரூம்ல இடம் இல்லையா” என அவள் கேட்க,
“என்னது என்னோட ரூம்லையா.., விளையாடுறியா நீ..?” என அதிர்ச்சியாக கேட்டான் அவன்.
“நீங்க தான் சும்மா இருந்த என்னை கொண்டு வந்து பேய் கையால கொல்ல பார்க்குறீங்க, உங்க ஒவ்வொரு அறையும் பங்களா மாதிரி இருக்கு இதுல யாரும் தனியா படுக்க முடியுமா, நான் உங்களோட தான் இருப்பேன்” என தன் பையை தூக்கிக் கொண்டு அவனது அறைக்குச் செல்ல தயாராக நின்றாள் அவள்.
அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அவளது சுபாவம் அறிந்து அதை வீறு வழியின்றி ஏற்றுக் கொண்டான். அன்றிலிருந்து அவனுடைய அறையில் இரு கட்டில்கள் போடப்பட்டன.